Saturday, August 29, 2020

 

கண்வழி நுழைந்த கள்வனும் கருத்தழிந்த காரிகையும்

(K. V. சிவசுப்பிரமண்யன், B. A.)

மணிமாட மதில் சூழ்ச்த மிதிலைமா நகரின் அணி வீதிகளில் அருக்கன் தனது கிரணங்களை யள்ளி வீசி வான வீதியில் தோன்றினாள். அஞ்ஞான்று தசரதன் தவப்புதல்வனாம் இராமனும் அவனதினவவாகிய இலக்குவனும் விசுவாமித்திர முனிவருடன் அந்நகர வீதிகளின் அழனைப் பருகியளவளாவி நடந்து சென்றனர். நகருட் புகுந்த காளையர் கண்ணுற்ற காட்சிகள் பல. நுண்ணிடை மகளிர் நூபுரமார்ப்ப, துவண்டாடும் நாடக அரங்கினையும், உளக்களிப்பால் ஊஞ்சலிலாடும் உயரெழில் மங்கையரையும், கந்துகமெறிந்து கையிற் பிடித்தாடும் காரிகையரையும், சூதாட்டத்தில் களிக்கும் மகளிரையும் மாதர் குடைந்து நீராடும் மலர்த் தடாகங்கள் பலவற்றையும், கட்டிளங் காளையர் களிதுளும்பப் பயிலும் மற்போற் சாலைகளையும், விற்போற்சாலைகளையும், மாளிகைகளின் முன்றிலில் விளையாடும் அன்றில்களையும் கிள்ளைகளையும் கண்டு மகிழ்ந்தவராய் ஜனகன் வதியும் அரச வீதியினை அண்மினர். அதுபோழ்து, ஜனகனது தவப்புதல்வியாம் சீதா பிராட்டி கல்லும் புல்லும் கண்டுருகும் கவினுடையளாய், கண்டார் கருத்தினைச் கொல்லை கொள்ளும் பேரெழிலினனாய் கன்னிமாடத்தின் கண் தன் தோழிகளுடன், இயற்கை யன்னையின் எழிலுறு காட்சிகளைப் பருகிய வண்ணம் நின்றிருந்தாள். அவளது அழகினைக் கான இந் நாட்டவர் இமையா நாட்டம் பெற்றிலமே யென ஏல்கியும் உம்பர் நாட்டவர் இரு கண்ணாற் காண அமையாதென்று அருந்தவம் செய்தும் கிடந்தனர் என்ப, அது சமயம் ஆங்கு நிகழ்ந்ததோர் நிகழ்ச்சியினை ஈண்டு கூறுவோம்.

மாளிகையின் சாளர வாயிலில் நிற்கின்றனள் சீதை. வீதிவழியே சென்ற இராமனும் முனிவனும் அரண்மனையின் அருகில் வருகின்றனர். முற்பிறப்பின் ஊழ்வினை கூட்டுவிக்க, அவ் வுயர்ந்த மாளிகையை ஏறிட்டு நோக்குறோன் இராமன்; கணப்பொழுதில் கன்னிச்சீதை கண்களில் படுகிறாள்; அவ்வளவு தான். அவனது கண்கள் சீதையின் கண்களைச் சென்று கவ்வின; அதே நொடியில் அவளது மலர்க் கண்களும் மாதவனது கண்களை ஓடிப் பற்றுகின்றன. உடனே இருவரது உளத்திலும் என்று மறியாததோர் புத்துணர்ச்சி தோன்றுகின்றது. இங்ஙனம் இவ் விருவரது கண்களும் புறத்துறு வின்பம் துய்த்த அக்கணமே இருவரது அறிவும் ஒன்றும்படி அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். கண்ணொடு கண் நோக்கொக்கின் வாய்ச் சொற்கள் எப்பயனுமிலவன்றே? அங்ஙனமே இருவர் நோக்கு மொன்றுபட அவர்களது காதல் மலர் அப்பொழுது அரும்புகின்றது. ஊழ்வினைப் பயனே அவர்கள் ஒருவரை யொருவர் நோக்கும்படி செய்த தெனினும், மணம் புணரா மாதவத் தாட்டியாகிய மிதிலை மன்னன் தவப்புதல்வி வீதிவாய்ச் செல்லும் முன் பின் னறியாததோ மாடவனைக் கண்டு கருத்தழிந்தாள் என்று கூறியது கற்புடை நங்கைக்கோர் களங்கமன்றோ வென சிலருக்கு ஐயமேற்படலாம். அது பற்றியே கம்பர் அந் நிகழ்ச்சியை மிகத் திறம்படக் கூறுகிறார்.

இராமனும் சீதையும் கடி மணம் புணராக் கட்டிளங் குரிசிலாகவும் கன்னிகையாகவும் விளங்குகின்றனர். தம்முள் தாமே ஒத்த குலமும், குணமும், திருவும், காதலும் ஏனைய பண்பும் உடையாரைத் தேர்ந்து மணந்து காதல் வாழ்க்கையில் ஈடுபடற்குரிய கனிந்த பருவத்தினர். ஆகவே பண்டையூழ், நோக்கெனும் கருவி கொண்டு அவ் விருவரையும் கூட்டி வைக்கின்றது. ஆடவரினும் பெண்டிர் காமம் மிகுதியும் உடையா ரெனினும் “நாணம்'' எனும் நற்பண்பு முன்னின்று தடுத்தலால் பெண்டிர் ஆடவரை முன்பு நோக்கார். அது மரபு. அது பற்றி சொல்லின் செல்வராசிய கம்பர்,

"கண்ணொடு கண்ணிணை கவ்வியொன்றை யொன்று

உண்ணவு நிலைபெறா துணர்வுமொன்றிட

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்"


என்று கூறி இராமனே முன்பு நோக்கியதாகக் கூறி இந் நிகழ்ச்சியினைச் சிறப்பித்தார். ஊழ்வினை கூட்டி வைத்ததால் அவளும் நோக்க நேர்ந்தது. இங்ஙனம் ஒன்றை யொன்று நோக்கிக் கொண்டிருந்த கண்கள் சில கணங்களில் தத்தம் நிலை மாறி இராமனது கண்கள் சீதையின் மார்பகத்திலும் சீதையின் கண்கள் இராமனது புயங்களிலும் சென்று புதைந்தன. நோக்கெனும் பாசத்தால் ஒருவரை யொருவர் பிணிக்கப்பட்டவராய் இருவர் இதயமும் ஒன்றாகி இரண்டுடலும் ஒருயிரும் என்றாகின்றனர். இந் நிகழ்ச்சிகள் யாவும் நிகழ்ந்தது சில விநாடிகளில்,

இராமன் உடன் வந்த ஒருவரோடும் மறைந்து விடுகிறான், சீதையின் உடலிங்கிருப்பினும் அவளது உணர்வினைப் பிணித்துச் சென்று விட்டான் இராமன். அதைத் திரும்பவும் தன் வசம் கொணர சீதையின் நாற்குணமென்னும் அங்குசமும் பயனிலவாயிற்று. காதல் நோய் வாட்டக் கருத்தழிந்தனள் காரிகை. மாரவேளும் மலர்ச்சாரம் தொடுத்துக் கையிளைத்தனன். கண்வழிப் புகுந்த காதல்நோய் பாலிலிட்ட பிரையென அவளது உடல் முழுதும் பரவியது; தீயிடை நெய் பெய்தாற்போன்று காதல் நோய் கனன்றது; அந்நோய்க்கு ஆற்றாளாகி சந்திரனையும், தென்றலையும், அன்றிலையும்,
தாதியர் செய்யும் ஏவல்களையும், ஆடை யணியலங்காரத்தினையும் மலர் மாலைகளையும் வெறுக்கின்றனள் சீதை. இராமனது இந்திரநீல மொத்த இருண்ட கூந்தலும் சர்திரபிம்பம் போன்ற வதனமும், தாழ்ந்த கைகளும் மணிவரைத்தோள்களும் சீதையின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அவை யெல்லாவற்றினும் அவனது சுந்தரப் புன்முறுவல் உயிரையும் கவர்ந்து கொள்ளும் சக்தி யுடையதாய் உளதே என் மனம் மாழ்கினள். அன்றொரு நாள் அணிநகர் வீதியிற் சென்றென் உள்ளங்கவர்ந்த கள்வனை மீண்டொரு நாள் என்று காண்பேனோ என்று எங்குகிறாள், விசுவாமித்திரர் இராமனை உடனழைத்து வந்து சனகனது அரசவையில் அனைவரும் ஆச்சரிய முற எடுத்து காணேற்றி ஒடித்தான் என்ற செய்தியைத் தன் தோழிவாய்க் கேட்கும் நாள்வரை அவ்வேக்தம் அவளை விட்டு நீங்கின பாடில்லை. அங்ஙனம் பலமாலை என்னும் அவனது தோழிவந்து இராமன் வில்லை நாணேற்றி ஒடித்தான் என்று கூறிய ஞான்றும் “இன்று வில்லை முறித்த இளங்குரிசில் அன்று நகர் வீதியில் கண்ணு கருத்திற் பதிந்த காளையாய் இல்லாது பிறெனாருவனாயின் அவன் அளக்களிலும் அதிக அழகுடையோ னாயினும், உயிர் நீப்பேன்' எனக் கூறுகின்றாள்.

 

"இல்லையே நுசுப்பென்பர் உண்டுண்டெனவும்

மெல்லியன் முலைகளும் விம்ம விம்முவாள்

சொல்லிய குறியினத் தோன்றலே யவன்

அல்லனேல் இறப்பேனென் றகத்து ளுன்னினாள்."


என கம்பர் பெருமான் சீதையினது கற்பின் திறத்தை விளக்கினார்.

சீதையினது மனவுறுதி அவளை கற்பினுக் கணிகல னாக்குகின்றது. ஆகையால் வாயு மைந்தன் அசோகவனத்தில் கண்ட சீதையின் நிலையை இராமனிடம் எடுத்துக் கூறுங்கால் "கண்டனன் கற்பினுக்கணியைச் கண்களால்" எனக் கூறியது சாலவும் ஏற்புடைத்தன்றோ? யாவரானும் முறிக்க இயலாத வில்லை முறித்த ஆடவன் மிகச் சிறந்தவனாகத்தானே இருக்க வேண்டும்; அவனை மணந்து கொண்டாலென்ன? மேலும் அன்று கண்ட அவ்விளங் குரிசில் மீண்டும் வருவானோ என்ற ஐயப்பாடொருபுறம். தன்னை யறியாது தன்னுன்ளங் கவர்ந்த கள்வனே தனக்கென விதிக்கப்பட்ட காதலனாவான், அவன் எப்படியும் மீண்டும் வந்து தன்னைக் காண்பான். அவன் புகுந்து கிடக்கும் தன் இதயத்தில் பிறிதோர் ஆடவன் இருக்க இடமேது?
என்ற உயரிய காதலொழுக்கத்தை மேற்கொண்டவளாய் சீதை தன் மன உறுதியை எள்ளளவும் மாற்றினாளல்லள். அவளது விழைவின்படியே அவளையும் இராமனையும் கட்டி வைத்தது ஊழ்வினை.

இத்தகைய கற்பொழுக்கம் சிறந்து விளங்கிய நமது நாட்டில், இஞ்ஞான்று மேனாட்டு நாகரீகக் காதலொழுக்கம் புகுந்து மக்களின் வாழ்க்கையைச் சீர்குலையச் செய்கிறது.

ஆனந்த போதினி -1942 ௵ ஆகஸ்டு ௴

 

No comments:

Post a Comment