Saturday, August 29, 2020

 கண்வழி நுழைந்த கள்வன்

பண்டைத் தமிழகத்து எழுந்த பெருநூல்களி லெல்லாம், மக்களால், அன்றும், இன்றும், என்றும் போற்றத்தக்த தாய் அமைந்த நூல்கள் சிலவேயாம். அவைகளில் கம்பரது இராமாயணம் என்னும் பெருநூல், தமிழகத்துப் பெரும்புலவர் பலராலும் இன்றும் நன்கு பாராட்டப்படுகின்றது. காரணம் என்னை? எனின். இந்நிலவுலகி லெழுந்த, வள்ளுவர் பெருமான் என்னும் மாப்பெரும் புலவரை ஒப்ப, இவர் தனது புகழுடம்பு நிலைபெற நிறுவிய இராமகாதையில் பயிலப்படுங் கருத்துக்கள் தான் வாழ்ந்த, தமிழகத்து மக்களின் கருத்துக்குப் பெரிதும் இயைந்ததாயும், மற்றும் எல்லோராலும், எக்காலத்தும் ஒப்ப முடிந்ததாயும் அமைந்த தேயாகும். நிற்க, இன்று எடுத்துக் கொண்ட தலையங்கம். ''கண்வழி நுழைந்த கள்வன்'' என்பது. என்னை! கள்வனுங் கள்வன் அவனும் கண்வழி நுழைந்தான். சித்திரத்தில் விசித்திரம் போலும் என்று பலர் எள்ளி நகையாடலாம். ஆனால் இத்தலையங்கமான சொற்றொடர், கவியரசர் கம்பர் பெருமானால் அருளப்பட்ட ஒரு சொற்றொடர், ஆகும். கம்பர் பெருமான் தனது காவியத்தில் எடுத்தாளும் ஒவ்வொரு சொல்லும் - என்! - ஒவ்வொரு எழுத்துங் கூட காரணமின்றி எடுத்தாண்டிரார் என்பதை கம்பராமாயணத்தை ஊன்றி வாசித்தோர் நன்குணர்வர். ஆகவே, இச சொற்றொடரின் பொருண்மைகளை யெல்லாம் ஆராயவே இக்கட்டுரை எழுந்ததாகும்.

 

மிதிலைமா நகரில், அரசமாளிகையின் கன்னிமாடத்து மேடையில் நிற்கின்றாள் சீதை. தெருவூடே, முனிவர் முன்செலத் தம்பி பின்வரச் செல்கின்றான் இராமன். இருவரும் ஒருவரை யொருவர் பார்க்கின்றனர். ஒருவரது உள்ளத்தை ஒருவரது உள்ளம் ஈர்க்கின்றது. இருவரது கருத்தும் ஒருமித்து ஆதரவு படுகின்றன. பின்னர் தன் வழியே சென்ற இராமன் சீதையின் கண்ணிற்கு மறைகின்றான். அப்பொழுது அவள் தனியேயிருந்து புலம்பும் மாற்றத்தில் தன் கன்னி மாடத்தில் புகுந்து தன்காதலைக் கவர்ந்துசென்ற காதலனுக்கு "கண்வழி நுழைந்த கள்வன்'' என்னும் திருப்பெயர் சூட்டுகின்றாள். இவ்விடத்து.


 “பெண்வழி நலனொடும் பிறந்த நாணொடும்
 எண்வழி யுணர்வுநான் எங்குங் காண்கிலேன்
 மண்வழி நடந்தடி வருந்தப் போனவன்
 கண்வழி நுழையுமோர் கள்வனே கொலாம்"


என்று கவியரசர் கம்பர் பெருமான் கவியாற்றுகின்றார். இச்சொற்றொடரை ஆராயுமிடத்துக் காணும் உண்மைகள் பல. வான்மீகியினது முதனூலாம் இராமாயணத்தினின்றும் ஒரோவிடங்களில் கம்பர் மாறுபட்டு, தன் தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்களுக் கேற்ப கதையை மாற்றியும் திருத்திச் செப்பம் செய்து கொள்வதற்கு இது ஒரு சான்றாக அமைகின்றது. மிதிலைமா நகரில், சனகனது அரசவையில் அளவில் ஆற்றல் வாய்ந்த அவனது வில்லை இறுத்ததற்கு இராமன் பரிசாகப்பெற்ற வான்மீகரது சீதை, அன்புடை அண்ணலைக் கண்ணால் கண்டு, காதலால் பிணிப்புண்டு கணவனுக் கேற்ற கம்பரது சீதையாய் இலங்குகின்றாள்.

 

நிற்க. இனி கள்வன் என்ற பதத்தின் பொருள் தானென்னை என்று பார்ப்பாம். 'கள்வன் என் கிளவி கரியோன் என்ப' என்பது திவாகரம் “கடகரிப் பெயரும் கருநிற மகனும் கற்கடக இராசியும் ஞெண்டுங் கள்வன்'' என்பவர் பிங்கலந்தையார். "கள்வனே, முசு, ஞெண்டு, யானை, கருநிறத்தவனே சோரன்'' என்பர் சூடாமணியார். ஆதலால் கள்வன் என்னும் பதம் கரியவன் என்ற பொருளிலேயே பண்டைத் தமிழ் நூல்களில் எல்லாம் பயிலப் பெற்றிருந்தது என்பது பெற்றாம். கருநிற மகனாம் இராமனுக்கு இது பொருத்தமான பட்டமேயாகும். இன்னும் கள்வன் என்னுஞ் சொல் பிறர் பொருள் வௌவுவோன் என்ற பொருளிலும் வழங்கப்படுகின்றது. தனக்குரிமையற்ற ஒரு பொருளை உரிமையாக்குதலும், தனக்குரிய பொருள்பிறன் ஒருவனிடத்து வறிதேயிருக்குமாயின் அதனை வலிந்து கைப்பற்றுத்லும் களவு எனவே கூறுவர் பெரியோர். இதில் முன்னையது பலராலுங் கடியப்பட்டாலும், பின்னையது பலராலும் போற்றப்படும். இவ்விடத்து இராமனும், தனக்குரிய பொருளாகிய சீதையை, மிதிலைமா நகரிலிருந்து களவாடிச் செல்வது பலர் போற்றத்தகுந்த ஒரு செயலாகுமேயன்றி, இழித்துக்கூறும் ஒரு செயலல்ல. எக்காரணம் பற்றியும், இராமன் கள்வன் என்னும் பெயருக்குப் பொருத்தமானவனேயாம்.

 

இனி, தமிழ்மொழியின் சிறப்புடை இலக்கணமாகக் கருதப்படும், அகத்துறையில் களவு எனும் பதம் எவ்வாறு பாராட்டப்படுகின்றது என்று பார்ப்போம். இத்துடன் களவின் இலக்கணம், கள்வனது மனப்பான்மை, களவு செய்தற்குரிய காலம், இடம், பொருள், வழி இவைகளையும் ஆராய வேண்டுவது நமது கடமையாகும். இவைகளை யெல்லாம் கம்பர் தனது காவியத்தில், இராமனிடத்து எவ்வாறமைத்துக் காட்டுகின்றார் என்று பார்ப்பாம். ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியத்துள், களவின் இலக்கணம் கூறப்புகுந்த தொல்காப்பியர்,


 "வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல்
 ஆக்கஞ் செப்பல், நாணுவரை இறத்தல்
 நோக்குவ எல்லாம் அவையே போறல்
 மறத்தல் மயக்கம் சாக்காடு என்றச்
 சிறப்புடை மரபின்வைகள் வெனமொழிப''


என்று கூறுகின்றார். இவ்விடத்து அகப்பொருட் கருத்துக்களெல்லாம் பொதிந்து விளங்க, களவியலின் தன்மை கூறப்படுகின்றது.


“நோமுறு நோய் நிலை நுவல கிற்றிலள்
ஊமரின் மனத்திடை உன்னி விம்முவாள்''                என்றும்,


"சுழலிடு கூந்தலுந் துகிலுஞ் சோர்தரத்
தழலிடு வல்லியே போலச் சாம்பினாள்''                  என்றும்,

"வெம்புறு மனத்தணல் வெதுப்ப மென்மலர்க்
கொம்பென அமளியிற் குழைந்து சாய்ந்தனள்''


 என்று கவி கூறும் செய்யுட்கள் சீதையின் நிலையை விளக்குவதாகும்.

 
"இந்திர நீலமொத்திருண்ட குஞ்சியும்
சந்திரவதனமும், தாழ்ந்த கைகளும்
சுந்தர மணிவரைத் தோளுமேயல்

முந்தி யென்னுயிரையம் முறுவல் உண்டதே''

 

என்று இராமனது ஆக்கஞ் செப்பி மகிழ்கின்றாள் சீதை. இத்துடன் அமையாது, அவள் பார்க்கு மிடமெங்கும் இராமனது தோற்றமே காணப்படுகின்றது. தனது மாடத்தை விடுத்துக் கூடத்தைக் கடந்து, பொழிலிடத்திருக்கும் பொய்கையை யணுகும் பொழுதுங்கூட அங்குள தாமரையிலைகள் அண்ணலின் வண்ணத்தையும் கமலங்கள் அவனது கண்களையும் நினைப்பூட்டி இவ்ளது உள்ளத்தை உருக்குவதாயின. இதை கவியரசர் கம்பர் பெருமான்.


 "பெண்ணிவண் உற்றதென்றும் பெருமையால் அருமையான
 வண்ணமும் இலைகளாலே காட்டலால் வாட்டந்தீர்ந்தேன்
 தண்ணருங் கமலங்காள் என் தளிர் நிறம் உண்ட கண்ணின்
 உண்ணிறங்காட்டி என் உயிர்தர உலோவினீரோ''


என்று சீதையின் கூற்றாகக் கூறுவாராயினர். சீதையின் நிலைதானிதுவென்றால், ஆற்றல் சால் இராமனது நிலையும் இதையொத்தே இருக்கின்றது. பார்க்குமிட மெங்கும் சீதையின் தோற்றமே காணப்படுகின்றது. இதையேகம்பர்,


 * * * * * கங்குலுந் திங்களுந்
 தனியுந்தானு மத்தையலு மாயினான்''


என்று கூறுகின்றார். இத்தகைய, கம்பர் கவித்திறனால் அமைந்த சான்றுகள், தொல்காப்பியரது களவின் இலக்கணத்திற்கு ஒப்பற்ற இலக்கியமாக அமைந்து கிடப்பது, நாம் கண்டு மகிழ்வதற் குரியதாகும்.

 

இனி களவு செய்தவனது தன்மையை உற்று நோக்குவாம். ''அயர்உலகினுக்கு அறத்தின் ஆறெலாம் இழைத்தவன்" இராமன்.


 "விரிந்திடுதீவினை செய்த வெவ்விய தீவினையாலும்
 அருங்கடையின் மறை யறைந்த அறஞ்செய்த அறத்தாலும் "


பிறந்தவன் இராமன். இத்தகைய அறத்தின் வழி நின்ற ஆரியர் கோனாம் இராமன், தான் கண்ட நங்கையைக் கண்ட அளவில் காதல் கொள்ளுதல் தகுமோ? என்று பலர் ஐயுறலாம். மிதிலைமா நகரில் அரசமாளிகையில் கண்ட நங்கை, பிறன் ஒருவனது மனைவியா யிருந்தால், இராமனது அறத்திற்கு அது பழுதாகாதோ? அந்நங்கையின் நிறையுடைமைக்குப் பழுதாகாதோ? ஆகும். ஆனால் இதே வண்ணம் இராமனது உளத்தில் எழாதிருக்கவில்லை. தன்னுடைய கண்கள் இதுவரை எத்தனையோ பெண்களைப் பார்த்திருந்தும் அவர்களில் ஒருவரிடமாவது செல்லாமல், இன்று, கண்களும், உள்ளமும் ஒருங்கே தான் கன்னிமாடத்துக் கண்ட நங்கையின் பால் செல்லக் காரணமென்னை யெனத் தன்னைத்தானே வினவுகின்றான்; வினவிய கேள்விக்கு விடையும் பெறுகின்றான். இதையே கம்பர்,


 "ஏகுநல்வழி யல்வழி யென்மனம்
 ஆகுமோ இதற்காகிய காரணம்
 பாகு போன் மொழிப் பைந்தொடிக் கன்னியே
 ஆகும் வேறிதற்கையுற வில்லையே”


என்று இராமன் தனது தன்மையுணர்ந்து தன் உள்ள நிலையை உணர்ந்ததாக அமைத்திருக்கின்றார்.

 

இனி, இக்கள்வன் களவு செய்த பொருள்கள் தான் யாவை? இக்கேள்விக்கு விடை நாம் சீதையின் வாயினின்றும் பெறுகின்றோம். சீதை, தன்னிடமிருந்த பெண்ணலன், நாண், உணர்வு என்ற மூன்று பொருள்களைக் களவாடிச் சென்று விட்டான் ஒரு கள்வன் என இரங்குகின்றாள்.


 "பிறையெனும் நுதலவள் பெண்மை யென்படும்
 நறைகமழ் அலங்கலான் நயனகோசரம்
 மறைதலும் மனமெனும் மத்தயானையின்
 நிறையெனும் அங்குசம் நிமிர்ந்து போயதே "


என்று கவியரசர் கூறும் செய்யுளில், இவளது பெண்மையின் நிலையும், மனநிலையும் விளக்க முறுவதாகும். இனி இக்கள்வன் எவ்வழி வந்து இப்பொருள்களைக் கவர்ந்து சென்றான் என்பதை, தலையங்கமே விளக்கி விடுகின்றது சீதையும் தன் காதலனைக் கண்வழி நுழைந்த கள்வன் என்றே யழைக்கின்றாள். வள்ளுவர் பெருமான் கூறும்,


 "கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
 என்ன பயனுமில்”
என்ற குறளொப்ப


 "எண்ணறா நலத்தினாள் இனையநின்றுழி
 கண்ணொடு கண்ணிணை கவ்வி யொன்றை யொன்று
 உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
 அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்"

 

என்ற நிலையில், கள்வன் எவ்வழி நுழைந்தான் என்பது பெறப்படுகின்றது. இக்கண்ணினால் குறிப்பறிதல் என்ற நிலை உண்மையாய் அனுபவித்த காதலர்க்கே தெரியும். இன்னும்,

 

"யானோக்குங் காலை நிலநோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்லநகும்''

என்ற குறள், வள்ளுவர் பெருமான் எவ்வாறு மக்கள் உள்ளத்தை உள்ளவாறு உணர்ந்திருக்கின்றார் என்பதை விளக்கும். இதைத்தான் கவியரசர் கம்பர் பெருமான்.


''பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து
 ஒருவரை யொருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்
 வரிசிலையண்ணலும், வாட்கண் நங்கையும்
 இருவரும் மாறிப்புக்கிதய மெய்தினார்''


என்று புவியரசனாகிய இராமனிடத்தும் அவன் காதற்கிழத்தியாம் சீதையிடத்தும் காட்டுகின்றார். இக்கருத்தை, இவர்கள் காலத்திற்கு பின்னெழுந்த பேராசிரியர்களெல்லாம் பொன்னே போல் போற்றுவாராயினர். உதாரணமாக, புலவர்க்கு ஒளடதமாகிய நைடதம் எழுதிய பேராசியரும், கொற்கையெனும் புவியரசருமான அதிவீரர்,


 "உண்ணிறைவுடைய காமம் உருவெடுத் தென்னநின்ற
 அன்ணலும் அணங்கன்னாளும் அழகெனுமினிய தேறல்
 எண்ணருங்காதல் கூர இனிதினில் மாறிமாறிக்
 கண்ணினாற் பருகி யின்பக்களிப்பெனுங் கடலுள் ஆழ்ந்தார்''

 

என்று இக்கண்ணின் நோட்டத்தைப் போற்றுவாராயினர். கம்பரது கண்வழி நுழைந்த கள்வனிடத்துக் கண்ட, கண்ணினால் குறிப்பறிதல் என்ற தன்மை, நைடதத்தாரது செவி வழி நுழைந்த செல்வனிடமும் காண்கின்றோம். ஆதலால் காதலின்பப் பெருவெள்ளத்தில் திளைத்து செம்மாந்து இருக்கும் காதலர்க்கு அவர்களது கண்களே அவர்களுக்கு எல்லாம். ஒருவரையொருவர் பார்ப்பதுவும் அதனாலேதான், ஒருவரிடம் ஒருவர் பேசுவதும் அதனாலேதான், ஒருவரது கருத்தை ஒருவர் உணர்வதுவும் அதனாலே தான், ஒருவரது உள்ளத்தில் மற்றவர் புகுவதும் அதனாலே தான். ஆதலால்தான் இக்கள்வர் பெருமகனும் சீதாபிராட்டியின் கண்வழி நுழைந்து, அவள்தன் நலன், நாண், நிறை யென்ற பொருள் கவர்ந்தான் போலும்.


 இவ்விடத்து கலித்தொகையிலுள்ள ஒரு செய்யுள் ஞாபகத்துக்கு வருகின்றது


 "சுடர்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
      மணற்சிற்றில் காலிற்சிதையா அடைச்சிய
 கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி
      நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்
 அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே
      உண்ணும் நீர்வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை
 அடர் பொற்சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்
      உண்ணுநீர் ஊட்டிவாவென்றாள், எனயானும்
 தன்னையறியாது சென்றேன் மற்றென்னை
      வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
 அன்னாய் இவனொருவன் செய்தது காண் என்றேனா
      அன்னையலறிப் படர்தரத் தன்னையான்
 உண்ணுநீர்விக்கினான் என்றேனா அன்னையுந்
      தன்னைப்புறம் பழித்து நீவ மற் றென்னைக்
 கடைக்கண்ணாற் கொள்வான் போல் நோக்கி
       நகைக் கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்


என்று காதலால் கட்டுண்ட தலைமகள், தன் தலைவனைப் பற்றித் தோழிக்கு நினைப்பூட்டுங் காலத்தும் கள்வன் மகன் என்றே திருப்பெயர். சூட்டுகின்றாள் களவு செய்வதும் களவு செய்யப்படுவதும் காதலன் காதலிகளுக்கு உகந்த செயலேயாகும். எல்லாம் வல்ல இறைவனிடம், அன்பெனும் பாசத்தால் பிணிப்புண்டவரும், தம்மை ஆட்சொண்ட இறைவனைக் கள்வன் என்றே அழைக்கின்றனர். மூவாண்டிற்பாடும் அருட்சத்தி வாய்க்கப் பெற்ற சம்பந்தப் பெருமானும், "என் உள்ளங் கவர்கள்வன் " என்றே பிரமபுரத்துப் பெம்மானை அழைப்பாராயினர். ஆதலான் கள்வன் என்ற பெயர் அன்பின் முதிர்ச்சியால் அன்பிற்குரியார்க்கு அன்புடைப் பெருமக்களால் இருகின்ற ஓர் திருப்பெயரேயாம் என்பது பெற்றாம்.

 

கண்வழி நுழைந்த கள்வன் என்னும் சொற்றொடரை ஆராயப்புகுந்து ஏதேதோ சொல்லி எம் அறியாமையை விரித்து விட்டேம் என அச்சம் எழுகின்றது எனினும், எடுத்த பொருளை முட்டின்றி முடிப்பதே, பணி செய்வார் கடன் என்பது கருதி இன்னும் சில சொற்கள் கூறி அடங்குவதும், இவ்விடத்துத்தான் கம்பர் முதன் முதல் தனது முதனூலாசிரியராகிய வான்மீகியினின்றும் மாறுபட்டு, தான் செல்ல வேண்டிய வழியே செல்கின்றனர். வான்மீகியினது சீதை, தனது தாதையாம் சனகன், அவனிடமிருந்த அரியவில்லை வளைத்து ஓடித்த காரணமாக, தன்னை வில்லொடித்த வீரனுக்குப் பரிசாயளிப்ப, தந்தை தந்த தலைவனே தன் தலைவனாவன் என்று ஏற்றுக் கொள்கின்றாள். ஆனால் கம்பரது சீதையோ, வில்லொடித்த வீரன் இவன் என்றாவது அல்லது தந்தை தந்த தலைவன் என்பது கருதியாவது, இராமனை மணஞ் செய்யக் கருதினாளில்லை. இராமனைத் தன் கண்ணால் கண்டு, அவனது அழகெனும் இனிய தேறலை அமிதமாயுண்டு, அதனால் தன் நிறையெனும் அங்குசம் நிமிர்ந்து போயதை உணர்ந்து தன் தலைவனை அடைகின்றாள். கண்வழி நுழைந்த கள்வன் இவளைக் கன்னிமாடத்துத் தனியே விடுத்து, முனிவர் பின் சென்ற சிலபோழ்தில், இவளது தோழியாம் நீலமாலை இவளிடத்து வந்து, முனிவருடன் வந்த மன்னவன் மைந்தன், வில்லிறுத்தான். அவனே உன்னை மணமாலை சூடுவன் என்று சொல்லிய காலத்து இவளது உள்ளம்பட்டபாட்டை யாரே அறிவர் கம்பரே அறிந்தார். தான் கன்னிமாடத்திருந்து கண்ட தலைவன் தானிவனோ. அன்றி வேறெவனோ என்று ஐயுற்று நீலமாலையிடம் பல கேள்விகள் கேட்டுப் பின்னர்,


''கோமுனியுடன் வருகொண்டல் என்றபின்
 தாமரைக் கண்ணினான் என்ற தன்மையால்
 ஆமவனே கொல் என்று ஐயம் நீங்கினான்''

 

இவ்வாறு அவ்வையம் நீங்கிய சீதையும், பின்னும் பலகாலும் அவ்வையம் தன்னை வருத்த அதனால்,

 

"சொல்லிய குறியின் அத்தோன்றலே அவன்
அல்லனேல் இறப்பன் என்று அகத்து உன்னி''


ஓர் தீர்மானத்திற்கு வருகின்றாள். நீலமாலையாம் தோழி சொல்லுகின்ற குறிகளால், வில்லொடித்த வீரன் என் நிறை கவர்ந்த கள்வனே யாகல் வேண்டும். ஒருக்கால் பிறிதொருவனாயிருப்பின், நான் அவனை வில்லொடித்த காரணத்தால் மட்டும், தலைவனாய் ஏற்றுக் கொண்டு அசுரமணத்தில் புகுவதைவிட உயிர் துறந்து, " இன்னும் ஒரு பிறப்பிலானாலும், தன்னந்தனியேயிருந்து தவமாற்றி'' தான் மனத்துட்கொண்ட காதலனது " பொன்னகல முள்ளுருகப்புல்லுதலே'' மேலாகும் என்று கூறும் இவ்வழகிய கருத்துத் தமிழகத்து மாதரின் வீரத்தையும் தீரத்தையும் ஒருங்கே காட்டுவதாகும்.

 

இம்மட்டோ! இந்தத் தீர்மானங்களெல்லாம் செய்துகொண்டு, தான்கண்டு காதலித்த கணவனே தன்னை மணமாலை சூட்டப்போகின்றான் என்று கருதி தோழியர் புடை சூழ வந்த நங்கை, மணவறையில், மணப்பலகையில் மணமகனுடன் அமர்ந்திருந்த காலத்துங்கூட தன் பக்கலில் இருப்பவன், தன் கண்ணால் கண்டு, தன் காதலால் கட்டுண்ட அத்தலைவன் தானோ என்று அறிய தன் "கைவளை திருத்துபு கடைக்கணிலுணர்ந்தான்'' என்று கம்பர் கூறுகின்றார்.

 

ஒரே விடத்து இவ்வில்லொடித்த வீரன் தன் கண்ணுழைந்த கள்வனாயிரானாயின் அந்த மணவறையில் கூட தான் முன் தீர்மானித்தது போல் நடக்கவே சீதை தயாரா யிருந்தாள் என்பதைக் காட்டவே, கவியரசர் இச்சித்திரந் தீட்டுகின்றார். இக்கருத்துக்களெல்லாம் கம்பரது கவிதா விலாசத்தில் எழுதுவதற்குக் காரணமென்னை யெனில் கூறுதும், தமிழகத்து நிறையுடைய மாதர், "பிறர் மனம்புகுதலே தம் நிறையுடைமைக்கு இழுக்கு'' என்று கொள்ளும் பெருஞ் செல்வர் என்பதை உணர்ந்த தமிழகத்துத் தனிப் பெரும்புலவராம் கம்பர் பெருமான், ஆரிய சீதையைத் தமிழ்ச் சீதையாய்க் காட்டாதிருப்பாரே யானால் அவரது இராமகாதை இன்றிருக்கு நிலையில் நின்றிரா என்பதும், அவர் இன்று தமிழகத்துக் கவி உலகில் பெற்றிருக்கும் இடம் பெற்றிரார் என்பதும் எனது தாழ்ந்த கருத்தாகும் என்று கூறி என்பணி முடிக்கின்றேன் - திருவருள் முன்னிற்க - சுபம்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஆகஸ்டு ௴

 

 

 

 

 

No comments:

Post a Comment