Thursday, September 3, 2020

 

நகைச் சுவை

(ர. பா. மு. கனி)

நாம் ஏன் சிரிக்கிறோம்? இது ஒரு நகைக்கத்தக்க கேள்வி என்று நினைக்கிறீர்களா? எங்கே பார்க்கலாம். நாம் ஏன் சிரிக்றோம்? பதில் சொல்றுங்கள். யாராவது விநோதமாக, வேடிக்கையாக ஒன்று சொன்னால் நாம் சிரிக்கிறோம் என்கிறீர்கள். இதோ பாருங்கள்! நம் நண்பன் ஒருவன் வழுக்கி விழுந்து விட்டான். எவ்வளவோ நீங்கள் சிரிப்பை அடக்கிப் பார்க்கிறீர்கள். கடைசியில் வாய்க்குள்ளாவது சிரித்தே விடுகிறீர்கள். காரணமென்ன? திரும்பவும் யோசிப்போம். உங்களில் அனேகர் ஆங்கில எழுத்தாளர் டிக்கன்ஸ் எழுதிய 'பிர்விக் பேப்பர்ஸ்' படித்திருப்பீர்கள். அதை வாசிக்கும்போது உங்களை அறியாமலே சிரித்திருப்பீர்கள். காரண மென்ன? அவர் நகைச்சுவை ததும்ப எழுதுகிறார் என்ற பதிலைக் கொடுக்க வேண்டாம், காரணம் இது தான். அவர் வாழ்க்கையைத் தலை கீழாகப் படம் பிடித்திருக்கிறார். அது தான் நகைச் சுவையை உண்டாக்கி விடுகிறது. இப்பொழுது தெரிகிற தல்லவா நாம் ஏன் சிரிக்கிறோம் என்பதின் பதில்? ஆமாம். நாம் எது உலக இயற்கை என்று நினைக்கிறோமோ அதற்கு மாறுதலாக ஒரு விஷயம் நடந்தால் நாம் சிரிக்கிறோம். மனிதன் வழுக்கி விழுவது இயற்கை. இருந்தாலும் நம்மைப் போல் நம் நண்பனும் கடந்து வரவேண்டும் என்பது நம் மனதில் உள்ள எண்ணம், அதற்கு மாறுதலாக அவன் தவறி விழுந்து விட்டால் நமக்குச் சிரிப்பு வருகிறது. அது போல் ஒரு விஷயத்தை உதாரணமாகப் பெருத்த வயிறை உடைய ஒருவனை நாம் பெரு வயிறான் அல்லது சட்டி வயிறான் என்போம். அதற்கு மாறாகத் “தும்பிச்சை யில்லாப் பிள்ளையார்" என்றால் நமக்குச் சிரிப்பு வருகிறது.

சரி. சகைச்சுவை என்றால் என்ன என்பது நமக்குத் தெரியும். வாய் விட்டுச் சிரிக்கச் செய்வது தானா பகைச்சுவை இல்லை. மனதிற்குள்ளேயும் நகைச்சுவை நம்மை மகிழச் செய்யும். புன் முறுவலாகச் சிரிக்கவும் வைக்கும். வாய் விட்டுச் சிரிக்கச் செய்வது அல்லது வயிறு குலுங்க நகைக்க வைப்பது ஒரு வசை ஹாஸ்யம். அவ்வளவு தான். இன்னொரு விஷயம். ஒரு பெரியவர் கூறுகிறார், வாய் விட்டுச் சிரிப்பவனை விடப் புன் சிரிப்பாகச் சிரிப்பவன் நகைச் சுவையை நன்கு அனுபவிக்கிறான் என்று. நீங்கள் இதை அனுபவத்தில் பாருங்கள்,

நகைச் சுவை எப்பொழுது வெளிவருகிறது? எதை எல்லாம் நகைச் சுவையில் வெளியிடலாம்? நகைச்சுவை பொதுவாக உற்சாகத்தில், சந்தோஷமாக இருக்கும் போது மட்டும் வெளிவருகிற தென்பதில்லை. சந்தோஷ சமாச்சாரங்கள், வேடிக்கையான விஷயங்கள் இவற்றைத் தான் ஹாஸ்யமாக வெளியிட முடியுமென்பதில்லை. நகைச்சுவை எந்தச் சமயத்திலும் வெளிவரும்; எவ்விதமான உணர்ச்சியையும் வெளியிடும். ஏக்கத்தை, வருத்தத்தை, ஏமாற்றத்தை, பரிகாசத்தை எல்லாவற்றையும் ஹாஸ்யத்திலே வெளியிடலாம். தமிழ் இலக்கியத்தில் கபிலர் முதல் கம்பன் வலாயும்
நகைச் சுவையைச் கையாண் டிருக்கின்றனர். பிற்காலத்தே நகைச்சுவை கொண்ட தனிப் பாடல்கள் பல பாடப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். ஆகவே சந்தோஷம், புகழ்ச்சி முதலியவை தவிர மற்றவற்றையும் ஹாஸ்யமாகக் கூற முடியும் என்பதற்கு ஒரு மூன்று உதாரணங்கள் கூறி முடிப்போம்.

1. ஏக்கம்: - ஒரு வீரசைவப் புலவர். வைணவர்களைக் கண்டாலே பிடியாது. பெருமாள் கோயில் தப்பித்தவறி எதிர்ப்பட்டு விட்டால் அங்கு நின்று நாலு வார்த்தை திருமாலை நிந்திக்காமல் போகமாட்டார். அத்ததைய புலவர் ஒரு நாள் கன்னபுரம் என்ற ஊருக்குப் போயிருந்தார். ஒரு திருமால் கோயிலைக் கண்டு அப் பக்கம் சென்றார். திருமாலுக்கு இவர் வரும் நோக்கம் தெரிந்து விட்டது போலும். கோயிற் கதவு அடைத்துக் கொண்டது. வெளியே நின்ற புலவர் யோசித்தார். திருமாலைப் புகழ்ந்து பாட ஆரம்பித்து விட்டார்.

'கன்னபுரமாலே கடவுளிலு நீயதிகன்'

"கன்னபுரத்துத் திருமாலே! எம் கடவுளாம் சிவனை விட! பெரியன்'' என்றார். கபாடம் திறந்தது. உடனே புலவர் பாட்டைத் தொடர்ந்து திருமாலைக் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார். ஆனால் உம்மை விட நான் பெரியவனாக்கும்" என்கிறார்.

'உன்னிலுமோ யானதிகன்'

இவ்வாறு பாடிய உடனேயே கோயில் கதவு எங்கே மீண்டும் அடைத்துக் கொள்ளுமோ என்று அவசரமாகவே பாட்டை முடிக்கிறார்.

'ஒன்று கேள் - முன்னமே உன் பிறப்போ பத்து உயர் சிவனுக் கொன்றுமிலை என் பிறப்போ எண்ணத் தொலையாதே?'

"ஒரே ஒரு விஷயம். கதவை மூடுமுன் அதையும் கேட்டு விடு'' என்று ஆரம்பித்துத் தன் கூற்றின் காரணத்தைக் கூறுகிறார். "முன்னால் நீ பத்து அவதாரந்தானே எடுத்தாயாம். அதாவது பத்துத்தடவை தானே பிறந்தாயாம். சிவனுக்கு ஒரு பிறப்புக் கூடக் கிடையாதாமே. ஆனால் எனக்கு எத்தனை பிறப்புக்கள் தெரியுமா? அடேயப்பா! அதை எண்ணியே தொலையாது.''' பாட்டு முழுவதையும் படியுங்கள்.

"கன்னபுர மாலே! கடவுளிலு நீயதிகன்

உன்னிலுமோ யானதிகன் ஒன்றுகேள் – முன்னமே

உன் பிறப்போ பத்து உயர் சிவனுக் கொன்றுமிலை

என் பிறப்போ எண்ணத் தொலையாதே."

 

இதில் புலவர் எதை வெளியிடுகிறார்? முதலாவதாகத் திருமாலைக் கிண்டல் செய்வதாக நமக்குப் படுகிறது. அடுத்தபடியாகச் சிவனின் பெருமையைப் பேசுவதாகத் தெரிகிறது. இவற்றிற் கெல்லாம் மேலாக அவர் இதில் வெளியிடும் உணர்ச்சி ஏக்கம். 'பிறவியாகிய பெருங்கடலை எவ்விதம் கடக்கப் போகிறேனோ? என்ற ஏக்கந்தான் அது. கடைசி அடியில் அது எவ்வாறு பிரதி பலிக்கிற தென்று பாருங்கள்!

2. வருத்தம்: - ஒரு புலவர் காட்டு வழியே போய்க் கொண்டிருக்கிறார். கையில் கட்டுச் சாதமூட்டை யொன்றிருக்கிறது. பசி அதிகமாய் விட்டது. ஒரு ஓடையைப் பார்க்கிறார். அதன் கரையில் கட்டுச் சாத மூட்டையை வைத்து விட்டுக் கால் கை சுத்தி செய்யச் செல்கிறார். அப்போது அவ் வழியாக வருகிறது ஒரு நாய். சாத மூட்டையை வாயில் கௌவுகிறது; எடுக்கிறது ஓட்டம். புலவர் வந்தார். மூட்டையைத் தேடினார். தூரத்தில் ஓடும் நாயின் வாயில் அதைக் கண்டார். பசியில் அதை விரட்டவும் சக்தியில்லை. வயிறோ நெருப்பை வைத்துக் கட்டியது போல் காத்துகிறது. அப்படி யிருந்தும் அவர் தன் நிலையை ஒரு பாட்டாகவே பாடுகிறார் (தற்கால சினிமாப் பாத்திரம் போல.)

‘சீராடையற்ற வைரவன் வாகனஞ் சேரவந்து

பாராரு நான்முகன் வாகனந் தன்னை முன்பற்றிக்கெளவி

நாராயணுயர் வாகனமாயிற்று; நம்மை முகம்

பாரான் மைவாகனன் வந்தேவயிற்றினிற் பற்றினனே?'

 

[வைரவன் வாகனம்-நாய். நான்முகன் வாகனம்-அன்னம் (இங்கே அன்னமாகிய சாதம்.) நாராயணுயர் வாகனம்-கருடன் (கருடன் போல் பறந்து விட்டது.) மைவாகனன்-அக்கினி பகவான் (வயிறு நெருப்புப் பற்றியது போல் பசியால் காந்த லெடுத்ததாம்.]].

நாம் தான் இதைப் படித்த உடன் சிரிக்கிறோம். புலவர் இதைச் சிரித்துக் கொண்டா பாடி இருப்பார்? 'வயிற்றெரிச்சல்' என்று சொல்கிறோமே, உண்மையாக இந்தப் புலவர் அதோடு தான் இந்தப் பாட்டைப் பாடி யிருக்கவேண்டும்.

3. பரிகாசம்: - பாணன் ஒருவன் ஒரு வீட்டிலிருந்து சத்தமிட்டுப் பாடினான், மறுநாட் காலையில் பக்கத்திலிருந்த இன்னொரு வீட்டிற்குப் போனான். அது ஒரு கோயில் தாசியின் வீடு. அவளுக்குப் பாணனை நன்றாகத் தெரியும். பாணனுக்குத் தான் முதல் நாளிரவு பாடியதை அவள் கேட்டாளா, அதைப்பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறாள் என்பதை அறிய ஆவல். அவன் எதிர் பார்த்தது போலவே அவன் நுழைந்த உடனேயே அவள் அதைப் பற்றி பிரஸ்தாபித்து விட்டாள்.

‘ஈட்டுபுகழ் நந்தி பானா!  நீ எங்கையர்தம் - வீட்டிருந்து பாட'

என்று ஆரம்பிக்கிறாள். பாணனுக்குத் தன் இசையின் இனிமையை அவளும் அனுபவித்திருக்கிறாள் என்ற மகிழ்ச்சி யுண்டாகிறது. ஆனால் பின்னால் அவள் சொன்னவற்றைக் கேட்ட உடன் தான் விளக்கெண்ணெய் குடித்தவன் ஏப்பமிடும் போது முகத்தை வைத்துக் வொண்டிருப்பது போல் ஆய்விட்டது அவன் முகம்.

'விடிவளவும்-காட்டிலழும் - பேயென்று(ள்) அன்னை, பிறர்நரி யென்றார், தோழி-நாயென்று(ள்), நீ என்றே(ன்) நான்?'

“என் தாய் காட்டில் பேய் அழுகிற தென்றாள். என் வீட்டிலிருந்த மற்றவர்களோ சந்தேக மில்லாமல் ‘நரி தான் ஊளை யிடுகிறதென்றனர். இவர்களை யெல்லாம் விட என் தோழி இருக்கிறாளே அவளுக்கு ரசிகத்நன்மை அதிகம். அவள், 'இது நாயின் குரல் தான்' என்று ஒரு போடு போட்டாள். ஆனால் எனக்குத்தான் விஷயம் தெரியுமே! ஏதோ நமக்குப் பழகிய குரலாக இருக்கிறதே என்று சற்று நிதானித்தேன். புரிந்து விட்டது. பாடியது நீ தான் என்று திட்டமாகச் சொன்னேன் என்று பொருள் படப் பாடுகிறாள். ஒரு பாட்டுக் கச்சேரியை இதுவரை யாராவது இப்படிப் புகழ்ந்திருப்பார்களா? சந்தேகந்தான். இதோ முழுப்பாட்டும்,

'ஈட்டுபுகழ் நந்திபாண! நீ எங்கையர்தம்

வீட்டிருந்துபாட விடிவளவும் – காட்டிலமும்

பேயென்றா(ன்) அன்னை, பிறர் நரி என்றார், தோழி

நாயென்றா(ள்), நீ என்றே(ன்) நான்.'

 

பரிகாசம் இதை விட எப்படித் தான் வெளிப்பட முடியும்!

ஆனந்த போதினி – 1942 ௵ - செப்டம்பர் ௴

 

 



No comments:

Post a Comment