Thursday, September 3, 2020

 

நட்பு

 

அறிஞர்காள்! நட்பு, என்பது தொழிற்பெயரும் பண்புப் பெயருமாம். இது 'நள்'' என்னும் பகுதியும் “பு” என்னும் விகுதியும் ஒன்றி “லௗ வேற்றுமையில் நடவு மல்வழி யவற்றோடுறழ்வு” மெனும் நன், மெய். 24 சூத் திரவிதியின் படி நிலை மொழி யீற்று ளகரமெய் வல்லின விகுதிபுணர டகர மெய்யாகத் திரிந்து "நட்பு” என நின்றது.

 

நட்பு, என்னுமிச் சொல் சிநேகம் என்பதைப் பயக்கும். இந்நட்பு, இயற்கை செயற்கை யென விருபாற்றினை யுடைத்து. என்னை? இயற்கையாகவே யன்புடையராகிய சுற்றத்தாரைக் குறிக்கும் பண்பாகு பெயராதலும், நட்பியற்றும் எத்திறத்தவர்க்கும் பொதுவாக நின்று தொழிலாகு பெய ராக நிற்றலுமாம். இயற்கை நட்புச் சுற்றமே யென்பது வில்லி பாரதம் வாரணாவதச் சருக்கம் 44 செய்யுள்.


 “மன்னன் யானீமுனிவன் மரபா லெனக்குமுனக்கு
 மென்ன நண்புண்டு”

 

என்றதினாலேயே சுற்றத்தவரை நட்பெனக் கூறுதலும் வழக்காறா யுள்ளதென்ப தினிது விளங்கும். இவ்வா றியற்கையாகவே நட்புடைய ''சுற்றத்தார் சுற்றப் படவொழுகல் செல்வந்தான், பெற்றத்தாற் பெற்ற பயன்'' என்று நாயனாரருளியுள்ளபடி தன் கிளைஞருடன் கூடி "அன்போடி யைந்த வழக்கென்ப வாருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு'' எனக்
கூறியவாறமைந்து,


 “கடுக்கெனச் சொல்வற்றாங் கண்ணோட்ட மின்றா
 மிடுக்கண் பிறர்மாட் டுவக்கு - மடுத்தடுத்து
 வேக முடைத்தாம் விறன்மலை நன்னாட
 வேகுமா மெள்ளுமாங் கீழ் "

 

எனச் சான்றோரருளி யுள்ளபடி சுற்றத்தாருடன் கடுமையாகப் பேசுதல், எவரிடத்துந் தாக்ஷண்யம் பாராமை, தன்னுறவினர்கட்கே நேரிடுகிற துன்பத்தைக் காண்புழி மகிழ்தல், காரணமின்றி மேன்மேலுஞ் சினங் கொண்டு "நம்மாலேயாவரிந் நல்கூர்ந்தா ரெஞ்ஞான்றுந் தம்மாலாமாக்க மிலரென்று” செல்வச் செருக்கடைதல், பிறரைத் தூஷித்தல் முதலிய கீழ்மைக் குணங்க ளனைத்தையு மகற்றி,

 

"அற்ற குளத்தி னறுநீர்ப் பறவைபோ

லுற்றுழித் தீர்வா ருறவல்லர் – அக்குளத்திற்

கொட்டியு மாம்பலு நெய்தலும் போலவே

யொட்டி யுறுவா ருறவு.''

 

என வான்றோர் கூறியுள்ள படி ஆபத்து வந்தகாலத்திலும் உடனிருந்து வாழுமவர்களே நற்சுற்ற மாவார்கள். நாலடியிலும்,

 

''அழன் மண்டுபோழ்தி னடைந்தவர்கட் கெல்லா
 நிழன்மரம்போ னேரொப்பத் தாங்கிப் - பழுமரம்போற்
 பல்லார் பயன்றுய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே
 நல்லாண் மகற்குக் கடன்.''

 

எனக்கூறிய வித்தகைய இயற்கை நட்பமைந்த சுற்றத்தா ரெஞ்ஞான் றுந்தம்மை விட்டகலாது "உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தனிழைத்திருந் தெண்ணிக் கொளல்'' என்பதில்

 

பிரிந்து பின்பொரு காரணத்தால் வந்தடைந்தவனையுந் தன் தமரெ னக் கொள்ளுதலே கடமையென்றா ராகலான், சுற்றமியற்றிய குற்றம் விடுத்து அவர்களை மனம் போன போக்கே யகலவிடாது தம்முள்ளடக்கி ஒற்றுமைப்பட வாழ்வதுவே இயற்கைநட்பாம். லில்லிபுத்தூராரும் கிருட்டினன் தூதுச் சருக்கத்தில் –


 "குருகுலத்தோர் போரேறே குற்றமது பார்க்குங்காற் சுற்றமுண்டோ
 வொருகுலத்திற்பிறந்தார்களுடன்வாழும் வாழ்வினைப்போலுறுதியுண்டோ

 விருவருக்கும் வசையன்றோ விருநிலங்காரணமாக வெதிர்ப்பதென்றான்”

 

எனக் கூறியுள்ளது முய்த்துணர்க.

 

அன்பர்காள்! இதுகாறு மியம்பிய நட்பின் முன்னையதை விடுத்துப் பின்னையதாகிய செயற்கையாலாகும் நட்பின் றன்மையை யாராயப்புகுவாம். செயற்கை நட்பாவது "உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கேயிடுக் கண்களைவதா நட்பு " என்றபடி யிம்மாண்பினை யுடையாரினது இணக்க மறிந்தே யிணங்குவ ரறிவினராதலி னிது, செயற்கை நட்பெனவகுத் துரைக்கப் பெற்றது. 'தெளிவிலார் நட்பிற்பகை நன்று” என நாலடியிலுங் கூறியுள்ளாராகலான் நற்குண நற்செய்கையுடைய நட்புடன் கூடிவாழுதலே நன்மை பயக்கும். அன்றேல், “ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந்துயரந்தரும்” என்றபடி சாதற்கேதுவான துன்பந்தருமாகலின்'' குணனுங் குடிமையுங் குற்றமுங்குன்றா வினனுமறிந்துயாக்க நட்பு" என்கிறபடி குணம், குடிப்பிறப்பு முதலியவைகளை யிணங்குதற்கு முன்னரே யறிந்து கோடல் வேண்டு மென்றார் நாயனாரும். ''கூடிப்பிரியேல்'' என ஒளவைப் பிராட்டி யருளியுள்ள படி சேர்ந்து விடுதல் சிறப்பல்ல வாகையால் நட்கப்படாதவரின் தன்மை யறிந்த கற்ற நல்லாதனார்,


 'பொய்வழங்கி வாழும் பொறியரையுங் கை திரிந்து
 தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையும் - ஊழினால்
 ஒட்டி வினை நலம் பார்ப்பானு மிம்மூன்றும்
 நட்கப் படா அதவர்''


 எனத் திரிகடுகத்தில் சாற்றியுள்ளார். நாலடியிலும்,


 ''உள்ளத்தா னள்ளா துறுதித் தொழிலராய்க்
 கள்ளத்தா னட்டார் கழிகேண்மை - தெள்ளிப்
 புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட
 மனத்துக்கண் மாசாய் விடும்''

 

எனக்கூறி யுள்ளது மீண்டறிதற் பாலது. தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும் "உள்ளற்கவுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க வல்லற்க நாற்ற றுப்பார்'' (அதாவது) துன்பத்திற் கைவிடுவோனினது நட்பையொழித்து, "நுண்ணுணர்வினாரொடு நுகர்வுடைமை விண்ணுலகேயொக்கும்'' என்றபடி நற்குண நற்செய்கை வாய்ந்த நட்பினையறிந்து, சக்கிரவர்த்தி திருமகனார் குகனை நோக்கி 'யாதினுமினிய நண்ப! யிருத்தி யீண்டெம்மொடு எனக்கூறியதனையே கொண்டு, பிதுர்வாக்கிய பரிபாலனத்தின் பொருட்டுக் கானகத்திற் சென்றதமையனான ஸ்ரீ ராமபிரானைத் தேடிச்சென்று சிருங்கி பேரபுரத்திற் கருகிலுள்ள கங்காநதி தீரத்தில் பரதன் வந்து சேர்ந்தமையறிந்து, தமையனரசுரிமையைக் கவர்ந்து கொண்டின்னமு மிவண் எய்திய தெதற்கோவென மிக்க சினங்கொண்டு,


 "அஞ்சன வண்ணனென் னாருயிர் நாயக னாளாமே
 வஞ்சனை யாலர செய்திய மன்னரும் வந்தாரே
 செஞ்சர மென்பன தீயுமிழ் கின்றன செல்லாவோ
 வுஞ்சிவர் போய்விடின் நாய்குக னென்றெனையோதாரோ''


 ''ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
 'வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ
 தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ
 ஏழைமை வேட னிறந்தில னென்றெனை யேசாரோ.''

 
      ''முன்னவ னென்று நினைந்திலன் மொய்புலி யன்னானோர்
      பின்னவ னின்றன னென்றில னன்னவை பேசானேல்
      என்னிவ னென்னை யிகழந்ததிவ் வெல்லைகடந்தன்றோ
      மன்னவர் நெஞ்சினில் வேடர் விடுஞ்சரம்வாயாவோ "


"பாவமும் நின்ற பெரும்பழி யும்பகை நண்போடும்
ஏவமு மென்பவை மண்ணுல காள்பவ ரெண்ணாரோ
ஆவது போக என் னாருயிர்த் தோழமை தந்தான்மேல்
போவது சேனையும் ஆருயி ருங்கொடு போயன்றோ''


“அருந்தவ மென் துணை யாள விவன்புவி யாள்வானோ
மருந்தெனி னன் றுயிர் வண்புகழ் கொண்டு பின்மாயேனோ
பொருந்திய கேண்மையு கந்தவர் தம்மொடு போகாதே
இருந்தது நன்று கழிக்குவ னென்கட னின்றோடே.''

 

என்று நட்பிற்குற்றது தனதென்று நினைந்து உயிரிழப்பினுந்தம் மித்திரற்கிகல் கருதிய விவரோடு போர்புரிதலே நன்றெனத் துணிந்த ஸ்ரீ இராமபிரானினது செயற்கை நட்பினனாகிய குகனினது ஆற்றலையொப் பானை நட்பாகக் கொள்ளுதலே சிறப்புடைத்தாம். இதனை விரிக்கிற் பெருகும். விபுதர்காள்! எனது சிற்றறிவிற் கெட்டியவாறு சங்கிரகமாக வெடுத் துரைத்த விதனுட்டோன்றிய குற்றங்களைந்து குணங் கொள்ளுவீரென வேண்டுகின்றனன்.

R. V. ஸ்ரீநிவாஸராகவன், புத்தாநத்தம்.

 

குறிப்பு: - நட்பின் விஷயமாக நமது பத்திரிகையின் 14834 - வது சந்தாதாரராகிய நண்பர் S. நரஸிம்மம் (25, மலைக்கோட்டை கீழ்வீதி, திரி சிரபுரம்) என்பவரும் விரிவாக எழுதியுள்ளார். கருத்து ஒன்றாகவே முடிவு பெறுகின்றது. மற்றொருமுறை இடங்கிடைத்தபோது அதனையும் வெளி யிடுவாம்.

 
சுக்கிரீவனுக்கும் விபீஷணனுக்கும் நேர்ந்த நட்பைப் போன்ற நட்பே உத்தமமானது.
 

“தொல்லருங் கால மெல்லாம் பழகினுந் தூயரல்லார்
புல்லலர் உள்ளந் தூயார் புல்குவர் எதிர்ந்த ஞான்றே
ஒல்லைவந் துணர்வு முற்றி யிருவரும் ஒருநா ளுற்ற
எல்லியும் பகலும் போலத் தழுவின ரெழுவுத் தோளார்''


என்று இராமாவதாரங் கூறுகின்றது.

 

உத்தமர்க்குக் கூடுதலும், பழகுதலும் வேண்டாமலே சந்தித்த அக்கணமே நட்புப் பாராட்டுந்தன்மை யுண்டாம். அந்த நட்பு ஒருநாளுக் கேற் பட்ட இரவும் பகலும் போல மாறா திருப்ப தொன்றாம். இங்கே பகல் அறத்தையும், இரவு இன்பத்தையும் உணர்த்தும். அறமும் அதன்பயனாகிய இன்பமும் எப்படி மாறுபடுவதில்லையோ அப்படி நல்லோர் நேசம் நீடித்திருப்பதாம். (நிறத்தில் சுக்கிரீவன் வெண்மையும், விபீஷணன் கருமையும் பெற்றிருத்தலின் இவ்வாறு உவமிக்கப்பட்டது.)

 

ஆனந்த போதினி – 1925 ௵ - ஆகஸ்ட் ௴

 

No comments:

Post a Comment