Friday, September 4, 2020

 பகவதாராதனம்

கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை யடைந்துள்ள நாம், எவ்வளவு கோடிக் கணக்கான புண்ணியங்களைக் கொட்டிக் கொடுத்து, இந்த சரீரத்தை வாங்கியிருக்கிறோம் என்று இதன் அருமை பெருமைகளை உணர்வதில்லை. ஸ்தாவர யோனி முதலிய கீழுள்ள யோளிகளி லெல்லாம் பிறந்து பிறந்திளைத்து, புண்ணியமேலீட்டினாலே வருதல் மிகுந்த அருமையாம்.
அவ்வருமை, ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே தீந்திக் கரையேறுதல் போலாம். இத்தகைய பெறுதற்கரிய பிறவியை யடைந்த பிறகேனும், நம்முடைய வேலை இத்துடன் முடிந்து விட்டதென்று கவலையில்லாமல் இருக்க முடிகிறதா? இல்லை. நம்முடைய ஐச்வர்யம், ஆயுசு, யௌவனம் மூன்றும் நிலையில்லாது ஒரு க்ஷணத்தில் போய்விடும் என்பதை சற்று நிதானித்து யோசித்துப் பார்த்தால், நாம் தைரியமாக உட்காரத்தான் முடியுமா? சூரியன் உதிக்கும்பொழுது பணம் சம்பாதிப்பதற்காக ஏற்பட்ட காலம் வந்து விட்டதென்றும் நினைத்து, ஜனங்கள சந்தோஷமடைகிறார்கள்.


"நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்"


என்று செந்நாப்போதார் கூறியபடி, உண்மையில் சூரியன் நாள் என்னும் வாளாயுதத்தால் தங்களுடைய ஆயுட்காலத்தை அறுத்துக்கொண்டு வருவதாக நினைத்து, 'ஐயோ, எம்பெருமான் தன்னையடையும் உபாயத்தைப் பின் பற்றுவதற்காகக கொடுத்த ஆயுட்காலத்தில், ஒருநாள் வியர்த்தமாகப் போய் விட்டதே! அவருடைய திருவருளைப் பெறுதற்கான காரியம் நாம் ஒன்றும் செய்திலோமே" என்று இரங்குவாரில்லை,

 

மனித வாழ்க்கையானது "ஆற்றங்கரை வாழ் மரம்போல்'' நிலையில்லாதிருப்பதால், பெரியோர்கள் பிரசங்கங்கள் மூலமாகவும், உபதேசங்கள் மூலமாகவும், தற்காலத்திலுள்ள நல்ல சஞ்சிகைகள் சில கட்டுரைகள் மூலமாகவும், "மனிதனே! நீ தீப்பிடித்து எரியும் வீட்டிற்குள் இருக்கிறாய். சீக்கிரம் வெளியே வந்து நெருப்பை அணை" என்று சொன்னால், அவர்கள் "அதற்சென்ன, மெதுவாய் அணைத்துக் கொள்ளலாம்' என்கிறார்கள். என்னே இவர்களின் பெருமை' இவர்கள்; குளிர்ச்சியாக இருப்பதால் சந்தன மென்று நினைத்துக்கொண்டு, பஞ்சேந்திரியங்களாகிற சர்ப்பங்களின் மேல் கையை வைத்துக் கொண்டு சொஸ்தமாகத் தூங்குகிறார்கள். தட்டி யெழுப்பி உண்மையை உணர்த்தினாலும், ''தூக்கத்தில் எழுப்பாதே, சற்றுப்பொறு.'' என்கிறார்கள். ஆகையால் இவர்களை விட்டு, விழித்துக்கொண்டவர்கள் இனி என்ன செய்ய வேண்டுமென்பதை விசாரிப்போம்.

சிறைவாசம் செய்யும் ராஜகுமாரனுக்கு, விடுதலையடைந்தவுடன் பட்டாபிஷேகம் செய்தாலும் செய்யலாம். அல்லது சிறையிலேயே பட்டா பிஷேகம் செய்து, பின்னர் விடுதலை செய்தாலும் செய்யலாம். அதுபோல, பஞ்சேந்திரியங்களாகிய சிறையில் வாசம் செய்யும் ஆத்மா சகல பற்றுக்களையும் விட்ட பிறகு ஈசுவரனை ஆராதிக்கலாம். அல்லது ஈசுவரனையடைந்தால், அதாவது அவரிடம் வேறு பிரயோஜனத்தைத் தேடாமல் பக்திசெய்து, சகல கருமங்களை யும் அவருடைய கைங்கர்யமாகவே செய்துவந்தால், பற்று தானாக விட்டுப்போகும். எப்படியெனில், ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு தூங்கும் குழந்தைக்குத் தூக்கம் அதிகமாக ஆக, அதன் பிடிப்பும் தளர்ந்து கொண்டே வந்து முடிவில் பொம்மையைக் கீழே போட்டு விடுதல் போல, பக்தி முதிர முதிர, பற்று விட்டுப்போகும். இக்கருத்தை நாயனாரும்,


"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு''


என்றார். நாள் முழுவதும் ஒருவன் எத்தனை ஞானசாஸ்திரங்களைப் படித்தலும், கேட்டாலும், அன்று பத்து நிமிவு நோமேனும் ஒரு இடத்தில் உட்கார்ந்து, ஏகாக்கிர சித்தத்தோடு, தியானமோ அர்ச்சனையோ, தோத்திரமோ செய்து, கடவுளை வழிபடுவதற்கு ஈடாகாது. இதனாலேயே புலவர் பெருமானாகிய நாயனாரும்,


''கற்றதனா லாயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்?'


என்றார். ஆகையால், ஒரு தினத்தில் எத்தனையோ மணி நேரங்களை, சாரமற்ற வீண் பேச்சுக்களிலும், ஸினிமாக்களிலும், டிராமாக்களிலும், செலவழிக்கும் நாம், சொற்ப சேரத்தையாவது பகவதா ராதனத்தில் செலவழிக்க வேண்டும். இன்றேல், உண்டு உறங்குவதையே பொழுது போக்காகக் கொண்ட நாற்கால் விலங்குகளுக்கும், பகுத்தறிவுடைய மனிதனுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

 

பகவதாராதனத்திற்கு வேண்டிய உபகரணங்கள் நம் படம் ஒன்றும் இல்லையே யென்று நீங்கள் விசனப்படவேண்டாம். முக்கியமாக மூன்று உபகரணங்கள் கடவுளை ஆராதிப்பதற்காக வேண்டியவை. அவை மூன்றும் உங்களிடத்திலேயே இருக்கின்றன. அவற்றைப் புதிதாகத் தேடவேண்டிய அவசியமு மில்லை; ஒருவரைப்போய் இரவல் கேட்கும்படியான அவசியமுமில்லை. அவைகள் தான் மனம், வாக்கு, காயம் என்னும் உயர்ந்த உபகாணங்களாகும். அவற்றைக்கொண்டு நீங்கள் கார்யம் செய்வதில் குறைவில்லை; அன்பு செய்வதில் குறைவில்லை. ஆனால், குடியானவன் வருஷ முழுதும் ஜலத்தைப் பாத்தியிலே பாய்ச்சாமல், பாழிலும் பள்ளத்திலும் பாய்ச்சிவிட்டு பயிர் வளரவில்லையே யென்று குறை கூறுவது போல, உங்கள் மனம், வாக்கு, காயமாகிய திரிகரணங்களையும் சர்வேச்வரன் பக்கல் திருப்பி விடாததே குற்றமாகும். அப்படிக் கொஞ்சகாலமேனும் சிரத்தையுடன் செய்து பாருங்கள். பிறகு ஆத்ம ஞானம் என்னும் பயிரானது செழித்தோங்கி வளர்வதை அனுபவசித்தமாய் அறிவீர்கள். "சர்வேச்வரனை ஆராதிப்பதற்கு முக்யமாக வேண்டிய மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்று உபகரணங்கள் இருந்தாலும் போதிய திரவியம் வேண்டாமா? அது எங்களிடம் இல்லையே" என்று கேட்பவர்களைப் பார்த்து, நம்மாழ்வார் கீழ்வரும் பாசுரத்தால் உபதேசம் செய்கிறார்.


பரிவதில் ஈசனைப் பாடி
விரிவது மேவல் உறுவீர்
பிரிவகை பின்றி நன்னீர் தூய்
புரிவது புகை பூவே.

 

சர்வேச்வான், தனது ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்னும் லீலை பின்நிமித்தம் உண்டா யிருக்கும் அண்டகோடிகளாகிய லீலா விபூதியையும், பேரின்ப வீடாகிய நித்ய விபூதியையும், தனக்கு ஐச்வர்யமாக உடையவனாகையால், பக்தன் அவனுக்கு ஒன்று கொடுத்து நிரம்பப் போவதில்லை. ஆயினும், ஒரு தகப்பன் தன் குழந்தைக்குக் கொடுத்த தின்பண்டத்தில் கொஞ்சம் எடுத்து, தன் குழந்தையே திருப்பித் தனக்குக் கொடுத்தால் அவன் அக்குழந்தையின் அன்பைப் பாராட்டி, அதை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளுதல் போல, சர்வேச்வானும், தன் குழந்தையாகிய பக்தன் ஸமர்ப்பிக்கும் பதார்த்தம் கொஞ்சமா, அதிகமா, உயர்ந்ததா, தாழ்ந்ததா என்று பேதம் பாராட்டாமல், அவன் நெஞ்சில் ஈரம் இருக்கிறதா, அதாவது உண்மையான பிரீதியுடன் கொடுக்கிறானா என்று பார்த்து ஸ்வீகரிக்கிறான். மேற்கண்ட பாசுரத்தில் "பரிவதில் ஈசன்'' என்பது துக்கமில்லாத ஈசன் என்று பொருளாகும். எந்தக் காரணத்திற்காக துக்கமில்லாத ஈசன் என்றால் பகவான் சகல ஐச்வர்யங்களுக்கும் அதிபதியென்று தெரிந்த பக்தன், அவனை ஆராதிப்பதற்கு வேண்டிய பதார்த்தங்களோ, உபகரணங்களோ நிறைய இல்லையே துக்கப்பட மாட்டா னாதலால், சர்வேச்வரனும் துக்கப்படமாட்டான். பகவானுடைய சுபாவம் தெரியாது, பக்தன் துக்கப்பட்டால் பகவான் "அந்தோ! இவன் நம்முடைய சுபாவம் தெரியாமல் அநாவசியமாக துக்கப்படுகிறானே" என்று தானும் துக்கிப்பான் என்றபடி.

 

“பரிவதில் ஈசன்" என்றால் பக்ஷபாதமில்லாத பகவான் என்றம் ஒரு அர்த்தம் உண்டு. இதர தேவதைகள் பரிபூர்ணமில்லாதவைக ளாதலால், தமக்கு வேண்டியதை தன் பக்தர்கள் சமர்ப்பிக்காவிட்டால், அவர்களுக்கு இன்ன பலனைக் கொடுக்கமாட்டேனென்று குறைவான பலனைக் கொடுப்பதாலும், தமக்கு வேண்டியதைக் கொடுப்பவர்களிடம் திருப்தியடைந்து முழுபலனைக் கொடுப்பதாலும், பக்ஷபாத முள்ளவைகளாக இருக்கும். எம்பெருமானோ, சகல ஐச்வர்யங்களும் நிரம்பியுள்ள பரிபூர்ணனாக இருப்பதால் தனக்கொன்றும் வேண்டியதில்லை யாகையால், கனக்கு ஒன்றுங் கொடுக்கவில்லையே யென்று பக்தர்களிடம் பக்ஷபாதமாக இருக்கமாட்டான். மேலும், "எனக்குக் குறைவாகக் கொடுத்தான். அந்த தேவதைக்கு அதிகமாகக் கொடுத்தான்" என்று நினைத்தும் பலனைக் கொடுப்பதில் பக்ஷபாதமாக இருக்க மாட்டான். ஸ்ரீய: பதியாகிய நாராயணனே பரதேவதை, அவனே சர்வ ரக்ஷகன் என்று நம்பி, உள்ளன்புடன் ஒரு கும்பிடு மாத்திரம் போடுபவர்களுக்குக் கூட பரமபதத்தைக் கொடுத்து, இன்னும் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே யென்று வெட்கப்பட்டு நிற்கும் பெருந்தகையாளனாகையால், அவனுக்குப் பக்ஷபாதம் என்பதே தெரியாது. இதனாலேயே தொண்டரடிப்பொடி யாழ் வாரும் "அரங்கனாய பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே" என்றார்.

 

ஆனால், "இவ்வளவு கருணையுள்ளவன் ஏன் நம்மை உடனே வந்து ஆட்கொள்ளலாகாது'' என்று கேட்கலாம். இதற்கு பதில் “எண்ணின வாராகா இக்கருமங்கள்'' என்று நம்மாழ்வார் சொல்லியிருக்கிறார். அதாவது, யாராவது மோக்ஷம் வாங்கிக்கொள்ளமாட்டார்களா என்று பகவான் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் எண்ணத்தையும் ஆகாமற்படி செய்யும்படியான அவ்வளவு கொடிய பாபங்கள் செய்திருக்கிறோம் என்பது கருத்தாகும். ஆயினும் அதற்காக அதைரியப்படவேண்டாம். நாட்டாருக்குத் தெரிவதற்காக ஒரு அடி எடுத்துவையுங்கள்; மற்ற காரியங்களை பகவான் பார்த்துக்கொள்ளுவார்.

 

ஒருவன் தன் பந்துக்களுக்கு விருந்து செய்வதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் அந்த விருந்தில் குற்றம் கண்டு பிடிப்பது சகஜம். அவனே தன் தகப்பனுக்கு விருந்து செய்து, சாப்பாடு நன்றாக இல்லாவிட்டாலும், பிதாவானவன் "நான் பதார்த்தங்கள் தாராளமாகக் கொடாதது என்மேல் பிசகு. பாத்திரங்களையும் சரியாக ஈயம் பூசிக் கொடுத்திருக்க வேண்டும்" என்று புத்திரவாஞ்சையால் குற்றத்தைத் தான் ஏற்றுக் கொள்ளுவான். அதுபோல, பகவான் தன்னை ஆராதிப்பவர்கள் மனதில் உண்மையான பிரீதி இருக்கிறதா என்று கவனிப்பானே யொழிய, ஆராதிக்கும் விதத்தில் ஏற்படும் குற்றத்தையும், பதார்த்தங்களில்லாத குறையையும் பாராட்டாமல் இருப்பதுடன் அவற்றைத் தன் குற்றமாகவே ஏற்றுக்கொள்ளும் உத்தமகுணம் வாய்க்தவன்.

 

பகவான் ஸர்வவஸ்து பரிபூர்ணனாக இருக்கிறார். அதாவது, ஒரு அணுவில், ஒரு ஐலத்துளியில், இருக்கும் கடவுளும் தன்னுடைய பரிபூர்ண மான சக்தியுடனும் குணங்களுடனும் விளங்குவதால், வேண்டுமென்று நினைத்தால் அந்த இடத்திலிருந்தே தன் சங்கல்பமாத்திரத்தில் கோடானு கோடி அண்டங்களை ஸ்ருஷ்டி செய்யும்படியான சக்தியுடன் விளங்குகிறார். அப்படியானால், அகண்டாகாரமான வடிவையுடைய கடவுள் அணுவிலும் சர்வசக்தியுடன் விளங்குவதாகச் சொல்லுவதால், தன்னை சுருக்கிக்கொண்டு, நெருக்கத்துடன் அசௌகரியப் பட்டுக்கொண்டு அணுவில் இருப்பதாக நினைத்து விடவேண்டாம். பதினாலு உலகங்கள் கொண்டதாகிய ஒரு பிரம்மாண்டத்தை ஒருவன் சிருஷ்டித்துக்கொண்டு, தான் ஒருவன் மாத்திரம் அந்த அண்டத்தில் வசித்தால் எவ்வளவு தாராளமாகவும், சௌகர்யமாகவும் அதில் வசிப்பானோ, அவ்வளவு சௌகர்யமாகவே பகவானும் ஒரு அணுவில் இருக்கிறார். இக்கருத்தையே நம்மாழ்வாரும்,  "பரந்ததன் பரவையும் நீர்தொறும் பரந்துளன் பரந்த அண்டம் இதென'' என்று தமிழ் வேதமாகிய திருவாய்மொழியில் கூறியிருக்கிறார். மேற்கூறியவாறு பகவான் ஸர்வவஸ்து பரிபூர்ணனாக இருப்பதால், பரிபூர்ணமான சரீரத்தால், ஒரே புஷ்பமாக இருந்தாலும் அதுவம் பரிபூர்ணமாக இருப்பதால் அதையெடுத்து, பரிபூர்ணனாகிய பகவானுக்கு ஸமர்ப்பித்தால் மிஞ்சுவது, அதாவது பலன் பரிபூர்ணமேயாகும். ஆகையால் ஒருவன் நாம் ஹேமமான சரீரத்தில் இருப்பதால் மஹா மஹிமாதிசயங்கள் உள்ள பகவானை ஆராதிக்க யோக்கியதையுள்ளவனல்ல னென்றாவது, அவனுக்கு சமர்ப்பிப்பதற்குப் போதிய பதார்த்தங்கள் இல்லை யென்றாவது குறையாக நினைக்க வேண்டியதில்லை.

 

"ஈசனைப் பாடி' என்பது "பரமபதத்தில் இருக்கும் பரவாசுதேவனாகிய நாராயணனை அங்கு போய்ப்பாடி" என்று பொருளாகும்.

 

“விரிவது மேவல் உறுவீர்" அதாவது ''ஞானத்திலும் கைங்கர்யங்களிலும் விரிவை அல்லது ஜீவாத்ம சொரூபத்தை யடைவதாகிய ஸம்பத்தை அடையப் பார்ப்பவர்களே” என்பதாம்.

 

"பிரிவகையின்றி" அதாவது "பகவானை ஆராதிப்பதற்கு வேண்டிய திரவியமோ உபகரணங்களோ இல்லையென்று அவரிடமிருந்து பிரியப் பார்க்காமலும், இதர பிரயோஜனத்தை அவரிடம் கேட்டால் அவற்றைக் கொடுத்து நம்மை விலக்கி விடுவாராகையால் வேறு புருஷார்த்தத்தை அபேக்ஷித்து அவரிடமிருந்து பிரியப் பார்க்காமலும்” என்று பொருளாகும்.

 

"நன்னீர் தூய்" சுத்த ஜலத்தைத் தூவி என்பது இதன் பொருளாகும்.
நல்நீர் என்றால் உயர்ந்த கங்கா ஜலம் என்று நினைத்துவிட வேண்டாம்.
ஏலக்காய் முதலிய வாசனை திரவியங்கள் கூட கலக்காத வெறும் ஜலமே போதுமென்றபடி. யமுனை, ஸரஸ்வதி ஆகிய இரண்டு நதிகளுடன் சேரும் இடத்திற்கு முன்னுள்ள கங்கையை சுத்த கங்கையென்று வழங்குவது போல, வாசனைத் திரவியங்கள் கலக்காத ஜலத்தை "நன்னீர்'' என்றார் ஆழ்வார். ஜலத்தை உத்தரணியில் எடுத்துக்கொண்டு, கையை இன்ன மாதிரி வைத்துக் கொண்டு, இத்தனை தரம் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற நியதி யில்லாமல், சாதாரணமாகக் கையால் ஜலத்தை எடுத்துத் தூவி எரிந்தாலே போ துமானது என்பதைக் காட்டுவதற்காகவே ''தூய்” என்னும் பதத்தைப் போட்டார்.

 

"புரிவதுவும்'' நீங்கள் சமர்ப்பிப்பதுவும், அதாவது நீங்கள் பகவதாராதனத்தின்போது சமர்ப்பிக்க வேண்டியது என்னவென்றால்.

 

"புகைபூவே'' தூபமும் புஷ்பமுமே யாம். வேறொன்றும் வேண்டிய தில்லை யென்று தாத்பர்யம்.

 

கூரத்தாழ்வான் திருக்குமாரராகிய பட்டர் திருக்குமாரராகிய பட்டர் இதற்கு வியாக்கியானம் உபந்யசிக்கும் போது "அகிற் புகை, கருமுகைப்பூ என்றாற்போல விசேஷித்துச் சொல்லாமையால் எந்தப் புகையைக் கொண்டாயினும், எந்தப் பூவைக் கொண்டாயினும் எம்பெருமான் திருவடிககளில் அடிமை செய்தாலும் அவன் அதனை அங்கீகரித்தருள்வான்'' என்று அருளிச்செய்து, மற்றும் அதன் விவரணமாக ''சருகையிட்டுப் புதைத்துத் தூபம் சமர்ப்பித்தாலும் அமையும்; கண்டங்கத்திரிப் பூவையிட்டு அர்ச்சிக்கவும் அமையும்'' என்று சொன்ன வளவிலே நஞ்சீயர் “தகண்டகாரிகா புஷ்பம் தேவாய விவேதயேத்'' என்று கண்டங் கத்திரிப்பூவைப் பகவதார்ச்சனைக்கு உ.தவாதாகச் சாஸ்திரம் விலக்கி யிருப்பதற்கு என்ன காரணம்” என்று கேட்டார் பட்டர். "அதன் கருத்து, அவனுக்கு ஆகாதென்கிறதன்று; ஆவலோடு சென்று பறிக்கிற அடியவர் கையிலே முள்தைக்கு மென்பது பற்றியே தவிர்த்தது காணும்;


"கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முனரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமுமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே."

என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தில், திருத்துழாயோடு, - காகணம் பூவோடு, வில்வ தளத்தோடு, தாமரை மலரோடு, அல்லிப் புஷ்பத்தோடு வித்தியாசமில்லாமல் அனைத்தையும் திருமங்கை யாழ்வார் அருளிச் செய்கையாலே, அச்சிக்கிற உபகரணம் பிரதானமன்று; அர்ச்சிக்கிறவனது அன்பே முக்கியம். அன்பில்லா தவன் இடில் திருத் தழ” யும் ஆகாது; அன்புடனே இடின் காகணம் பூவம் ஆகும் என்பது விளங்குகின்றதன்றோ? இங்ஙனமன்றியே, அப்பிராகிருத வஸ்துவான பரமாத்மாவின் அர்ச்சனைக்கு ஏற்றதொரு பிராகிருத வஸ்துவும் உண்டோ?" என்று சொல்லியருளினார்.

 

மற்றொரு சமயத்தில் நஞ்சீயர் பட்டரை நோக்கி, "பகவானுடைய திருநாமத்தைச் சொல்லும் போது ஆசார நியமமுடையவனாய்ச் சொல்ல வேண்டுமென்கிற நியதியுண்டோ?'' என்று கேட்க, பட்டர், 'கங்கையிலே முழுகப் போமவனுக்கு வேறொரு தீர்த்தத்திலே நீராடி அதன் பின்பு போக வேண்டு மென்பதுண்டோ? இல்லையே. அது போலவே, பகவந்நாமத்தைச் சொல்லுகைக்கும் ஆதரமே வேண்டுவது, அதனையடையவர்களே அதிகாரிகள்' என்று அருளிச் செய்தார்.

 

காமுகர்கள் அவர்கள் நேசிக்கும் ஸ்திரீகளுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அது அவர்களுக்குக் கஷ்டமாகத் தோற்றாது ஸகமாகத் தோற்றுவது போல், மெய்யன்பர்கள் எம்பெருமானுக் கென்றே உயிர்வாழ்வதால், அவர்கள் அவன் பொருட்டே செய்யும் சகல கர்மங்களும் ஸுகமாகவே இருக்கும். பகவதாராதரமும், பகவந்நாமத்தை உச்சரித்தலும், பகவதநுபவமும், அவர்களுக்கு எப்படியிருக்குமெனில், சர்க்கரை நிலத்தில் தேன்பாய்ச்சிப் பயிரிட்ட திராக்ஷைப் பழம் போல் இனிமையாக இருக்கும், ஆனால், பகவத் விஷயங்கள் ஏன் எல்லோருக்கும் ருசியாக இல்லையென்று கேட்கலாம். பித்தம் அதிகமாய் உள்ளவனுக்குப் பால் கசப்பதுபோல, கர்மம் அதிகமாக உள்ள பாபாத்மாக்களுக்கு பகவத் விஷயம் ருசிக்காது; கசப்பது சகஜந்தான். பாபம் குறைவாக உள்ளவர்களுக்கே, பகவானிடத்தில் நம்பிக்கையும், பகவத் விஷயத்தில் ருசியும் இருக்கும்.

இதுவரையில் நாம் கூறியவாற்றால், ஒவ்வொருவரும் தத்தம் சக்தியானுஸாரம், உள்ளன்புட னே தினந்தோறும் சிறிது நேரமேனும் பகவதாராதனம் செய்யவேண்டுமென்று ஏற்படுகிறது. இதோடு நில்லாமல் இன்னொரு காரியம் செய்து வந்தீர்களானால், உங்களுக்கு மேற்பட்ட ஞானிகள் ஒருவருமில்லை. அதாவது, ''பகவான், என்னால் கொடுக்கப்பட்ட சரீர இந்திரியா திகளைக்கொண்டு, தனது ஆராதன ரூபமான கர்மங்களை, தனது லீலா விபூதியின் பொருட்டு, தானே செய்வித்துக் கொள்ளுகிறான்' என்னும் எண்ணத்துடன் சகல காரியங்களையும் செய்ய வேண்டும். ''வருந்தினால் வாராத தொன்றில்லை'' என்றபடி, பழக்கத்தினாலும் விடாமுயற்சியினாலும் இந்த எண்ணமானது மனதில் வேரூன்றும்படி செய்துவிட்டால், நீங்கள் வெகு சீக்கிரம் கடவுள் கிருபையை யடைந்து, சரீர யாத்திரை முடிந்த பிறகு பேரின்ப வீட்டையும் அடையலாம்.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - ஜுலை ௴

 

 

 

No comments:

Post a Comment