Saturday, August 29, 2020

கடவுள்-கந்தழி

 

ஆனந்த போதினியின் ஐப்பசித் திங்கள் வெளியீட்டில் பதிப்பிக்கப்பட்ட "தமிழர் கடவுட் கொள்கை'' னுங் கட்டுரையைக் கண்ணுற்ற அன்பர் சிலர், "தமிழர்க்குக் கடவுட்கொள்கை யுண்டென்பதற்கு எடுத்துக்காட்டு யாதானு முனதா? தமிழருடைய கடளின் பெயர் யாது? கடவுளை அன்னார் எம் முறையில் வழி பட்டனர்? தமிழர் தனிக்கடவுட் கொள்கை உடையரா? ஆரியர் குடியேற்றத்தின் முன்னர்த் தமிழர்க்குக் கடவுள் நம்பிக்கை இருந்த துண்டோ? என்றின்னோரன்ன வினாக்களை எம் மாட்டு வினவலாயினர். அன்னார்க்கு எமது சிற்றறிவைக்கொண்டு இறுக்கத்தக்க விடையாது மின்றேனும், தொல்லை இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் கண்ட உண்மைகளை யாம் அறிந்தவாற்றான் அறைய ஈண்டுத் துணிந்தனம்.

 

உலகம் நாடோறும் ஒழுக்கிலும் வழக்கிலும் மாறுபட்டும் வேறுபட்டும் வருவதைக் கூர்ந்துணர்ந்த முதுக்குறையாளர், பன்னெடுகாட்கு முன்னர்ப்பரந்தொருங் கீண்டி இவண் வாழ்ந்து வந்த தமிழருடைய ஒழுக்க வழக்க வரலாற்றை அளவிட்டுக் கட்டுரைத்தல் இயலாததொன்று என்பதைச் செவ்விதின் உடன் படுவர். துருவாசர், வசிட்டர், விசுவாமித்திரர் போன்ற முனிவரரும் ஈண்டின்மையான், இக்காலத்து முக்கால உணர்ச்சி வாயிலாக உணர்ந்து கோடலும் அரிதே யன்றோ? ஆகலான், நம்மனோர்க்கு, ஒருவாற்மூன் பண்டைத்தமிழர் கொள்கையை நிறுவுதற்குத் தொன்னூல்களே துணைக்கருவிகளாம் என்பதுத் தெள்ளத் தெளிந்ததொன்று. தொன்னூற் கடலுட்புக்காடி எழுநர்க்குப் பல்வேறுபட்ட கருத்துக்கள் எழுதற்கு இடனாதலும் ஒருவர் ஒருவரைப் பல்வகையானும் மாறுகோடலும் இயல்வனவே. அஃது எதுபோலுமெனின், கடலுட் புக்கார் பலருள்ளும் சிலர் முத்து மணலும் காண்டலும், சிலர் மணலே காண்டலும், சிலர் ஆண்டுள்ள உயிரும் நவமணியும் சேறும் காண்டலும், சிலர் அளக்கரின் ஆழமளவிட்டுக் காண்டலும் சிலர் நீரையன்றிப் பிறிதெதுவும் காணாமையும், சிலர் பல காணினும் உளங்கொளாமையும் போல வென்க. இங்கனமாக அத்தகையார், யானைகண்டார் இயல்பையே போலக், கடலுள் முத்தே உள்ளது மணலே உள்ளது, சேறேஉள்ளது, முத்து முதலியன உள்ளன, பலவுள்ளன அவை நுனித்து உணரற்பாலவல்ல என்றிங்கனம் கருத்து வேறுபட்டுக் கழறலும் இயல்பேயாம். ஏற்கடற் பெற்றியும் அதனுட்புக்கார் பெற்றியும் இதுவே எனக் கொள்க.

 

தமிழர் ஆவார் தமிழ்நாட்டை உடையார், தமிழ் மொழியை யுடையார் படும் ஆரியரும் தமிழரும் தம்முள் வேறாவர் என்பது பெறப்படும். அற்றன்று; ஆரியர் என்பார் உயர்ந்தார். என்றும் ஆரியர் என்னுமொழி ஐயர் மரீ இயதென்றும் அதனானே தமிழ்நாட்டுக் குடியேறிய பார்ப்பார்க்கு ஐயர் என்னும் பெயர் வழங்கிற்று என்றும் தமிழர் ஆவார் கீழ்
மக்கள் என்றும் கிளக்குநர் உளரேல்; அற்றன்று; - ஆரியராவார் கீழ்மக்கள் (மிலேச்சர்) என்றும் ஆரியம் என்னும் வடமொழி அவர்க்கு உரித்து அன்று பொதுவென்றும் அது வடமொழி எனப் படுமேனும் அப்பெயர் பிற்படத் தோன்றியது. தமிழே நாவலந் தீவு முழுவதும் பரவியிருந்தது என்றும், தமிழர் என்னுஞ் சொற்கு இனியர் என்று பொருளென்றும் இசைத்து மறுப்பாருமுள ராகலான், அவ்விருவர் கூற்றும் ஈண்டைக்கு வேண்டா. ஒழுக்க வழக்கங்களில் தமிழரும் ஆரியரும் சிலச் சில வேறுபாட்டை உடையரென்பதும் அவர்கள் கால அடைவில் தம்முள் ஒருவர் ஒருவரிடத்து நின்றும் சிற்சில கொள்கைகளையும் ஒழுக்கங்களையும் கற்றுப் பயின்று வந்தனரென்பதும் தொன்னூ லுணர்ந்தார் உன்னி உணரற் பாலவே. அங்ஙனம் பயின்ற வற்றுள் தமிழர் ஆரியரிடத்து நின்றும் கற்றுக்கொண்டனவாய் முக்கடவுள் வழிபாடும் நெருப்பு, வாயு என்றின்னோரன்னவற்றை கடவுளாக் கோடலும், மணவினைச் சடங்கு முதலியவும் சிறந்தன. சிவன், பிரமா, விஷ்ணு என்னும் கடவுட் பெயர்களும், விநாயகர் சுப்பிரமணியன இந்திரன் முதலிய கடவுட் பெயர்களும் பார்வதி, இலக்குமி, சரசுவதி முதலிய பெண்பாற் பெயர்களும் வடமொழியாக இருத்தலானும் அவற்றுக்குத் தமிழ்ப்பெயர்களாக முதல், திருமால், நான்முகன், முன்னோன், முருகன் முதலியவும், முதல்வி, திரு , நாமகள் முதலியவும் பின்னர் வந்தனவே எனத் துணிதற்கு இடமுள தாகலானும், அக்கடவுளரை ஆரியரிடத்து நின்றும் தமிழர் வழிபடக் கற்றுக்கொண்டன ரென்பது சாலும். நெருப்பு, வாயு இன்னோரன்னவற்றை உபநிடதங்களுள் ஆரியர் கடவுளராகக் காட்டிப் போந்தன ராகலானும் தமிழர் மணவினை நிகழ்ச்சிக் கண் தீவலஞ் செய்தலானும் திருவிளக்குக்கு மகளிர் வழிபாடு செய்தலானும் வாயுதேவன் மகன் எனப்படும் மாருதியை வணங்குங் கொட்பானும் பிறவாற் நானும் நெருப்பு வாயு முதலியவற்றையும் தமிழர் ஆரியரிடத்து நின்றும் வழி படக் கற்கலாயினர் என்பது அமையும். நிலத்தைப் "பூமிதேவி" என வணங்கலும் உள தென்பதை உணரார் யாவர்? மணவினை நிகழ்ச்சிக்கு இற்றை நாளிலும் தமிழ்மக்கள் பார்ப்பாரை அழைத்துச் சடங்கு நிகழ்த்து வித்தலும், மந்திரம் ஓதுவித்தலும், தாமும் அம்மந்திர மொழிகளைக் கூறிக்கொள்ளலும், பார்ப்பார் கூறியவாறே அப்போழ்தத்துப் பிறவற்றையும் செய்தலும் பார்ப்பார்க்கு ஈதலும் உளவாகலின் மணவினைச் டேங்குகளையும் தமிழர் ஆரியர் மாட்டு நின்றும் பயின்றனர்.


“'சாலி யொருமீன் றகையாளைக் கோவலன் - மாமுது
பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலஞ் செய்து"

 

என்றின்னோ ரன்ன எடுத்துக்காட்டுக்கள் கடைச் சங்கக் காலத்தும் பார்ப்பார் தமிழ்மக்கட்கு மணவினைச் சடங்கு நிகழ்த்தி வந்தனர் என்பதை விளக்குகின்றன. அதற்கு முன்னர் இன்றோ எனின், இடைச் சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் நூலாய ஒல்காப் பெருமைத் தொல்காப்பியத் துள்ளும் மேற்காட்டிய தெய்வவழி பாடும் காணமுறையும் சுட்டப்பட்டுள்ளன வாகலான், தொல்காப்பியர் காலத்திலும் அவை உளவாயின என்பது உணரப்படும். தொல்காப்பிய முதலூழிக்காலத்தின் கடைக்கண்ணது என்பர் நச்சினார்க்கினியர்.

 

இனி மேற்கூறிப்போந்தவற்றுக்கு இயன்றவரை சில எடுத்துக் காட்டுக்களைத் தருதும்: -


''மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புன லுலகமும்
வருணன் மேய பெருமண லுலகமும்
முல்லை குறிஞ்சி மருதநெய்த லெனச்
சொல்லிய முறையாற் செல்லவும் படுமே"               (தொல். பொ. அகத். 5.)


மாயோன், சேயோன், வேர் தன், என்பார் முறையே திருமாலும் முருகனும், இந்திரனு மென்க.

 

இச்சூத்திரத்தான் தமிழர் நிலத்தை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலும், முருகனும், இந்திரனும், வருணனும் கடவுளர் எனச் கருகினர் என்பதும் பெறப்படுகின்றன. இங்ஙனம் நிலத் த நான்காகப் பகுத்த பெருமை தமிழர்க்கே உரித்து. என்னை? ஆரியத்துள் பொருளிலக்கண மின்றாகலான். தமிழர் அங்ஙனம் நிலத்தைப் பகுத்த பின்னர் ஆரியர் அந்நிலத்தினும் தம் கடவுளரை நிறுவவேண்டிப் பிற்காலத் சமிழர்ச்கு மாயோன் முதலிய கடவுளரை எடுத்து இயம்பினர் என்பதும் துணியப்படும். என்னை? அவை தமிழர்க்குரிய தெய்வமாகக் கோடற்கு எடுத்துக் காட்டு இன்றாகலானும் வடமொழி நூல்கள் தெள்ளத்தெளிய அவற்றை ஆரியர் கடவுளர்க்குக் கூறுகின்றமையானும் என்க. இதனால் ஆரியர் தொல்காப்பியருக்கு முன்னரே தமிழ்நாட்டுக் குடியேறினாரென்பதும், இலக்கணங் கூறவந்த ஆசிரியர் வழக்கினுட் சிலவற்றை ஒழித்துக் கூறுதல் முறைமை யன்றாகலான் தொல்காப்பியரும் அவரது காலத்துத் தமிழ்நாட்டு வழக்கை யுணர்ந்து இலக்கணஞ் செய்தார் என்பதும் போதரும். தொல்காப்பியர் ஆரியரென்றும் அவர் ஆரியர் சார்பினின்றும் தமிழர்க்கு இல்லது புணர்த்தாரென்று சிலரும், பிற்காலத்துத் தொல்காப்பியர் சொல்லாதனபல இடைச் செருகப்பட்டன என்று சிலரும் செப்புதல் பேணத் தக்கனவல்ல. என்னை? நெடுங்காலம் வழங்கிவரும் இலக்கண நூலுட் பிறபுகுத்தின், பிறரால் அறியப்படும் என்பது ஒருதலை. சின்னாள் வழக்கின்றி யிருக்கும் ஏலினசத்தாயின், அது செய்யப்படுமென்று ஒரு போழ்து நினைக்கினும் ஆம். தொல்காப்பியம் இடை கடைச்சங்கக் காலத்தும் அதன் பின்னரும் பெறலருமணிபோற் பேணப்படுதலின் அக்கூற்றுப் பொருந்தா தென்க. இக்காலத்துத் தொல்காப்பியத்துப் பிறவற்றைச் சிலர் இடைச்செருகின் என்படும் அச் செருகல்? அதுபோலு மன்றே அக்காலத்தும்? அன்றி இடைச் செருகின்றேல். அச்சுப்பொறி முதலியன அக்காலத்துள்ள தொல்காப்பியச் சுவடிகளிலெல்லாம் செருகல் செய்தல் இயலாத தொன்றே யன்றோ? அங்ஙனமாகவே, சுவடிகளில் சில சூத்திரங்கள் மிகுந்தும் குறைந்தும், மாறு பட்டும் வேறு பட்டும், தழுவியும் வழுவியும் இருக்க வேண்டுமே. அன்றியும் உரையாசிரியர் பாடபேதம் கொண்டனரேயன்றி இடைச்செருகல் உண்டென்று உரைத்தாரிலரே! ஆகலானும் அக்கூற்று வற்றிற்று. நிற்க; எனவே, ஆராய்வழி, சேயோன் முதலிய கடவுளரைத் தமிழர் தொல்காப்பியர் காலந் தொட்டே வழிபட்டு வந்தன ரென்பது அமையுமென்க. ஆகலான், ஒரு காலத்துத் தமிழர் ஆரியர்க்குச் சிறப்புக் கொடுத்துப் போந்தன ரென்பதும், - தீதிற்கேனும் நன்மைக்கேனும் அவ்விரண்டற் கேனுமாகுக - அவரைத் தமிழர் ஒருவாற்றாற் பின்பற்றி வாழ்ந்தனர் என்பதும் கைக்கனி என்னக் காட்சி தருகின்றன.

 

நிலப் பகுப்பில் கடவுளரை ஏற்றிவைத்த ஆரிய மக்கள் கருப் பொருளிலும் தெய்வத்தை ஏற்றிவைத்தன ரென்பதும்

''தெய்வமுணாவே மாமரம் புட்பறை
செய்தியாழின்பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவெனமொழிப்.''              (தொல் - பொ - அகத்-18.)


என்னும் சூத்திரத்தினால் விளங்கும். ஈண்டுத் தெய்வத்தை முன்னிறீஇயதூஉம் கண்டு கொள்க. இலக்கணம் இலக்கியத்தினின்றும் உலக வழக்கினின்றும் அரும்புதலானும், தொல்காப்பியத்துச் சிறப்புப்பாயிரத்துள்

 ,
"வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகத்து.”


எனவும் சொல்லப்பட்டதாகலானும் இன்னோரன்ன கொள்கைகள் அக்காலத்து வழக்கில் இருந்தன என்பது புலப்படும். தொல்காப்பியர்க்குப் பின்னர் பொருளிலக்கணம் செய்தாரும் அவரையே பின்பற்றினரன்றிக் காலத்திற்கேற்ப நூல் செய்தாரிலர். "இறந்தது விலக்கல்' என்னும் உத்தியால் அவ்வக்காலத்து நிகழாததனை விலக்காது விடின் இலக்கணம் கொண்டு விழுபயன் பெறலாகாது.


“ஆரணங் குயர்ந்தோரல்லோர் புள்விலங்
கூர் நீர் பூமா முணாப்பறை யாழ்பண்
டொழிலெனக் கருவீ ரெழுவகைத்தாகும்."           (அகப்பொருள் விளக்கம். 19.)


என நாற்கவிராச நம்பியும் தொல்காப்பியரைத் தழுவிச் சூத்திரஞ் செய்துள் எது காண்க. யாழும் பண்ணும் இக்காலத்து யாண்டைய? ஆயினும், பொருளிலக்கணம் எக்காலத்து மொருபான்மைத்தே, வேறுபடா தென்பார் சில்லோர் என்பது மீண்டே உணர்க. ஆரணங்கு என்றது தெய்வத்தை. ஈண்டும் தெய்வம் முன்னர் நாட்டப்பட்டது.


“அங்கண்வானத் தகடூர்ந்து திரிதரும்
திங்கட்கடவு டிரித்து நீ பெயர்த்தரின்.''


என்பது உடன்போய தன் மகளைப் பெயர்ந்து மீளத் தாய் தெய்வத்தை நோக்கிக் கூறியது.

 

இனி, நிமித்தம், வெறியாட்டு, பலி, அரசனைத் தெய்வத் தொடுபடுத்துக் கூறல்,
கல் நடுதல், வாழ்த்துதல் முதலியவற்றின் கண்ணும் தமிழ் மக்கள் பார்ப்பார் தெய்வங்களை யே உளங்கொண்டனர் என்பதும் கீழ்க் குறிப்பிடுபவற்றான் அறியற்பால.


"தன்னு மவனுமவளுஞ் சுட்டி
மன்னு நிமித்தம் மொழிப்பொரு டெய்வம்
நன்மை தீமை யச்சஞ் சார்தலென்
றின்ன பிறவு மவற்றொடு தொகை இ..... யவ்வழியுரிய.''    (தொ-பொ-அகத். 36.)


“பல்லியும் பாங்கொத் திசைத்தன."                              (பாலைக்கலி.)

 

"நாளன்று போகிப் புள்ளிடை தட்ப,"                             (புறம். 24.)


“புள்ளும் பொழுதும் பழித்தலல்லதை
உள்ளிச் சென்றோர்ப் பழியலர்.''                                (புறம். 204.)


"பச்சூன் பெய்த பைந்தினை வல்சி, பொலம்புனை கலத்திற் றருகுவன்மாதோ,
வெஞ்சின விறல்வேல் விடலையோ டஞ்சி, லோதியை வரக்கரைந் தீமே."                                                                 (ஐங்குறு.391.)


இவற்றான் பல்லி சொற் பாங்குணர்தல், பொழுது தரும் பெற்றி, புள் தரும் பான்மை, கொடிக்குறி (காக்கை கரைதலைக் குறியாக உணர்தல்) இவற்றைத் தமிழர் நம்பி வாழ்ந்தனர் என்பது தெரிகின்றது. இன்னும், 

 

"படையியஞ் கரவம் பாக்கத்து விரிச்சி
புடை கெடப் போகிய செவ்வே புடை கெட்
ஒற்றினாகிய வேயே.”                                   (தொல். பொ. புறத். 3.)


என்பதனான் அரசர்பானின்று பிறவரசருடைய நிரை கோடற் கண்ணும் நிரைமீட்டற் கண்ணும் நிமித்தம் ஆய்தலும் கொள்க பாக்கத்து விரிச்சி என்பதற்கு, ''நிரை கோடற்கு எழுந்தோர் போந்துவிட்ட பாக்கத்துக் கங்குலின் நல்வாய்ப்புட் கேட்டலும் நிரைமீட்டற்கு எழுந்தோர் இடைப்புலத்துப் புறம் போந்தோர் கூறியவற்றை வாய்ப்புள்ளாகக் கேட்டலும்'' என உரை கூறுவர். எனவே புள்ளை நிமித்தமாகக் கோடலும் பிறர் வாய்ச் சொற்களை நிமித்தமாகக் கோடலு முண்டென்பது பட்டது.


"ஓடா உடல் வேந்தடுக்கிய உன்ன நிலை"                (தொல். பொ. அறத். 5.)


என்பதனான் உன்னமரத்தை வீரர் தம் வெற்றிக்கு அறிகுறியாக நிமித்தமாகக்கொள்வது முளது என்பது போந்தது. உன்ன நிலேயாவது: -

 

''வேந்தன் கருத்தானன்றி அவன் மறவன் வேந்தற்கு நீ வெற்றி கொடுத்
தால் யான் நினக்கு இன்னது செய்வல் எனப் பாவாலும், எம் வேந்தற்கு
ஆக்க முளதெனின் அக்கோடு பொதுளுக எனவும் பகை வேந்தற்குக் கேடு
உளதெனில் அக்கோடு படுவதாக என நிமித்தம் கோடலும் என இருவகைத்
தெய்வத் தன்மை"                                            (நச்சினார்க்கினியர்)


"முன்னங் குழையவுங் கோடெலா மொய்தளிரீன்
அன்னங் குழையாவித் தோங்குவாய்- மன்னரைக்
கொன்று களங் கொள்ளுங் கொல்யானை வேந்தனை
வென்றுகளங் கொள்ளுமேல் வேந்து"         (நச்சினார்க்கினியர் காட்டிய பாட்டு)


என்பதனால் உன்ன நிலை யறிக.

இவையெல்லாம் தெய்வத்தை நேர் முகமாக வழிபட்டதாகக் காட்டிற்றில வேனும் தெய்வஞ் சுட்டி நிறுவுதலின் தெய்வங் கொள்கையை நுதலிற்றென்பது நுனித்து உணரப்படும். அன்றியும், "இருவகைத் தெய்வத்தன்மை" என நச்சினாக்க்கினியர் கூறுவது உங் கண்டுகொள்க. இந்நிமித்தங்கள் யாதானுமொரு கடவுட் பெயர் சுட்டிவாராமையானும் புட்கேட்டல் பாக்கத்து விரிச்சி என்பன முதலியன தனித் தமிழ்ச் சொற்களாகலானும் பண்டைத் தமிழருடைய வழக்கு எனக் கோடற்கு இடமுண்டு. தமிழர் ஆசிரியர் வரு முன்னர்த் தமக்கென ஒரு கடவுட்கு இயற்பெயர் சார்த்தி வழங்கு வழக்க முடையா ரல்லர் என்பது ஒருவாற்றான் மேல்போதந்து கூறுமாற்றான் உணர்ந்து கொள்க.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - பிப்ரவரி ௴

 



 

No comments:

Post a Comment