Thursday, September 3, 2020

 

நட்பு

 

நட்பு என்பது சிநேகிதர் இருவர் அல்லது பலரிடம் குடிகொள்ளும் உள்ளத்தின் நெகிழ்ச்சியாம். இவ்வித நட்பு புன்சிரிப்பு முறுவல் முதலிய வெளிவேடத்தால் காட்டக்கூடியதல்ல. உள்ளத்தின் அன்பாலே நாட்ட வேண்டியது. இதுபற்றியே நமது திருவள்ளுவரும்,

 

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்

தகநக நட்பது நட்பு

 
என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். ஆதலால் நண்பர்கள் அவசியமாய் உள்ளத்தில் அன்பு கொண்டு நடந்துகொள்ள வேண்டும்.

 

ஒருவன் தீச்செயல்களிற் செல்லும் போது அவ்வாறு செல்லாமற் றடுத்து நல்வழிகளிற் செல்லத் தூண்டுதலும், அவனுக்கு யாதாயினும் கேடுவந்த காலத்தில் அதைத் தடுக்க முயலுதலும், அது முடியாவிடின் அதனால் வருந்துன்பத்தை அவனோடு கூடத்தானும் அனுபவித்தாலும், எக்காலத்தும் வேறுபடாதிருத்தலும், ஆகிய இவை முதலிய நற்குணங்களை உடையவனே சிரேகன் ஆவான். மன ஒற்றுமை யுடைமையே சிநேக விருத்திக்குக் காரணமாம். பெரியவர்களுடைய சிநேகம் பிறைபோல நாளொரு வண்ணமாக வளர்ந்து கொண்டு வரும். கரும்பு நுனியிலிருந்து தின்பவனுக்கு மேலே தின்னத் தின்னச் சுவையை மிகக் கொடுத்துக் கொண்டு வருவதல் போல நல்லோருடைய சிநேகமும் பழகப்பழக உறுதியையும் மனமகிழ்ச்சியையும் மிகவுங் கொடுத்துக் கொண்டு வரும். இவ்வியல்புடைய சிநேகிதத்தைப் பெறுதல் மிகுந்த அருமையாம்.

 

ஒருவரோடொருவர் சிநேகஞ் செய்தல், தகாத செயல்கள் காணப்படுமிடத்து இடித்துப் புத்திகூறி நல்வழிப் படுத்துதற்கன்றித் தம்முட் சிரித்து விளையாடுதற்கன்று. கண்டவிடத்து முகமாத்திரம் மலரும்படி சிநேகிப்பது சிநேகமன்று; மனமும் மகிழும்படி சிநேகிப்பதே சிநேகமாகும்.

 

ஒருவருடைக் குணங்களை ஆராயாமற் சினேகஞ் செய்தலாகாது ஆபத்துக்காலத்தில் கைவிடுவோரையும், தமக்குப் பிரயோசனமுள்ள காலத்தில் வந்து கூடி, அது இல்லாத காலத்தில் விட்டு நீங்குவோரையும், மூடரையும், சொல்லொன்று செயலொன்றா யிருப்போரையும் சிநேகஞ் செய்தலாகாது. இதனாலன்றோ ஒளவையாரும் "நல்லிணக்கமல்ல தல்லற் படுத்தும்" என்று அருளிச் செய்தார்.

 

இன்பதுன்பங்கள் மனத்தில் அடைபட்டுக் கிடப்பதும் ஒரு பிணியாம்.'' மனக்கவலை பலக்குறைவு" மனத்தில் அடையப்பட்டிருக்கும் இன்பதுன்பங்களை வெளிப்படுத்துவதே மனநோய்க்குப் பரமௌஷதம். ஆயினும் இவைகளை வெளிப்படுத்துதற்கு ஒரு போக்கு வீடு வேண்டும். அங்ஙனம் போக்கு வீடு ஆகின்றவன் நண்பனே - உண்மை நண்பனிடத்தில் உள்ளத்திலுள்ளதை உரைத்துக் கொள்வதால் நன்மைகள் இரண்டுள வாம். துன்பம் பாதியாகக் குறையும். உவகை ஒன்றிரண்டாம் நண்பனே எதற்கும் ஏற்ற வெற்றி சூழ்ச்சி சொல்லுவதற் குரியவன்.

 

நீர் சேர்ந்தபாலை நெருப்பில் வைத்துக் காய்ச்சும்பொழுது நீர் சுவறுகின்றது; அதுகண்டு தன்னுடன் சேர்ந்த நீருக்கு நேர்ந்த துன்பத்தை சகிக்காது கலத்தின் மேல் பொங்கி அக்னிப்பிரவேசஞ் செய்ய முயலுகின்றது. அப்பொழுது சிறிது நீரைக் கலத்தில் தெளித்தால் நம் நண்பன் உயிர்த்தெழுந்தான்' என்று அந்தப்பால் அடங்குகின்றது. அதுபோலவே நேயன் சாமானியனானாலும் அவனுக்கு ஒரு துன்பம் வந்துற்ற பொழுது உண்மை சினேகிதன் அவனுக்குத் துணை செய்யாமலிரான்.


 "உடுக்கை இழந்தவன் கைபோல வாங்கே
 இடுக்கண் களைவதாம் நட்பு''


என்று நாயனார் கூறினார்.

 

அதாவது ஆடையவிழ்ந்தால் கையானது எவ்விதமாகத் துரிதத்துடன் அவ்வாடையைக் கட்டிவிடுகிறதோ, அதுபோல் உண்மை நண்பன் தீங்கு வந்த காலத்து நண்பனைக் காப்பாற்றவே வகை தேடுவான்.


 அற்றகுளத்தி னறுநீர்ப் பறவை போல்
 உற்றுழித் தீர்வா ருறவல்லர் - அக்குளத்தில்
 கொட்டியு மாம்பலும் நெய்தலும் போலவே
 ஒட்டி யுறுவா ருறவு.


என்பது போல், இழிந்தோர் பறவைகள் போல் தம் நண்பரின் செல்வமும் இன்பமும் அனுபவித்து அவர் வறுமையும் துன்பமும் அடைந்த காலத்தில் அவரைவிட்டு நீங்கிப் போய்விடுவர். உயர்ந்தோரோ, கொட்டியும் ஆம்பலும் போலத் தமது நண்பர் துன்புற்ற காலத்தில் அவரோடு துன்பத்தை அனுபவித்து அவரைவிட்டு நீங்காதிருப்பர்.

 

பழுக்கக் காய்ந்த இரும்போடு நீர்த்துளி சேருமாயின் நீர் என்னும் பெயரும் அழிகின்றது. அந்நீர்த்துளி தாமரையிலையின் மீது தங்கிய பொழுது அது முத்துப்போலத் தோன்றுகின்றது. மற்றும் அந்நீர்த் துளியே கடலிலுள்ள இப்பியின் வாயில் விழுமானால் அது அரசரும் விரும்பிக் கொள்ளும் அரிய விலையுள்ள ஆணிமுத்தாகின்றது. இவ்வாறே நமது நட்பை யாரிடம் வைக்கிறோமோ அதற்குத் தக்க பலனே யுண்டாகும். இதற்காகவே "சேரிட மறிந்து சேர்'' என்றனர் ஆன்றோர். அதம, மத்திம, உத்தமர்களுடைய சிநேகமும் இதுபோலத்தானிருக்கின்றது. மூடருடைய சிநேகம் எல்லாத் தீமைகளையும் உண்டாக்குதலாலும், அறிவிற்சிறந்த பெரியாருடைய சிநேகம் எல்லா நன்மைகளையும் உண்டாக்குதலாலும் சிறியாரோடு சிநேகஞ் செய்தலைக் கைவிட்டுப் பெரியாரோடு சிநேகஞ் செய்தல் வேண்டும். இச்சிநேகத்தால் உடையானுக்கு எவ்வகைப்பட்ட இடர்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் தாமே உண்டாகும்.

 

''அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
 அல்ல லுழப்பதாம் நட்பு''


எனவும் திருவள்ளுவர் கூறினார்.

 

ஆகையால் மானிடராகப் பிறந்த நாமெல்லோரும் நட்பினராய் ஒத்து வாழ்வோமென்று எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றோம்.


தி. பொ. மாணிக்கவாசகம், வரகநேரி.

 

ஆனந்த போதினி – 1924 ௵ - ஜனவரி ௴

 


 

 

 

No comments:

Post a Comment