Thursday, September 3, 2020

 

நமது கடமை

 

மக்கட் பிறவி மாண்புடையது. மக்கட்கே பகுத்தறியும் ஆற்றல் உண்டு. ஏனைய உயிர்கட்கு இவ்வறிவு இல்லை. உண்டல், உறங்கல், இன்பம் நுகர்தல் முதலியன எல்லா உயிர்கட்கும் பொது. விலங்கின முதலியவற்றின் வாழ்க்கை வேறு- மக்கள் வாழ்க்கை வேறு. நன்மை, தீமை, ஒழுக்கம், அன்பு இரக்கம், மானம், ஈனம் முதலிய உணர்ச்சிகள் மக்கட்கே உண்டு. விலங்கு முதலிய ஏனைய உயிர்கட்கு இவ்வுணர்ச்சிகள் இல்லை. அவைகட்கு உண்பதும், உறங்குவதும், இன்ப நுகர்ச்சியுந்தான் நோக்கம். மக்கட்கு இவையே தனி நோக்கம் அல்ல. இவையே – உலக போகங்களே நோக்கமானால் விலங்கு கட்கும் மக்கட்கும் ஒரு சிறிதும் வேற்றுமை இருக்க முடியாது. மக்கள் தங்கட்குள்ள பகுத்தறிவின் சிறப்பால் உயரிய வாழ்க்கையை - ஆன்மார்த்த வாழ்க்கையை மேற்கொள்ளும் நிலைமையில் இருக்கின்றனர். அன்பு, அருள், ஒழுக்கம், பிறர் நலம் பேணல் முதலிய நறுங்குணங்கள் மக்கள் வாழ்க்கையை மாண்புறச் செய்கின்றன. இக்குணங்களை வளர்ப்பதே சமயங்கள்.

 

நமது பரதகண்டம் சமயங்களின் பிறப்பிடம். உலகத்திலுள்ள பல்வேறு சமயங்களின் தத்துவங்கள் - உண்மைகளெல்லாம் நம் நாட்டுச் சமயங்களில் அடங்கிக் கிடக்கின்றன. சுருங்கக் கூறுமிடத்து ஆன்மார்த்த விஷயத்தில் நமது பாரதமாதாவே தலைமை ஸ்தானம் வகிக்கின்றனள் எனலாம். உலகியல் போகமே வாழ்க்கையின் நோக்கமாகக் கருதிக் கொண்டிருக்கும் மேனாட்டாரிடையே ஸ்வாமி விவேகானந்தர் முதலிய மகான்கள் சென்று நமது சமய உண்மைகளை விளக்கி நிலை நாட்டி விட்டு வந்தமை ஒன்றே நம் ஆன்மார்த்தப் பெருமைக்குத்தக்க சான்றாகும். நம் நாட்டு நாகரிகம் ஆன்மார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்குள்ள வேதங்கள், ஆகமங்கள், ஸ்மிருதிகள், புராணேதிகாசங்கள், காவியங்கள், கதைகள், நாடகங்கள் முதலிய எல்லாவற்றிலும் நம் பெரியோர் அநுபவ பூர்வமாய் அறிந்து கொண்ட தத்துவ விளக்கங்களே நிறைந்திருக்கும். மத சம்பந்தமற்ற எக்காரியத்தையும் இந்து சமூகத்தில் காண்டல் அரிது. அஹிம்ஸா தருமமே நம் சமயங்களின் சாரம். எனவே அன்பு, சகோதரத்துவம், சமத்துவம் முதலிய சிறந்த குணங்கள் நமது நாட்டில் தழைத்து வளர்ந்தன என்பதில் ஐயம் இல்லை.

 

என்றும் ஒரே நிலையில் உலகம் நிற்பதில்லை. மாறுதல் அடைவது உலக இயற்கை. எக்காரணம் பற்றியோ நம் சமயங்களிலும் சமூக வாழ்க்கையிலும் நாளாவட்டத்தில் மாசுபடியத் தொடங்கி விட்டது சமய உண்மைகள் சாதாரண மக்கட்கு விளங்காமல் போயின. இதனால் மூட நம்பிக்கைகளும், தீய ஒழுக்க வழக்கங்களும் நாட்டில் வளர்ச்சி பெறத் தொடங்கின.

 

பிற நாடுகளெல்லாம் தீவிர முன்னேற்றம் பெற்றுவரும் இக்நாளில் நமது நாடு மிகவும் பிற்போக்கான இழிநிலையில் இருந்து கொண்டிருக்கிறது. முற்காலத்தில் எந்தச் சமயங்கள் பாரத அன்னைக்குப் பெருமையை அளித்துக் கொண்டிருந்தனவோ அந்தச் சமயங்களின் பேராலேயே தற்காலத்தில் நமது அன்னை சிறுமை நிலையில் வைக்கப்பட்டிருக்கிறாள். ஆங்கிலக் கல்வியின் பயனாக மேனாட்டு ஒழுக்க வழக்கங்கள் நம் மக்கள் மனங்களைக் கவர்ந்து நிற்கின்றன. தாய்மொழிப் பயிற்சியோ, உண்மையான சமய சாஸ்திர ஞானமோ மக்கட்கு இல்லை. இதனால் சாதி சமய வேற்றுமைகள் உரம் பெற்று நிற்கின்றன. பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற எண்ணமும், சில பொருளற்ற வழக்க வொழுக்கங்களும் நமது சமூகத்தில் வேரூன்றிக் கிடக்கின்றன. இவற்றின் பயனாகவே தீண்டாமை, பெண்ணடிமை, பாலிய விவாகம் போன்ற தீய வழக்கங்கள் இன்னும் இங்கே குடி கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் இத்தீய வழக்கங்கட் கெல்லாம் சமயங்களே மூலகாரணம் என்று கருதிச் சமயங்களையே அடியோடு ஒழித்து விட வேண்டும் என்று எழுதியும் பேசியும் வருகின்றனர். இவர்களுடைய நோக்கத்தையும் செய்கையையும் எலிகட்குப் பயந்து கொண்டு வீட்டை எரித்து விடும் செய்கைக்கே ஒப்பிட வேண்டியிருக்கிறது.

 

மனிதனுக்கு இம்மை மறுமைப் பயனை நல்க வல்ல நல்லொழுக்க முறைகள் சமயங்களில் நிறைந்திருக்கின்றன. சமயம் மனிதனுக்குச் சாந்தியை அளிக்கின்றது. சமய உணர்ச்சி இல்லாதமனித வாழ்க்கை விலங்கு வாழ்க்கைக்கே நிகராகும். சமயம் மனிதனிடமுள்ள மிருகத் தன்மையைப் போக்கித் தெய்வத்தன்மையைக் கொடுக்கின்றது. சமயம் மக்கட்குச் சிறந்த பகுத்தறிவின் பயன். இவ்வுண்மை யுணராத பிறர் சமய உணர்ச்சியானது மனிதனிடம் அவன் அறிவு விளக்கம் பெறாமல் காட்டுமிராண்டியாயிருந்த காலத்தில் ஏற்பட்டது என்று பிதற்றுவர். அவர்கள் கூற்று உண்மையானால் அறிவு விளக்கமற்ற விலங்கினங்கட்குச் சமய உணர்ச்சி இருக்க வேண்டுமே, அங்ஙனம் இருக்கின்றதா என்று கேட்கின்றோம்.

.

உலகில் சமய உணர்ச்சி இல்லாத நாகரிக நாடு ஒன்றிருப்பதாகஎமக்குத் தெரியவில்லை. பொதுவுடைமைக் கொள்கையினர் ஆதிக்கம் செலுத்தும் ருஷியாவில் சமய உணர்ச்சி இல்லை என்று சிலர்கூறலாம். அது தவறு. அவ்விடத்திலும் சமய ஸ்தாபனங்களுண்டு.  சமய உணச்சி உள்ள மக்களும் இருக்கின்றனர். ஆனால் ஆதிக்கம்செலுத்தும் பொதுவுடைமையாளர் சமயங்களையும் கடவுளையும் அலக்ஷியம் செய்து வருகின்றனர். அலக்ஷியம் செய்வதோடு கூடியவரை அவ்வுணர்ச்சிகளை யொழிக்கப் பிரசாரமும் செய்து வருகின்றனர். என்னும் அவர்கட்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. முன்பு சமயத்தின் பேரால் நடை பெற்று வந்த அக்கிரமங்களே பொதுவுடைமையாளர் சமயவொழிப்புப் பிரசாரம் செய்ய இடந்தந்து விட்டன என்று தெரிய வருகிறது. ஆனால் சமயவொழிப்புப் பிரசாரம் நீடித்து நிற்குமாஎன்பது பெரிய கேள்வியாயிருக்கிறது. அஃது எவ்விதமாயினும் பொதுவாக உலகமக்கள் எல்லோரும் சமய உணர்ச்சி யுள்ளவர்களாகவே இருக்கிறார்கள் என்னும் உண்மையை மறுக்க முடியாது. உலகத்தில் எத்துணையோ மதங்கள் இருக்கின்றன. மதங்களைத் தழுவும்மக்கள் எண்ணிக்கையைக் கொண்டு இக்காலத்தில் பெரிய மதங்களாக மதிக்கப்படுவன ஒரு சிலவே. இந்துமதம், பெளத்தமதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்தவமதம் முதலியவைகளே இக்காலத்தில் பெருந்தொகையான மக்களால் தழுவப் பெறுகின்றன. ஒவ்வொரு சமயத்திலும் மக்கள் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய பல சிறந்த உண்மைகள் நிறைந்திருக்கின்றன. பல்வே வறு சமயங்களும் அடிப்படையான தத்துவங்களில் ஒன்றாகவே விளங்குகின்றன. காலதேசவர்த்தமானங்கட் கேற்ப ஆசார அநுஷ்டானங்கள் மாறுபட்டிருப்பது இயற்கை.

பல ஒழுக்க வழக்கங்கள் - முற்காலத்தில் அவை என்ன நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்டனவோ - இக்காலத்தில் பொருளற்றவைக்ளாகி நிலவுகின்றன. நமது இந்து மதத்தின் பேரால் வழங்கப்படும் சில பொருளற்ற வழக்க வொழுக்கங்களைப் போலவே இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் முதலிய சமங்களிலும் போலி வழக்கங்கள் நிறைந்திருக்கின்றன. அத்தகைய தீய - விபரீத வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் தொலைத்து விடவேண்டும் என்பதை நாமும் ஒப்புக் கொள்ளுகின்றோம். ஆனால் சமயங்களையே அடியோடு ஒழித்து விட வேண்டும் என்று கருதுவது அறிவுடைமை யாகுமா? என்று சிந்தித்துப் பார்க்குமாறு அறிஞர்களை வேண்டுகின்றோம்.
 

நமது நாட்டில் சமயம் - மொழிகளைத் தக்க முறையில் சீர்திருத்தம் செய்து வளர்க்க யாரும் முன் வராதது வருந்தத்தக்க விஷயமாகும். தென்னாட்டில் சைவ - வைணவ - அத்துவைத மடங்கள் ஏராளமாக இருக்கின்றன. இம்மடங்கள் தம் கடமைகளைச் சிறந்த முறையில் செய்யத் தவறிய காரணத்தாலேயே நாட்டில் பலரீதக் கொள்கைகள் இடம் பெறலாயின. மடாதிபதிகள் எல்லோரும் மஹாராஜாக்களாக விளங்குகின்றனர். போகத்தில் பூலோக இந்திரர்களாகப் பொலிகின்றனர். அவர்கள் தாங்கள் துறவிகள் என்பதை அறவே மறந்து விட்டனர். தங்கள் வாழ்நாளை ஆடம்பரக் களியாடல்களில் கழிக்கவே அவர்கள் முனைந்து நிற்கின்றனர். நம் முன்னோர் நன்னோக்கங்கொண்டு சமய வளர்ச்சிக்கும் மொழிவளர்ச்சிக்கும் கொடுத்த மானியப் பொருள்கள் ஆண்டுதோறும்பல லக்ஷக்கணக்காக வரும் வருவாய்கள் கோர்ட்டு வழக்குகட்கும், வக்கீல்கட்கும், உத்தியோகஸ்தர்களின் விருந்துபசரிப்புகட்கும் கொள்ளை போகின்ற றன. பரிசுத்த மடங்களில் கொலைகட்கும் பஞ்சமில்லை. இம்மடாதிபதிக ளெல்லாரும் ஏன் தங்கள் கடமைகளைச் செய்ய முன்வரலாகாது என்று கேட்கின்றோம்? சமயம் அழிகிறது! மொழி அழிகிறது! ஆலயங்கள் அழிநிலையில் இருக்கின்றன! இவைகளை நன்முறையில் - காலத்திற்கேற்பச் சீர்திருத்தி அமைப்பதைத் தவிர இவர்கட்கு வேறுவேலைஎன்ன என்பது விளங்கவில்லையே. பிற மதத்தினர் தங்கள் சமயங்களையும், மொழிகளையும் எவ்வாறு சீர்திருத்தி வளர்த்துவருகின்றனர் என்னும் உண்மையை நாம் கண்கூடாகக்கண்டு வருறோம். கிறிஸ்தவ சமயத்தினர் -- பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பாலிருந்து வந்தவர்கள் நமது நாட்டில் என்ன செய்து வருகின்றனர் என்பது நம் மடாதிபதிகள் அறியார்களா? என் அவர்களைப்போல் இவர்களும் கல்விச்சாலைகளை ஏற்படுத்தக்கூடாது? நம்மடாதிபதிகட்குப் பொருளில்லையா? பொதுஜன ஆதா விலலையா? எல்லாம் உண்டு. ஆனால் மனந்தான் இல்லை.

 

கிறிஸ்தவ சமயத்தினர் தங்கள் மதக்கொள்கைகளைப் பரவச் செய்யும் முறை சாலச் சிறந்ததாகும். எத்தனை பிரசாரகர்கள்! எத்தனை புது நூல்கள்! எத்தனை துண்டுப் பிரசுரங்கள்! தங்கள் முயற்சியில் அவர்கள் ஒருநாளும் சோர்வடைவதே கிடையாது. ஏராளமான பொருளைக் கண்ணை மூடிக்கொண்டு செலவழிக்கின்றனர்! இதனால் தான் இவர்களுடைய சமயம் உலக சமயமாகத் திகழ்கிறது. நம்மடாதிபதிகளும் இம்முறைகளில் நூற்றில் ஒரு பங்கையேனும் கைக்கொள்ள முயன்றால் எவ்வளவோ நலம் விளையுமே. இனியேனும் அவ்வாறு செய்ய முந்துவார்களா?

 

நமது நாட்டில் இப்பொழுது அரசியல் கிளர்ச்சியானது மக்கள் மனங்களைக் கவர்ந்து நிற்கின்றது. உலகில் முதன்மை ஸ்தானம் வகிக்கும் ஜனநாயகத்துவ வேட்கை நமது நாட்டிலும் தீவிரமாய்ப் பாவி வருகிறது. காங்கிரஸ் மகாசபை காந்தியடிகளின் வாயிலாக அஹிம்ஸா தரும் நெறி பற்றி நாட்டு விடுதலைக்கு உழைத்து வருகிற கிறது. அடிமை விடுதலைக்குப் பிற நாடுகள் கைக்கொண்ட முறை காந்தியடிகள் மேற்கொண்டுள்ள முறை வேறு. பிற நாடுகள் ஆயுத பலத்தை - மிருக பலத்தை ஆதரவாகக் கொண்டன. காந்தியடிகள் ஆன்ம சக்தியை - அஹிம்ஸா தருமத்தை ஆதரவாகக் கொண்டிருக் கிறார். காந்தியடிகளின் போர் முறை இதுகாறும் உலகங் கண்டறியாத புது முறையாகும். காந்தியடிகளின் ஆன்மசக்தி சர்வ வல்லமையுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மனதையும் மாற்றி விட்டது. இப்பொழுது காந்தியடிகள் இந்தியாவின் தனிப் பெருந் தலைவராக லண்டன் மகாநாட்டுக்குச் சென்றிருக்கிறார். உலகமே காந்தியடிகளை இமை கொட்டாமல் நோக்கிக் கொண்டிருக்கிறது. வெற்றி தோல்விகளைப் பற்றி இப்பொழுது சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டியது அநாவசியம். எவ்வாறாயினும் ஆகுக.

 

நமது நாடு வறுமை, பிணி, அறியாமைகளில் மூழ்கி, அந்நிய ஆதிக்கத்தில் சீரழிந்து நிற்கும் இவ்வேளையில் - நாட்டின் போக்கறிந்து, அதற்கியையக் காந்தியடிகளும், காங்கிரஸும் விடுதலைத் தொண்டாற்றி வரும் இவ்வரிய சந்தர்ப்பத்தில், 'ஒரு சிலர் சாதி சமயப் பூசல்களைக் கிளப்பிவிட்டு வேடிக்கை பார்க்க முனைந்து நிற்கின்றனர். காந்தியடிகளும் காங்கிரஸும் நாட்டுக்குப் பெருங்கேடு விளைத்து வருவதாகப் பறைசாற்றி வருகின்றனர். இதுவும் ஒருகலிகாலக் கூத்து என்பதைத் தவிர வேறு என்ன கூறமுடியும்? நாட்டு விடுதலைக்கு முன் சமூக விடுதலை தான் வேண்டும் என்பது அவர்களது வாதம். இவர்கள் விரும்பும் சமூக விடுதலை எளிதில் சித்திக்கத்தக்க நன்முறை எது என்று சிந்தித்தார்களா என்று அறிய விரும்புகின்றோம். சமூக விடுதலைக்கு நமது நாடு அடிமையில் ஆழ்ந்திருப்பது ஒரு பெரும் முட்டுக்கட்டை என்பதை ஏன் இவர்கள் உணரவில்லை? சமூகத்திலுள்ள ஊழல்கள் ஒழியவேண்டும், சமூகம் அவைகளினின்றும் விடுதலைபெற வேண்டும் என்பதை நாமும்ஒப்புக்கொள்ளுகிறோம். ஆனால் அரசியல் விடுதலை சமூக விடுதலைக்குஆக்கம் அளிப்பதால் அதன் பொருட்டும் நாம் தீவிரமாய்த் தாமதமின்றி வேலை செய்யவேண்டும். இவ்விரு விடுதலைகளும் பரஸ்பரம்ஒன்றை யொன்று பற்றியே நிற்கின்றன. ஒன்றை விட்டுவிட்டு ஒன்றைச் சாதித்துவிட முடியாது.

 

காங்கிரஸும் காந்தியடிகளும் வகுத்துள்ள திட்டம் தேசிய மயமாக விளங்குகிறது. அத்திட்டத்தில் சாதி சமய வேற்றுமைகட்கு இடமில்லை. தீண்டாமை இல்லை. எல்லாரும் இந்தியர்; எல்லாரும் ஒருதாயின் மக்கள் என்ற உயரிய நோக்கமே அத்திட்டத்தில் முதன்மை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கோலியுள்ள நிர்மாணத் திட்டம் ஏக காலத்தில் சமூக விடுதலையையும் நாட்டு விடுதலையையும் அளிக்க வல்லது என்பதே எமது திடமான எண்ணமாகும். இந்து முஸ்லிம் வேற்றுமைகளை ஒழிக்கக் காந்தியடிகள் காட்டி வரும் ஊக்கம் எல்லாருக்கும் தெரிந்ததே. தீண்டாமைப் பேயை நாட்டைவிட்டோட்ட நமது அடிகள் அல்லும் பகலும் அநவரதமும் பாடுபட்டு வருகிறார். முன்னர், ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரருக்கு வாந்தியேதி கண்டபோது, நமது உலகம் போற்றும் உத்தமர் மூன்று நாள் இரவு பகல் அவரருகே நீங்காமலிருந்து உதவி புரிந்த செய்தி ஒன்றே அவர் தீண்டாமை விலக்கில் வைத்துள்ள ஆர்வத்தை இனிது விளக்கும். நிற்க, ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த பெண்ணையும் தம் அருமைச் சுவீகார புத்திரியாக வளர்த்து வருகிறார். இவையெல்லாம் சமூக விடுதலை முயற்சிகள் ஆகாவோ என்று கேட்கின்றோம். ஒவ்வொரு முக்கியமான கூட்டத்திலும் அவர் தீண்டாமை விலக்கைப் பற்றி பேசியே வருகிறார். பத்திரிகையிலும் அடிக்கடி எழுதி வருகிறார். இதுமாத்திரமா? பாலிய விவாகம் கூடாது, விதவா விவாகம் வேண்டும் என்று எத்தனையோ முறை எடுத்துக் காட்டியில் ருக்கிறார். நம் நாட்டுத் தீவிர சமூக சீர்திருத்தவாதி " கட்கு இவையெல்லாம் சீர்திருத்தங்களாகத் தோன்றுவதில்லை. காந்தி வேண்டாம், காங்கிரஸ் வேண்டாம், சமயம் வேண்டாம் என்று மேடைகளில் வாய்ப்பந்தல் போடுவதுதான் இவர்களது சமூக சீர்திருத்தமா என்று கேட்கின்றோம். யாரேனும் திரிகரண சுத்தியாய் சமூகத் தொண்டாற்றிக் கொண்டு அரசியல் விவகாரங்களில் தலையிடாமலிருந்தால் அவர்களைப் பற்றி யாரும் குறை கூறமாட்டார்கள். வடநாட்டிலும் தென்நாட்டிலும் சமூக விடுதலையில் மட்டும் நாட்டங் கொண்ட பல ஸ்தாபனங்களிருக்கின்றன. அவை இயன்றவரை தத்தமக்குத் தோன்றிய முறையில் தொண்டாற்றி வருகின்றன. இவ்வாறே நம் நாட்டுத்'' தீவிர சமூக சீர்திருத்தவாதிகளும் ஏன் சேவை செய்யக்கூடாது என்று தெரியவில்லை. நாட்டிலுள்ள அறிஞர்களின், பொது ஜனங்களின் வெறுப்பைத் தேடிக்கொண்டு என்ன சீர்திருத்தம் செய்து விடமுடியும் என்று அவர்களைச் சற்றே சிந்தித்துப் பார்க்ககுமாறு வேண்டுகின்றோம்.

 

சமூகத்தில் உள்ள குற்றங் குறைகளை நியாயமான வழியில் சீர்திருத்த முயல்வதே அறிஞர்கட்கு அழகு. அம்முறை சமயங்களை அழிக்க வேண்டும் என்று ஓயாது பேசுவதும் எழுதுவதும் அல்ல. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்ற கொள்கையைப் பின்பற்றிச் சீர்திருத்த ஸ்தாபனங்களை ஆங்காங்கு ஏற்படுத்தி நல்ல முறையில் உண்மை உணர்ச்சியுடன் பிரசாரம் புரியத் தொடங்க வேண்டும். பொதுஜனங்களின் நன்மதிப்பைப் பெறவேண்டும். முன்பின் யோசியாமல் எடுத்த எடுப்பில் எல்லாரையும் கண்ணை மூடிக் கொண்டு தாக்குவது, எல்லாவற்றையும் ஒழித்து விடுவதாக வாய் வீரம் பேசுவது சீர்திருத்தமாகா. இத்தகைய மனப்பான்மை உடையவர்களனால் ஒரு காரியமும் ஆகாது என்பதும் திண்ணம். இவ்வுண்மையை அவர்களது தற்காலச் சோர்வு நிலைமையே நன்கு விளக்கும் என்று நம்புகின்றோம். " தீவிர சீர்திருத்த இயக்கத்தைச் சேர்ந்த பலர் தங்கள் தங்கள் சுய காரியங்களைச் சாதித்துக் கொண்டவுடன் பேசாமல் அடங்கி விட்ட உண்மையை எல்லாரும் அறிந்தே இருக்கிறார்கள். இன்னும் தங்கட்கு உண்மையில் அவ்வியக்கக் கொள்கைகளில் பற்றும் அநுதாபமும் இல்லாமலிருந்தும், தங்கள் சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அதில் பட்டும் படாமல் இருந்தவர்களும் உண்டு.

 

சகோதரர்களே! நமது இந்து சமயமும் தத்துவங்களும் பழம் பெருமை வாய்ந்தவை, இவ்வுண்மையை மேனாட்டாரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அன்பு, அருள், அறம், சகோதரத்துவம், சமத்துவம் முதலிய தருமங்களை அஸ்திவாரமாகக் கொண்டதே இந்து சமயம். வைணவ சித்தாந்தம் சமரசத்தைப் போதிக்கின்றது. சைவ சித்தாந்தம் சமரசத்தைப் போதிக்கின்றது. அத்துவைத சமயம் சமரசத்தைப் போதிக்கின்றது. இவைகளைப் போலவே பௌத்தமதமும் ஜைன மதமும் சமரசத்தைப் போதிக்கின்றன. ஸ்ரீ ராமாநுஜர் கோபுரத்தின் மீதிருந்து பஞ்சமர் முதலிய எல்லாருக்கும் ரகஸியார்த்தத்தை உபதேசித்தருளியதும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பலர் நாயன்மாராக இன்றும் வணங்கப்படுவதும், ஸ்ரீ சங்கரர் பஞ்சமனை வணங்கியதும் எவ்வுண்மையை வெளிப்படுத்துகின்றன? இந்து மதத்தின் சமரஸத் தன்மையை வெளிப்படுத்தவில்லையா என்று கேட்கின்றோம்? வைணவம், சைவம், அத்துவைதம், பௌத்தம், ஜைனம்முதலிய மதங்களெல்லாம் சேர்ந்ததே இந்து சமயம். இந்து சமயத்தில் மேற்கூறிய வெவ்வேறு சமயங்களின் தத்துவங்களெல்லாம் அடங்கியிருக்கின்றன. ஆதலால் உலகத்திற்கே சாந்தி அளிக்கவல்ல இந்து சமயத்தை அழித்துவிட நீங்கள் விரும்புகின்றீர்களா? இடைக்காலத்தில் எப்படியோ வந்து நுழைந்து விட்ட மாசுகளைப் போக்க முயல்வதே அறிவுடைமையாகும். காலத்துக் கேற்பத் தகுந்த சீர்திருத்தங்களைச் செய்ய யாரும் பின்வாங்க மாட்டார் என்பதில் ஐயமில்லை. ஆனால் - எல்லாவற்றையும் அழித்தொழிக்க வேண்டுமென்றால் யாரே விரும்புவர்? எந்நாட்டிலும் அத்தகைய முயற்சி பயன் அளித்ததாகத் தெரியவில்லை. மடாதிபதிகளே! அறிஞர்களே! உங்கட்கு இஃதோர் அரிய சந்தர்ப்பம்! இச் சந்தர்ப்பத்தைக் கைநழுவ விடாதீர்கள்! உங்கள் கடமைகளைச் செய்ய இன்றே முன்வாருங்கள். காந்தியடிகளின் வழிநின்று நாட்டு நலத்திற்கும் சமூக நலத்திற்கும் ஆக்கந் தேடுங்கள்! ஆக்கந் தேடுங்கள்! எல்லாம் வல்ல எல்லாம்வல்ல திருவருள் முன்னின்று காப்பதாக.


ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - செப்டம்பர் ௴

 

 

 

   

 

No comments:

Post a Comment