Thursday, September 3, 2020

 

நமது திரு.வி.க.

[சுவாமி சுத்தானந்த பாரதியார்]

ஒருதரம் பார்த்தால் மறக்க முடியாது. எத்தனை தடவை பராத்தாலும் இன்னும் பார்க்கவேண்டும் எனத் தோன்றும். எவ்வளவு அளவ்ளாவினாலும் பசித்தவனுக்குப் பஞ்சாமிருதம்போல் இனிக்கும். கேட்கக் கேட்கத் தெவிட்டாது. சொல்லுக்குச் சொல் புதிய கருத்துக்கள் காணும்-அத்தகைய இனிய நண்பர் திரு. வி. கலியாணசுந்தானார்.

திரு.வி.க. ஓர் இயற்கைப் புலவர்; எதையும் ஆழ்ந்தறிந்து, உண்மையை ஊடுருவிப் பார்க்கும் ஆராய்ச்சியாளர்; பழமையின் நலத்தையும் புதுமையின் விரிந்த பயனையும் கொண்ட சீர்திருத்தக்காரர்; உள்ளொன்று புறமொன்றில்லாத உண்மையாளர்; நிகரற்ற செந்தமிழ் நாவலர்; கவியுள்ளம் படைத்த பாவலர்; தம் உள்ளத்திலிருந்து பிறர் உள்ளத்திற்குப் பேசும் செஞ்சொற் புலவர்; எந்தப் பொருளையும் புதிய மெருகு கொடுத்து
அழகு செய்து தமிழன்னைக்கு அணிவிக்கும் பொருட் சிற்பி, பட்டம் பதவி ஊர்வலங்களில் வேட்கை கொள்ளாமல், இயல்பாகத் தமது கடமையை நாட்டிற்காகவே செய்யும் தூப பொதுநல வீரர்; விடுதலை வேட்டை கொண்ட தேசபக்தர்; காலத்தை அஞ்சாமல் கெஞ்சாமல், தமது கருத்தைச் சொல்லும் இதழாசிரியர்; தமிழருக்குப் புது வழி காட்டி எல்லாத் துறைகளிலும் பண்புறப் பணிசெய்த ஒப்புரவாளர்; தொழிலுலகிற்குக் கருணையுடன் தொண்டு செய்த வன்றொண்டர்; பெண்மையின் பெருமையை விளக்கி, இல்லறத்தின் பயனை வள்ளுவர்போலத் துலக்கிய சமுதாய நண்பர்; எம் மதமும் சம்மதமாய் ஒழுகும் சன்மார்க்க மணி.

இத்தகைய பெரியார் நமது தமிழ் நாட்டில் பிறந்திருப்பதே நமக்கொரு பெருமையன்றோ? தமிழர் சென்ற முப்பதாண்டுகளாகத் திரு.வி.க. வை நன்கறிவர். அவர் சொற்கள் தமிழர் உள்ளத்தில் ஊறிக் கிடக்கின்றன. திரு.வி.க. பேச்சென்றால் தமிழர் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். ஆனால் தமிழர் வக்காளிகளைப் போலத் தமது பெரியார்களைப் போற்றும் நாள் வரவேண்டும். திரு. வி. க. வங்காளத்தில் பிறந்திருந்தால் இப்போது உலகப் புகழ் பெற்றிருப்பார். அவர் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் ஐரோப்பிய மொழிகளில் உலாவும். அவரை ஓர் எமர்லன்போல் உலகம் மதிக்கும். டோகட்டும், திரு. வி. க. வின் அறுபதாம் ஆண்டு விழாவை யாவது தமிழர் எழுத்துமூலம் கொண்டாடுகிறார்கள்; அம்மட்டில் தமிழன்னை செய்த தவப்பயனே. இதில் திரு.வி.க. வின் வரலாற்றுச் சுருக்கமும், அவர் புலமையும், பொதுநலத் தொண்டின் பான்மையும் திட்பநுட்பமாகச் சொல்லப்படும்.

கதிரைவேற் பிள்ளையுடன் தொடர்பு

தமிழிலேயே ஊறித் தமிழுக்கே வாழ்ந்த பெரியாருள் யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை ஒருவர். இவர் கடல்மடை திறந்தது போலும், குற்றாலம் அருவிபோலும், சண்டமாருதம் போலும் சொற்பொழியும் பெருநாவலர். இவர் தமிழுக்கும் சைவத்திற்கும் அரும்பணி புரிந்த பெரியார். ஆறுமுக நாவலரின் அருமை மாணவரின் மாணவர். மதுரையில் தமிழ்ச் சங்கம் நாட்டிய பாண்டித்துரைத் தேவருக்கு அரிய துணை செய்தவர். அனைத்தையும் விட நமக்கு ஒழுங்கான தமிழகராதி தந்தவர் இவரே. இவர் சுமார் 40 ஆண்டுகட்கு முன்னர், சென்னை வெஸ்லி கல்லூரியில் ஒரு கணக்காயரா யிருந்தார். மாணவரும் இளந்தமிழரும் இளந்தமிழரும் அவர் சொற்களில் ஈடுபட்டு அவரைக் காந்தம் போலப் பின்பற்றினர். இரவியைச் சுற்றிக் கதிர் வீசுவது போல் கதிர்வேலைச் சுற்றித் தமிழ்க்கதிர் வீசிக்கொண்டிருக்கும். இக்கதிரில் குளித்தவரும் தமிழ்க்கதிராவர்.

அக்கதிர்களில் ஒருவரே கலியாணசுந்தரனார். அவர் வெஸ்லி கல்லூரியில் ஐந்தாம் பாரத்தைத் தாண்டிக்கொண் டிருந்தார். கணக்கில் புலி; தமிழில் சொல்லவேண்டுவதில்லை.
பள்ளிப் பரீட்சைகளில் முதற்பரிசு பெற்றுத் தேர்ந்து மேல் வகுப்புக்குச் செல்வார். இம்மாணவ மணி புத்தகப்படிப்புடன் நிற்கவில்லை. அவர் தமிழை முறையாகப் பயின்றார்;
பெரியார் உறவை நாடினார்; நல்ல சொற்பொழி வென்றால் பள்ளிக்கூடத்தையும் மறந்து ஓடினார்.

ஆசிரியர் கதிரைவேற் பிள்ளையின் சொற்பொழிவு கலியாணசுந்தரனாரைக் கவர்ந்துவிட்டது. அக்காலத்தில் மதவாதம் அதிகம். மேடையும் திண்ணையும் தெருவும் போர்க்களமாயின. நமது கதிரைவேற் பிள்ளை தளகர்த்தராக விளங்கி மேடையதிரச் சொல்லம்புகளை வீசினார். அவர் பேச்சின் வேகம் தமிழகத்தில் பெரிய கிளர்ச்சியை உண்டாக்கியது.

நமது கலியாணசுந்தரம் கதிரைவேற் பிள்ளை சொன்மாரியில் இன்ப நீராடிக் களித்தார். அவர் போலவே இவரும் சொற்பொழி வாற்றினார். ஆனால் ஒன்று; நமது கலியாணசுந்தரம் சமரச சன்மார்க்கர் என்பதைத் தமிழர் நினைக. கதிரைவேற் பிள்ளையிடமிருந்து அந்தச் சொல்லருவி இவர் உளத்தில் பாய்ந்தது. திரு. வி. க. வின் மாசற்ற இளந்தமிழில் யாழ்ப்பாணப் பண்பு ஒலிப்பதைக் காணலாம்.

கலியாணசுந்தரம் கதிரைவேற் பிள்ளையுடன் திரிவது பள்ளியாசிரியர் பலர்க்குப் பிடிக்கவில்லை. அவருடன் சேரக்கூடாது என்று அவர்கள் எச்சரிக்கை செய்தனர். பயனில்லை. கலியாணசுந்தரனார் கோர்ட்டில் நடந்த அருட்பா மருட்பா வழக்கைப் பார்க்கத் தவறாமல் சென்று வந்தார். பள்ளிப்படிப்புப் பாழாயிற்று. மெற்றிகுலேஷன் சோதனைக்குச் செல்லவில்லை. தமிழிலே கருத்தூன்றினார். ஆனால் திரு.வி.க. ஆங்கில மொழியை
வெறுக்கவில்லை. அவர் ஆங்கிலத்திலும் அரிய நூல்களைப் படித்திருக்கிறார். ஆங்கில உலகில் நிகழும் புதிய ஆராய்ச்சிகளை அவர் கற்றறிந்தவர்.

கணக்கரானார்

திரு.வி.க. புக் கீப்பிங் பரீட்சையில் தேறினார். ஒரு கம்பெனியில் கணக்கரானார். இவரது வேலையில் அப்பழுக்குக் கிடையாது. கம்பெனி துரைமார் இவர் திறமையை மெச்சினர்.

1908-ம் ஆண்டு, நமது நாட்டில் சுதேசி இயக்கம் சூறாவளியாகக் கிளர்ந்தெழுந்தது. கர்ஸானின் வங்கப் பிரிவினைச் சட்டம் நாட்டை ஒற்றுமைப்படுத்தித் தட்டி எழுப்பியது. வந்தேமாதரக் கோஷத்துடன் வங்காளி என் கங்கைக்கரையில் கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சுதேச சுதந்திர விரதம் நாடெங்கும் பரவியது. பிபின் சந்திரபாலர், ரவீந்தரநாத் தாகூர், சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நாரோஜி, லாலா லஜபதிராய் முதலிய
தேசாபிமானிகள் ஆங்காங்கெழுந்து நாட்டில் சுதந்திர தாகத்தை உண்டாக்கினார்கள். இவர்களுக்கெல்லாம் தலைமை வகித்துச் சுதேச இயக்கத்திற்கு ஒரு நிலையான உருவும் திருவும் வேகமும் அளித்த வீரர் பாலகங்காதர திலகரே, அவருக்கு வலக்கரம்போலும் மூளைபோலும் உதவியவர் மகான் ஸ்ரீ அரவிந்தர். அவரது வரம் பெற்ற எழுத்து வன்மையால் அவர் ஆசிரியராயிருந்து நடத்திவந்த 'வந்தேமாதரம்' பத்திரிகை முனைமுதல் மலைவரையில் புதிய விழிப்பை உண்டாக்கியது.

அக்காலம் வந்தேமாதரத்தை வரவழைத்து முறையாகப் படித்து வந்தவருள் நமது கம்பெனி கணக்கரும் ஒருவர். இவர் படிப்பதுடன் நிற்பதில்லை. கம்பெனித் தொழிலாளரைக் கூட்டி வந்தேமாதரத்தின் கருத்தை அவர்களுக்கு விளக்கப் புகுந்தார். இவரால் தொழிலாளருக்கு நாட்டன்பு வளர்ந்தது. அச்சமயம் இங்கிலாந்தில் தொழிற் கட்சித் தலைவராகி ஏழைகளுக்கு அரிய பணி செய்த கீர்ஜார்டி நமது நாட்டிற்கு வந்தார், கலியானசுந்தரனாருக்கு அவரது காட்சி கிடைத்தது. அதிலிருந்து அவர் மனம் தேச பக்தியிலும் தொழிலாளர் தொண்டிலும் சென்றது.

வேலையை உதறித் தள்ளினர்

திரு.வி.க. உண்மையென உணர்ந்த வழியில் அஞ்சாது செல்பவர். இவர் வந்தேமாதரம் படிப்பதும், நாட்டுப் பேச்சுப் பேசுவதும் தொழிலா'ளரை ஊக்குவதும் கம்பெனியார்க்குப் பிடிக்கவில்லை. வந்தேமாதரம் என்றாலே கிலிபிடிக்கும் காலம் அது. அதிலும் வெள்ளைத் துரைமாரிடம் வேலை பார்க்கும் ஒருவர் வந்தேமாதரப் பிரசாரம் செய்ய எவ்வளவோ துணிவு வேண்டும். அந்தத் துணிவைப் பணிய வைக்க, கம்பெனித் தலைவர் முயன்றார். “வந்தேமாதரத்தை விடு: இன்றேல் வேலையை விடு” இதுவே கேள்வி. மனச்சாட்சி “அடிமை வேலைக்குப் பிறந்தவனல்லை. உன்னைத் தமிழ்த் தாயும் பாரத மாதாவும் அழைக்கின்றனர், போ" என்று உந்தித் தள்ளிய உடனே திரு.வி.க. கம்பெனி வேலையை உதறித் தள்ளினார். காந்தியடிகள் பிற்காலம் சொன்ன உத்தியோக பகிஷ்காரத்தைத் திரு.வி.க. முன்பே செய்து காட்டிவிட்டார். பிழைக்க ஆதரவளிக்கும் வேலையை இப்படி ஒரு பத்திரிகைக்காக உதறித் தள்ள எவ்வளவோ நெஞ்சுரம் வேண்டும்?

தமிழ்த் தொண்டு

திரு.வி.க. திருவல்லிக்கேணியில் பெரிய புராணம் படித்து விரிவுரை நிகழ்த்திவந்தார். தூய சைவ வொழுக்கத்தை நடத்திக் காட்டினார். தேவார திருவாசகங்களின் அருமை பெருமைகளை விளக்கினார். பழந் தமிழர் நாகரிகத்தை ஆர்வமுடன் பரப்பினார். அக்காலமே அவர் பெரிய புராணத்திற்குக் குறிப்புரைகள் எழுதி வந்தார். இச்சமயக் தான் ஒரு புலவர் மூலம் திரு.வி.க. வைப் பற்றி எனக்கும் தெரிந்தது. அவரது சொல் நயத்தை வியவாதவரில்லை.

சென்னை ஆயிரம் விளக்கிற்கருகே ஒரு வெஸ்லியன் மிஷன் பள்ளிக்கூடம் இருந்தது. அதில் பெரும்பாலும் தொழிலாளரும் இருக்குலத்தாரும் படித்தனர். திரு.வி.க. இவர்கள் நண்பார். அந்தப் பள்ளிக்கட்டத்தில் அவர் ஆசிரியரானார். அவ்வேளையில் திரு.வி.க. முதலியாருக்கு மனமானது. அன்பும் அறமும் விளங்க இல்லறம் நடத்தினார். பெண்மையின் பெருமையை விளக்கும் ஆண்மையுடன் மனை வாழ்க்கை வாழ்ந்தார்.
பின்னே வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதரானார். உண்மையான தமிழுணர்ச்சியுடன் மாணவருக்கு உருக்கமாகப் பாடம் சொன்னார். மாணவர் இவரிடம் பெரு மதிப்பு கொண்டனர். இவர் வகுப்பு மிகவும் ஒழுங்காகவும் வசீகரமாகவும் இருந்தது. 1917-ம் ஆண்டு நவம்பர் வரை திரு. வி. க. தமிழ்ப் பண்டிதரா யிருந்தார்.

மணி ஐயர் அழைப்பு

இக்காலமே பெசண்டம்மையாரின் சுயாட்சிக் கிளர்ச்சி நாடெங்கும் எழுந்தது. நாடெங்கும் ஓம்ரூல் சங்கங்கள் ஏற்பட்டன. பெசண்டம்மை யின் நியூ இந்தியா' வீட்டுக்கு வீடு நாட்டுணர்வை ஊட்டியது. அன்னி பெசண்டு, அருண்டேல், வாடியா, ஸி. பி. இராமசாமி ஐயர், ளர். எஸ். மணி ஐயர் ஆகியோர் சுயாட்சிக் கிளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதன் பயனாகவே மாந்தேகு இந்தியாவிற்கு வந்தார். அதனால் இரட்டை யாட்சி நமக்குக் கிடைத்தது. இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட்டவருள் சுப்பராயகாமத் ஒருவர். அவர் திரு. வி. க. வின் தமிழ்ப் பேச்சில் ஈடுபட்டவர். வகுப்பு நாற்காலியினின்று பொது மேடைக்குத் திரு. வி. க. வை இழுத்தவர் இவரே. மாணவருக்குப் போதித்த திரு. வி. க. நாட்டிற்குப் போதிக்கத் தொடங்கினார். தமிழ்த் தாயின் பணி செய்த திரு. வி. க. இனிப் பாரத மாதா பணிக்கே எழுந்தார். மனைவியும் இறந்த பிறகு, திரு. வி. க. மனத்துறவுடன் பொது நலத்தையே விரும்பி வாழ்ந்தார்.

1917-ம் ஆண்டு அன்னி பெசண்டு அன்னி பெசண்டு சிறையுண்டார். அச்சமயம்
மணி ஐயர் அமெரிக்கத் தலைவர் வில்ஸனுக்கு நீண்ட கடிதம் எழுதி இந்திய நிலைமையை விளக்கினர். கோகலே மண்டபத்தில் ஒரு பெரிய கூட்டம் நடந்தது. திரு.வி.க. பேசினர். நமது புலவர் தமது மணக் குரலை எழுப்பிச் சுய ஆட்சியின் தத்துவத்தையும், நாட்டு நிலைமையையும், பெசண்டம்மையின் பெருமைகளையும் உருக்கமாகப் பேசினார். கூட்டம் அவர் பேச்சில் கட்டுண்டு உணர்ச்சி ததும்பி உள்ளம் பொங்கி நின்றது. ஸர். எஸ். சுப்பிரமணி ஐயர் சிலரைத் தமது மாளிகைக்கு அழைத்தார். அவருள் திரு.வி.க. வும் ஒருவர். கூட்டம் முடிந்த பின்னர் மணி ஐயர் திரு.வி.க. வை
அழைத்து, தேவாரத்தைப் பற்றியும், திருக்கோவையாரைப் பற்றியும் பேச்சுக் கொடுத்து, முடிவில் “கோகலே மண்டபப் பேச்சு நன்றாயிருந்தது. தாங்கள் தேச பக்தியைப் புகட்டினால் நாட்டிற்குப் பெரும் பயனுண்டு. தேசம் தங்களைப்போன்ற சொற் கொண்டல்களை அழைக்கிறது" என்று கூறினர். அன்றுமுதல் அடிக்கடி பொதுக் கூட்டங்களில் திரு.வி.க. வின் சொற்பொழிவுகள் நடந்தன. வாழ்வின் உண்மைப்பணி புலப்பட்டது.

5.12-1917 திரு. வி. க. தமிழாசிரியர் வேலையை விட்டார். இத்தியாகியின் உண்மையான வாழ்க்கை இனித்தான் தொடங்குகிறது. தமிழாசிரியர் வேலையை விட்டதும் திரு.வி.க. தேச பக்தன்' இதழாசிரியர் வேலையில் (7-12-1917) அமர்ந்தார். பொருத்தமான வேலை!

தேச பக்தன் ஆசிரியப் பதவி

ஸ்ரீ அரவிந்தர் வந்தேமாதரம் மூலம் இந்தியாவில் செய்த வேலையைத் திரு.வி.க. தேசபக்தன்' மூலம் தமிழகத்திற் செய்தார். ஆஹா! அது என்ன இனிய தமிழ்! ஒவ்வொரு சொல்லினும் எவ்வளவு அரிய பொருள்! தேசபக்தனைப் படிப்பதே ஒரு தனியின்பம். அது பொது ஜனங்களுக்குக் கல்வி யளித்தது, தூய தமிமுணர்ச்சி யளித்தது. தமிழார்வம் தூண்டியது அசல் ஆங்கிலப் பத்திரிகை போன்று தமிழிலும் உயர்ந்த முறையில் பத்திரிகை நடத்தலாம் என்பதை விளக்கியது. தமிழுணர்ச்சி பெற்ற தமிழ் இதழை முதன்முதல் தமிழருக்குத் தந்தவர் தமது திரு. விக. தாம். அவர் தமிழே இப்போது பல பத்திரிகைகளில் எதிரொலிக்கிறது. முதன்மையாக அப்பர், மாணிக்கவாசகர், வள்ளலார் வாக்குகளினும், சேக்கிழார் வாக்கினும் பொதிந்த பொதுநல உண்மைகளையும் சன்மார்க்க மணிகளையும்
எடுத்தெடுத்து நமக்களித்தவர் திரு.வி. காவே.

லக்னோ காங்கிரஸில் மித-அமித வாதிகளுக்குச் சமரசம் ஏற்பட்டது. திலகர் மீண்டும் செல்வாக்குப் பெற்றார். அவர் சீமைக்குச் சென்று சுயாட்சியின் பிரசாரம் செய்ய முன் வந்தார். அக்காலம் அவர் தென்நாட்டிற்கு வந்தார். சென்னையில் காமத் வீட்டில் தங்கினார். திரு.வி.க. திலகரைக் கண்டார்: திலகர் கொள்கைகளைத் திரு.வி.க. தமது மணிக்
குரலால் பொது ஜனங்களுக்கு விளக்கினார்.

காந்தீயம்

திலகர் இருக்கும் போதே மஹாத்மாவின் ஒத்துழையாமை தொடங்கிவிட்டது. திலகர் தமது பணியை மஹாத்மாவிடம் கொடுத்துப் பாரதமாதா திருவடியிற் கலந்தார். நாட்டு நிகழ்ச்சிகளில் தீவிரக் கனல் பறந்தது. திரு.வி.க. சென்னையில் காந்தியடிகளைக் கண்டார். அதே சமயம் சக்கரவர்த் ராஜகோபாலாச்சாரியார், டாக்டர் ராஜன், முதலியோரும் காந்தியடிகள் இயக்கத்தில் ஈடுபட்டனர். காந்தியடிகளின் பரிசுத்த வாழ்வும், சொல்லும் செயலும் பொருந்திய நேர்மையும், மதிப்பொலிவும், ஒப்பற்ற தியாகமும் திரு.வி.க. வைக் கவர்ந்தன. திரு.வி. கலியாணசுந்தானார் தமிழ் நாட்டில் காந்தியடிகள் கொள்கைகளைப் பரப்பத் தொடங்கினார். அக்காலம் இவர் சொற்பொழிவுகளுக்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடுவார்கள். "கலியாணசுந்தர முதலியார் தமிழ்" என்றால் அதற்குத் தனிப் பெருமையுண்டு. நல்ல தமிழ் பேசுகிறவர்களைத் "திரு. வி.க. மாதிரி பேசுகிறார்" என்பர். டாக்டர் வரதராசுலு, ஈ.வே. ராமசாமி நாயக்கர், திரு.வி.க. இம் மூவருமே அக்காலம் தமிழ்நாடு பெருமதிப்புடன் போற்றிய முத்தலைவர், தமிழருக்குக் காந்தீயம் என்ற மதத்தைப் புகட்டியவர் திரு.வி.க. தாம். மஹாத்மாவின் அருமை பெருமைகளைத் தமிழருக்கு இவரே நன்றாக விளக்கினார். தென்னிந்தியாவில் ஒத்துழையாமை அவ்வளவு வெற்றி பெற்றதற்குத் திரு.வி.க. வின் எழுத்தும் பேச்சுமே முதன்மையான காரணங்க
ளாம். ''நாமார்க்குக் குடியல்லோம்: கமனை யஞ்சோம்" என்று ஒவ்வொரு தமிழனும் உணரச் செய்த வீரர் திரு.வி.க. அக்காலம் அவர் எழுதிய "மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்" என்ற நூல் தமிழருக்குக் காந்திய வேதமாக விளங்கியது. அதைப் படியாத தமிழனில்லை. அந்நூலில் அப்பருக்கும் காந்திக்கும் உள்ள ஒற்றுமைகளை விளக்கித் திரு. வி.க. தமிழருக்குப் பெருமை தந்தார். அந்நூல் வங்காளத்தில் எழுதப்பெற்றிருந்தால், இதற்குள் உலகெல்லாம் பரவி விருக்கும். ரோமேன் ரோலாந்தின் காந்தீய நூலை வியக்கும் உலகம், திரு.வி.க வின் நூலை ஆங்கிலத்தில் பெயர்த்தால் இதையே மெச்சும். திரு.வி.க. வின் தமிழ் அவ்வளவு மாசற்ற உணர்ச்சியைத் தரும்.

அக்காலம் திரு.வி.க. ஒரு தட்டாடை, கதர்ஜிப்பா, ஒரு துண்டு, உச்சிக்குடுமி, முகமெல்லாம் புன்னகை இவற்றுடன் விளங்கினார். எளியநடை, இனிய பேச்சு, அன்பான நட்புறவு, அஞ்சா நெஞ்சம், ஆட்களின் உள்ளத்தை ஊடுருவியறியும் கூர்விழிகள் இவை திரு.வி.க. வின் சிறப்புகள்.

நவசக்தி தோற்றம்

சில காரணம் பற்றித் திரு.வி.க. தேசபக்தனை விட்டுவிட்டார். அச்சமயம் புதுவையிலிருந்து வீரமணி வ.வெ.சு. ஐயரும் சென்னைக்கு வந்ததால், 'தேசபக்தன்' அவர் தலைமையில் நடந்தது. திரு.வி.க. இதற்குள் தமிழர் உள்ளத்தில் நிலையான இடம் பெற்றுவிட்டார். திரு.வி.க. சாது அச்சகம் நிலைநாட்டி 'நவசக்தி' என்ற வார இதழைத் தொடங்கினார். மீண்டும் தமிழகம் சுந்தரத் தமிழைப் பருகி மகிழ்ந்தது. நவசக்திக்குத் தொழிலாளரிடையே ஏராளமான செல்வாக்கிருந்தது. 'நவசக்தி'யில் வந்த திரு.வி.க. கட்டுரைகளும் 'தலையங்கங்களும் சிறந்த தமிழ் விருந்தாகும். அக்காலமே சென்னையில் பக்கிங்காம் தொழிலாளர் வேலை நிறுத்தம் அமளியாக நடந்தது. அப்பெரிய வேலை நிறுத்தத்தை நடத்தி முதலாளி- தொழிலாளி தகனாரைத் தீர்த்து வைத்தவர் நமது திரு.வி.க. அக்காலம் இவர் உடல் நலத்தைக் கூடக் கவனியாமல் தொழிலாளர் பணியில் ஈடுபட்டார். இவர் சொல்லே தொழிலாளர் வேதமா யிருந்தது.

ஒத்துழையாமை நின்றது. சித்தரஞ்ஜன தாஸர், மோதிலால் நேரு. நமது எஸ். ஸ்ரீநிவாசய்யங்கார் இம்மூவரும் ஸ்வராஜ்யக் கட்சி தொடங்கி நாடு இரண்டானது. சட்டசபை அமளி வலுத்தது. காந்தீய பக்தர் கதர்ப்பணி செய்துகொண்டு அடக்கமா யிருந்தனர். திரு.வி.க. எஸ். நிவாச ஐயங்காருக்கு வலது கைபோல் உதவினார். அக்காலத்தில் இவருக்கு அசாத்ய மதிப்பிருந்தது. திரு. வி. க. தான் தமிழ் நாடாயிருந்தது.

வந்தது காஞ்சீபுரம் மகாநாடு! தமிழரெல்லாரும் திரு.வி.க. வையே அம் மாநாட்டுத் தலைவராக்கித் தமது மரியாதையைத் தெரிவித்தனர்.

காஞ்சியில்

வடநாட்டில் சூரத் வேலையைத் தென்னாட்டில் காஞ்சியும் செய்ய நடித்தது. தலைவரை யாரும் எதிர்க்கவில்லை. அதற்குப் பதிலாக வகுப்புப் பிரச்சினை வந்து புகுந்தது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குச் சண்டை போடவே கச்சைகட்டி நரைத்த மீசையை முறுக்கிவிட்டு மூக்குக் கண்ணாடி யைத் துடைத்துக்கொண்டு தலை நிமிர்ந்து வீறாப்புடன் வந்தார் நமது இராமசாமி நாயக்கர். எஸ். இராமநாதன் அவருக்கு வலது கையாயிருந்தார். வகுப்பு வாதத் தீர்மானத்தைத் தலைவர் திரு.வி.க. தள்ளிவிட்டனர். மகாநாட்டில் பெருங்குழப்பம். திரு.வி.க. மிகவும் திறமையாகச் சமாளித்து மகாநாட்டை வெற்றி பெறச் செய்தார்; அவருக்கு வகுப்புவாதம் சுத்தமாகப் பிடிக்காது. அவர் சமரஸ சன்மார்க்கர்; காந்தீயத்தின் தத்துவத்தை அறிந்தவர்.

காஞ்சிபுரம் காங்கிரஸ் மகாநாட்டில் எத்தனையோ பேச்சுக்கள்; கூச்சல்கள்; நிகழ்ச்சிகள் நடந்தன. எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள். என் உள்ளத்தைக் கவர்ந்த தலைவர் ஒருவரே. அவரே திரு.வி. கலியாணசுந்தர முதலியார். அவரைத் தலைமை பீடத்தில் அமர்த்திய எஸ். ஸ்ரீநிவாசஐயங்கார், "திரு.வி.க. இயற்கையிலேயே பழுத்த மேதாவி. அரசியல் உணர்ச்சி (பொலிடிகல் ஸென்ஸ்) மிகவுடையார். தேசத்திற்கே தம்மைத் "தியாகி" என்றார். அது பொருந்தும்.

      திரு.வி.க. வின் தலைமையுரை நாட்டிற்கு அரிய புதிய வழி காட்டியது. தலைமையுரைதான் என் மனத்தில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. காஞ்சி மாகாட்டிற்குப் பிறகு இராமசாமி நாயக்கர் தமது குடியரசில்' எழுதி வந்ததையும் செய்ததையும் நாடறியும். டாக்டர் வரதராசுலு நாயுடுவும் ஒத்துழையாமை சாத்தியமில்லை என்று கைவிட்டார். திரு.வி.க. ஒருவரே ராஜாஜியுடன் காந்தீயத்திற்கு ஆக்கம் தேடினார். அதனால் அவருக்கு வந்த வசவும் திட்டும் கொஞ்சமல்ல.

      காஞ்சி மகா மாட்டிற்குப் பிறகு ஸ்ரீநிவாச ஐயங்காருக்குத் துணை செய்த திரு.வி.க. ஒரு நாள் அவருக்கு ஓர் அறிக்கை அனுப்பினார். சும்மா இருப்பதே சுகம்” என்றொரு தலையங்கம் 'நவசக்தி'யில் வந்தது அன்று முதல் இவர் காங்கிரஸ் பக்கம் போனதில்லை.

      அக்காலம் ஜஸ்டிஸ் கட்சி செல்வாக்குப் பெற்றது. அதன் ஆட்டத்தை அடக்கிவைத்தவருள் திரு.வி.க. ஒருவர்.

      அவர் காலங் கருதியே சும்மா இருந்தார். 1930-ம் ஆண்டு இரண்டாவது உப்புச் சத்தியாக்கிரகம் எழுந்தது. வடக்கே காந்தியடிகள் தொண்டருடன் தண்டி யாத்திரை சென்றார். தெற்கே ராஜாஜி வேதாரண்யத்தில் சத்தியாக்கிரகம் செய்தார். திரு.வி.க. வின் கையெழுத்தை மட்டும் ராஜாஜி பெற்றுச் சென்றார்.

இலக்கியப் பணி

      திரு.வி.க. வின் மனைவியும் மரணமடைந்தார்; குழந்தைகளும் மரணமடைந்தன. அண்ணல் உலகநாத முதலியாரே அவர் உடல் தேவைகளைக் கவனித்து வருகிறார். திரு.வி.க. துறவிபோல் எதிலும் பற்றின்றி எழுது கோலுடன் வாழ்கிறார். அவரை இன்னும் தமிழர் பயன் படுத்திக்கொள் இடமுண்டு.

      திரு.வி.க. அறுபதாம் ஆண்டைத் தமிழர், சிறப்பாகக் கொண்டாடுவது பற்றி யாரே மகிழார்? அவர் பெயரால் நூலகங்களும், சன்மார்க் சபைகளும் ஏற்பட்டுத் தமிழும் சமரச உணர்ச்சியும் பரவினால் மணிவிழா சிறந்த தொண்டு செய்ததாகும். தமிழறிவு, சன்மார்க்க வாழ்வு, சைவ உணவு, நாட்டன்பு, நிறைமுறையான இல்லற ஒழுக்கம் இவ்வைந்தும்
திரு.வி.க. வுக்குப் பிரியமானவை. இவற்றைத் தமிழர் போற்றுக.

ஆனந்த போதினி – 1943 ௵ - ஆகஸ்டு ௴

 

 

No comments:

Post a Comment