Saturday, August 29, 2020

 

கண் சிறந்ததா காது சிறந்ததா

 

 இத்தகைய வினாக்களுக்கு அநேகரால் எளிதாக விடையளிக்க இயலாது. நமது வாழ்நாட்களில் நாம் கண்ணாலுங் காதாலும் அடையும் பயன்களை யாரே கழறவல்லார்? ஆயினும் அநேகர் செவியினுங் கண்ணே சிறப்புடையதெனக் கூறி நிற்பர். அன்னவர் அவ்வாறு சொல்ல யாது காரணத்தை மேற்கொண்டனரோ? அறிகிலோம்! ஆண்டவனால் படைக்கப் பட்ட இவ்வவனியில் சிற்றின்பங்களை யடைதற்குக் கண்ணே காரணமென நாமெவ்வாறியம்பலாகும். அன்றிக் காதுதான் காரணமென எவ்வாறிசைக்கலாகும். (உதாரணமாக) நமக்குச் சினிமடோகிராபை (Cinematograph)ப் பார்க்கும் போதுண்டாகும் இன்பத்திற்குக் கண்ணே காரணமெனில் - நாம் கிராமபோன் (Gramapbone) கேட்கும் போது உண்டாகும் சுகத்திற்குச் செவியன்றோ காரணமாகிறது ஆதலால் சிற்றின்ப காரணத்தின் சார்பாக இன்னதுதான் சிறந்ததெனக் கூறவியலாது.


இனி, பேரின்ப காரணத்தின் சார்பாக காதே சிறந்ததெனக் கூற முயலுவோம்.

 

சிலர், "மனத்தின் சேர்க்கையில் இருக்குங் கண்ணே ஆரோபத்திற்குக் காரண " மெனச் சொல்லுகின்றனர். அதற்கு உதாரணங்களாக அன்னவர், ரஜ்ஜு, சர்ப்பம் போல் தோன்றுவதையும், கிளிஞ்சல் வெள்ளி போல் தோன்றுவதையும் சொல்லுகின்றனர். ஆனால் அதற்கு மாறுபாடாகச் சிலர் மனத்தின் சேர்க்கையால் செவியே ஆரோபத்திற்குக் காரணமென்றிசைத்து அதற்குத் திருஷ்டாந்தமாக நாம் பீதி அடைந்து கலவரமாக விருக்குங் காலத்திற் பலவித விகார சப்தங்கள் நம் செவியிலேறுவதைக் கூறுகின்றனர். ஆகவே இவ்விரண்டில் எது மற்றொன்றைக் காட்டினுஞ் சிறந்ததெனக் கூற இயலாமற் போகின்றது.

 

இப் பூவுலகின்கண் எல்லாம் வல்ல எம்பிரானால், ஆன்மாக்கள் தமது வாழ்நாட்களில் இன்பங்களை அனுபவிக்கும் பொருட்டு, பற்பல செல்வங்கள் ஏற்பட்டுள்ளன எனினும் அவைகளில் சிறந்தவை கல்விச்செல்வம், பொருட்செல்வம் ஆகிய விரண்டே. இவ்விரண்டினுட் சிறந்தது கல்விச் செல்வமே என்பது பெரும்பான்மையோரது கொள்கை. இத்தகைய கல்விச்செல்வப் பேற்றை யடைதற்கு எது முக்கிய சாதகமாயிருக்கிறதோ அதுவே மற்றொன்றைக் காட்டினுஞ் சிறப்புடையதெனக் கூறுவோமாக:

 

இதுபற்றி நமது "ஆனந்தபோதினி" யில் தொகுதி 9. பகுதி 9 - ல் 341 - வது பக்கத்தில் ''செவிச்செல்வம்'' என்ற வியாசத்தில் எழுதியிருப்பதைக் காண்க. அது வருமாறு:

 

"இக் கல்விச்செல்வம் இருவகையாற் பெறலாம். ஒன்று கற்றுணர்ந்த வல்லுநர் பாற் சென்று, அவர்கட் கூழியம் புரிந்து, அவர்கள் நீண்டகாலமாய் சேமித்துவைத்திருக்கும் அரும்பெரும் பொருள்களாய உறுதிப் பொருள்களென்னு முண்மைகளைப் பன்முறை கேட்டுச் சிந்தித்துணர்தல்; மற்றொன்று தானே எவருடைய உதவியுமின்றித் தனதறிவைக் கொண்டே பன்முறைபயின்று ஆய்ந்து தெளிந்துணர்தல். முன்னையதே இவ்விரண்டினுள்ளும் சாலச் சிறப்புடையது. எங்ஙனமெனில் தானே கற்றுத் தெளிதலில் பிழைகள் நேரிடக்கூடும். அன்றியும் பழக்கத்திற் கொணர்தலு மருமை. கேட்டலிலோ அக்குறையில்லை. அறிஞர்கள் பால் வழிவழியாகக் கேட்டுணர்ந்த பெரியோர்களிடத்தி லொன்றைக் கேட்பதில் பிழைகளிருத்தலரிது. ஆசிரியரிடத்துந் தம்மையொத்த சீடர்களிடத்தும் அவ்வப்போது தமக்குண்டாகும் ஐயங்களையும் நீக்கிக்கொள்ளலாம். அன்றியும் குருகுலவாசஞ் செய்யும் போது குருவின துபதேசமொழிகளை யனுபவத்திற் பெற்றுக்கொள்ளப் பழகுதலுமியல்பு. இக்கருத்து கீழ்வரும் நன்னூற் சூத்திரங்களாற் புலனாகும்: - "ஆசானுரைத்தமை * * * * *
மாண்புடைத்தாகும்.'' இதுபற்றியே தமிழ்ப்பெரு மூதாட்டியாம் ஒளவையார் " கேள்வி முயல்'' எனவும், ஆன்றோர்கள் "கற்றலிற் கேட்டலே நன்று'' எனவும் அறிவுறுத்திப் போந்தனர்.

 

ஒருவன் அறிவு நூல்கள் பலவற்றையும் ஓதா துணரும் பேற்றை இயல்பாகவே பெற்றுளானாயினும் தக்கவர்பால் அந்நூல்களைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிதல் வேண்டும். அத்தகையாரே பொதுமக்களாற் போற்றற்குரியராவர். இதுபற்றியேயன்றோ சர்வேஸ்வரனின் சாக்ஷாத் அம்சமாய ஸ்ரீராமபிரான் வசிஷ்ட விசுவாமித்திரர்களிடத்தும், ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாந்தீபமுனியிடத்துங் கலைகளைக் கற்றனர்? அன்றியும் ஒருவன் கல்லாதவனாயிருப்பினும் அறிவாளிகளிடத்தில் உண்மைப் பொருள்களைக் கேட்டுணர்ந்திருப்பின் அவைகள் அவனுக்குத் தளர்ச்சி வந்த விடத்துப் பேருதவி புரிவனவாகும். சிவபெருமானாரது திருக்கண்ணில் இரத்தம் வடியக் கண்டு, அஃது நிற்குமாறு காணாது பலவாறு துயருற்றுத் தியங்கிய கண்ணப்பனாருக்கு, " ஊனுக் கூனப்புதல் வேண்டும்'' என்னுங் கேள்வியறிவு தக்க சமயத்தில் பேருதவி செய்ததன்றோ? இதுபற்றியே "கற்றிலனாயி னுங் கேட்கவஃதொருவற் - கொற்கத்தினூற்றாந் துணை' எனத் தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும் கூறியருளினர். அன்றியும் பல கலைகளும் வல்ல காண்டீவதாரியான பற்குனன் போர்க்களத்தை நண்ணியதுந் தனது செயலால் விளையப் போகுந் துயரங்கட் காற்றானாகி, செயலற்றுச் சோர்ந்து வீழ்ந்த விடத்து, ஆபத்சகாயனான ஆதிநாதனது திவ்யோபதேசங்களைச் செவியுற்ற பின்னரன்றோ, தனது ஜாதிதர்மத்தையும் கடமையையும் வீரத்தையுமுணரப் பெற்றுப் போர்க்கெழுந்து பொருது புகழ் பூண்டனன்.
  

எண்குணமுடைய இறைவனை அடைதற்பொருட்டு மக்கட்கெளிதிலுதவி புரிவதெது? கேள்வியறிவேயன்றோ? இக்கருத்தை நனி விளக்குதற்பொருட்டே சிவானுபூதி கைவரப்பெற்ற தவப்பெருஞ் செல்வராந் தாயுமானவர்,


        ''பெற்றவர் பெற்ற பெருந்தவக் குன்றே!
             பெருகிய கருணைவா ருதியே!
         நற்றவத் துணையே! ஆனந்தக் கடலே!
               ஞா துரு ஞானஞே யங்கள்
         அற்றவர்க் கறாத நட்புடைக் கலப்பே!
             அநேகமாய் நின்னடிக் கன்பு
         கற்றதுங் கேள்வி கேட்டதும் நின்னைக்
             கண்டிடும் பொருட்டன்றோ காணே'' –

எனவும்,

       ''கேட்டன் முத னான்காலே கேடிலா நாற்பதமும்
       வாட்ட மறவெனக்கு வாய்க்குநா ளெந்நாளோ''


எனவு மருளிச்செய்வாராயினர். அன்றியுங் கேள்வி யறிவினையுடையவர்கள், இப்பூவுலகத்தினரானாலும் தேவர்களோடும் ஒப்பாவரென்பதை,


    '' செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி
       னான்றாரோ டொப்பர் நிலத்து''


 என நாயனார் பொய்யாமொழியிற் புகன்றுளாரன்றோ?


   இதனால் கண்ணினுங் காதே சிறந்ததென இயம்ப நேருகின்றது. ஆதலினன்றோ வான்றோருமதை " செவிச்செல்வம்'' என்று செல்வத்திற்குச் சமதையாக பாவிக்கின்றனர்.


            ''செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்
            செல்வத்து ளெல்லாந் தலை''

 
என்னும் நாயனாரின முதவாக்காற் செவிச்செல்வத்தின் பெருமையை அறியலாகும். செவியின் வேலையாகிய கேட்டலின் சிறந்த மேன்மையாலன்றோ ஆன்றோரதைச் செல்வத்துள் ஒன்றாகப் பாவித்ததுமன்றி, அதைச் செல்வங்கள் யாவற்றினும் மேலானதாகவு மதிக்கின்றனர். கண் காதைக்காட்டினுஞ் சிறந்ததாகவிருப்பின் அதை ஆன்றோர் ஒரு செல்வமா கப் பாவித்து, எல்லாச் செல்வங்களினுஞ் சிறந்த செவிச்செல்வத்தினும் மேலானதாக மதியாதிருப்பரோ? இரார்! இவைகளை நன்காராய்ந்து நோக்குங்கால் என் சிற்றறிவுக்குக் கண்ணினுங் காதே சிறப்புடைத்தெனத் தோன்றுகிறது.

 

நானிவ்வளவு சொல்லிக் கண்ணினுங் காதே சிறந்ததெனினும் என்மனதுள் ஐயஞ் சற்று தோன்றுகிறது. ஒருகால் இது தப்பிதமாயிருக்கலாகும். ஆதலின் கற்றறிந்த கனதனவான்கள் அடியேன் கொண்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டுகின்றேன்.


      அ. ப. சுப்பிரமணியன், ஈஸ்வரன்

கோவில் தெரு, கோபிசெட்டிபாளையம்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - ஜுன் ௴

 

 

No comments:

Post a Comment