Thursday, September 3, 2020

 

நமது பெருங்குறை

 

நண்பர்களே! இப்போது நம் தாய் நாட்டிற்குள்ள குறைகள் பலவெனினும், நாம் இவண் முறையிடக் கருதியது நம் தெய்வீகத் தாய் மொழியாகிய தமிழின் தற்கால நிலைமையைப் பற்றியேயாகும். இது அவ்வளவு அவசியமாகக் கருதத் தகுந்ததோ வெனின், அதற்குச் சற்றும் ஐயமின்றாம்.

 

நம் தாய்ப்பாஷை இப்போதிருக்கும் நிலைமையினின்று காப்பாற்றப்படாவிடின், இதனால் நேரிடக்கூடிய ஆபத்து சற்று ஆலசியமாக நேரிடுமாதலால், இதைக் கவனிக்கவேண்டியது அவ்வளவு அவசரமானதாகத் தோன்றவில்லை போலும். அந்தோ நமக்கிருக்கும் இக்குறை, ஒருவர் தேகத்தின்கண் அவர்கள் உணராவண்ணம் அற்ப அங்குரமென்னத் தோன்றி மறைவிலேயே வளர்ந்து தேகத்தில் நன்றாய்ப் பற்றிக்கொண்டு, பிறகு எத்தகைய சிகிச்சைக்கும் அடங்காது, உண்ணும் ஒளஷதங்களை யெல்லாம் தான் விழுங்கிவிட்டு, நிச்சயமாய்க் கொல்லும் இயல்புடைய ஒரு கொடிய வியாதியை யொத்ததேயாகும். சற்று சிந்தித்துப் பார்த்தால் இதனாலுண்டாகும் ஆபத்து மிக்க பயங்கரமானதென்றும், மிக்க கஷ்டப்பட்டு நாம் பெறத்தக்க மற்ற பயன்களை யெல்லாம் இது அழித்துவிடத் தக்கதென்றும், பிறகு சுலபத்தில் நீக்கிக்கொள்ளக் கூடியதல்ல வென்பதும் 'உள்ளங்கை நெல்லிக்கனிப்போல்' அனைவோர்க்கும் விளங்கும் என்பது உண்மை. ஒரு பொருள் நமக்கு எத்துணை அவசியமான தென்பதையும், இன்றி யமையாத தென்பதையும் உணர்ந்தால் அதன் சேதத்தால் நமக்கு நேரிடத்தக்க தீங்கின் அளவு இத்தன்மையதென்று தெள்ளெனப் புலப்படும்.

 

உலகிலுள்ள பல பாஷைகளில் சம்ஸ்கிருதமும், தமிழுமே வேறெந்த அன்னிய பாஷையின் உதவியுமின்றித் தாமே யாவற்றையும் விளக்கக் கூடியவை; விரிந்த இலக்கண முடையவை; பூரணத்வமுடையவை. இதே சஞ்சிகையின் மற்றோரிடத்தில் "நம் தாய் நாட்டின் சிறப்பு' என்ற வியாசத்தில் வடமொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்த பாஷா தத்துவஞான நிபுணராகிய மாக்ஸ் முல்லர் என்ற பண்டிதர் சமஸ்கிருத பாஷையைப் பற்றிக் கூறியுள்ளதைக் கவனியுங்கள். அத்துணை விசேடங்களும் நம் தமிழ்ப் பாஷைக்குமுண்டு. இன்னும் தமிழினிடம் ஒரு அதிக விசேடங்கூட உளது... அதாவது, வடமொழியைப்போல் எழுதும் பாஷையாக மட்டு மிராமல், தமிழ் பேசும் பாஷையாகவும் இருக் கிறது. இன்னும் இதன் இனிமை, தெய்வத்தன்மை முதலிய அறிய விசேடங்களைப்பற்றி யீண்டுக் கூறப்புகின் விரியுமென்றஞ்சி விடுத்தாம். மற்றோர் வியாசத்தில் அவற்றைப்பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. ஆண்டு கண்டுணர்க.

 

ஹிந்துக்களாகிய நமக்கு ஆன்மார்த்த பலனே விசேஷமானது. அற்பமும், அநித்தியமும், துக்கமுடையதுமாகிய இவ்வுலக போகங்கள் துச்சம் என்ற அலட்சிய உணர்ச்சி ஏறக்குறைய நம்மனைவர்க்குமேயுண்டு. மற்றயரைப் போல் இவ்வுலகில் அனுபவிக்கும் போகந்தான் சிறந்தது, அதிலும் மாதரோடு மகிழ்ந்து சுகிக்கும் இன்பமே யாவற்றினும் சிறந்தது என்று நம்மவரில் சுத்தமூடனும் கருதமாட்டான். அதில் இச்சை வைத்து அதையனுபவிப்பவன் கூட, உள்ளத்தில் அது சிறந்ததென்கிற அபிப்பிராயம் உடையவனல்ல. அது அநித்தியம், துக்கம், இழிவானது என்று உணர்ந்தே, அதைவிட்டொழிக்க வழிதெரியாது, வினைப்பயனால் மயக்கப்பட்டவனாய் அதை யனுபவிக்கிறான்.

 

நண்பர்களே! இத்தகைய ஞான உணர்ச்சியையளிக்கும் நமது ஆன்மார்த்த நூல்களனைத்தும் மேற்கண்ட நமது இரண்டு பாஷைகளிலே தான் இருக்கின்றன. வேறு எப்பாஷையிலும் நம் ஆன்மார்த்த நூல்களின் கருத்துக்களை மனதிற்குப் புலப்படும் வண்ணம் விளக்கிக் காட்ட முடியாதென்பது யாவரு மறிந்ததோ ருண்மை. ஏனெனில், அவற்றிற்குத் தகுதியான மொழிகள் மற்றப் பாஷைகளில் இல்லை. அவ்வாறு அன்னிய பாஷையால் விளக்கிக்காட்ட முடியாத மொழிகள் நமது நூல்களில் எண்ணிறந்தனவுள. ஆகையால் நமக்கு அவசியமான நம் மறுமைப் பயனுக்கு நமது தாய்ப் பாஷையின்றியமையாததாகும் என்பது நன்கு விளங்குகிறது.

 

முற்காலத்தில் நம் நாட்டில் மாணவர் குருகுலவாசம் செய்து குருவினிடம் தெய்வபக்தி வைத்துத் தமிழ்த் தெய்வத்தின் பூரண அருளைப்பெற்று விளங்கினர்கள் என்பதும், இக்காலத்தில் உள்ள மாணாக்கர் எவ்வாறு பயில்கின்றன ரென்பதும், கும்பகோணம் டவுன் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் மா -ஸ்ரீ சி. குழந்தைவேலுப் பிள்ளையவர்கள் நமது ஆனந்தனுக்கு வரைந்தனுப்பிய கீழ்க்குறித்த இரண்டு செய்யுட்களால் நன்கு விளங்கக் காண லாம்....


      முன்னாளில் முதுகுரவர் தமைக்கண்டால்

    முதல்வனாங் கடவு ளென்றே
     உன்னாநின் றுளங்களித்தே

    யுரையென்ன வுரைத்தவர்க ளுரைத்த வெல்லாம்
     பன்னாளு மறவாமல் மனத்தகத்தே   

    பதித்துவைப்பர் பயில்மா ணாக்கர்
     இந்நாளிற் பலமுறையு மிடித்திடித்தே

    யியம்புகினுங் கேளா ரந்தோ.


      பற்பலவாம் வார்த்தைகளைப் பகர்ந்திடுவர்
           பராமுகமா யிருப்பர் சால

வற்பர்தமைப் போலவே யவமதிப்ப
           ரயலே போய்ப் பழிப்பரிந்தச்
      சொற்பவறி வுடையமா ணாக்கர் திறம்

சொலநம்மா லியலாது சொல்லினல்ல
 விற்பனர்களிவ்வீணர் தமைக்கண்டா
      லுள்ளமிக வெறுப்ப ரன்றே.

 

அந்தோ! இக்கால மாணவர்களுக்குத் தம் தாய்ப்பாஷையில் சிரத்தையில்லாததால் இவர்கள் தம் தாய்ப்பாஷை ஆசிரியர்களை மதிக்காமல் அலட்சியம் செய்து தாய்ப்பாஷையில் தக்க பயிற்சியின்றி எவ்வளவோ தீங்குகளுக் காளாகிறார்கள். தாய்ப்பாஷையின் மூலமாய் அன்னிய பாஷையைக் கற்பது இயற்கை. இவர்களோ, தம் தாய்ப்பாஷையில் இவர்களுக்கு விளங்காத வார்த்தைகளை அன்னிய பாஷாமொழிகளால் விளக்கிக் காட்டினால் உணரும் நிலைமையிலிருக்கிறார்கள். அந்தோ! இது எத்தகைய வெட்கக்கேடான நிலைமை! இவர்கள் வாசிக்கும் ஆங்கில பாடபுத்தகத்திலுள்ள மொழிகளுக்குத் தமிழ்ப்பிரதிபதம் இவர்களுக்குச் சரியாய்த் தெரியாது. கேட்டால்'' உபாத்தியாயர் ஆங்கிலத்திலேயே யாவும் வியாக்கியானம் பண்ணிவிடுகிறார்; தமிழில் கூறுவதில்லை " என்கிறார்கள். இப்போது பாடசாலைகளில் நடக்கும் போதனாமுறை யெத்தகைய தீங்கு விளைவிக்கத்தக்கது என்பது இதனால் நன்கு விளங்குகிறது. செய்யுள் வாசித்துப் பயில்வது தமிழ்க் கல்வியினபி விர்த்திக்கு அவசியமானதென்பது யாவருமறிந்த விஷயம். ஒரு செய்யுளிலுள்ள பதங்களைச் சமயோசிதப்படி பிரிக்கவும், பிறகு அதை வசன நடைக்குக் கொண்டு வரவும், அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் பிரதிபத முணரவும், அவற்றிலுள்ள இலக்கண சம்பந்தங் களை யுணரவும் பழகுவது கல்விப்பயிற்சிக்கு அத்தியாவசியமானது. அவ்வாறு சில செய்யுள் நூல்களை வாசித் துணர்ந்தால் தான் பிறகு எத்தகைய செய்யுளையும் வாசிக்கவும், பதங்களைப் பிரித்து ஏறக்குறைய வேனும் பொருளறியவும் திறமையுண்டாகும். அப்போது தான் தாய்ப்பாஷையில் அவர்கள் அறிவு விசாலப்பட்டு விற்பத்தியுண்டாகும்.

 

அந்தோ! இப்போது ஏற்படுத்தப்படும் பாட புத்தகங்களிலுள்ள செய்யுட்கள் ஆன்றோரது நூல்களிலிருந்து பொருக்கி யெடுக்கப்பட்டவைகளே. ஆனால் அவற்றிலுள்ள சீர்தளை முதலிய செய்யுள் அங்க இலக்ஷணங்களையெல்லா மொழித்து, மொழிகளை யெல்லாம் ஏறக்குறையப் பகாப்பதங்களாகச் சேதித்து, சீருக்குத் தக்கபடி யமைந்துள்ள இலக்கணச் சந்திகளையெல்லாம் அடியோடு பிரித்து, காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, ஆச்சரியக்குறி, வினாக்குறி முதலியவைகளை யெல்லாம் சேர்த்து அச்சியற்றி மாணவர்களுக்கு அளிக்கிறார்கள். இதனால் அவர்கள் வாசிப்பது வசனமுமல்லாமல், செய்யுளுமல்லாமல் இருக்கிறது. பாடசாலைகளில் இலக்கணமே கற்பிக்கப்படுவதில்லை.

 

இவ்வாறு செய்யுட்களைச் செய்யுள் இலக்ஷணமே யில்லாமற் செய்து பிள்ளைகளைக் கற்கச் செய்வதால் என்ன பயன் உண்டாகுமென்று கருதப்படுகிறதோ, நமக்குப் புலப்படவில்லை. கற்றுணர்ந்த சில பெரியோரை நாம் கேட்டறிந்தமட்டில் இதனால் எவ்வித நன்மையு முண்டாவதாய்த் தெரியவில்லை. அதற்கு மாறாகத் தமிழ்க் கல்வியில் அவர்கள் புத்தி வேலை செய்வதற்கே இடமில்லாமற் போகிறதென்றும், அதனால் தாய்ப்பாஷைக் கல்வியே குன்றிவிடுகிற தென்றும் ஐயமின்றி விளங்குகிறது.

 

அந்தோ! இவ்வாறிருந்தால் நம் தாய்ப்பாஷை நாளடைவிற் குன்றிவிடுமென்பதில் ஐயமுண்டோ? இப்போதே, கல்வியில்லாப் பாமர ஜனங்களில் மாதர்கூட இடையிடையில் ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பேசுவதைப் பிரத்தியக்ஷமாகக் காணலாம். இத்தகைய அவலட்சணமும், தம் தாய்ப்பாஷைக்கே அகௌரவத்தை யுண்டாக்குவதுமாகிய நடக்கை வேறெந்தநாட்டிலும் காணக்கிடைக்காது. இப்போதே இக்குறைகளை நீக்கித் தாய்ப் பாஷையையும் கட்டாய பாஷையாகப் பாடசாலைகளில் ஏற்படுத்தி, முன்போல் இலக்கணத்தோடு கற்பிக்க முயலாவிட்டால், தமிழ் முதலிய தாய்ப் பாஷைகளும் பேசமுடியாத பாஷைகளாய் விடுங்காலம் சீக்கிரத்தில் வந்துவிடத் தடையென்ன? பிறகு நமது மத நூல்களால் நமக்கென்ன பயன்? நமது மதம் போனால் ஹிந்துக்கள் என்ற ஒரு ஜாதியே யில்லாமற்போம். நமது தாய்நாட்டின் க்ஷேமாபிவிர்த்திக்காக மற்ற துறைகளில் அனேகம் தேசாபிமானிகள் படும்பாடெல்லாம், வேரைப்புழுக்கள் அரித்துக் கொண்டுபோகும் ஒரு விருட்சத்திற்கு மேலே ஜலம் தெளித்துக்கொண் டிருப்பது போலன்றோ முடியும்!

 

உலகில் மேம்பாடடைந்திருக்கும் ஜாதியார் ஒவ்வொருவரும் தம் தாய்ப் பாஷையைப் பக்தியோடும், வைராக்கியத்தோடும் வளர்ப்பவர்களே என்பதும், தாய்ப்பாஷையை யலக்ஷியம் செய்யும் எச்சாதியாரும் க்ஷேமமடைவதில்லை யென்பதும், பிரத்தியமான உலக அனுபவம். நம் தாய்ப்பாஷையை விர்த்திசெய்யும் மார்க்கம் நம்மவர் கரங்களிலேயே யிருக்கிறது. இவர்களே இதில் சிரத்தையின்றியிருந்தால் நம் தாய்நாடு எவ்வாறு க்ஷேமமடையும்? நமது மாணவர்கள் நம் தாய்ப்பாஷையில் சிரத்தையற்றிருப்பதையும், நமது மதநூல்களை வாசிக்க வேண்டுமென்ற பிரியமே இல்லாதவர்களாக விருப்பதையும், தெய்வ வழிபாட்டிலேயே நினைவில்லாதவர்களாயிருப்பதையும், அவற்றிற்கு மாறாக அன்னிய ஆசாரங்களைப் பின்பற்றுவதில் ஆவலுள்ளவர்களாக விருப்பதையும் கவனித்துப் பார்த்தால், கொஞ்சகாலத்திற்குள் நம் தாய்நாடு எக்கதியடையுமென்பது மனதிற்குப் புலப்படாது போகாது. உத்தியோகத்திற்குத் தகுதியளிக்கும் ஒரு பரீட்சையில் தேர்ச்சி யடைந்த மாணவன் சாதாரணமான ஒரு அறுசீர் விருத்தத்தைக்கூட வாசிக்க முடியாத நிலைமையி லிருக்கிறானென்றால், தாய்ப்பாஷையில் இரண்டொரு வாக்கியங்கள் கூட அன்னியபாஷைக் கலப்பின்றிப் பேசமுடியாத தன்மையிலிருக்கிறானென்றால், அவன் தாய்ப்பாஷையில் மதநூல்களை வாசித்துணர்வது யாங்ஙனம்? ஆன்மார்த்த ஞானத்திற்குப் பிறப்பிடமாகிய இப்புண்ணிய பூமியிற் சனித்த நம் மக்கள் மதவுணர்ச்சியே யில்லாமல் வளர்க்கப்படுவதை விட, நம் தாய்நாட்டின் அழிவிற்கு வேறு மருந்து வேண்டுமோ? நம்மவர்கள் இனியேனும் இவ்விஷயத்தில் மனநாட்டம் வைத்து நமது தாய்ப்பாஷை குன்றாது தடுத்து, அது அபிவிர்த்தியடைவதற்கு வேண்டிய முயற்சியை யெடுத்துக்கொள்ள வேண்டுமாய் வேண்டிக் கொள்வதோடு, அநாதி காலந்தொட்டு நம் புண்ணிய பூமியில் மெய்ஞ்ஞான விருக்ஷம் சற்றும் வாடாமல் செழித்து வளர்ந்து வரும்படி இதுகாறும் காத்து வந்த அருட்பெருஞ் சோதியாகிய கருணாகர மூர்த்தியே, நம்மவர் இனியேனும் மனந் திரும்பி நம் தாய்ப்பாஷையின் அபிவிர்த்திக்கு இடையூருக வுள்ளவற்றை நீக்கி, நமது மக்களுக்குத் தாய்ப் பாஷாபிவிர்த்தியும், மதக்கல்விப் பயிற்சியும் உண்டாவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யச் சிரத்தையெடுத்துக் கொள்ளுமாறு அருள்புரிய வேண்டுமாய்ப் பிரார்த்திப் போமாக.

ஓம் தத்ஸத்.

 

ஆனந்த போதினி – 1920 ௵ - அக்டோபர் ௴

 

No comments:

Post a Comment