Thursday, September 3, 2020

 

நடுவு நிலைமை

(பு. அ. இரத்தின செட்டியார்.)

நடுவு நிலைமை என்பது என்ன?

நடுவு என்பது, ஈடு, பொது, மத்தி, மையம், சமம், நீதி, நியாயம், தகுதி எனவும், நிலைமை என்பது சால்பு, இயல்பு, குணம், உறுதி, தன்மை, மேன்மை, எனவும் பொருள்படும்.

எனவே, மக்களாய்ப் பிறந்த நாம் அனைவரும், தத்தமது நிலைமைக் கேற்ப, யாவரிடத்தும் ஒப்ப நடந்து கொள்வதால் உண்டாகும், மேன்மையைப் பற்றிக் கூறுவது என்பது இதன் திரண்ட பொருளாம்.

மக்களாய்ப் பிறந்தார் அனைவரும் கடைத் தேறுவான் வேண்டி, ஆன்றோர்களால் ஆக்கித் தரப்பட்ட எல்லா நல்லறங்களிலும், இது முதன்மை தங்கிய அறமாகும். ஆகவே மேலான அறமாகும். இச் சடு நிலைமையைக் கடைப்பிடியாது எவரும், தாம் தாம் மே கொண்ட எத் தொழிலாலும் பயன் பெறுவதில்லை எனலாம். ஆதலால் மற்றெல்லா நல்ல றங்களுக்கும் இது தாயகம் போல்வதாம்.

''சாதனமின்றி ஒன்றைச் சாதிப்பார் உலகிலில்லை" என்னும் ஆன்றோர் வாக்கின்படி நடு நிலைமையாகிய சாதனத்தை மேற்கொண்டு ஒழுக வில்லையேல், அதன் சாத்தியமாகிய உயர்நிலை யடைவது ஒருகாலு மில்லையாம். எனவே, இந் கடு நிலைமையைச் சடைப்பிடித்தல் மனிதராகப் பிறந்த அனைவர்க்கும் இன்றியமையாத கடனாம். இது பற்றியே 'மிகுதி வேண்டுவோன் தகுதி தண்டான்' என்பது ஆன்றோர் வாக்கு. உலகில் யாரே இந் நடு நிலைமையைக் கைப்பற்ற முடியும்? மேலான தான இந் நடுநிலையைக் கைப்பற்றி உயர் நிலை யடையாமல் மக்கள் ஏன் வறிதே கழிகின்றனர்? எனின்,

இம்மையில் மக்கள் அனைவராலும் போற்றப்படும் சிறப்பையும், மறுமையில் தேவர்களால் போற்றப்படும் சிறப்பையும், இவ் விரு திறத்தினர்களாலும் போற்றப்படும் முத்தியின் சிறப்பையும், ஒருங்கே யடைபவர் மிகச் சிலரேயாக இருத்தலினால் தான், இதைக் கைப்பற்றி ஒழுகுவோரும் மிகச் சிலரேயாக இருக்கின் றனர். இது பற்றியே 'நடுவு நின்றார்க்கன்றி ஞானமுமில்லை' எனத் திருமந்திரங் கூறு என்றது. ஆகவே இதைக் கடைப்பிடியாது ஒழுகி மேல் நிலை யடைந்தார் யார்? ஒருவரும் இல்லையன்றே! திரிமூர்த்திகளும் தத்தம் தொழில்களாகிய உலக காரியங்களை முறையே நடைபெறுமாறு செய்வதும் இக் நடு நிலையில் அவர்கள் சிறிதும் பிறழாது கடைப் பிடித்ததினால் தான் என்பதை விளக்கவே 'நடுவு நின்றார் நல்ல நாராணர் ஆவ' ரெனத் திருமந்திரம் தீர்க்கமாக புகலுவதும், தென் திசைக் கடவுளாம் அறக்கடவுளார்க்கு நடுவன் என்ற பெயர் ஏற்பட்டு
இருப்பதும் தக்க சான்றும். திரிமூர்த்திகளின் செய்கையே இவ் விதமெனின் மற்றையர்க்குச் சொல்லவும் வேண்டுமா? ஆகவே நல்லன வென்பனயாவையம், நடுவு நிலைமை யுடையார்க்கே உண்டாம் அன்றி எனையோர்க்கு மற்ற எவ்விதத்தாலும் சாத்தியமாவதில்லை என்பது வெள்ளிடைமலையாம்.

இதனை இறைவனால் ஆக்கிய உலக அமைப்பினால் நன்கு அறியலாம். எவ்வமைப்பு இயற்கை செயற்கையென இருவகைத்தாம்.

இயற்கை.

1. சூரியன். மற்ற அண்டங்களின் மத்தியில் சூரியன் நிலைத்து நிற்கின்றதென்றும், ஆக்கிரண சக்தியால் ஒன்றையொன்று இழுத்து நிற்பதால் உலக காரியம் செவ்வனே நடைபெறுகின்றனவென்றும், விஞ்ஞான நூல் வல்லார் கூகின் றனர். மொழி நூல் இலக்கண வியல் 155 பக்கம். சுள், சூரியன், சுண்டு என்னும் ஆராய்ச்சியைக் கவனிக்கின் நன்கு விளங்கும்.

2. முளைகள். வித்தினின்று முளைக்கும் சக்தியானது நடுப்பாகத்திலேயே அமைந்துளது என்பது விவசாயிகளையும், விவசாய ஆராய்ச்சி யாளர்களையும், விசாரிக்கின் நன்கு புலனாகும்.

3. குருத்துக்கள். மரம், செடி, கொடிகளின் மத்திய பாகத்திலேயே குருத்துக்கள் அமைந்துள தென்பதும் அறியாதார் யார்?

4. கருக்கள். சரீர மத்திய பாகத்திலேயே, கருப்பை அமைந்துளது என்பது, வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

5. தில்லை. உலக அமைப்பின் மத்திய பாகத்தில் திருத்தில்லை அமைந்திருப்பதால் விராட்புருடன் இருதய ஸ்தான மெனவும், பொது எனவும், அங்கு வீற்றிருக்கின்ற எம்பெருமானுக்கு, நடு + ஈசன். நடேசன்எனத் திருப்பெயர் அமைந்திருப்பதாலும், நால்வராதிகளும் மற்றெல்லாத் தலங்களிலும் சிறப்பித்துப் பாசுரங்கள் அதிகமாக பாடியுள்ளார்கள் எனவும் பிற மதஸ்தரான ஜெயிமினி முனிவரும் இத்திருத்தல மடைந்த காலத்து தன்னையும் அறியாமல் 'பகாஸ்தவம்' என்னும் எலைப் பாடியுள்ளார் எனவும்
தெரியவருவதால் இந்நடுநிலைமையின் மேன்மை நன்கு விளங்கும்.

செயற்கை

1. கலாசாலை மாணவர்களை ஒருங்கு அமைத்து ஆசிரியன் மத்தியில் அமர்ந்து எல்லா மாணவர்களையும் ஒரே நோக்காக நோக்கி, அறிவூட்டும் தன்மையின் மேன்மையை யறிந்து அமைத்துள்ள கலாசாலைகளின் அமைப்புக் கிரமத்தையும்;

2. நீதிமன்றம் நியாயாதிபதி நியாய பரிபாலனம் செய்யுங்கால், நியாய வாதிகள் தம்மைச் சூழ. கட்சிப் பிரதிகட்சிகளை யொருங்கே விசாரித்து நீதி வழங்கவேண்டு மென்பதைத் தீர்க்க யோசித்து அமைத்த நியாயசபைகளின் செயற்கை யமைப்பையும்,

3. தொழில் வண்டிகளின் சக்கரத்தின் மத்தியில் அச்சும் அதன்மேல் நின்று மற்றச் சாமான்களைத் தாங்கும் கட்டைக்கு மையக்கட்டை யென்னும் சிறப்புப் பெயரையும், மையத்தாணியையம், சீர்பெற அமைத்தலால் தொழில்கள் செவ்வனே நடைபெற ஏதுவாக இருக்கும் என ஆன்றோர்கள் அறிவால் அமைத்துள்ள அரும்பெரும் செயலையும்;

4. வாணிபம் துலாக்கோலின் சக்தியினால் உலக வர்த்தகத் துறை எவ்வளவு முன்னேறி நடக்கவும், பலப்ல தேயத்தினரும் நாணயமாகவே நடந்து
கொள்ளுவதற்கு ஏற்றதாகவும், சமன்செய்து சீர்தூக்கும் கோல் எனச் சிறப்புடன் அமைந்துள்ள துலாக்கோலின் தன்மையையும் ஆராய்ந்து யோசிக்குங்கால்,

இயற்கை செயற்கை யெவையும் நடுவு நிலைமையாலேயே நடைபெறுகின்றன என்பது வெள்ளிடைமலை.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் இதனைக் கைப்பற்றுவதால் உண்டாகும் நன்மைக்கு எல்லையில்லை என்பது பெறப்பட்டது.

இதுபற்றியே திருக்குறளாசிரியரும் ‘தகுதியென ஒன்று நன்றே' என்றார். நடுவு நிலைமையானதொன்றே போதுமானது. இதற்கு மேலானது, ஒன்று ஈண்டும் யாண்டுமிலையெனும் கருத்தே அவர் அங்ஙனம் கூறினதற்கு காரணமன்றோ?

நடுவு நிலைமைக்கு வேறான வழியால் மனிதனுக்கு எல்லாவித மேன்மையும் உண்டாவதாய் இருந்தால் அதை என் கைப்பற்றக்கூடாது? என உண்டாகும் ஐயத்தை நீக்கவே, 'நன்றேதரினும் நடுவிகந்தா மாக்கத்தை யன்றே யொழியவிடல்' என வலியுறுத்திக் கூறியுள்ளார். தவிர இந்நடு நிலையை நாயனார் இல்ல றவியலில், ஒரு அதிகாரமாகச் கூறி யிருப்பதாலும் 'செப்பமுடையானாக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்புடைத்து' எனக் கூறியிருப்பதாலும் இது இல்லறத்தார்க்கே உரியது என ஒரு சாராரும்,

நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்திற்கு உரை காணுங்கால் மெய்ப் பாட்டியல் ஆங்கவையொருபால் எனும் சூத்திரவுரையில் 'சமநிலை என்பது செஞ்சாந்தெறியினும் செத்தினும் போழ்தினும் நெஞ்சமோடா நிலை' என்றும் இது காமம், வெகுளி, மயக்கம் என முக்குற்றம் நீங்கிய துறந்தார்க்கன்றி மற்றையரிடத்து நிகழாதென்றும் கூறியுளதால், இது துறவறத்தார்க்கே யுரியது என்றும் சிலர் கூறுகின்றனர். பின் போம் வழி யாது எனின்? இல்லறத்தார்க்குரிய நடுநிலை நிற்காத ஒருவன் எங்ஙனம் துறவற நடுநிலை யெய்தமுடியும்? இல்லற நடுநிலையை யெய்தாதான் துறவற நடு நிலை நிற்றற்கு, அருகனாவான் என்பதோ? மேலும் ஒருவன் இல்லறத்திற்கு உரிய நடுநிலைமையைக் கைப்பற்றி ஒழுகுவானாயின் அதன் பலனாகிய பொருள் பூஜை முதலியவற்றை இம்மையிலேயே பெறுவதோடு மறுமைக்குரிய துறவற நடுவு நிலைமையையும், கைப்பற்ற மலப்பரிபாக வசத்தால், அருகனாவதுடன் அதைக் கைப்பற்றி ஒழுகுவதால் தேவரால் போற்றப்படும் புகழையும் அடைந்து அதன்வாயிலாக முக்தி யின்பத்தையும் அடைகுவன் என்பதாம். ஆகவே இல்லற, துறவறம் என இரண்டிற்கும் அது உரியதாம்.

இனி இல்லறத்தார்க்குரிய நடுநிலை யெதுவென வாராயின், "தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற், பாற்பட் டொழுகப் பெறின்' எனும் குறளுக்கு பரிமேலழகர் உரை காணுங்கால் பகை, நொதுமல் நண்பு, என்னும் பகுதியால் முறைமைவிடாது ஒழுகப்பெறின் நடுவு நிலைமையாகிய ஓர் அறமே நல்லதெனக் கூறியுள்ளார் அதை யாய்ந்து ஆராயின் இல்லறத் தான் பகை எனவும், சுற்றத்தான் எனவும், நண்பனெனவும் பாரபட்சமின்றி நடந்து கொள்வதே இல்லறத்தார்க்குரிய நடுவுநிலை. அப்படி கடந்துகொண்டு மேன்மையை யடைந்தவர்களில் சிலரைப் பற்றி ஆராய்வோம்.

தர்ம சாஸ்திரம் எழுதிய மநுவின் மீதும் பின்னுள்ளார்கள் ஒரு குலத்துக்கொரு நீதி எனக் குற்றம் கூறினும் தன்மேல் சிறிதளவும் எந்தக் காலத்திலும் குறைகூறாவண்ணம் செங்கோலோச்சி வரும் மனுச்சோழன், தன்னுடைய சபையின்கண் வீற்றிருக்கின்ற காலத்திலே திடீரென்று மணியோசை கேட்கப்படுகின்றது. அரசன் இடியுண்ட நாகம்போல் அயர்ச்சி யடைகின்றனன். என் அடையவேண்டும்? தான் அரசாட்சி ஏற்குங்கால் குறையுள்ளவர்கள் தன்னிடம் முறையிட வாயிலின்கண் மணியொன்றைக் கட்டுவித்து குறையுள்ளவர்கள் அம்மணி யடித்தார்களானால் அச்சத்தங் கேட்டவுடன் தான் நேரில் சென்று, அவர்கள் குறைகளைப் பரிசீலிப்பதுமான வழக்கத்தைக் கொண்டிருந்தனன்.

ஆனால் அவன் அரசாட்சியில் குறையுள்ளார் ஒருவரும் இலராகவே அம்மணி, அவன் உத்தேசத்திற்கு, உதவாமலே இருந்தது. இன்று அச்சத்தம் திடீரெனக் கேட்டவுடன், தன் அரசாட்சியில் யார் எப்படிப்பட்ட இடுக்கணில் அகப்பட்டனர்களோ? எங்ஙனம் துயர் உறுகின்றனரோ! என்று பதை பதைத் தவனாகி அவர்களின் குறையைத் தீர்க்கவேண்டும் என்ற தீவிரமுடையவனாகி சேவினுடைய அழுகுரல் கேட்டோடும் தாயொப்பவிரைந்து வாயிலுக்கோடினான். அங்கு கண்ணீர் ஆறாகப் பெருகவிட்டுக் கதறிக்கொண்டிருக்கும் தலையீற்றுப் பசுவைக் கண்டு, ஒன்றும் தோன்றாதவனாகி, 'இத்தாய்ப் பசுவிற்கு என்ன தீங்கு நேரிட்டதோ, இங்கறிந்தார் உளராயின், சீககிரம் கூறுங்கள்' என்று, தன்னுடன் என்ற மந்திரிகளை வினாவுதலும், அவர்கள் 'அரசரேறே தங்கள் செல்வத் திருக்குமரன் ஆலயதரிசனம் செய்வான் வேண்டி ரதாரூடனாகச் செல்லுங் காலத்தில், அகஸ்மாத்தாக இப்பசுவின் கன்றானது, தேர்ச் சக்கரத்தில் அகப்பட்டு, உயிர் துறந்தது. அதனால் இது இப்படி துக்கத்தை யடைகிறது' என தெரிவிக்க அரசனானவன் மணி சப்தங் கேட்ட அந்த காலத்திலேயே பெரிதாகிய துயரத்தை யடைந்தவன் தனது மைந்தனே அவ்வித குற்றத்திற்கு ஆளாகி வாயற்ற பிராணியாகிய ஒரு பசுவிற்கு துயரிழைத்தான் என்பதைக் கேட்குங்கால் எவ்விதத் துன்பத்தை யடைத் திருப்பான்? என்பது நேயர்களே ஆய்ந்து யோசிக்கத் தெரியவரும். சோகமடைந்த வரசனை மந்திரிகள் ஒருவாறு தேற்றலாமென
நினைத்து, அரசர் கோவே! தமது புத்திரன் வேண்டுமென்று, இந்த பசுவிற்குத் துயரை இழைக்கவில்லை. சாக்கிரதையாக பல்லார் புடைசூழ சென்று கொண்டிருக்குங் காலத்தில் மாயமாகவல்லவா அக் கன்று தேர்ச் சக்கரத்தில் அகப்பட்டு உயிர் துறந்து இருக்கிறது. இதை யோசிக்குங்கால் இக்கன்றினுடைய ஆயுள், அற்பமென்று சொல்லவேண்டிய நிலைமையில் இருக்கிறோம். ஆதலால், மைந்தனுக்கு ஏதாவது பிராயச்சித்தம் செய்து மேல் கடக்க வேண்டியவைகளைக் கவனிக்க வேண்டியதை விட்டு வீணில்,
சோகிப்பதில் என்ன பிரயோசனம்' எனக் கூறினர், அரசன் மந்திரிகளை
உறுத்துப் பார்த்து, 'நீங்கள் சொன்ன நியாயம் வெகு நேர்த்தியாக இருக்கிறது. மைந்தனுக்கு பிராயச்சித்தம் செய்துவிட்டால் கன்று உயிர்பெற்று எழுந்துவிடுமா? அல்லது பசுவின துக்கமாவது ஆறிவிடுமா? ஒரு உயிரை உண்டுபண்ண முடியாதவன், ஒரு உயிரைக் கொல்லல் எங்ஙனம் நியாயம். ஆதலால் அவ்விதம் கொலை செய்தவனைப் பதில் கொலை செய்தலே நியாயம் என்று தீர்மானமாக உரைத்தான். மந்திரிகள் துணுக்குற்றவர்களாகி, மன்னர் பெருந்தகையே ஐயறிவுடைய உயிர்க்காக ஆறறிவுடைய உயிரைக் கோறல் நீதியன்று. வேதாகமங்களில் ஆன்மாக்கள் உயர்வு தாழ்வு பற்றி புண்ணிய பாவங்கள் ஏறியும் குறைந்தும் இருக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அதுவுமன்றி நேரிடும் கொலையானது எவ்வாறு நடந்ததெனக் கவனித்து தண்டிக்கவேண்டுமல்லது எல்லாம் ஒன்றாக மதித்து தண்டித்தல் நீதியாகாது. ஒருவன் ஒருவளை நல்வழியில் நிறுத்தும் பொருட்டு அச்சுறுத்தி தண்டிக்கும்போது (அமிர்த மூட்ட நஞ்சாக முடிந்தது போல்) அபாயம் நேர்ந்தால் அவ்விதக் கொலைக்கு உபவாசம் முதலியவைகளால் பரிகாரம் தேட வேண்டுமென்றும், (காக்கை உட்கார பனம்பழம் விழுதல் போல்) வலிமை பகைமை யின்றி, விதி வசத்தால் ஒரு கொலை நேரிடில் இனி அவ்விதம் சேரிடாமல் இருப்பதற்காக தண்டித்து அச்சுறுத்தலும்) காமக் குரோதாதிகளால் (ஆனை மதப்பட்டு அடவி அழித்ததைப் போல், ஒருவரை யொருவர் கொலை செய்யின் அக் கொலைக்கு ஈடாகக் கொலை செய்யவேண்டும் என ஆன்றோர்கள் வகுத்துள்ளார்கள். ஆகவே தாங்கள் பெரிதும் யோசித்து, செய்வீராக எனப் பிரார்த்தித்த மந்திரிகளை நோக்கி மந்திரிகாள்! ஆன்மாக்கள் உயர்வு தாழ்வு பற்றி புண்ணிய பாவங்கள் ஏறியும் குறைந்தும் இருக்குமென வேதத்தின் பூர்வ பாகத்தில் சொல்லி இருந்தாலும், உத்தர பாகத்தில் ஈஸ்வர சந்நிதியில் எல்லா உயிர்களும் சமம், என்னும் விதிக்கு, நீங்கள் என்ன பதில் சொல்லுகிறீர்கள்! தவிரவும்
எனது மைந்தன் அமுத மூட்டப்போய் நஞ்சானதுபோல் பசுவின் கன்றுக்கு நன்மை செய்யப்போய் அது தீமையாக முடியவில்லை. காக்கை உட்கார பனம்பழம் விழும் நியாயம் போல், எதிர்ப்பாரா விதமாகவும், இக்கொலை நேரிடவில்லை. ஏனெனில் ஆலய தரிசனத்திற்காகச் செல்பவன் ரதத்தின் மீதுதான் செல்லவேண்டுமா? ஆதலால் யானை மதப்பட்டு அடவி அழித்தது போல், மதத்திலேயே அக்கன்றை கொலை செய்தான். மேலும்
ஐயறிவுயிர்க்காக ஆறறிவுள்ள வுயிரைக் கொல்லல் நீதியாகாது என்கிறீர்கள். ஆறறிவுள்ள மனிதர்களில் சாமானியர்கள் இம் மணி அடித்தால் அரசனைக் காணலாம் என்று தெரியாதிருக்கும்போது, இப் பசு தெரிந்து மணியடித்தது என்றால் இப் பசுவை ஐயறிவுள்ளதென்று சொல்வதா? ஆற்றிவுள்ளதென்று சொல்வதா? பலபல சொல்வானேன்? இக் கன்றின் கொலைக்கீடாக மைந்தனைக் கொலை செய்தலே தகுதி யென வுரைத்து, முதல் மந்திரியை விளித்து நீர் சென்று எவ்வீதியில் என் மைந்தனால் எங்கு இக்கொலை நிகழ்ந்ததோ அதே வீதியில் அவனைக் கிடத்தி, தேரூர்ந்து அவனைக் கொலை செய்வீராக எனக் கட்டளை யிட்டனுப்பினான். சென்ற மந்திரியானவன், அவ்வாறு செய்யாமல் தானே தற்கொலை செய்துகொண்டு இறந்தான். இதைக் கேள்வியுற்று, அரசன், துயரங்கொண்டு கன்றின் கொலைக்காக மைந்தனைத் தானே கொலை செய்யவும், முன்னே தானே அவ்வேலையை யேற்றுக்கொண்டிருந்தால் மந்திரி இறக்கமாட்டான் அன்றோ ஆதலால் அக் கொலைக் கீடாக தான் கொலையுண் டிறக்கவும் உறுதி யுடையவனாகி மைந்தனை வீதியிற் இடத்தித் தான் தேரில் ஆரோக்கணித்து யாதொரு சலனமுமின்றி, மைந்தன் மீது தேரைச் செலுத்தி, கன்றானது எவ்விதம் ரதத்தின் சக்கரத்தில் உயிர் துறந்ததோ அவ்விதம் உயிர் துறக்கச் செய்தான் என்றால், அரசனுடைய நீதி வழுவா நெறியை என்னென்பது? (இந்தச் சரித்திர விரிவை இராமலிங்க சுவாமிகள் எழுதிய மநுமுறை கண்ட வாசகத்தில் விரிவாகக் காணலாம்.)

“ஒருமைந்தன் தன் குலத்துக்குள்ளான் என்பது முணரான்

தருமந்தன் வழிச்செல்லக் கடனென்று தன் மைந்தன்

மருமந்தன் தேராழியுற ஊர்ந்தான் மனுவேந்தன்

அருமந்த வரசாட்சி யரிதோமற் றெளிதோதான்.''

 

என பெரிய புராணத்தின்கண் ஸ்ரீ சேக்கிழார் பெருமான் வியந்து உரைக்கும் பான்மையைக் கவனிக்குங்கால் உன்னுந்தோறும் பெருமிதம் உண்டாக்கும். மநுச் சோழனுக்கு நிகரான அரசாட்சியும் எந்தக் காலத்திலும் காணவும் நினைக்கவும் முடியாத தன்மையல்லவா? இதைப்பற்றி ஆசிரியர் இளங்கோவடிகள் போற்றி யுரைக்கும் பான்மையை சிலப்பதிகாரத்தில் அனேக விடங்களில் பரக்கக் காணலாம். தன் கணவன் அரசன் கொடுங்கோலால் கொலையுண்டான் எனக் கேள்வியுற்ற கண்ணகியானவள் அடங்காத் துயரத்தோடும் ஆற்றொணா கோபத்தோடும் அரசவை காலத்து நீ யார் என' வினவிய அரசனை நோக்கி, ஆராயாது கொடுந் தொழிலை இயற்றிய மன்னன் மனம் மறுகும் வண்ணம் சொல்லும் பான்மையைக் கவனியங்கள்.

“வாயிற் கடைமணி நடுநா நடுங்க,

ஆவின் கடைமணி யுகுதீர் நெஞ்சு சுடத்தான் தன்

அரும் பெரும் புதல்வனை யாழியிற் மடுத்தோன்

பெரும் பெயர் புகார்ப்பதியே யவ்வூர்''

 

என மனுவின் அரசாட்சியை வியந்து கூறும் இளங்கோவடிகளின் மனப்பான்மையை யுன்னுந்தோறும், மனதிற்கு இன்ப மூட்டக்கூடிய தன்றோ!

இத் தன்மைவாய்ந்த மன்னர் பெருமானை மநுச்சோழனுக்கு இறைவன் காட்சியளித்து மைந்தனையும், அமைச்சனையம். பசுவின் கன்றௌயும், எழுப்பித் தந்து ஆட்கொண்டான் என்பதில் வியப்பென்ன இருக்கிறது?

இஃதன்றி, பாரநகதிலும், தருமபுத்திரனது அரசாட்சியைக் கூர்ந்து நோக்குங்கால், இந்நடுவு நிலைமை வழாத தன்மையை நன்கு காணலாம்.

தருமபுத்திரன் ராஜசூயயாகம் செய்த காலத்தில், யாகசாலை சுத்தத்திற்காக, புருஷா மிருகத்தை யழைத்துவர வேண்டுமென யோசித்த காலத்து, வீமனைத்தான் அப்புருஷாமிருகத்தை வருவிக்க அனுப்பப்பட வேண்டுமென்று கட்டளை யிடப்படுகிறது. கண்ணபிரான் அக்காலத்தில் மூன்று குளிகைகளைத் தந்து ஆபத்து நேரில், உபயோகப்படுத்திக் கொள்ளும்படி, தந்தனுப்ப பெற்றுக்கொண்டு வீமன் சென்று புருஷா மிருகத்தைக் கண்டு தான் வந்த காரியத்தைத் தெரிவித்ததின்மேல், புருஷா மிருகமும் வருவதாக ஒப்புக்கொண்டு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதாவது வீமன் முன்னால் விரைந்து செல்வதென்றும் பின்னால் புருஷாமிருகம் சென்று, சகா எல்லையை யடைவதின் முன் வீமனைப் பிடித்துக்கொண்டால், வீமன் தனக் கிறையாக வேண்டுமென்பதே அவ்வொப்பந்தம். வீமன் வேகமாகப் புறப்பட்டான். புருஷா மிருகம் வேகமாகச் சென்று வீமனைப்பற்றும் சமயத்தில், கண்ணபிரானால் தப்பட்ட குளிசையை வீசவும், அங்கு, ஒரு சிவாலயம் தோற்றப்படுகிறது. ஆலயத்தைக் கண்டவுடன் ஆகமவிதி தவறாது சிவபூஜை செய்யும் குணமுள்ள தாகையால் அல்லவா எல்லா உலகத்தாரிலும் போற்றும் தன்மையும் தனிதத்தன்மையும், அப் புருஷா மிருகத்திற்கு உண்டாகி இருக்கிறது? ஆகவே, ஆகமவிதிப்படி பூஜை செய்து விட்டு வீமனைத் தொடர்கிறது. வீமன் இவ்விதமே மூன்று குளிகைகளால் காப்பாற்றப்படுகிறான். கடைசியில் வீமன் நகர் எல்லையில் இடக்காலை, இடம் பாகத்தை வைத்த தருணம் புருஷாமிருகம் பற்றிக்கொண்டது. வீமன் நகர் எல்லையில் ஒருகால் வைத்து விட்டபடியால், தான் ஜெயித்ததாகவும், புருஷா மிருகம், ஒருகால் தன் எல்லையிலிருந்தபடியினால், வீயன் சரீரத்தில் பாதி தனக்குச் சொந்தமென்றும் வழக்காடி அரசவையில் சென்று அரசனான தருமபுத்திரன் முன் நின்று, தங்கள் வழக்குகளைத் தெரிவித்துக் கொண்டார்கள். அதன்மேல் தருமபுத்திரர் வீமனை நோக்கி, 'நீ இடது காலை நகர எல்லைக்குள் வைத்திராமல் வலது காலை வைத்திருக்கும் பட்சத்தில் உன் கட்சிபடி புருஷா மிருகத்தை நீ வென்றவனாகிறாய். ஏனெனில் வலதுபாகம் புருஷபாகமாகவும் இடது பாகம் ஸ்திரி பாகமாகவும் சாஸ்திரங்களாலும், ஆன்றோர்களாலும் கூறப்படுகிறது. வலப்பாகம் எல்லையில் இருக்கிறதோ, அதே இடத்தில் அவனுடைய சரீரம் முழுதும் இருப்பதாக கொள்ள வேண்டிய நியாயப்படி உன் சரீரம் புருஷா மிருகத்திற்குச் சொந்தமாகிறது' எனத் தீர்ப்பளித்தான் எனில், அவன் அரசாட்சியின் நடுநிலை வழாத்தன்மையை, என் என்பது.

ஒப்பற்ற பலாட்டியனும், தன் சுகம் கருதாது சகோதரர்களுக்காக உழைக்கும் பெருமிதம் வாய்ந்தவனுமான ஒரு பீமனை இழக்கவும், தயாராகிறார். இந்த வீமனானவன் சகோதரனான தருமபுத்திரனுக்காக எப்படிப்பட்ட தியாகத்தைச் செய்திருக்கின்றான். இயமகம் செய்து முடியவும், தர்மன் ‘சம்ராட்' என்னும் பட்டம் உலகத்தாரால் பெறவும்,
எல்லா இன்பத்திற்கும் மேலான இல்லற வின்பத்தையும், தியாகம் செய்கிறான். எவ்வாறெனின், யாக ஆரம்ப காலத்தில், வியாசமுனிவர் எழுந்தருளி வீமன் முதலிய நால்வரையு மழைத்து,

''மைந்தர்காள் நீவிர் இம்மகஞ் செய்வேந்தனே

தந்தையும் தாயும் இத் தருமவல்லியே

இந்தவான் பிறப்பினுக் கிற்றைநாள் முதல்

குந்தியும் பாண்டுவுமென்று கொள்மினே.''

எனக் கட்டளை இடுகிறார்.

முன்னே பாஞ்சாலியை மணந்தகாலத்து நாரதர் எழுந்தருளி சந்தன் உபசுந்தன் என்கிறவர்களின் சரிதத்தைத் தெரிவித்து, ஒரு வருஷம், முறையாக பத்தினியாக அடைய வேண்டுமெனக் கட்டளையிட்டு அதன்படி ஒழுகிவந்து கொண்டிருந்த இவர்களுக்கு, வியாசரால், இவ்விதமான கட்டளை யிடப்படுகிறது.

‘மைந்தர்காள் நிவிர் இம் மகஞ் செய்வேந்தனே

தந்தையும், தாயும் இத் தரு வல்லியே'

 

என்பதோடு நின்றிருந்தால் மக முடியும் வரையில் எவ்வித எண்ணத்தோடு இருக்கலாமெனக் கொள்ளலாம். பின்னிரண்டடியில்,

‘இந்தவான் பிறப்பினுக் கிற்றைநாள் முதல்

குந்தியும் பாண்டுவுமென்று கொள் மினே'

 

என்று கட்டளை யிடப்படுவதும், அது ஏற்றுக்கொள்ளப்படுவதும், இச்சோதரர்களின் துறந்த மனத்தின் தூய்மையை யல்லவா காட்டுகிறது? மற்ற மூவருக்கும் வழி காட்டியாக வல்லவா பீமன் முன்னணியில் நிற்கிறான். சகோதரன் மகம் முடித்தலுக்காக தன் இல்லற வின்பத்தையும் விடுத்து, இல்லத்துறவு பூண்டவனான இவ் வீமனைத் துறக்கவும், தருமர் தயாராகிறார் என்றால், அவருடைய பாரபட்சமற்ற, தன்மையை எங்ஙனம் வரையறை யிட்டுக் கூறுவது? இது மட்டுமா! தருமன் தன் தம்பியை யிழக்கும் தியாக மட்டிலுமா? செய்யச் சம்மதிக்கிறான். தன்னை யிழக்கவும் சம்மதிக்கிறான். ஏனெனில் இந்த ஐவரில் ஒருவரொழிய மற்றவர் உயிர்வாழ மாட்டார்கள். எங்ஙனமெனில்,

கிருஷ்ண பரமாத்மா தூது சென்ற காலத்து குந்தியினிடம் சென்று 'கர்னன்’ உனது புத்திரன். அவனை அவனது சகோதரர்களிடம் சேர்ப்பதோ அல்லது அர்ச்சுனன் மேல், நாகக்கணையை மறு முறை தொடா வண்ணம் செய்வதோ இரண்டில் ஒன்று செய்' என, குந்தியானவள் 'இருவரும் எனது மக்களே இருவரில் யாரை. இறக்க யான் சம்மதிப்பது' என சோகித்தகாலத்து பரமாத்மா,

“பைவருந் தலைகளைந்து படைத்த பர்க்கமேபோல

ஐவரும் மடிதல் நன்றோ அங்கோன் மடிதல் நன்றே

உய்வரும் சமரில் ஆவி ஒருவர் போய் ஒருவர் உய்யார்

கை வரு துயா மாறி நடப்பதே கருமமென்றான்.''

 

என்று தெரிவிப்பதால், வீமனைத் தியாகம் செய்ய சம்மதித்த தருமன் தன்னைத் தியாகிக்கவும் தயாராகிறான். இதுவுமன்றி, சுயோ தன்னானவன், யுத்த ஆரம்ப காலத்திலே, சகாதேவனை யடைந்து நாள் கேட்டு சென்றான் என்பதை யறிந்த பரமாத்மா தருமபுத்திரனிடம் வாது வைரத்தை ராவி மதிப்பிடுவது போல், சோதிக்கிறார். 'என்ன ஐயா தருமபுத்திரரே! உமக்காக நான் படும்பாடு ஒருபக்க மிருக்க, அனேக மன்னர்கள் தங்கள் ஏழக் குரோணி சேனையோடுகூட துறப்பதற்காக இங்கே யுத்தத்திற்குப் படித் இணையாக வந்துள்ளார்கள். உமது சகோதரன் சகாதேவன் துரியோதனனுக்கு, நந்நாள் குறிப்பிட்டனுப்பி யிருக்கிறான்' என வருத்தப்படுகிறார்.

தருமபுத்திரர் சகதேவனை யழைத்து 'அப்பா கிருஷ்ண பரமாத்மா சொல்வது வாஸ்தவம்தானா!' எனவும், சகதேவன் 'ஆம், அண்ணா நேற்று மாலை சுயோதனன் என்னிடம் வந்து தன் செங்கோல் நீடு வாழவும், தருமபுத்திரன் முடி வீழவும் செய்வதான ஒரு நந்நாளைப் பார்த்து தான் யுத்தாரம்பம் செய்வதற்காக அளிக்கும்படி கேட்டான். அவ்விதமே தாளிட்டு தந்தேன்' எனலும், தருமபுத்திரர் அப்பா அப்படி நீ இட்டுத் தந்த நாளானது, உத்தேசப் பலனைக் கொடுக்குமா? என்று வினவலும், 'ஆம் அண்ணா, சாள் திரம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதில் நான் வைத்த நம்பகம் உண்மை யெனும் பட்சத்திலும் அதே நாளில், அவன் யுத்த முகூர்த்தம் செய்யும் பட்சத்திலும், அவ்விதம் நடக்கும் என்பது திண்ணம்' என்று கூறிய சகாதேவனை அளவிறந்த ஆர்வத்தோடு தழுவி 'அப்பா இன்று தான் நீ உண்மைத் தம்பி யாயினை' எனக் கூறி விம்மிதமடைந்தனன் எனில் தருமபுத்திரனுடைய நடுநிலை வழாததன்மை சீரியதன்றோ! பரமாத்மா வேண்டிய சூழ்ச்சிகளைச் செய்து அம்முகூர்த்த காலம் அவனுக்குச் சித்திக்கா வண்ணம் செய்து வெற்றியை இவர்கள் பக்க முண்டாக்கினான் என்றால் அவன் கடமையைத் தான் செய்தான் என்று சொல்லவேண்டும்.

ஆனந்த போதினி – 1938 ௵ - அக்டோபர் ௴

 



No comments:

Post a Comment