Thursday, September 3, 2020

 

தேவதைகட்கு உயிர்ப்பலி

 

உங்கள் மக்களும் நீங்களும் நோய்கொள
எங்கள் மக்களும் நாங்களும் என் செய்தோம்?
பொங்க விட்டுப் பலியும் கொடுக்குறீர்!
எங்கள் முறையினை ஈசனார் கேளாரோ?

 

அஹிம்ஸையைப் பரம தருமமாகப் போற்றும் நமது புண்ணிய பூமியில் இன்னும் தேவதைகட்குஉயிர்ப்பலி கொடுக்கும் அநாகரிக மூட வழக்கம் நிலைத்திருப்பது கொடுமையினும் கொடுமையாகும். தேவதைகள் உயிர்ப்பலி வேண்டுவதாக நம்புவது மக்களின் அறியாமையையே காட்டும். உயிர்ப் பலி வழக்கம் மக்கள் சமூகத்தில் பன்னெடுங் காலமாக இருந்து வருகிறது. நமது நாட்டில் ஆரியரும் தமிழரும் தெய்வங்களின் பேராலும் சாஸ்திரங்களின் பேராலும் உயிர்ப்பலியை உவந்து செய்து உண்டு மகிழ்கின்றனர். கடவுள் வாக்கு என்று சிறப்பிக்கப்படும் வேதங்களே யாகங்களின் பேரால் உயிர்ப்பலியை அனுமதிக்கின்றன. பண்டைத் தமிழ் நூல்களை ஆராய்வோர் தமிழ் மக்களிடையே உயிர்ப்பலி வழக்கம் சகஜம என்பதை நன்குணர்வா. இப்பொழுது சுத்து சைவக் கடவுளாக விளங்கும் திருமுருகன் முற்காலத்தில் ஆடு மாடு கோழிகளைப் பலியேற்கும் குறிஞ்சியங் கடவுளாக விளங்கிய உண்மையைத் தெய்வ மணங்கமழும் திருமுருகாற்றுப் படையில் தெளிவாகக் காணலாம். இன்றும், அறுத்துச் சமைத்த கோழியும் மீனும். முருகன் திருமுன், உயிர் பெற்றெழுவதாக வழங்கும் கதையும் கேட்கிறோம். மேற் கூறிய விவரங்களால் உயிர்ப் பலி நம்பிக்கையின் தொன்மையும் வன்மையும் ஒருவாறு விளங்கும் என்று நம்புகின்றோம்.

 

நமது நாட்டில் ஒரு காலத்தில் பௌத்த சமயமும் சமண சமயமும் தழைத் தோங்கி ஆதிக்கம் பெற்றிருந்தன. இவ்விரு சமயங்கட்கும் அருளொழுக்கத்திற்காதாரமான ஜீவகாருண்யத் தத்துவமே தலைசிறந்த அடிப்படை. இப்பொழுது இச்சமயங்கட்கு இந்நாட்டில் செல்வாக்கில்லை. இவற்றை அவலம்பிக்கும் மக்கள் தொகையும் மிகமிகக் குறைவே. புத்தர் பெருமான் யாகம் முதலிய உயிர்ப்பலிகளை நீக்கி மக்கள் உள்ளங்களில் அருளொழுக்க உணர்ச்சி வீறுகொண்டு விளங்கச் செய்யவே அவதரித்தருளினார். ஆனால் அவர் எதிர்பார்த்த பயன் எய்தவில்லை என்றே கூறவேண்டும். பெளத்த தருமத்திற்கு எதிர்ப்பு மிகுதியாக இருந்தது. இறுதியில் மறுதலையான சக்தியே மிஞ்சி வேரூன்றி விட்டது. மற்றெல்லாப் பகுதிகளையும் விடத் தமிழகத்தில் பௌத்தக் கோட்பாடுகள் பெரிதும் செல்வாக்கற்றுப் போயின.

 

எந்த உண்மைச் சமயமும் உயிர்வதையாகிய பலியை விரும்பவில்லை என்பது தேற்றம். ஏதாவது ஒரு சமயமோ சாஸ்திரமோ உயிர்ப்பலியை விரும்பி விதிப்பதாகக் கூறப்படின், அவை போலிச் சமயம் போலிச் சாஸ்திரம் என்றே ஒதுக்கித் தள்ள வேண்டும். மக்களின் இரக்கமற்ற சுயநலமே அப்போலிச் சமய சாஸ்திரங்கட்கு ஆதாரம் என்பதைத் தவிர உண்மை ஒரு சிறிதும் இருக்க முடியாது என்பதே அறிஞர் ஆராய்ந்து துணிந்த முடிவு.

திருக்குறள் முதலிய ஒழுக்க நூல்களெல்லாம் உயிர்வதையை அறவே வெறுக்கின்றன. சைவ - வைணவ - அத்துவைத சமயங்களும் உயிர்வதையையும் புலாலுண்ணலையும் வெறுக்கின்றன. ஆனால் அவ்வொழுக்க நூல்களையும் சமயங்களையும் உயிராகப் போற்றும் மக்கள் உயிர்ப்பலியாகிய உயிர்வதை செய்துண்ணல் தருமமா என்று கேட்கின்றோம்? மக்கள் மாக்களாய் - காட்டு மிராண்டிகளாய் -அச்சமும் அறியாமையும் மேற்கொண்டு "துஷ்ட தேவதைகளின்" கிருபாகடாக்ஷம்" பெறும் பொருட்டுச் செய்து வந்த உயிர்ப் பலிகளை நாகரிகமும் பகுத்தறிவும் முதிர்ச்சி பெற்றுள்ள இக்காலத்திலும் செய்யத் துணிவது நகைப்பிற் கிடமானதாகும். உலகம் இன்பமும் துன்பமும் கலந்தது. உயிர்களின் வாழ்க்கையில் இன்ப துன்பம் மாறிமாறி வருதல் இயற்கை. இம்முறையில் மக்கட்கு நோய் முதலிய துன்பங்கள் நேர்ந்தால் அவற்றின் காரணங் கண்டு அறிவு முயற்சிகளால் அகற்ற முற்படவேண்டும். நமது நாட்டில் பண்டிதர் – பாமரர் எல்லாரும் இவ்வுண்மைகளை மறந்து விடுகின்றனர். எடுத்ததற்கெல்லாம் 'சாமி'களை நேர்ந்து கொள்ளுவதும் ''நேர்ச்சிக் கடன் "செலுத்த முந்துவதுமே இவர்களின் தொழிலாகிவிட்டது. "சாமி" களை வேண்டிக் கொள்ளுலோர் எல்லாப் பளுவையும் "சாமி" தலையில் போட்டு விடும் அளவிலேனும் நிற்கின்றனரோ? அதுவும் இல்லை. "சாமி'' யை நம்பாமல் வேறு பரிகாரங்களைத் தேடவும் ஆத்திரப் படுகின்றனர்!

 

மருந்தினாலேனும் இயற்கையாலேனும் நோய்கள் நீங்கி விட்டால் மக்கள் முன்னர் நேர்ந்து கொண்ட தேவதை கட்கு ஆடு கோழிகளைப் பலிகொடுக்கத் துணிந்து விடுகின்றனர். "சாமி" களிடம் தங்கள் குறைகளை முறையிட்டு நேர்ந்து கொண்டும் ஏமாற்ற மடைகிறவர் பல்லாயிரவர் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் ஞாபக மூட்டவிரும்புகின்றோம்? ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் "ஊர்த்தேவதை" கள் கோவில் கொண்டிருக்கின்றன. ஆண்டு தோறும் பெரும்பாலும் அத் "தேவதை" கட்கு விழாவெடுத்தல் சகஜம். இவ்விழாக்களில் பொங்கலும் பலியும் முதன்மை பெற்று நிற்கும். "தேவதை " கட்குத் திருவிழா என்றால் அவ்வூர் ஆடு கோழிகட்கெல்லாம் ஆபத்து என்பதே பொருள். சிலவிடங்களில் எருமைகளும் பன்றிகளும் பலி கொடுக்கப்படுகின்றன. பலிக் கொடுமையைப் பற்றிச் சென்னை ஜீவஹிம்சை நிவாரணசங்கத் தலைவர் ஜஸ்டிஸ் ஸி. எச். பி. ஜாக்ஸன் அவர்கள் சமீபத்தில் பத்திரிகைகட்கு ஒரு வேண்டு கோள் வெளியிட்டிருக்கிறார். அவ்வேண்டுகோளில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

 

''பலி கொடுக்கப்படும் ஆடு, பன்றி, எருமை, கோழி முதலியவை படும் கஷ்டம் பலருக்குத் தெரியாதிருக்கும். ஆடுகளின் கால்களும் காதுக்களும் முதலில் துண்டிக்கப்பட்டுப் பிறகு கொல்லப்படுகின்றன. சில சமயங்களில் ஆடுகளின் சரீரம் 32 இடங்களில் வெட்டப்பட்டு மாம்சம் துண்டு துண்டாக எடுக்கப்படுகின்றது. பொது ஜனங்கள் பார்க்காமல் இருப்பதற்காக இது இராக்காலத்தில் நடத்தப்படுகிறது. கர்ப்பமான ஆடுகளும் பலி கொடுக்கப்படுகின்றன. வயிற்றிலிருந்து குட்டி கையால் பிடுங்கி எடுக்கப்பட்டு முதலில் கொல்லப்பட்ட பின் தாய் கொல்லப்படுகிறது. உயிருள்ள பன்றிகள் தரையில் புதைக்கப்பட்ட ஈட்டிகளின் மீது உயரத்திலிருந்து போடப்படுகின்றன. அவை இறக்கு முன் பல மணி நேரம் அப்படியே இருந்து மிகவும் கஷ்டப்படுகின்றன. எருமைகள் தனியாகத் தோண்டப்பட்ட குழிகளுள் ஓட்டப்பட்டுப் பல பக்கங்களிலும் பலர் நின்று கொண்டு கூர்மையான கத்திகளால் குத்தப்பட்ட பிறகு தலைகள் வெட்டப்படுகின்றன. கோழிகள் பலி கொடுக்கப்படும் போது மேலேயும் கீழேயும் தூக்கி எறிந்து ஆட்டப்படுகின்றன. அவை உயிருடன்இருக்கும் போதே கடிக்கப்பட்டு உதிரம் உறிஞ்சப்படுகிறது.  

 

ஜஸ்டிஸ் வி. எச். பி. ஜாக்ஸன் அவர்கள் எடுத்துக் காட்டியிருக்கும் பலிச் சித்திரவதைக் கொடுமைகள் முற்றிலும் உண்மை என்றே நாம் நம்புகின்றோம். உயிர்களைச் சித்திரவதை செய்யக்கூடாது என்பதே ஜஸ்டிஸ் ஜாக்ஸன் வேண்டுகோளின் கருத்து. பலி கொடுப்பதையே முற்றிலும் நிறுத்த வேண்டும் என்று அவர் கூறத் துணியவில்லை. மத சம்பந்தம், நீண்ட கால வழக்கம், படித்தவரின் ஆக்ஷேபணை முதலியன பலி நீக்கத்திற்குத் தடையாக நிற்கும் என்று அவர் அஞ்சுகின்றார். பகிரங்கமாக இவ்வாறு உயிர்களைச் சித்திரவதை செய்வதைத் தடுக்கத்தக்க முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மாத்திரம் நகர சபைகளை வேண்டிக் கொள்ளுகிறார். இத்தகைய பொருளற்ற மூட நம்பிக்கைச் சித்திரவதைகள் அடியோடு நாட்டை விட்டு ஒழிய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனை - வேண்டுகோள்.

 

புலால் உணவை மேற் கொள்ளாத ''உயர் வருண'' மக்களும் நேர்ச்சிக் கடன் தீர்க்கப் பலி கொடுத்துப் பிறருக்கு அந்த மாமிசத்தைத் தானம் செய்து விடுகின்றனர். கோவை ஜில்லாவிலுள்ள நாட்டு ராயன் கோவிலில் வாரந்தோறும் வெட்டப்படும் ஆடுகட்கு எல்லை இல்லை. விசேஷ காலங்களில் பலலாயிரக்கணக்கான ஆடுகள் பலிகொடுக்கப்படுகின்றன. அவ்விடம் முழுதும் உதிரக்காடாகவே இருக்கும். " அன்று பிறந்த குட்டியும் அழுக்குப் படாத வெண்ணெயும் "அங்குள்ள " சாமிக் " கு அதிகப் பிரியமாம். இதுபோலவே மதுரை, ராமநாதபுரம், திருநெலவேலி முதலிய ஜில்லாக்களில் உயிர்ப் பலிக் கொடுமைகள் மலிந்து கிடக்கின்றன. ஆங்காங்குள்ள சைவ நன்மக்களும் பிற அருளாளரும் ஏன் இக்கொடுமைகளை நீக்கத் தகுந்த பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்று கேட்கின்றோம்?

 

புலால் உணவு மக்கட்குரிய இயற்கை உணவு அன்று. மரக்கறி முதலிய சாக பக்ஷணங்களே மக்கட்குச் சிறந்த உணவாகும். புலால் உண்ணலால் விளையும் தீமைகளையும், மரக்கறி உணவால் விளையும் நன்மைகளையும் மேனாட்டு மருத்துவ நிபுணரே ஆராய்ந்து நன்கு விளக்கியிருக்கின்றனர். எனினும் உலகத்துப் பெரும்பான்மையான மக்கள் மாமிச பக்ஷணிகளாகவே இருக்கின்றனர். பகுத்தறிவற்ற விலங்கினங்களில் ஒருசில ஒன்றையொன்று கொன்று தின்கின்றன. பறப்பன ஊர்வனவற்றிலும் மாமிச பக்ஷணிகள் உண்டு. சிருஷ்டியின் அமைப்பே அவ்வாறு அமைந்திருக்கிறது. ஆனால் மக்கள் அவ்வியற்கையினின்றும் மாறுபட்டவர்கள். அவர்கட்குப் பகுத்தறிவு உண்டு. நன்மை தீமை உணர்ச்சி உண்டு. அன்பும் அருளும் உண்டு. மனச்சான்று உண்டு. இத்தகைய சிறந்த குணங்களாலேயே மக்கட்பிறப்பு மாண்புடையதாக மதிக்கப்படுகின்றது. பகுத்தறி வற்ற விலங்குகளைப் போல் பெரும்பான்மையான மக்கள் இன்னும் மாமிச உணவை மேற்கொண்டிருக்கின்றனர். இது இயற்கைக்கும் மனிதத் தன்மைக்கும் மீறிய வழக்கமாகும். கால தேச வர்த்தமானங்களை ஒட்டிச் சில நாடுகளில் மாமிசம் மத அனுமதி பெற்ற உணவாகவும் இன்றியமையாத உணவாகவும் விளங்குகின்றது. எவ்வாறாயினும் தீமை தீமையே. " கொல்லா விரதம் குவலபமெல் லாமோங்க, எல்லார்க்கும் சொல்லுவதென் இச்சை பராபரமே " என்ற தாயுமான அடிகளின் அருண்மொழியை யாம் உலகத்திற்குச் சமர்ப்பணம் செய்வதைத் தவிர உலக மக்களெல்லாரையும் சீர்திருத்த வேறு நெறி அறியோம்.

மக்கள் ஆதியில் எதைச் சிறந்த உணவாகக் கருதினரோ அதையே தங்களைக் காக்கும் கடவுளர்க்கும் அர்ப்பணம் செய்யத் தொடங்கினர். அவ்வழக்கம் இன்றும் ஆணிவேர் சல்லிவேர்களுடன் அசையாது நிற்கின்றது. சிவாலயங்களிலும் விஷ்ணுவாலயங்களிலும் சில நூறு ஆண்டுகளாகத் தூய உணவு கடவுளர்க்குப் படைக்கப்படுகின்றது. புளிச்சாதம், தயிர்ச்சாதம் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், சுண்டல், வடை, பாயசம், தேங்குழல், தோசை முதலிய - புலாலுண்ணாத மக்கள் பெரிதும் விரும்பும் உணவு வகைகள் கடவுளர்க்கு நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இவை மக்கள் அறிவு விளக்கமும் நாகரிகமும் பெற்ற பிறகு தோன்றிய உணவுகளாகும். பின்னர் கடவுளர்க்கும் அவைகளையே படைக்கத் தொடங்கினர். அவை சாஸ்திர சம்மதமும் பெற்றன. ஆதியில் தேவதைகட்கு உயிர்ப்பலியும் இவ்வாறே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுவதில் ஒன்றும் தவறு இருக்காது என்று நம்புகிறோம். ஸ்ரீ ராமபிரானைக் காணக் குகன் வந்தபோது மாமிசவுணவைக்கையுறையாகக் கொணர்ந்ததும், கண்ணப்பர் காளத்திநாதரின் பொருட்டுத் தேர்ந்தெடுத்த மாமிச வுணவைக் கொணர்ந்ததும் எமது கூற்றை வலியுறுத்தி நிற்கின்றன.

 

மக்கட்குச் சமய ஞானமும் ஒழுக்க அறிவும் கடவுள் வழிபாட்டு முறையும் உணர்த்த வேண்டியது சமயத்தலைவர்களின் இன்றியமையாக் கடமை. ஆனால் நம் நாட்டுச் சமயத் தலைவர்களாகிய மடாதிபதிகளும், ஜீயர்களும், ஆச்சாரியர்களும் தங்கள் கடமைகளை உணர்ந்து நடப்பதாகத் தெரியவில்லை. நமது சமயத் தலைவர்கட்கு மிகுதியான பொருள் வருவாயும் சௌகரியங்களும் இருந்தும் அவர்கள் மக்கள் முன்னேற்ற விஷயத்தில் கவலை செலுத்துவதில்லை. இவர்கட்குக் கிடைக்கும் லக்ஷக்கணக்கான ரூபாய்களும் வீணிற்கழிந்து கொண்டிருக்கின்றன. சமயத் தலைவர்கள் மக்கட்கு சமயஉண்மைகளைத் தெரிவித்து உயிர்ப்பலி போன்ற கோரச் செயல்களை எளிதில் நீக்கிவிடலாம். நாட்டில் பொருளற்ற வழக்க வொழுக்கங்கள் நிறைந்திருப்பதற்கு உண்மைச் சமய ஞானமும் கல்வி யறிவும் இன்மையே காரணமாகும். ஆடம்பர மோகங்களிலும் கோர்ட்டு வழக்குகளிலும் பாழாகும் பெருந் தொகைகளில் ஒரு சிறு பகுதியேனும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு என்று செலவிடப்பட்டால் எத்துணையோ நலங்களை எதிர் பார்க்கலாம். கிறிஸ்தவ சமயத் தலைவர்கள் கடல் கடந்து வந்து எம்முறையில் சமயத் தொண்டாற்றுகின்றனர் என்னும் உண்மையை நமது சமயத் தலைவர்கள் அறியார்களா? அறிந்தும் வாளாயிருந்து வருகின்றனர் என்றே கூறி வருந்துகிறோம்.


 அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
 உயிர்செகுத் துண்ணாமை நன்று.


ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - டிசம்பர் ௴

 

No comments:

Post a Comment