Saturday, August 29, 2020

 

கண் கொடுத்த கந்தன்

 

பாண்டிய நாட்டின் தலை நகரமாகிய மதுரையைச் சார்ந்த திண்டுக்கல் தாலூகாவில், கன்னிவாடி ஜமீன் தாருக்குச் சொந்தமான கிராமங்களில் வேலை பார்த்து வருகிற ஏஜெண்டு பலரில் ஒருவருடைய காரியஸ்தர் வத்திலக்குண்டு' என்கிற கிராமத்தில் ஓர் மிராசுதார். இவரது பெரியோர் பரம்பரையாகப் பழனியாண்டவனை வழிபடும் கடவுளாக' த தொழுது கொண்டு வந்தனர். நமது காரியஸ்தர் குல தருமத்தை மறந்தவராய் இளமைப் பருவத்தில் சரீர சல்லாபத்தில் ஆழ்ந்து வேலையின் பெருமையில் செருக்குற்று இருந்த நாட்களில், அவ்வூருக்கு உத்தியோகஸ்தர் ஒருவர் வந்து சேர்ந்தார். உண்ணும்போதும், உறங்கும் போதும், நடமாடும் போதும் பேசும்போதும், உத்தியோக வேலையை நடத்தும் போதும், தன்னைப்பற்றி ஏதேனும் சொல்ல நேரிடும் போதும், இவர் தண்டாயுதபாணியைப் பற்றிப் பேசாது இரார். இவருக்குக் காலை வேளையில் பூஜை செய்ய ஒழியாது. ஆகவே, இராப்பொழுது தனதாக நினைத்துச் சுமார் எட்டு மணிக்கு ஆரம்பித்து, பத்து அல்லது பதினோரு மணிவரை ஸ்தோத்திரம் செய்து பூஜை முடிப்பது அவர் வழக்கமாயிருந்தது. இந்தப் பூஜைக்கு வத்திலக்குண்டில் உள்ளவர் அநேகர் வருவதுண்டு. வ, வ, பூஜா காலத்தில் ஆடல் பாடல்களும் சேர்ந்தன. சுக்கிரவாரம், சோமவாரம் முதலிய நாட்களில் அபிஷேகம், அர்ச்சனை பலமாயிற்று. ஆவேச பூர்வமாகக் கடவுள் ஆவிர்ப்பவிக்கிற வழக்கம் ஒன்று எப்படியோ ஏற்பட்டது. குறிசொல்வதும், வியாதிகளுக்கு மருந்து சொல்வது முதலியன ஒவ்வொன்றாய்ப் பலத்தன. ஐயருக்கு ஒருவிதப் பேரும் புகழும் உண்டாயிற்று.

 

பகற் பொழுதில் உத்தியோகக்காரியம், இராப்பொழுதில் பூஜை காரியம். ஆக எப்பொழுதும் இவர் வீட்டில் வைபவமே வைபவம். இந்நாட்களில் நமது காரியஸ்தரும், அவர் மனைவியார் பொன்னம்மாள் என்பவரும் தினே தினே சுவாமி தரிசனத்திற்கு வருகிற வழக்கமாக இருந்தனர். அவர் கொஞ்ச நாழிகை இருந்து மனைவியை யழைத்துக்கொண்டு போய்விடுவர். பொன்னம்மாளுக்குப் பூஜையில் ஒரு பிரேமை. பழனியாண்டவனிடத்து வைத்த அன்பினால் அவள் மனம் இளகலாயிற்று. அநேக இரவுகளில் பூஜா காலத்தில், ஆனந்தபாஷ்பம் சொரிந்தவண்ணமா யிருப்பர். இப்படி ஓர் இரவில் தன்னையறியாது ஆவேசங் கொண்டு, ஆனந்த நடனம் புரியலுற்றனள். குறிசொல்லி விபூதி அளித்தனள்.

 

இச்செய்தி காரியஸ்தருக்குத் தெரியவரவே தம்மையறியாது கோபம் பிறந்துவிட்டது. அன்று இரவில் மனைவியை மிகவும் கடிந்து வருத்தியிருப்பர் போலும். மறுநாட் காலையிலும் காலை உணவு கொள்ளும் தறுவாயிலும், ஏதோ சாக்கு வைத்துக் கொண்டு பொன்னம்மாளைக் கேவலம், பண்ணையாளை யடிப்பவர் போல, கால் தலை தெரியாது புடைத்துவிட்டு வெளியே போந்தனர். பொன்னம்மாள் யாதொரு பாவத்தையும் அறியாதவளாய்த் தன் கஷ்டத்தைப் பழனியாண்டவனிடம் முறையிட்டாள். கருணாநிதிக்கு, மனம் தாளவில்லை. என்ன செய்வார்! விபூதி ருத்திராக்ஷம் தரித்த கிழவர் ஒருவர் போல ஹரே ஸ்ரீகிருஷ்ணாயநம: என்று வரக்கேட்டு, பயபக்தி விசு வாசத்தோடு அக்ஷதையிட்டுத் திரும்பி வந்து பொன்னம்மாள், கூடத்தில் உட்கார்ந்தாள். உட்கார்ந்த விடத்திலிருந்து, அசையவில்லை. பொன்னம்மாளுக்கு இரண்டு கண்களும் தெரியவில்லை. என்னகாரணமோ? எதை நினைத்து அழுவாள்! புருஷனோ மூர்க்கன். போஜனத்திற்கு வரும் நேரம் ஆயிற்று. பொன்னம்மாள் அழுதகண்ணும் சிந்திய மூக்குமாயிருந்து கொண்டு தலைவலி பொறுக்க முடியவில்லையென்றும், "ஐயோ! கண் தெரியவில்லையே! அப்பனே! கண் தெரியவில்லையே" என்றும் மனம் நொந்து வருந்தி அழுது கொண்டிருந்தனள்.

 

வந்தார் காரியஸ்தர் மத்தியான போஜனத்திற்கு. கண் தெரியாது போனதற்குக் காரணம் அறியக்கூடவில்லை. பொய், என்று மதித்துப் பின்னும் புடைக்கப்போனார். பொன்னம்மாளைச்சாமி வந்ததோ உன் பேரில்?'என்றார். பலவிதம் ஏசினார். இதற்குள் அண்டை வீட்டு நண்பர்களும் உறவினர்களும் வந்து கூடினர். எல்லோரும் பொன்னம்மாளுக்குக் கண் குருடாய்ப் போய்விட்டது' என்றனர்.' எப்படி இக்கஷ்டம் விளைந்தது' என்று வினவினர் சிலர். காரியஸ்தர் தன் நண்பர்களிடத்திலும், பொன்னம்மாள் தன் தோழிகளிடத்திலும் காலையில் நடந்த விவரத்தைத் தெரிவித்தனர். பிக்ஷைக்குக் கிழவர் ஒருவரும் வரவில்லை யென்றும், வந்தவரின் அங்க அடையாளமுள்ள பெரியவர் ஒருவரும், தெரிந்தவரையில் இல்லையென்றும் தேர்ந்து கடைசியாகத் தெய்வ குற்றமா யிருக்கலாம் என்றனர் சிலர். தெய்வகுற்ற மென்றால் யாரை நாடுவார்கள் ஜனங்கள்? இதற்குள்ளாக அம்மையநாயக்கனூரிலிருந்து ஆங்கில வைத்திய பண்டித ரொருவரும், சமீபத்திலுள்ள நாட்டு வைத்தியர்கள் சிலரும் வந்து பொன்னம்மாளுக்குத் தங்களால் சிகிச்சை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிவித்தார்கள். காரியஸ்தர் நேற்றுப் போய்த் தரிசனம் செய்த கடவுளே இப்போது இவளுக்குக் கண் கொடுக்கட்டும், அந்தக்கடவுள் உண்மையான தெய்வமென்றால்'' என்று பதட்டமாகப் பேசினார்.

 

சேதுராமய்யரவாள் பூஜைக்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்றும், உத்தியோகஸ்தர் மனஸ்தாபம் நமக்கேன் என்றும் பலவிதமாகப் பேசலுற்றனர் சிற்சிலர். என்றாலும் ஐயாவாள் பூஜை இரவில் தான் விசேஷமாய் நடத்துவர். அங்கே பொன்னம்மாளை யெப்படி அழைத்துப்போவது? பல பல சௌகரியா சௌகரியங்களை யெல்லாம் நினைத்து ஒரு விதம் செய்ய ஆலோசித்தனர். காரியஸ்தரைக் கொண்டு ஐயரவாளை வீட்டிற்கு அழைத்து வரச்சொல்லி, என்ன செய்வதென்று கேட்கலாம் என்றனர் சிலர். ஐயாவாளைப் போய்க் கூப்பிடப்போன பொழுது அவர் அப்போதுதான் சமீபத்திலுள்ள கிராமத்திற்குச் சவாரி போய்த் திரும்பி வந்து கொண்டிருந்தார். வரவும் பொன்னம்மாளுக்கு நேர்ந்த விபத்தைக்கேட்ட போது தணலில்விழுந்த புழுப்போல் துடித்தனர். பக்தசிரோன்மணிகளுக்கு இவ்விதம் கஷ்டம் வரக்கூடாதே; வந்தால் கடவுளை பாமர ஜனங்கள் தோத்திரம் செய்யவும், பூஜை செய்யவும், துணியார்களே, என்று தவித்தனர். உடனே வந்தார். பொன்னம்மாள் ஸ்திதியைப் பார்த்து மனம் தாளாதவராய் ஆண்டவனைப் பலவிதம் போற்றினார் - பாடினார் – கோபித்துக் கொண்டார் - தம்மை இகழ்ந்து கொண்டார் - ஒன்றும் தெரியாது தவித்தார் - கவனம் செய்து வழக்கப்படி தோத்திரம் செய்தார் - நண்பர்கள் சிலர் கூடி குமரகுரு பதிகம் பாடினார்கள். இப்போது மணிபகல் ஒன்று. ஒருவரும் பச்சைத் தீர்த்தம் பல்லில் குத்தவில்லை. எல்லோரும் ஒரேமனதாய்ப் பொன்னம்மாளுக்கு உற்ற கஷ்டத்தை நினைந்து வருந்தித் தவித்துக் கொண்டிருந்தனர்.

 

காரியஸ்தர், தாம் செய்த தகாத காரியத்தை நினைந்து வெளிப்படையாக மனம் நோவ ஆரம்பித்தார்.'' பொன்னம்மாளுக்குத் திரும்பவும் நேத்திரம் தெரியுமாகில், எந்தவித அபராதத்திற்கும் நான் உள்ளாவேன்'' என்றார். சுமார் நூறுஜனங்கள் பொன்னம்மாள் வீட்டிற்குள் குழுமியிருந்தனர். தெருவில் சூத்திர'ஜனங்கள் கூட்டம் ஒன்றிருந்தது. ஒரு ரூபாய் கற்பூரம் செலவாயிற்று. எங்கே பார்த்தாலும் சூடப்புகையும் சாம்பிராணிப் புகையுமே. 'பழனியாண்டவன் தான் கிருபை செய்ய வேண்டும். பழனியாண்டவனே கதி'யென்றனர். “பழனி மலையானுக்கு அரோகரா தண்டாயுதபாணிக்கு அரோகார்'' என்ற சத்தமே சத்தமாயிருந்தது. காரியஸ்தருடைய மனம் பரி பூரணமாய் என்னப்பன் பாதாரவிந்தங்களில் பதிந்துவிட்டது. தன் மனைவி மேல் கொண்ட கெட்ட எண்ணங்க ளெல்லாம் காரியஸ்தரை நெருப்பில் போட்டு வாட்டுவதுபோல் வருத்தியது. பொன்னம்மாள் தான் ஒரு பாவத்தையும் அறியவில்லை யென்றும், தனக்கு நேத்திரம் தெரியாமற் போயிற்றே, எப்படிக் கோவிலுக்குப் போவது? எப்படிப் புருஷனுக்குப் பணிவிடை செய்வது? எப்படி தான் வாழ் நாளைக் குருடியாகக் கழிப்பது? என்று நினைந்து கண்களினின்றும் மாலை மாலை யாக நீர் வார்த்தவண்ணமாய் முருகா - குமரா, அப்பனே - ஆண்டவனே, ஆறிருகை வேலனே ஷண்முகனே - சரவணபவனே, ஆண்டியே அடியார்க்குயிரே, தண்டாயுதா - தீனதயாளா, என்று சொல்லி, தவித்துத்தண்ணாயுருகினாள்.

 

இவ்விதம் அந்த அகத்தில் உள்ள யாவருடைய மனமும் முருகப்பெருமானிடமே சென்று ஐக்கிய மடைந்த சமயமாகிய ஒன்றேகால் மணிக்கு, சேதுராமையாவாள் மனங்களிக்க, ஊரார் மனம் பூரிக்க, பொன்னம்மாள் பேரில் முருகப்பெருமான் ஆவேசமாய் ஆவிர்ப்பவித்து, சிவதேஜஸ்ஜொலிக்க மல்லிகைமுல்லை, பாரிஜாதம், முதலிய மலர்களின் மணங்கமழ, பிழைபொறுத்தோம், சேதுராம்,' என்ற ஒரு சத்தம் ஊர் முழுதும், கேட்கக் கூடிய தொனியுடன் வெளிவந்தது. அதே நிலையில் பொன்னம்மாள் இருபது நிமிஷமிருந்தாள். பெரியவர்களும் சிறியவர்களும் விழுந்து நமஸ்கரித்தனர். தன்னை யறியாதிருந்த காரியஸ்தரும் பொன்னம்மாள் பாதத்தில் வீழ்ந்து, "அப்பனே! அபராதம் செய்தேன். பொறுக்க வேண்டும்'' என்று கூறினார். தான் செய்த பிசகை இந்தச் சமயத்தில் வாய் விட்டுச் சொல்லி ஆறினார். மனைவியின் பரிபக்குவ நிலையையறியாத மூடனானேன், என்றார். குலதெய்வத்தை யிகழ்ந்ததைப்பற்றி மனம் வருந்தினார். எனக்குப் புத்தி வந்தது என்றார். ஐயாவாள் பூஜைக்குத் தாமும் தம் மனைவியும் நியமத்தோடு போய்த் தரிசனம் செய்வதாகவும் ஒருமண்டலம் பூஜா திரவியங்கள் தாமே சேகரித்துக் கொடுப்பதாகவும், ஐயாவாள் பூஜையிலிருக்கும் பழனியாண்டவனுக்கு வெள்ளியினால் ஒரு பீடமும், திருவாசியும், நல்முத்து, பவழம் கட்டிய வெள்ளிக்குடையும், சுக்கிரவாரத்திற்குள் சேர்ப்பிப்ப தாகவும், பஹிரங்கமாகவும் பிரார்த்தனை செய்தார். தம்முடையவும் தம் மனைவியுடையவும்: குற்றம் பொறுத்தருள வேண்டுமென்று கதறினார். ஆண்டவன் கிருபைக்குப் பாத்திரர்களாக்கிக் கொள்ள வேண்டு மென்று பிரார்த்தித்தார். பொன்னம்மாளுக்கு வந்த கஷ்டம் நிவர்த்தியாக வேண்டுமென்று இரங்கினார்.

 

இவ்வித நிலைமையில், காரியஸ் தரும் மற்றுமுள்ளோரும் பழனியாண்டவனைத் தேரத்திரம் செய்துகொண் டிருந்த சமயத்தில் என் அப்பன் தயாநிதி, தற்போது பொன்னம்மாள் பேரில் ஆட்கொண்டிருந்த பிரபு, வாய் திறந்து "இது நம் சோதனை. அவமரியாதையாய்த் தெய்வத்தை நீ யிகழ்ந்த தவறுக்காகவே இவ்வளவுகஷ்டமும் நிகழ்ந்தது. நின் பிசகை நீயே நினைந்து வருந்தினதே போதுமானது. நீ என் தொண்டன். இந்தச் சரீர முடையவள் என் தொண்டி. ஐயாவாள் என் தொண்டர். உங்கள் பக்தியின் பெருமையை வெளிப்படுத்தவே இந்தத் திருவிளையாடலை யாம் செய்தோம் ஐயாவாள் பூஜையில் நீ செய்துவைக்கும் பீடமும், திருவாசியும், கொடையும், நம் திருவிளையாடலின் ஞாபகச்சின்னங்களா யிருக்கும். யாரை மறந்தாலும் என்னை மறக்கொணாது. பொன்னம்மாள் இழந்த இரண்டு கண்களையும் மீண்டும் பெறுவாள். இதோ பார் அவள் கண்களை ஏ! பக்தா! பொன்னம்மாள் முருகம்மையாருடைய அம்சம் என்பதைத் தெரி ந்துகொள். ஈந்தேன் பிரசாதம்'' என்று சொல்லி பிரசாதம் ஈந்த தக்ஷனமே சுவாமிமலையேற ஆரம்பிக்கப் பொன்னம்மாள் சரீரம் கீழேவிழாதபடி அவள் தோழிகள் கைத்தாங்கலாகக் கீழே கிடத்தினார்கள். இரண்டு மணிக்குப் பொன்னம்மாளுக்குத் தன் ஞாபகம் வரவும், எழுந்து தன் கணவனையும், ஐயாவாளைபும், மற்றப் பெரியவர்களையும் நமஸ்காரம் செய்து உள்ளே சென்றாள். அன்று முதல் காரியஸ் தரும் பொன்னம்மாளும் கரும்பை நுனியி லிருந்து தின்பவர் போல ஆண்டவன் அருளை நுகர்ந்து கொண்டு சுகமே
க்ஷேமமாய் இன்றைக்கும் பக்திசிரத்தையோடு முருகன் பதங்களைத் தொழுது கொண்டு வத்திலக் குண்டில் வாழ்ந்து வருகின்றனர்.


சுபம்.

            எண்ணுங் காரிய மினிது முடிக்கும்
            அண்ணல் யானை முகத்தன் வாழி
            மண்ணினை யளந்த மாலும் ஞானக்

கண்ணைக் கொடுக்கும் கந்தனும் வாழி.
 

குறிப்பு: - இஃது இராமசந்திர ஐயர், (N. S. Ramachendra Iyer, B. A., L. T., Vepary Madras.) அவர்களால் உதவப்பட்டது. இது உண்மையில் நடந்த விஷயமெனத் தெரிவதால் இதைப் பிரசுரித்தோம். கடவுளை நம்பி அவரிடம் மெய்ப்பக்தி பூண்டொழுகுவோர் கைவிடப் படார்களென்பதும், நமது நாடு எப்போதும் மெய்ப்பக்தி நிலைத்தோங்கும் தெய்வீக நாடென்பதும், நமது மதக் கொள்கைகளின் உண்மையும் மகிமையும் இதனால் நன்கு விளங்குவது யாவர்க்கும் பக்தியை பூட்டுமென்று நம்புகிறோம்.

                

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1920 ௵ - ஜுலை ௴

 

No comments:

Post a Comment