Thursday, September 3, 2020

 

நமது தாய்மொழி

(கோட்டாறு - வே. கணேசன்.)

"மறைமுதல் கிளந்த வாயான், மதிமுகிழ் முடித்த வேணி

இறைவர் தம் பெயரை நாட்டி இலக்கணம் செய்யப் பெற்றே,

அறைகடல் வரைப்பிற் பாடை அனைத்தும் வென்று ஆரியத்தோடு

உறழ்தரு தமிழ்த் தெய்வத்தை உண்ணினைந் தேத்தல் செய்வாம்."

(சீகாளத்திப் புராணம்.)

அமிழ்தினு மிளிய தமிழ் மொழியாம் நம் தாய் மொழியின் சீரினை விளக்கித் தற்கால நிலைமையில் நாம் நம் தாய்மொழிக்குச் செய்ய வேண்டியன யாவை என்பதைச் சிறிது ஆராய்வதே இக்கட்டுரையின் முழு நோக்கமாகும். கலைப்பெருக்கம், சொற்பெருக்கம், இலக்கியத் தொன்மை எனும் இவற்றை நோக்கின், தமிழ் மொழியே திராவிட மொழியினத்தில் தலை சிறந்த மொழி யென்பது ஆன்றோர் முடிபு. ஆதிகாலந் தொட்டே திராவிட மக்களின் தாய் மொழியாகத் தமிழ் இருந்து வருகிறது. பிற மொழிகள் தோன்றுவதற்கு முன்பே பல அரிய நூற்களைப் பெற்றுப் பூரணத் தன்மையை அடைந்திருந்த தனிப் பெருமையைத் தமிழினிடந்தான் காண்கிறோம்.

"சதுர்மறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்

முதுமொழி நீ அநாதியென மொழிவதுவும் வியப்பாமோ!''

 

என்று மனோன்மணியம் ஆசிரியர் தமிழைப் புகழ்ந் திருத்தல் ஈண்டு குறிப்பிடத்தக்கது.

முதற்கண் தமிழ் என்னுஞ் சொல்லிற்குப் பொருள் காண்டல் அவசியம். அறிஞர்கள் பலர் பல பொருட்களைத் தந்துள்ளனர். “இனிமையும், நீர்மையும் தமிழெனலாகும்" எனப் பிங்களந்தையார் கூறியதற் கொப்பத் தமிழ், இனிமை, நீர்மை எனும் பொருட்களைத் தந்து நிற்கின்றது. ''தமிழ் சிவம், இனிமை யெனும் தனிப்பொருளாம்" எனப் பேரிசைச் சூத்திரம் கூறுவதற் கொப்ப, தமிழ், இனிமை, சிவம் எனப் பொருள் படுகின்றது. மேலும், தமிழ் என்பது 'தமி' என்னும் பகுதியடியாகப் பிறர் சொல் என்
றும் 'தமி' என்றால் தனிமை' 'ஒப்பின்மை' என்று பொருள் படுமாகையால் "தமிழ்' என்பது தனித்த, ஒப்பில்லாத பாஷை யெனப் பொருள் படுமென்றும் சிலர், பொருள் காண்கின்றனர். இங்ஙனம் தமிழ்' என்ற நம் மொழிப் பெயரே, பல விரிவான பொருட்களைத் தந்து நிற்றலே அதன் சிறப்பினைத் தெள்ளிதின் விளக்குகின்றது. அன்றியும், 'தமிழ்' என்ற சொல் வேறு
மொழிகளுக்கில்லாத தனிச் சிறப்பெழுத்தாகிய 'ழ'காத்தை மொழிப் பெயருடன் கொண்டு மற்றறும், வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் இனவெழுத்துச் சிறப்பு எனக்கே உரியதாகும்' என்று பிறமொழிகளுக்கு எடுத்துக் காட்டு முகத்தான் முறையே தமிழ் என்று மூன்று இனவெழுத்துக்களையும் தன்னகத்தே கொண்டு இலங்கி நிற்றலும், மொழிப்
பெயரின் சீரினை நோக்கப் புகுவார் நோக்கற்பாலதாகும்.

நம் தாய் மொழி, பாரிடத்தனைவரும் ஓரிடத்திருக்கையில், மனிதர் தங்கள் கருத்தை ஒருவருக் கொருவர் தெரிவித்துய்ய, குறிஞ்சி நாட்டில் நிலவிய மக்கள் பால் உலவிய மொழி. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐவேறுருவிற் செய்வினை முற்றிய மொழி. திரிபுரமெரித்த விரிசடைக் கடவளும், குன்ற மெறிந்த குமரவேளும், சந்தனப் பொதிகைச் செந்தமிழ் முனியும், ஐந்திரம் அளித்த இந்திரவேளும், ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியனும், இறையனார் அகப்பொருள் இயற்றிய இறை
வரும், தமிழ்மறை ஓதிய வள்ளுவனாரும், சிலம்பு நலமுரைத்த புலம்பெறு இளங்கோவும், கல்விக் கவிஞன் கம்ப நாடனும், வெண்பா வல்ல புகழேக்திப் புலவரும், ஒத்து புகளுடை கூத்தப் புலவரும், முடிக்கச் சிறந்து நடிக்கும் நங்கையாவாள். இத்தகைச் சிறப்பு வாய்ந்த தமிழின் சுவைத்திறம் வியந்து குமரகுருபரர் மீனாட்சியம்மையாரை ''நறைபழுத்த துறைத்தீந் தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே” என்று அழைத்திருத்தல் இவண் ஊன்றிக்
கவனிக்கத்தக்கது. நம் தமிழ்மொழி தன் தூய்மை நலங்கெட விடுவதில்லை. பிற மொழிச் சொற்களை ஏற்றுக்கொன்ளுதல் என்பது அரிதினும் அரிது. தமிழ்மொழி மிகுந்த தெய்வத் தன்மை வாய்ந்த மொழியாகும். கலை மகள் தன் விழிகள் ஒத்திடு தமிழணங்கு பொய்யுரைப்போர் புன்னாவில் பொருந்திய தீட்டினை அன்று தீக்குளித்து ஓட்டினள். வேற்று மொழி வந்து தன்னைத் தீண்டுதலால் மேனியினைக் கழீஇக் கொள்வதற்காக அன்று வைகை ஆற்றெதிரே ஏட்டின் மிசை நீந்தினாள். யாழினும், குழலினும், பாலினும், தேனினும், காணினும், கேட்பினும், கருதினும் நமது அருந்தமிழ் மொழி இனிக்கும்.

நம் தமிழணங்கின் இன்சுவைத் திறனை,

"கனியிடை ஏறிய களையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,

பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்

பாகிடை ஏறிய ரூசியும்,

நனிபசு பொழியும் பாலும் – தென்னை

நல்கிய குளிரின நீரும்,

இனியன என்பேன் எனினும் – தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்",

 

என்று, தற்காலக் கவியாகிய பாரதிதாஸன் உளமுருகிப் பாடியுள்ளார். மேலும் அவர்,

“பொழிவிடை எண்டின் ஒலியும் – ஓடைப்

புனலிடை வாய்க்கும் கலியும்,

குழலிடை வாய்க்கும் இசையும், - வீனை

கொட்டிடும் அமுதப் பண்ணும்

குழவிகள் மழலைப் பேச்சும் – பெண்கள்

கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,

விழைகுவ னேனும், தமிழும் – நானும்

மெய்யாய் உடலுயிர் கண்டீர்"

 

என்று புகழ்ந்து பாடி யிருத்தலும் தமிழின் அமிழ்தினுமினிய தன்மையை விளக்குன்றது. வீரக் கவிஞர் பாரதியாரும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என்றும்,

 

“உலகிலுள மொழியனைத்தும் உயர்ந்ததமிழ்

மொழியெழுத்தால் ஓங்குமென்றும்

பலபொருளைச் சிலசொல்லிற் பகர்ந்திடுதல்

தமிழ்மொழிக்கே பான்மை...........”

 

என்றும் புகழ்ந்திருத்தல் தமிழ்த் தாயிக் குன்றாச் சீரினை நன்றாய் விளக்குசின்றது. நமது தமிழ் அணங்கு, மூவேந்தர் தாலாட்ட முச் சங்கத்தே கிடந்து, பாவேந்தர் செந்நாலில் நடை பழகி, மொழி பயின்று, வேங்கடமும், குமரியும் எல்லையாகக் கொண்ட தமிழுலகில் நிலவுகின்றாள். புறப் பொருள், அகப்பொருள், சிறப்புடைய இலக்கணச் செறிவு, இயல், இசை, நாடகம் எனும் - இவை இலங்கும் சங்கத் தமிழதனில் இதன் பெருமை கையகத்துக் கனியென்னக் காணவரும்.

      இனி, நமது தாய்மொழி வளர்ச்சிக்குரிய வழிகளைச் சிறிதாராய்வாம். பலவகையில் தமிழொளியை வெளிப்படுத்தி உலகமெங்கும் பரக்கச் செய்தல் வேண்டும். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரத்தைத் தமிழ்மொழியிற் பெயர்த்தல்வேண்டும். இறவாத புகழுடைய புது நூற்களைத் தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும். தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்தல் வேண்டும். தமிழ் ஒளியை மதங்களிலே சாய்க்காதிருத்தல் வேண்டும். இலவச நூற்கழகங்கள் எவ்விடத்தும் அமைத்து தமிழதனை வளர்ந்தோங்கச் செய்தல் வேண்டும். செந்தமிழ்ப் பத்திரிகைகள் பல தோன்றித் தமிழ் நலங்கெடாது காத்தல் வேண்டும். ஆங்காங்கே மறைந்து கிடக்கும் தமிழ் எல்ல இளைஞர்களுக்கு ஊக்கம் தந்து தமிழ்த் தொண்டாற்றச் செய்தல் வேண்டும். எனின், தமிழ்த் தாய் இன்புடன் எழில் பெறுவதிலோர் ஐயமில்லை. அறிவினர் அகம் மகிழ்வுறச் செய்யும் தமிழ்த் தேவி தழைத்தோங்குக.

ஆனந்த போதினி – 1942 ௵ - ஏப்ரல் ௴

 

No comments:

Post a Comment