Friday, September 4, 2020

 நோய்க் கிடங்கோடேல்-வாயுவின் இலக்கணம்

 

சில் வாழ்நாட் பல பிணிச் சிற்றறிவுடைய மக்களாகிய நாம் உய்தல் வேண்டி, நஞ்செந்தமிழ் நாட்டிடைத் தோன்றி நலம்படுநூல்கள் பல வியற்றி அரிய பெரிய உண்மைகளை நமக்கு விளக்கிச் சென்ற பெருமுது மக்களுள் ஒளவைப் பிராட்டியாரும் ஒருவரென்பதை நாமெல்லோரும் நன்கறிவோம். இவர்கள் அரிய விஷயங்களைச் சிறிய வாக்கியத்தானமைத்துச் சிறுமகார் மனதினுஞ் செவ்விதிர் பதியும் வண்ணம் இயற்றியருளிய "ஆத்தி சூடி'' என்னும் நூலின் கண்ணுள்ள உபதேச மொழிகளுள் ஒன்றாம், "நோய்க் கிடங் கொடேல்' என நாம் எடுத்துக் கொண்ட விஷயம். ஒருவருக்கு ஒரு விஷயத்தை ஒருவர் அறிவுறுத்த வேண்டுவாராயின், அங்ஙனஞ் செய்தற்கு ஒருவகையான முறைகளிருக்கின்றன. அவைதாம் உடம்பாட்டு (Affirmative) வகையானறிவுறுத்த லென்பதும், எதிர்மறை (Negative) வகையான் அறிவுறுத்த லென்பதுமாம். உடம்பாட்டாற் கூறுவதினும், எதிர்மறை முகத்தாற் கூறுவதே ஆற்றல் மிக்குத் தோன்றுமாகலின் ஒரு விஷயத்தை வற்புறுத்திக் கூற வேண்டிய விடத்தெல்காம் எதிர்மறை வகையாற்றானே கூறுவர் அறிவுடையோர். நோய்க் கிடங்கொடேல் என்பதன் கருத்து சரீரத்தைச் சுகமாக வைத்துக் கொள் என்பதே யன்றி வேறல்ல. எனவே, சரீரத்தைச் சுகமாக வைத்துக் கொள் என்று உடம்பாட்டாற் கூறுவது நோய்க் கிடங் கொடேல் என எதிர்மறையாற் கூறுவது போல அவ்வளவு ஆற்றலைப் பயக்கவில்லை. இவ்வுண்மையறிந்தே எதிர் மறை வகையான் நமது அன்னையார் வற்புறுத்திக் கூறியதை நோக்குங்கால் இவ்வுபதேச வாக்கியத்தின் அருமையும், அதனை உணர்ந்துநாம் நடக்க வேண்டிய அவசியமும் இனிது புலப்படும்.

 

இனி "நோய்" என்பது யாது? அஃது "மரம்" "காற்று'' என்று சொல்லப்படுகின்ற பொருள்களைப் போலுள்ளதோர் குணிப்பொருளா? இல்லை, சொன் மாத்திரையாயுள்ள குணப்பெயரே (Abstract) யாகும்.'' பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் தத்துவங்களின் தூல சூக்கும் காரியங்களான அகப்புறக் கருவிகளின் இயைபு குன்றியும் மிகுந்தும் நிலை குலைதலே நோய் " எனப்படுவதல்லது அஃதோர் தனித்திரவியமன்று. இதுபற்றியே 'மிகினுங் குரையினு நோய் செய்யுநூலோர் - வளி முதலா வெண்ணிய மூன்று' என்று ஆசிரியர் திருவள்ளுவனார் அருளிச் செய்வாராயினர். பழவினையானுங் காரணங்களானுமே நோய் வருமென்றும், அவற்றுட் பழவினையான் வருவன அதன் கழிவின் கண்ணல்லது தீராவென்றுங் கூறுவர் ஆன்றோர். ஏனைக்காரணங்களான் வருவனவற்றை வரவொட்டாமற் றடுக்கவும், வந்தால் போக்கவும் மக்களாகிய தமக்குச் சாத்தியமாகும்.

 

இனிக் காரணங்கள் இருவகைப்படும். அவை தாம் குணத்தான் வருவனவுந் தொழிலான் வருவனவுமாம். அவை அளவு முதலிய ஏற்றத் தாழ்வால் வருவன வெல்லாம் குணத்தால் வருவனவாம். மனமொழி மெய்களின் தொழில் நிலைமாறுதலான் வருவனவெல்லாம் தொழிலான் வருவனவாம். குணவொத்தலுந் தொழிலொத்தலும் முறை பிறழாது சரிவர நடைபெறுமாயின் பிணி என்பதே அணுக மாட்டாது. பெரும்பான்மையும் நோய் சரீரத்தைப் பற்றியே நிகழும். அங்ஙனம் பற்ற வொட்டாது சரீரத்தைச் சுகமாக வைத்துக் கொள்ளலே மக்களின் இன்றியமையாத கடமையாம் என்பதை வற்புறுத்துதலே " நோய்க் கிடங்கொடேல்' என்பதன் கருத்தாகும். அற்றேல், சரீரசுகம் பேணுவதவசியந்தானோ வெனின், அவசியமேயாம்; ஏனெனில் சரீர சுகமின்றி ஆன்ம சுகம் சித்தித்தால் எவ்வாற்றானுஞ் சாத்தியமல்ல.

 

மக்கட்கு ஆன்மா, சரீரம் என இரண்டுள வேனும் ஆன்மாவின்றிச் சரீரந் தனித்தியங்கவும், சரீரமின்றி ஆன்மா தனித்தியங்கவும் கூடாவாம். இவ்விரண்டினுக்கும் அவ்வளவு நெருங்கிய சம்பந்தமிருக்கிறது. சரீரத்தினுள்ளிருக்கும் சீவன் தனக்கென ஓர் உருவின்றித் தான் சார்ந்த சரீரமே தனக் குருவாய்க் கொண்டிருக்கிறது. அங்ஙனமிருக்கு மிடத்தும் தான் வேறு உடம்பு வேறு என்னும் பேதந் தோன்றாவாறு, இராமா, கோவிந்தா என உடம்புக்கிட்ட பெயரானழைத்த வழித்தான் ஏன் என்கின்றது. இதனாலேயே உடம்பிற்கும், உயிருக்குமுள்ள சம்பந்தம் எவ்வளவு நெருங்கிய தென்பது புலப்படுகின்றதன்றோ? அப்படி நிற்பினும் உயிர்வேறு, உடம்பு வேறுதான். ஆன்மாவிற்குச் சாதகமாக இவ்வுடம்பு இறைவனாற்றப்பட்டதாகும். இயற்கையிலேயே, ஆணவ மலத்தால் (ஆணவ மலத்திற்கு ஆன்மாவின் அறிவை மறைத்துக் கொண்டிருக்கும் குணமாம்.) மறைக்கப்பட்டு அறிவு மழுங்கிக் கிடக்கும் ஆன்மாவிற்கு அறிவை விளக்குவது மாயா காரியமான இச்சரீரமேயாம். நமது ஆன்மா அறிவு விரிந்து திகழ வேண்டியே இறைவன் தனுகரணபுவனங்களைச் சிருட்டித்துக் கொடுத்தார்.

 

ஆதலால் ஞானாபிவிருத்திக்குச் சரீரசுக மின்றியமையாது வேண்டப்படுமென்பது பெறப்படும். நோயின்றிச் சரீரத்தைக் சுகமாக வைத்துக் கொள்வதற்குப் பொருள்களின் இலக்கணங்களை அறிந்துகொள்ளல் அவசியமாகும்.

 

இனி, பொருளை அகப் பொருளென்றும், புறப் பொருளென்றும் பகுத்துப் புறப் பொருளை மீண்டும் சேதனம் அசேதனமென இரு கூறாகப் பிரித்திருக்கின்றார்கள் நமது ஆன்றோர்.
 

இனிச் சாத்திரவகையானாராயுங்கால், எல்லாப் பொருள்களும்
(1) கன பதார்த்தம்
(Solid) (2) திரவ பதார்த்தம் (Liquid) (3) வாயு பதார்த்தம் (Gas) என மூன்று பகுதியினு ளடங்குவன வாகும். இம்மூன்றனுள்ளும் வாயு பதார்த்தமே மக்கட்கு இன்றியமையாது வேண்டப்படுவதாகும். எங்ஙனமெனின் கன பதார்த்தமாகிய உணவு இன்றி ஏழெட்டு நாளும், திரவ பதார்த்தமாகிய தண்ணீரின்றி இரண்டொரு நாளும், ஒருவன் உயிருடனிருக்கக் கூடுமேயாயினும், வாயு பதார்த்தமாகிய காற்றில்லாமல் ஒரு சிலநிமிஷமும் உயிருடனிருக்க முடியாதாதலா லென்க. ஆதலால் ஏனையவற்றை விடுத்து மிகவும் பிரதானமான வாயு பதார்த்தத்தைப்பற்றி மட்டுமேஒரு சிறிது ஆராய்வாம்.'' நோய்க்கிடங் கொடேல்'' என விஷயத்தைஎடுத்துக்கொண்டு வாயு பதார்த்தத்தைப் பற்றிக் கூறப்புகுதல் ஈண்டைக்கு வேண்டா கூறலா'மெனச் சிலர் கருதக்கூடும். அங்ஙனமன்று சுகவாழ்விற்குச் சுத்த ஆகாயமுங் காற்றுமே ஏனையவற்றை விட இன்றியமையாதன வாதலானும், நாம் சுத்த ஆகாயத்தை யுட்கொள்வதற்கு வாயுவினிலக்கணந் தெரிய வேண்டுவ தவசிய மானதாலும் வாயு பதார்த்தத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளக் கடமைப் பட்டவர்களாகவே யிருக்கின்றோம். ஆதலால் வாயு மண்டலத்தைப் பற்றிச் சிறிது ஆராய்வாம்.

 

இந்நிலவுலகின் மேற் பாப்பிலிருந்து சற்றேறக்குறைய நூறுமைல் உயரத்திற்கு வாயு மண்டலம் யாண்டும் பரந்து வியாபித்திருக்கிறது. வாயுமண்டலத்திலுள்ள சுத்தமான காற்று நிறமின்றியும், சுவையின்றியும், வாசனையின்றியு மிருக்கும்; ஆனால், நிறை, அளவு, விரிவு முதலான குணங்களுடையது. இனி வாயு மண்டலத்தில் நான்கு வகையான வாயுக்கள் இருக்கின்றன. அவை (1) பிராண வாயு (Oxygen) (2) ஜலவாயு (Hydrogen) (3) உப்புவாயு (Nitrogen) (4) கரியமில வாயு (Carbonic Acid - Gas) என்பனவாம். இவற்றுள் பிராணவாயுவே பிரதானமானது. பிராணவாயு வின்றி மக்களாகிய நாமும் ஏனைய ஜீவராசிகளும் கணமும் உயிருடனிருத்தல் இயலாது. இவ்வுண்மை கொண்டே இதற்குப் பிராணவாயுவென நமதான்றோர் பெயரிட்டார்கள். நெருப்பிற்கும் இவ்வாயுவே ஆதாரமாக விருக்கின்றது. நாம்பானம் பண்ணுகிற நீரினும் இதன் கலப்பிருக்கின்றது. ஒன்பது பங்கு தண்ணீரில் எட்டு பங்கு பிராணவாயு கலந்திருக்கிற தென்றுணர்ந்து கோடல் வேண்டும். தண்ணீரை மின்சார உதவிகொண்டு வாயு ரூபமா மாற்றலா மென்றும் அங்ஙனஞ் செய்யின் பிராணவாயு ஒரு பங்காகவும் ஜலவாயு இருபங்காகவும் பிரிந்து நிற்கு மெனவும், பௌதிகசாத்திரிகள் உண்மை புலப்படுத்தினார்கள். இவ்விருவாயுக்களின் வேறுபாடு தெரிந்து கோடற்குக் கொழுந்து விட்டெரியும் தீச்சுடர் வர்த்தியினை, வாயுக்கள் பிரிக்கப்பட்டு வைத்திருக்கும் இரண்டு பாத்திரங்களுள்ளும் தனித்தனி நுழைத்தால், ஒன்றில் அச்சுடர் கொழுந்து விட்டு முன்னிலும் பிரகாசமாக எரியும்; அப்பாண்டமே பிராணவாயு அடங்கியதாம். மற்றொன்றில் சுடரெரியாது. அப் பாத்திரத்தின் வாயோரமே, நீல நிறத்தோடு எரியும்; அதுவே ஜலவாயு அடங்கியதாம்.

 

கோடை காலத்தில் குளங்கள், குட்டைகள் முதலானவைகளில் நீர்வற்றி வறண்டு போயிருப்பதைக் காண்கின்றோம். ஒரு காலத்தில் நிறைய நீர்பெய்து திறந்தபடியே வெளியான ஓரிடத்தில் வைத்திருப்போமானால் சிறிது சிறிதாக நீர் குறைந்து இறுதியில் ஒன்றுமில்லாமற் போவதையும் காணலாம். அங்ஙன மாதற்குக் காரணம் யாது? கதிரவன் கிரணத்தால் சலம் நீராவியாகத் திரிந்து திரிந்து, ஆலி வாயு மண்டலத்திலிழுத்துக் கொள்ளப்படுகிறதே காரணம். இங்ஙன மிழுத்துக் கொள்ளப் பட்ட வாயுவே நமக்குப் பின் மழையாக வருஷித்து அளவற்ற பயனைக் கொடுக்கிறது. மழையின்றி உலகத்தி லெக்காரியமும் நடவாதன்றோ? மழை யின்றேல் உலகமின்று. இதற்கு "வானின்றுலகம் வழங்கி வருதலாற் - றான மிழ்தமென்றுணரற் பாற்று' என்னும் பொய்யா மொழியே சான்றாமென்க. அங்ஙனமாயின் இம்மழைக்கு ஆதாரமாகிய நீர் வாயுவின் உபகாரம் இத்துணையா மென்பதாகக் கூறவும் படுமோ? இனி வாயு மண்டலம் ஒரு பங்கு உயிர் வாயு கொண்டிருக்கிறதென வைத்துக் கொண்டால் உப்பு வாயு அதை விட நான்குமடங்கு அதிகமாக விருக்கிறது. இவ்வளவு பிராண வாயுவுடன் கலந்திராவிடின் உலகத்துக் காணப்படும் சகல கடின பதார்த்தங்களும் நீராய்ப் போகும். பிராண வாயுவினது ஆற்றலைக் குறைப்பதற்காக இறைவன் இதைவாயு மண்டலத்தில் அமைத்திருக்கின்றார். உயிருடைய பிராணிகளனைத்தினும் இவ்வாயு காணப்படும். தீக் கொழுந்தை இவ்வாயு அடங்கிய பாண்டத்தில் நுழைத்தால் அச்சுடர் அணைந்து போம். இனிக் கரிவாயு வென்பது யாதென ஆராய்வாம். வாயு மண்டலத்தே கலந்திருக்கும் வாயுவின் ஒருபகுதியை எடுத்து அதை 2500 கூறாகப் பகுப்பின் ஒரு கூறு இக்கரி வாயுவாம். ஏனைய வாயுக்களிலும் இதுவே கனமிக் குடைத்து. உலகத்துக் காணப்படும் இயற் பொருள் அனைத்தும் கரி யென்னும் ஓர் முதற் பொருளைக் கொண்டே இருக்கும். பொருள்கள் எரியுங்கால் அவைகளில் அடங்கியிருக்கும் கரி தனியாகப் பிரிக்கப்பட்டு வாயு மண்டலத்திற்குச் சென்று உயிர் வாயுவோடு கலந்துவிடும். எரிமலைகளிடத்தும் மக்கள் வெளிவிடும் சுவாசத்திலும், இவ்வாயு மிகுதியாக உண்டு. உப்பு வாயுவைப் போலவே இதற்கும் எரிகிற நெருப்பை அணைத்து விடும் சக்தி யுண்டென்பதை அறியவும். இவ்வாயு அளவிற்குமே லதிகரிப்பின் மக்களுக்குப் பிணியும், பலவீனமு முண்டாம். இவ்வாயு சுத்தமானதும், நிற மற்றதுமான சுண்ணாம்புத் தண்ணீரிற் படுமாயின் அத்தண்ணீர், பால்போல் வெண்மையாக மாறிவிடும். உப்பு வாயுவிற்கு இக்குண மில்லை; ஆகவே இவ் விரண்டினுக்கும் வேற்றுமை தெரிந்து கொள்ள இஃதோர் முறையாக விருக்கிறது. நான்கு பிரதான வாயுக்களின் இலக்கணங்களைப் பற்றி ஒரு சிலவே ஈண்டு உரைத்தாம். வாயு - நிறை, அளவு, பிரிவு முதலான குணங்களை யடையது எனக் கூறினோ மன்றோ? அவற்றுள் விரிவைப் பற்றி மட்டுஞ் சிறிது தந்துரைப்பாம்; ஏனை விரண்டும் ஈண்டைக்கு அத்துணை ஆவசியகமன்று. ஒரு பொருள் விரிதற்கு உஷ்ணமே காரணமாம். அதுபோலவே குளிர்ச்சியால் குறுகலுறும்; நம்முடைய கைவிரலை ஜலத்திலேயே வைத்திருந்தால் அவ் விரல் முன்னினும் மெல்லிதாகத் தோன்றும். அங்ஙனந் தோன்றுதற்குக் காரணம் விரலின் தோல் சுருக்க மடைவதேயாம். புகை வண்டி செல்லும் இரும்புக் கம்பிகளை நாம் கண்ணுற் றிருக்கின்றோமல்லவா? ஓர் இரும்பு தண்டவாளத்தையும் மற்றோர் தண்டவாளத்தையும் சேர்த்துப் பிணைக்குங்கால் நெருக்கிச் சேர்க்காமல் சிறிது இடைவெளி வைத்தே சேர்ப்பார்கள். ஏனெனில் வெயில் காலத்தில் சூரிய உஷ்ணத்தால் இக் கம்பிகளின் நீளம் அதிகமாகும். நெருக்கியே போட்டு விட்டால் விரிவதற்குக் கூடாமல் ஒன்றோடொன்று மோதுண்டு பிறழ்ந்து போம். மழைகாலத்தில் இத் தண்டவாளங்களுக்கு இடையே வெளி தோன்றுவதும், வெயில் காலத்தில் தோன்றாத்துமே உஷ்ணத்தினால் பொருள்கள் விரிவடைகின்றன என்பதற்கும் குளிர்ச்சியால் சுருங்குகின்றன என்பதற்கும் போதிய சான்றாம். இங்ஙனமே வாயு பதார்த்தங்களும் வெப்பத்தால் விரிவடையும், பொருள் விரித்து செல்லச் செல்ல இலேசாகும். பூமியின் ஓர் பாகத்துள்ள வாயு வெப்பமடைந்து விரியவே இலேசாகி மேலேறும்; இஃது மேற்செல்லவே அவ்விடத்தை நிரப்புவதற்குப் புறத்தேயுள்ள வாயு வந்து சேரும். இதுவும் வெப்பமடைந்து மேற்செல்லும். இங்ஙனமே நிகழா நிற்கும் வாயுவினியக்கம். இவ் வியக்கத்தினாலே காற்று உண்டாகின்றது. நோய்க்கும் வாயு மண்டலத்திற்கும் ஒருவிதமான சம்பந்தமும் இல்லாவிடின் வாயு விலக்கணத்தைப் பற்றி நாம் இங்கு கூற வேண்டுவதேயின்றாம். அங்ஙனங் கூறினும் மற்றொன்று விரித்தல்' என்றுங் குற்றத்தின் கட்படும். ஆகவே சரீர சுகத்திற்கும், வாயு மண்டலத்திற்கும் நிரம்ப சம்பந்த முண்டென்பது பெறப்படும். வாயு மண்டலம் சுத்தமாகவே யிருப்பின் நோயென்பதே யின்றாம். வாயு மண்டலத்தை அசுத்தமாக வைத்திருப்பின் பிணி வருவதற்குத் தடையே இல்லை. வாயு மண்டலம் சுத்தமா யிருக்கவேண்டுவ தவசியமாதலானும், அங்ஙனம் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு அதனைச் சுத்தப்படுத்தும் முறையும் தெரிந்து கொள்ள வேண்டிய தின்றியமையா தாதலானும், இவைகளைத் தெரிந்து கோடற்கு வாயுவி னிலக்கணம் ஒரு சிறிதாயினும் அறியப்படுதல் வேண்டு மாதலானுமே வாயுவைப் பற்றி இத்துணையுங் கூற நேரிட்டது.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment