Thursday, September 3, 2020

 

நந்தனாருக்குப் பின்!

(S. K. கணேசன்)

 

நந்தன் சிதம்பரம் சென்றதிலிருந்து வேதியர் பைத்தியம் பிடித்தவர் போலானார். அவருக்கு உணவு செல்லவில்லை; உறக்கங் கொள்ளவில்லை. நந்தனும், நந்தனது உபதேசமும் அவர் கண்முன்னே நின்றன. அந்த மகா உபதேசம் அவருடைய அஞ்ஞான இருளைக் கடிந்து அகண்டாகார சச்சிதானக்தப் பேரொளியின் தரிசனையி லாழ்த்தி விட்டது. அதையே சதாகாலமும் சிந்தித்துச் சிந்தித்து, மனமது நைந்து உருகவும், கண்கள் நீரைக் கக்கவும், நித்தலும் பேரானந்தங் கொண்டு பார்க்கவும், நினைக்கவும், படிக்கவும், பக்கநின்று கேட்கவுந் தித்திக்கும் அம் மகா பெரிய சைவப் பழத்தின் தீஞ் சுவையைச் சுவைத்த வண்ணமிருந்தார்.

 

ஆகவே, அவருடைய லௌகீக வாழ்வு கெட்டது; மண்ணுலக பாசங்கள் மறைந்தன; ஆசைகள் கெட்டன; உயர்வு தாழ்வுவேற்றுமை யொழிந்தது; கல், மண், கழுதை, மனிதன், பறப்பன. ஊர்வன, அசேதன முதலிய வனைத்தும் அவருக்கு ஒன்றாயின.
எங்கும் பிரம்மம்; எல்லாம் பிரம்மம்; எதிலும் பிரம்மம்; சர்வம் பிரம்ம மயமாயிற்று. நந்தனுடைய உபதேசத்தால் தாழ்ந்த நிலையிலிருந்த அவர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டார். அதற்குத் தக்க பக்குவமும் சித்தி பெற்றது.

 

இந்நிலை யறியாத அவர் மனைவி, தம் கணவரை மீட்டும் உலகவாழ்விற்குத் திருப்ப சதுர்வித உபாயமும் செய்து பார்த்துச் சலிப்படைந்தாள். கடைசியாக, சிதம்பரம் சென்ற நந்தனாரைத் திருப்பி யழைத்து வந்தால், ஒருகால் வேதியர் சுய உணர்வு பெறக் கூடுமென்று கருதி, தம் காரியஸ்தரை தில்லைக்கு அனுப்பினாள். காரியஸ்தர் சிதம்பரம் சென்று நந்தனது பிரபாவத்தையும், நந்தன் சிவபத மெய்தியதையும் தனது ஊனக் கண்களால் தரிசித்து அவரும் தெய்வப்பித்து பிடித்துத் திரும்பினார். திரும்பி வந்து வேதியரிடம் சென்று கைகூப்பிச் சொல்லலானார்.


'சுவாமி?'

மௌனம்.
'சுவர்மி'
(நிஷ்டை கலைந்து) 'யாரது?'

'தங்கள் காரியஸ்தன்.'

‘உம்மைக் கூப்பிடவில்லையே.'

'இல்லை, கூப்பிடவில்லை; நானாகவே வந்தேன்.'

'அப்படியானால் இனிமேல் வரவேண்டாம். துச்சமான இக்மண்ணுலக வாழ்வு நந்தனது உபதேசத்தால்.......'

'ஆம், சலித்துப்போய் விட்டது.

'உமக்கும் அப்படியா?''ஆம், தில்லைக்குச் சென்ற நந்தன் ......'

 

'நந்தன்! ... நந்தன்!! ...எனது அகக் கண்ணைத் திறந்து ஞானவழி காட்டிய அந்த மகா குரு நந்தன் என்னவானான்? சொல்லு.'

 

'எஜமான்...'

 

‘ம்...நானல்ல இனி உனக்கு எஜமான்! எனக்கு, உமக்கு, ந்த ஜக்த்துக்கு, எல்லோருக்கும் எஜமான் வேறு, அவரை எஜவான் என்று கூப்பிடும்.'

 

'சரி, ஐயா! நந்தனார் இவ்வூரை விட்டுக் கிளம்பிய பின்னர் பக்தி மேலீட்டால் ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும், பித்தன் போலப் பகவந் நாமங்களைப் பிதற்றிக் கொண்டும் கொள்ளிடக்கரை சென்று தாண்டினார். தாண்டியதும், தில்லை நடராஜரின் கோபுர தரிசனமாயிற்று. அதைப் பார்க்க அவர் மெய் புளகாங்கித முற்றது: உரோமங்கள் சிலிர்த்தன; திறந்த இமை மூடாது கோபுர தரிசனம் செய்தபடியே ஸ்தம்பித்து நின்று விட்டார்.'

 

'ஆம்! (மெய்) புளகாங்கிதம், (மயிர்) சிலிர்ப்பு எல்லாம் இப்போது எனக்கும் உண்டாகின்றன. ஆனால், இதற்கு முன் எத்தனையோ கணக்கற்ற தட்வைகள் அக்கோபுரங்களைப் பார்த்திருக்கிறேன். அவைகளின் மகிமையை உணராத பாபியாயிருந்து விட்டேன்......'

 

'வெகு நேரஞ் சென்றபின் உணர்வு பெற்றுத் தாயைத் தேடியோடும் சேய் போல நந்தனார் குடல் தெரிக்கத் தில்லையை நோக்கி ஓட்டம் பிடித்தார்.--'


'......ம்!' (நீண்ட பெருமூச்சு)

 

'தில்லைச் சிதம்பரத்தை நெருங்கினார். நடராஜப் பெருமான் கோயில் கொண்டுள்ள ஆலயத்தை வளைந்துள்ள வீதிகளில் வா அஞ்சி......


'ஏன் அஞ்சினார்? அவரே தான் சிவ சொரூபமாச்சே!


'அதை அந்த பாமர ஜனங்கள் எவ்வாறு அறிவார்கள்?'


'ஏன் அந்த ஜனங்களால் என் குரு நந்தனுக்கு ஏதும் கெடுதி
நேர்ந்ததா?"


'இல்லை, அம்மாதிரி கெடுதிகளுக்கு உட்பட்ட மனமின்றி தில்லை நகரின் ஒரு புறத்தே ஏங்கித் தேங்கி, மனச் சோர்வுகொண்டு நடராஜப் பெருமானைச் சிந்தித்தவாறு தங்கிவிட்டார்.'


'ஐயோ! எனது குரு நாதனுக்கு இப்படியும்
நேரவேண்டுமா?”'


‘தங்கியவர், அப்படியே சோர்ந்து படுத்துறங்கி விட்டார்.

 

இரவும் வந்து கவ்வியது.'


'சொல்லு,


மேலென்ன நடந்தது?'


'நடராஜப் பெருமான் அவர் கனவில் தோன்றி-


‘ஆ ஆ!! கனவில் வந்தாரா? இன்னுமென்ன, இன்னுமென்ன, சீக்கிரம் சொல்லு.'

 

'கனவில் வந்து, 'பக்தா! நாளை காலையில் உன்னை எனது சபைக்கு அழைத்துவர தில்லை மூவாயிரவர்களுக்குக் கட்டளை விட்டிருக்கிறேன். வா' என்று கூறி மறைந்தார்.'


'அப்புறம்.'

 

அந்தகாரம் மெல்லென நழுவி கதிரவன் குணதிசை தன்கதிர்களைப் பரப்பிக் கொண்டெழுந்தான். எங்கும் பேரிகை நாதமும், சங்கொலியும் முழங்கவாரம்பித்தன. தில்லை மூவாயிரவர்கள் நடராஜப் பெருமானின் ஆக்ஞைப்படி கனத்த விருதுகளுடனும் பேருபசாரத்துடனும் நந்தனாரை அழைத்துக் கொண்டு தேரோடும் வீதிகளைச் சுற்றித் திருக்கோவில் புக்கு, சிவ கங்கையில் விதிப்படி மூழ்கச் செய்து ஞான சபையை நண்ணினர்.'


'ஆகா, ஆகா! அந்த மகா பாக்யம்!'........ (வேதியருடைய உடல் நடுங்குகிறது.)

 

'நந்தனார் அவர்கள் அழைத்துச் செல்ல வாரம்பித்ததிலிந்து சுயவுணர்வுடனில்லை. உள்ளும் புறமும் ஒன்றாய்ப் பூரித்து விம்மிற்று. உரோமங்கள் விரைத்து நின்றன ; கண்கள் தாரை தாரையாய் நீரைப் பெருக்கின; நடராஜப் பெருமானின் திவ்ய நாமங்கள் வாயிலிருந்து வந்து கொண்டேயிருந்தன; நடு நடுவே சொற்களை வெளியே அனுப்ப தொண்டை அடைத்தது; தொண்டை விக்கிற்று; நாக்குழறிற்று. ஆனந்தம் மேலிட்டுக் கூத்தாடினார். ஞானசபையை நெருங்க, நெருங்க அவருடைய தேஜஸ் சுடர்விட்டுப் பிரகாசம் மேலிட்டது. ...”

 

'ஆம், பிரம்ம ஞானத்தின் சுவையைச் சுவைக்கும் பேறு பெற்றவர்கள்.......சரி, சொல்லு, நந்தன் நடராஜப் பெருமானைக் கண் குளிரத் தரிசித்தானா? ஐயோ பாவம்! அந்தத் தரிசனத்துக்கு என்னிடம் எவ்வளவு மன்றாடினான். கேவலம், பறையன் என்று அவனைத் தவறாக மதித்தேன். அவனை எடை போட என்னால் முடியவில்லை. ஆனால், அவனோ என்னை எடை போட்டான். என் அகக் கண்களையும் திறந்துவிட்ட பின்னரே தில்லை செல்ல விரும்பினான். எனக்கு உபதேசஞ் செய்தான். எவரும் அடையவியலாத சாயுச்ய் பதவியை அடையச் செய்தான்.  ஆகா! எனக்குப் பேருபகாரஞ் செய்த அந்த குரு....... பின் என்ன செய்தான்?"

'தில்லை மூவாயிரவர்கள் ஞானம் சபையினெதிரே அக்கினி வளர்த்து அதிலே நந்தனாரை மூழ்கச் செய்தனர். குளித்து நடராஜப் பெருமானின் பூரண அனுக்கிரகம் பெற்று திவ்ய தேஜஸ் வீச ஜடா மகுட தாரியாய் வெளில் வந்தார்.'


ஆ, அந்த தீட்சதர்கள் தீயிலும் புடம் போட்டு எடுத்தார்களா?

 

மேலென்ன நடந்தது?'

 

'ஞானசபையிலே நடராஜப் பெருமானுடைய மூர்த்திகரத்திலிருந்து ஞான ஒளி வீசி யோடி நந்தனாரைப் பிணித்தது. சபை ஒரே ஒளி மயமா யிருந்தது. மானிடர்களால் அடையவியலாத பெரிய பேற்றை நந்தனார் பெற்றார்...'


இன்னுமென்ன பெற்றான், சொல்லும், சிக்கிரம் சொல்லும்.'

 

(வேதியருடைய சப்த நாடிகளும் கடகட் வென்று ஆடின: உடல் துடியாய்த் துடித்தது. ஞானப் பசியின் ஏக்கம் அவர் முகத்தில் நன்கு தோற்றமளித்தது.)

 

'அந்த நடராஜப் பெருமானிடமிருந்து வெளித் தோன்றிய ஒளி நந்தனாரை ஜோதிப் பிழம்பாக்கிற்று. இமை கொட்டும் நேரத்தில் அந்த ஜோதிப் பிழம்பு மூர்த்தியின் பால் இழுக்கப்பட்டு நடராஜப்பெருமானுடன் ஒன்றிக் கலந்தது! ...'


'ஆ! ஆ!! அந்த பாக்யம்!......'

 

ஒரு நீண்ட பெரு மூச்சு. அத்துடன் எல்லாம் ஒடுங்கிற்று. ஒரு
நல்ல பிரகாசம் அவர் உடலிலிருந்து எழும்பி மேனோக்கிச் சென்று மறைந்தது.

 

'அம்மா, அம்மா!' என்று காரியஸ்தர் கூக்குரலிட்டார். அம்மா வந்து சேர்ந்தாள். கூக்குரல் கேட்டு அனேகர் ஓடி வந்தனர். பலன்? வேதியர் விண்ணுலகு சென்று விட்டார். உயிர் பிரிந்தும் முகத்தில் தெய்வீக ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.

 

நந்தன் சிதம்பரத்திலே நடராஜப் பெருமானுடன் இரண்டறக்கலந்தமையும், அது கேட்டு வேதியர் விண்ணுலகு சென்றதும் காட்டுத் தீப்போல எங்கும் பரவியது. ஆதனூர் பறைச் சேரிக்கும் இச் செய்தி யெட்டாமற் போகவில்லை. ஊர்க் கூட்டம் போட்டனர். தாடி ரைத்த பெரிய கிழவன் ஆவேசம் வந்தவன் போல் பேசினான். கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் மயிர்க் கூச்செறிய, பரவச மேலிட்டுப் பேசினர்.

 

அன்றைய தினத்திலிருந்து அவ்வூரில் கட்டுப்பாடாகக் குடிப்பதை நிறுத்தினர். தினமும் காலையிலெழுந்ததும் ஸ்நானம் செய்து விபூதி ருத்திராக்கமணிந்து ஒருமுகமாகக் கடவுளை நோக்கி ஸ்தோத்திரம் செய்யாமல் உண்ணுவதில்லை. மாமிச உணவை வெறுத்து, பொய் சொல்லுதல், திருட்டு புரட்டு செய்வதை யெல்லாம் ஒழித்துத் தொலைத்தனர். அவர்களுடைய நன் முயற்சியால் சேரியில் ஒரு நந்தனார் மடமும், நடராஜ மண்டபமும் ஒருங்கு நிறு'வப் பட்டது. தினசரி பூஜை, புனஸ்காரம், பஜனை தவறாமல் கடக்கும். மார்கழி மாதம் வந்துவிட்டால் ஆதனூர் ஹரிஜனர்களுக்குப் பெரிய திருவிழா சேரிமுழுதும் சிவநாமம் மிகுந்து நிற்கும். பார்ப்பனருக்கு உபதேசித்த நந்தன் குலப் பெருமையை அவர்கள் நெடு நாட்கள் வரை மறந்துவிடவே யில்லை.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - ஜுலை ௴

 



No comments:

Post a Comment