Saturday, August 29, 2020

 

கம்பராமாயண நீதிச்செய்யுள்

                                      

(தொடர்ச்சி)

 

செய்யுள் (25)

 

கறங்கெனத் திரியும் வேகக் கவிக்குலம் கதுவ வாங்கிப்
      பிறங்கிருங் கடலிற் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள்

மறங்கிளர் மான யானை வயிற்றின வாக வாய்சோர்ந்

துறங்கின கேடுற் றலு முணர்வரோ வுணர்வி லாதார்.           (சேது - 20)

 

(இ-ள்.) காற்றாடிபோல மிக்க வேகமாகத் திரிந்துகொண்டிருக்கின், வானரங்கள், பெரிய பருவதங்களைப் பிடுங்கிச் சேதுபந்தனஞ் செய்யக் கடலிலெறிந்த காலத்தும், அம்மலைகளில் வசிக்கும் மலைப்பாம்பு கள் வலிய யானைகளை விழுங்கிவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தன. அறி வில்லாதவர்கள் துன்பத்தை யடைந்தாலும் உணர்வுடையராவரோ? (ஆகார். என்ற படி) (எ - று.)

 

அறிவிலார் தாம்புரியும் கள்ளல், கள்ளுண்ணல், பிறர்மனை நயத்தலா திய தீச்செயல்களாற் றுன்புற்ற காலத்தும் வருந்தித் திருந்தார். வருந்தினும் அத்துன்பத்திற்காக வருந்துவரேயன்றிக் குற்றத்தினிமித்தம் வருந்துவதில்லை. அங்ஙனம் பச்சாத்தாபப்படுவரேல் மீட்டும் புரியத்துணிவரோ? தீயவை தீயபயக்குமென்றறிந்தும், களவாடிக் கசையடியுண்டோனையும், சூதாடிச் சொத்துக்களை இழந்து பஞ்சையாகப் பரிதபிப்போனையும், கண்டோர் கைகொட்டி நகைக்கத் தரையில் விழுந்துபுரளும் குடியனையும் கண் கூடாக் கண்டும் அவற்றை யஞ்சா தியற்றுநரைக் காண் கின்றோமன்றோ? இன்று காலை சிறை விடுபட்டவன் இரவிபட்டதும் கன்னக்கோல் கைக்கொண்டு களவாடப்போகிறான். கட்குடியாற் பல வித துன்பங்களை நேற்றிரா வடைந்தோன் காலையிலெழுந்து சென்று கடையைத் தட்டுகிறான். இத்தகையோரை என்னென்றியம்புவது?

 

“மிக வெறிக்கக்குடித்துத் தலைகால் தெரியாமல் தெருவூடே தட்டித் தடுமாறி போய்க்கொண்டிருந்தவனொருவன், அந்தோ! தலைகீழாகக் குப்புறவிழுந்துவிட்டான். முழங்காற் சில்லுபெயர்ந்துவிட்டது. நெற்றியில் நல்ல காயம். பற்களுடைந்து இரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்தோடுகிறது. மூச்சுப் பேச்சின்றி மூர்ச்சித்துக்கிடக்கிறான் ஏழை மனிதன். இவனைப்போல மூடனும் உலகிலிருப்பனோ வென்றியாவரும் பரிகசித்துக்கொண்டே போகிறார்கள். ஒருவன் மாத்திரம் அவனருகில் நெடு நேரமாய் உட்கார்ந்திருக்கிறான். அதைக்கண்ட வேறொருவன் அவனை நோக்கி, 'ஏனய்யா! உனக்கென்ன பைத்தியமா! அவன் தான் குடித்து விட்டுக் கண்டார் நகைக்க விழுந்து கிடக்கிறானே. நீ யேன் அவன் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருக்கிறாய்' என்றான். அதற்கு அம்மனிதன், 'சும்மா இரண்ணே! இவன் சாப்பிட்ட சரக்கு நல்ல சரக்கண்ணே. எந்தக் கடைச் சரக்கோ தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ள வேண்டு மாகையால் இவனுக்குப் போதை நீங்குமட்டும் இங்கே யிருப்பேன்' என்றான் " என ஓர் கதையுமுண்டு. ஆதலின், மேன்மக்கள் கேடு நேரிடுவதானால் முன்னதாகவறிந்து அதைத் தடுக்க முயல்வர். கீழ்மக்களோ கேடு நேரிட்டபோதும் அதை நீக்க ஒரு முயற்சியுமின்றி யிருப்பரென்பது இப்பாடலின் நீதியாகும். இக்கருத்தையே குமரகுருபர சுவாமிகளும்

 

கண்கூடாப் பட்டது கேடெனினும் கீழ்மக்கட்

குண்டோ வுணர்ச்சிமற் றில்லாகும் - மண்டெரி
      தான் வாய் மடுப்பினும் மாசுணம் கண் துயில்வ
      பேரா பெருமூச் செறிந்து.
                  என்னுஞ் செய்யுளால் விளக்கியுள்ளார்.


 (26)   நெடும்பல் மால்வரை தூர்த்து நெருக்கவும்
      துடும்பல் வேலை துளங்கிய தில்லையால்
      இடும்பை யெத்தனை யும்படுத் தெய்தினும்
       குடும்பத் தாங்குங் குடிப்பிறந் தாரினே
.                             (௸ - 53)

 

(இ-ள்.) "வானர வீரர்கள் அலைகடலிலணைகட்டப் பல பெரிய மலைகளையிட்டுத் தூர்த்து நெருக்கியகாலத்தும், அக் கடலானது, மிக்க வறுமையுற்றுழியும் குடும்ப பாரத்தைத் தாங்கும் நற்குடியிற் பிறந்தாரைப்போலச் சிறிதும் கலக்கமடையாமலிருந்தது'' என்பதாம்

 

இதனால், உயர்குடியிற் பிறந்து உத்தம குணங்களை யுடைய பெரியோர் வறுமையுற்றுத் துன்ப சாகரத்து வீழினும் அதனைப் பொருட்படுத்தாது தங்கள் அறிவைப் புணையாகவும் பொறையைத் துடுப்பாகவுங் கொண்டு கடப்பர். " துன்பமாவது ஒரு கோட்பாடே” யென்றும், " அது மாறுபாடாகக் கொண்டால் நீங்கும்'' என்றும், “வெள்ளத் தனைய விடும் பையறிவுடையா னுள்ளத்தினுள்ளக் கெடும்" என்னும் குறளினுரையிற் போர் வறுமையுற தலைப் புணையாகவும் யென்றும், " அது கூறுகின்றார் ஆசிரியர் பரிமேலழகர். துன்பத்தைத் துன்பமாக் கருது வோர்க்கே துன்பம் துன்பம் பயக்கும்; அறிவென்னும் வாள் கொண் டெதிர்ப்போரை யஞ்சியகலும். உப்பிலாக் கூழெனினும், குப்பைக்கு முதவாக்கந்தை யெனினும் மனங்கோணாது உண்டுடுத்துத் திருப்தி யோடிருப்பவனை வறுமை என் செய்வல்லது? புலன்களின் வழி செல்ல விடாமல் மனதை யடக்குவோன் இன்மையாலின்னலடைவதில்லை. மிக்க ஆசை மிக்க தரித்திரம். ஆசையற்றோனைக் காணின் ஐங்காதமோடும் மிடி. இது நோக்கியே,

 
 "இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக்
 கிடும்பை படாஅ தவர்''
                               (திருக்குறள்)


 ''நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்''               (திரிகடுகம்)

எனக் கூறின ரான்றோர்.

 

இங்ஙனமின்றிச் சிலரிம் மிடியின் காரணமாகப் பல தீய காரியங்களியற்றிப் பொருள் தேட முயல்வதும், இரந்துண் டுழல்வதும், துறவிகளா வதுமுண்டு. இவைகளியாவும் வெறுக்கத்தக்க செயல்களே. ஆராயு மிடத்து, செல்வ வாழ்க்கையினும் வறிய வாழ்க்கையே அடக்கம், பக்தி, இரக்கம் முதலிய நற்குணங்களைத் தருதலால் * சிறந்தது'' என்ப தான்றோர் கொள்கை.'' இன்னல் தரும்பொருள்,'''' சிறியரே மதிக்கு மிந்தச் செல்வம்'என்று ஆன்றோரருளியுள்ளார். ஆகையால், எவ்வளவு வறுமையுறினும் பொறுமை மேற்கொண்டு சகித்து நன்னெறியின் வழாது உள்ளதைக் கொண்டு உவப்புடன் இல்லறத்தை நடத்துதல் வேண்டும் என்பது விளங்குகின்றது.

 

(27)    பெருமையும் வண்மை தானும் பேரெழி லாண்மை தானும்
       ஒருமையி னுணா நோக்கிற் பொறையின தூற்ற மன்றே

      அருமையு மடர்ந்து நின்ற பழியையு மயர்ந்தாய் போல
      இருமையுங் கெடுத்தா யன்றே யென்னினைந் தென்செய் தாய்நீ
 

(மகுடபங்கம் - 31.)

 

அணையின் மூலமாய் முந்நீர் கடந்து முச்சிகரத்தை யடைந்த மூவா முதல்வனாகிய தாசரதியைத் தசக்ரீவன் உத்தர கோபுரத்தினின்று நோக் குங்கா லவனைக்கண்ட சுக்ரீவன் கடுஞ்சினமூள அண்டையினின்ற அரவணைப் பள்ளியினறி துயிலமரும் அமலனுமறியாவாறு அநிலனு மச்சுறப் பாய்ந்தேகி அவ்வரக்கனுடன் மற்போருஞற்றி யவன் முடிமணிகளைப் பறித்து வந்து சுவாமியின் திருமுன்வைத்துப் பணிதலும், அன்னா னகன்ற மைக் காற்றாது.'' ஐயகோ! சுக்கிரீவனுக்கு யாது தீமை நேரிடுமோ?', வெனத் துயர்கொண்டிருந்த ஜானகி காந்தன் அவன் வந்ததைக் கண்ட வளவில் களிப்புக்கொண்டு அவனைப் பார்த்துக் கூறும் சந்தர்ப்பத்துள்ள விச்செய்யுளின் பொருள்; " சுக்ரீவா! நன்றாக ஆலோசித்துப் பார்க்கு மிடத்து ஒருவனுக்குண்டாம் பெருமை வண்மை மிக்க வழகு ஆண்மை யென்னுமிவைகள் பொறுமையையன்றோ பற்றுக்கோடாகக் கொண்டுள்ளன. அஃதின்றேல் பெருமை வண்மை அழகு ஆண்மை முதலானவை உண்டாங்கொல்லோ? அங்ஙனமாக நீ செய்யத்தகாததையும் அதைச் செய்வதனா லெனக்குண்டாம் பழியையும் மறந்து இகபரமிரண்டையுங் கெடுக்கும்படியாய் என்ன நினைந் தென்ன செய்தாயப்பா!'' என்று கூறினர் என்பதாம்.

 

இப்பாவால், ''பொறுமை கடலினும் பெரிது'' "பொறுமை யுடையார் பெருமையடைவார்; சிறுமையடையார்'''' சாந்தம் பலஹீனமன்று.'' எத்துணை அவசரகாரியமேனும் வெற்றிபெற வெண்ணின் பொறுமை யைக் கைவிடலாகாது. ''அவசரகாரியம் ஆபத்துக்கிடம்." பொறுமை யின்மை கூரிய அறிவையுங் குறைக்கும். ''ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.'" பொறுமையாற் கார்யசித்தி பெறாதா ரியாண்டுமிலர், "பொறுத் தவர் பூமியாள்வர் பொங்கினவர் காடாள்வர்'' என்ப தனுபவமுதுமொழி. பொறுமையே பெருமை ஆண்மையா தியவற்றை யளிக்குங் கற்பதரு. ஆகலின் ஒவ்வொருவரும் பொறுமையையே சிறந்த பூஷணமாக் கோடல் வேண்டுமென்பது பெறப்படுகின்றது.

 

(28)    மாற்ற ருந்தட மணிமுடி யிழந்தவா ளரக்கன்
      ஏற்ற மெவ்வுல கத்தினு முயர்ந்துளா னெனினும்
      ஆற்ற னன்னெடுங் கவிஞரோ ரங்கத முரைப்பப்
       போற்ற நம்புக ழிழந்தபே ரொருவனும் போன்றன்
        (முதற்போர் - 249)

இராகவருக்கு மிராவணனுக்கும் நடந்த முதனாட்போரில் கண்டகனா கிய தசகண்டன் சகல படைகளையு மிழந்து ஞாயிறு போன்றொளிரும் மணிகளிழைத்த மகுடங்களையு மிழந்தவனாய்த் தனித்துத் தரையை நோக் கியவண்ணமாக நின்ற காட்சியைக் கூறுமிடத்துள்ள கவிக்கூற்றாகிய விச செய்யுள், " நீக்கமுடியாத பருத்த மணிகளிழைத்த கிரீடங்களை யிழந்து வெறுந்தலையனாய் நின்ற விலங்கேசன், இவ்வுலகத்தாரினுஞ் செல்வத்தி னும் பராக்ரமத்தினும் மிகுந்துள்ள வனாயினும், கலைவன்மையுடைய கவி ஞருக் கபசாரஞ் செய்தோன் அப்புலவர் மனநொந்து கூறும் தூஷணங்களாற்றன் கீர்த்தி செல்வம் முதலியவற்றை யிழப்பது போல, எல்லாமிழந்தவனாய் நின்றான்'' என்னும் பொருட்டாம்.


      ''கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும்
      மலரவன் வண்டமி ழோர்க் கொவ் வான்.''
 '     மன்னனிற் கற்றோன் சிறப்புடையன். "

 

என்னும், இன்னோரன்ன செய்யுட்களாற் கவிஞர் பிரமனிலும் அரசரினும் சிறந்தவரென்பது இனிது விளங்குகின்றது. ஆகலின் அப்புலவர் மாட்டி யாவரும் அன்புடன் வழிபாடுடையராதல் வேண்டும். "கற்றலிற் கற்யாஸீன் றோரை வழிபடுதல் சிறந்தன்று." அவர்க்குத் தீமை புரிவோர் அழிந்தொழிவர். 'வில்லேருழவர் பகைகொளினுங் கொள்ளற்க, சொல்லே ருழவர் பகை'' என்றார் வள்ளுவரும். காளமேகப் புலவரை யவமதித்த திருமலைராயன் நகரம் நாசமுற்றது. * நந்திகலம்பகத்தால் மாண்டகதை நாடறியும். கச்சிப்பதியில் வசித்து வந்த பக்திஸாரர் அந்நகரை யாண்டு வந்த பல்லவராயனாற் சினமூட்டப்பெற்றுப் புறம் போகையில் திருமாலை நோக்கி, 'எம்பெருமானே! செந்நாப்புலவனாகிய யான் இந்நகர் விட்டேக நீர் மாத்திர மீண்டு வதிவீரோ? என்னுடன் புறப்படும்” என்னுங் கருத்தோடு

 

கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா - துணிவுடைய

செந்நாப் புலவனியான் செல்கின்றேன் நீயுமுன்

பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்

 

என்னும் பாடலைப் பாடலும், பக்தபராதீனன் அங்ஙனமே சென்றனர். குலோத்துங்க சோஷன் கம்பரை யவமதித்தால் சிறுமை யுற்றனன். பொய்யாமொழிப் புலவரை யுபசரியா தொழிந்த தினிமித்தம், ஓர் தாசி கண்ணிழக்கப்பெற்றாள். இன்னு மெண்ணிலாக் கதைகளுளவேனும் விரி வஞ்சிவிடப்பட்டன.


இக்கவியால் புலவர் மேன்மையும், அவரை வழிபடுவோர் நன்மையும் இகழ்வோர் தீமையு மடைவாராகலின், அன்னோர்மாட்டு அபசாரப்படாமல் உபசரித்துப் போற்றவேண்டு மென்பதும் விளங்குகின்றது.

 

(29)    துறத்த லாற்றுறு ஞானமாக் கடுங்கணைதொடர்
      அறத்த லாது செல் லாதுறல் லறிவுவந் தணுகப்
      பிறத்த லாற்றுறு பேதமை பிணிப்புறத் தம்மை
      மறத்த லாற்றுறு மாயையின் மாய்ந்ததம் மாயம்.
        (இரா - வதை - 124.)

 

இராமராவண யுத்தத்தில் இராவணன் மாயாஸ்திரமொன்றை யேவ, அது, சக்ரவர்த்தி திருக்குமாரனாரெய்த ஞானாத்திரத்தாலழிந்தது, என்பதைக் கூறுமிச் செய்யுளின் பொருளாவது. ''நன்னெறியினின்று, பகவத் பக்திமேலீட்டாற் பரிசுத்தமடைந்த விடத்துத், தன்னையறிதலாகிய நல்லறிவு (சொரூபஞானம்) தோன்றியவளவில், பிறவிக்குக் காரணமாகிய அஞ்ஞானத்தாற் பிணிக்கப்பட்டுச் சொரூபஞானத்தை யறியா வண்ணம் மறைத்துக் கொண்டிருக்கும் மாயையானது எங்ஙனமொழியுமோ அங்ஙன  மொழிந்தது இராவணனாலேவப்பட்ட மாயவாளி.'' (எ - று.)

 

துன்பமே வடிவாகவுடைய பிறவிக்கேது அறியாமை. அது மெய்யை மெய்யென்றும் பொய்யைப் பொய்யென்று மறியாது; மெய்யைப் பொய் யென்றும் பொய்யை மெய்யென்றும் முரணாக்கருதலாகிய விபரீத ஞானமாம்.'' பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும், மருளானாம் மாணாப் பிறப்பு.'' என்றார் பொய்யாமொழியாரும்.


      பாராதி பூதம் நீ யல்லை - உன்னிப்
      பாரிந்தி ரியங் கரணம் நீ யல்லை
      ஆரா யுணர்வு நீ யென்றான் - ஐயன்
      அன்பா யுரைத்த சொல் லானந்தந் தோழீ.
                (சங்கர சங்கர சம்போ)

 

என, ஞானச் செல்வராகிய தாயுமான சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளி யாங்கு, "மாயாகாரியமாகிய இந்திரியங்கள் கரணங்கள் வாயுக்கள் என்னும் தத்துவங்களனைத்தையும் தானல்லவென்று நியதிகழித்து, இவற்றை யாராய்ந்தறியு மதே தனதெதார்த்த சொரூபமென்று அபரோக்ஷமாயறி தலே மெய்ஞ்ஞானமாகும்.'' "தன்னையறிவதே அறிவாம், அஃதன்றிப் பின்னையறிவது பேயறிவாமே" என்றார் ஆன்றோர்.

 

திருக்குறள் மெய்யுணர்த லென்னு மதிகாரத்தில், "எப்பொரு ளெத் தன்மைத்தாயினு மப்பொருள் - மெய்ப்பொருள் காண் பதறிவு," என்று நாயனாரும், அதனுரையில், "சராசரமாகிய பொருள்களிலெல்லாம் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகிற கற்பனைகளைக் கழித்து, நின்ற வுண்மையைக் காண்பதே மெய்யுணர்வு; அதாவது, அரசன் சேரமான் என்ற விடத்து, அரசனென்பதோர் சாதியும் சேரமான் என்பதோர் குடியும் கற்பனையாதலால் அக்கற்பனையைவிட்டு, அவனை நிலம் முதல் உயிரீறாகிய தத் துவங்களின் கூட்டமென்றறிந்து, அத்தத்துவங்களை நிலம் முதலாக அதனதன் காரணங்களி லொடுக்கிக் கொண்டுபோய் முடிவிலே காரணகாரிய மிரண்டுமில்லாமல் நிற்பதனையறிதலாம்." என்று ஆசிரியர் பரிமேலழகரும் கூறியுள்ள மெய்யறிவின் லக்ஷணம் ஈண்டறியத்தக்கதாம்.

 

இம்மெய்ஞ்ஞானம் எதுவரை தோன்றாமலிருக்குமோ அதுவரை சம்ஸாரக்லேசமும் மாயையும் நீங்குவதில்லை. அது நீங்காவிடத்தே பிறவி நீங்குவதின்று. இதனை

      வாரா யென்மகனே தன்னை மறந்தவன் பிறந்திறந்து
      தீராத சுழற்காற் றுற்ற செத்தை போற் சுற்றிச்சுற்றிப்
      பேராத காலநேமிப் பிரமையிற் றிரிவன் போதம்
      ஆராயுந் தன்னைத் தானென் றறியுமவ் வளவுந்தானே


என்னும் கைவல்ய பாசுரத்தானுமறியலாம்.

 

ஆதலின் ஸ்வ ஸ்வரூபத்தை யறிந்து அஞ்ஞானமாயையை யொழித்து பிறவிப் பெருங்கடற் பிழைத்துப் பேரின்ப வீடடையப் பிரயாசப்படுத்த லத்தியாவசியமென்னும் நீதி இச்செய்புளாற் பெறப்படுகின்றது.
  
(30)    துனையும் வேகத்தா லுரு மேறுந் துண்ணென்ன

வனையுங் காலிற் செல்வன தன்னை மறவாதே

நினையும் ஞானக் கண்ணுடை யார் மேல் நினையாதார்

வினையம் போலச் சிந்தின வீரன் சரம்வெய்ய.                  (௸ - 129)

 

மாயாஸ்திரம் மாய்ந்தததைக்கண்ட தசகண்டன் சூலமொன்றினை விட, அதையொழிக்க வினகுலதிலகன் ஏவியவாளிகளியாவும் ஊறுசெய்யமாட்டாமல் அழிந்தன வென்பதைக் கூறுமிச்செய்யுளின் பொருள்,'' இடியுந் திடுக்கிடக் காற்றினுங் கடுகிச்சென்ற காகுத்தன் சரங்கள், இராவணன் சூலத்தை யொன்றுஞ் செய்யமாட்டாமல், பரந்தாமனது பாத பத்மங்களைப் பகலுமிரவும்பரவாநிற்கும் ஞானக்கண்களையுடைய பக்தோத்தமர்களைக் குறித்துச் சிலர் சிறிது மாலோசனையின்றிச் செய்யும் துஷ்கிருத்தியங்கள் அவரை யாதுஞ் செய்யவியலாது நிஷ்பிரயோஜன மாந்தன்மை போல இற்றுவிழுந்தன'' என்பதாம்.

 

இதனால், "பக்தபராதீனனாகிய பகவானிடத் தன்புபூண்டொழுகு மடியார் திறத்துச் சிறிதும் அபசாரமியற்றலாகாது. இயற்றினுமதனா லவர்க்கு யாதும் துன்பமுண்டாவதின் றெனினும், 'சுவரிலெறிந்த பந்தானது மீட்டு மடித்தோனையே யடையுமாப்போல், 'அத்தீமை தம்மைப் புரிந் தோர்மாட் டே காதொழியாது. சமணரது துர்போதனையாற் பல்லவராயன் புரிந்த தீக்காரியங்கள் வாகீசரைச் சிறிதும் வருத்தவில்லை யென்பது உலகறிந்ததேயன்றோ? கடவுள் மாட் டபசாரப்படினும் படலாம். அடியாரைப் பிழைப்போ ருய்யார் உய்யார்! இறைவர் தொண்டருள்ளத் தொடுக்க மாகலின் தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே.


 "அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோய ராய்
      ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
 கங்கை வார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
      அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவு ளாரே.''


 ''பாதியா யழுகியகால் கைய ரேனும்
 பழிதொழிலு மிழிகுலமும் படைத்தாரேனும்
 ஆதியா யரவணையாய் என்பா ராகி
 லவர்கண்உர் யாம் வணங்கு மடிக ளாரே.''


என்னுமின்னோரன்ன ஆப்த மொழிகளை யுணர்ந்து அடியாரிடத்து மிக்க அன்புபூண்டொழுகல் வேண்டும்" என்பது வெள்ளிடை மலைபோல் விளங்கக் கிடக்கின்றது.
 

(31)    பாதமறைவெவ் வரவினுக்குப் பாலுநெய்யும் புகட்டிடினும்
      வாதை செய்யும் வல்விடமே வளருமாபோல் மனு நூலும்

வேதமவையோ ராயிரமும் விளங்குங் கலையுந் தசக்கிரிவன்

ஓதவோதப் போதங்கெட்ட போதமான தோங்கியதே.       (உத்தர - இரா - பிற - 17.)


(இ - ள்.) இராவண கும்பகர்ணர் வித்யாப்யாசஞ் செய்யத்தொடங்கி அநேக வேதங்கள் கலைகள் மனுதர்ம சாஸ்திரம் முதலிய நூல்களைக் கற் றுவந்தனர். அவ்வாறு கற்கக் கற்க, உள்ள வறிவுங்கெட்டு தீக்குணமா னது மேலும் மேலும் விருத்தியாயிற்று; பாம்பிற்குப் பாலும் நெய்யும் ஊட்டினாலும் அதனிடத்து கொலைக்குரிய கொடிய விடமே பெருகுவது போல். (எ - று.)

 

கல்வி ஒருவரிடத்துள்ள இயற்கைக்குணத்தை வளர்க்குந்தன்மை யுடையது. கூறிய வாளை யொப்பது, தக்க வழியிலுபயோகிக்க வறியான் கைவாள் இன்னலையேயன்றோ வென்று மீயும்? கள்ள மனமுள்ளோன் கல் விகற்பின், கண்டோர் வியப்புறுமாறு திருடவும் கண்டுபிடிக்கப்படின் பல வித சாகசங்களால் யாவரையும் ஏமுறச்செய்து தப்பித்துக் கொள்ளவுமே யுபயோகிப்பா னக்கல்வியை. ஆனால் நற்குணமாகிய விளக்குச் சிறிதேனுமிருப்பின் அது கல்வியாகிய நெய்திரிகளால் பெருகிச் சுடர்விட்டுப் பிரகாசித்து, பேரிருளாகிய தீக்குணங்களைப் பற்றும்.'' நட்புந்தயையுங் கொடையும் பிறவிக்குணம் " "சங்கையறப் படித்தாலும் கேட்டாலும் பிறர்க் குறுதிதனைச் சொன்னாலும், அங்கணுலகிற் சிறியோர் தாமடங்கி நடந்து கதியடையமாட்டார்'' என்றார் பெரியாரும்.

 

ஆகையால், கல்விகற்குங்காலத்தேதானே, 'நன்னூற்களையாராய்ந்து நன்னெறியிலொழுகவே கற்பது' என்னுங் கருத்தோடு கற்று, படித்தபடி நடக்க முயல வேண்டும். படித்தால் தானே பிழைக்கலாம், 'என்று வயிற்றுப்படிப்புப் படிக்கலாகாது. அக்கல்வி நம்மை நல்வழியினுய்க்காது என் னும் நீதியையிப்பாட்டு வூட்டுகின்றது.

 

(32)    அள்ளன் மடுவில் மூழ்கித்தா மரும்பட் டினிபட் டலம் வந்தும்

உள்ளந் தூய ரல்லாருக் கொருகா ரியழம் பலமாகா

கள்ள மனச்செய் தவக்கும்ப கன்னன் கருதும் வரங்கொடுக்கும்

வள்ளன் மலரோ னிடைபெற்ற வரத்தான் மாறாத் துயில்பெற்றான். (இரா -பிறப்பு -35.)

 

(இ-ள்.) வஞ்ச நெஞ்சமுடையவனான கும்பகர்னன் கடுந்தவமியற்றி வேண்டிய வேண்டியாங்களிக்கும் கந்தமலரோனாகிய பிரமனிடம் நித்தியத்துவமாகிய வரங்கேட்டும் அதனால் நன்மையடையாமல் ஒழியாத நித்திரையாகிய நித்திரைத்துவமே பெற்றான். மனச்சுத்தமில்லாதவர் எத்தீர்த்தங்களில் நீராடியும் பட்டினி கிடந்தும் என்ன கஷ்டப்பட்டாலும், அருமையான எக்காரியமும் நல்ல பலனைக் கொடுக்க மாட்டா'வென்பதாம்,

 

மனம் சுத்தம் அசுத்தமென மிருவகைப்படும். சீவகாருண்யம், வாய்மை, அவாவின்மை, அழுக்காறின்மை முதலிய நற்குணங்களை யுடையது சுத்தமனம். அவற்றையுடைத்தாயிராதது அசுத்தமனம். சுத்தமனம் மோக்ஷத்திற்கானது. அசுத்தமனம் நரகிற் கேதுவானது. மாசகன்ற மனமுடையோர் மாண்புடைப் பெரியோர். காமம் வெகுளி மயக்கமென்னும் முக்குற்றமு மற்றோராகலின், அன்னாரியற்றும் ஒவ்வொரு காரியமும் பிறர்க்குத் துன்பம் பயவாது நன்மையே பயக்கும். அசுத்தமனத் துதிக்கும் எண்ணங்களெல்லாம் தீயவையேயாம். சுத்தமனத்தோர் புரியும் அறமாதியவை ஒன்று பத்தாகப் பெருகும். அவர்கள் கோரிக்கைகளைக் குறைவின்றி முடிக்க முன்னவனே முன்நிற்பான்.

 

பொறாமை முதலிய துர்க்குணங்களோடு எத்தனை விரதங்களியற்றி னாலென்ன? தவமே புரிந்தாலென்ன?'' கையிலே நாம் பிடிப்பது ஜெப மாலை; கக்கத்தில் வைப்பதுவோ கன்னக்கோலை,'''' கடவுளைத் துதிப் பது போல் வாய்பாடும்; கண்ணுங் கருத்தும் கண்டவிடமெங்குமோடும். " (வேதநாயகம்பிள்ளை)'' படிப்பது திருவாய்மொழி இடிப்பது பெருமாள் கோயிலா?'' அன்றாடம் ஆயிரம் பொய் பேசிவிட்டு அருணகிரி நாதரைச் சேவித்தாலென்ன பயன்? ஏழை எளியவரை வயிறெரியப்பண்ணி எம் பெருமானைக் கும்பிடுவதனால் யாது பயன்? இதுபற்றியே திருவள் ளுவரும்

 

"மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா வியன்ற தறம்.''                          என்றனர்.

 

ஆகலின், துர்க்குணங்களை யொழித்தல் மூலமாக மனதைச் சுத்தப்படுத்த வேண்டும். இருவினைக்குக் காரணமான மனம் பரிசுத்தப் படுத்துமிடத்துப் பகவான நுக்கிரகம் எளிதினுண்டாவதாம், என்னும் நீதி இச் செய்யுளா லினிது விளங்குகின்றது.


 (33)   குலம் வேண்டு மென்றிருப்பார் குலத்துள்ளார்
            கல்வியினாற் குறையாஞானப்
      பலம் வேண்டு மென்றிருப்பார் தந்தைமார்
            பரந்த பெருஞ் செல்வமுள்ள
      தலம் வேண்டு மென்றிருப்பார் தாய்மார்கள்
            யவ்வனமு மழகுஞ் சார்ந்த
      நலம் வேண்டு மென்றிருப்பார் நாறுகுழல்
            கன்னிமார் நலத்தின் மிக்கார்.                            (௸ - 60)

 

தசக்கிரீவன் ஒருநாள் வேட்டையினிமித்தம் காட்டையடைந்து ஓர் பூம்பொழிலிற் றங்கியிருந்தான். அப்போது அசுர தச்சனாகிய மயன் மண் டோதரி யென்னும் தன் மகளோடு அங்குவா, இராவணன் அவனைக் கண்டு'நீ யார்? இம்மாதார்?'என வினவினன். அவன் தன் வரலாற் றைக் கூறி என் புத்திரியின் குணத்திற்கும் அழகிற்கும் ஏற்ற வரனைத் தேடியலைகின்றேன். (இ-ள்.) இவ்வுலகத்திற் கன்னிகைகளுக்குக் கடிமணம் பேசங்காலத்தில், சுற்றத்தார் நற்குலத்தை விரும்புவார்கள். தந்தைமார் கல்வியறிவை நாடுவார். தாய்மார் மிக்க செல்வமுள்ள இடமா யிருக்க வேண்டுமெனக் கோருவார். கன்னியர் யவ்வனமும் அழகும் பொருந்திய நன்மையையிச்சிப்பார். ஆகையால் அத்தகைய கணவனைக் காணப்பெற்றிலே னென்றான்,'' என்பதாம்.

 

இவ்வாறு ஒவ்வொருவரும் வெவ்வேறுவித விருப்புடையரேனும் அவையாவுமிருத்தலே சிறப்புடையதாம். ஆனால் இந்நான்கும் பொருந்தி யிருக்கும் வரன் கிடைப்பதருமை. ஏதேனுமொன்று குறைவுபட்டேயிருக்கும்.

 

இஃதிவ்வாறாக, தற்கால விவாக நிலை விந்தையானது. ஐந்து வயது பெண்ணை ஐம்பது வயதுள்ளவனுக்குக் கொடுப்பதும், பதினைந்து வய துடைய பெண் தொண்ணூறு வயது பால குமாரனை மணக்கச் சம்மதிப் பதும், விந்தையேயன்றோ? நாகரீகமென்னும் பேய்பிடித்து, படித்தவர்கள் ளென்றழைக்கப்படும் பெண்களிடத்தே இப்பேய்க்குணம் குடியிருக்கக் காணலாம்.'கைந்நிறைந்த பொருளைப் பார்க்கிலும் கண்ணிறைந்த கண வனே மேல்,'என்னும் பழமொழி இவர்களிடந் தலைகாட்டாமல் ஓடி யொளித்தது. அற்பப் பணிகளுக் காசைகொள்வோர் கற்புப் பணியை யெங்ஙனம் கடைப்பிடிப்பர். அசாத்திய மசாத்தியம்.

 

இச் செய்யுளால் யவ்வனம் அழகு கல்வி அறிவு குலம் செல்வம் என்னுமிவற்றை யுடையவனாகத் தேடி கன்னிகைக்கு மணமுடிக்க வேண்டு மென்பது பெறப்படுகின்றது.


      பெண்ணுதவுங் காலைப் பிதாவிரும்பும் வித்தையே
      எண்ணில் தனம் விரும்பு மீன்ற தாய் - நண்ணிடையிற்
      கூரியநற் சுற்றம் குலம் விரும்பும் காந்தனது
      பேரழகு தான் விரும்பும் பெண்.


 இச்செய்யுளும் ஈண்டறியத்தக்கதாம்.


(34)    அறிவி லாதவர்க் கறிவன சொல்லுவா ரவரால்
      இறுதி யெய்துவா ரென்னும் தின்றுகை கண்டோம்
      உறுதி யாயின காரிய முரைத்துவிட் டோமால்
      மறுகி நேர்பொர வந்தனன் வாளெயிற் றரக்கன்.
          (வரையெடுத்த - 24.)

 

இருநிதிக்கிழவனாகிய குபேரன் தன்மேற் பொரவந்த இராவணனுக்குப் பல புத்திமதிகளைக் கூறியனுப்பியும் அக்கொடியோன் அவற்றைச் செவிக்கொள்ளாது, போருக்கு வந்தபோது கூறிய சந்தர்ப்பத்துள்ள விச்செய்யுளின் பொருள்; "இகபரங்களுக் குறுதியான நன்மார்க்கத்தைப் புகட்டித் தூதனுப்பியும் வாள்போற் கூரிய பற்களையுடைய விவ்விராவ ணன் கோபித்துப் போர் செய்ய வந்துளான்.'விவேக சூன்யர்களாகிய மூடர்களுக் குபதேசம் செய்வோர் அம்மூடராற் றுன்பமடைவர்' என்னும் நீதியை இன்று நிதரிசனமாகக் கண்டோம்" எனக் கழறினான் என்பதாம். ''

 

“நருமதையாற்றங் கரையிலிருந்த ஓர் விருக்ஷத்திற் சில தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக்கொண்டு வசித்திருந்தன. ஒருநாள் பெருமழை பெய்தது. அப்போது வானரங்கள் சில மழையில் நனைந்து குளிர் கொண்டு அம்மரத்தடியிற் றங்கி வருந்திக்கொண் டிருந்தன. அப்பரிதாப" நிலையைக் கண்ட அப்பறவைகள், அவற்றை நோக்கி, 'நண்பர்களே! கைகளில்லாதவர்களாகிய நாங்கள் அலகின் உதவியால் எவ்வளவோ கஷ்டப் பட்டுக் கூடு கட்டிக்கொண்டு மழையாதிய துன்பங்களுக் குள்ளாகாமல் சுகமாக வாழ்ந்திருக்க, விசேஷித்த அவயவமாகிய கையைப் பெற்றிருக்கும் நீங்கள் ஏன் ஒரு சிறு வீடு கட்டிக்கொண்டு வசிக்கலாகாது?' எனக் கூறின. இவ்வார்த்தையைக் கேட்டதும் வந்துவிட்டது கோபம் அக் குரங்குகளுக்கு. கையாலாகாதவர்களுக்குக் கோபம் வராமல் வேறென்ன வரும்?' ஓ மூடர்களே! நீங்களா எங்களுக்குப் புத்தி புகட்டுகின்றவர்கள். நல்லது, எங்களுக்கு அழிக்கத்தெரியுமேயன்றி ஆக்கத் தெரியா' தெனக் கூறிப் பாய்ந்து சென்று, கூடுகளை யெல்லாம் பிய்த்துச் சிதைத்தன'' என்னும் பஞ்ச தந்திரக்கதை யீண்டுணரற்பாலது.


 வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
 தானுமோர் நெறிசொலத் தாவிப் பிய்த்திடும்
 ஞானமும் கல்வியும் நயந்த நூல்களும்
 ஈனருக் குரைத்திடி லிடர தாகுமே.
              

 

என்னும் செய்யுளும் இக்கருத்தையே கொண்டது.
 

ஆகலின், “மூடர்களுக்கு உபதேசம் செய்வோர் தீமை யடைவ”    ரென்பது, இச்செய்யுளின் நீதியாம்.

 

(35)    உண்டிலை யென்று தம்மி லுணர்வலோர் பிணங்க நின்ற
      புண்டரீகக்கணானை போக்கொடு வரவிலானைக்
      கண்டன மென்றோர்க் கென்றுங் காண்பரி யானை யென்றுங்
      கண்டில் மென்றோர் கண்ட கண்ணனைக் கண்ணிற் கண்டார்.
(திக்கு விசயம். 181.)

 

(இ-ள்.) உணர்வற்றவர்கள், உண்டென்றும் இல்லையென்றும் தம்முள் மாறுபடநின்ற செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களை யுடையவனும், கண்டனமெனக் கூறுவோர்க்கென்றுங் காண்பதற் கருமையான வனும், என்றுங் கண்டிலோ மென்றோரால் காணப்பட்டவனுமாகிய ஸ்ரீமந் நாராயணனைக் கண்ணால் கண்டார்கள். (எ - று.)

 

'இராவணன் திக்குவிசயம் செய்யப்புறப்பட்டு தேவலோகஞ் சென்றபோது, இந்திரனுள்ளிட்ட வானவர் வெருவி, பாற்கடலிற் பள்ளிகொண் டிருக்கும் பதுமநாபனிடம் தங்குறைகளைக் கூறுவானேகி, அறிதுயில் புரியு மமலனைக் கண்டார்களென்பதைக் கூறுமிச் செய்யுள் இறை நிலையிற்றென் யியம்புகின்றது.

 

"உருவென அருவென உளனென இலனென

அருமறை யிறுதியு மறிவரு நிலைமையை.''        என்று

 

பிள்ளைப் பெருமாளையங்கார் கூறியாங்கு, கடவுள் உருவமுடையவனென்றும் உருவமில்லாதவனென்றும், உள்ளவனென்றும் இல்லாதவனென்றும் அறிதற்கருமையான வேதாந்தங்களும் ஒரு தலையாகத் துணிந்து அறிதற் கரிய தன்மையை யுடையவன். 'போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண் ணியன்' (திருவாசகம்) இவ்வடிவினன் இவ்வண்ணத்தனென் றொருவ ராலு மளவிட்டறியவொண்ணாதவன். நித்தியன். வியாபகன். சகலாண்ட சராசரங்களையும் படைக்கப் பிரமனும், காக்கக் கரியமாலும் அழிக்க அந்தி வண்ணனுமாகியும், அவர்களல்லாதவனாகியு மிருப்பவன். தனக்கென ஒரு உருவமும் ஒரு திருநாமமு மில்லாதவனாயினும், தமதடியார் அன்பின் மிகுதியால் எவ்வெவ்விதமாகப் பாவித்து எவ்வெப் பெயரிட்டழைத்தாலும் அவ்வவ் வடிவங்களையும் பெயர்களையுமேற்று அருள் புரியும் அப்பிரமேயன்.
 "ஒருநாம மோருருவம் ஒன்றுமில்லாற் காயிரம் திருநாமம் பாடி நாம் தெள்
 ளேணங் கொட்டாமோ'' என்றார் மணிவாசகர்

.
      "யாருமோர் நிலைமைய னெனவறி வரியவெம் பெருமான்,''
      ''பேருமோ ருருவமு மூள தில்லை யிலதில்லை பிணக்கே.''

 

என்றார் நம்மாழ்வாரும். வாக்குமன மெட்டாவான் பொருளன். 'எத்திக் குந்தானாகி எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்குமவ்வுயிராய் அங்கங் கிருக்கு' மகண்ட பரிபூரணன். இத்தகைய கடவுளைக் கண்டமாய் ஓரள வுக்குட்படுத்தி யொருவராலு மறிய வியலாது. எவர்கண்டனமெனக் கழறு கின்றனரோ அவர் உண்மையிற் கண்டவர்களே யன்று,' மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்.' (திருவாய்மொழி) என்றபடி, அகமுக விந்திரியங்களா லறியப்படாதவனாகலின், உருவநிலையிற் கண்டவர்கள் நிஜஸ்வரூபத்தை யறியாதவர்களே. பூதசரீரத்தோடு கூடிய அவதார விசேஷங்களெல்லாம் மாயையின் காரியங்களே யன்றி நிஜவடிவமாகா. பகவத் கீதையில் பகவான் பார்த்தனை நோக்கி, " பற்கு! அவதாரம் செய்தது போலத் தோற்றுகின்றதே யென்றால், சுத்த சத்துவரூபியாகிய நம் முடைய சுத்த சங்கற்பமென்னும் மகாமாயை செய்வித்திருக்கின்றதே தவிர, நான் யதார்த்தமாய்ப் பிறக்கவேயில்லை. இதின் யதார்த்தமானது நம்முடைய மாயையைக் கடந்து நம்மைத் தரிசித்துள்ள மகான்களுக்கு மட்டுந் தெரியுமேயன்றி மற்றையோர்க்குத் தெரியத்தக்க தல்ல" என உபதேசித் திருக்கின்றனர்.

 

ஞானதேவர் பகவானைப் பிரத்யக்ஷமாகக் கண்டு அன்னமுண்பித்தவராயும் உண்பிக்கப்பட்டவராயு மிருந்தும்,'வேகாதசட்டி'யெனக் கபீ ரால் தள்ளப்பட்டார். பாண்டவர்கள் ஸ்ரீ கண்ணபிரானோடு அளவளா விக்கலந் துறவாடினவர்களா யிருந்தும், அப்பெருமானது யதார்த்த ஸ்வ ரூபத்தைக் கண்டார்களில்லை. சகதேவனைப் பார்த்து, வாசுதேவன்'என்னைப் பிடித்துக்கட்டினால் பாரதயுத்தம் நடைபெறாமலிருக்கு மென்றனையே. என்னை யெங்ஙனங் கட்டுவை?' யென்ற போது, "மாதவா! 'உன்னை நீ தானுமுணராதாய்! உன் வடிவந்தன்னை நீ காட்டத் தளைந் திடுவேன்' யானென்றான். உடனே பதினாறாயிரம் வடிவங்கொண்டான் பக்தபராதீனன். அப்போது ஞானபண்டிதனாகிய சகாதேவன் இவ் வுருவங்களெல்லாம் அவனுருவங்களல்ல வென்றறிந்தவனாகலின், 'மூல மாந்தோற்றமுணர்ந்து, எவ்வுலகும் தாய அடியிணைகளைத் தன் கருத்தினாற் பிணித்தான்.' மனமற்ற நிலையிற்றோன்றுவோ னாகலின் கண்டேனெனக் கூற வியலாது.

 

ஞானாகாரத்தினொடு ஞேய மற்ற

ஞா துருவும் நழுவாமல் நழுவி நிற்கும்

ஆனாலு மீதன்பெருமை எவர்க்கார் சொல்வார்

அதுவானா லதுவாவ ரதுவே சொல்லும். "

 

தாயுமானார் உரையின்படி, காண்பான் காட்சி காட்சிப் பொருளாகிய ஞா துரு ஞானம் ஞேயமென்னும் திரிபுடியற்ற நிலையிலே நின்று நோக்கா நோக்கால் நோக்கப்படுவன். தன்னை யிழந்த நிலையிற் றோன்றுவதை எதனாற் கண்டதாகக் கூறுவது? ஆகையால் தெரிசித்த மகான்கள் காண வில்லையெனக் கூறுவார்கள். கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்'என்பது ஆன்றோர் மொழி.


 உணர்ந் துணர்ந் திழிந்தகன் றுயர்ந் துருவியந்த விந்நிலைமை
 உணர்ந் துணர்ந் துணரினு மிறைநிலை யுணர்வறி துயிர்காள்!

 

எனத் திருவாய்மலர்ந்தருளினார் சடகோபர்.

 

ஆகலின் பிரமநிஷ்டராகிய சற்குருவை யடைந்து ஞானோபதேசம் பெற்று, ஆசையை யொழித்து, அகப்பற்று புறப்பற்றுக்களாகிற அகங் கார மமகாரங்களை யறவே யகற்றி, மனத்தை யொருமுகப்படுத்தி அவனடியில் லயிக்கச்செய்து, மனமற்ற பரிசுத்த நிலையைப் பெற்றாரே அப் பராபரனைத் தெரிசிக்கப் பெறுவார்களென்பது இச்செய்யுளால் இனிது விளங்குகின்றது.


 (36)   உள்ள போ தினிதுண் டிலாதபோ தவரோ டுறவுவிட்
            டுறு மிடந் தேடும்
      ஒள்ளிய ரல்லா ருறவுபோல் நெடுநாள்
            உயர் தரு மலர்மது வுண்டு

      மெள்ளவம் மரம்பூ மாறிட விட்டு
            வேறொரு பூமரந் தேடி
      கள்ள விழ் கோதை கமழ்குழ லணங்கே
            களிவண்டு போவன காணாய்.  
                  (சீதை வனம் புகு - 18)

 

வசந்தகாலத்தி லொருநாள் மாலைப் போதில் பிராட்டியாரோடும் பூம் பொழிலடைந்த இராமபிரான் அந்நந்தவனத்தி னெழிலை ஜானகியாருக்கு வருணித்துக் கூறியதை யுணர்த்துஞ் செய்யுட்களி லொன்றாகிய இதன் பொருள்: - தேனைச்சொரியும் மலர்மாலை மணம் வீசிக்கொண்டிருக்கின்ற கூந்தலையுடைய நாயகீ! களிப்பையுடைய வண்டுகள்,'ஒருவனிடத்து செல்வமிருந்தபொழுது உறவு கொண்டாடி யுண்டுகொண் டிருந்து கை வறண்டகாலத்தில் அவருறவை விட்டு வேறிடந்தேடிச் செல்லும் நற்குண மில்லா மனிதரைப்போல்', அநேககாலமாய் உயர்ந்த விருக்ஷத்திலுள்ள தேனையுண்டு, பூப்பொழிந்த காலத்து அதை விட்டு வேறொரு பூமரந் தேடிச் செல்லுந் தன்மையைப் பார் " எனக் காட்டினர் என்பதாம்.

 

''காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்தின் மேலாடு மீனிற் பல ராவர்.'' " கரவாதளிப்பரே லுற்றா ருலகத்தவர்" என்றபடி, ஒருவன் செல்வந்தனாயிருக்குங் காலத்து பந்துக்களல்லாதாரும், என் அண்ணன் மனைவிக்கு அக்காள் புருஷன் தம்பிக்கு, இவருடைய சிறியதாயார் மகளின் மூத்தாருக்கு மச்சான் பெண்ணைக் கொடுத்திருக்கிறது' என்று ஏதோ சம்பந்தங் காட்டி இச்சகம் பேசி விலாப்புடைக்கத் தின்பதும், அவனே பின்பு ஏழையாய்விட்டால், அவன் எங்கோ தூரஉறவு' என்று நீங்கிப்போதலும், தன்னலமிகுந்த தரித்திரங்களின் செயல்களாம். இவர்களை நாய்களினுங் கடையான நன்றிகெட்ட பேய்களென்று சொல்வதும் இழிவாகாது. இவர்கள் உண்மையான உறவினராகார். அவர்கள் இன்பமுற்றிருந்த போது தாமுமின்பந் துய்த்தது போல, துன்பக்காலத்திலும் அவரோ டொக்க விருந்து அத்துன்பத்திலும் பங்குடையவர்களா யிருப்போரே உண்மையான உறவினராவரென்னும் நீதியைக் கொண்டது இச்செய்யுள். இது,


      அற்ற குளத்தி னறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வா ருறவல்லர் – அக்குளத்தில்

கொட்டியு மாம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி யுறுவா ருறவு.

 

‘உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர்'                      என்னும்
 

நீதிப்பாக்களையும் நினைப்பூட்டுகின்றது.

 

(37)    இன்பத்தி லிருமாந்து தோணோக்கி யீன்ற மத
      துன்பத்தி லழுந்துவார் தொல்லுலகி லறியாதார்
      இன்பதுன் பங்களே யெய்தியபோ திவை யெல்லாம்
      முன்பற்று விடாதவினைப் பயனென்பார் முழுதுணர்ந்தோர்.
  (சீதை வனம்புகு. 72.)

 

இச்செய்யுள், இளையபெருமாள் பிராட்டியாரை யரண்யத்தில் விட்டு வரவழைத்தேகு நெறியின்கண், அன்னையார்க்கு மனோதிட முண்டாமாறு உன்னற்கரிய இன்னல் பல மன்னிய ஞான்றும் தன்னிலை திரியா மன்ன வர் சரிதையை நன்னயமுடனே நவின்ற சந்தியிலுள்ளது.


(இ -ள்.)'' அம்மா! இம்மாநிலத்து கல்வி யறிவில்லாச் சிறியோர் இன்பமுற்ற காலத்திறுமாப்புக்கொண்டு தோள்கள் பூரிக்கக் களிப்படைந்து, துன்பம் நேர்ந்துழி துக்க சாகரத்தழுந்தி வருந்துவார்கள். முற்றுமுணர்ந்த பெரியோர், இன்பமேனும் துன்பமேனும் தம்மை யடைந்தக்கால் இவைகளெல்லாம் பழவினையின் பயனெனக் கருதி, இன்பத்தி லின்பமடையாமலும் துன்பத்திற் றுன்பமடையாமலும் சமமாக்கருதியிருப்பார்'' (எ - று.)

 

இன்பமும் துன்பமும் ஓரிடத்தும் நிலைபெற்றிருப்பனவல்ல. சகடக் கால்போல மாறிமாறி வரு மியல்புடையவை. 'யாரே கடைபோகச் செல்வ முய்த்தார்?'' அளந்தன போக மவரவராற்றால்'. இன்பமென்பது துன்பக் கடலினிடையிலுள்ளது. சேற்றின் நடுவிற் றோன்றுஞ் செங்கமலம். விடவா யராவினுச்சியி னொளிரும் உச்சிதமணி, எளிதி னெய்தப் பெறுவ தொன்றன்று. இன்ப மிறை யளவிற்றாயின் துன்பந் தொடுகட லொக்கும். ஊன்றியோசிக்கு மிடத்து ஊனேறுடலுயிர் வாழ்க்கையே உறுகணிற் குறையுள் (துன்பத்திற்கிருப்பிடம்). ஆகவே, இன்பமெய்தியக்கால் உள்ள முவந்தும், இடுக்கண் வந்துற்றபோது இருந்தேங்கியு மிருப்போமாயின் நமது வாழ்க்கை துக்க வாழ்ககையாகவே முடிவுறும். நிற்க,

 

துன்பத்தினிமித்தம் சோகிப்பதாலுண்டாம் பயன் யாது? சிறி தளவையேனும் குறைவுபடுத்தவோ 'உறற்பால நீக்கலுறுவர்க்கு மாகா! அணை கடந்த வெள்ளம் அழுதாலும் திரும்பாதே. அழுவதால் துன்பமதிகரிக்குமேயன்றி அணு வேனுங் குறையாது. 'வருந்தி யழைத்தாலும் வாராத வாரா; பொருந்துவனபோமி னென்றால் போகா'.

 

"சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா

உறுகாலத் தூற்றாகா வாமிடத்தே - யாகும்

சிறுகாலைப் பட்ட பொறியு மதனால்

இறுகாலத் தென்னை பரிவு.''                 (சமணமுனிவர்.)

 

நாமியற்றிய நல்வினைப்பயனாகிய இன்பத்தைக் களிப்புடனேற்றுக் கொள்வதேபோல், தீவினைப்பயனாகிய துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் முறுமுறுப்ப தென்னை? இக்கருத்தை நாயனாரும்,

 

"நன்றாங்கால் நல்லவாக் காண்பவ ரன்றாங்கால்

அல்லற் படுவ தெவன்?"        என்னும் குறளால் விளக்குகின்றார்.

 

ஆகையால், "நாம் இன்பவாழ்க்கையை - துக்கமற்ற வாழ்க்கையை யுடையோரா யிருக்க விரும்பினால், பிராரப்தத்தால் வரும் இன்பதுன்பங்களைச் சமமாய்க்கருதி, நடுநிலைமையிலிருந்து, இவைகளெல்லாம் நமக்கல்ல வெனக்கருதி - இன்பத்தில் மகிழாமலும் துன்பத்தில் துயருறாமலு மிருத்தல் வேண்டும் " என்னும் நீதியை இசசெய்யுளால் அறிய வேண்டியவர்க ளாகின்றோம்.

 

"வாழ்வது வந்தபோது மனந்தனில் மகிழ வேண்டாம்
      தாழ்வது வந்ததானால் தளர்வரோ தக்கோர்''
      *      *      *      *      *      "

ஞானிக்கில்லை யின்பமுந் துன்பமும்''

38.    மூங்கிலிற் பிறந்த முழங்குதீ மூங்கில் முதலற முருக்குமாப்போலத்
      தாங்கருஞ் சினத்தீ தன்னுளே பிறந்து தன்னுறு கிளையெலாஞ் சயிக்கும்
      ஆங்கதன் தன்மை யறிந்தவர் கமையாலதனை யுள்ளடக்கவு மடங்கா

தோங்கிய கோபத் தீயினை யொக்கு முட்பகை யுலகில்வே றுண்டோ
                                                            (இலவணன் வதை. 29)

 

இப்பா, எப்பாருமேத்தும் ஒப்பாரிலாத அப்பிரமேயனாகிய காகுத்தன் இலக்குவனுக்கு இராசநீதி யியம்பிய வவசரத்துள்ளது.

 

(இ -ள்.) "தம்பி! மூங்கிலில் பிறக்கும் அக்கினியானது, அம்மூங்கிலை வம்சத்துட னெரித்தழித்து விடுவது போல, மனிதனிடந் தோற்றும் அடக்கமுடியாத கோபமாகிய நெருப்பும் அவனைக் கிளையோடு நாசமாக்கும். அதன் தன்மையை யறிந்தவர்கள் பொறுமையாலடக்கினாலும் அடங்காமல் மூண்டெழும் கோபாக்கினியைப் போன்ற கொடிய பகை உலகத்தில் வேறொன் றுண்டோ? " எனக்கூறினார். கோபம், குரோதம், சினம், சீற்றம், வெகுளி முதலியன ஒரு பொருட் சொற்கள்.

 

பகை, அகப்பகை புறப்பகை யென விருவகைத்து. அகப்பகை, நமக்குள்ளிருக்கும் பகை. அவை, காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மார்ச்சரியம் எனவாறு. அன்னியமாக விருப்பது புறப்பகை. இவற்றுட் பின்னதின் முன்னதே இன்னாதது. அறிபகையினின்றுந் தப்பலாம்; அறியாப்பகையினின்றுந் தப்புதலரிதரிது. ஆகலின், அகப்பகை விஷயமாக நாம் மிக்க எச்சரிக்கையோடிருத்த லத்தியாவசியம். கோபத்தையடக்க வேண்டும். கோபத்தை யடக்குதலே சற்குணம். அதுவே தவம்.


      ''உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினங்காத்துக்
      கொள்ளுங் குணமே குணமென்க - வெள்ளம்
      தடுத்த லரிதோ தடங்கரைதான் பேர்த்து
      விடுத்த லரிதோ விளம்பு "


      ''எள்ளிப் பிறருரைக்கு மின்னாச்சொல் தன்னெஞ்சில்
      கொள்ளி வைத்தாற் போலக் கொடிதெனினும் - மெள்ள
      அறிவென்னும் நீரா லவித்தொழுக லாற்றின்
      பிறிதெனினும் வேண்டாம் தவம்.''

 

'கோபமே பாபங்களுக்கெல்லாம் தாய்தந்தை','கோபத்தாலழிந்த வர் கோடி கோடியே'. ஆகையால் ஆறுவது சினம்'. புறப்பகையாலழிந்த வரினும் அகப்பகையால் மாண்டவரநேகம். காரியசித்திக்குச் சத்துரு சினமே. வெகுளாமை சுவராஜ்யசித்திக்கு மார்க்கம். 'வெல்வது வேண்டின் வெகுளிவிடல்'. கோபம் பைத்தியம் போன்ற வோர்நோய். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கொள்ளிவாய்ப் பேய். நல்லறிவைக் கெடுக்கும் நன்றி கெட்ட நாய். கோபகாலத்தில் கண்ணும் முகமும் சிவப்பது எதனால்? இரத்தம் குபீரெனப் பொங்குவதால், உடல் விடவிடத்தலும், உதடு துடிதுடித்தலும், நாப்படபடத்தலும் உண்டாவது இரத்தம் இரத்தக்குழாய்களில் அளவுக்கதிகமாய்ப் பாய்வதனாலேயே. இது சற்று மித மிஞ்சின் அக்குழாய்கள் வெடித்துப் பிராணப்பிரயாணமுண்டாதல் திண்ணம். சினந்தணிந்த பின் சரீரநிலையை, உடலின் இளைப்பை, நரம்புத் தளர்ச்சியை, உற்று நோக்குவோர்க்கு உண்மை புலனாம். கோபம் சண்டாளம். சீற்றம் கூற்றினும் கொடிது.


 ''தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்கால்
 தன்னையே கொல்லும் சினம்.''

 

"சினத்திற் பகையு முளவோ பிற.''                  (குறள்.)

 

இக்காரணத்தாலேயே, பொய்யாமொழியார் இக்கொடிய கோபத்திற்குச் சேர்ந்தாரைக் கொல்லி' யெனப் பெயரிட்டனர்.

 

அக்கோபத்தீயை அறிவென்னும் நீரினால் அவித்துத் தலையெடுக்க விடாதிருப்பின்,


 ''உள்ளிய வெல்லா முடனெய்தும் உள்ளத்தால்
 உள்ளான் வெகுளி யெனின்.''


என்ற தமிழ் மறையின்படி கோபத்தை விடின், இம்மை, மறுமை, வீடு முதலான நினைத்த காரியங்களியாவும் கைகூடப்பெறும். இன்றேல் தரையிலறைந்த கை தப்பாமற் படுதல் போல இம்மை மறுமைச் சுகங்களையிழந்து மீளா நரகிற்காளாக வேண்டி வரும்.

 

ஆகலின், கோபத்தை யொழித்துச் சாந்தத்தை - பொறுமையை - மனோவடக்கத்தை -பூஷணமாக்கொண்டு ஒழுகுவோமாயின் ஆண்டவனருளுக்குப் பாத்திரராகி, அந்தமிலின்பத் தழிவில் வீட்டை யெய்தப் பெறுவோ மென்பது பெறப்படுகின்றது.

 

ஓம்சாந்தி: ஓம்சாந்தி: ஓம் சாந்தி:

 

கம்பராமாயண நீதிச்செய்யுள் முற்றுப் பெற்றது.

 

தமிழுலகம் பிழை பொறுக்க.

 

பூ. ஸ்ரீநிவாசன்,

தமிழ்ப்ப ண்டிதர், இராணிப்பேட்டை.

 

ஆனந்த போதினி – 1923, 1924 ௵

ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், ஜனவரி, பிப்ரவரி,

 

 

 

 

No comments:

Post a Comment