Saturday, August 29, 2020

 

கடவுள் வழிபாடு

 

'கடவுள் வழிபாடு'என்பது ஒவ்வொருவருந் தத்தமக்குரிய கடவுளரை வழிபடுத்தலாம். அத்தகையை வழிபாடு நடைபெற வேண்டு மெனில் தெய்வ நம்பிக்கை இன்றியமையாததாகும். தெய்வநம்பிக்கையின்றேல் யாரை எவ்வாறு வழிபடுவது என்னும் கடா நிகழுமாகலின், எத்தகைய வழிபாடும் நிகழா தென்பது உய்த்துணர்க. எல்லா உலகங்களையும் படைத்தளித்தழிக்க வல்லா னொருவனுளனாதல் வேண்டுமென்றும் அத்தகையோற்கு உருவு முதலியன இலவேனும் அவனை யொருவாற்றா னுருவுடையனாக வெண்ணி வழிபடுதலே இம்மானிடச் சட்டை எடுத்ததனாலாம் பயனென்றும் உணர்வார்க்கே இனி யாம் கூறுவன பயன்படுமாகலின், அன்னோரே இதன்கண் அழுந்துவாராக. 'அரிதரிது மானிடராதலரிது' என்றும், 'எண்ணரிய பிறவிதனின் மானிடப் பிறவிதான் யாதினுமரிதரிது' என்றும், 'மக்களுடம்பு பெறற்கரிது' என்றும் பிறவாற்றானும் நன்னூலுணர்ந்த தொன்னூற் புலவரானும் மெய்ஞ்ஞானச் செல்வம் பெற்ற ஆன்றோரானும் மானிடப் பிறப்பின் அருமை நன்கெடுத்துக் கூறப்பட்டமையால் அறிவுடையோர் இப்பிறவிக்கண்ணே அறத்தின் வழி நின்று கடைத்தேறுவர். அவ்வாறு கடைத்தேறுவதற்கு முதன் முதல் கடவுள் வழிபாடே சிறந்ததாகையால் அவ்வழிபாட்டின்கண்ணே கருத்தை நிறுத்தி மேலோரான் வரையறுக்கப்பட்ட கட்டளையை மேற்கொண்டு ஒழுகுதல் வேண்டும்.
 

உலகிலே எக்காரியத்தை முடிக்க வேண்டுமெனினும் அதன்கண் கருத்து நிற்கவேண்டுமென்பது யாவரும் உணர்ந்ததொன்றே. கருத்தை வேறுபடுத்துச் செய்யப்படுகின்ற எதுவும் செய்வோன் நினைத்தவாறே பயனை முழுதுங் கொடாது என்பது திண்ணம். அதுபோன்றே கடவுள் வழிபாட்டின் கண்ணும் கருத்துப் பிறழாதிருந்தாலன்றி நினைத்த பயன் உண்டாகாது. அன்றியும், கடவுள் வழிபாடு ஆற்றும் போழ்து மனம் கெட்ட விடயங்களிற் செல்லுமாயின் அஃது பெரும் பாபத்தையும் பயப்பதாகும். கருத்தின்றி எத்துணைப் பொருள் செலவு செய்து கண்டார் வியக்குமாறு பல்வித கிரியைகளைப் புரியினும் பெரும்பயன் விளையாது. சிலர், பிறர் புனைந்துரையாடல் வேண்டு மென்ற கருத்தோடு பலர் முன்னிலையில் கடவுட்பூசை செய்து மகிழ்கின்றனர். அம்மகிழ்ச்சி அவர்க்கு எத்துணைப் பயனைக் கொடுக்குமோ யாம் அறியகில்லேம். எத்தகைய கிரியைகளையுஞ் செய்யாதிருப்பினும் மனம் இறைவனையே நாடி இருக்குமெனில் அதுவே சிறந்த கடவுள் வழிபாடாம். அவ்வாறு வழிபடுவார்க்குப் பூக்கொய்தல் முதலிய திருப்பணிகளும் வேண்டுவனவல்ல. இறைவற்கு அர்ப்பணஞ் செய்யத்தகுந்தது அன்புஒன்றுமே. அவ்வன்புதான் கருத்தின்றிக் கூடாதாகலின், கருத்து மாறுபடலாகாது என்று கூறினோம். அன்பின்றி அர்ப்பிக்கப்படும் எத்தகைய இனிய பொருளும் கடவுட்குரிய தன்று. அன்போடு அளிக்கப்படும் எத்தகைய இழிந்த பொருளும் இறைவற்கு அமுதன்னதாம். இதற்குத் தெய்வக் கண்ணப்பரே சான்றாவர். இறைவன் அன்புக்குரியவனே யன்றிப் பொருளுக் குரியவனல்லன். ஆதலின், அரிய பொருட்களையெல்லாம் வீண்முயற்சி யெடுத்துக் கூட்டி இறைவன் முன்னிலையிற் படைப்பதனால் யாதொரு பயனுமின்று. கடவுள் வழிபாடு என்பது பொழுதுபோக்கை யுன்னியோ புகழை நினைத்தோ தத்தமக்கேற்றவாறும் நெறியின்றியுஞ் செய்யப்படுவதன்று. இதை வலியுறுத்தற்கு,

 

"கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்றெண்ணப்

பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழு
      மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்புமியான்
      செய்கின்ற பூசையெவ் வாறுகொள் வாய்வினை தீர்த்தவனே "


எனப் பட்டினத்தடிகளும் அருளிப்போந்தனர். அருள்வாய்த்த செல்வரெல்லாரும் இவ்வாறே வலியுறுத்துவாராயினர். இறைவற்கு அன்பின்றிச் செய்யப்படும் பூசை வீண் பகட்டாய் முடிவதன்றிச் செய்வோனது அறியாமையையுங் காட்டுவதாம். மக்கள் தம்முள் ஒருவர் ஒருவரை விரும்பும் பொருட்டு உள்ளன்பின்றிச் செய்யப்படும் உபசாரமுறைகளையும் இறைவன் மாட்டுச் செலுத்தின், அதை இறைவன் உணருந்திறத்தன் அல்லனோ? ஆகலின், அஃது அடாது என்க.

 

கடவுள் வழிபாடு ஆற்றும் போழ்து முக்கரணங்களும் தூய்மை அடைந்திருத்தல் வேண்டும். இம்மூன்றும் எப்போழ்துமே தூய்மை அடைந்திருத்தல் மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாததேயாயினும் அஃது இல்லறத்தார்க்குப் பலவாற்றானுங் கூடாமையின் கடவுள் வழிபாட்டின் கண்ணேனும் அவை தூய்மை அடைந்திருத்தல் வேண்டும். மெய்யும் மொழியுந் தூய்மை அடையாவிடின் வழிபாடுந் தூய்மையடையாது போம். மனந்தூய்மை பெறாவிடின் அஃது கடவுள் வழிபாடு மன்றாம். ஆகவே, மனம், மொழி, மெய் என்னும் மூன்றும் துய்மை அடைதல் வேண்டு மென்பது பெறப்பட்டது. ஆயினும், வெளிப்படையாயின்றி மனத்தகத்தே வழிபாடு ஆற்றும் ஆற்றலுடையார் தமக்கு மனமொன்றுமே துய்மை அடைதல் அமையும். அவ்வாறு வழிபடுவது மானதபூசை யெனப்படும். அதுவே உயர்ந்த வழிபாட்டு முறைமையாம். இவ்வழிபாடாற்றுதல் எளிதே யெனினும் பலர் தமது வாணாளை வீணாளாய்ப் போக்குகின்றார்களே யன்றிச் சிறிதும் அதன்கண் முயல்கின்றார்களில்லை. பகற்போது பல முயற்சிகளிலும் அழுந்துவார் தாம் படுக்கைக்குச் செல்லும் போழ்தேனும் அதனை மேற்கொள்ளலாமன்றோ? மானதபூசை எவ்வாறாற்றல் வேண்டுமென்பது கூறாதே அறியத்தக்கதொன்றே. அறியாதார் பிறர்வாய்க் கேட்டேனும் நன்னூல்களைப் பயின்றேனும் உணர்க. சுருங்கக் கூறுமிடத்து, மனத்தின் கண் வழிபடு கடவுளை நிறுத்தி வழிபடுவதே மானத பூசையாம். இஃது மனவமைதி யேற்படும் போழ்து செய்தல் நன்று.

 

இம்மானத பூசையானது பல்வகைப்பட்ட உலக விஷயங்களில் நுழைந்து தத்தளிப்போர்க்கு மனவலியில்லாமையின் எவ்வாற்றானுங் கூடாதாகையால், அவர்கள் தம் மனத்தைத் தூய்மைப்படுத்தும் பொருட்டுக் கோயில்கட்குச் செல்லுதல் இன்றியமையாதது. இதனாற் பிறர் செல்லலாகாது என்று எண்ணற்க. "'ஆலயந் தொழுவது சாலவு நன்று'' என மேலோர் கூறினமையின் திருக்கோயில் சூழ்வது எல்லார்க்கும் இன்றியமையாததே. ஆயினும், உலகவிடயங்களிற் கட்டுப்பட்டார் சூழார் என்பது தோன்ற அவரை விதந் தெடுத்துக் கூறினோம். திருக்கோயில் சூழுமிடத்தும் வழிபடுமுறைமை வழாது சூழ்தல் வேண்டும். முத்தி யெய்து தற்குப் பலவழிக ளுளவேனும் பக்தி இன்றியமையாததென்க. ஏனெனில், பக்தி ஒன்றுமே கடைத்தேற்று மாகலின், யோகம், ஞானம் முதலியன வெல்லாம் எளியவல்லாதனவாயிருப்பதன்றிப் பத்தியில்லாதார்க்குக் கூடாதனவுமாம். ஆகையால், பக்தியையே உற்ற துணையாகக் கொள்ளுதல் வேண்டும். அதற்குத் திருக்கோயில் சூழ்தல் இன்றியமையாதது. சிலர் திருக்கோயில் சூழ்வது பொழுது போக்கிற்கேயெனக் கொண்டு தம்மை மிகவும் அழகுபடுத்திப் பல ஆடம்பரங்களுடன் செல்கின்றனர். அவர் தம் மனம் பல்வேறு விடயங்களில் நுழைந்து மதயானை போலு மோடுகின்றது. இத்தகையார் திருக்கோயில் சூழ்ந்து என்ன பயனைப் பெறுவர்? திருக்கோயில் புகுமுன் தமது மனத்தை ஒன்று படுத்தித் தெய்வ நம்பிக்கையோடு இருத்தல் வேண்டும். மனம் நன்றாய் அடங்கிய பின்னர்க் கோயிலினுட் புகுதல் வேண்டும். புகுந்த பின் மனத்தைச் சிதறவிடாமல் தெய்வசிந்தனையிலேயே நிறுத்துதல் வேண்டும். தெய்வ வடிவைக் கண்டதும் மிக அன்புற்று வணங்கி மகிழ்தல் வேண்டும். அப்போழ்து இறைவனை நினைத்தலினின்றும் மனத்தை வேறுபடுத்துத் தமது வேண்டு கோட்களைக் கூறலாகாது. தமது வேண்டுகோளை முடித்ததற்பொருட்டுக் கடவுளை வழிபடுவது பெரும்பயன் தருவதன்று. அவ்வேண்டுகோளை முடிக்குமளவே அது பயன்படுவது; மனத்தூய்மைக்கு அது எவ்வாற்றானுங் காரணமாகாது. சிலர், ஆன்றோர் புத்திரப்பேறு முதலியவற்றை யுன்னிக் கடவுள் வழிபாடு ஆற்றியது முண்டெனில், அவர்களெல்லாரும் மெய்ப்பக்தி யுடையராய் ஒவ்வோர் நன்மையைக் கருதி அவ்வாறு செய்தாரென்க. ஆயினும், பயனைக் கருதாமற் செய்யும் வழிபாடே மேன்மை யுடைத்தாம்.

 

நிற்கச், சிலர் திருக்கோயிலிற் சென்று வழிபடுதல் வீணேயென்றும், ஆண்டுக் கடவுளில்லையென்றும், ஆண்டிருப்பது உயிரற்ற உருவமேயென்றும் கூறிப் பழிப்பாருமுளர். அவர்கூற்றை மறுத்தற்குக் கூடுமெனினும், ஈண்டு அவற்றைக் கூறப்புகின் இலக்கண முறைமை பிறழுமாகலின், விடுத்தனம். அறிவுடையோர் உண்மை உணர்ந்து கொள்வார்களன்றோ? வீணே பழிப்பவர்கள் உண்மை உணர்ந்தாரைக் கேட்டுத் தம் மனமாசை அகற்றிக் கொள்வார்களாக. ஒவ்வோர் காரணத்தைக் கொண்டு பிறமதங்களைப் பழிக்கப் புகுவார் எவ்வாற்றானும் அறிவிலிகளேயாவர் என்பதை யாம் எடுத்துக் கூறுவதேன்?

 

கடவுள் வழிபாடு ஆற்றுவார்க்கு, அடியார் பிறரையும் வழிபடும் ஆற்றல் வேண்டும். சிலர்,'' யாம் கடவுளை மட்டுமே வழிபடுவேம்; பிறரை யாம் பொருளெனக் கருதேம்'' என்கின்றனர். பிறரைப் பொருள் என்று கருதாவிடினும் அடியார்கள் மனத்தூய்மை உடையவர்களும் அன்பர்களுமாகலின், அவர்களையும் ஏற்றவாறு வழிபடுதல் வேண்டுமென்க. வீண்செருக்கு முதலியன கடவுள் வழிபாட்டிற்கு மாறுபாடாயுள்ளனவாகையால் அவற்றை முற்றிலு நீக்கல் வேண்டும். "அவனன்றி யோரணுவும் அசையாது'' என்று ஆன்றோர் கூறியுள்ளாராகையால், உலக நிகழ்ச்சிகளெல்லாம் இறைவனது செயலே யெனக் கொண்டொழுகுவார்க்கு வீண் செருக்கு முதலியன உண்டாகா. அவர்கள் உலகமயக்கத்திற் சிக்குண்ணாது இறைவனை மிக்க அன்போடு வழிபடுவர். இறைவன்மாட்டுச் செலுத்தப்படும் அன்பு சிறிதேயாயினும் பெரும்பயன் விளைக்கும்.


      "மங்கையர்கள் போகமிசை வைத்திருக்கு மாசைதனைப்
      பங்குசெய்து நூற்றிலொரு பங்கெடுத்துக் - கங்கையணி

வேணியரன் பாதார விந்தத்தில் வைத்தக்கால் 

காணலாம் காணாக் கதி.''

 

இராமசுப்பிரமணிய நாவலர்.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - பிப்ரவரி ௴

 



 

 

No comments:

Post a Comment