Thursday, September 3, 2020

 

நம் தாய்நாட்டின் சிறப்பு

 

நேயர்களே! கொஞ்சக் காலத்திற்கு முன்பு வரையில் இந்தியர்க்கு ஒருசாத்திர உணர்ச்சியும் கிடையாதென்றும், நம்முன்னோர்கள் சுத்த மூடர் களாக இருந்தார்களென்றும், ஐரோப்பியரே எல்லா ஜடசாத்திரங்களையும் கண்டு பிடித்தார்களென்றும், நம் நாட்டினரல்லாத மற்றையரிற் பெரும் பாலோர் கருதியிருந்தார்கள். சமீபகாலத்திற்கு முன்புகூட இங்கிலாந்தி லுள்ள சிறுவர்களுக்கு "இந்தியா செழிப்பான நாடு, பொன் விளையும் பூமி, ஆனால் அங்கிருக்கும் ஜனங்கள் பல ஜாதிகளாகவும், பல மதத்தினர்களாகவும் பிரிவுப்பட்டிருக்கிறார்கள்; கறுப்புநிறமுடையோர். அவர்களெல்லாம் விக்கிரகாராதனை செய்யும் அஞ்ஞான மதத்தினர் (Heathens) அநாகரீகர்கள். அரை அம்மணமாக விருப்பவர்கள்; மாதர்களை அடிமைகள் போலும், மிருகங்கள் போலும் நடத்துபவர்கள்; சாத்திரங்களைக் கண்டு பிடித்து அவற்றில் தேர்ச்சியடைதல் முதலிய சூக்கும் அறிவு அவர்களுக்கில்லை. பொய், சூது முதலிய துர்க்குணங்களை யுடையோர் " என்று போதித்து, அவர்கள் " இந்தியர்கள் சம மரியாதைக்குப் பாத்திரமுடையவர்களல்லர் " என்று கருதும் வண்ணம் செய்வது வழக்கம். இதனாற்றான் அங்கிருந்து இங்கு ஜீவனார்த்தமாய் வருகிறவர்கள்; வந்தது முதலே இந்தியரைத் தங்களிலும் மிக்க தாழ்ந்த வகுப்பினராகக் கருதி, அலக்ஷியமாய் மரியாதை யின்றி நடத்தும் வழக்க முடையவர்களானார்கள். ஆளும் ஜாதியார்க்கும், ஆளப்படும் ஜாதியார்க்கும் பரஸ்பர விசுவாசம் இருக்கவேண்டியதற்கு இது இடையூறு செய்வதாகும்.

 

இப்போது கொஞ்சக் காலமாக இந்தியாவின் பூர்வீக நிலைமை எத்தகையதெனும் உண்மை உலகோர்க்கு நன்குவிளங்கத் தொடங்கியது. உலகின் மற்ற நாட்டின ரெல்லாம் காட்டு மனிதர்களாக இருந்த அக்காலத்திற்கு முன்பிருந்தே, பாரத பூமியாகிய நம் புண்ணியத்தேயம், நாகரீகம், கல்வி, ஆன்மார்த்த சாத்திர விற்பத்தி, சகல சடசாத்திர பாண்டித்தியம், செல்வம் யாவற்றிலும் சிறப்புற்றோங்கியிருந்த தென்றும், இங்கிருந்தே மேற்கண்டவற்றில் பல மேல் நாடுகள் முதலிய அன்னிய நாடுகளுக்குச் சென்றன வென்றும், சகல சாத்திரங்களிலும் பரதகண்டமே உலகிலுள்ள மற்ற நாடுளுக்குக் குருநிலைமையி லிருக்கிறதென்றும், குரு தன்னை மறந்து காடாகாரமான சுழுத்தியிலழுந்திவிட்டதால், சீடர்கள் பலரும் தாங்களே எல்லா சாத்திரங்களையும் உற்பத்தி செய்த கிரந்த கர்த்தாக்களென்று பெருமைப் படுத்திக்கொள்ளத் தலைப்பட்டார்களென்றும் பகிரங்கமாகப் புலப்படத் தொடங்கியது.

 

நண்பர்களே! சகோதர சகோதரிகளே! இப்போது நம் முன்னோர் பெருமையைப்பற்றி வாய்ப்பறையறைந்து பெருமை பாராட்டிக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கங் கொண்டல்ல நாம் இதை வரையத்தொடங்கியது. அந்தோ! தற்சமயம் குடிக்கக்கூழிற்கும் வழியற்ற ஒருவன் ஓ எங்கள் பாட்டனார்க்குக் காமதேனுவே தினம் வந்து தேவபோசனமளித்துக் கொண்டிருந்தது என்று பெருமை கூறிக்கொள்வதில் என்ன பயன்? 

 

ஆ! நமது நாடு இத்தகைய பெருமை பொருந்திய நிலையோடு இப் பூவுலகுக்கே ஒரு மகுடம் போன்று விளங்கியதே. நம் முன்னோருடைய மகிமையாலல்லவோ அவ்வாறிருந்தது? அத்தகைய முன்னோரின் வழி வந்த நாம் யானை வயிற்றில் பூனைபிறந்தது'போலவும், சிங்கத்தின் வயிற்றில் முயற்குட்டி பிறந்தது போலவும் நம் முன்னோர் பெருமையை யழிக்கும் நிலைமையி லிருக்கிறோமே " என்று நாணமும் துயரமுமடைந்து இனி யேனும் நாம விழிப்படைந்து உரோஷமும், ஊக்கமும், வைராக்கியமும் கொண்டு மங்கியிருக்கும் நம் தாய் நாட்டின் சிறப்பு மறுபடி சூரியப்பிரகாசம் போல் சுடர்விட்டுப் பிரகாசித்து, பூர்வீக உன்னத பதவியை மறுபடி யடையும் வண்ணம் முயற்சி யெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே இதை வரைகிறோம்.

 

நம் தாய் நாட்டிற் பிறந்து அமெரிகாவிற்குச் சென்று அங்கு சுதேசஸ்தராக அங்கீகரப்பட்டு, அங்குள்ள அயோவா சர்வகலாசாலை (University) யில் ஒரு பண்டிதராகவிருக்கும் டாக்டர் ஸுதீந்திர போஸ் அவர்கள் 1919 ஆகஸ்ட் ௴ 30உ முதல் ஸெப்டெம்பர் மீ 14.உ வரை சிகாகோ நகரில் அமெரிகா துரைத்தனத்தின் ஆதரணைக்கீழ் கூடியிருந்த சர்வ அமெரிகா விளக்கச் சபை (All - American Exposition) யில் செய்த, ''இந்தியாவிற்கு உலகம் பட்டிருக்கும் கடன்'' என்ற வியாசத்தி லடங்கிய விஷயங்களில் சிலவற்றை ஈண்டுக் கூறுகிறோம்:

 

இக்காலத்தில் ஜாதீய ஆசாரம், நாகரீகம், சட்ட சாத்திர விற்பத்தி, புதிய சாத்திர உண்மைகளைக் கண்டு பிடிக்கும் புத்திநுட்பம், ஊக்கம் முதலிய யாவற்றிலும் சிறப்புற்று விளங்குவோர் அமெரிக்கரேயாவர். நான் ஜனித்த பூமியாகிய இந்தியா தேசம் கலைப்பயிற்சியைப் பற்றிய விஷயத் தல் அமெரிகாவிற்கு உதவி செய்த நாடுகளிலொன்றாகும். சமீபகாலத்திற்கு முன்புவரையில் இவ்வளவு நன்றாக அறிந்து அங்கீகரிக்கப்படா விடினும், அமெரிகா, ஐரோப்பா கண்டங்களிலுள்ள கலைப்பயிற்சியின் அபிவிர்த்தி சம்பந்தமான விஷயங்களுக்கு உதவி செய்திருக்கத்தக்க மாதிரியான பரவிய நாகரீகத்தை இந்தியா உடைத்தாயிருந்ததென்பது உண்மை. உலகின் நாகரீகத்திற்கு இந்து தேசம் செய்திருக்கும் இத்தகைய உதவியை நான் இப்போது உங்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன்: -

 

இந்தியா தேசம் விஸ்தீரணத்தில் அமெரிகா, ஐக்கிய மாகாணங்களில் பாதியாகும். அதன் ஜனத்தொகை 31 கோடி 50 இலட்சம். வேறு விதமாகக் கூறும் பட்சத்தில் இந்தியாவின் ஜனத்தொகை இரஷியாவின் ஜனத் தொகையில் ஐந்து பங்குடையது. இந்தியா உலகத்திலுள்ள ஜனத் தொகையில் ஐந்தில் ஒரு பாகத்தையுடையது. இந்தியாவின் ஜனங்களில் பெரும்பாலோர் ஆரியர்கள். அவர்கள் கிரேக்கர், உரோமர், ஆங்கிலவர் முதலிய ஜாதியாருக்குத் தாயாதிகளாவர்.

 

இந்தியா மிக்க புராதனமான நாகரீகத்தை யுடையது. புராதன உலகிலிருந்து கிடைத்திருக்கும் கிரந்தங்கள் கிரீக், லாடின், சம்ஸ்கிருதம் ஆகிய இம்மூன்று பாஷைகளிலிருந்தேயாகும்.

 

பட்சபாத மின்றி நடுநிலைமையினின்று நோக்கும் கல்விமான்கள் சம்ஸ்கிருத பாஷை, லாடின் பாஷையை விட விஸ்தாரமான தென்றும், கிரீக் பாஷையைவிட மிக்க நேர்த்தியும் சுத்தமு முடையதென்றும், அவையிரண்டையும் விட மிக்க பூரண மடைந்த தென்றும் கருதுகிறார்கள். சம்ஸ்கிருத பாஷை அத்தகைய அழகு பொருந்தியதாகவும், பூரண முடைய தாகவும் அமைந்திருப்பதற்கு மிக்க பாடுபட்டெழுதிய சாஸ்திரீகமான இலக்கணமின்றி முடியாது. பத்தொன்பதாவது நூற்றாண்டில் இணை யற்ற பாஷா தத்துவ நிபுணராக விருந்த (Philologist) மர்க்ஸ் முல்லர் (ஆக்ஸ்போர்ட் சர்வகலாசாலையில் தலைமை சமஸ்கிருத பண்டிதராயிருந்தவர்) என்பவர்,

 

''இலக்கண நூலை விஸ்தாரமாகும்படி விர்த்தி செய்தவர்கள் ஹிந்துக் களும், கிரேக்கருமே. ஆனால் உலகில் எப்போதும் தோன்றியிராத மகா பெரிய இலக்கண நூலாசிரியராகிய பாணினி என்பவருடைய மகா அற்புதமான இலக்கணத்தோடு ஒத்திட்டுப் பார்க்கும் போது, கிரேக்கர் இலக்கணத்திலடைந்திருக்கும் விர்த்தி உண்மையாகவே அற்பம் என்று கூற வேண்டும்.''

 

இக்காலத்திலுள்ள பாஷாதத்துவ தரங்களைப் பற்றிய நூலுக்குப் பாணினியின் சமஸ்கிருத இலக்கணமே வழிகாட்டியென்பது உண்மை. பத்தொன்பதாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் ஐரோப்பாவிற்குச் சமஸ்கிருத பாஷையிருப்பது தெரிந்தது. ஐரோப்பியக் கல்விமான்கள் சம்ஸ்கிருதத்தைக் கற்றுணர்ந்தபின்பே, ஒரு பாஷையிலுள்ள பத்தாயிரக் கணக்கான வார்த்தைகள் சொல்பத் தொகையான தாதுக்களில் (Roots) அடக்கப்படலாம் என்பதை யுணர்ந்தார்கள். இந்த விஷயம் இந்தியக் கல்விமான்களுக்குக் குறைந்தது மூவாயிர வருடங்களுக்கு முன்பே தெரியும்.

 

இந்தியரின் கல்விச்சிறப்பைப் பற்றிய சிறந்த அறிகுறிகளை யெல்லாம் இங்குக் கூறுவதெனின் சாத்தியமல்ல. உலகிலுள்ள ஐந்தாறு பெரிய காவியங்களைப் பற்றிக் கூற வேண்டுமாயின், இராமாயணம், மஹாபாரதம் என்ற இரண்டையும் இந்தியாவின் காவியங்களாகக் கூறலாம். இவற்றிலடங்கியுள்ள உயர்ந்தவிஷயங்க ளொருபக்கமிருக்க, அளவில் இவை பிரம்மாண்ட மானவையாக விருக்கின்றன. இராமாயணம் ஏழு பாகங்களடங்கி யது, 48, 000 வரிகளை (24000 சுலோகங்களை) யுடையது. மஹாபாரதம் இதனினும் பெரிது; பதினெட்டு பாகங்களை யுடையது; இரண்டு லட்சத்து இருபதினாயிரம் வரிகளையுடையது. கிரேக்க பாஷையில் ஹோமர் (Homer) செய்த சிறந்த பெரிய நூலாகக் கூறப்படும் இலியட் (Ilied) என்பது 16,000 வரிகளையே யுடையது. வெர்கில் (Virgil) என்பவருடைய எனீட் (Aeneid) என்ற நூல் பனிரண்டு பாகங்களடங்கியது; 10,000 வரிகளையுடையது.

 

ஹிந்துக்களின் கணித சாஸ்திரத்தால் உகலமடைந்த பயன் முக்கியமானது. கணிதமும் (Arithmetic), தசாம்ச கணிதமும் (Decimal Number System), பீஜ கணிதமும் (Algebra) இந்தியாவினாலேயே உலகிற்கு உதவப்பட்டது. தசாம்ச கணிதத்தையும், அபாவ எண்களையும் (Purely Negative Numbers), பூஜ்ய (Zero) த்தையும் ஹிந்துக்களே கண்டு பிடித்தவர்கள்.

 

இந்துக்கள் பீஜகணிதத்தை மிக்க உன்னதமான நிலைக்கு விர்த்தி செய்திருந்தார்கள். அராப்பிய நூலாசிரியர்கள் இந்துக்களின் பீஜகணித சாத்திரங்களை எட்டாவது நூற்றாண்டில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். இடலியிலுள்ள பைஸா நகரவாசியாகிய லீனார்டோ (Leonardo) என்பவர் அராப்பியரிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டுபோய் ஐரோப்பாவில் பரவச் செய்தார். அமெரிகாவிலுள்ள இல்லினாய்ஸ் (Illinois University) சர்வகலாசாலையைச் சேர்ந்த ஜாகப் கன்ட்ஸ் என்ற பண்டிதர் (Professor Jacol KIDZ) "இந்துக்கள் பீஜகணிதத்தில் இரண்டாந்தரம் மூன்றாந் தரத்தைச் சேர்ந்த ஒரு அறியாத் தொகையைக் கொண்டு (With one unknown quantity of the second and third degree) சமீகரணங்களை நிரூபித்துக் காட்டும் (Solve Equations). சக்திவாய்ந்தவர்களாக விருந்தார்கள்.

 

கோணசாத்திரம் (Geometry) இந்தியாவில் தான் முதல் முதல் கண்டு பிடிக்கப்பட்டது. நிர்ணயமான சட்டங்களிலிருந்து உற்பத்தியான இச்சாத்திரம் ஹிந்துக்களின் வேதங்களில் கூறப்பட்டபடி எந்திரங்கள், வேதிகைகள் முதலியவையமைப்பதற்கு அவசியமாக விருந்தது. ஆர். வி. டட் (R. C. Dutt) என்ற பண்டிதர் தாம் எழுதிய "பூர்வீக இந்தியாவின் நாகரீக சரித்திரம்' என்ற புகழ்பெற்ற நூலில் ஹிந்துக்கள் கிருஸ்து பிறக்குமுன் எட்டாவது நூற்றாண்டில் (சுமார் 2700 வருடங்கட்கு முன்) கோணசாத்திரத்தைப் பற்றிய முதல் சட்டங்களைக் கண்டுபிடித்து அதை கிரேக்கருக்ஞ உபதேசித்தார்கள்'' என்று கூறுகிறார்.

 

திரிகோண சாத்திரத்தின் பூர்வீக ஆசிரியர்களும் ஹிந்துக்களே என்று நம்புதற்குக் காரணமிருக்கிறது.

 

இந்தியா இன்னும் மற்ற சாத்திரங்களிலும் உலகத்திற்கு உதவி புரிந்திருக்கிறது. சங்கீத சாத்திரத்தை எடுத்துக்கொள்வோம்: சங்கீதம் இந்தியாவில் மிக்க புராதனமானது. ஐரோபா சங்கீதத்தைவிட இந்திய சங்கீதம் மிக்க பழமையானது. இந்தியாவில் சங்கீதம் மூவாயிர வருடங்களுக்கு முன் இருந்து விர்த்தியடைந்து வருகிறது. மேல்நாட்டார் செவிகட்கு இந்தியசங்கீதம் புதிய நாதமாகவே தோன்றும்; ஆனால் பழகப் பழக அதில் விருப்பமதிகரிக்கும். இந்துக்கள் மனவெழுச்சியாலுண்டாகும் நாதத்தை முப்பத்திரண்டு விதங்களாகப் பிரித்திருக்கிறார்கள். அவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒருவரிசை இராகங்களும், இராகினிகளும் ஏற்படுத்தி யிருக்கிறார்கள்.

 

சிற்ப சாத்திரத்தைக் கவனியுங்கள், ஐம்பது வருடத்திற்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பு வரையில் சுரங்கவழி துளைக்கும் தொழில் மேல்நாட்டார்க்குத் தெரியாது. இந்தியருக்குப் பூர்வகாலத்தி லிருந்தே அது தெரியும். எல்லோராவிலுள்ள கல்மலைக்குள் ஒன்றரை மைல் நீளத்திற்குக் குடைந்து செதுக்கப்பட்டிருக்கும் கோயில்கள் இந்துக்களின் அபாரமான சிற்ப சாத்திர சாமார்த்தியத்தைக் காட்டும் பிரம்மாண்டமான அத்தாட்சியாக இன்றும் இருக்கின்றன.

 

இன்னும் அமெரிகாவிலாவது, ஐரோபாவிலாவது அறுபது வருடங்களுக்கு முன் எந்தத் தொழிற் சாலையும் உற்பத்தி செய்ய முடியாத வார்ப்பட இருப்புத் தூண்கள் புராதன இந்தியாவில் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலுள்ள இராஜதேவத் தூண் இதற்குத் தக்க அத்தாட்சியாக இன்னும் நின்று கொண்டிருக்கிறது. இது, இப்போதிருக்கும் ஒரு யுத்தக்கப்பலின் குறுக்குச் சுற்றளவுக்குச் சமமான பருமனுடையதாக விருக்கிறது; இது மட்டுமல்ல. இது ஆயிரத்தறுநூறு (1,000) வருடங்களாக வெயில், மழை, காற்று இவற்றால் தாக்கப்பட்டுக்கொண்டிருப்பினும் துரு பிடிக்காமலே யிருக்கிறது. இதனால் இரும்பைத் துருப்பிடிக்காதபடி செய்யும் சாத்திரம் இந்துக்களுக்குத் தெரிந்திருக்கிறதென்று நிரூபகமாகிறது. இக்கால உலகத்திற்கு இது இன்னும் தெரியாது.

 

வைத்திய சாத்திரத்தில் இந்துக்கள் மிக்க பூர்வீக காலத்திலேயே பிரசித்தமான பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள். வைத்தியத்திற்குத் தாயகமெனச் சாதாரணமாக மதிக்கப்பட்ட ஹிப்போக்ரேட்ஸ் (Hippocrates) என்பவர் ஒளஷத பதார்த்த தத்துவ சாத்திரத்தை (Materia Medica) இந்துக்களிடமிருந்து பெற்றுக்கொண்டாரென்று தற்கால ஆராய்ச்சியால் விளங்குகிறது. நான்காவது நூற்றாண்டில், கிரேக்கர் இந்தியாவிற்கு வந்திருந்த போது கிரேக்க வைத்தியர்கள் நிவர்த்தி செய்யக்கூடாத வியாதிகளை இந்து வைத்தியர்கள் தீர்த்துவிடும் சக்தியுடையவர்களாக இருப்பதை யறிந்து, மகா அலக்ஸாண்டர் தமது பாளையத்தில் இந்து வைத்தியர்களை வைத்துக்கொண்டிருந்தார். இலண்டன்மா நகரிலுள்ள பிரசித்தி பெற்ற டாக்டர் ராயில் (Dr. Royle) என்பவர் எழுதிய "இந்து வைத்தியம்'' என்ற நேர்த்தியான நூலில்'' ஒளஷதங்களின் முதல் முறைகளை இந்துக்களிடமிருந்து அறிந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

 

நாகரீகம் என்பதும் முன்னேற்ற மென்பதும் ஒன்றாய்ச் சம்பந்தப்பட்ட பெயர்களே. இந்துக்கள் நாகரீகத்தில் உயர்ந்த நிலைமையை யடைந்திருந்தார்கள் என்பது பல அத்தாட்சிகளால் வெளியாகின்றது. மானிடதேகத்தின் உள் அங்கங்களின் திட்டமான அமைப்பைப் பற்றிய சாத்திரம் இந்துக்களுக்கு கிருஸ்து பிறக்க அறுநூறு வருடங்களுக்கு முன்பேதெரியும். அங்கச்சேதசிகிச்சையை (Surgery) இந்துக்கள் கிருஸ்து பிறந்தகாலமுதலே கையாடி வருகிறார்கள். உலகில் முதல் முதல் கட்டப்பட்ட வைத்தியசாலைகள் (Hospitals) இந்து தர்மிஷ்டர்களாலும் இந்து சாஸ்திரபண்டிதர்களாலுமே கட்டப்பட்டன. பாரஸெல்ஸஸுக்கு (Paracelsus) முன்பே இந்தியாவில் துத்தநாகம் கண்டுபிடிக்கப்பட்டது. இரத்தவோட்டத்தைப்பற்றிய விஷயங்கள் ஹார்வேயின் (Harve) காலத்திற்கு முன்பே இந்தியருக்குத் தெரிந்திருந்தது.

 

இந்துக்கள் மறுமை விஷயத்தைப்பற்றி மட்டுமே கனவுகண்டு கொண்டிருக்கிறவர்களல்ல. உலக விவகாரங்களின் அபிவிர்த்தி விஷயத்திலும் அவர்கள் நல்ல அனுபவ முடையவர்களே. ஆங்கில துரைத்தனம் இந்தியாவில் தாபிக்கப்படும் காலம் வரையில் இந்தியாவில் துரைத்தன முறைமை யைப்பற்றிய சட்டங்களும், ஸ்தாபனங்களும் இருந்திருக்கின்றன. இந்திய சரித்திரங்களையும் இந்தியரின் இராஜாங்க முறைமையைப் பற்றிய எண்ணங்களையும் சாத்திர யுக்தமாகச் சாக்கிரதையோடு கவனித்துப்பார்த்தால், பிரதிநிதிகளை ஏற்படுத்தி துரைத்தனம் நடத்து முறைகளும், குடியரசு முறமைகளும் இந்துக்கள் அறியாதனவல்ல வென்பது ஐயமறவிளங்கும்.

 

அரசன் ஒருவரும் எதிரில்லாத தன்னரசாயாளும் துரைத்தனமே இந்தியருக்குத் தெரிந்த துரைத்தனம் என்று மேல் நாடுகளில் அடிக்கடி கருதப்படுகிறது. அத்தகைய அபிப்பிராயம் தவறானது. இந்தியாவில் அரசனுடைய அதிகாரம் வரம்பில்லாததல்ல; அவன் அதிகாரத்திற்கு அனேக நீயமங்களுண்டு. அரசன் தன்னரசுக் காரனல்ல; அரசனுடைய செய்கைகள் பிரதான மந்திரிகள் முதலியவர்களின் அங்கீகாரத்திற்கும், தேசாசாரத்திற்கும், சட்டத்திற்கும், பொதுஜன அபிப்பிராயத்திற்கும் கட்டுப்பட்டவைகளே. தன் மந்திரிமார்களின் ஆலோசனையை யங்கீகரிக்காவிட்டால், அந்த அரசன் கொடுங்கோலரசன் என்று குற்றம் சாட்டப்படுவான். கொடுங்கோன்மைக்குத் தண்டனை கடினமானதே. சிம்மாதனத்தினின்று நீக்கப்படுவது கூட அதற்குத் தண்டனையாகும். மநுவே இத்தகைய விதிகளை யேற்படுத்தி யிருக்கிறார்.

 

இராஜரீக நிபுணரும், ஞானியுமாகிய சுக்ரன், அரசனுடைய பதவி சிரேஷ்டமானதேயென்று ஒப்பப் பிரியமுடையவரே. ஆனால், அவர் ஒரு மனிதனுக்கும், இன்னொரு மனிதனுக்கும் பிரதானமான வித்தியாசம் இல்லையென்பதை மனதில் உறுத்தும்படி கூறுகிறார். மனிதன் என்கிற விஷயத்தில் அரசனிடம் மட்டும் விசேஷ பரிசுத்தத்வம் ஒன்றுமில்லை. அவன் மூலாதாரமான விஷயத்தில் மற்ற மனிதரைவிட மேலானவனுமல்ல, குறைந்தவனுமல்ல. "அரசனுடைய இரத்தத்தில் ஆரோகணித்துக் கொண்டிருக்கும் நாய்கூட அரசனைப்போல் காணவில்லையோ? கவிவாணரால் அரசன் ஒரு நாய்க்குச் சமதையானவனென்று கருதப்படுவது நியாயந்தானே?" என்று அவர் வினவுகிறார்.

 

ஒரு உத்தியோகஸ்தன் நூறுபேரால் குற்றம் சாட்டப்பட்டால் அவனை அரசன் உத்தியோகத்திலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று சுக்கிரன் கூறுகிறார். அக்கிரமமான துரைத்தன உத்தியோகஸ்தரிடமிருந்து ஜனங்களின் நன்மைகளையும் சுதந்தரங்களையும் காப்பாற்ற இந்துக்கள் அக்காலத்திலேயே எத்தகைய ஆயுதங்களை ஏற்படுத்தி யிருக்கிறார்கள் என்பது இதனால் நன்குவிளங்குவது குறிப்பிடத்தக்கது.

 

இராஜாங்க முறைமையைப் பற்றிய நூல்களில் இந்து இராஜ தந்திரிகள் இராஜாங்க மாறுதலைப்பற்றிய கோட்பாடுகளைக் கூடப் போதித்திருக்கிறார்கள். ஒரு அரசன் நெறி தவறி நடப்பானாயின் அவனை நீக்கிவிட்டு வேறு அரசனை ஏற்படுத்தவேண்டியது கிரமமான நீதியேயாகும் என்று விதித்திருக்கிறார்கள். அரசன் சட்டத்திற்கு மீறியவனல்லவென்று மநு முதலிய சட்ட ஸ்தாபகர்கள் அய்யமறக் கூறியிருக்கிறார்கள். ஒரு அரசன் சட்டத்திற்கும், நீதிக்கும் மீறி நடந்து குடிகளைக் கொடுமையாக நடத்துவானாயின், அவன் குடிகள் அவனைப் பட்டத்தினின்றும் விலக்கிவிட, வேண்டும் என்று விதித்திருக்கிறார்கள்.

 

இராஜாங்க முறைமையைப்பற்றிய இப்போதனைகள் ஏட்டில் மட்டும் எழுதப்பட்டவைகளாக இருந்துவிடவில்லை. அவை அனுபவத்திலேயே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அபாத்திரரான அரசர்களும், உத்தியோகஸ்தர்களும் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டார்க ளென்பதற்குப் பல திருட்டாந்தங்கள் இந்து சரித்திரத்தில் காணலாம். "பகுஜன வாக்கியம் கர்த்தவ்வியம்'' என்பது இந்துக்களின் சித்தாந்தம்.

 

பிரஜாபத்திய துரைத்தன முறைமை கூட இந்தியாவில் நன்கறியப்பட்டே யிருந்தது. மிக்க பூர்வீக காலத்திலேயே பிரஜாபத்திய நாடுகள் இந்தியாவில் உண்டாகியிருந்தன. கிருஸ்து பிறக்க நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இத்தகைய நாடுகளில் சில, பூரணமான, அல்லது மாறுதலடைந்த சுயா தீனத்தோடு இருந்து கொண்டிருந்தன வென்று இந்து தேச சரித்திரக்காரராகிய ஸ்ரீமான் B. K. ஸர்கார் என்பவர் நிரூபித்திருக்கிறார். இவற்றைப்பற்றி பௌத்தமத, ஜயின மத சம்பந்தமான சாசனங்களில் கூறப்பட்டிருப்பதோடு, இந்தியாவைப் பற்றி வரையப்பட்ட கிரீக் லாட்டின் நூல்களிலும் சம்ஸ்கிருத காவியங்களிலும், இராஜாங்க முறைமையைப்பற்றிய நூல்களிலும் கூறப்பட்டிருக்கின்றன. கி. மு. 326 - ம் ஆண்டு மகா அலக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது அவர் பாஞ்சாலம், ஹிந்து இவ்விடங்களிலிருந்த பிரஜாபத்திய சைனியங்களோடு போராட நேர்ந்தது. இந்த பிரஜாபத்திய நாடுகள் என்னவாயின வென்று கேட்கலாகும். அதற்கு விடையளிப்பது கஷ்டமல்ல. மாஸிடோனிய இராஜ்ஜியத்தால் கிரேக்க பிரஜாபத்திய நாடுகள் எப்படி விழுங்கப்பட்டனவோ அவ்வாறே இந்து பிரஜாபத்தியங்கள் பெரிய இந்திய இராஜாங்கத்தால் விழுங்கப்பட்டன.

 

முடிவில், நம் தாய் நாடு உலகத்திற்கு எவ்வளவோ பேருதவிகளைச் செய்திருக்கிறது.

 

பூர்வீகமாகவே எல்லா விஷயங்களிலும் மேன்மை பெற்றிருந்த நம் தாய் நாடு இப்போது இத்தகைய சீர்கேடடைந்திருக்கிறது என்பதை மனதில் வைத்து நாம் ஒவ்வொருவரும் நம் தாய் நாடு பூர்வீக உன்னத நிலைமையையடைய வேண்டியதற்கு நம்மால் கூடியவரையில் உழைக்கும்படி எல்லாம் வல்ல பரம்பொருள் நமக்குப் பூரண அருள் புரியப் பிரார்த் திக்கிறோம்.


 ஓர் இந்தியன்.

 

ஆனந்த போதினி – 1920, 1921 ௵

அக்டோபர், டிசம்பர், பிப்ரவரி ௴

 

   

 

No comments:

Post a Comment