Thursday, September 3, 2020

 

தேஜஸ்

 

1. பூவுலகில் ஒவ்வொரு பொருளும் கடவுளாலே சிருஷ்டிக்கப்படுகிறதென்றும், பரம்பொருளானவர், எங்கும் நிறைந்து ஜோதிமய மாய் வியாபித்திருக்கின்றாரென்பதும், ஒவ்வொரு இடங்களிலும், ஒவ்வொரு அற்புதம் காட்டப்படுகிறதென்றும், அனுபவ மூலமாகவும் ஸாஸ்திர மூலமாகவும் காண்கின்றோம்.

 

2. எல்லா ஜீவன்களுக்கும் தேஜஸ் இருக்கிறது: - கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட எப்பொருளுக்கும் தேஜஸ் என்னும் ஜோதியொன்றைக் கடவுள் அளித்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது, ஓர் லாந்தரி னுள்ளிருக்கும் விளக்கின் பிரகாசமானது, லாந்தரைச் சுற்றிலும் அநேகஅடி தூரம் பரவியிருப்பது போலும், அந்த லாந்தரை யெங்குக் கொண்டு போனாலும், அவ்வெளிச்சமும் அந்தலாந்தரையே யனுசரித்துச் செல்வது போலும், இப்புவியில் ஒவ்வொரு பொருளுக்கும், அதன் சக்திக்குத்தக்கவாறு அரையடிது ரமோ, அல்லது முக்காலடி, ஓரடி தூரமோ அப்பொருளினின்று ஓர் ஜோதியானது வியாபித்திருக்கின்றது. இம்மானிட தேகத்தினின்றோ, இரண்டடி தூரமும், காசி, இராமேஸ்வரம், திருவாரூர், பழனி, மதுரை இவைகள் போன்ற க்ஷேத்திரங்களிலும், மற்ற தேவாலயங்களிலும், நல்ல யோகாத்மாக்கள் அடங்கியுள்ள விடங்க ளிலும், 2, 3 மைல் விஸ்தீர்ணங்கூடவும் பரவியிருப்பதாகத் தெரிகிறது.

 

3. கடவுளால் நமக்கு தேஜஸ் அளிக்கப்படும் விதம்: - கடவுளின் அம்சத்தினின்றே தேஜஸ் என்னும் ஜோதி ஒவ்வொரு பொருளுக்கும் அளிக்கப்படுகிறது. உதாரணமாக, அநேக பாண்டங்களில் தண்ணீர் விட்டு சூரியகிரகணத்துக்கு நேரேவைத்தால், சூரியனுடைய பிரதிபிம்பமானது, ஒவ்வொரு பாண்டத்திலுள்ள தண்ணீரிலும் தோன்றுவது போல், நித்திய ஜீவனாகிய ஏகஜீவனது அம்ஸத்தினின்றே, இப்பிரபஞ்சத்திலுள்ள சகல ஜீவராசிகளும் உயிர்பெற்றிருக்கின்றன.

 

4. தேஜஸ் பலவித நிறமாகவிருக்கிறதும், மாறுவதும்: - தேஜஸ் என்னும் ஜோதியானது பல நிறமுடையதாகவிருக்கின்றது. ஒவ்வொருவித மான தொழிலுக்கும், ஒவ்வொருவித நிறமுள்ள தேஜஸாயிருக்கிறது. மனம் மாறுகிறபடி தேஜவின் நிறமும்மாறும்; எப்படியெனில், சரீரத்தை லாந்தராகவும், மனத்தை மத்தாப்பு வத்தியாகவும், லாந்தரினின்று ஏற்படும் வெளிச்சத்தை தேஜஸ் என்றும் உவமை காட்டலாம். ஓர் லாந்தரில் வெள்ளை மத்தாப்பை வைத்துக் கொளுத்தினால், வெளிச்சமும் வெள்ளையாவது போலும், சிவப்பு மத்தாப்புக்கு வெளிச்சம் சிவப்பாகவும், இவ்விதம் நீலம், பச்சை முதலியவைகளைக் கொளுத்தின் அவ்வவ்விதமாகவும் வெளிச்சத்தின் நிறம் மாறிக்கொண்டே வருவது போலும், மானிடர்களின் மனதிற் கோபஞ்சனிக்கின், சரீரத்தைச் சுற்றியுள்ள தேஜஸ் இரத்த நிறமாகவும், வியபசார சங்கல்பத்திற்கு, சம்பாத்தம்பூ வர்ணமாகவும், சுயப்பிரயோஜன சுய லாபங்களுக்கு, நாரத்தம்பழ நிறத் தைப்போலும், தெய்வபக்தியாக மாறினால் கொஞ்சம் நீலவர்ணமாகவும், சர்வ பூதங்களிடத்தும் தயையுண்டாகி யுலக நன்மைக்காக சதா அதே கவலையாயுழைக்கும் இராஜ யோகிகளுக்கு, பளிங்கைப்போல் வெள்ளை நிற தேஜஸாகவும் மாறும்.

5. தேஜஸானது நமது கண்ணுக்குப் புலப்படாது: - தப சிரேஷ்டர்களான இராஜயோகிகளுக்கே தேஜஸ் புலப்படும். நமக்கு அதைப்பார்க்கக்கூடிய திறமையில்லை. உதாரணமாக, கல்வியில்லாத ஒருவன், ஓர்புத் தகத்தை யெடுத்துப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும் புஸ்தகத்திலுள்ள விஷயமானது அவனுக்கு என்ன விளங்கும்? நிற்க, கண்ணில்லாத ஒருவன் சூரிய வெளிச்சமில்லை யென்றாலுங், கண்ணுள்ளோருக்குப் புலப்படாமற் போகுமோ? அதுபோல், நமக்குப் புலப்படாவிடினும், யோகாத்மாக்களுக்குப் புலப்படாமற் போகாது.

 

6. தேஜஸோடு தேஜஸ் கலப்பது: - ஒரு பொருளிலிருக்கும் தேஜஸானது, மற்றொரு பொருளின் தேஜஸுடன் கலக்கும் குணமுள்ளதாயிருக்கிறது, " உதாரணமாக, வெள்ளை ஜலத்துடன் சிவப்பு ஜலத்தைக் கலந்தால், வெள்ளை கொஞ்சம் சிவப்பாகவும், சிவப்பு கொஞ்சம் வெள்ளையாகவும் மாறுவதுபோல், கோபியானவன் சாந்தனுடைய சமீபத்துக்கு வரவே, கோபியின் கோபதேஜஸ் கொஞ்சம் சாந்த தேஜஸாகவும், சாந்தனின் சாந்ததேஜஸ் கொஞ்சம் கோபதேஜஸாகவும் மாறுகிறது. நமது கண்ணுக்கு முன்னிலையிலேயே ஓர் உதாரணம் காணலாம்; யாதெனில், வெவ்வேறு குணமுடைய இருவர் ஒன்றுகூடி அன்னிய தேஜஸுடன் தங்கள் தேஜஸை கலக்கச் செய்யாமலிருக்கும் பக்ஷத்தில் இருவர் மனமும் ஒன்றுபட்டு விடுகிறது. ஆனது பற்றியே, சாதுக்களில் இது விஷயம் தெரிந்தவர்கள் துஷ்டர்களைக் கண்டால் தூரவிலகிக் கொள்கிறார்கள். நீசர்களைக் கிட்டவரக் கூடாதென்பது மதனாலேயே யென்று நினைக்கவுமிடமுண்டாகிறது. ஏனெனில், அவர்கள் அசுத்த தேஜஸ், சுத்த தேஜஸுடன் கலந்துவிடுமென்பதே. ஜாக்கிரதையாயிருந்தாலும் எப்படியாவது கொஞ்சமாவது கெட்ட தேஜஸ் கலந்துவிடும். அதைத் தவிர்த்துக் கொள்வதற்கு தினம் தேவாலயங்களுக்குப்போய் சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமென்று பெரியோர்களாலும் ஸாஸ்திர வழியாகவும் சொல்லப் பட்டு வருகிறது.

 

7. கெட்ட தேஜஸைக் கழித்து சுத்த தேஜஸை கிரகிக்கும் வீதம்: பாப புண்ணிய மென்பதை தேஜஸ் என்றே சொல்லலாம். அதாவது, க்ஷேத்திரங்களுக்குப் போனால், பாபம் தீருமென்று நம்மால் வழங்கப்படுகின்றது; ஸாஸ்திரங்களாலும் சொல்லப்படுகின்றது. நாம் க்ஷேத்திரங்களுக்குச் சென்றால் நம் மனமானது, சாந்தமும், சுறுசுறுப்பும், ஆனந்தகரமும் ஏற்படுவது நமது மனதுக்கே புலப்படும். ஓர் பாண்டத்திலுள்ள அழுக்கு நீரைச் சுத்த ஜலமாயுள்ள தடாகத்திற் கொண்டுபோய் அமிழ்த்தி ஊற்றிவிட்டு அத்தடாகத்திலுள்ள சுத்த நீரை மொண்டு கொண்டு வருவது போல், நமது அசுத்த தேஜஸை கிரஹித்துக்கொண்டு, அங்குள்ள களங்கமற்ற பரிசுத்த தேஜஸை நாம் பெற்றுக்கொள்கிறோம். களங்கமற்ற பரிசுத்த தேஜஸ் உள்ளவிடத்திலேயே யெப்போதும் வாசம் செய்பவரில் அனேகருக்குக் கோபமும், கெட்ட செய்கையுமிருக்கக் காரணமேனென்றால், அவர்கள் நல்ல ஜலமாயுள்ள தடாகத்தில், அசுத்த ஜலத் தையுடைய ஓர் பாண்டம் மிதந்து கொண்டிருப்பதற் கொப்பானவர்கள்.

8. மனம் போகும் விதம்: - எல்லா ஜீவன்களிலும் மானிட ஜென்மமே, மேம்பாடுடைய தென்பது யாவருமறிந்த விஷயம். ஓர் மரக்கலத்தில் நீராவியந்திரத்தைவைத்துப் பொருத்தி, அதற்குச் சரியான மாலுமியை வைத்து நடத்தாவிட்டால், மரக்கலமானது பாறையிலடிப்பட்டு நொறுங்கி விடுவது போல் நமக்குக் கடவுள் தேகத்தையும் தேஜஸையும் அளித்திருக்கும்போது மனத்தைச் சீர் திருத்தி வையாமல் கெட்ட செய்கையில் மோதச் செய்து இத்தேகத்தைப் பாழாக்கிவிடுகின்றோம். ஆனது பற்றியே, மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம் " என்றும் ஒளவை பிராட்டியாரருளிச்செய்தார்.

 

9. நம்மனதைச் சீர்திருத்தினால் சுத்ததேஜஸ் பெறலாம். நாமெல்லோரும் மனதைச் சீர்திருத்தி தேஜஸைச் சுத்தம் செய்தால், பூவுலகில் எக்காரியத்தையும் செய்து நற்கதியடையலாம். உதாரணமாக நந்தனார் கடவுளின் தேஜஸோடு கலந்திருப்பதாக நந்தனார் சரித்திரத்திற் காணலாம். இப்படிப் போல் ஒவ்வொரு யோகாத்மாக்களும், நற்கதியடைந்திருப் பதைத் தேவாரம் முதலிய சாஸ்திரங்களிற் காணலாம். ஆனாலும் நாமெல்லோரும் அவ்வளவு மேம்பாடடையத் திறமை யில்லாதவர்களாயினும், ஏதோ கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது மனப் பழக்க சாஸ்திரங்களையும், மற்ற சாஸ்திரங்களையும், நம் மூதாதைகள் அனுசரித்து வந்த நற்பழக்கங்களையும், தினம் தேவாலயம் சென்று சுவாமி தரிசனம் செய்வதையும், இப்படிப்பட்ட நற்செய்கைகளையும் செய்துவரப் பழகினால் நன்மை பெற்று வாழலாமென்பது உண்மை,

 

S. சுப்பராயப் பிள்ளை,

அகளங்கன், நாகப்பட்டினம் தாலூகா.

 

குறிப்பு: - இந்தத்தேஜஸ் என்பது ஒருவிதப் பிரகாசமுடைய புகை போன்றது எனலாம். இது மனிதரின் தேகத்தினின்று ஆவிபோல்வெளி வந்து அவர்களைச் சூழ்ந்துக்கொண்டிருக்கும். இது ஞானிகள் கண்களுக்குப் புலப்படும். இது கரங்களிலுள்ள விரல்களின் நுனிகளிலிருந்தும் கபாலத்தின் வழியாகவும் வெளிவரும். இதன நிறம் மேற்கண்டபடி அவரவர்களின் மனோசுத்தத்திற்குத் தகுந்த மாதிரியாக விருக்கும். மகான்களின் உருவப்படங்களிலும், கடவுளர் உருவப் படங்களிலும் அவர்கள சிரசின் மேல் சோதிப் பிரபைபோல் காட்டப்பட்டிருப்பது இதுவே.

 

இந்தத் தேஜஸ் அவ்வாறு கரங்களினின்றும் வெளிவருவதால் அது ஒருவர் தொட்ட பாத்திரம், ஒருவஸ்து முதலிய எதிலும் படிகிறது. கெட்டவர்களுடைய தேஜஸாயின் அதைத் தொட்ட அன்னியருக்கு - அது கெடுதி செய்யும். அப்படியே அவர்கள் தொட்ட பண்டங்களையுண் டாலும் கெடுதி செய்யும். இக்காரணங்களால் தான் அன்னியரை முக்கியமாய் அசுத்தமானவர்களைத் தீண்டக்கூடாதென்றும், அவர்கள் தொட்ட வஸ்துக்கள் தீட்டுப்பட்டு போயினவாதலின் அவற்றை யுண்ணலாகா தென்றும் நம்முன்னோர் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

 

இத்தேஜஸுகள் சேர்ந்து புகையைப்போல் மேலே கிளம்பும்; ஒரு ஊரிலுள்ளவர்கள் அனைவரின் தேஜஸுகளும் சேர்ந்து மேல் கிளம்பும் போது அதில் பெரும்பாலோரின் மன நிலைமை எவ்வாறு இருக்கிறதோ, அதற்கேற்ற நிறமே விசேஷமாகத் தோன்றும். இதனால் ஒரு ஊரின் ஓரமாகச் செல்லும் ஒரு ஞானி அவ்வூரின் மேலுள்ள தேஜஸின் நிறத்தைக் காண்பதால் அவ்வூராருடைய தன்மையை யுணர்ந்து அங்குள்ளவர்களில் பெரும்பாலோர் நல்லோரென்றறிந்தால் பிட்சைக்கு அங்குச் செல்வதும், அப்படிக்கின்றி அங்குள்ளோர் கெட்டவர்களென்று புலப்படின் ஊருக்குள் செல்லாமற் போவதும் உண்டு.

 

நைமிசாரணியத்தில் சூதபுராணிகரிடம் இருடிகளனைவரும் சூழ்ந்திருந்தபோது, தெற்கேயிருந்து ஒரு பெருஞ்சோதிப் பிழம்பு விண்ணுலகை நோக்கிச் செல்வதைக்கண்டு, அதிசயமான அச்சோதி யென்ன வென்றும், எங்குச் செல்கிறதென்றும் அவ்விருடிகள் சூதமுனிவரைக் கேட்க, சூதர் அதுகைலையை நோக்கிச் செல்லும் சுந்தரமூர்த்திசுவாமிகள் என்று கூறி அவர் திருவவதாரச் சரித்திரத்தை விரித்துரைத்ததாகப் பெரிய புராணம் கூறுவதாலும் இதையுணரலாகும். இந்தத்தேஜஸுக்கு, "ஹியூமன் ஆரா'' (Human Aora) என்று ஆங்கிலத்தில் பெயர் - தத்துவஞான சங்கத்தினரால் (Theosophical Society) வெளியிடப்பட்ட ஒரு நூலில் இதைப்பற்றி விரிவாகக் காணலாகும்.

 

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1920 ௵ - அக்டோபர் ௴
 

 

 

No comments:

Post a Comment