நமது "ஆனந்த
போதினியும்" கிறிஸ்து மதமும்.
1. நமது ஆனந்தனின் மாதாந்தப்
பத்திரிகைகளிற் சிலவற்றை யான் எனது நண்பரொருவரிடம் வாங்கிப் படித்ததில் ஆடம்பரமாக வெளிவரும்
ஏனைய பத்திரிகைகளைப்போ லன்றி, சிறந்த விஷயங்களை யுடையதாகவும் ஏழைகள் கூட வாங்கி வாசிக்கக்கூடிய
அவ்வளவு குறைந்த சந்தாவை யுடையதாகவும் இருக்கக்கண்டு, இவ்வருஷமுதல் யானும் அதற்கு ஓர்
சந்தாதாரராகச் சேர்ந்திருக்கின்றேன். ஆனால் என்னைப் போன்ற கிறிஸ்தவ நண்பர்களிற் சிலர்
என்னிடம் வந்து "ஆனந்தபோதினி' சதாகாலமும் கிறிஸ்துமதத்தைத் தூஷித்தெழுதுகிறதென்றும்,
உண்மையான கிறிஸ்தவர்கள் இப்பத்திரிகையை ஆதரிக்கக் கூடாதென்றும் புத்தி சொல்லுகிறார்கள்.
அவர்களோடு நான் வாதாடினதில், சுருக்கமாய்ச் சொல்லுமிடத்து, கிறிஸ்துமதம் தவிர மற்ற
மதங்களெல்லாம் பொய்யென்றும், அம்மதங்களைத் தழுவி நிற்போருக்கு மோட்சம் (கைலாசம்) கிடையாதென்றும்
சாதிக்கிறார்கள். இவ்விதண்டவாதம் எனக்குச் சற் றேனும் பொருத்தமாகத் தோற்றவில்லை. இவர்கள்
தங்கள் புத்தியைச் சற்று விசாலப்படுத்தி யோசிப்பார்களானால் இப்படி வீண்வாதம் செய்ய
முன்வரார்கள். கிறிஸ்து மதம் உண்மையான மதம் என்பதற்கு ஆக்ஷேபனையில்லை யெனினும், மற்ற
மதங்கள் உண்மையானவையல்ல வென்பபதற்கு என்ன ஆதாரமுண்டோ தெரியவில்லை. ஆனால் இவர்கள் ஊற்றுக்கு
நிற்காத பலவித காரணங்களை யெடுத்துக் காட்டுகிறார்கள். ஒரே கடவுள் எப்படிப் பல மதங்களை
யுண்டாக்குவாரென்றும், கடவுள் ஒன்றாயிருக்கும் போது மதமும் ஒன்றாய்த்தானிருக்க வேண்டும்,
அந்த மதம் கிறிஸ்துமதத்தான் என்றும் வாதாடுகிறார்கள். ஏன் அந்த மதம் இந்து மதமா யிருக்கக்கூடாது
என்று நாம் கேட்குமுன் கீழ்க்கண்ட உதாரணத்தைக் கவனிப்போம்.
2. ஓர் மாமரத்தை எடுத்துக்கொள்வோம்;
அதன் அடிமரம் ஒன்று. அதினின்றும் பல பெரிய கிளைகளிலிருந்து பல நூறு கிளைகளும் பிரிகின்றன.
ஆனால் எல்லாக் கிளைகளிலும் ஒரே விதமான ருசியுள்ள பழங்கள் தான் கிடைக்கும். அம்மரத்தின்
கிளைகளில் அவரவர் இஷ்டப்படி எந்தக் கிளையில் ஏறினாலும் பழங்கள் கிடைப்பது நிச்சயம்.
ஒருமரம் எப்படிப் பல கிளைகள் விடும் என்று கேட்பது எப்படிப் பொருந்தாதோ அப்படியே ஒரே
கடவுள் எப்படிப் பல மதங்களை யுண்டாக்குவார் என்பதும் பொருந்தாது. அவனவன் பிரயாசத்துக்குத்
தக்கபடி எந்தக் கிளையிலேறினாலும் பழம் கிடைப்பது போல் எம்மதத்தைத் தழுவினும் அவனவன்
பாவ புண்ணியங்களுக்குத் தக்கவாறு கைலாச பலனை யடைவான். அடி மரமாகிய கடவுளின் வழியாய்
மதங்களெனப்படும் கிளைகளில் எதைத் தழுவினாலும் பலன் ஒன்றே யாகும்.
3. உலகத்திலேயே தாங்கள் தான் கடவுளால்
சிருஷ்டிக்கப்பட்ட மேலான மனிதரென்றும், மற்ற தேசத்தாரும், ஜாதியாரும் தங்களுக்கு அடிமைகளென்றும்,
உலகத்திலுள்ள சகல போக பாக்கியங்களையும் தங்களைத் தவிர வேறொருவர் அனுபவிக்க லாயக்கானவர்களல்ல
வென்றும் நினைப்பவர்கள் தோன்றியிருக்கும் இக்கலிகாலத்துக் கேற்றபடி, ஒரே மதம் தான்
(கிறிஸ்து மதம்) உண்மையானது என்று சொல்லும் வாதமும் தலை காட்டியிருப்பதாகக் கருதவேண்டியிருக்கிறது.
இதை இம்மட்டோடு நிறுத்திக்கொண்டு, "ஆனந்தன்'' மதத்தைத் தூஷிக்கிறான் என்னும் கூற்றைச்
சற்று ஆராய்வோம்.
4. இதற்கு உதாரணமாக ஆனந்தனிலுள்ள
சில வியாசங்களை எடுத்துக் காட்டினார்கள். அவ்வியாகங்களை வாசித்துப் பார்த்ததில், வயிற்றுப்
பிழைப்புக்காக மட்டும் மத ஊழியம் செய்தும், புறமதங்கள் பொய்யென்று தெருக்களிலும், சந்திகளிலும்
நின்று பிரசங்கம் செய்தும், ஏழை களையும், ஸ்திரமான புத்தியில்லாதவர்களையும் ஏமாற்றி,
ஆசை வார்த்தை காட்டி மயக்கி கிறிஸ்துமதத்தில் சேர்த்தும், மேலான அதிகாரிகள் முன் கிறிஸ்துமேல்
வெகுபக்தி யுடையவர்கள் போல் நடித்தும், தங்கள் காலத்தைக் கழித்து வரும் சிலருடைய செய்கைகளை
மாத்திரம் தகுந்த முகாந்தரங்களைக் கொண்டு கண்டித்தெழுதியிருக்கிறதே தவிர, எந்தச் சமயத்தையும்
எம்மதத்தையும் சிஞ்சித்தும் தூஷித்தெழுதியிருப்பதாகத் தெரிய வில்லை. ''வேலியிலிருக்கும்
ஓணானைப் பிடித்து உள்ளே விட்டுக்கொண்டு குடைகிறதே குடைகிறதே" என்று கத்துவது போல்
இவர்களே (கிறிஸ்தவர்களே) முதலில் இந்து மதம் பொய்யென்று தண்டோராப் போடுவதினால் ஆனந்தன்
தன்மதத்தின் உண்மையை எடுத்துக்கூறி ஸ்திரப்படுத்துமாறு, அன்னாரின் கூற்றைத் தவறு என்று
ரூபிக்க முன்வருகின்றானே யொழிய எந்த மதத்தையும் தூஷிப்பதற்காகவல்ல. ஓர் மதத்தைவிட்டு
இன்னொரு மதத்தைத் தழுவுவது கூடவே கூடாது என்பதுதான் எனது அபிப்பிராயம். ஏனெனில் ஒருவன்
தன் மதத்தின் உண்மையை முற்றிலும் ஆராய்ந்து சந்தேகமானவைகளைத் தேர்ந்த ஆசானிடம் (குருவிடம்)
கேட்டுத் தெளிந்து பின்னும் பொய்யென்று அறிந்தால் மட்டும் வேறு மதத்தைத் தழுவலாம்.
அப்போதுங்கூட புறமதங்களில் எதைத் தழுவலாம் என்பதையறிய உலகத்திலுள்ள மற்ற மதங்களை யெல்லாம்
ஆராய வேண்டும். அதன் பின்பே ஓர் மதத்தைத் தழுவவேண்டும். இதற்கு ஒரு மனிதனுடைய ஆயுளே
போதாது. மேலும் இது எல்லா மனிதராலும் செய்யச் சாத்தியப்பட்ட ஓர் காரியமுமன்று.
5. ஆகவே இருந்தது
இருந்தாற்போல் ஓர் மதத்தை விட்டு மற்றொரு மதத்தைத் தழுவுவதற்கு பலகாரணங்களிருக்க வேண்டும்.
அவதறில் முக்கியமானவை தரித்திரம், ஆசை, வீண் டாம்பீகம் என்ற இம்மூன்றும் முக்கியமானவை.
தமமால் உபதேசிக்கப்பட்ட புண்ணியா செயல்களை எடுத்து மற்றவர்களுக்குச் சொல்லி சன்மார்க்கத்தில்
படக்கச் செய்ய வேண்டுமென்பது இயேசு நாதருடைய கட்டளையே யன்றி, வயிற்றுப் பிழைப்புக்காக
வேத ஊழியஞ் செய்யும் கொஞ்ச வயதுள்ள பெண்களைப் பையில் ஊமனாக (Bible women) நியமித்து அச்சம், மடம், நாணம்,
பயிர்ப்பு என்னும் பெண்களுக்குரிய மேலான குணங்களை விடுத்து வீடு வீடாய்ச் சென்று, படித்துக்
கொடுப்பது போல் பாசாங்கு செய்து, ஒன்று மறியாத பங்கஜத்தைப் போன்ற சிறுமிகளை நயவஞ்சகங்காட்டி
ஏமாற்றி, பெற்றோரும், மற்றோரும், வயிரெரியவிட்டு, நடுராத்திரியில் திருடிச் சென்று
மதத்தில் சேர்க்கும்படியாக அவர் சொல்லவே யில்லை.
6. "தன்னைப்போல் பிறனை நேசி
" என்று இயேசுக் கிறிஸ்து திருவாய் மலர்ந்தருளியதை இவர்கள் எந்த விதத்தில் கைக்கொள்ளுகிறார்கள்
என்பது தான் விளங்கவில்லை. தங்களுடைய (கிறிஸ்துவர்களுடைய) பெண்களைப் புறமதஸ்தர் இப்படிச்
செய்தால் வயிற்றெரிச்சல் பட்டு என்னென்னவோ காரியங்களெல்லாம் செய்வார்களல்லவா? அப்படிப்
போல் மற்றவர்களுக்குமிருக்கு மென்பதை என் இவர்கள் கிஞ்சித்தேனும் உண ருவதில்லை? தங்களுக்கு
ஒரு நியாயம் பிறருக்கொரு நியாயமா? தற்காலம் உலகமே அப்படித்தானிருக்கிறது. பல உத்தியோகஸ்தர்களை
நியமித்து சத்தியத்தையும் சன்மார்க்கத்தையும் போதிக்கலாமே தவிர மேற்கண்டவாறு பேதைாளை
எமாற்றி மதத்தில் சேர்ப்பது வயிற்றுப் பிழைப்புக்காக கிறிஸ்து மதத்தை வியாபாரம் செய்வதற்கே
யொப்பாகும். இப்படி யெல்லாம் வம்பிழுத்து விட்டு ஆனந்தன் மேல் வீண்பழி சுமத்துவது பேதமை
யன்றோ!
7. கிறிஸ்துமதத்தில் சேர்ந்ததின் பலன் தற்காலம் எப்படி யிருக்கிறதென்றால்,
அநேக கிறிஸ்தவர்களுக்குத் தாய்நாட்டில் பற்றின்மை அடிமைப்புத்தி, நம் தேசத்துக் கடுக்காத
அநாகரீகத்தை நாகரீகமாகக் கருதி டாம்பீகச் செலவு செய்வது, தாய்ப்பாஷையை அவமதிப்பது,
தலை மொட்டையானது, பாதிமீசை போனது, பீடி சிகரட்டு சுருட்டு குடிப்பது, மிருகங்களைப்
போல் பல்துலக்காமல் பெட்காபி (Bed Coffee) அருந்துவது, மேல் சட்டை, உள்ச்சாட்டை, நடுச்சட்டை, கால்சட்டை,
பூட்ஸ், மேஜோடு, காலர், டை, தொப்பி முதலிய அணிவது; இச்செய்கைகளால் நமது பாரத நாட்டைத்
தரித்திரத்துக் குள்ளாக்குவது முதலியவைகளே. தற்காலம் இந்துக்களில் உயர்ந்த ஜாதி முதல்
தாழ்ந்த ஜாதிவரையில் இத்திய வழக்கங்கள் பரவிவிட்ட தெனினும் முதன் முதலாய் இவ்வழக் கங்களை
யனுசரித்தவர்கள் கிறிஸ்தவர்களே. இன்னும் இதைப்பற்றி எழுதின் விரியுமாதலால் ஆனந்தனில்
இடம் கிடைக்குமோ வென்றஞ்சி இத்துடன் நிறுத்துகிறேன். தற்காலம் கிறிஸ்தவர்களிற் பலர்
மேற்படி தீயவழக்கங்களை அறவே யொழித்து வருகிறார்களென்பதை இங்கு திருப்தியடன் குறிப்பிக்கிறேன்.
அதுபோல் விதண்டாவாதம் செய்து ஆனந்தன் மேல் பழிசுமத்தி, தேரநன்மையைக் கருதி அவன் சுமந்து
வரும் பல அரிய விஷயங்களைப் பலரும் அறியவொட்டாமல் தடுப்பதை விட்டு, எல்லாக் கிறிஸ்தவ
சகோதரரும் ஆனந்தனில் சந்தாதாரராகச் சேரும்படி பன்முறையும் வேண்டிக் கொள்ளுகிறேன்.
A. மெத்துசலா உபாத்தியாயர்,
போர்டு பொண்பாடசாலை, ஜெயங்கொண்ட சோளபுரம்.
குறிப்பு: - பாரபட்ச மின்மையும், உண்மையைத்
தாட்சணிய மின்றி கூறும் தைரியமும், விசாலித்த நோக்கமும், கடவுளின் உண்மை லட்சணத்தை
யறியும் அறிவு முடையோர் எம்மதத்திலும் உளர் என்பதற்கு நமது நண்பர் ஒரு பெரிய அத்தாட்சியாயிருக்கிறார்.
இவருடைய உயர்வான கொள்கைகள் எம்மதத்தினரும் திருப்தியோடு ஏற்றுக்கொள்ளத் தக்கவைகளே.
கிருஸ்தவர்களில் சிலர் வலிய நமது மதத்தைக் குறைகூறி
தூஷித்து நம்மலரை மயக்க முயல்வதால் நாம் நாமவர்க்கு நமது மதத்தின் மேன்மையை யெடுத்துக்
காட்டி எச்சரிக்கை செய்ய வேண்டியது நமது கடமை யாகிறது. இன்றேல் நாம் அன்னிய மதங்களிலுள்ள
போதனைகளைத் திருட்டாந்தமாக மட்டும் அவசியம் நேர்ந்தபோது எடுத்துக் கூறுவோமேயன்றி, அவற்றைப்பற்றி
நம்மவர்க்கு எச்சரிக்கை செய்யவேண்டிய அவசியமே யிராது.
'எச்சமயத்தும் இயற்கையை விட்டிடலாகாது'' என்ற நம்முன்
னோர்களாகிய மகான்கள் கொள்கையே நமது கொள்கையும். இச்சஞ் சிகையின் மற்றோர் பக்கத்தில்''
ஓர் புதுச் சஞ்சிகை'' என்ற விஷயத்தில் நாம் இதைப்பற்றி கூறியுள்ளதைப் பார்க்கக் கோருகிறோம்.
எம் மதத்தையேனும், எம்மதத்தில் கூறப்பட்ட கடவுளையேனும் தூஷிப்பது ஏகநாயகனாகிய அந்த
ஒரு கடவுளைத் தூஷிப்பதாகவே ஆகும் என்பதேயுண்மை. அப்படித் தூஷிப்போர் எல்லா மதங்களாலும்
பிரதிபாதிக்கப்படுபவர் அந்த ஒரு கடவுளே என்ற உண்மையை யறியாதவராவர். நமது நண்பர் உண்மையறிவோடு
சத்தியத்தை மொழிந்ததால் கிருஸ்தவர்களில் சிலர் " இவர் மெய்யான கிருஸ்தவரல்ல' என்று
தூஷிப்பார்கள் என்று கருதுகிறோம். அது அவர்களுக்குச் சுபாவமென்பதைத் திருட்டாந்தமாய்
அறிந்திருக்கிறோம். பாரபட்சமின்றி நியாயத்தைக் கூறும் நியாயாதிபதியைக் குற்றவாளி தூஷிப்பதியற்கையே
பத்திரிகாசிரியர்.
ஆனந்த போதினி – 1924 ௵ - மார்ச்சு ௴
No comments:
Post a Comment