Saturday, August 29, 2020

கம்பர் கண்ட உலாவியில்

 

உலா என்பது, பெருங் காப்பியங்களினிடையே, காப்பியத் தலைவனான கதாநாயகன், தேரூர்ந்தோ, அன்றி யானை மீதேறியோ வீதியில் பவனி வருகின்ற சிறப்பையும் அழகையும் உரைப்பதாகும். கதாநாயகன், வீதியில் உலாப் போகின்ற பெருமையையும், அதனைக் கண்ட மாதரும் பிறரும் அவனைக் கொண்டாடும் விதத்தையும், புனைந்து பாடுதல் கவிமாபாகும். நாட்டின் நீர்வளம், நிலவளம், திணை வருணனை, திணை மயக்கம் முதலியன எவ்வாறு காவிய இலக்கணங்களாக அமைகின்றனவோ, அதேபோல, உலாவியல் வர்ணனையும் காவிய இலக்கணத்தின் ஒரு கூறாகும். பெருங்காப்பியங்களினிடையே, உலாவியல் வர்ணனையைப் பற்றி வரும் பாடல்கள் பல இருக்கும். சங்க காலத்துப் பஞ்ச காவியங்களில் சிறந்ததாகக் கருதப்படும். சீவக சிந்தாமணியில், சீவகன் உலாப்போந்த தன்மையை, திருத்தக்கதேவர், இலக்கணையார் இலம்பகத்தால், அழகொழுக எழுதி யமைத்திருக்கின்றார். கச்சியப்பரியற்றிய கந்த புராணத்தில், முருகன் உலாப்போந்த முறையை வர்ணிக்கும் செய்யுள்கள் பலவுள். கவியரசர் கம்பர் பெருமானோ, இராமன் மிதிலைமா நகரில் உலாவந்த பெருமையையும் அப்போழ்து நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் ஓர் தனிப் படலமாகவே பாடிவிட்டார். இன்னும் தமிழ்க் கவி உலகில், உலா என்பது ஒரு தனிப் பிரபந்தமாகவே வழங்கி வருகின்றது. விக்கிரம சோழனுலா, இராஜராஜனுலா என்னும் பிரபந்தங்கள் உலா வியலின் பெருமையை இனிது விளக்கும். உலாவப்போகும் ஒரு பெருமகனைக் காணுமாறு, மாதரெல்லாம் வீதியில் விரைந்து வந்து அடைதலும், வந்தமாதர், அவளழகில் ஈடுபட்டு, உள்ளம் குழைதலும், மற்றும் அம்மாதர் அவன் மேல் மையல் கொண்டு, காமப் பரவசராகி அவனைத் தொடர்ந்து ஏகுவதும், ஏகி அவனை வியந்து புகழ்வதும், இன்னு. இவைபோல்வன பிறவும் உலா என்னும் காவிய அங்கத்தின் இலக்கணமாகும்.

 

கம்பர் கண்ட உலாவியலின் தன்மையை ஆராயுமுன் புகழேந்தி எழுதிய நளவெண்பா போன்ற சிறு காப்பியங்களிடையிலும், காணுகின்ற உலாவியலின் தன்மையைப் பற்றி, ஒன்றிரண்டு சொற்கள் கூறுவது மிகையாகாது. நிடதர் கோமானாகிய நளன், தன் அரண்மணையைவிட்டுப் பூங்காவிற்குச் சென்றதை,


“வாங்கு வளைக்கையார் வதனமதி பூத்தட
பூங்குவளைக் காட்டிடையே போயினான்.''

 

என்று புகழேந்தியார் கூறுவதால், மாதரார் கண்களுக்கெல்லாம் நளன் இலக்காகி நின்றான் என்பது பெறப்படுகின்றது. மற்றும்,

 

"தேரின்றுகளைத் திருந்திழையார் பூங்குழலின்

வேரிப் புனல் நனைப்பவே யடைந்தான்."


என்று கவிஞர் கூறும் முறையில், அம்மாதர் நளனைத் தொடந்து மொய்த்தனர் என்பதும் அவ்வாறு அவர்கள் மொய்த்த காலையில், அவர்கள் தலையில் அணிந்திருந்த பூக்களினின்றும் சொட்டிய தேன் துளிகள் நளன் ஏறிச் சென்ற தேரின் வேகத்தால் எழுந்த புழுதிக் கூட்டத்தைத் தண்ணீர் தெளித்து அடக்கியது போல அடக்கியது என்பதும், அழகாக அமைந்துள்ளன. ஆகவே, தெருவூடே, தேரூர்ந்து சென்ற தலைமகனான நளனைக் காணுமாறு, மாதர்கள் கூடிக்கூடி நின்றதையும் அவனழகில் ஈடுபட்ட மாதர் அவன் மேல் தீராத மையல் கொண்டு அவனைத் தொடர்ந்து ஏகியதையும் கூறுமுகத்தான், புகழேந்தியார், இவ்வலாவியலின் தன்மையை ஒரு சிறிது நமக்குக் காட்டுகின்றார். இனி நாம், காப்பியங்களிலெல்லாம் சிறந்த காப்பியமாகக் கருதப்படும் கம்பரது இராம காதையில் உலாவியல் எம்முறையில் அமைந்துள்ளது என்று பார்ப்போம்.

 

மிதிலையில், முனிவர் முன் செலத் தம்பி பின்வரச் சென்ற இராமன், கன்னிமாடத்து மேடைமீது நின்ற சீதையைக் கண்டு காதலித்ததும், பின்னர் ஜனகனது பேரவையில், அளவிடற்கரியதோர் ஆற்றல்வாய்ந்த அரனது வில்லை யொடித்ததும், அதற்குப் பரிசமாகச் சீதையைப் பெற்றதும், கம்பர் கவிதை உணர்ந்த யாவரும் அறிவர். இவ்விராமன், தன் தம்பியர் புடைசூழ, சங்கமும், முரசமும் ஒலிக்க எழுந்து, "எழுதருந் தகையதோர் தேரின்மேலேறி" மிதிலை நகரின் வீதி வழியே உலாப் புறப்படுகின்றான். செம்பஞ்சூட்டிய மெல்லிய பாதங்களையுடைய பெண்கள் கூட்டங் கூட்டமாய்வந்து, மஞ்சுதோய உயர்ந்த மாளிகையின் மாடங்களில் நிறைந்து நிற்க, அம்மடவார் தம் விடந் தோய்ந்த விழிகள், இராமனையே நோக்க, மதில்கள் சூழ்ந்த மிதிலா நகரத்தின் பெருந் தெருவைச் சென்றடைந்தான் என்பதைக் கவிஞர்,


"பஞ்சிசூழ் மெல்லடிப் பாவைமார் பண்ணை சூழ்
மஞ்சி சூழ் நெடிய மாளிகையின் வந்திடைவிராய்
நஞ்சிசூழ் விளிகள் பூமழையின் மேல்விழ நடந்து
இஞ்சிசூழ் மிதிலை மாவீதி சென்றெய்தினான்."


எனறு அழகாக எடுத்துரைக்கின்றார். இம்மாதர்கள், கையிலணிந்துள்ளவளைகள் கழலவும், கூந்தல் சரிந்து தொங்கவும், பாதங்களில் அணிந்த பாதசரங்கள் பரத நூல் விதியை யொட்டி ஒலிக்கவும், விரைந்து, இராமன் உலாவருவதைக் காணவந் தெய்துகின்றார்கன். அவர்கள் அவ்வாறு விரைந்து வந்த தன்மையைக் கவியரசர் கம்பர்,


"மானினம் வருவபோன்றும், மயிலினம் திரிவபோன்றும்
மீனினம் மிளிர்வபோன்றும், மின்னினம் மிடைவபோன்றும்
தேனினம் சிலம்பியார்ப்பச் சிலம்பினம் புலம்ப, எங்கும்
பூானை கூந்தல் மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார்."

எனக் கூறுகின்றார்.

 

கண்ணால் மானினத்தையும், சாயலால் மயிலினத்தையும், அணிகலனால் மீனினத்தையும், இடையால் மின்னினத்தையும் ஒப்பர் மாதர் என்னும் விதிபற்றி, இம்மாதர் விரைந்துவந்த தோற்றத்தை, மானினத்தோடும் மயிலினத்தோடும், மீனினத்தோடும், மின்னினத்தோடும் இணைத்துக் கூறுவராயினர். "அடியினைச் சிலம்பு பூண்டாற்றும்'' என்று கூறிய கம்பரே, இங்கும், "சிலம் பினம் புலம்ப" என்று கூறினாலும் அவை ஏதற்காகப் புலம்புகின்றன என்று கூறினாரில்லை. இக்குறையை நிறைசெய்ய முன்வருவார் போன்று புகழேந்தியார் "மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேறமாட்டாது" என்று சிலம்புகள் கதறிய சொற்களை விரித்துரைக்கின்றார். மற்றும், பொம்மென புகுந்து மொய்த்தார் என்று கூறும் முறையில் மாதர்கள் விரைந்து வந்த தன்மை அழகாகக் காட்டப்பெறுகின்றோம். பொம்மெனப் புகுதலும், கம்மெனக்கமழ்தலும் ஓசை நயத்தால் கவிஞர் கருத்தை நமக்குத் தெள்ளிதில் விளக்கும் ஆற்றல் வாய்ந் தவைகளாகும் என்பதில் ஐயமில்லை. இன்னும் இம்மாதர் விரைந்து வந்த தன்மையையே கவிஞர் சித்திரிக்க விரும்பி, அடுத்த செய்யுளை,


“விரிந்து வீழ் கூந் தல்பாரார், மேகலையற்ற நோக்கார்
சரிந்த பூந்துகில்கள் தாங்கார், இடைதடுமாறத் தாழார்
நெருங்கினர் நெருங்கி புக்கு நீங்குமின், நீங்குமின் என்று
அருங்கல மனையமாதர் தேனு காளியின் மொய்த்தார்.''


என அமைத்தருளுகின்றார். இம்மாதர்கள், அவிழ்ந்து வீழ்கின்ற கூந்தலைமதியாமலும், மேகலாபரணங்கள் அற்று வீழ்வதை உற்றுநோக்காமலும், சரிந்து வீழ்கின்ற மெல்லிய ஆடைகளை ஏந்தி நிற்க்காமலும் இடை தடுமாற, இதற்கெல்லாம் அஞ்சித் தாமதியாமல், தள்ளுங்கள் தள்ளுங்கள் என்று ஒருவரை யொருவர் தள்ளிக்கொண்டு நெருங்கிவந்து, தேனை யுண்ணவரும் வண்டுகளைப் போல் இராமனை மொய்த்துக்கொண்டார்கள் என்று கவிஞர் கூறும் முறையில் மாதர் விரைந்துவந்த தோற்றமும், அவர்கள் தலையவிழ்ந்து தொங்க, மேகலைகள் சரிந்து வீழ, ஆடைகள் அரையைவிட்டு நெகிழ நின்ற காட்சியும் நம்முன் விளக்கமாய்க் காட்டப்பெறுகின்றோம்.

 

"கண்ணினால் காதலென்னும் பொருளையே காண்கின்றோம். இப்பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயனின்று பெறுதும்.'' என்று கருதுபவராய், இம்மாதர் சிவந்த மேனியையுடைய அகலிகை கண்டு களித்த தாளையும் இயற்கை மணமமைந்த கூந்தலை யுடைய சீதையைப் பரிசமாகப் பெற வில்லொடித்த வீரக் கையையும், மலைபோன்று உரமுடைய தோள்களையுங் கண்டு கண்ணிமையாது நின்று இராமனது அழகைப்பாடுவாராயினர்.


"வீதிவாய்ச் செல்கின்றான் போல், விழித்திமையாது நின்ற
மாதரார் கண்களுடே வாவுமான் தேரிற் செல்வான்
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணனென்றே
ஓதிய பெயர்க்குத்தானே உறுபொருள் உணர்த்திவிட்டான்.''


இராமன் வீதி வழியே தேரூர்ந்து செல்பவன் போல் காணப்பட்டாலும் இயற்கையில், இமையாது நின்று கண்ட மாதர் தம் கண்களுக்குள்ளே தாவுகின்ற குதிரைகள் கட்டிய தேரில் செல்பவனாயே அமைந்தான். ஆதலின் புலமை மிக்க புலவர் எல்லாம், இவனுக்கிட்ட "கண்ணன்'' என்ற பழம் பெயரைப் புதுக்குவான் போலவும், தான் அப்பெயருக்குப் பொருத்தமாதலை எல்லோருக்கும் உணர்த்துவான் போலவும் அமைந்து விளங்குகின்றான் என்று கவிகூறும் நயம் கண்டு மகிழ்வதற்குரிய தொன்றாகும். இதுவரை மாதரார் கூட்டம் இராமனைக் காண நெருங்கியும், விரைந்தும் வந்ததையும் அம்மாதர் இமையாது நின்று இராமனைக் கண்டதையும் விளக்கிய கம்பர் இனி அக்கூட்டத்தினிடையே ஒன்றிரண்டு பெண்களின் நிலையை மட்டும் தனித்தனி யெடுத்துக் கொண்டு விளக்க முன்வருவாராயினர்.

 

இராமனைக் கண்டு அவனழகில் ஈடுபட்டு நின்ற ஒரு பெண் தன் உயிரொன்றைத் தவிர, தான் தாங்கி நின்ற பொருள்களான, ஆடையையும், கைவளையல்களையும், பழித்தலில்லாத பெண்ணலத்தையும், இயற்கைப் பண்பையும், குற்ற மற்ற அழகையும், தன் எண்ணத்தையும், அறிவையும், தேஜஸையும், வயிரத்தால் செய்த அணிகலன்களையும், நாணத்தையும், மடப்பத்தையும், தன்னிறையையும் இன்னும் தன்னிடத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் தாங்கலாகாது உகுத்து நின்றாள் என்பர் கவியரசர்.


"பயிரொன்று கலையும், சங்கும், பழிப்பரு நலனும், பண்பும்
செயிரின்றி யலர்ந்த பொற்பும், சிந்தையும், உணர்வும், தேசும்
வயிரஞ்செய் பூணும், நாணும், மடனுந் தன்னிறையும் மற்றும்
உயிரொன்று மொழிய எல்லாம் உகுத்தொரு தெரிவை நின்றாள்.


என்று கவியரசர் கவியாற்றுகின்றார். உயிரொன்றைத் தவிர, ஏனைய பொருள்களைத் தாங்க வலியற்றவராய், நின்ற நிலையையும், அவள் தாங்கலாற்றாத பொருள்களின் தொகையையும் எடுத்துரைக்கும் முறையை உற்று நோக்கினால் கம்பர் தங்கவி நலம் கைவரப் பெற்றவராவோம். இன்னும் மற்றொரு பெண், அகத்தே நிகழும் உணர்ச்சியை, இத்தகைய தெனப் புலப்படுமாறு கூற இயலாத தன்மை வாய்ந்ததும், இந்நிலமக்கள் அடையும் இன்பங்களிலெல்லாம் தலை சிறந்த துமான, சொன்னலங் கடந்த காமச் சுவையையே, ஓர் உருவமாக்கி, இன்ப நயங்களை யெல்லாம் அறியவல்ல ஓவியக் கலைஞர் என எழுதிய ஓர் ஓவியம் போல நின்றாள். அம்மங்கையோ, இலக்குமியை யொத்த அழகுடையாள் எனினும், இராமனைக் கண்டு அவன் அழகெனுந் தேறலை அமிதமாயுண்டு நின்ற நிலையில் தான் புனைந்துள்ள அணிகளெல்லாம் தன்னைவிட்டுக் கழன்று வீழத் தன்னையுந் தாங்கலாதாள் துகிலொன்றுந் தாங்கி நின்றாள் என்று உரைக்கின்றார் கவியாசர்.


“சொன்னலங் கடந்த காமச் சுவையையோர் உருவமாக்கி
இன்னலந் தெரியவல்லார் எழுதியது என்ன நின்றாள்
பொன்னையும் பொருவு நீராள், புனைந்தனவெல்லாம் போகத்
தன்னையும் தாங்கலாதாள் துகிலொன்றுந் தாங்கி நின்றாள்.''


என்று கவிஞர் அருளிய முறையில், ஓவியத் தெழுதிய ஓர் பொற்பாவை போன்று நின்ற அம்மங்கையின் நிலையையும், இராமன்மேலுற்ற காதலால் தன்னுடல் மெலிந்து நலிய, அதனால் தானணிந்த பணிகளெல்லாம் கழன்று வீழத் தன்னையுந் தாங்க இயலாத தன்மை வாய்ந்த மெல்லிய துணி யொன்று மாட்டுந் தாங்கியவளாய் நின்ற நிலையைச் சித்தரித்துக் காட்டுந் திறம், கம்பர் பேரோவியக்காரர்கட்கு மட்டுமே இயலுமன்றி மற்றையோர்க்கு இயலாத காரியமேயாகும். இன்னும் மற்றொரு பெண், தான் இராமனது அழகிலேயே ஈடுபட்டு, அக்கூட்டத்தில் அவனையன்றி வேறெவரையுங் காணாதவளாகி, இந்த உலாவில், இராமன் தனியே வருகின்றானோ என்று வினவுகின்றாள். இவள் இராமனைத் தவிர வேறொன்றும் காணதவளாகித் "தமியனோவள்ளல்" என்று கூறும் உரைகள் அவள் இராமன் பால் வைத்த இமையாத கண்ணோக்கத்தையும், அழியாத அன்பையும் தெள்ளிதில் விளக்குகின்றது. மற்றொரு பெண்ணோ,


"தாக்கணங்கனையமேனி தைத்தவேள் சரங்கள் பாராள்
வீக்கிய கலனுந் தூசுரம் வேறு வேறான தோராள்.''


என்ற நிலையில் தான் அமைந்திருந்தாள்.

 

இவ்வாறு பல பெண்கள் இராமனது பேரழகில் ஈடுபட்டுத் தத்தம் உணர்விழந்து நிற்க, மற்றொரு பெண்ணோ தன் தோழியை நோக்கி, தோழீ! நம் முன்னே செல்லும், இராமனென்னும் வஞ்சகன், என் நெஞ்சிடை வந்து புகுந்துவிட்டான். அவன் என்னை விட்டு ஓடிப்போகாத வண்ணம், கண்களென்கின்ற வழியைச் சிக்கென அடைத்துக் கொண்டேன். இவ்வாறு அவனைச் சிறைசெய்த வண்ணமே, நாம் சென்று நம் அமளியைச் சேர்வோம் என்று கூறி விரைந்து சென்றதாகக் கவிஞர் கவியாற்றுகின்றார்.


"மைக்கருங் கூந்தற் செவ்வாய் வாணுதல் ஒருத்தியுள்ளம்
நெக்கனள் உருகுகின்றாள், நெஞ்சிடை வஞ்சன் வந்து
புக்கனன் போகாவண்ணம் கண்ணெனும் புலங்கொள்வாயும்
சிக்கென அடைத்தேன் தோழீ! சேருதும் அமளியென்றாள்.''


என்பது கவிஞர் அருளிய கனிந்த செய்யுளாகும். இராமனுடன் கண்ணோடு கண் இணை கவ்வி யொன்றை யொன்று உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட “நின்ற சீதை தன் பெண்ணலனையும், தன்னுடன் பிறந்த நாணையும், தன் எண்ணத்தின் வழியியங்கும் உணர்வையுமிழந்து, இப்பொருள்களைக் கவர்ந்து சென்றவன் தன் கண்வழி நுழைந்த கள்வனான இராமனே யாகல் வேண்டும் என்று கருதுகின்றாள். கண்வழி நுழைந்து தன் பெண்ணலன், நாண், நிறையென்னும் பொருள் கவர்ந்து சென்ற கள்வன் என்று இராமனைச் சீதை கருத, இங்கு இம்மங்கை, தன் கண்வழி நுழைந்த வஞ்ச நெஞ்சினனாகிய இராமனை, வெளியே செல்லவொட்டாது தன் கண்ணைப் பொத்தி தன்னிதயமாம் சிறையில் நிறுத்திய பெருமையைத் தன்னதாக்க நினைக்கின்றாள். இருவரில் யாரோ ஏற்ற முடையார்?

 

இவ்வாறு இராமனைத் தொடர்ந்து சென்று கண்டு களித்த மங்கையர் நெருங்கிய அவ்வீதியோ, மன்மதன் எய்த மலர் அம்புகளில் மாதர்களுடைய நெஞ்சில் தைத்துக் கழன்றவையும், அம்மாதர்தம் மேனியி லெழுந்த வெந்தீயால் கரிந்த ஆபரணங்களும், அம்மாதர்கள் கொங்கைகள் வெயர்த்த காலத்தில் அவ்வேர்வை நீரால் அழிந்து வழிந்த சந்தனமும், சரிந்த மேகலைகளும், முத்து வடங்களும் சங்க வளையல்களும், நீண்ட கூந்தல் அவிழ்ந்து வீழ்தலால்லைகளும், நிறைந்து கிடந்ததேயன்றி அவ்வீதியில் வெற்றிடம் கிடைப்பது அரியதாயிருந்தது.


"வரிந்தவாள் அனங்கள்வாளி மனங்கழன்றனவு, மாதர்
எரிந்த பூணினமும், கொங்கை வெயர்த்த போதிழிந்த சாந்தும்
சரிந்த மேகலையும், முத்தும், சங்கமும், தாழ்ந்த கூந்தல்
விரிந்தபூந் தொடையுமன்றி வெள்ளிடை யரிதவ்வீதி.


என்பது கவிஞர் கூற்று. இவ்வாறு, நிறையிழந்தும், நிலையிழந்தும் நின்ற மாதர், இராமனைக் கண்டதைப்பற்றி ஒரேயொரு செய்யுள் கூறி நிறுத்துதும்.


"தோள் கண்டார் தோளே கண்டார், தொடுகழற் கமலமன்ன
தாள் கண்டார் தாளே கண்டார், தடக்கை கண்டாரு மஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்தன்னான் உருவு கண்டாரை யொத்தார்.''


என்பது அச்செய்யுளாகும். இராமனது தோளழகைக் கண்டவர் அத்தோளழகொன்றையுமே கண்டார்கள் வீரக்கழல் அணிந்த தாமரை மலரை யொத்த பாதங்களின் அழகைக் கண்டவர்கள் அவ்வழ கொன்றையுமே கண்டார்கள்; பெருமை பொருந்திய திருக்கரங்களின் அழகைக் கண்டவர்கள், அவ்வழகொன்றையுமே கண்டார்கள் என்றால் அம்மாதரில் யாரே, இராமனது எழுதரிய திருமேனியின் அழகு முழுவதையும் கண்டவர்கள்! ஒருவருமில்லை என்பதே தேற்றம் ஒன்றற்கொன்று மாறுபட்ட சமய நூல்களைக் கொண்டு,
இறைவனது திருவுருவைக் காணும் சமயவாதிகளே போல் ஒவ்வொருவரும் இராமனது திரு மேனியின் ஒவ்வொரு அவயவங்களைப் பார்த்து அதன தன் பேரழகிலேயே ஆழ்ந்து கிடந்தனர். இராமனது வரைத்தேடந் தோள்களின் அழகைக் கண்ட மாதர் அவ்வழகில் ஈடுபடாது நிற்பதும் இயலுமோ?

 

இராமனது தோளழகைக் கண்ட பெண்கள் மட்டுமே யல்ல, ஆடவருங்கூட பெண்ணாய்ப் பிறந்து, இராமனது தோள்களைத் தழுவும் பாக்கியம் பெற ஓங்கி நின்றனன் என்று கூறு முகத்தான் "ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்'' என்று இராமனைக் கம்பர் அழைக்கின்றார். இராமனது சந்தார் தடந்தோள்களின் அழகை மாந்தி மாந்திக் களிப்புற்ற கவியரசர் "தோள்கண்டார் தோளே கண்டார்" என்று கூறுதல் வியப்பன்று.

 

இத்தகைய மாதர் கூட்டத்திலுள்ள ஒருத்தி, இராமனது வடிவழகைக் கண்ணாரக் காணும் பாக்கியம் பெற்ற கண்களையும், அவன்றன் இனிய மொழிகளைக் கேட்டும் பாக்கியமுடைய செவிகளையும், அவன்றன் அகன்ற மார்பினைத் தழுவும் பேற்றையடைந்த முலைகளையும் அடையச் சீதை எத்தவம் செய்தனளோ என்று ஏங்கி எங்கி நெஞ்சும் புண்ணாய் உலைந்து, அத்தகைய தொரு பேறு தனக்குக் கிட்டாததற்காக வருந்தி நின்றாள். இவ்வாறு மாதர் தம் நெஞ்சு புழுங்கிட அதனால் அவர் உணர்விழந்து வருந்திப் பெருமூச் செறிய இராமன் உலாப் போந்து ஜனகனது மண மண்டபத்தை எய்தினான் என் கவிஞர் இராமன்போந்த உலாவை முடிக்கின்றார். கம்பர் கண்ட உலாவியலைக் காணும் பாக்கியம் பெற்ற நாம், இராமனை யடையச் சீதை செய்த தவத்தினும் சிறந்ததொரு தவம் செய்தவராவோம். தமிழ்நாடு செய்த தவப்பயனால் எழுந்த புலவர்களில் தலைசிறந்த பெரு மகன் கம்பர் என்பதில் ஐயமுண்டோ?

 

ஆனந்த போதினி – 1932 ௵ - நவம்பர் ௴

 

 

No comments:

Post a Comment