Saturday, September 5, 2020

 

புத்தரது அரியபெரிய தத்துவங்கள்

 

(1) துக்கம், (2) துக்கோற்பத்தி, (3) துக்க நிவாரணம், (4) துக்க நிவாரண மார்க்கம்.

 

முதல் தத்துவம்: - துக்கத்தைப் பற்றியது. கிடைத்தற்கரிய செல்வக்களஞ்சியம் என யாவரும் எண்ணும் இவ்வுலக வாழ்வு, தீராத் துன்பங்களும், சஞ்சலங்களும் நிறைந்துள்ள ஓர் துக்க சாகரமே யாகும். இத்தகைய நீர்க்கோல வாழ்வில் வருத்தமும், உபாதிகளுமே மிகுதியானவை. இன்பமாக மதிக்கப்படும் பாகங்கள் யாவும் பறவைகள் வதிந்து பறப்பதைப் போன்றன. அன்னையின் கருப்பத்தினின்றுந் தலை கீழாய்ப் பிறத்தலுந் துன்பமே. குழந்தைப் பருவமும் துன்பமே. வாலிபப் பருவமும் துன்பமே. முதிர்ந்த பருவத்தில் நஞ்சொல்லை எவரும் மதியாராகி கைக்கோலையே கண்ணாகக் கொண்டு இறுதியில் நோய்க்காளராகி இறத்தலுந் துன்பமேயாம். இவைகளே நமது வாணாளை நிரப்புகின்றன.

 

மனைவியிடத்து வைக்கும் அன்புத் தளையானது இனியதே. ஆனால், நாம் அணைத்து முத்தந்தந்த இதழ்கள் எரிதழலை யணைக்க வேண்டிவரும்.

 

போரில் ஆண்மையுடன் போர் புரிதல் வீரத்தனமே. இருப்பினும் முடி மன்னர்களது சதையின் எலும்புகளும், கழுகுகள் கொத்தித் தின்பதற்குரியனவே.

 

இவ்வுலகம் இன்பகரமானது. கானகங்களில் வதிந்து கிடக்கும் ஜந்துக்கள் ஒன்றையொன்று கொன்று தின்று சீவிக்கின்றன. ஆகாயம் முழுவதும் நீலக்கல்லினால் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் அது மனிதர்கள் பசியால் நைந்து வருந்துங் காலது ஓர் துளி ஜலமேனுந் தருவதில்லை.

 

நோயாளிகளையும், புலம்புவோர்களையும், தளர்ச்சியுற்றுத் தனிமையாய் கைக்கோலையே கண்ணாகக் கொண்டுளோர் தம்மையும் "நீர் இவ்வாழ்க்கையை விரும்புகிறீரா'' என்று கேட்பின், "இப்புவியில் ஜனித்தவுடன் அழுந்தன்மை வாய்ந்த சிசு மிகவும் புத்தி கூர்மையுள்ளது'' என்று பதிலளிப்பர்.

 

இரண்டாவது தத்துவம்: - துக்கோற்பத்தி. இந்திரியங்களுக்கு விஷயங்களில் அபிமானத்தோடு கூடிய சம்பந்தமானது சீதோஷ்ண சுகதுக் காதிகளை உண்டு பண்ணுகிறது. ஆகையால் அப்பேர்ப்பட்ட அபிமானத்தோடு கூடிய விஷயேந்திரிய சம்பந்தங்களை அரவே யொழித்தல் அவசியம்.

 

இந்திரியங்களும் விஷயங்களும் அபிமானத்துடன் சம்பந்தப் படுவதால் ஆசை அல்லது காமம் உண்டாகிறது. நிலையற்ற வஸ்துக்களின் மீது நமக்குள்ள பற்றினால் நாம் மதிதளர்கிறோம், - மாயையில் சுழலுதல் இதுவேயாகும். பொய்யான உலகத் தோற்றங்களை மெய்யென்று நம்பி மயங்குகிறோம். இவ்வண்ணம் மயங்குவதால் சண்டை சச்சரவுகளும், காமம், லோபம், குரோதம், அஹங்காரம் முதலிய துர்க்குணங்களும் உண்டாகின்றன.

துவரை விதைத்த இடத்தில் புல் பூண்டுகள் செழிப்பாக முளைக்கின்றன. துவரை விளையாம லழிகிறது. அவ்வண்ணமே புண்ணியத்தைப் பரிந்து ஈடேறுவதற்கு மாறாகப் பாவச் செயல்களே செய்து நாம் நரகமடைகிறோம். கர்மம் மேலிட்டிருப்பதால், அதை யொழிப்பதற்கு மறுபிறவி யெடுக்கிறோம். பிறவி யெடுக்குந் தோறும் பாவ மூட்டையே சேகரிக்கிறோம்.

 

மூன்றவது தத்துவம்: - துக்க நிவாரணம். உயிர்மேலுள்ள ஆசையையும், மனைவி மக்கள் தன தானியம் முதலாகிய அழியுந்தன்மை வாய்ந்த பொருள்களிடம் வைத்திருக்கும் கேவல் ஆசையையும் விட்டொழித்தல் வேண்டும். மற்றும், அறநெறியைக் கைப்பற்றி யொழுகுதலும், மிருதுவான வசனங்களைக் கூறுதலும், தனது பிராணன் தனக்கு எப்படித் தித்திப்போ, அம்மாதிரியே ஒவ்வொரு ஜீவனுக்கும், தனது பிராணன் தித்திப்பாயிருக்குமென் றெண்ணி யாதொரு பிராணிக்கும் எவ்விதத் தீங்கும் புரியாதிருத்தலும் நாம் நமது வாழ் நாட்களில் கடைபிடித் தொழுக வேண்டிய முக்கிய கடமைகளாகும்.

 

இவைகளே இம்மையில் ஒவ்வொருவரும் பெறுதற்கேற்ற நீடித்தபுகழையும், மறுமையில் மோட்சத்தையும் அளிக்கவல்லதாகும். எனவே, நன்னெறியைக் கைப்பற்ற நமக்குள்ள துக்கமொழியும். எவ்வண்ணம் எண்ணெயின்றி விளக்கெரியாதோ, அதுபோல, துக்கமொழிந்தால் பிறத்தலும் இறத்தலும் நீங்கும்.

 

நான்காவது தத்துவம்: - துக்க நிவாரண மார்க்கம். நாம் நன்னெறியைக் கைப்பிடித்தொழுகல் வேண்டும். அதுவே நமக்கு துக்கத்தை யொழித்து என்று மழியாப் பேரின்பத்தைத் தரவல்லது. அது எட்டுவகைப்படும். அவையாவன:

 

(1) ஜீவகாருண்யம்: - யானை முதல் எறும்பு ஈறாகவுள்ள ஜந்துக்களிடம்கொடுமையை யொழித்துப் பிரியத்துடனிருத்தல் வேண்டும்.

 

(2) நல்லெண்ணம்: - நாம் எண்ணும் எண்ணங்கள் யாவும் பிறருக்குத்தீமை டரிவதாயிருத்தல் கூடாது. பிறருக்கு நன்மையையும், ஹிதத்தையும்தரத்தக்கதாயிருத்தல் வேண்டும்.
 

(3) நல்லுரை: - நமது உதடுகளை அரண்மனை வாயிற் கதவுகளைப்போல்பாதுகாத்தல் வேண்டும். நமது வாயினின்றும் வரும் ஒவ்வொரு சொல்லும்சாந்தமானதாயும், இதத்தைத் தரத்தக்கதாயுமிருக்க வேண்டும். " இன்சொலாலன்றி இருநீர் வியனுலகம் வன்சொலா லென்றும் மகிழாதே'' என்றது உங்காண்க.

 

(4) நன்னடக்கை: - நாம் செய்யும் ஒவ்வொரு செய்கையும் தீமையை யொழித்து, மனச்சாட்சியைவஹித்து நன்மையைத் தரத்தக்கதாயிருக்க வேண்டும். வெள்ளிக் கம்பியினால் கோக்கப்பட்ட பளிங்கு மணிகளுள்ள மாலையில், எவ்வண்ணம் வெள்ளிக்கம்பி நன்கு புலப்படுமோ, அது போல் கருணை, அன்பு, உண்மை முதலான நற்குணங்கள் நமது நற்செயல்களால் தோற்ற வேண்டும்.

மற்ற நான்காவன: - சித்த சுத்தியும், நற்சிந்தனையும், மனச் சமாதானமும், மனோ வைராக்கியமு மாகும்.


புத்தர் ஏற்படுத்திய ஐந்து முக்கிய கோட்பாடுகள்.


(1) ஜீவஹிம்சை புரியாதே.

 

(2) கைம்மாறு கருதாது பிறருக்கு உன்னாலியன்ற மட்டில் கொடு. பிறர்கொடுக்க நீயும் பெற்றுக்கொள். ஆனால், பிறர் பொருளைப் பேராசையாலும், துராக்கிருதத்தாலும், வஞ்சனையாலும் அபகரிக்க எண்ணாதே.

 
(3) பொய் பேசுவதொழி. பொய்க்கரி புகலாதே. கோள் சொல்லுவதையகற்று.


(4) மதுபானத்தை விலக்கு, அது தீங்கையே விளைவிக்கும்.


(5) பிறர் மனைவியை விழையாதே.

 

அன்பர்களே, "புத்தரது அரிய பெரிய தத்துவங்களை'' தெரிந்து கொண்டதோ டன்றி, ஒவ்வொருவரும் முற்றிலும் கைப்பற்றி யொழுகவேண்டு மென்ற எண்ணங் கொண்டே இவ்வியாசத்தை வெளியிடலானேன். இறைவன் நமக்கு நன்மதி தந்து நலம் புரிவானாக.

 

(வே கோவிந்தசாமி.)

 

ஆனந்த போதினி – 1929 ௵ - பிப்ரவரி ௴

 

 

 

No comments:

Post a Comment