Thursday, September 3, 2020

 

நந்தப்பள்ளத் திருவிடைமருதூர்

(மனுநீதிகண்ட சோழனின் பக்தி யுணர்ச்சியை விளக்கும் கிராமம்)

நாகை-என்- பாலசுப்ரமண்யம் எழுதுவது.

“ஒரு ராஜாமாதிரி தெரிகிறதே!''

"இல்லை, இல்லை; ஒரு ரிஷியாட்டமா .......

"ரிஷிக்கு மீசை யுண்டா?"

"ஏன் இல்லை? தாடியை மாத்திரம் வளர்த்துக்கொண்டு மீசையை மாத்திரம் சிறைத்துக் கொள்வார்களா ரிஷிகள்?"

"அப்படிப் பார்த்தாலும் தாடியைக் காணோமே?''

"ஆம் – ஆ - ஆ - ஆம்!"

இன்னொரு விஷயமல்லவா? இதோ பாருங்கள், ராஜ அங்கியை! எண்ணெய்க்களிம்பு ஏறி இருந்தாலுங்கூட நன்றாகத் தெரிகிறதே? ராஜா தான் சந்தேகமில்லை.''

"ராஜ விக்கிரகத்தை நந்திக்கு முன்னால் வைக்கவேண்டிய அவவலியம் என்ன வந்ததோ தெரியவில்லை?

"இந்தக் கோயிலை ஒரு சமயம் அவர் கட்டுவித்திருக்கலாம் ............'' என்று நான் எனது சிநேகிதருக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் பொழுது,

“அது மனுநீதிகண்ட சோழனின் விக்கிரகம்!" என்று ஒரு குரல் கேட்டது. நாங்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தோம்; ஒருவரையும் காணவில்லை.

"என்னடா அதிசயமா யிருக்கு! அசரீரி என்கிறாளே அதுதானோ. என்பதாக நாங்கள் நினைத்திருப்போமென்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? ஆம். நாங்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த கோயிலுக்கு வடவண்டைச் சாரி வீட்டுத் திண்ணையிலிருந்த ஐயர் மாத்திரம் தொடர்ந் தொட்டியாகப் பேசாம லிருந்திருக்கும் பக்ஷத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயத்தை நாங்கள் ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும். அவர் தொடர்ந்து பேசியது இதுதான்: -

"நமக்கு எந்த ஆரோ? இந்தமாதிரி பூர்வீகக் கட்டிடங்களையும் கோயில்களையும் பிரேமையோடு ஆராய்ச்சி செய்கிறவான் இந்தக் காலத்தில் கிடைப்பது கஷ்டம்.

"அதனாலேயேதான் இந்த காலத்து விஷயங்கள் ஒன்றையும் தெளி வாக அறியக் கூடவில்லை'' என்று சொல்லிக்கொண்டே எனது தோழர் தமிழ்ப்பண்டிதர், ஐயர்வாள் வீட்டை நோக்கிச் சென்றார். நானும் பின் தொடர்ந்து சென்றேன். ஐயருக்கு அறுபது வயதிற்கு மேலிருக்கும். மானிறமான பேர்வழி. தலை முழுவதும் வெள்ளிக்கம்பி. எங்களைப் பார்த்தவுடன் படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்தார். ஒரு சிட்டிகை பொடியை ரொம்ப அனுபவபாவமாக சம்பூர்ண வேகத்தோடு மூக்கிற்குள் உறிஞ்சி உத்தரீயத்தால்
துடைத்துக்கொண்டு கண்களைத் திறந்தார். அவர் கண்கள் பளிச்சென்று தெரிந்தன. அக் கண்களால் அவர் எங்களைக் கூர்ந்து பார்த்து,

"இந்த வூர் என்னான்னா எதிலே சேர்த்தி? டவுனு மில்லே. கிராமமில்லே. இரண்டாங் கெட்டான். உங்களைப் பார்த்தால், நத்தப்பள்ளம் சித்த வைத்தியசாலைக்கு வாதவாபோலத் தெரிகிறதே, அப்படித்தானா?" என்றார்.

"ஆமாம்" என்றார் பண்டிதர்.

''கேட்டாக் கேளுங்கோ, விட்டா விடுங்கோ, டாக்டர் - எஸ். வைத்தியலிங்கம் செட்டியார் உண்டோன்னோ தமிழ் வைத்தியத்திலே பலே பேர் வழி. நாடிப் பரீக்ஷையில் மகாமுண்டன் ..............'' என்று அடுக்கினார் ஐயர்.

“ஆமாம், ஆமாம். அவரைப்பற்றி அப்படித்தான் பிரஸ்தாபம். அவரைத் தேடி வந்தது வாஸ்தவந்தான். அதிருக்கட்டும், அப்புறம் பேசுவோம். ஏதோ மனுநீதி கண்ட சோழன் என்றீர்களே, அவனுக்கும், இந்தக் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்?" என்றேன் நான்.

ஐயர், 'ஹக்கக்கே' என்று தொண்டையில் தங்கி யிருந்த கோழையை நீக்க ஒரு கனைப்புக் கனைத்தார். பிறகு, எக்கிலிருந்த பொடிமட்டையை இடது கையால் தடவிக்கொண்டே,

"அப்பா! இதற்குள்ளவே வெய்யில் இப்படி படை படைக்கிறதே! சித்திரை வைகாசி எப்படிப் போகப் போகிறதோ!' என்றார்.

''என் பங்குனியிலேயே கோடை ஆரம்பந்தானே'' என்று நான் சொல்லும்பொழுது, 'ஐயரே வீண் அளப்பு வேண்டாம். விஷயத்தை ஆரம்பியும்' என்ற தொனியை, அவ் வார்த்தைகளிலேயே வெளிப்படுத்தினேன்.

ஐயர் களைத்துக்கொண்டு மனுநீதிகண்ட சோழனுக்கும், திருவிடைமருதூர் ஆலயத்திற்கும் உள்ள சம்பந்தத்தை வெகு சுவாரஸ்யமாகச் சொல்லி முடித்தார். அவர் சொல்லியதின் சுருக்கம் பின்வருமாறு: -

''கும்பகோணத்துக் கருகாமையில் சைவசமயாசாரியார் நால்வர்களாலும் பாடப்பெற்ற திருவிடை மருதூர் என்னும் ஊர் இருக்கின்றது.

நடுக்க முற்றதோர் மூப்பு வந்தெய்தி

நமன்றமர் நரகத்திலிட லஞ்சி

இடுக்கணுற்ற னுய்வகை யருளாய்

இடை மருதுறை யெந்தை பிரானே.

 

என்று சுந்திரமூர்த்தியடிகள் பாடி யிருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள்; கேட்டிருப்பீர்கள். சுவாமி பெயர் மருதப்பர். அம்பிகை நாமம் நன்ழலை நாயகி; விருக்ஷம் மருதமரம்; என்பவை எங்களுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆனால் சொல்லப்பட்ட இவ்வளவு தன்மையோடும் மகிமை வாய்ந்த கிராமம் இது; என்பது உங்களுக்குத் தெரிந்திருக்காது. இந்தக் கிராமத்தின் பெயரும் திருவிடை மருதூர்தான். இந்தத் திருவிடை மருதூர் திரு
வாருருக்கு தென்கிழக்காகவும், வில்வாரண்யம் என்று பெருமை சொல்லப்படுகின்ற திருத்தருப்பூண்டிக்கு வடகிழக்காகவும் அமைந்திருக்கிற விஷயம் வெட்ட வெளிச்சம். திருவிடை மருதூரைப்போலவே மற்றொரு விடை மருதூரை ஸ்தாபிக்க வேண்டிய அவஸியமென்ன வந்தது? இந்தக் கேள்வி தோன்றும் பொழுது தான் மனுநீதிகண்ட சோழனின் பக்தி வெள்ளத்தையும் நாம் ஆராயும்படியா யிருக்கிறது.

"இந்தப் போலித் திருவிடை மருதூருக்கு மிகச் சமீபத்தில் மனு கண்டம் என்று ஓர் ஊர் இன்றும் இருக்கிறது. அவ்வூர் தான் மனுரீதிகண்ட சோழனின் தலைநகரம் என்கிறார்கள். ஊரின் அமைப்பும் அதற்கு ருசுவாக இருக்கிறது. ஆறில் ஒருபங்கு நிலவரி யென்பதுபோலவே, அக் காலத்தில் ஆலயங்களுக்கு ஆறுகால பூசையும் நடைபெற்று வந்தது. இக்காலத்திலும் பெரிய ஆலயங்களில் அவ்வாறே நடைபெற்று வருவது தெரிந்த விஷயமே. அக் காலங்களில் ஆகக்கடைசி அர்த்தசாமம்'. அந்த அர்த்தசாம கால தரி
சனத்திற்காக, மனுகண்டத்திலிருந்து அனுதினமும் திருவிடை மருதூர் சென்று வந்தான் மனு நீதிகண்டன். அக்கால பூசையை தரியாது அவன் உண்பதும் உறங்குவதும் இல்லையாம். அவ்வாறு அவன் அவ்வொழுக்கத்தைக் கடைப்பிடித்து வருங்காலத்தில் ஒருநாள், பேரிடியும் பெருமழையும் வந்து பெய்து, அரசனை திருவிடைமருதூர் செல்ல ஒட்டாது தடுத்தன. அரசனது பல்லக்கைச் சுமந்த போகிகள் மேற்படி அசந்தர்ப்பத்தால், வழியை விட்டு வழியிற் சென்று தடுமாறினர். திக்குங் கெட்டு திசையுங் கெட்டு மலைத்து நின்ற பொழுது, சோழன் சிவபெருமானின் அர்த்தசாம தரிசனத்தை இழக்கின்றோமே என்று வெகுவாக உருகி மனங்கரைந்து வருந்தினான். சிவபெருமான் சோழனின் துன்பத்தைச் சகியாதவராய் சகன வடிவத்தோடு தோன்றி 'அன்பா வருந்தாதே. அர்த்தசாம தரிசனத்தை
உனக்கு அளித்தோம். இனிமேல் நீ திருவிடை மருதூருக்கு தினந்தோறும் வர வேண்டியதில்லை. இவ்வூரே உனக்குத் திருவிடைமருதூர். இந்தத் தலத்திலேயே நாம் உமக்கு அனுதினமும் காக்ஷி தருகின்றோம்' என்று திருவாய் மலர்ந்து மறைந்தருளினாராம்.

"அரசன் முதலானோர் மெய்சிலிர்த்து தம்மை மறந்து சிவபெருமானைச் சேவித்து மனமகிழ்ந்தனர். மறுநாள் அவ் விடத்திலேயே அரசன் கோயிலைக் கட்டுவித்தான். அந்தக் கோயில் தான் இது, மனுநீதிகண்டனுக்கென்றே இங்குச் சிவபெருமான் கோயில் கொண்டெழுந்தருளினார். ஆதலின், அவனுடைய சிலையையும் இங்குப் பிரதிட்டை செய்திருக்கின்றது.

மேற்கண்ட விஷயத்தைக் கேட்டு நாங்கள் மகிழ்ந்தோம். பூர்வீக தமிழ் உலகத்தின் நாஜீய தேசிய சமூக வாழ்வின் பரிசுத்தமான நிலையை எங்கள் இருவர் மனமும் கண்டு, ஆனந்தித்தன. நாங்கள் பார்வையிட்டும் வினவியும் தெரிந்து கொண்ட விஷயம் வருமாறு: -

கோயில் மகாபெரியது ஒன்றுமில்லை. சாதாரணமானதுதான். ஆனால், ஆகப் பழங்காலத்திற் கட்டப்பட்ட தென்பதில் ஐயமில்லை. மூன்று நான்கு முறை புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படு கடைசி கும்பாபிஷேகம் சுமார் இருநூறு
ளுக்கு முன்னாலிருந் திருக்கவேண்டும். சென்ற பவ தை மாதத்தில், மூலைக்கு மூலை கிடந்த சில கல்விக்கிரகங்களை யெல்லாம் பிரதிட்டை செய்து, அஷ்டபந்தன மண்டலாபிஷேகம் ஒன்று நடந்தது. பிரகாரச் சுவர் முழுவதும் இடிந்து கிடக்கிறது. கற்களைக் காணோம். கோயிலின் மொத்த பரப்பு சுமார் 150 சதுர அடிகளிருக்கும். தலைக் கோபுரமில்லை. அம்பாள், சுவாமி, ஸ்தூபியோடு சரி. வழக்கம் போல் சுவாமி கிழக்கு முகமாகவும், அம்பிகை தெற்கு முகமாகவுமே அமைக்கப்பட்டிருக்கிறது. நந்தி, பலிபீடம்,
வெய்யிலிலும் மழையிலும் காய்ந்து நனைந்து தான் ஆகவேண்டும். மனுநீதி கண்ட சோழவிக்கிரகம் நந்திக்கு முன்னாலிருக்கிறது. அதற்கு மாத்திரம் ஒரு கீற்றுக் கொட்டகை போடப்பட்டிருக்கிறது. கோயிலுக்கு அசாத்தியமிலம் மானியம் விடப் பட்டிருந்ததாம். நாளடைவில் ஆசாமிகள் அவைகளை அனுபவிக்கத் தொடங்கி விட்டதாகத் தெரிகிறது. இப்போதிருப்பது பத்து மாநிலந்தான். வெண்கல விக்கிரகங்கள் சில இருக்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டில் வார்க்கப்பட்ட நடராஜ வெண்கல விக்கிரகத்தில் மூன்றிருந்ததற்கு, விற்றுப்போனது ஒன்று, திருக்கிளர் தேவாலயத்திற்குக் கொடுத்தது ஒன்று, ஆக இரண்டு போக இப்பொழுது இருப்ப ஒன்றுதான். 'கல்வெட்டு' ஏதேனும் இருக்கலாம் என்று எண்ணித் தேடினோம்; புலப்படமில்லை. யாரோ ஒருவர் இத் தலத்திற்குப் புராணம் எழுதி யிருக்கிறதாகச் சொல்கிறார்கள். நான்கு வீதி யழகா யிருக்கிறது. தேரில்லை. தீர்த்த மிருக்கின்றது. ஒருகால பூஜை நடந்து வருகிறது.

ஆனந்த போதினி – 1937 ௵ - ஜுன் ௴

 

No comments:

Post a Comment