Thursday, September 3, 2020

 

தேவாலய பரிபாலனம்

 

உலக அமைப்பின் விசித்திரங்களை யுற்று நோக்கிய அறிவாளர் இத்தகைய அதிசய சிருஷ்டிக்குத் தலைவனொருவன் இருந்தே தீரவேண்டுமென்கிற துணிபுகொண்டு, சுருதி யுக்தியனுபவ வாயிலாய் அம்முதல்வனை வணங்கி வரவேண்டிய முறையில் நின்று வணங்கி, இன்புற்று வருகின்றனர். தங்களைப்போலவே ஆண் பெண் உள்ளிட்டார் எல்லோரும் தெய்வ நம்பகத்தில் ஸ்திரபுத்தி யுடையவர்களாய் விதிவிலக்குகளை யனுசரித்தொழுகி நலனடைய வேண்டுமென்னும் உத்தமநோக்கத்தை முன்னிட்டு வேதாகம ரீதியில் நாட்டின் பல பாகங்களிலும் தேவாலயங்களை ஸ்தாபித்தனர். ஆலயத்திருப்பணிகள் ஒழுங்காக நடைபெற்று வரவும் தக்க ஏற்பாடுகள் செய்து வைத்தனர்.
 

உலகம் சமாதான நிலையிலிருப்பதற்கு அரசன் நீதிவழாது செங்கோலாட்சி புரிந்துவரவேண்டும். அவ்வாட்சிக்குத் தெய்வசகாயம் அத்தியாவசியம். அதன் பொருட்டு அரசன் தேவாலய பரிபாலனத்தைக் கவனிக்கக் கடமைபூண்டவனாதல் வேண்டும். இப்படி அரசன் விளங்குவதற்குக் குடிவிளங்க வேண்டும். குடிவளத்திற்கு முக்கிய காரணம் கோயில் வளமே. ஆகையினாற்றான் ''கோயில் விளங்கக் குடி விளங்கும்; குடி விளங்கக் கோன் விளங்கும்; கோன் விளங்க உலகம் சமாதான நிலைமையை யடையும் " என்று பெரியோர் கூறுகின்றனர். ஆலய வழிபாடு அன்பு வளருவதற்கும், அறிவு பெருகுவதற்கும், அருள் தழைத் தோங்குவதற்கும் ஹேதுவாகின்றது.

 

கோயில் சொத்திலிருந்தே நித்திய நைமித்திய பூசைகள், தீபம், திருமஞ்சனம், குருக்கள் முதலிய பரிவார சம்பளம், பிரகாரங்களில் முளைத்து வரும் புல் பூண்டுகளையும், தரையிற் கிடக்கும் கல் முள் முதலியவற்றையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்து ஆல யத்தை ஒழுங்குபடுத்திவைக்கும் ஆட்களின் கூலி ஆகிய இவற்றைக் குறைவின்றி நடத்திவரலாம். கோயில் சொத்தை வைத்தியசாலை, கல்விச்சாலை முதலிய இதரவிஷயங்களில் செலவிடுதல் உசிதமாகாது. பிரயாணிகளின் சுகாதாரத்துக்குரிய வசதிகளும் அச்சொத்தின் செலவிலிருந்தே ஏற்படுத்த வேண்டும். யாத்திரைக்காரர்கள் காணிக்கை செலுத்த வேண்டு மென்கிற நிர்ப்பந்தம் கூடாது. தெய்வ தரிசனத்துக்கு வருபவர் திருப்திகரமாய்க் கடவுளைச் சேவித்துத் தீர்த்தப் பிரசாதம் பெற்றுப்போவதில் கோயில் சிப்பந்திகள் அக்கிரமஞ் செய்தலுதவாது. அனாதரிக்கப்பட்ட கோயில்களையும் அனுகூலமான கோயில் சொத்தைக் கொண்டே கவனிக்க வேண்டும்.

 

தமிழரசர்கள் காலத்தில் கோயிற்பணிகள் செவ்வனே நடை பெற்று வந்தன. அவ்வாறே இப்போதும் நடந்துவரத் தெய்வாபிமானமும், பொதுநல நோக்கமும், போதிய அறிவும், நல்லொழுக்கமும் வாய்ந்தவரைத் தருமகர்த்தராக நியமித்தல் வேண்டும். கோயில் விவகாரங்கள் இப்படிப்பட்டவை யென்று நன்கறியாதவர்கள் நம்மவர்களி லனேகரிருக்கின்றனர். இந்த அறியாமைக்கு அடிப்படை மேனாட்டுக் கல்வியும், அதன் போக்கைப் பின்பற்றுதலும், சுதேசபாஷையின் அனாதரவும், அவைதீகரின் கூட்டுறவு மேயாம். இன்னவர் கோயில் பரிபாலனத்துக் கருகரல்லர். இதனை நாம் பெரிதும் கவனித்தல் வேண்டும்.

நாமரூபமின்றி ஒலிவடி வாயுள்ள எழுத்தை வரிவடிவாக்கி நாம் பயனடைந்து வருவதுபோல, நாமரூபமற்ற தெய்வத்திற்கும் "தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவந் தானே, தமருகந்த தெப்பேர்மற் றப்பேர் - தமருகந், தெவ்வண்ணஞ் சிந்தித் திமையா திருப்பரேல், அவ்வண்ணம் ஆழியானாம்'' என்றும், " ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமிலார்க் காயிரம், திருநாமம் பாடி நாம் தெள்ளேணங் கொட்டாமோ'' என்றும் ஆன்றோர் கூறுகிறபடி நாமரூபம் ஏற்படுத்தி, தெய்வநினைவை நினைப்பூட்டுவதற்கு அதிமுக்கியமான ஆலயங்களைத் தாபித்து ஆங்கு அக்கடவுள் மூர்த்தத்தைப் பிரதிட்டை செய்து நாம் வழிபட்டுய்ந்து வருகிறோம், ஏனெனில் "ஆலயந் தொழுவது சாலவும் நன்று", "தெய்வமிகழேல்'', "தெய்வஞ் சீறிற் கைதவ மாளும்" என்று முதியோர் மொழிந் துண்மையாலும், தெய்வபலமே மற்றெல்லாப் பலத்தினும் சிறந்ததாம்.

 

நமது இந்து தேசமானது தொன்றுதொட்டு சமயஞானத்தில் பிரக்யாதி பெற்று வருகிறதென்பது யாவரும் அறிந்ததொன்றே. ஆத்மார்த்தமான சமயஞானத்தை வளர்த்து முதல் முதல் அதை உலகிலுள்ள ஏனைய நாடுகளுக்குப் போதித்து வந்ததும் நம் இந்திய தேசமேயாகும். ''கோயிலில்லாவூரிற் குடியிருக்க வேண்டாம்" என்பதன்றோ, நம்மவர்களுடைய முடிவான உபதேசம். மெய்ஞ் ஞானமும், ஈசுவரபக்தியும், ஆன்ம ஈடேற்றத்துக் குரியவைராக்கியமும் தழைத்துள்ள நாடே எந்நாளும் செழித்தோங்கும்.

 

நமது நாட்டின் உண்மையான நிலைமையை நம்மிற் பலர் உள்ளபடி முற்றும் அறிந்து கொள்ளாமலே தேசவாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஜனங்களுக்குள் அன்பு நெறி பரவுவதற்குத் தெய்வ பக்தியே சிறந்த சாதனம். இதை முன்னிட்டே நமது முன்னோர்களால் தேவாலயங்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டன. பலவாலயங்கள் தற்காலம் எந்நிலைமையி லிருந்து வருகின்றன என்பதை நாம் கவனியாமலே பராமுகமாயிருந்து வருகிறோம். அவை எல்லாம் இப்போது மிகவும் சீர்கேடான நிலைமையிலிருக்கின்றன. அவைகளுடைய பரிசுத்தத் தன்மையும் பெருமையும் நமது கவனக்குறைவால் கீழ்நிலை யடையலாயின. மற்றும் அவை சுயநல நோக்குள்ள போலி வேடதாரிகள் வாழுங்குகைகளாகவும் மாறிவிட்டன. சில ஆலயங்கள் இருந்தவிடம் தெரியாமல் அடியோடு அழிந்து போயு மிருக்கின்றன. நம் நாட்டுத் தேவாலயங்களை நாம் ஆழ்ந்து நோக்கின் நமது முன்னோர்கள் கொண்டுள்ள தெய்வப்பற்றும் சாஸ்திரோக்தமாகத் தேவாலயங்களை நிருமிப்பதிலுள்ள சிரத்தையும் என்ன அருமையானவை என்பது புலப்படவில்லையா? ஆ! ஆ! சிற்பவேலைகளின் பெருமைதான் என்னே? அவைகளைப் பார்த்து வியப்படையாத வெளிநாட்டாரும் உண்டோ? தேவாலயங்களைப் பார்க்கும் பொழுதே நமக்கு நமது நாட்டின் பூர்வீக சிற்பத்தொழிலின் விமரிசை நன்கு விளங்குகின்றதே. நமது பெரியோர்கள் நமக்குள் அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்க ஏராளமான தேவாலயங்களை ஏற்படுத்தி அவைகளுக்குப் போதுமான நிலங்களையும் பொருள்களையும் உதவி வந்தனர். தேவாலய தருமங்கள் தவறாமல் செவ்வையாக நடை பெறும்படி ஆங்காங்கே பல மடங்களையும் ஏற்படுத்தினார்கள்.

 

தேவாலயங்களில் சமயவளர்ச்சியைக் கருதி ஏற்படுத்தப்பட்ட பல மண்டபங்களெல்லாம் இப்போது பாழடைந்து கிடக்கின்றன. அந்த மண்டபங்களில் ஆலயத்தை நாடிச் சுவாமி தரிசனத்திற்காக வருகின்ற ஜனங்களுக்குச் சமய தத்துவம், ஒழுக்கம், அறம், அன்பு, நீதி முதலிய பல அரிய விஷயங்களைத் தக்கோர் உபந்யாசிப்பது வழக்கம். அவ்விடங்களில் இப்பொழுது அம்மாதிரியான உபந்யாசங்கள் ஒன்றும் நடைபெறுவதேயில்லை.

 

ஆலயங்களின் சீர்கேட்டை உற்று நோக்கினால் மனம் பதறுகின்றது. பல ஆபாசமான காரியங்களுக்கு அவை நிலைகளனாக விளங்குகின்றன. அறிஞர்களும், ஞானிகளும், அறவோர்களும் வெறுக்கக்கூடிய பலதீஞ்செயல்கள் ஆலயங்களில் நடைபெற்று வருகின்றன. உத்ஸவ காலங்களில் ஜனங்கள் கடவுளைச் சுலபமாகச் சென்று வணங்கமுடியாதபடி ஆலய சிப்பந்திகள் கொடுமைப்படுத்தி வருகின்றனர். சிதம்பரம், திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற பல பெரிய க்ஷேத்திரங்களிலுள்ள ஆலயங்களெல்லாம் உத்ஸவகாலங்களில் சுங்கச்சாவடிகளாய் மாறிவிடுகின்றன. நீண்ட தூரம் பிரயாணம் செய்து கடவுளைத் தரிசிக்க வருகின்ற ஜனங்கள் பணக்குறைவால், தேவதரிசனஞ் செய்ய முடியாமல் வருத்தத்துடன் திரும்பிச் செல்லுகின்றனர். அவர்கள் எவ்வளவு கெஞ்சிக் கேட்ட போதிலும் ஆலயத்திலுள்ள ஊழியர்களும் அதிகாரிகளும் அவர்களுக்குச் சிறிதும் இரங்குவதில்லை. ஆலயங்களில் நடைபெறும் அக்கிரமங்களையெல்லாம் விரிக்கிற்பெருகும். அதிகாரிகளோ, பெரிய உத்தியோகஸ்தர்களோ சுவாமி தரிசனத்திற்காக வந்து விட்டால் அப்போது ஆலய ஊழியர்களால் பொது ஜனங்கள் படுங் கஷ்டங்கள் அளவிடற்பாலனவல்ல.

 

நிற்க, ஜனங்களில் பலர் சங்கீதங்கேட்கவும், களிப்பாடல்களைக் கண்டு மகிழவுமே ஆலயங்களுக்குச் சென்று வருகிறார்களேயன்றி வேறில்லை. உண்மையாகக் கடவுளைக்கண்டு ஆலயத்தில் வழிபடச் செல்லுகின்றவர்கள் சிலரே. மடாதிபதிகளின் ஆதிக்கத்தில் இருக்கின்ற தேவாலயங்களின் நிலைமையைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமோ? வைத்தீஸ்வரன் கோயில், திருவிடைமருதூர் போன்ற பலதென்னாட்டுத் திவ்ய க்ஷேத்திரங்களில் பொது ஜனங்கள் படுங் கஷ்டங்கள் எண்ணில.

 

தேச நன்மையைக் கருதிக் கட்டப்பட்டுள்ள தேவாலயங்களைச் சீர்திருத்தவேண்டுவது நமது கடமை. அவைகள் அழிந்து போகும்படி நாம் பார்த்துக்கொண்டிருப்பது தர்மமாகாது. உண்மை வழி நின்று உழைத்து வந்தவர்களே ஆலய தர்மகர்த்தர்களாக இருந்து ஆலயங்களையும் அவைகளின் தரும் சொத்துக்களையும் பாதுகாத்து அவைகளை அபிவிருத்தியடையும்படி செய்து வந்தனர். இப்பொழுது தரும் சொத்துக்கள் சரியான வழியில் செலவாகி வருகின்றனவா என்பதைக் கவனியாதவர்களே தேவாலயங்களில் தருமகர்த்தர்களாக இருந்து வருகின்றனர். அவர்களுடைய கவனக்குறைவின் பயனாக ஆலய வழக்குகள் அடிக்கடி நியாயஸ்தலங்களில் நடை பெற்று வருகின்றன. தேவாலய சம்பந்தமான வழக்குகள் நியாய ஸ்தலங்களுக்குச் செல்லுவதனால் அவைகளுக்கு ஏற்படுகின்ற செலவுகள் எல்லாம் தரும் சொத்துக்களிலிருந்தே செலவு செய்யப்படுகின்றன. நல்ல காரியத்திற்கு நம் முன்னோர்கள் சேமித்துவைத்த பொருள் இப்படி வீணான வழிகளில் விரயமாவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கலாமா? நிற்க,

 

சமயத்தைப்பற்றியும் சமயக் கொள்கைகளைப்பற்றியும் போதிப்பதற்காகவும், தேவாலய தருமங்களை வளர்ப்பதற்காகவும், ஏற்படுத்தப்பட்ட மடங்களின் நிலைமையைச் சிறிது கவனிப்போம். அவற்றில் அறச்சாலைகளாக இருந்தவை பல இப்பொழுது அவச்சாலைகளாக மாறிவிட்டன. தருமத்தை வளர்ப்பதற்காக ஏற்பட்ட அவை அதர்மத்தை வளர்க்கும் சாலைகளாக இருந்துவருகின்றன. நீதி மன்றங்களாய்த் திகழ்ந்துவந்த அவை அநீதி மன்றங்களாக விளங்கிவருகின்றன. துறவிகளுக்கும், அறவோர்களுக்கும், ஞானிகளுக்கும் இருப்பிடங்களாக இருந்த அவை தற்காலம், இழிதொழிலாளர்களுக்கும், புரட்டர்களுக்கும் இருப்பிடங்களாக இருந்து வருகின்றன. நம் தமிழ்நாட்டில் சேரசோழ பாண்டிய மன்னர்களால் ஏற்படுத்தப்பட்ட மடங்கள் எண்ணில. மடங்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்கள் மடாதிபதிகளெனப்படுவர். மடங்களில் இருந்த பெரியோர்கள் கல்வி, அறிவு, ஞானம் இவைகளில் சிறந்தவர்களாய் இருந்து வந்ததுமன்றி, நாட்டின் சமயத்தையும், அறத்தையும், தேவாலயப் பணிகளையும் ஒழுங்காக நடத்திவந்தனர். சமய வளர்ச்சியைக் கருதிப் பல அருமையான சாஸ்திரங்களையும் அவர்கள் அடிக்கடி வெளியிட்டு வந்தனர். தற்கால பண்டார சந்நிதிகளைப்போல் அவர்கள் ஆர்பாட்ட மாகத் தர்ம சொத்துக்களை வீண் செலவு செய்து வாழாமல் சாதாரண அவசியமான வாழ்க்கையையே நடத்தி வந்தார்கள். அதன் பயனாகவே நமது சமயமும் ஆலயங்களும் அக்காலத்தில் மிகவும் சிறப்புற்றோங்கி யிருந்தன.

 

கீழ் நிலைமையில் இருந்துவரும் தேவாலயங்களையும், மடங்களையும் சீர்திருத்தி அமைக்க வேண்டிய கடமை நம்முடையதல்லவா? இதுவரையில் நாம் அவைகளைப் பற்றிக் கவனிக்காமல் இருந்து வந்தோம். அவைகளெல்லாம் இப்பொழுது சுயநலக்காரர்கள் பிழைப்பதற்கு உரியனவாய், நாட்டு மக்களுக்குச் சிறிதும் பயனற்றவைகளாய் மாறிவருகின்றன. அவற்றை நாம் சீர்திருத்தமுடியாத நிலை இருந்துவருகிறோம். நமது சமய உரிமையில் அரசாங்கத்தார் தலையிட வேண்டுமென்று நாம் விரும்பவில்லை. ஆனால் எவ்விதத்திலாவது நாம் நமது தேவாலயங்களையும், மடங்களையும் சீர்திருத்தி அமைக்க வேண்டுமென்றே விரும்புகின்றோம். ஹிந்து சமயத்தைப் பின்பற்றிவரும் நாம் இதுவரையில் அவைகளைச் சீர்திருத்தியமைக்க யாதொரு முயற்சியும் செய்யாமல் இருந்து வந்ததனால் அரசாங்கத்தார் தேவஸ்தான பரிபாலன சட்டத்தைச் சட்டசபையில் கொண்டு வந்து நிறை வேற்றி யிருக்கின்றனர். இந்தச் சட்டம் எப்பொழுதும் அமுலில் இருக்க வேண்டுமென்று நாம் விரும்பவில்லை.

 

இந்தச் சட்டத்தை உண்மைச் சமயாபிமானிகளும் மற்றவர்களும் ஒருவாறு ஆதரிப்பார்களேயன்றி எதிர்க்க முற்படமாட்டார்களென்பது நிச்சயம். தற்காலம் இருக்கும் நிலைமையில் இச்சட்டம் நமது தேவாலயங்களையும் மடங்களையும் சிறிது சீர்திருத்த இன்றியமையாத தென்றே நாம் கருதுகின்றோம். ஆனால் இச்சட்டம் சமய வுணர்ச்சி முற்றும் பெற்ற மேதாவியரைக் கொண்டு செய்யப்படின் மெத்தவும் அனுகூலமாகும். அந்த உணர்ச்சியில் சிரத்தை மிகுதியும் இல்லாத அரசாங்கத்தார் தாங்களே தலையிட்டு அச்சட்டத்தை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தது சமயாபிமானமுள்ள பலர்க்கு அதிருப் தியைக் கொடுக்கின்றது. ஆலயங்களையும், மடங்களையும் சீர்திருத்தி அமைக்கும் விஷயத்தில் நம்மவர்கள் அரசாங்கத்திற்குப் பெரிதும் ஆதரவு அளித்தல் வேண்டும். மடங்களும், ஆலயங்களும் சீர்திருத் தப்பட்டால் அவற்றால் நம் நாட்டுக்குப் பலவித நன்மைகள் ஏற்படக்கூடும். ஆகவே உண்மைச் சமயப்பற்றுடைய தமிழர்கள் இந்தச் சட்டத்தை ஆதரிக்கும் விஷயத்தில் கவனஞ் செலுத்துவது அவசியம் என்பதை நாம் பெரிதும் வற்புறுத்துகின்றோம். எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

 

ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - செப்டம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment