Saturday, August 29, 2020

 

கடவுள்

 

 'அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமா'யுள்ள வரும், ஆதிமத்தியாந்த ரஹிதரும், ஸர்வவல்லமையுள்ள வருமான பரமாத்மாவை நமது தமிழ் நாட்டின் கண் 'கடவுள்' எனச் செப்புவது வழக்கம்.

 

தயாநிதியான பரமேசவரனுக்கு'கடவுள்'என்னுந் திருநாமம் ஏன் வழங்க வேண்டும்? இதற்கு அதிரகஸ்யமான ஏதோவொரு காரணார்த்த மிருக்க வேண்டுமல்லவா; ஆகையால் ஈண்டு அதைப்பற்றிச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம்:

 

'கடவுள்' என்பதைப் பிரித்தால் கட + உள் என இரண்டு பத மாகிறது. இதற்கு கடம் = தேகம், உள் = தேகி அதாவது - தேகத்திற் குள்ளிருக்கும் ஆத்மா என அர்த்தமாகிறது.

 

கடம் (சரீரம்) ஸ்தூலம், ஸூக்ஷ்மம், காரணம் என மூன்று வகைப்படும். ஜாக்ரா (விழிப்பு) அவஸ்தையில் நிகழுவது ஸ்தூலசரீரம்; ஸ்வப்னாவஸ்தையில் காண்பது ஸக்ஷம தனு; ஸுஷுப்தி யவஸ்தையிலுள்ளது காரணதேகம். இம்மூன்றுக்கும் சாக்ஷியாயிருப்பது ஆத்மா.
 

ஆத்மா அழிவில்லாதது, அகண்டமானது, நித்தியமானது, சத்திய மானது, சுத்தமானது, எரிக்கப்படாதது, நனைக்கப்படாதது, உலர்த்தப் படாதது. பலவிதமாய்க் கூறுவானேன்? அது ஸர்வஸக்தியும் பொருந்தியது

 

ஆத்மாதான் நமது நிஜஸ்வரூபம். நாம் நம்மை அறிந்துகொள்ள வேண்டுமானால் கடத்திரயங்களை ஆசரயித்துள்ள அவஸ்தாத் திரயங்களைத் தாண்டிச் செல்ல வேண்டும். ஆண்டு நமது ஆத்மஸ்வரூபம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இதைப்பற்றி 'ஞான சூரியன்' என்னும் நூலிலும் –


 ''சாக்கிர சொப்பனங்க ளிரண்டையுந் தாண்டிப் போனால்
 சூக்கமாஞ் சுழுப்தி வந்து தொல்லிரு ளாகி மூடும்
 ஆக்கமு மழிவு மில்லா தறிவினா லதுவும் போனால்
 போக்கொடு வரவு மில்லாப் பூரணப் பொருள்வந் தெய்தும்

 

என்று கூறப்பட்டிருப்பதை ஊகித்தறிய வேண்டும்.

 

இத்தகைய ஆத்மதரிசனந்தான் தன்னையறிதல் அல்லது கடவுள் தரி சனம் என்று சுருதிகள் கோஷிக்கின்றன.

 

இதற்குப் பிரமாணமாக ஸ்ரீமத் தாண்டவராயஸ்வாமிகள் திருவாய் மலர்ந்தருளியுள்ள கைவல்ய நவநீத கிரந்தத்திலிருந்து ஒரு பாசுரத்தை ஈண்டு வரைவாம்: -

"தன்னையுந் தனக்கா தாரத் தலைவனை யுங்கண் டானேல்
 பின்னையத் தலைவன் றானாய்ப் பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன்
 உன்னைநீ யறிவா யானா லுனக்கொரு கேடு மில்லை
 என்னை நீ கேட்கை யாலே யீது தேசித் தேனே.''

 

ஆகவே, நாம் இதனால் ஆத்மாவே தானென்றும், தானே ப்ரஹ்மம் (கடவுள்) என்றும் அறிந்துகொண்டோமல்லவா?
 

'கடவுள்' என்னுந் திருநாமத்துக்கேற்ப, நாம் தேகத்திற்குள்ளிருக்கும் ஹருதயாம் பரவாசியான ஸ்ரீமந்நாராயண பரமாத்மாவை (பரசிவத்தை) த் தியானித்து, ஸர்வ துக்க நிவர்த்தியும், பரமானந்த பிராப்தியும் பெற்று ஜீவன் முக்தராய்ச் சுகித்திருப்பதை விட்டு, வேறே தெய்வமுண்டெனப் பலவிடங்களிலுஞ் சுற்றித்திரிவது எவ்வாறிருக்கிறதெனின்: ஒருவன் தன்கையிலுள்ள மாணிக்கத்தை யெறிந்துவிட்டு வளையற்றுணுக் கைத் தேடுவதை யொத்திருக்கிறது. இதைப்பற்றி ஞானவாசிட்டத்தில் கூறப்பட்டுள்ள விஷயமாவது:

 
 "திகழிதய குகையுறையுந் தேவதையை விட்டயலே
      தெய்வந்தேடல்
 மிகவரிய கவுத்துவத்தை யெறிந்து சிறு மணிதேடும்
      வேட்கை போலாம் "


என்பதாம்.
 

இவ்வுலகத்தில் அஞ்ஞானிகளின் பாவனைக்காக கோவில்களும், விக்கிரகங்களும் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், தத்துவமறிந்தவன் எப்போதும் தேகாலயத்திலுள்ள சிதாகாசத்தேவதையை ஆகாசசாந்தி மலராலே ஆராதிக்க வேண்டும். இவ்வாராதனை சங்கேதமாயிருப்பினும் முமூக்ஷக்களின் பொருட்டு இவ்விடத்தில் சங்கிரகித்துக் கூறப்படுகிறது.


 கடவுள் பூஜை

 

பூஜையை விரும்பும் ஒருவன் ஏகாந்தமும், பரிசுத்தமுமான வோரிடத்தில் தர்ப்பாஸனத்தை விரித்து அதன்மேல் இரத்தினக்கம்பளத்தையாவது அல்லது சாஸ்திர விதிப்படி (யஜ்ஞமூலமாய்) கிரகிக்கப்பட்ட மான்றோல் புலித்தோல் இவ்விரண்டி லேதாவதொன்றையாவது விரித்து, அதற்குமேல் வெள்ளை வஸ்திரத்தை மடித்துப்போட்டு, சுருதிகளில் மிக முக்கியமாய்க் கூறியுள்ள சித்தாஸனம், பத்மாஸனம், சுகாசனம் என்னும் இம்மூன்றி லேதாவதொரு ஆஸனத்தைச் செவ்வையாய்ச் சேர்த்து, இடுப்பு, முதுகு, கண்டம், சிரம், கண் முதலிய வங்கங்களை நேராக ஸ்தம்பம் போலிருக்குமாறு செய்து (உத்தரமுகமாயுட்கார்ந்து என்பது ரகஸியம்) ஆசார்யரையும், இஷ்டதேவதையையும், மகான்களையும் அன்புடன் தொழுது, நிச்சல மனதுடையவனாய் இவ்வாறு சிந்திக்கவேண்டும்: -

''புடத்வய விநிர்முக்தோ
      வாயுர் யத்ர விலீயதே
      தத்ர ஸம்ஸ்தம் மன: க்ருத்வா
      தம் த்யாயேத் பார்த்த ஈஸ்வரம்"      
                  (உத்தரகீதா)

 

இதன் கருத்தாவது: "இரண்டு நாசியினின்றும் வெளிப்பட்ட வாயுவானது எங்கே இலயமடைகின்றதோ, அங்கே மனதை செவ்வையாக நிற்கச செய்து, அந்தப் பரமேச்வரனை பார்த்த! தியானிக்க வேண்டும்' என்பதே.

 

இவ்வாறு தியானிக்கும் போது கவனிக்கவேண்டிய மற்றொரு பரமரகஸ்யமுளது. அஃதாவது:

 ''கமத்யே குரு சாத்மானம்
 ஆத்ம மத்யேச கம் குரு
 ஆத்மாநம் கமயம் க்ருத்வா
 நகிஞ்சி தபி சிந்தயேத்        
                        (உத்தர கீதா)

 

இதன் கருத்தாவது: "ஆகாயமத்தியில் ஆத்மாவைச்செய்; ஆத்மமத்தியில் ஆகாசத்தைச் செய் (பாவி). ஆத்மாவை ஆகாயமயமாக (பாவித்து) ச் செய்து, வேறொன்றையும் கொஞ்சமாகிலுஞ் சிந்திக்கக்கூடாது'' என்பதே. இவ்வனுபவந் திடமாகும் பொருட்டு சிவரகஸ்யத்திலுள்ள 'நிஷ்டாது பூதி' யென்னும் யோக நூலிலிருந்து இரண்டுபாக்களை ஈண்டு வரைவாம்:


 "இயம்புமா தனங்க டம்மிலொன் றுறவே
      யிடைகளஞ் சிரங்கணூ னேராய்
 வயம் பெறத் தம்ப மெனநிறீஇ யிருந்தே
      மனமது வடிவினை யுறாமல்
 நயம்பெற வுன்னா துன்னியெப் போது
      நடுநிலை தன்னைநீங் காமற்
 றயங்கிய சுத்த மசுத்தமல் லாத
      தனிநிலை பொருந்துதல் சமாதி.''


 ''பங்கயா தனத்திற் படியவே யிருந்து
      பரமசற் குருவினைத் தொழுதே
 யிங்கிரு விழியும் விசும்புற நிறுவி
      யெழுங்கருத் தினையக மாக்கி
 அங்குறு நிலையா லடங்கிடா மனத்தி
      னலைவறுத் தறிவறி யாமை
 துங்கமா யொழியச் சாதனை புரிந்தே
      தூங்காமற் றூங்குக மாதோ.''

 

கடவுள் சர்வவியாபியாயிருப்பினும் அவரை முற்கூறியவண்ணம் இக்கடத்திற்குள்ளேயே சோதித்தறிய வேண்டியிருப்பதால் அவருக்குக் 'கடவுள்' என்னுந் திருநாமம் ஆன்றோர்களால் இடப்பட்டிருக்கிறது.

 

ஆகையால், நாம் நமது தேகாலயத்தின் மத்தியில் இருதயாம்பரத்தில் (ஹ்ருதய குகையில்)


 ''ஆத்மா நாராயணோ ஹரி:
 ஹ்ருதயே ஸர திஷ்டித:


என்னும் பைங்களோபநிஷத் வாக்கியப்படி அதிரகஸ்யமாயுள்ள ஆத்மலிங்கத்தை (கடவுளை) ஸதா பஜித்து அவரருள் பெற்று நித்ய ஸரியாய்ச் சுகித்திருப்போமாக.

 

ஓம் தத் ஸத்.


 
V. லக்ஷ்மணரெட்டி, ஸ்கூல் மாஸ்டர்

 வீரபாண்டி, அரியானூர், சேலம்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - டிசம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment