Thursday, September 3, 2020

 

நம் நாட்டார் செய்கை

 

நம் தாய்நாட்டுச் சகோதர சகோதரிகளே! மானிடராகப் பிறந்த நாம் செய்யுங்காரியங்க ளனைத்தும் செய்யவேண்டிய வொ ழுங்கோடும் அளவோடுமே செய்யப்பட வேண்டும். அப்படிக்கின் றேல் நம்முயற்சிகள் கைகூடாமற் போவதோடு குளிக்கப் போய்ச் சேறு பூசிக்கொண்ட கதைபோல், நமக்கு இடையூறும் அவமான மும் நேர்வது உண்மை. முதலாவது எல்லாருக்கும் உணவு அவசி யம். அந்த உணவில் கூட ஒருவன் தன் வருமானத்திற்குத் தக்க அளவாகவே புசிக்க வேண்டு மல்லவோ!

 

மாதம் நூறு ரூபாய் வருமான முள்ளவன் பகலில் இரண்டு வேளை கூழ் அருந்தி இரவில் நொய்க்கஞ்சி பருகுவானாயின் அவனைப் புத்திமான், சிக்கனவான் என்று யாரேனும் கருதுவரோ. இல்லை; சுத்த அறிவற்ற உலோபியென்றே நிந்திப்பார்கள்.

 

அப்படிக்கின்றி, மாதம் பத்தேரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் தினம் ஐந்தாறுவகைப் பதார்த்தங்களோடும் பலகாரங்களோடும் புசிக்க முயன்று கடனாளியானால், அவனையேனும் "மிக்க உதாரத்வ முடையவன், அறிவாளி'' என்று புகழ்வரோ? ஒருபோது மில்லை. சுத்தமூடன், அறிவிலியென்றே நிந்திப்பர்.

 

அந்தோ! நமது நாட்டாரிற் பெரும்பாலார் எந்த விஷயத்தில் பிரவேசித்தாலும் அதில் ஒழுங்கீனமாகவும், அளவுகடந்த விதமாகவுமே நடந்து கொண்டு காரியசித்தி பெறாது விழிக்கும் பழக்கமுடையவர்களாகவே இருக்கிறார்கள் என்பது மிக்க விசனிக்கத் தக்க விடயமாக விருக்கிறது.

 

நம்மவர்கள் தூங்கினால் ஒரேமூச்சாக உறங்கிக் கிடந்து பிறகு ''அப்பா! உறக்கம் வேண்டாம்; இனியதனால் கேடுண்டாகும்; விழித்துக்கொண்டு எச்சரிக்கையாயிரு " என்றால், விழித்து உட்கார்ந்து சோம்பலைப் போக்கிக்கொண்டு எச்சரிக்கையோடு கவனித்துக் காரியங்களைச் செய்யாமல், துள்ளி எழுந்து தலைகீழாகக் குதித்து கை கால்களை யுடைத்துக்கொள்வது போன்ற நடக்கையுடையவர்கள்ளாக விருக்கிறார்கள்.

 

இப்போது சம்பவிக்கும் பெரும்பாலான வேலை நிறுத்தங்களைக் கவனித்துப் பாருங்கள். யார் எதைச் செய்வதாயினும் தேசநன்மை, அதாவது, பொதுசன நலத்திற்கு இடையூறுண்டாக்கத் தக்க காரியத்தைச் செய்யலாகாது. அது தேசத்திற்கு நன்மையளிக்கும் ஒற்றுமையான வேலையாகாது. திருட்டாந்தமாக டிராம் வண்டி வேலையாட்களின் வேலை நிறுத்தத்தைக் கவனித்துப் பாருங்கள். அதனால் அவர்கள் தங்கள் சம்பளத்தைக் கொஞ்சம் உயர்த்திக் கொண்டார்கள் என்பதுண்மையே. ஆனால் அப்பணம் எதிலிருந்து அவர்களுக்குக் கிடைக்கிறது? அவர்களின் முதலாளி அடைந்து வரும் அதிக இலாபத்திலிருந்தா? இல்லை. அதற்கு வேறே வரிவிதிக்கப்பட்டது போல் பொது ஜனங்கள் கொடுத்து வந்த டிராம் கூலி அதிக மாக்கப்பட்டது. இதனால் முதலாளிகளின் இலாபம் இன்னும் அதிகமாயிற்றே யொழிய அதிலிருந்து இவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படவில்லை.

நம்மவர் முற்காலத்தில் எப்படியோ இருந்தாலும் பிற்காலத்தில் பத்துப்பேர் ஒன்று சேர்ந்து ஆலோசித்து ஒரு பொதுநல விஷயத்தைச் செய்து முடிக்கும் வழக்கமில்லாதவர்களாக மாறிவிட்டார்கள். இப்போது சமீபகாலத்தில் எங்கும் சங்கங்களையும், சபைகளையும் தாபிக்கும் உணர்ச்சி தீவிரமாகப் பரவத்தொடங்கியது. அவற்றிற்குப் பெயர்களும் உன்னதமாக அமைக்கப்படுகின்றன.

 

ஆனால் சாதிபேதம், மதபேதம், கட்சி பேதம் இவைமட்டும் ஒழிக்கப்படவில்லை. பத்துப்பேர் கூடி ஒரு காரியத்தைச் செய்ய ஆலோசிக்கும் போது, அவர்கள் தங்களுக்குள் அறிவும், அனுபோகமும், பாரபட்சமின்மையும், விவகாரத்தில் சாதிமத கட்சி வித்தியாசம் கருதாத குணமுமுடைய ஒருவரைத் தங்கள் அக்கிராசனாதிபதியாக நியமித்துக் கொண்டு ஒழுங்காய் விவகாரத்தை நடத்த வேண்டும். ஒவ்வொருவரும் தத்தமது சுயநலத்தைப் பொது நலத்தின் முன் இலட்சியம் செய்யலாகாது. "கௌரவஸ்தானத்தை யெவன் பெற்றாலும் பெறட்டும், நமது பொதுவிஷயம் ஈடேறவேண்டுவதே நமது நோக்கம்" என்று கருதவேண்டும்.

 

அந்தோ! நம்மவர் தாபித்திருக்கும் சங்கங்களில் எல்லாம் மேற்கண்ட விஷயங்களில் கொஞ்சமேனும் தவறாது கவனிக்கப் படுகின்றனவா வென்பதை இதைவாசிக்கும் அறிவாளிகளே அனுபவமாயறிந்து கொள்ளக் கோருகிறோம்.  


     பெரும்பாலான சங்கங்களிலும் வாசகசாலைகளிலும் அவற்றில் சேர்ந்திருக்கும் அவயவிகள் தங்கள் வரையில் சௌகரியம் பெறவும் பலனடையவும் கருதுகிறார்களேயன்றி, தாய்நாட்டின் க்ஷேமத்திற்கு அவசிய காரியமாகிய பாமரசனங்களுக்குக் கல்வியறிவையுண்டாக்கும் விஷயத்தில் கவனம் வைக்கிறார்களில்லை. பத்துப்பேர் ஒன்று கூடித் தலைக்கு ஒருரூபா பிரிவு போட்டுக் கொண்டு கேளிக்கையாகத் தோட்டவிருந்து (பிக்நிக்) நடத்துவது போன்றதேயாகும் இவர்கள் செய்கையும். அதில் சேர்ந்தவர்கள் மட்டும் நல்ல அறுசுவையுண்டி யுண்கிறார்களேயன்றி இரண்டு ஏழைகளுக்குக் கஞ்சியேனுங் கிடைப்பதில்லை.

 

இவர்களுடைய கட்சி பேதம் மதவிஷயத்திலும் நுழைந்திருக்கிறது. சென்னைக்கருகிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில் என்ற ஸ்டேஷனிலிருந்து சுமார் ஒன்றேகால் மைல் தூரத்தில் திருக்கச்சூர் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம் ஒன்றிருக்கிறது. அவ்வூர் சிறு கிராமமாயினும் அதில் கட்சி இரண்டாகிவிட்டது. இந்த விபரீதத்தால் அக்கோயில் திருப்பணியே தடைப்பட்டிருக்கிறது. இவ்வருடம் ஒரு கட்சி பிரம்மோத்ஸவம் நடைபெறவேண்டுமென்றது. இன்னொரு கட்சி நடக்கலாகாதென்றது. கடைசியில் எப்படியோ தெய்வ சங்கல்பத்தால் உத்ஸவம் நடந்தேறிவிட்டது அடுத்த வருடம் இது நடப்பது சந்தேகந்தான்.

 

திருநெல்வேலி பேட்டையிலுள்ள சிவஸ்தலத்தில், இரண்டு தர்மகர்த்தாக்களாகிய கனவான்களுக்குள் நேர்ந்த சச்சரவின் காரணமாக, சில நாட்களுக்கு முன் சுவாமியின் பூசையே நிறுத்தப்பட்டதாக ஒரு சந்தாதார் நமக்கு அறிவித்துள்ளார்.

 

அந்தோ! நமக்கு எல்லாவற்றையும்விட ஆன்மார்த்தவிஷயமே உயிரினும் சிறந்தது. அப்படிப்பட்ட நாம் ஈ தடைப்படக்கூடிய அத்தகைய கட்சி பேதம் பாராட்டுவதாயின், நம் தாய் நாட்டின் க்ஷேமத்திற்காக எந்தயுகத்தில் தான் இத்தகைய அறிவீனச் செய்கைகளை விட்டு ஒன்று சேர்ந்து ஒரு மனதாக உழைக்கப்போகிறோம். சிறு பிள்ளைகளுமல்லவோ நால்வர் கூடியே ஒரு விளையாட்டு நடக்கவேண்டியதாயின், அதில் விரோதமுடையவர்கள் உடனே அதை நீக்கி அந்தட்சணமே கூட்டாளி போட்டுக் கொள்கிறார்கள்.

 

ஐரோப்பா மகாயுத்தம் நேர்ந்தபோது இங்கிலாந்தில் "இப்போது நாம் யுத்தத்தில் தலையிடவே கூடாது'' என்ற கட்சியும் இருந்தது. ஆயினும், அவர்கள் அதைப்பற்றி எவ்வளவோ வாதித்தும் கடைசியில் இராஜாங்கம் நாம் தலையிட வேண்டியது அவசியமே யென்று தீர்மானித்து விட்டபோது, அக்கட்சியைச் சேர்ந்தவர்களும் மற்ற கட்சியைப்போலவே தங்கள் கடமையைச் செலுத்தவேண்டி, பொருளுதவியும் தேகவு தவியும் செய்து யுத்தமுனையில் தங்கள் இரத்தத்தைச் சிந்தித் தாய்நாட்டின் க்ஷேமத்தையும் கௌரவத்தையும் நிலை நாட்டினார்கள்.

 

நம்மவர்களாயின் பெரும்பாலோர் "நாம் வேண்டாமென்ற போது நமது சொல்லைத் தள்ளிவிட்டு யுத்தத்திற்குப் போகிறார்கள். சட்! நாம் அதில் பிரவேசிக்கவே கூடாது. அவர்கள் போய் தோற்று அவமானப்பட்டு வந்தால் தான் புத்தி வரும். அப்போது நாம் 'எங்கள் பேச்சைச் சட்டை செய்யாமற் போனீர்களே. பார்த்தீர்களா உங்கள் கதியை' என்று கேட்கலாம். சண்டை வேண்டுமென்றவர்கள் உதவி செய்யட்டும், நமக்கு அவசியமில்லை" என்று முரண்பட்டு இன்னும் அதற்குப் பிரதிகூலமான காரியங்களையும் செய்வார்கள்.

 

நண்பர்களே! நாம் இவ்வாறு கூறுவதற்காக நம்மேற் கோபங்கொள்ள மாட்டீர்க ளென்று நம்புகிறோம். உண்மையில் நாம் மேல் நாட்டாரின் மேற்கண்ட குணத்தையும், நடக்கையையும் பின்பற்றி நடக்கிறோமா, அதற்காக முயற்சியேனும் எடுத்துக் கொள்கிறோமா வென்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அதோடு நாம் எத்தகைய விஷயங்களில் அவர்களைப் பின்பற்றுகிறோம் என்று பார்ப்போம்  

 

''பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையினானே"

 

என்பது நன்னூல் ஈற்றில் கூறப்பட்ட ஒரு புறநடைச்சூத்திரமாகும். அது பாஷையில் வார்த்தைகள் கழிக்கப்படுவது சேர்க்கப்படுவது முதலியவற்றைப்பற்றிக் கூறவந்த சூத்திரமாகும். அதைத் தவறாக இலௌகீக ஆசார விஷயங்களுக்காக உபயோகித்துக் கொள்வதாயினும், "காலத்திற்குத் தக்க விதமாக ஆசார ஒழுக்கங்களில் பழையவற்றை விட்டு விடுவதும், புதியவற்றைக் கைக்கொள்வதும் குற்றமல்ல'' என்பதே இதன் பொருளாகும்.

 

நம்மவர்கள் இதை யாதாரமாக வைத்துக்கொண்டு கண்மூடித்தனமாக எதிலும் அன்னியரைப் பின்பற்றுவதில் மிக்க சுறு சுறுப்புடையவர்களாக விருக்கிறார்கள். நமது தேச நிலைமைக்கும், மதத்திற்கும் ஒத்தனவாய் நம் முன்னோர் ஏற்படுத்தியுள்ள ஆசாரங்கள், விதிகள் முதலியவற்றை யலட்சியம் செய்கிறார்கள். இது நமக்குத் தகும் தகாது, நன்மை பயக்கும் தீமை பயக்கும் என்பவற்றைக் கருதாமலே அன்னியர் ஆசாரங்களைப் பின்பற்றுவதே நாகரீகச் சீர்திருத்தம் என்று மயங்கியிருக்கிறார்கள். அன்னியர் ஆசாரங்களில் கால மாறுதலின்படி எதை நாம் கைக்கொள்ள வேண்டுமோ அதைக் கைக்கொள்ளுகிறார்களில்லை.

 

மேல்நாட்டாரிடமுள்ள ஒற்றுமை, தேசபக்தி, மதப்பற்று, தேசப்பற்று, தாய் நாட்டிற்காகப் பிராணனையும் தத்தம் செய்யும்  தீரம், மதாபிமானம், தேசாபிமானம், ஜாதியபிமானம், யுத்தப்பிரியம், ஆபத்துகாலத்தில் எந்தச்சாதியார் எம்மதத்தினராயினும் சரி, அவர்களுக்கு உதவி செய்வது, எத்தொழிலையும் காலக் கிரமப்படி ஒழுங்காயும், பூரணமாகவும் செய்தல், ஒன்றைச் செய்யுமுன் ஆலோசனை செய்தல், தாய்நாட்டின் க்ஷேமத்தைப் பற்றிய பொது விஷயத்திற்காக வேலை செய்யும்போது, ஒருவர் மீதொருவருக் குள்ள விரோதத்தையேனும் கட்சி பேதத்தையேனும் கவனியாது, சுயநலங் கருதாது ஒற்றுமையாகச் செய்தல், சேவகா விர்த்தியினும் வர்த்தகம், கைத்தொழில் முதலிய சுயாதீனத் தொழில்களையே கௌரவமாகக் கருதல், சுயாதீனப் பிரியம், ஆகிய இத்தகைய குணங்கள் நடக்கைகளை நம்மவர்கள் பின் பற்றுகிறார்களா வென்று பார்த்தால், அந்தோ ! அவற்றைக் கவனிப்பதாகவே தோன்ற வில்லை.

 

மற்றபடி நம்மவர் என்ன விஷயங்களைப் பின்பற்று கிறார்கள்? பெரும்பாலும் நமது இலௌகீக மதாசாரங்களுக்கு விரோதமான வைகளிலும் நமக்கு அகௌரவத்தையும் கெடுதியையும் உண்டாக் கக்கூடியவைகளிலும் அவர்களைப் பின்பற்றுகிறார்கள். இவற்றைக் கண்டு அவர்கள் நம்மை ஏளனம் செய்கிறார்கள். அன்னியபாஷையைக் கற்பதாலேயே அந்த ஆசாரங்களைப் பின்பற்றுதலே கௌரவம் என மதிக்கிறார்கள். ஒருவர் ஒரு சஞ்சிகையில்'' நம்மவர் கலியாணத்தில் வீணாய் அதிகப் பணத்தைச் செலவு செய்கிறார்கள். மூன்று நாட்கள் கலியாணம் அனாவசியம். உறவின் முறையார் பத்துப்பேர் கூடிப் பெண்ணையும் பிள்ளையையும் வாழ்த்தி மங்கிலிய தாரணம் செய்துவிட்டு இருவர்க்கும் புத்திமதி கூறிவிட்டால் போதும்" என்று வரைகிறார். ஒருவர் மேல் நாட்டாரைப்போல் பெண் தனக்குப் பிரியப்பட்ட புருடனை மணக்கும்படி செய்வதே தகுதி'' என்கிறார். இன்னும் சில விஷயங்களில் நம்மவர் வெளிவிவகாரங்களில் மட்டும் மேல் நாட்டாரைப் போல் வேடந்தரித்துக் கொள்கிறார்கள். காரியத்தில் மட்டும் அவர்களைப்போல் நடப்பதில்லை.

 

தாம் கெடுவதன்றித் தம்மக்களையும் சிறுவயதிலேயே அத்துறைகளில் பழக்கி வைக்கிறார்கள். கேட்டால் " த்செ - சின்ன பசகளுக்குக் கூடவா நிபந்தனை, பிறகு தாமே தெரிந்து கொள்வார்கள்'' என்கிறார்கள். அந்தோ! இவர்கள்'' தொட்டிற்பழக்கம் சுடுகாடுவரையில்'' என்பதை யறியார்கள் போலும். பழயனகழிதல், என்பதனானே பூர்வ ஆசாரங்களனைத்தும் விட்டு விடவேண்டு மென்று கருதுகிறார்கள். அனாதிகாலம் முதல் அரிசி கேழ்வரகு முதலியவற்றைப் புசித்துவருகிறோம். இனி புல் அல்லது வைக்கோல் புசிக்கப்பழகவேண்டு மென்பர்போலும்.

 

இவற்றிற்கெல்லாம் காரணம் நம்மவர்க்கு நம் தாய்ப்பாஷையிற் பக்திசிரத்தை குன்றியிருப்பதும், நம் மக்களுக்கு மதாசாரக் கல்வியே புகட்டப்படாததுமாகும். இதனால் இவர்கள் நம் முன்னோர் ஆசார ஒழுக்கங்களின் சிறப்பையும், தாய்ப்பாஷையின் தெய்வீக மேன்மையையும் உணராராகி அன்னிய ஆசாரங்களைச் சிறந்ததென மயங்கி, முடிவில் ஹிந்துக்கள் என்ற ஒருஜாதியும் ஹிந்துமத மென்பதும் அடியோடு மறைந்து விடத்தக்க பாதையில் செல்கிறார்கள். சீக்கிரம் நம்மவர் சிரத்தை யெடுத்துக்கொண்டு தம்மக்களை நன்னெறியிற் பழக்கினாலன்றி, நம் தாய்நாட்டின் க்ஷேமத்திற்கு நம்நாட்டு அறிவாளிகள் படும் பெரும்பாடெல்லாம் மணல் மேட்டிற் பெய்த பால் போலாகும். எங்கணு நிறைந்த தண்ணருட்செல்வனாம் பசுபதியே நம்மவர்க்கு நல்வழிகாட்டப் பிரார்த்திக்கிறோம்.


                              ஓம் தத்ஸத்.

 

ஆனந்த போதினி – 1920 ௵ - நவம்பர் ௴

 

 

   

 

No comments:

Post a Comment