Saturday, August 29, 2020

 கடவுள்

 

நம்முடைடைய கட்புலனுக்கு விஷயமாகும் இவ்வுலகத்தையும் அதன் கண் அமைந்துள்ள பலவித அற்புதமான அமைப்புக்களையும், அவ்வவற்றின் சனன மரண வியற்கை யனுபவங்களையும் நோக்குமிடத்து புகையைக் கண்ட வழி நெருப்பிருத்தல் ஊகிக்கப்படுமாறு போலவும், குட முதலிய காரிய முண்டாவதற்குக் குயவனாகிய நித்த காரணன் ஒருவன் உண்டாயிருத்தல் போலவும் இந்தப் பிரபஞ்சம் சிருட்டி, திதி, சங்காரம் என முத் தொழில் படுதலால் அக்காரியம் உண்டாவதற்கு நிமித்த காரணனாகிய ஈசுவரன் ஒருவன் உண்டென்றும், மண் போல் மாயையாகிய முதற் காரணம் உண்டென்றும், தண்டசக்கம் போல நல்வினை தீவினைகளாகிய துணைக் காரணங்கள் உண்டென்றும், ஆன்மாக்கள் பந்த மோட்சத்தை யடையும்படி இவ்வாறு காரியப் படுமென்றும் அனுமானப் பிரமாணத்தாற் கொள்ளப்படும்.

 

அப்படியாயின் ஈசுவரனன்றி மற்றைய மூலப் பிரகிருதியாகிய மாயையினாலும், பரமாணுக்களினாலும் அறிவுடைய சீவர்களால் உலகம் உண்டாயிருக்கப்படாதோ வெனின், ஒரு தேரைச் செய்வதற்குப் பற்பல வேலைக்காரர்கள் வேண்டியிருப்பினும், இரதாசாரியனாகிய ஒருவனாலேயே அந்த இரதம் உண்டாயிருக்கிறதினாலும், உலகத்தை யுண்டாக்குகை யாகிய காரியம் மிகவும் பெரிதாகையானும், அச்சீவர்களிடத்தில் கிஞ்சிஞ்ஞத்துவம் (சிற்றறிவுடமை) முதலிய தோஷம் உண்டாயிருக்கையானும், அச்சீவர்களால் உலகம் காரியப்படமாட்டாது. ஆகையால் பிரபஞ்சத்திற்கு சர்வஞ்ஞன் (முற்றறி வுடையவன்) ஈசுவரன் ஒருவரே கர்த்தாவாகின்றார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாம்.

 

மேலும், சூரியனாலன்றி மலர்கின்றவை மலரவும் குவிகின்றவை குவியவும், உருகுகின்றவை உருகவும், இளகுகின்றவை யிளகவும், இறுகுகின்றவை இறுகவுங் கூடாதது போல் அகில வுலகங்க ளெல்லாந் தங் காரணனாகிய ஈசுவானையன்றிக் காரியப்பட மாட்டா.

 

நண்பர்காள்! பின்னும், அறுகம் புல் நுனியில் தங்கிய பனித்துளி யளவாகிய சுக்கிலமானது காசரணாதி யவயவங்களாக உருப்பட்டு, உயிர்பெற்று எண் சாணுடம்பில் ஒரு சாணளவாகிய தாய் வயிற்றில், இரைப்பை, மலப்பை, சலப்பை முதலிய விடங்களுந் தவிர, மிகவும் சிறிதாகிய கருப்பாசயப் பையினிற் கட்டுண்டிருந்து, அதனால் உறுத்தப்பட்டு, உதராக்கினியில் வெந்து அவ்விடத்தில் பூரிக்கும் சலத்தி லமிழ்ந்து, ஒருநாள் இரண்டு நாளா? முந்நூறு நாட்டங்கியிருந்து பிறகு பிரசூத வாயு முறித்துத் தள்ள சிசு உற்பவிக்கின்ற அதிசயத்தை என்னென்று சொல்லுவோம். இவ்வண்ண மியற்றுநர் யார்? அவரே யன்றோ கடவுள்? அவருடைய ஆற்றலன்றோ அளவிலாற்றல்.

 

இனி விளாங்காய் திரண்டிருப்பதும், பால் ளுத்திருப்பதும் இயல்பு (Nature) தானே யென்றெழும் ஆசங்கைக்குச் சமாதானம் கூறுவாம். காரணத்திலிருந்து காரிய முண்டாகிறதே யொழிய, நிஷ்காரணமாக உண்டாகாமையான் சுவாபம் (Nature) என்பது கூடாதாதல் காண்க! குலாலன் நிமித்தத்தா லன்றிக் குடம் உண்டாகின்றதா? சூத்திரதாரனின்றிப் பதுமையாகுமா? சாரதியின்றி இரதம் நகருமா? இன்னும் வித்தில்லாமல் விளைவில்லை என்றும், அவனன்றி யோரணுவு மசையாது என்றும் இருப்பதினால் எல்லாம் தெய்வச் செயலே என்று ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தியாதி காரணங்களினாலே பொதுமறையுள்ளும்,


 "அகர முதல வெழுத்தெல்லா மாதி
 பகவன் முதற்றே யுலகு''


என்று கூறப்பெற்றது.

 

இனி, கடவுளை யாங் கண்கூடாக் காணுதலில்லே மென்னும் புல்லறிவாளர் கூற்றைத் தாய் தந்தையர்களை யறியாத மைந்தன் ஒருவன் தன்னைப் பெற்றவர்களைத் தானறியாததனால், நான் அந்தரத்தில் முளைத்து வந்தேனென்னும் பேதை மொழிபோலு மென்க.

 

நிற்க, கடவுளைக் குறித்துண்டான சாதனம் இதுவென வாராயுமிடத்து வேதமே யெனப்போதரும். அவ்வேதம் நான்கு வகையாய் அநந்த சாகைகளை யுடையது.

 

வேதத்தைச் சிலர், ஈசுவரனால் பிரமனுக்குக் கூறப் பெற்று, பிரமனால்மற்றையோர் வழி வழியாக வுலகிற்கு வந்தது என்பர். சிலர் சுயம்பு அதாவது தானே யுண்டாயது என்பர். இனி இவ் வேதம் தலைவனின்றித் தானேதோன்றி யிருப்பினும், தானே தனி முதலாயியங்குந் தற்பரனாலே தரபெற்றிருப்பினும், இருமையுஞ் சிறப்புடைத் தன்றி யிழுக்காமாறில்லை யென்க. ஆயினும், கடவுளை வேத சொரூபி யென்றும், அநாதியே யுள்ளவரென்றும், கூறப்படுதலால் கடவுள் வேதம், வேதம் கடவுள் எனக் கொள்ளலாம்.

 

அவ்வேதம் தன்னுள் யாவற்றையும் மறைத்து வைத்திருப்பதினால் மறை என்றும், பல தர்மங்களையும் அறியக் கருவியாயிருப்பதினால், வேதம் என்றும், ஓதப் பெறுதலால் ஒத்தென்றும், கேட்கப்படுதலால் சுருதி என்றும், எல்லா நூற்கும் முந்திய தாகையால் ஆதி நூல் என்றும், மெய்ப்பட்டிருப்பதால் மெய்ந்நூலெனவும், பற்பல காரணங்களால் ஆரணம் என்றும், எழுதாக்கிளவி என்றும், நிகமம் என்றும் பெயர் பெற்றுள்ளது. இத்தகைய பெற்றியமைந்த வேதத்திலே உலக காரணன் கடவுளென்று பறை சாற்றப் பெற்றிருக்கிறது.

 

இதுகாறுங் கூறிப் போந்தவாற்றா னிவ்வண்டாண்ட சராசரங்கட்கு எல்லாங் காரணனாய்க் கண்டறியப் படுபவரே கடவுள் என்றும், அந்தக் கடவுள் அறிவு சொரூபமாயும், ஆநந்த மயமாயும், கிருபா சமுத்திரம் போன்று அளவிலாத் தம் அருட் சக்திகளோடும் ஆனந்தத் தாண்டவங் குயிற்றி யருளும் சிவபெருமானே யாவர் என்றும் அறிய முடிந்ததன்றோ? இவரை வழிப்படும் சமயம் சைவ சமய மெனப்படும். இதுவே மெய்ஞ்ஞான சமய மென்பதை


''சைவத்தின் மேற்சமயம் வேறிலையதிற் சார் சிவமாம்
 தெய்வத்தின் மேற்றெய்வ மில்லெனு மின்மறை"


என்ற வான்றோர் வாக்கா னினிதுணர்க.

 

சிவபெருமான் எவ்வெவர் சிந்தையினில் எவ்வெவ்விதமாய்த் தியானிக்கின்றனரோ அவ்வவ்வுருவத்தோடு வந்து அருள் புரிவாரென்பதை, அங்கனம் தியானித்து அருள் பெற்றுய்ந்த உண்மை நாயன்மார்களாகிய திருத்தொண்டர் புராணம் முதலிய சைவ புராணங்களிலே காண்க.

 

பின்னர், நம்மையெல்லாம் படைத்து இரட்சித்து வரும் முழு முதற்கடவுளாகிய சிவபிரான் நமக்குண்டாயிருக்கிற ஒவ்வொரு அவயவமும் நாம் அவரை வழிபட்டுய்ய வேண்டிய காரியங்கட் கெல்லாம் உதவித் துணையாயுள்ளது. ஆகவே, அவயவங்களி லெல்லாம் சிறந்த சிரத்தினாலவரை வணங்கியும் கண்ணினாலவர் திருக்கோவில் கொண்டுள்ள மூர்த்தங்களையும், திருவிழாக்களையும் கண்டு களித்தும், வாயினாலவரை நாவாரத் துதித்தும், செவிகளினாலவர் புகழைக் கேட்குந் தோறும் சலியாது கேட்டும், கைகளினால் அஞ்சலி செய்தும், புட்பம் கொண்டு அருச்சித்தும், கால்களாலவர் திருக்கோயில் கொண்டெழுந்தருளியுள்ள திவ்விய தலங்கட்குச் சென்றும் தரிசித்துய்ய வேண்டுமென்பது கொண்டே, ஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகள் தம்மருமைத் திருவாக்கினால், “தலையே நீ வணங்காய்" என்றது முதற்கொண்டு “ இறுமாந்திருப்பன் கோலோ வீசன்பல் கணத் தெண்ணப்பட்டு' என்பது முள்ளதாய திருவங்க மாலையைப் பாடி யருளினா ரென்க.

 

ஆகவே, சிவபெருமானருளின்றி, யாது நலனு மெய்தாது, பிறவியிற் கிடந் துழல வேண்டிவரும். ஆகலின், அவனருள் பெறவேண்டுமானால் சாத்திரங்களிற் கூறியுள்ள சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கையும் வழுவாது நடாத்தல் வேண்டும். இந்நான்கும் ஒன்றற்கொன்று சோபானக்கிரமமாக (படித்தரமாக) உள்ளது. இதனை,


''விரும்புஞ் சரியை முதன் மெய்ஞ்ஞான நான்கு
 மரும்பு மலர் காய்கனி போலன்றோ பராபரமே''


என்றுள்ள தாயுமானவர் வாக்கினாற் பெறப்படும். பூவாது காய்த்துப் பழுக்குமரமுள்ளது போலச் சிலர் ஞானியராகவே பிறக்கிறார்களே யெனில், அதற்கும்,


''யோகியர்க்கே ஞானமொழுங்காம் பேரன்பான
 தாகியரும் யோக முன்னே சார்ந்தோர் பராபரமே"


எனப் பாடியுள்ளார்.

இனி, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களையும் அனுஷ்டிப்பவர்கள் முறையே சாலோக சாமீப சாரூப சாயுச்சிய பதவியை யடைவரென்பது திண்ணம். ஆகவே நாமும் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானை, மனமொழி மெய்களினால் இடையறாது சிந்தித்து வந்திப்போமாக!

 

ஆனந்த போதினி – 1931 ௵ - டிசம்பர் ௴

 

No comments:

Post a Comment