Friday, September 4, 2020

 

நொச்சித்திணை

(A. K. வசந்தகோகிலம்)

நொச்சி யெனப்படுவது மதில். தினை யெனப்படுவது ஒழுக்கம். எனவே, நொச்சித்திணையாவது மதிலினையும் அம்மதிலினுள்ளார் செயலினையும் பற்றிக் கூறுவதொன்றாம். இப் பகுதி புறப் பொருள் வெண்பாமாலையிற் காணக் கிடைக்கின்றது. தொல்காப்பியர் நொச்சியென ஒரு தினை கூறாது அதனை உழுஞையுள் அடக்குவர். இதனானே இவ் விருதிணையும் தம்முன் மாறென்பது போதரும். உழிகையின் பின்னரே நொச்சி கூறப்பட வேண்டி யிருப்பினும் வெண்பாமாலையுண் முன்னரே கூறப்பட்டிருக்கின்றது. மதிலின் கண் உள்ள வீரர்கள் நொச்சிப்பூவினை அடையாளமாக உச்சியிற் சூடி மதிலைக் காத்து நிற்றல் பற்றியே மதிலும் நொச்சி யென் வழங்கலாயிற்று. இம் மதிலானது நகரினைச் சுற்றி வானளாவ ஓங்கி பல ஏப்புழைகளையும் ஞாயில்களையும் உடைத்தாய் அமைக்கப்பட்டிருக்கும். இதன் உச்சியில் பல பொறிகள் உள்ளன. இவை பகைவர் முற்றிய காலத்து வீரரின்றியே பகைவரின் மீது போர் தொடுத்து அழிக்கும் ஆற்றல் சான்றன. இவை புரியும் மன நடுங்குஞ் செயல்களை,

"மழுக்கள் வீசுவன நஞ்சுபூசமுளை வாள்கள் வீசுவன முத்தலைக்

கமுக்கள் வீசுவன குந்தநேமியெரி காலலீசுவன காலனேர்

எழுக்கள் வீசுவன கப்பணங்கள் விட மென்னவீசுவன வன்னெடும்

கொழுக்கள் வீசுவன கற்கவண் கயிறு கோர்த்து வீசுவன வார்த்தரோ.

நஞ்சு பில்கு துளை வாளெயிற்றரவு நாசியிர்த்தெறியு மலையரா

வெஞ்சினங்கொண் முழை வாய்திறந்துபொரு வாரை விக்டே விழுங்குமால்

குஞ்சாங்கொடிய முசலம் வீசியெதிர் குழகுவார் தலைகள் சிதறுமால்

அஞ்சுவெம்பொறி விரைப்பினும் கடுகி யடுபுலிப்பொறி யமுக்குமால்''

 

என்னும் செய்யுட்களை நோக்குந் தோறும் அவை நம் முன்னர் நிகழ்கண போன்றன்றே தோன்றுகின்றன. இவ்வளவோ? அம்மம்ம! இன்னும் அவை செய்யும் செயல்கள் கூறத்தக்கன வன்றாம். நிற்க, இம் மதிலினுள்வார் வீரத்தை ஒரு சிறிது நோக்குவாம். இந் நொச்சித் திணையானேயே ஆசிரியர் நமக்கு பண்டைத் தமிழரின் வீர எழுச்சியை படம் பிடித்துக் காட்டுகின்றார். அவர் கூறும் ஒவ்வொரு உதாரணச் செய்யுளும் உள்ள மள்ளும் பான்மையனவாய் மிளிர்கின்றன. அவர் கூறும் தமிழரின் வீரம் தற்காலத் தமிழர்களின் சவ்வீரம் போன்றதன்று. "இன்றயார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதியுண்டோ” எனக் கருதி உயிரை மரியாது போர் புரிதலே அவர்கள வீரமாகும் எனப் பல விடங்களில் அவர் கூறுவதைப் படித்தும் தமிழர் உறங்குவராயின் நாமென் செய்வல்லேம். இனி அவர் கூறுமாறு காண்போம்: - மதின் முற்றிய பகைவனது முரசம் அரன்று காதுகளில் வீழ்வதன் முன்னரே நொச்சி வீரர்கள் உச்சி மலைகின்றனர் அப்பூவை, பகைவரது சேனை கடல் போன்றது அளவிடற்கரிய ஆற்றல் சான்றது எனக் கருதினரிலர் அவ்வீரர். மறு கணம் உழிவஞயாரது துசிப் படையின் மேல் பல பொறிகளும் தாவுகின்றன. வாள்களும் வேல்களும் வானிடை மின்னென வயங்குகின்றன. இரு படையினரும் முளைகின்றனர்.
பலர் விண்புக்கன ரெனினும் தம் கிடங்கும், மதிலும் அழியாது காப்பான் வேண்டிய நொச்சி வீரர்கள் உயிர் மறந்து, வளையும் வயிரும் ஒலிப்ப வாள் வீசி ஆர்க்கின்றனர். ஆயினும் பகைவரது பகழியான் பலர் படுகின்றனர். இவ்வரிய செயலை.

ஈண்டரில் சூழ்ந்த விளையு மெரிமலர்க்

காண்டகு சன் கிடங்குக் காப்பாராய்-வேண்டார்

மடங்க வனைய மறவே லோர் தத்த

முடம் பொடு காவ லுயிர்.

 

என ஆசிரியர் அவாவுடன் கூறிச் செல்கின்றார். இஃதன்றி,

இன்னுமோர் அரிய காட்சி நமது ஐம் பொறிகளையும் அதிர வைத்த விடுகின்றது.

கிடங்கிடை நிகழும் இப் போர் ஒருவாறு முடிவுறுசின்றது. நாவாயும் தோணியும் மேற் கொடு நள்ளார் நணுகுகின்றனர். அவர்களைத் தடுத்த வீரர் பலர் குருதிச் சேற்றில் புதை யுண்கின்றனர். மறுகணம் எயிற் போர் தொடங்குகின்றது. பகைவர் நொச்சி மேல் ஏணி பல சாத்தி ஏற முயல்கின்றனர். ஆண்டே, கற்பொறியும், பாம்பும், கனலும், கடிகுரங்கும், விற் பொறியும், வேலும் அவர்களைத் தாக்கித் தகர்க்கின்றன. எனினும் உழிஞை வீரர்கள் அவற்றையும் கருதாராய் உடும்பும், பாம்பும் போல் மதிற் கற்களைப் பிடித்து மேலிவர்கின்றனர். இவ்விடத்து தான் நாம் மெய்ம் மயிர் சிலிர்க்கும் குரிசிலின் தோற்றம் காணப்படுகின்றது. அவ்வாறு மேலிவரும் வீரர்களை, ஓர் வீரன் தனித்து நின்று கற்சிறை போன்று தடுக்கின்றான். அவன் கையில் வாள் ஒளி வீசி மின்னுகின்றது. எனினும் மறுகணத்தே அவ் வீரனின் கழல் லீக்கிய வலிய கால்கள் இரண்டும் மதிலி னுள்ளே வீழ்கின்றன. வாளேந்திய கைகள் மதிலின் புறத்தே வீழ்கின்றன. அந்தோ! கோரம்! கோரம்!!! இக் கோரக் காட்சியை ஆசிரியர்,

அகத்தன வார்கழல் நோன்றாள் அகத்தின்

புறத்தன போரெழிற் றிண்டோள் - உறத்தழீஇத்

தோட்குரிமை பெற்ற துணைவளையார் பாராட்ட

வாட்குரிசில் வானுலகி னான்.

 

என்று கூறி நம் துன்பத்தின் எல்லை அளவு கடவாதமாறு அக் குரிசில், தேவர்கள் புகழ அரம்பையர் தழுவ, "வானுலகினான்'' என மனம் விம்ம காட்டிச் செல்கின்றார். இவற்றை எல்லாம் மேனின்ற வீரர்கள் நோக்கினா ரல்லர், வீரர்கள் பலர் மாண்டனர். பொறிகள் சிதைந்தன; மதிலும் நடுக்க முற்றது. கிடுகு படைகள் தவிடு பொடி யாக்கப்பட்டன. விற் படைகள் புற் படைகளாயின; வேற் படைகள் காற்படைக ளாயின; வாள்கள் தூள்களாயின; எனினும் நொச்சி வீரர் உயிரை நச்சினாரிவர்; அவர் பேணுவது பெரும் புகழன்றோ? இவரது வீரங் கண்டு பகை மன்னன் மலைவு கொள்கின்றான். தமிழர் தம் ஆண்மை கண்டு புகழாதார் யாவர்? மதின் மன்னன் பால் மகட் கொடை நேர்கின்றான். அவ் வமயமும் நொச்சி மன்னன் உடன் பட்டானிலன். எம் மகளைக் கொளக் கருதி வந்த மன்னரது மழகளிற்றின் கோடு 'எம் மகளது வெண்கட்டிற் காலென்பதை உம் மன்னன் உணர்வானாக' என நிருபங் கொணர்ந்த தூதனை நோக்கி அவன் கூறுங் கருத்து பொதிந்த மொழிகள் என்றென்றும் தமிழர் மனத்தே யுள்ளற்பாலன வன்றோ? என்னே தமிழரின் வீரம், என்னே அன்னவர் மாண்புது வண்மை. வாழ்க தமிழர் தம் கொற்றம். வாழிய பாரத மணித் திரு நாடு.

ஆனந்த போதினி – 1942 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment