Saturday, August 29, 2020

கதிர்காம க்ஷேத்திரத்தின் மகிமை

கதிர்காம க்ஷேத்திரமானது ஸ்ரீ அருணகிரியாரால் பாடப்பெற்றதும், அநேக மகிமையுடையதும், கலியுகத்திற்கே முக்கியமான சக்திவாய்ந்ததுமான க்ஷேத்திரம்.

 இந்த க்ஷேத்திரத்திற்குப் போகவேண்டுமானால் சென்னையிலிருந்து கொழும்புக்கு வந்து கொழும்பிலிருந்து மாத்திரை என்றொரு ரெயில்வே ஸ்டேஷன் இருக்கிறது. அவ்விடத்திலிருந்து தசமாறா என்ற ஒரு கிராமம் 75 மைல் தூரத்திலிருக்கிறது. மாத்திரை ஸ்டேஷனுக்கும் தசமாறாவுக்கும் அநேக மோட்டார் பஸ்கள் போகின்றன. அந்த தசமாறாவிலிருந்து 14 மைல் தூரம் காட்டின் வழியாகக் கதிர்காமம் செல்லவே வண்டும். அந்த 14 மைல்களிலும் ஆடி மாதம் அமாவாசை முதல் 15 தினம் வரையில் கதிர்காம க்ஷேத்திரத்தில் உற்சவமான படியால், வழியில் யாதொருவிதமான பயமுமில்லாமல் அந்த 14 மைல்களிலும் அரோஹரா - அரோஹரா என்று சொல்லிக் கொண்டே போக வேண்டும். இரவு முழுமையுமே அநேக ஆயிரம் ஜனங்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். நாம் சொல்லும் அரோஹரா என்கிற சப்தத்தால் அந்த கதிர்காம க்ஷேத்திரத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமியே நம்மை வந்து அழைத்துக் கொண்டு போவதாகத் தெரியும். அந்த 14 மைல் காட்டில் போவது கடவுளுடைய மகிமையால் தான் போக வேண்டுமே தவிர மனிதருடைய பிரயத்தனத்தினால் போவதாகத் தெரிய வில்லை.

 

வீட்டை விட்டு கதிர்காமம் போகிற சமயத்தில் முதலில் நம்முடைய வீட்டிலிருக்கும் ஒரு பெரிய மனிதரை அழைப்பித்து அவரிடத்தில் விபூதி கொடுத்து அவர் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் செய்து விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டு அரோஹரா, என்று சொல்லிக் கொண்டே புறப்படவேண்டும். இந்த மரியாதை முதலில் செய்து விட்டுத்தான் புறப்படவேண்டும்.

 

இந்த 14 மைல் தூரம் காட்டில் நடந்து வந்த பிறகு கதிர்காமம் க்ஷேத்திரம் அடைகிறோம். அவ்விடத்தில் ஒரு சிறிய கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலுக்குக் கோபுரம் முதலியவை இல்லை. கோயிலைப் பார்த்தால் கோயிலாகத் தோன்றாது. ஒரு வீடாகத்தான் தோன்றும். ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி கோயிலில் முதல் ஒரு திரையிருக்கிறது. அந்தத் திரையில் ஸ்ரீ சுப்ரமணியர் மயில் வாகனத்திலிருக்கின்றது போல் வர்ணத்தில் எழுதியிருக்கிறார்கள். அதன் பின் மற்றொரு திரையிருக்கிறது. அதன் பின்னும் ஒரு திரை இருக்கிறது. அந்த மூன்றாவது திரையண்டை ஒரு பெட்டியிருக்கிறது. அந்தப் பெட்டிக்குத்தான் தீபாராதனை நைவேத்தியம் முதலியன நடக்கின்றன. நைவேத்தியம் ஒரு சிறிய பல்லக்கில் சிங்களவர்கள் வாயைக் கட்டிக்கொண்டு அதிக ஜாக்கிரதையுடனும் பயத்துடனும் கொண்டுபோய் இரண்டாவது திரையண்டை வைத்துவிட்டு, மறுபடியும் முதல் திரயண்டை வந்து, கடவுளை வணங்கி அவருடைய உத்திரவைப் பெற்றுக் கொண்டு மூன்றாவது திரைக்குப் போய் அந்தப் பெட்டிக்குத்தான் தீபாராதனை செய்கிறார்கள், அப் பெட்டிக்குப் பின்னால் இன்னும் 4 திரைகள் இருக்கின்றனவாம். அங்கு யாருமே போக முடியாதாம். அந்த ஏழாவது திரைக்குப் பின்னால் என்ன என்ன அதிசயம் உண்டு என்று யாருமே சொல்ல முடியாது. பூசை செய்கிற சமயம் முதல் திரையின் அருகில் நின்றுகொண்டு உற்றுக் கவனித்தால் சிங்கள பூசாரிகள் முதல் திரையைக் கொஞ்சம்தூக்கிக் கொண்டு உள்ளே போகிற சமயத்தில் அதன் பின்னால் ஒரு திரையும்அதற்குப் பின்னால் விளக்கு வெளிச்சமும் அந்த இரண்டாவது திரையில் தெரிகிறது. அப்பொழுது தான் மூன்றாவது திரையில் பெட்டி இருக்கிற தென்று சொல்ல முடிகிறது. அதன் பின்னால் இருக்கும் மற்ற நான்கு திரைக்குள் இருக்கும் அதிசயங்கள் யாருக்குமே தெரியா. அந்த மூன்றாவது திரைக்குப் பின்னால் ஒரு தங்க ஓடு இருக்கிறதென்கிறார்கள். அதற்கு மேல் மண்ஓடுதான் போடப்பட்டிருக்கிறது. அந்த மண் ஓட்டிற்கு அடியில் இருக்கும்படியான தங்க ஓட்டை யாரும் பார்த்தது கிடையாது. அவ்விடத்தில் 12 வருஷத்திற்கு ஒருதரம் மேற்படி ஓட்டை மாற்றுவது வழக்கமாம். அந்தஓட்டைப் பிரித்து ஒரே நாளில் மூடிவிடக்கூடிய அவ்வளவு சிறிய கோயில். மேற்படி ஓட்டைப் பிரித்து மூடிவிட்டுக் கீழே இறங்கினால் உடனே அவன் இறந்து விடுவானாம்; அந்த ஓட்டைப் பிரித்து மூடுகிறவனும் வாயைக் கட்டிக் கொண்டுதான் மூட வேண்டுமாம். அவ்விடத்தில் 12 சிங்கள பூசாரிகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்குப் பன்னிரண்டு வருஷத்திற்கு ஒருமுறை ஓடுமூட முறைவருமாம். இதுவரையில் ஒவ்வொரு பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு முறை கடவுள் கனவில் தோன்றி ஆளை நியமிப்பாராம்; இப்பொழுது ஓடுமூடி 20 வருஷமாகியும் கடவுளுடைய உத்திரவு இல்லையாம். அவ்விடத்தில் நடக்கும் படியான எல்லா விஷயங்களையும் கடவுளுடைய உத்திரவு பெற்றுக் கொண்டு தான் செய்கிறார்கள். ஆனால் கடவுள் அவர்களுக்கு எப்பொழுதுமே காட்சி கொடுத்துக் கொண்டு வருகிறார். ஸ்ரீ கதிரேசர் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஒரு புத்த கோயிலும், மகாவிஷ்ணு கோயிலும், ஆறுமுக சுவாமிகோயிலும் இருக்கின்றன. இதில் சுண்ணாம்பினால் செய்த விக்கிரகம் வர்ணம் பூசியிருக்கிறது. ஒரு புத்த மதத்தன் இவ்விடத்திலிருக்கிறான்; அவனிடத்தில் ஏதாகிலும் காசு கொடுத்தால் அவ்விடத்திலிருக்கும் படியான ஒரே ஒருதிரையைத் திறந்து காட்டுகிறான். அப்பொழுது மேல் சொன்ன புத்த சுவாமியையும், மகாவிஷ்ணு சுவாமியையும், ஆறுமுக சுவாமியையும் நன்றாகப்பார்க்கலாம்.

 

இந்தக் கோயிலுக்கு 60 அடி தூரத்தில் ஸ்ரீ தெய்வயானை அம்மன் கோயில் இருக்கிறது. அவ்விடத்திலே மூன்று திரைகள் இருக்கின்றனவாம். முதல் திரையைத் தூக்கிக் கொண்டு அவ்விடத்தில் பூசை செய்பவர் இரண்டாவது திரையில் நாம் கொண்டு போகும் நைவேத்திய சாமான்களை வாங்கிக் கொண்டு இரண்டாவது திரையண்டையே தீபாராதனை செய்துவிட்டு வருகிறார். அவ்விடத்தில் முதல் திரையில் ஸ்ரீ தெய்வயானை அம்மன் உருவம் வர்ணத்தில் எழுதியிருக்கிறார்கள். அதைத்தான் பார்த்து வணங்கிவிட்டு வர வேண்டும். இவைகள் எல்லாம் ஒரு காம்பவுண்டுக்குள் இருக்கின்றன. பிறகு ரோட்டிற்கு அப்பால் இரண்டு பர்லாங்கு தூரத்தில் ஸ்ரீ வள்ளி நாயகி அம்மன் கோயில் இருக்கிறது. அவ்விடத்திலும் ஸ்ரீ தெய்வயானை அம்மன் கோயில் எப்படி யிருக்கிறதோ அது போலவே தான் இருக்கிறது. ஆனால் இதில் முதல் திரையில் ஸ்ரீ வள்ளி நாயகி தினைப்புனத்தில் காவல் செய்வது போல் வர்ணத்தில் எழுதியிருக்கிறார்கள். அதைத்தான் பார்த்து விட்டு வணங்கி வரவேண்டும். இந்தக் கோயிலின் இரு பக்கத்திலும் இரண்டு கோயில்கள் இருக்கின்றன. ஒன்று சிவன் கோயில்; அதிலும் திரை போட்டிருக்கிறார்கள். அவ் விடத்திலும் ஒன்றும் பார்க்க முடியாது. அந்தத் திரையில் சிவலிங்கம் வர்ணத்தில் எழுதியிருக்கிறார்கள். அதைப் பார்த்து தான் இது சிவன் கோயில் என்று தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற பக்கத்தில் மகம்மதியருடைய கோயில் இருக்கிறது. அவ்விடத்தில் ஒரு சமாதியுமுண்டு. மற்ற பக்கத்தில் ஒரு அறையில் திரை போட்டிருக்கிறார்கள். அவ்விடத்தில் எல்லாமே ரகசிய மாக இருக்கிறதே தவிர கோயிலில் உள்ளே சுவாமியைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் ஸ்ரீ கதிரேசனுடைய பெருமையையும் சக்தியையும் இதில் எழுதமுடியாது. ஆடி மாதம் அமாவாசையிலிருச்து 15 தினத்திற்குப் போகும் படியான யாத்ரீகர் கணக்கிட முடியாது. அவர்களில் பலர் கொழும்புப் பகுதியில் இருப்பவர்களும் யாழ்ப்பாண வாசிகளுமேயாவர். வெறுங் காவடிகளும், பால்காவடிகளும், மச்சக் காவடிகளும் அதிகம்; இக்கோயிலில் மற்றொரு அதிசயமுண்டு. அதாவது யாராவது ஒருவர் அவர்களுடைய நோயோ, அல்லது வேறு எந்தவிதமான வருத்தமோ தீர்ந்து விட்டால் அவர்கள் கழுத்தை அறுத்துக் கொள்ளுவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டு அது போலவே அவர்களுடைய கோரிக்கை நிறைவேறிய பிறகு பிரார்த்தனை செய்து கொண்டபடி அவர்கள் ஸ்ரீ கதிர்காமப் பெருமான் கோயிலுக்குப் பின்புறத்தில் கழுத்தை வெட்டிக் கொள்ளுவார்களாம். அப்பொழுது கோயிலில் பூசை செய்யும்பூசாரி கொஞ்சம் விபூதியும் ஜலமும் கொண்டுவந்து ஒரு மஞ்சள் துணியைச் சுற்றிக் கொஞ்சம் விபூதியும் ஜலமும் அந்த மஞ்சள் துணியின் மேல் தெளித்துவிட்டு வெள்ளைத் துணியை எடுத்துவிட்டு முழுமையும் மூடி சூடத்தைக் கொளுத்திப் போய்விடுவானாம். அதன் பிறகு பிரார்த்தனைக்காரனோடு வந்தவர்களில் ஒருவன் அறுபட்டவன் எழுந்திருக்கிற வரையில் சூடத்தைக் கொளுத்திக் கொண்டே யிருப்பானாம். ஒரு நாளோ இரண்டு நாளோ அல்லது முன்று நாளுக்குள் ஒருவிதமான கஷ்டமில்லாமலும் கழுத்தை அறுத்துக் கொண்ட விடத்தில் யாதொருவிதமான கஷ்டங்கள் இல்லாமலும் எழுந்திருக்கிறானாம். இது முக்கியமான அதிசயம்.

 

உற்சவ காலத்தில் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயிலின் மூன்றாவது திரையண்டை யிருக்கும் பெட்டியை ஒரு பெரிய யானையின் பேரில் வைத்து நன்றாகக் கட்டி அதன் பக்கத்தில் ஒரு சிங்கள பூசாரி வாயைக் கட்டிக் கொண்டு பலகையின் பேரில் உட்கார்ந்துக் கொண்டு ஊர்வலம் வருவார்கள். அப்பொழுது அவ்விடத்தில் வரும்படியானவர்கள் எல்லாருமே ஒரு சட்டியில் முக்கால் அளவு விபூதி நிரப்பி, அதற்கு மேல் சூடத்தைக் கொளுத்திக் கொண்டு அந்த சுவாமிக்கு முன்னால் சுமார் 3000 கற்பூரதீபமும் பின்னால் 2000 கற்பூர தீபமும் காவடிகளும் வரும் காட்சியைப் பார்த்தால் நமக்கு இருக்கும் இரண்டு கண்கள் போதா. அவ்வளவு நேர்த்தியா யிருக்கிறது. தீவட்டி முதலிய விளக்கு வெளிச்சங்களே கிடையா. எல்லாம்  கற்பூர வெளிச்சமாகவே இருக்கிறது.

 

கோயிலுக்குப் பக்கத்தில் மாணிக்க கங்கை என்றொரு நதியிருக்கிறது, அதற்கப் பால் கொஞ்ச தூரத்தில் விபூதி மலை என்ற ஒரு மலையிருக்கிறது. அந்த மலையைக் கொஞ்சம் தோண்டினால் விபூதி வருகிறது. அதற்குக் கொஞ்சம் தூரத்தில் கணேச மலை என்றும், கதிர் மலை என்றும் இரண்டு மலைகள் இருக்கின்றன. கணேச மலையில் ஒரு பிள்ளையார் உருவம் இருக்கிறது. கதிர்மலையில் வேலாயுதம் இருக்கிறது. அந்த வேலாயுதமானது கதிர்காம க்ஷேத்திரம் இந்த இடந்தான் என்று தெரிவிக்கும் பொருட்டு நெடுநாளுக்கு முன் யாரோ ஒரு மகான் அதை மலையின் உச்சியில் நட்டு வித்து விட்டாராம். அந்த மலை சுமார் 6 மைல் தூரம் இருக்கிறது. அவ்விடத்தில் கொஞ்சம் தூரந்தான் படிகள் இருக்கின்றன. மிகுதி இடம் கொஞ்சம் கஷ்டத்தோடு தான் போகவேண்டும்.

 

ஸ்ரீ கதிரேசன் கோயிலுக்கு அப்பால் 4 மைல் தூரத்தில் செல்வக் கதிர்காமம் என்று ஒரு இடம் இருக்கிறது. அதில் ஒரு பிள்ளையார் இருக்கிறார். அவ்விடத்திலும் மாணிக்க கங்கை ஓடுகிறது. அந்த நதியில் ஸ்நாநம் செய்து பிள்ளையாரை வணங்கி விட்டுத்தான் வீடு திரும்ப வேண்டும். ஆனால் அங்குதிரை கிடையாது. அவ்விடத்தில் ஓடும்படியான நதியில் தான் மச்சக் காவடிகள் எடுக்கும் படியானவர்கள் மச்சத்தைப் பிடித்துக் காவடி செலுத்த வேண்டியது. அந்தச் செல்வக் கதிர்காமத்திற்கு போகிற வழியில் சூரனுடைய கோட்டை கிலமாக இருக்கிறது. ஆனால் அந்தக் கோட்டையைப் பார்க்குமளவில் சூரர்கள் வாசம் செய்த இடம்போல்தான் தெரிகிறது.

 

இது தான் கதிர்காமத்தின் அதிசயம். ஸ்ரீ கதிர்காமத்தில் சுமார் 10 இந்து மடங்களும் 70 சிங்கள வீடுகளும் இருக்கின்றன. இந்த ஆடி உற்சவத்தில் தான் அவ்விடத்தில் இருக்கும் எல்லாரும் ஒரு வருஷத்திற்கு வேண்டிய சாமான்கள் வாங்கிச் சேகரித்துக் கொள்வார்கள். உற்சவ தினத்தில் எல்லா ஊர்களிலிருந்தும் எல்லா தினுசுக் கடைகளும் வரும். என்ன தினுசு சாமான் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். அவ்விடத்தில் இரண்டு தெருக்கள் தான் இருக்கின்றன. பிறகு எல்லாம் காடுதான். இந்தக் கதிர்காமத்துக்கு அப்பால் ஊரே கிடையாது.

 

கொழும்பு நகரத்தார் கதிரேசன் கோயில்

 

சுமார் 20 - வருஷத்திற்கு முன்பு கொழும்பு நகரத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி கோயிலிலிருந்து வேலை எடுத்துக் கொண்டு போய் கதிர்காம க்ஷேத்திரத்தில் அவர்களுடைய மடத்தில் வைத்து, இந்த உற்சவத்திற்கு வரும்படியான எல்லா யாத்ரீகர்களுக்கும் அன்னதானம் செய்வித்து அவ்விடத்திய உற்சவம் கழிந்த பிறகு நகரத்தார் எடுத்துக் கொண்டுபோன வேலாயுதத்தை மறுபடியும் கொழும்புக்குக் கொண்டு வருவார்கள். அப்பொழுது போவதற்கு ஒரு மாதம் செல்லுமாம். இப்பொழுது கொழும்புநகரத்தார் அவ்வளவு தூரம் போவதற்குப் பதிலாக கொழும்புக்கு 3 மைல் தூரத்தில் வெள்ளவத்தை என்கிற இடத்தில் மடம் கட்டிக் கொழும்பு செட்டியார் தெருவிலிருக்கும் அவர்களுடைய ஆலயத்திலிருந்து சுவாமியை நன்றாக அலங்காரம் செய்து ரதத்தின் பேரில் வைத்து எல்லா விதமான வேடிக்கைகளுடன் அவர்களுடைய சொந்த மடமாகிய வெள்ளவத்தை மடத்துக்குக் கொண்டு போய் அன்னதானம் முதலியவைகள் நான்கு தினம் செய்வித்து, பிறகு வரும் போது எல்லாவிதமான வாண வேடிக்கைகளுடன் அவர்களுடைய ஆலயத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். இது சென்னையில் பவழக்கார தெருவிலிருக்கும் படியான நகரத்தார் புதுக் கோயில் என்றும் பழைய கோயில் என்றும் சொல்லுகிறது போலவே இவ்விடத்திலும் இருக்கிறது. ஆனால் சென்னையிலே மாசிமாதத்தில் திருவொற்றியூர் உற்சவத்தில் இந்த நகரத்தாரின் இரண்டு கோயிலிலிருந்தும் சுவாமி ரதத்தில் புறப்பட்டு எப்படி திருவொற்றியூருக்குப் போய் அவர்களுடைய மடத்தில் 4 தினம் தங்கி அவ்விடத்தில் அன்ன தானம் முதலியவைகள் செய்து பிறகு வருகிறதோ அதுபோலவே தான் கொழும்பிலும் நடத்துகிறார்கள். ஆனால் சென்னையில் இரண்டு சுவாமிகள் புறப்படுகின்றன, கொழும்பில் இந்த வருஷம் பழைய கதிரேசன் உற்சவம் மறு வருஷம் புதிய கதிரேசன் உற்சவம் இம்மாதிரியாக முறை ஏற்படுத்திக் கொண்டு செய்கிறார்கள்.

 

கதிர்காம க்ஷேத்திரத்திற்கு வரும்படியானவர்கள் "துணையோ டல்லது நெடுவழி ஏகேல்'' என்கிற பழமொழிப்படி அது அதிக தூரமானபடியால் ஒரு நல்ல துணையைத் தேடிக்கொண்டுதான் போகவேண்டும்.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - அக்டோபர் ௴

 

 

 


No comments:

Post a Comment