Thursday, September 3, 2020

 

தொல்காப்பியப் பொருளதிகாரம்

 

[திரிசிரபுரம், சூசையப்பர் கல்லூரித் தலைமைத் தமிழ்ப்புலவர் அ. சிவப்பிரகாசர் எழதியது.]
 

தொல்காப்பியம், பண்டைத்தமிழ் மொழியின் பண்டை இலக்கிய வரம்பு காட்டும் இலக்கண நூல். இதுவே தமிழுக்கு முதனூல். இலக்கணம் என்பது இலக்கை அணவியது. இலக்ஷணம் என்னும் வடசொல்லின் சிதை வன்று இலக்கு, இலக்கியம், குறி, வரம்பு, எல்லை என்பன ஒருபொருட் சொற்கள். அணவுதல் - தழுவுதல், சார்தல், பொருந்துதல். எனவே இலக்கணம் என்பது மொழியின் வரம்பை - இயற்கையைத் தழுவிய நூல் என்பது திரண்ட பொருள். இயல், இயற்கை, தன்மை, வழக்கு, வழங்குமுறை என்பன ஒருபொருளன.
 

இதன் காலம் 2500 யாண்டுகளுக்கு இப்பாலதன்று என்று மொழி நூலாராய்ச்சி, வரலாற்று நூலாராய்ச்சியில் தெளிந்த அறிஞர்கள் துணிந்து கூறுவர். அதனால், 2500 யாண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கண வரம்பு பெற்றது என்பது அவர் கருத்தாகும்.

 

தொல்காப்பியத்துக்கு முதனூல் அகத்தியம் என்று சிலர் கொள்வர். அது சிதைந்தொழிந்தது என்றும் கூறுவர். சிதறுண்ட சில சூத்திரங்க ளென்று சிலவற்றைத் தொகுத்து 'பேரகத்தியத்திரட்டு' ஒன்று அச்சிட்டிருக்கின்றனர். அச்சூத்திரங்கள் சொன்னடையும், பொருண்டையும் நோக்கும் இளஞ்சிறாரும் அவை பண்டைத் தமிழன்று என்று துணிந்து கூறுவர். பிற்காலத்தார் யாரோ சில சூத்திரஞ் செய்து தொகுத்தார் என்று கொள்வதே தெளிவு. அன்றியும், அகத்தியர் என்னும் பெயர் கொண்டு பலர் இருந்தனர் என்பது தேற்றம். தமிழ்க்கு முதனூல் தந்தார் தமிழரே யாதல் வேண்டும். அகத்தியர் தமிழராயின் அவர் பெயர் தமிழ்ப்பெயரே யாதல் ஒருதலை. ஆயின், அகத்தியர் என்னுஞ் சொல் அகம் - அத்து - இ - அர் எனப் பிளவுபடும். அகம் என்பது நாடு - உள்ளூர் - தமிழகம். அத்து - சாரியை. இ - எழுத்துப் பேறு. அர் - உயர்திணைப் பலர்பால் விகுதி. அகத் தியர் - தமிழகத்தார் - உள்ளூரார். இவரைச் சங்கத்தலைவர் என்பர். சங்கத்துக்கு உள்ளூராராய்ச் சிறந்த புலவரைத் தலைவராக நிறுவுதல் வழக்கு. அதுபோலச் சங்கம் நடைபெறுதற்கு மேற்கோள் நூலும் இன்றியமையாதது. அதுவும் அகத்தியம் ஆம். அகத்தியம் என்னும் சொல் இன்றியமை யாமையை உணர்த்துஞ் சொல்லாய் இன்றும் பேச்சுவழக்கிலும் தமிழர் பேசுதலைக் காணலாம். அகத்தியர் அகஸ்தியர் என்பதும், அவர் கலசத்திற் பிறந்தார் என்பதும், அவர் பெருவிரல் (அங்குஷ்டம்) அளவின ரென்பதும், கடலைக்குடித்தார் என்பதும், விந்தியமலையை அடக்கினாரென்பதும் புராணக்கதைகள். அக்கதைகள் நேராகப் பொருள் கொள்ள இயலா வடக்கே இமயமலையில் சிவபெருமான் திருமணத் திருவோலக்கங் கண்டு மகிழ்ந்து, சிவபெருமான் ஏவத் தென்றிசைக்கண் வந்து மலைய மலையிற் றங்கி, செந்தமிழ் பயின்ற குறுமுனியாகிய அகத்தியரும், ஞான சம்பந்த ராதியர் ஓதிய தேவாரப் பதிகங்களைத் திரட்டியருளிய அகத்தியரும் இருந்தனரன்றோ!

 

தமிழம், ஆரியழம்: - உலகில் மக்கள் அறிவொடு தோன்றி அறிவொடு வளர்ந்து இயலெலாம் நிரம்பப்பெற்ற இயற்கைத் தனிமொழியாகிய நம் தமிழ்மொழியும், அதன் இயற்சொற் கருவிலமைந்து, இயற்பாலருந்தி வளர்ந்து, செயற்கைச் சொல்லணி யணிந்து குலாவும் பொது மொழியாகிய ஆரியமும், இயற்கை மொழியுட் சிறந்தது தமிழெனவும், கற்பனை மொழியுட் சிறந்தது ஆரியமெனவும், பேச்சுவழக்கு மொழிகளிற் சிறந்தது தமிழ் எனவும், செய்யுள் வழக்கு மொழிகளிற் சிறந்தது ஆரியம் எனவும், உலகோர் கொண்டாடவும் : கற்புடைமனைவியும், காதற்பரத்தையும் என்னத் தமிழர்க்குப் பயனாவன அவை இரண்டு மொழிகளுமேயாம். இனி தமிழ் ஆரியத்துக்கு மிகமிக முந்தின பழமையும் பெருமையு முடையது எனக்கூறுதலும் வேண்டுமோ? இங்ஙனம் எல்லையற்ற பழமையுடைய தமிழ் மொழிக்குத் தொல்காப்பியம் வரம்பாவ தெவ்விதம்? என்னின், தொல்காப்பியத்துக்கு முன்னும் நூல்கள் இருந்தன. அவை அகத்தியம் முதலியனவாம். அவை இறந்து பட்டமையின் தொல்காப்பியம் வேண்டுவதாயிற்று. தொல்காப்பியம் என்னும் சொல்லே அது வந்தவரலாற்றை உணர்த்தும். தொல் என்பது தொன்மை - பழமை, காப்பியம் காப்பதாகிய நூல், எனவே, தொல்காப்பியம் என்பது பழமையைக் காப்பதாகிய நூல். இறந்த கால நிலைமை, நிகழ்கால நிலைமை, எதிர்கால நிலைமைகளை உணர்த்த நூல்கள் எழுதல் இயல்பே. இறந்தகால நிலைமையைக் காத்தற்கு நூல் எழுந்ததற்குப் பொருட்டு வேண்டும். அப்பொருட்டுத்தான் யாதாயிருத்தல் கூடும்? பழநூல்கள் மண்மாரியால், அன்றி மழைமாரியால், அன்றிக் கடற்பெருக்கால், அன்றிப் பகைவர் படையெழுச்சிக் கொள்ளையால், அன்றிச் சமயமாறுபாட்டுச் சள்ளையால், அழிதல் கூடும். ஆம் - ஆம். அவற்றானே பண்டைத் தமிழ் நூல்கள் அழிந்தன. தமிழ்நாட்டைக் கொடுங்க டல் கொண்டது. மக்கள் நூலொடுமாண்டனர். எஞ்சியோர், எஞ்சிய உணர்ச்சி கொண்டு நூல்களைப் புதுக்குங்கால், கொள்கை மாறுகொண்டு கலாய்த்தனர். அவற்றிற் கெல்லாம் தலை கொடுத்து நிலைத்து நின்றது இந்நூல் ஒன்றே யாதலின் இது (தொல்காப்பியம் என்னத்தகுவது என்க.

 

தொல்காப்பியர் - இனி, இத்தொல் காப்பியத்தைத் தொல்காப்பியர் செய்தார் என்பர். தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியமோ அன்றி தொல்காப்பியம் செய்ததனால் தொல்காப்பிய ராயினரோ? இவ்வையம் ஆழ்ந்து கருதி அறுதியிடத்தக்கது. தொல்காப்பியம் என்னும் சொல்லுக்கு முன்னே பொருள் கூறினோம். காப்பியம் என்னும் சொல்லினின்று காப்பியர் என்னும் சொல்வந்ததா? காப்பியரினின்று காப்பியம் வந்ததா? காப்பியத்தினின்றே காப்பியர் வந்தது என்று அறிவுடையோர் கூறுவர். அழி வழக்குச் செய்வோரே மாறுபடக் கூறுவர்; அவர், "கவிசெய்வோர் காவ்யர்; காவ்யர் காப்பியர் எனத் திரிந்தது; கவி சுக்கிரபகவான்; காவ்யர் அவன் வமிசத்தார்; சுக்கிரன் பிருகு மஹருஷியின் வமிசத்தான்; ஆதலால் காவ்யர் மிருகு வமிசத்தார்; பிருகுவமிசத்துக்கு பார்க்கவர் என்று பெயர்; காவ்யர் பார்க்கவ வமிசத்தார்; ஆதலால் தொல்காப்பியர் பார்க்கவ வமிசத்தார்; பல் காப்பியனார், வெள்ளூர்க் காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் முதலிய புலவர்களும் பார்க்கவவமிசத்தினரே; தொல் என்னும் அடைமொழி அவரை வேறு காப்பியரினின்று பிரிப்பதற்குக் கூட்டப்பட்டது'' என்று, "முழுப் பூசணிக்காயைப் பரிமாறின சோற்றில் மறைப்பார்போல" முயன்று பழிபடுவர். சுக்கிராச்சாரி கவியாகலாம்; அவன் பிருகுமரபினனாகலாம்; அவன் மரபினர் பார்க்கவராகலாம்; காவ்யத்துக்கும் காப்பியத்துக்கும் உள்ள பொருத்தந்தான் விளங்கவில்லை. தமிழர் கவியைக் கவியென்றே கூறுவர்; கவிசெய்வோரைக் 'கவிஞர்' என்பர்; காவ்யர் என்னார். 'காவ் யம்' காவியம் என்பர்; காப்பியம் என்னார். காவ்யம் என்பதன் பொருள் வேறு, காப்பியம் என்பதன் பொருள் வேறு. கவிகளால் அமைந்தது காவ்யம், காக்கும் இயல்பினையுடையது காப்பியம். காவியம் எனினும் அப்பொருளே தரும், கா பகுதியாதலால். வடசொல்லாளரே சொற்களைப் பலவாறு திரிப்பர். காப்பியம், காப்யம், காவயம், காவியம் என்பர்; வகரத்தைப் பகரமாக்குவர், பகரத்தை வகரமாக்குவர். எவ்வாறாயினும் இயற்கைத் தமிழ்ச் சொற்களை உருவந்தெரியாமற் சிதைத்தால் போதும். சொற்களின் பண்டையுருவத்தை மறைத்து வேறு பொருள் கூறுதலே அவர்களுக்குப் பொருட்டு. ஆதலின் அவர் கூற்றுக்களை ஆழ்ந்து கருதி உண்மை கண்டுகொள்ளல் தமிழர்கடமை. அன்றியும், பிருகுவும் சுக்கிரனும் தமிழரா? ஆயின், தமிழ் நாட்டுள் எவ்வூரில் எக்குடியிற் பிறந்தவர்? அவர் வரலாற்றைக் கேட்டு அறிந்து கொள்க.

 

தொல்காப்பியர் பெயர்: - தொல்காப்பியம் செய்தார் தொல்காப்பியர்; அவர் இயற்பெயர், திரணதூமாக்கி, அவரைப் பெற்றவர் சமதக்கி, என்று சிலர் கூறுவர். இப்படியும் தமிழர் இயற்பெயர்கள் (இளம்பருவத் திட்ட முதற் பெயர்கள்) கண்டதும், கேட்டதும் உண்டா? திரணம் - தூமம் - அக்கி (திரணதூமாக்கி), திரணம் - புல்; தூமம் - - புகை; அக்கி = தீ. சமத் - - அக்நி (சமதக்நி] சமத் - (பாலுள்ள மரத்துச) சுள்ளி; அக்நி - தீ. சுள்ளித் தீயினின்றும் புல்லிற் புகையுந்தீ பிறந்ததாம்! விந்தையினும் விந்தை! இவ்வாறெல்லாம் கூறுவது எதற்காக? தமிழ்க்கு முதனூல்கள் ஆரிய பிராம்மணர்கள் தந்தனரென்று மருட்டவன்றோ? மெய்யறிவுடைய தமிழர்கள் மருளுவரோ? இதனை உய்த்து நோக்கத்தகும்.

 

புலத்தியரா? தொல்காப்பியம் செய்தார் தொல்காப்பியா எனப்பட்டார். அவர் மரபினர் காப்பியக் குடியினராயினர். இதுபோலவே 'இலக்கண விளக்கம்' எழுதினோர் மரபோர் இலக்கண விளக்கப் பரம்பரையோரென்று கூறிக்கொள்கின்றனர். இவரது இயற்பெயர் இன்னதெனப் பண்டைத்தமிழ் நூல்களிற் காணக்கூடவில்லை. எனினும், தொல்காப்பியத்திற்கு பனம்பாரனார் கூறின, சிறப்புப்பாயிரத்தில் தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றி " னோன் 'புலந்தொடுத்தோனே'' எனக்கூறுதலால், 'புலந்தொகுத்தோன்'' என மற்றொரு பெயரும் உண்டென்று தோன்றுகிறது. அது 'புலம்'(அறிவு) என்னும் பகுதியடியாகப் பிறந்ததென்றும், அது புலத்தியன் '(புலம் - அத்து - இ - அன்) ஆகலாம் என்றும் தோன்றுகிறது. பண்டை மருத்துவ நூல்களில் அகத்தியனார்க்குப் புலத்திய முதன் மாணாக்கரென்றும், மருத்துவ நூலை அவர்க்கே அறிவுறுத்தினாரென்றும் கூறக்காணலாம். இந்தப் புலத்தியரை வடநூலார் புலஸ்தியர், பிர்மபுத்ரன், புலஸ்தியப்பிர்மா எனக் கூறுவர். வடசொல்லாளர்க்கு, தமிழ்மக்கள் பெயர், ஊர்ப்பெயர், நாட்டுப் பெயர்களை வடசொல்லில் மொழிபெயர்ப்பது வழக்கம். காய்சினவழுதி - உக்ர குமாரன்; கொல்லேற்றுப் பாண்டியன் - அரிமர்த்தன பாண்டியன்; இராவணன் - ராவண; இராமன் - ராமம்; தண்டமிழகம் - தண்டகாரண்யம்; வெண்காடு - ஸ்வேதவநம்; மறைக் காடு - வேதாரண்யம்; இடைமருதூர் - மத்யார்ஜ்ஜுனம்; முல்லைவாசல் - முல்லைத்துவாரம் என்பனபோல. அதுபோலவே புலத்தியன் - புலஸ்தியம் எனத்திரித்து இருமொழிக்கலவையாக்கி (புல் = திருணம், அஸ்தீ = தூமா க்நி) திருணதூமாக்கி யாக்கினர் எனக் கருதலாம். எவ்வாறாயினும் தொல் காப்பியம் செய்தோர் தமிழர் என்பதிற் சிறிதும் ஐயமில்லை.

 

தமிழ் என்னும் சொல்லுக்குப் பொருள்: - தொல்காப்பியப் பாயிரத்துள் " தமிழ் கூறு நல்லுலகத்து'' எனவும், செந்தமிழியற்கை சிவணிய நிலத்து'' எனவும் வரும் தொடர்களால், 'தமிழ் " உலகத்து வழங்கியது எனவும், 'செந்தமிழ்'' ஒரு நிலத்து வழங்கியது எனவும் கருதலாகும். அதனால், "தமிழ்'' பொதுவும், "செந்தமிழ்'' சிறப்பும் ஆகும்.'' தமிழ்'' என்னும் சொல்லின் பொருள் என்னை? ஒருமொழியே உலகத்துத் தனித்து வழங்குமாயின் அதற்குப் பெயரிடுதல் வேண்டுவதன்று. அதனின் மாறு கொண்ட பிறமொழி யொன்று தோன்றிய பின்னரே அவ்விருமொழிக்கும் பெயரிடுதல் இயல்பாகும். அவ்வாறே, தமிழ் மட்டும் உலகத்துத் தனித்து வழங்கின காலத்து அதற்குப் பெயரேற்படலில்லை. தமிழருள்ளே பல குழுக்கள் உண்டான காலத்தேதான் அதற்குப் பெயரிட்டது. அப்பெயர்க்குப் பலவகையாற் பொருள் கூறுவர். அவையெல்லாம் ஒருவகையாற் பொருந்துவனவா மாயினும், உண்மைப் பொருட்டாகா. தமிழர் தமக்குரிமைப் பொருள்க ளெனைத்தினுக்கும் தம் என்னும் உரிமை அடைமொழி கொடுத்தே கூறுதல் வழக்கம். அவ்வாறே தமக்குரிய மொழியையும் தம்மொழி எனக்கூறினர். எதுபோலவெனில், தம் ஆய் = தாய்; தம் அப் பன் = தமப்பன் (தகப்பன்); தம் அக்கை = தமக்கை; தம்கை = தங்கை; தம் அவர் = தமர்; என இவைபோலவரும் சொற்களில் தம் என்னும் பகுதி உரிமையை உணர்த்துதல் காண்க. இமிழ், உமிழ், குமிழ், சிமிழ், அமிழ், முதலிய பல சொற்களில் விகுதியொலி இழ் பொதுவாகும். அந்த இழ் என்னும் உறுப்பே, இழும், இழு, இழ, இழவு, இழி, இழிவு முதலிய சொற்களில் பகுதியாகி ஒலியை உணர்த்தும். ஆகவே, 'தம் இழ்'' தமக் குரிய ஒலி, தம் பேச்சுமொழி எனப் பொருள் பட்டுத் 'தமிழ் " எனக் கூறினர் என்க. அத்தமிழை வழங்குவோர் நமிழர் எனவும், அத்தமிழ் வழங்கு நிலம் தமிழகம், தமிழ்நிலம் எனவும் கொள்க.

 

தமிழுலகம்: - தமிழ் உலவு அகம், தமிழுலவகம், தமிழகம்; உலவகம், உலகம், எனவாம். அவ் உலகம்'வடமொழியில் லோகம் ஆகும்; (லோகம் உலகமாயிற்று எனல் படிறு). அத்தமிழுலகத்துக் கெல்லை " வடவேங்கடந் தென்குமரி யாயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்'' என்னும் பாயிரம். வடக்கெல்லை வேங்கடம்; தெற்கெல்லை குமரி; கிழக்கும் மேற்கும் எல்லை கூறக் காணோம். திருவேங்கடமலையும், கன்னியாகுமரியும், கீழ்மேல் கடலும் எலலையாகவுடைய சிறு நிலப்பரப்பையோ தமிழலகம் என்றது? எனின் அன்று அன்று. வடக்கில், வேம்கடம், வெப்ப மிகுந்த வெளி நிலம்: அது பாலைவனம். இந்தியா நடுநாட்டுள்ளது. மிகமுந்தின காலத்தில், அதாவது முதலூழியில், அதற்கு வடக்கே மக்கள் வழங்கும் நிலமில்லை. அவ்வேங்கடத்துக்குச் செல்லுமிடையே அதற்குத் தெற்கெல்லையிலுள்ளது திருவேங்கடமலை. தெற்கெல்லை குமரி. இப்போதுள்ள (கன்னியா) குமரியன்று. அதற்குத் தெற்கே எழுநூற்றுக் காவததூரத்தே தென்கடலுள் முட்டியிருந்த குமரிக்கோடு. அப்பெரும் பரப்புத் தமிழ் நிலம் முதலூழி வெள்ளத்துட் கடல் கொண்டது. குணக்குங்குடக்கும் பெருங்கடற் பரப்புகள். அவைகட்குக் குறியீடு இன்மையின் பெயர் கூறிலர். இப்போதுள்ள வங்காளக் குடாக்கடலும், அராபிக்கடலும் அன்று. இவை இரண்டாம் ஊழியிலே தோன்றியவை.

 

செந்தமிழ் நிலம்: - இதனை "செந்தமிழியற்கை சிவணியநிலம்' எனப் பாயிரம் கூறும் செம்மையாகிய தமிழினது இயற்கைத்தன்மை குன்றாது பொருந்திய நிலம். எனவே, தமிழினது இயற்கைத் தன்மை குன்றிய நிலங்கள் செந்தமிழ் நிலம் அன்றாகும் அவை குடகம் (மலையாளம்), துளுவம், கன்னடம், தெலுங்கம் (ஆந்திரம்) முதலிய நாடுகளாம். அந்நாட்டு மொழிக ளாகிய மலையாளம், துளு, கன்னடம், வடுகு முதலிய மொழிகள் முன்காலத்தே தமிழ் மொழியாயிருந்தும், பின்னர் அவை தமிழிலக்கண இலக்கிய வரம்பு கடந்து, பொதுமொழியாகிய வடசொல் (ஆரியம்) இலக்கணத்தைப் பெரும்பாலும் தழுவி உருவம்மாறுபட்டமையின், அவற்றை விலக்கி, தமிழ் மொழியிலக்கண மாறுபாடில்லாத செந்தமிழ் வழங்கும் நிலமே செந்தமிழ் நிலமாம். அது இப்போதுள்ள தமிழ்ச் சில்லாக்களாகும்.

 

முச்சங்கங்கள்: - தொல்காப்பியம், தலை, இடை, கடை என்னும் முச்சங்கங்களுள், இடைச்சங்கத்தும் கடைச்சங்கத்தும் முதனூலாகவிருந்தது என்பர். தலைச்சங்கத்து அகத்தியம் முதனூல் என்பது. இக்கூற்றுக்களை நுணுகியாராய்தல் நலம். இச்சங்கங்களைப் பற்றிய கருத்து வேற்றுமைகள் பல. இவை நிகழ்ந்த காலத்தை வரையறுத்தல் எளிதன்று. தொல்காப்பியத்துக்குப் பண்டையுரைகள் ஒன்றையும் காணோம். இரண்டாயிரத்தைஞ்நூறு யாண்டுகளுக்கு முன்னரே தோன்றின. அதாவது, கி மு. 500க்கு முன் தோன்றின தொல்காப்பியத்துக்கு, எண்ணூறு யாண்டுகளுக்குடப்பட்ட உரையாசிரியர்கள் அதாவது கி. பி. 12 - வது நூற்றாண்டி லிருந்தவர்கள், உரைகளே காணக்கிடைப்பன. இளம் பூரணர், சேனாவரையர், பேராசிரியர் எழுதின உரைகளும், இவர்கட்கெல்லாம் பிற்பட்ட காலத்தவரான நச்சினார்க்கினியார் உரையுமே உள்ளன.

 

[சிலப்பதிகார வுரையெழுதின அடியார்க்கு நல்லாரும், திருக்குற ளுரையெழுதின பரிமேலழகரும், ஏறக்குறைய இவர்கள் காலத்தினரே. இவர்களனைவரும் சைவ வைணவ சமயங்கள் முறை செய்த காலத்தவரே. களவியலும் (இறையனாரகப் பொருள்) அதனுரையும் அக்காலத் தெழுந்தனவே. நன்னூலும், நம்பி அகப்பொருளும், புறப்பொருள் வெண்பா மாலையும், யாப்பருங்கலமும் அக்காலத் தொட்டின காலத்தனவே. ஆழ்வார்களும், நாயன்மார்களும் சிறந்த காலமும் அதுவே. கம்பராதியர் காலமும் ஒத்ததே. இவையனைத்தும் இரண்டு நூற்றாண்டுகளுக்குள்ளடங் கினவே.]

 

இடையிட்ட பதினேழு நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்தே தொல்காப்பியம் உரையின்றி யிருத்தல் கூடுமோ? உரை நூல்கள் இருந்தன. அவையனைத்தும் சைவர்களாலும், வைணவர்களாலும், பிரமர்களாலும் அழிக்கப்பட்டன வென்றே கொள்ளல் வேண்டும். வேறு காரணங்கூற இயலா. அந்தவரலாறும் கூறுதும்.

 

கடல் கோட்பட்ட தமிழ்நாட்டிருந்து மக்கள் பல நிலங்களிற் பரவி னர். வேங்கட வெளியையுங் கடந்து அப்பாலும் கங்கைக்கரை யடுத்த நிலங்களிலும் குடியேறிப் பல்கினர் தூரநாடுகளிற் குடியேறினதனால் அவர்களுக்குத் தமிழர் தொடர்ச்சியும் கூட்டுறவும் குறைந்தன; குறையவே, அவர்கள் வதிந்த நிலத்தியல்பு தொழில் வேற்றுமை முதலியவற்றால் பழக்க வழக்கங்களும், அவை பற்றிய சமயக் கோட்பாடுகளும், மொழியியல்பும் மாறின. நாளடைவில், வேற்றுமொழியினர் போலவும், வேறு கூட்டத்தினர் போலவும் கருதிக்கொண்டனர். தமிழர் வளங்கண்டு பொறாமையும் கொண்டனர். அதனால் மக்கட்பொதுமையில் வேற்றுமையும் கலகமும், அவற்றால் அழிவும் மிகுதல் கண்ட அறிஞர் பலர்கூடி, சமய ஒற்றுமை உண்டாக்கி, அதனால் மக்களுள் ஒற்றுமையுண்டாக்க முயன்றனர். முயன்று, புத்தம், சமணம் முதலிய சமயங்களைக் கற்பித்து, அவற்றை நிலமெங்கும் பரப்பக்கருதி பொதுமொழியாகிய பாலியையுங் கற்பித்து வளர்த்தனர். அக்கொள்கைகளைத் தமிழகம் (தண்டகாரணியம்) முழுவதினும் பரிமாறத் தொடங்கினர். அக்காலத்துத் தமிழ்நாட்டில் தலை சிறந்திருந்த பேரரசன் நிலந்தரு திருவிற் பாண்டியன் (இராவண்ணன்) அவர்களைத் தன் நாட்டில் தங்கவிடாது தடுத்தான். அது அவனவையிருந்த அகத்தியனுக்கு வருத்தம் விளைத்தது. அவ்வகத்தியன் வடநாட்டில் பாலி என்னும் பொதுமொழி கண்டபோது தென்னாட்டிருந்து சென்று உடனிருந்தவன். வடநாட்டார் மகளாகிய உலோபா முத்திரை என்பாள் அழகில் ஈடுபட்டு அவளையும் மணந்து கொண்டான். அதனால் வடநாடரிடத்தும் ஆரியமொழி (பாலி) யிடத்தும் பற்று மிகக் கொண்டனனாய், வடநாட்டுச் சமயக் கொள்கைகளையும், வடமொழித் திரிபுகளையும், தமிழருள்ளும், தமிழ்மொழியுள்ளும் புகுத்த உடன்பட்டிருந்தான். அந்நோக்கத்துக்கு அரசன் இராவண்ணன் இணங்கானாதல் கண்டு, அவனொடுங் கலாய்தது, எவ்வாற்றானும் தன்கருத்து முற்றுவிக்கத் துணிந்து, தமிழ் மொழிப் பண்டையிலக்கண முறைகளை மாற்றத் தொடங்கினான். அரசனவையில் அவன் கருத்தோடொக்க மக்களொழுக்கமும் மொழிப்பண்பும் கெடாமற் காத்தலிற் கருத்தூன்றி யிருந்த மொழிவல்லோனாகிய புலந்தொகுத் தோன் (புலத்தியன்) பண்டைத் தமிழ்மொழி யியல்புகளைத் தொகுத்து, தொல்காப்பியம் என்னும் முடிந்த இலக்கணத்தை இயற்றி உதவினான். அதனை அழித்தற்கு, அதங்கோட்டாசானைத் துணைகொண்டு அகத்தியன் செய்த முயற்சிகளனைத்தும் பாழாயின. அகத்தியன் செய்த அகத்தியம் என்னும் கலப்பிலக்கணமும் தலையெடுக்கவில்லை.

 

கறுக்கொண்ட மனத்தினனாகிய அகத்தியன் பாண்டியனைச் சூளுரைத் துப்பிரிந்து, தடகமலையிற் றங்கியிருந்து, வடநாட்டரசனாகிய இராமனைப் பிரித்து, தண்டமிழகத்து (தண்டகாரணியத்து) க் கொணர்ந்து, இரா வண்ணனுக்கும் இராமனுக்கும் குலப்பகை மூட்டி, இராவண்ணனைக் கொல்வித்து, தென்னாடடைச் சிதறவிட்டான். அக்காலமுதல் தொடங்கித் தொடர்ந்து நிகழ்ந்த கடைச்சங்கமும், அதன்பின் நெடுங்காலம் சிறிது கலப்புக் கொள்கையோடு நிகழ்ந்த இடைச்சங்கழம் நிலவி மறைந்தன. இவ்வளவில் பதினைந்து நூற்றாண்டுகளின் மேலும் கழிந்தன.

 

இவ்விடையிட்ட நெடுங்காலத்தில் பல வேறுபாடுகளுண்டாயின.
“இறைவன்'' வழிபாடு செய்த தமிழரிற் பெரும்பாலர் புத்த சமண சமயங்களைத் தழுவினர். பாலி என்னும் வடமொழி பொது மொழியால் ஆரியமாய் நன்றாய்ச் செய்யப்பட்டு சம்ஸ்கிருதம் ஆயிற்று ஆரியப் பயிற்சி யுடையோர் ஆரியர் ஆயினர். வடநாட்டில் ஆரியர் எரிவளாக்குங் கொள்கையராய், புத்த சமணரை ஒடுக்கினர். தென்னாட்டில் தமிழர் பிரம், வைணவ, சைவக் கொள்கையராகி, புத்தர் சமணரைத் தகர்த்தனர். தமிழர்க்குள் ஆரியர் சமயக்கொள்கை பரவிற்று. தமிழ் மொழியுள் பேச்சிலும் செய்யுளிலும் ஆரியமொழிச் சொற்கள் பெரிதும் கலந்தன. ஆரிய மொழிக்குப் பதிமொழி (தெய்வபாஷை) என்ற ஆதிக்கம் பெருகிற்று. இவ்வகை சீர்கெட்டுக் கலப்புற்ற நிலைமைக்குத் தொல்காப்பிய இலக்கணம் பொருந்தாதாயிற்று. ஆகவே அந்நிலைமைக் கேற்ற புலவர் சங்கம் கூட்டுதல் இன்றியமையாதாயிற்று அக்காலத்துச் சைவசமயப்பற்று பாண்டி நாட்டில் (மதுரையில் தலை சிறந்திருந்தமையால், அப்போது கூடின சங்கம் சைவப் புலவர் சங்கமாகித் தலைச்சங்கம் என்னும் பெயர் பெற்றது. அத்தலைச் சங்கத்துக் கூடின புலவர்கள் கேடுற்ற தம் கலப்பட ஒழுக்கங்களுக்கு (எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் முரணாமை உணர்ந்து கொண்டு) பண்டை ஒழுக்க வரம்பாயுள்ள பொருளிலக்கணம் பொருந்தாமை கண்டு, பொருளிலக்கணத்தைப் புதுப்பிக்க வகையறியாது தியங்கினர். அப்போது அச்சங்கத்துக்கு அகத்தியராயிருந்த இறையனார் பொருளதிகாரத்து முதற் பகுதியாகிய அகத்திணை இயலை ஆரியக் கொள்கையை யொட்டிக் களவியல் என்ற ஒரு சிறு சுருக்க நூல் அறுபது சூத்திரத்திற் செய்து தந்தனர். அதற்கு நக்கீரனார் உரை கண்டார் என்பர் அக்கதை மெய்யாயினும் அன்றாயினும், களவியல் என்னும் இறையனாரகப்பொருள் தொல்காப்பிய அகத்திணை யியலுக்கு மாறுபடவும், ஆரியக்கொள்கைகளுக்குப் பொருந்தவும் புது நூலாக ஆக்கியது என்பதிற் சிறிதும் ஐயமில்லை.

 

பின்னர், அதனை வழிகாட்டியாகக் கொண்டு ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலை செய்தார். பிறரும் பிற சுருக்க நூல்கள் இயற்றினர் அவை யெல்லாம் ஆரியக் கலப்புற்றவையே. இன்ன பின்னூல்கள் ஆதரவு கொண்டு ஆரியக்கலப்பில்லாத தொல்காப்பியத்துக்குப் பொருள் கூறி உரை செய்தல் எவ்வாற்றானும் பொருந்தாது திருவாளர். பா வே. மாணிக்கம் நாய்க்காவர்கள் கூறுமாறு அதனைக் கொண்டே அதனை ஆராய்தல் சாலத்தகவுடைத்து. தொல்காப்பியம் எழுதின காலத்து ஆரியர் கலப்பும் ஆரியர் வேதக் கலப்பும் இல்லை. ஆரிய வேதமும் எழுதப்பட வில்லை. பின்னரே எழுதப்பட்டன, என்பதற்கு வேறு சாட்சி வேண்டுவதில்லை. தொல்காப்பிய உரையாசிரியர்களிலெல்லாம் பிந்தியவராய், ஆரிய பாரத்துவாச கோத்திரத்தில் வந்தவரென்று கருதும் நச்சினார்க்கினியார் கூற்றே சாலும். அவர் கூறுமாறு: -

 

"நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையான், "நான் மறை' யென்றார். அவை தைத்திரியழம், பெளடிகழம், தலவகாரழம், சாமவேதழமாம். இனி இருக்கும் யசுவும் சாமழம் அதர்வணழம் என் பாரு முளர். அது பொருந்தாது; இவர் இந்நூல் செய்த பின்னர் வேத வியாதர் சின்னாப் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தாராதலின்.''

 

இன்னும் இக்கருத்தையே நூலிற் பிறவிடங்களிலும் வற்புறுத்துகிறார்.

 

தொல்காப்பியச் சிறப்பு: - தொல்காப்பியத்துக்கு முந்திய நூல்களெல்லாம் இறந்துபட, தொல்காப்பியமே முதனூலாயிற்று தகுதியுள்ளன நிலைக்கும் [ urvival of the fittest] என்னும் இயற்கை முறையைத் தழுவி, கற்பாறைமேற் கட்டின கருங்கல் மாளிகை போல, மொழியியற்கையைச் சார்ந்தெழுதின தொல்காப்பிய இலக்கணம் ஒன்றே நிலைத்தது. தமிழர் அதன் கட்டளைகளைக் கையிகவாது தழுவினர். தொல்காப்பியர் வழிவந்த பல்காப்பியனாரும்'' கூறிய குன்றினும் முதனூல் கூட்டித், தோமின் றுணர்தல் தொல்காப்பியன்றன், ஆணையின்றமிழ் அறிந்தோர்க்குக் கடனே'' என்றும் விதித்தனர். " தொல்காப்பியத்தின் அருமை பெருமைகளே அம்முதனூல் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமென்று சொல்லலாம்'' என்றார் மு. இராகவையங்கார். நமது ஐயங்கார் அகத்தியம் முதனூல் என்னும் பொய்யறிவு கொண்டு இவ்வாறு புகன்றாரேனும், தொல்காப்பியத்தின் அருமை பெருமைகளைப் பாராட்டாதிருக்க முடியவில்லை. தொல்காப்பியம் தோன்றிய பின் ஆயிரத்தெழுநூறு யாண்டுகளுக்கு மேலும் வேறு நூல் தமிழர்க்கு வேண்டுவதில்லை யாயிற்று. தமிழ்க்குப் பெருமை குறைந்து, ஆரியப் பொதுமொழியாய் நூன்மொழியாகக் கொண்டபின்னரும் பின்னூல்களுக்கெல்லாம் அதுவே முதனூலுமாயிற்று.
 

தமிழ் மொழி மாறுதல்: - கடைச்சங்க காலமுதலே தமிழ்மக்கள் ஒழுக்கம் மாறுபடத் தொடங்கிற்று. முதலில் புத்த சமயமும், பின்னர் சமண சமயமும் தமிழருள்ளே பரவலாயின. புத்தர் பாலிமொழியையும், சமணர் சமஸ்கிருதத்தையும் பொது மொழிகளாகக் கொண்டு அவற்றிற்கு முதன்மையும் பெருமையும் தந்ததுமன்றி, அம்மொழிச் சொற்களைத் தமிழ் மொழியிற் புகுத்துவாராயினர் தமிழுலகத்தே வடநாட்டினரும் தென் னாட்டினரும் ஒழுக்கத்தில் மாறுபட்டனர். சூரியனையும் அக்கினியையும் வழிபடும் கொள்கையினராகிய மேனாட்டு யவனர் முதலாயினர் வடநாட்டிற் குடி புகுந்து ழக்கினதனால், வடநாட்டுப் பகுதியார் சூரியனுக்கு அர்க்கியமும் அக்கினிக்கு ஆகுதியும் செய்வோராய் ஒழுக்கம் மாறுபட்டனர். அன்றியும் இலக்கண வரம்பு பெறாத தம் நாட்டுச் செயற்கை மொழிகட்கு சம்ஸ்கிருத மொழிக் கற்பனை இலக்கணங்களையே தழுவிக் கொண்டனர். தென்னாட்டுத் தமிழரும் சமயவெரி கொண்டு, புத்தர் சமணரைத் தம்மவ ரென்றுங் கருதாமல் கலாய்த்துக் கறுவினதுமன்றி, தமது பண்டை இறைவன் வழிபாட்டையும் புதுக்கி, சைவ வைணவ சமயங்களாக்கி, ஆகமமாதியவற்றை வடசொல்லால் எழுதிக்கொண்டு, தமிழ் மொழியைப் புறக்கணிக்கத் தலைப்பட்டனர் இக்குழப்பத்தில், பண்டைத் தமிழ் நூல்கள் பலவு மழிந்தன. தொல்காப்பியம் விரிந்த பரப்பினதாய் அமைதியொடு கற்றல் அரிதாயிருந்தமைபற்றிச் சுருக்க நூல்களெழுதி, அவற்றுள் வடசொல் இலக்கண விதிகளையும் கொளுவினர். இதனிடையில், தென்னாட்டு இறைவன் (சிவன், திருமால்) வழிபாட்டுத் தமிழர்க்கும், வடநாட்டுச் சூரியாக்கினி வழிபாட்டு ஆரியர்க்கும், வடசொல் பொதுமைபற்றி ஒருவாறு ஒற்றுமை யுண்டாக, அதனிடையே ஏகான்மவாத சங்கரமதமும் கலந்து
கொள்ள, அவர்களனைவரும் ஒரு முகமாய் நின்று, புத்தசமணரை எதிரிட்டு அவர்களை ஒடுக்கினர். இந்தக் கலக்கம் மும்முரமாய் இருந்த காலத்தே தானே கைவத் தலைச்சங்க (சிறப்புற்றது. அக்காலத்தேதான், இறையனார் களவியல் எழுதிய சுவடியைப் படியிடுக்கில் நுழைத்தார்: அதற்கு நக்கீரர் உரை கண்டார்: மூங்கைப்புன்மயிர் உருத்திரசருமர் உரை கேட்டார்: இளம்பூரணராதி உரையாளர்கள் தொல்காப்பியத்துக்கு உரை கண்டார்கள்: தமிழ்த்தாய் பண்டை வளனும் பெருமையுமிழந்து பொலிவழிந்தாள்! எனினும், தொல்காப்பியம் ஒன்றுமே குன்றின்மேல் இட்ட குல வொளி விளக்கென இன்றும் மிளிகின்றது 

 

தொல்காப்பியத் துளளீடு மாறுபடவில்லையோ? மேற்பகுதியிற் காட்டிய வண்ணம் தமிழுலகெங்கணும் குழப்பமும், கலக்கமும், மலக்கமு மாயிருந்த நீண்ட காலத்தில் தொல்காப்பியம் இடைச்செருகல், திரித்தல் முதலாய தொடக்குகளின்றித் தப்பியதோ? என்னும் ஐயம் உண்டாதல் இயல்பே. ஐயப்படாமல் பலவகையாற்றிரிபடைந்துளது என்றே துணிந்து கூறலாம். சொன்றிக்குழிசி யளவையாக (ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பது போல்), "வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை' என்னும் மரபியல் 77 - ம் சூத்திரமே சாட்சியாகும். தொல்காப்பியப் பொருளதிகார முழுவதும் துருவினும், தமிழ்மக்களது தொழில் வகையாற் பிரிவு அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் நான்கே காண, ஆரியமுறை சாதிப் பிரிவாகிய வைசிகர் (வைஸ்யர்) என்னும் வடசொல் காணப்படுதல் ஒன்றுமே அச்சூத்திரம் இடைச்செருகல் என்பதனை ஐயமின்றி விளக்கும். இத்தகைய குற்றங்கள் ஆங்காங்கு காட்டப்படும்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - மே, ஜுலை ௴

 

 

 

No comments:

Post a Comment