Thursday, September 3, 2020

 

நம் நாட்டுத் தருமம்

 

 தருமம் அல்லது அறம் முப்பத்திரண்டு வகைப்படும் என்று நமது நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. அது எத்தனை வகையாக விருந்தாலும் தருமம் என்பதற்கு ஜீவகாருண்யமே மூலகாரணமாயிருக்கிறது. பிறர் துயரம் நீங்கி அவர்கள் இன்புறுமாறு உதவி புரிவதெல்லாம் தருமமே. அதாவது பசியென்றவனுக்கன்ன மளித்தல், ஆடையில்லாதவனுக்கு ஆடையளித்தல் முதலியன. ஏககா லத்தில் பல சீவர்களின் அசௌகரியத்தையோ குறையையோ நீக்கக்கூடிய ஒரு காரியத்தைச் செய்தல் இன்னும் விசேஷத் தருமமாகும். அவை ஆவுரிஞ்சுதறி நடல், சுமைதாங்கி கட்டல், சத்திரம், தடாகம், சோலை, தண்ணீர்ப்பந்தல் முதலியவை ஏற் படுத்தலாதியனவாம்.

 

பாரத பூமியாகிய நம் புண்ணிய பூமி தருமத்தில் ஒப்புயர் வற்றதென்பது என்றும் பிரத்தியட்சம். பூர்வகாலத்தில் இருப்புப்பாதை யில்லாதபோது ஜனங்கள் நெடுநாட்கள் பிரயாணம் செய்து இராக்காலங்களில் வழியில் தங்கித்தங்கி காசி, இராமேச்சுரம் முதலிய தூர ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்லவேண்டும். அக்காலங்களிலிருந்த அரசர்கள், செல்வச் சீமான்கள் முதலியவர்கள் தெற்கில் இராமேச்சுரம் முதல் வடக்கே காசி, பத்திரிநாதம் வரையில் வழிகளில் யாத்திரிகர் தங்குவதற்காக ஆங்காங்கு சாத்திரங்கள் கட்டியும் குளம் கிணறுகள் வெட்டியும் பெருந்தருமங்களைச் செய்திருக்கிறார்கள். அக்காலத்திற்கு அத்தகைய தருமகைங்கரியங்கள் அவசியமாகவிருந்தன. அக்காலத்தில் நம் முன்னோர் செய்த தரும் காரியங்கள் பிரமிக்கத்தக்கவை. பலவிதமான எந்திரங்களைக் கொண்டு ஆச்சரியமான வேலைகளைச் செய்யும் இக்காலத்து மேல் நாட்டார் கூட நம் நாட்டுப் புராதன வேலைகளைக்கண்டு "இவற்றை யெப்படித்தான் செய்தார்களோ?'' என்று பிரமித்து நோக்குகிறார்கள். நம் நாட்டைப்போல் வேறெந்த நாடுகளிலேனும் இத்தகைய தருமம் நடந்ததாகவாவது நடப்பதாகவாவது தெரியவில்லை.

 

இப்போதும் நமது நாட்டில் அத்தருமம், அவ்வளவு அதிகமாக இல்லாவிட்டாலும், நடந்து கொண்டு தானிருக்கிறது. முற்காலத்தில் நம் முன்னோர்கள் நிர்மாணித்த பிரம்மாண்டமான ஆலயங்களைப்போல் இக்காலத்தில் நிர்மாணிப்பதெனின் சுலபமான காரியமல்ல. அத்தகைய ஆலயங்கள் அனேகம் நம் நாட்டிலிருக்கின்றன. இப்போது அவற்றில் ஆகவேண்டிய பணிகளைச் சரிவரச் செய்துகொண்டு வந்தால் அதுவே விசேஷம். அத்தகைய புராதன ஆலயங்களில் அனேகம் இப்போது காடு மூடிக்கொண்டு மறைந்து கிடக்கின்றன. திருட்டாந்தமாக வட ஆர்க்காடு ஜில்லாவில் ஜாகீர் ஆரணிக்கு மேற்கில் சுமார் பத்து மைல் தூரத்தில் கமண்டல நதி தீரத்தில் படவேடு என்ற ஸ்தலமொன்றிருக்கிறது. அது இரேணுகாம்பாள் (பரசுராமர் தாயார் -ஜம தக்னி முனிவர் பத்தினி) க்ஷேத்திரம் - வருடமொருமுறை ஆடி வெள்ளிக்கிழமை தோறும் அங்கு திருவிழா நடக்கிறது. அச்சிறு கிராமமே ஒரு அடவியிலிருக்கிறது. இரேணுகாம்பாள் ஆலயத்திற்கு மேற்கில் சுமார் அரைக்கால் மைல் தூரத்தில் இராமசுவாமி கோயில் ஒன்றிருக்கிறது. அக்கோயில் சுற்றிலுமுள்ள மண்ணைத் தோண்டி வெளிக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. நந்தன் என்ற ஒரு அரசன் முற்காலத்தில் அங்கு அரசாண்டு வந்ததாகவும், ஒரு சாபத்தால் அந்த இடத்தில் மண்மாரி பெய்ததால் அது அழிந்து போனதாகவும் கூறப்படுகிறது. அக்காட்டில் இன்னும் அனேகம் கோயில்களும், மண்டபங்களும் இருக்கின்றன. ஜில்லா கலெக்டர் உத்தரவுபெற்று யாரேனும் வேண்டிய ஒரு மண்டபத்தைப் பிரித்து வந்து வேறிடத்தில் கட்டிக்கொள்ளலாம். அங்குள்ள மண்டபங்களில் உள்ள ஒரு தூணைப்போல் இக்காலத்தில் செய்ய வேண்டுமாயின் கூலி மட்டும் நூற்றுக்கணக்காகும்.

 

இக்காலத்தில் விசேஷ தருமங்களைச் செய்வோர் நாட்டுக்கோட்டை வைசிய குலத்தவர்களே. இவர்களில் ஒவ்வொரு வரும் தருமசிந்தனை யுடையவர்கள். தங்கள் வர்த்தகத்தால் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பாகத்தைத் தருமத்திற்கென்று சேமம் செய்கிறார்கள். இதனால் இவர்கள் ஏககாலத்தில் இலக்ஷக்கணக்காக தருமத்தில் செலவழிக்கிறார்கள். இவர்கள் தருமத்தில் பெரும்பாகம் சிவாலயங்களைப் புதுப்பித்தல், சிவகைங்கரியங்களை விமரிசையாகவும் விசேஷமாகவும் செய்தல், அழகிய பிரம்மாண்டமான சத்திரங்களைக் கட்டி சிவ ஸ்தலங்களில் உத்ஸவாதிகள் நடக்கும் காலங்களில் ஏராளமான அன்னதானம் செய்தல் முதலியவைகளுக்கே செய்கிறார்கள்.

 

ஆனால் நம் நாட்டில் இப்போது தத்காலத்திற்கு எத்தகைய தருமத்தைச் செய்யவேண்டும் என்பதை அனேகர் கருதுவதில்லையென்பதே நம் நாட்டாரது தருமகைங்கரியத்திலுள்ள ஒரு குறையாகவிருக்கிறது. சிலர் பிரார்த்தனைகள் செய்துகொள்கையில் தங்கள் கோரிக்கை நிறைவேறினால் சுவாமிக்கு உண்டியில் நூறுரூபா போடுவதாகவோ, அபிஷேக ஆராதனை செய்துவைப்பதாகவோ, குளத்தில் வெல்லக்கட்டி கரைப்பதாகவோ கூறிக்கொள்கிறார்கள். இவர்கள் பணம் முதலியவை ஈசுவரனுக்கு என்னத்திற்கு வேண்டும் என்பதை யிவர்கள் சிந்திப்பதில்லை. மேலும் இவர்கள் செய்கை நம் பெற்றோர் தம் குழந்தைக்கு ஒரு தின்பண்டம் வாங்கி வந்தளித்தால், அக்குழந்தை அதிற் கொஞ்சம் எடுத்துப் பெற்றோர்க்களிப்பதுபோ லிருக்கிறது. இவர்கள் ஏதோ ஒரு நலத்தைக் கோரித் தமது பிரார்த்தனைகளைச் செய்து கொள்கிறார்கள்.

 

அதிகப் பணம் செலவழித்து நிலையான ஒரு பெரிய தரும கைங்கரியத்தைச் செய்வோர் காலத்திற்குத் தக்க தருமத்தைச் செய்தால் நலமாக விருக்குமன்றோ? நம்முன்னோர் கட்டியுள்ள ஆலயங்களில் சரியாய்ப் பூசையாதிகள் நடந்துவருகின்றனவா, அதன் வருமானம் சரியான வழியில் செலவழிக்கப்படுகிறதா என்பதைக் கவனித்தால் போதுமானதாக விருக்கப் புதிதாகக் கோயில்களைக் கட்டுவது வீண் வேலை யன்றோ. அனேக மடங்களில் வரும் வருமானங்கள் கூட காலத்திற்கு அவசியமான வழியில் செலவழிக்கப்படாமல், குளத்தின் மேல் குளம் வெட்டுவது, மடக்கட்டிடத்தைப் பெருக்கிக்கட்டுவது முதலிய வழிகளில் செலவழிக்கப்படுகின்றன. மேலே கூறப்பட்ட தருமங்களனைத்தும் செய்யத்தகாதன வென்று நாம் குற்றமாகக் கூறுவதாய்க் கருதலாகாது. ஆனால் தத்காலத்தில் நமது தேசம் மதம் இவற்றின் க்ஷேமத்திற்காக அவசியமாகச் செய்யவேண்டிய கைங்கரியத்தை யடியோடு கவனியாமல் விட்டு விட்டு அவசியமல்லாதனவும், அப்போதே வீண் விரையமாய் மறைந்து விடக்கூடியனவுமாகிய வழிகளில் பணத்தை விரையம் செய்வதில் யாது பயன்? அன்ன தானம் மிகச் சிறந்ததானமே. ஆனால் கொழுத்த சோம்பேறிகளுக்கு அத்தானத்தைச் செய்வது தகுதியோ? அது போன்றே தருமமும் காலத்திற்குத் தக்கதைச் செய்வதே யுசிதம்.

நமது தருமங்களெல்லாம் மதத்தைப் பொருந்தியவைகளே. கோயில்கள், பூசைகள், உற்சவாதிகள்யாவும் மதத்தின் க்ஷேமத்திற்கே. நாம் கடவுளை மறவாது அடிக்கடி துதிப்பதற்கும் அவரிடம் பக்தி செலுத்தி அவர் அருள் பெறுவதற்குமே இவையாவும் ஏற்படுத்தப்பட்டன. அப்படி யிருக்க நமது மதம் பா வச்செய்ய நாம் முயலாவிடினும், நமது மதத்தவரில் பலர் அன்னிய மதத்தவர்களால் மயக்கப்பட்டுத் தங்கள் முன்னோரது உத்தம மதத்தைக் கைவிட்டுப் புறச்சமயங்களில் விழுந்தழிகிறதைத் தடுக்கவேனும் நாம் முயலவேண்டாமோ? இது விஷயத்தில் பணம் விரையம் செய்வது சிறந்த தருமமும், இச்சமயத்திற்கு அத்தியாவசியமான தருமமும் ஆகும் என்பதை நம்மவர் கருதவேண்டு மன்றோ? இந்த விஷயம் பெரிய தருமங்களைச் செய்யும் செல்வச் சீமான்களின் மனதில் உறுத்தாதிருப்பது மிக்க விசனிக் கத்தக்கதேயாகும்.

 

மேல் நாட்டார் அங்கிருந்து திரண்ட செல்வத்தைச் சேகரம் செய்துகொண்டு பல்லாயிரம் மைல்கள் கடலைக் கடந்துவந்து நம் நாட்டில் தங்கள் மதத்தைப் பரவச்செய்கிறார்கள். அத்தேசங்களில் மதப்பிரசாரம் செய்வதற்கென்று சங்கங்கள் இருக்கின்றன. அங்கு மரிக்கும் செல்வந்தர்கள் தங்கள் ஆஸ்தியின் ஓர் பாகத்தையும், சந்ததி யில்லாதோரில் பலர் தங்கள் திரண்ட செல்வம் முழுவதையும் அத்தகைய மதப்பிரசாரம் செய்யும் சங்கங்களுக்களித்துவிடுகிறார்கள். நம் நாட்டிலோ அத்தகைய சங்கங்களேயில்லை. ஆகவே இங்கு மரிப்போர் விசேஷமாய்க் கோயில்களுக்கே பணத்தை வைத்துவிட்டுச் சுவாமிக்கு என் பெயரால் ஒரு காலபூசை நடக்கட்டும் என்கிறார்கள். பிறகு அதைக் கவனிப்பவர்களும் கிடையாது. அப்படிப் பூசை நடக்கிறதாயினும் என்ன நடக்கிறது? இரண்டொரு பலகாரமோ, பொங்கல் முதலியவைகளோ செய்து சுவாமி முன் காட்டப்பட்டுப் பங்கு போட்டுக் கொள்ளப்படுகிறது.

 

பெருந் தொகைகளை மேல்கண்ட தருமங்களில் செலவிடும் புண்ணியவான்கள், நமது மதத்தைப் பிரசாரம் செய்யவும், நம்மவர்க்கு நம் மதத்தின் அருமை பெருமை புராதனம் முதலியவற்றைப் போதித்து அவர்கள் புறச்சமயம் புகாது செய்யவும் ஒரு சங்கத்தை யேற்படுத்தி நடத்தி, நம் அனாதி மதத்தையாதரித்துப் பரவச்செய்வதாகிய பெரும் புண்ணியத்தைச் செய்யத் தொடங்க வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறோம். இதை வாசிக்கும் நாட்டுக் கோட்டைச் செட்டிமார்கள் - இடைவிடாது சிவபெருமானது கைங்கரியங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் -'ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் னால வாயி லுறையு மெம்மாதியே'' என்று திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளியபடி, இப்பெரும் புண்ணிய கைங்கரியத்தைச் செய்யத் தொடங்குவார்களென்று நம்புகிறோம். இவர்களில் ஒருவர் முன் நின்று சிரத்தை யெடுத்துக் கொண்டால் இதற்கென்றொரு சங்கத்தைத் தாபிப்பது மிக எளிதான காரியம். பரமசிவம் அருள்புரிவாராக.


 ஓம் தத்ஸத்.

 

ஆனந்த போதினி – 1923 ௵ - ஜுலை ௴

 

 

  

No comments:

Post a Comment