Thursday, September 3, 2020

 

நந்திக்கலம்பக வரலாறு

 

 இப்பொழுதைக்குச் சுமார் ஆயிரத் திரு நூறாண்டுகட்கு முன் இரணியவர்மனென்பானோரிறைவன், ஒளவைப்பிராட்டியார் "சான்றோருடைத்து” எனப் புகழ்ந்து கூறிய தொண்டைமானாட்டைப் பரிபாலித்து வந்தான். அவனுக்கிருபுத்திரருண்டு. அவர்களுள் மூத்தவனாகிய நந்தி அபிமான ஸ்திரீயின் கட்டுதித்தோன். பட்டமஹிஷியின் புதல்வ னிளையவன். அவன் பெயர் காடன். இரண்யவர்மன் விருத்தாப்பிய தசையடைதலும் குலமகனுக் கரசளிக்காமல், அபிமானத்தால் பொதுஜன சம்மதத்தையும் பாராட்டாது, முதியோனென்னுங் காரணத்தைக்காட்டி நந்திக்கே மகுடஞ் சூட்டி, தந்திரத்தில் வல்ல கம்மாளனொருவனை அவனுக்கு மந்திரியாக்கிச் சிறிது காலத்திற்குள் தேகவியோக மடைந்தான்.

 

நந்திவர்மன் தனது வெண்கொற்றக் குடை யாவர்க்கு மினிமைசெய்ய செங்கோலோச்சி வருவானாயினான். கல்வியின்னினிமையைக் கண்டவனாகலின் கவிவாணர் களிப்பக் கருந்தனமீயுங் கற்பக வள்ளளலா யிருந்தான் நந்திவர்மன்.

 

தன் தந்தையின் தீயொழுக்கத்தால் தனக்குரிய நாட்டை யிழந்த இளையோன், மூத்தோனிடம் பகைமை கொண்டு அரசைக்கவரும் சமயம் நோக்கியிருந்தான். பிரஜைகளிற் பலர் அவனுக்குடந்தையாயினர். இதையறிந்த நந்தியின் மந்திரி இயந்திரக் கட்டிலொன்று சமைத்தான். அது தன்மேல் எவராவது படுத்து நித்திரை செய்யின் சத்தமிட்டுக்கொண்டும்
விழித்திருப்பின் நிசப்தமாயுமிருக்குந் தன்மைத்து. அதையவனரசற்குக்
காட்டி, "ஏந்தால்! மாற்றாரும்மை மாய்க்கக் கருதியுள்ளார். நீவிர் மிக்க எச்சரிக்கையோடிருத்தல் வேண்டும். இரவிற் பகைவராலின்னலுண்டா காவண்ணம் இக்கட்டிலின் மீதே கண்டுயில்வீராக, " வென்றான்.'' மந்திரிக் கழகு வரும்பொருளுரைத்தலன்றோ”? அரசனுமங்ஙனமே யொழுகி வந்தான்.

 

ஒருநாள் நடு நிசி. பேய்களுமுறங்குங்காலம். "கருமமே கண்ணாயினார் கண் துஞ்சார்" என்றபடி, காடவனும் அவன் சகாக்களும் அரண்மனைக்குப் புறத்திலொருசிறை பதிவிருந்தனர். ஒவ்வொருவர் கரத்தினும் கதிரவனொளிபோல் மின்னுங்கட்கம் பிரகாசிக்கின்றது. பார்த்திபன்றன் பள்ளியறைக்கு நேராக வெளியினின்ற விவர்கள் சிறிது நேரத்திற்குள் இடைச்சுவரில் கன்னக்கோல்கொண்டு ஆள் நுழையக்கூடுமான வழியமைத்துவிட்டனர். அமைத்ததும் உண்ணுழையத் தொடங்கினவர்கள், உள்ளே அரவமுண்டாதலைக் கேட்டு,'ஆளோசைபோலும்' என் றையுற்று அற்றம் நோக்கி நின்றனர். அச்சமைய மரசனும் கன்னவோசையாலெழுப்பப்பட்டு விஷயமுணர்ந்து உடைவாளை யுருவிக்கொண்டு துவாரத்தி னருகில் நின்றிருந்தான்.

 

காவலன் கண்விழித்ததால் கட்டிலினொலியு மோய்ந்தது. சற்று நேரத்திற்குள் ஒருவன் உள்ளே நுழைந்து வருவதைக் கண்டதும் வேந்தன், அவனை ஒரே வீச்சில் வெட்டி வீழ்த்தினான். பின்னும், ஒருவர் பின்னொருவராய் நுழைந்த அனைவரும் துணிபட்டொழிந்தனர். எஞ்சி நின்ற இளங்குமரன், 'என்னே வியப்பு! உட்புக்கார் யாதாயினர்? ஒருவரே னுந் திரும்பினாரில்லையே. சதிபோலும். நாம் அவசரப்படலாகாதென் றெண்ணி யாண்டிருந்ததோர் கரிப்பானையையெடுத்து, ஓர் கழியிற் செருகி யுட்புகவிட்டான். அதன்மேலும் வெட்டுப்பட்டது. கண்டான்காளை. 'ஓ ஓ மோசம்! நந்துணைவர் நந்தியால் வெட்டுண்டனரே' என மிக்க விசனத்துடன் போய்விட்டான்.

 

இக்காடனோ இலக்கண விலக்கியக் கடலின் கரைகண்ட பண்டிதன். கவி பாடுவதில் மிகச் சமர்த்தன். ஆகலின், அவன் வில்வாளியினும் சொல் வாளியே சிறப்புடைத்தென்றுன்னித் தன் தமயனாகிய நந்தியைப் பாட்டுடைத்தலைவனாக்கி, அறம் வைத்துக் கலம்பகமென்னுமோர் பிரபந்தமியற்றி யரசனதவைக்களமணுக, அமைச்ச னச்சுவடியைப் பார்த்து இஃ தீண்டரங்கேறுந் தன்மையுடைய தன்றெனக் கூறியனுப்பிவிட்டான். எங்ஙனமேனும் அவ்வசைக்கவிக ளரசனாற் கேட்கப்பட வேண்டுமெனக் கருதிய காடவன், அதனைப் பல பிரதிகள் செய்து பிரசுரப்படுத்துவானா யினான். அச்சூழ்ச்சியை யறிந்த வமைச்சன், 'அந்நூலை யொருவரும் ஓதலாகாது. எவரேனும் மீறி ஓர் பாடலோதினும் தண்டிக்கப்படுவார்" எனப் பறை சாற்றுவித்தான். இஃதிங்ஙனமாக,

 

ஓர் நாளிரவு பத்துமணி சுமாருக்கு ஒரு வீட்டு வாயிலில் அழகிய மாதொருத்தி – நின்று கொண்டிருந்தாள். அவள் ஓர் பரத்தை. அவள் வீதியில் போகின்றவர்களை யுற்று நோக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் யாரோ வொருவரது வருகைக்காகக் காத்திருக்கிறாள் போலக் காணப்படுகிறது. வெகுநேரம் நின்றிருந்த அம்மாது திண்ணையின் மேல் படுத்து நித்திரை போய்விட்டாள். தெருக்கதவை மூடாமலே உறங்கிக் கொண்டிருந்தவள் யாதோ காரணத்தால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்து தன்மீது சந்தனக்குழம்பு ஊற்றப்பட்டிருப்பதைப் பார்த்து வியப்புற்று, 'இக்காரியஞ் செய்தோர் யாவர். நம் காதலனாகிய காடவன் தானோ? இவ்வாறு செய்தது. அவருக்காக வெகுநேரம் காத்திருந்தும் காணவில்லையே. இப்போது வந்தாரோ?' வெனத் திகைத்து நின்றாள். அவ்வமயம் அவள் காணாதபடி மறைந்திருந்த காடவன், அச்சந்தர்ப்பத்திற் கேற்றவோர் செய்யுளடியை நந்திக்கலம்பகத்தினின்று பாடினான். நகரி சோதனையின் பொருட்டு வந்து ஆண்டு நிகழ்வதியாதோவென வறியப் புறத்தே பதுங்கி நின்ற சேவகனொருவன் அப்பாடலைக் கேட்டதும், உள்ளே நுழைந்து அவனைப் பிடித்துக்கொடுபோய் அரசன் முன் நிறுத்தி நிகழ்ந்தவற்றை நிகழ்த்தினான். எதிரில் நிற்போன் தன் இளவலெனக் கண்ட மன்னன், அப்பாடலைப் பாடச்சொல்ல, அவன்


 செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்

 சந்தனமென் றாரோ தடவினார் - பைந்தமிழை

 ஆய்கின்ற கோனந்தி யாக்கந் தழுவாமல்

 வேகின்ற நெஞ்சே விரைந்து                           எனப் பாடினான்.

 

அதைக் கேட்ட நிருபன், 'ஆஹா! நமது வெற்றி முதலிய சிறப்புக்களைப் பற்றிக் கூறும் சொற்சுவை பொருட்சுவை நிரம்பிய பாடல்களை யுடைய விந்நூலை, யாது நேர்வதாயினும் கேட்பதே துணிபு' எனத் தீர்மானித்துத் தம்பியைப் பார்த்து அதைக் கூறும்படி சொல்ல, அவன் 'கொற்றவா! நீரிந்நூலைக் கேட்பதாயின் மயானத்திற் சிதையடுக்கி யதின் மேலிருந்து கேட்கவேண்டும்' என்றான். பல்லோர் தடுத்தும் கேளாமல் நந்திவர்மன் காடவன் கூறியவாறேயிருந்து, நூலைக் கேட்டுவரு மளவில் தாதுக்களொடுங்கிக் கொண்டுவந்தன.

 

வானுறுமதியை யடைந்ததுன் வதனம்

வையக மடைந்த துன்கீர்த்தி

      கானுறு புலியை யடைந்ததுன் வீரம்

            கற்பக மடைந்த வுன்கரங்கள்

      தேனுறு மலராள் அரியிடஞ் சேர்ந்தாள்

செந்தழல் புகுந்ததுன் மேனி

      யானுமென் கலியு மெவ்விடம் புகுவோம்

            எந்தையே நந்திநா யகனே. 

  
என்னும் இறுதிச் செய்யுளைப் பாடி முடிந்ததும், நந்தி பேசவுமாட்டாதவனாய் தன் கையைக் காட்டிக் கணையாழியைக் கழற்றிக் கொள்ளும்படி தம்பிக்குக்காட்டிச் சமிக்கை செய்து இறந்தனன்.

 

காடவனும் கணையாழி பெற்றுத் தமயனுக் கீமக்கடன் முடித்து, முடிசூடி யரசனாயினான்.

 

நந்தி கலம்பகத்தால் மாண்டகதை நாடறியும்

சுந்தரஞ்சேர் தென்குளத்தூர் சோமேசா - சந்ததமும்

வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க

சொல்லே ருழவர் பகை,                   (சோமேசர் முதுமொழி வெண்பா.)


பூ. ஸ்ரீனிவாசன், தமிழ்ப்பண்டிதர்,

இராணிப்பேட்டை.

 

ஆனந்த போதினி – 1923 ௵ - ஆகஸ்ட்டு ௴

 

 

No comments:

Post a Comment