Friday, September 4, 2020

 

நோய்கள் எங்கிருந்து வருகின்றன.

 

மனிதர்க்குக் காலபேதத்தினால் எண்ணிறந்த நோய்களுண்டாகி வருகின்றன. வைத்திய சாஸ்திரங்களில் நிபுணர்களாயிருந்த நம் பெரியோர்கள் பண்டைக் காலத்தில் தாங்கள் செய்து வைத்த ஆயுர்வேத நூல்களில், நோய்த் தோற்றங்களைக் கூறுமிடத்து, வாத, பித்த, கப சம்பந்தமான பற்பல வியாதிகளையும், அவற்றின் கிளையாக உண்டாகும் அநேகம் நோய்களையும் பெரும்பான்மையும் வரையறுத்துக் கூறியிருக்கின்றார்கள். அவைகளுண்டாம் காரணங்களையுங் கூறியிருக்கின்றனர். அவற்றின் சார்பாகவே முற்காலத்தில் பற்பல பிணிகளுண்டாவதும், அவற்றிற்கு வைத்தியர்கள் சிகிச்சை செய்வதும் நடந்து வந்திருக்கின்றன. இக்காலத்திலோ அவற்றுள் அடங்காதவைகளும், நாம் முன் எப்பொழுதும் கேள்விப்படாதவைகளும், கண்ணால் பார்க்காதவைகளுமான அற்புத வியாதிகள் பற்பல நாடோறும் புதிது புதிதாக உண்டாய் முளைத்துக் கொண்டே யிருக்கின்றன. இவற்றிற்கு இங்கிலீஷ் டாக்டர்களாலும், யூநானி ஹக்கீம்களாலும், ஆயுர்வேத பண்டிதர்களாலும் பற்பல நாமங்களும், சிற்சில காரணங்களும் அற்புதமாகக் கூறப்பட்டு அக்கரையுடன் அததற்குத்தக்க சிகிச்சைகளும் செய்யப்பட்டு வருகின்றன. எனினும் அவற்றுள் சிலவற்றின் பெயர், காரணம் முதலியவற்றைத் தெரிந்து கூற முடியாமலும் அவற்றிற்குத் தக்க ஒளடதப் பிரயோகங்கள் செய்ய முடியாமலும் வைத்தியர் தியங்குகின்றனர்.

 

இப்படி வைத்திய நிபுணர்களையும் கலங்கச் செய்யும்படியான இந்தநூதன நோய்கள் எங்கேயிருந்து எப்படி வருகின்றன வென்பதைப் பற்றி ஆராயப் புகுந்தால், சிலவியாதிகளின் காரணம் தெரியாவிடினும் பல வியாதிகளின் உற்பத்திக்குக் காரணத்தை அறிஞர் உணர்ந்து கொள்ளக்கூடும். இப்போதைய டாக்டர்களும், ஆயுர்வேத பண்டிதர் முதலியவர்களும் தங்கள் சாஸ்திர ஆராய்ச்சியாலும், அனுபவத்தாலும், யுக்தியாலும் ஆராய்ந்து, அவ்வியாதிகளின் காரணங்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள். அவைகளெல்லாம் சிறந்தவைகளும் ஒப்புக் கொள்ளக் கூடியவைகளுமே. அவற்றிலிருந்தே நூதனமாக நோய்கள் உற்பத்தியாகின்றன; அவை எவையெனில் மனிதர் உபயோகிக்கும் உணவுப்பொருள்களின் தோஷங்கள், மனிதருடைய இயற்கைக்கு விரோதமான பழக்கவழக்கங்கள், கெட்டகாற்றுக்கள், கெட்டஜலம், தொற்றுவியாதிகள் பாவியிருக்குமிடத்திற் சஞ்சரிப்பது, பெருந்தீனி, மிகுந்த நித்திரை முதலியவைகளும், இன்னும் பலவுமாம். இவற்றாலேயே வியாதிகள் உண்டாகின்றன வெனினும், பெரும்பான்மையான நோய்கள் ஆகார வஸ்துக்களின் தோஷத்தினாலேயே உண்டாகின்றன வென்பதை அறிஞர் பலரும் அறிவர்.

 

காலதோஷத்தால் நாட்டில் மழை குறைய விளைவு குன்றிப் பஞ்சம் ஏற்பட்டு வருவதால் மனிதர்க்கு ஆகாரப் பொருள்கள் கிடைப்பது அருமையாயிருக்கின்றது. அதனால், ஒவ்வொரு பொருளும் விலையேற்ற முடையதாயிருக்கின்றது. இருபது ஆண்டுகட்கு முன்னர் ஒரு ரூபா கொடுத்து வாங்கின ஒரு பொருளுக்கு இப்போது ஐந்து ரூபா கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்படி ஆகார வஸ்துக்கள் விலையேற்றமான காலத்தில், தனவந்தர்கள் கஷ்டமின்றி அவற்றை வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள். ஏழை ஜனங்கள் பணக்கஷ்டத்தால் கொஞ்சம் விலை குறைவான பொருள்களையே வாங்கப் பிரயத்தனப்படுகிறார்கள். நம்நாட்டில் வறிஞரே பலவழியிலும் மிகுந்திருக்கின்றன ராதலாலும், அவர்களாலேயே வியாபாரம் அதிகமாக நடக்க வேண்டியிருக்கின்ற படியாலும் அவர்களுக்குத் தக்க விலைகுறைவான சற்றுத் தாழ்ந்த பொருள்களையே வியாபாரிகள் விற்பனைக்குத் தயாரிக்க வேண்டியவர்களாகிறார்கள். அங்ஙனமாகும்போது இயற்கையில் உயர்ந்தனவாகவே உற்பத்தியாகும் பொருள்களைத் தாழ்ந்தவைகளாக்கும் ஒரு நூதன சிருஷ்டித் தொழிலை மேற்கொள்ளுகிறார்கள். அங்ஙனம் சிருஷ்டிப்பதிலும் தாங்கள் ஏழைகள் பொருளைக் கவர்ந்து பணக்காரராக விரும்பி அவ்வஸ்துக்களைக் குறைந்த செலவில் சிருஷ்டித்து அவற்றிற்கும் அதிகவிலை யேற்படுத்தி அதனை ஜனங்களுக்கு மிகவும் குறைந்த விலையாகத் தோற்றும்படி செய்கிறார்கள். இவ்வாறு தந்திரமாக அவர்கள் ஏற்படுத்தும் அதிக விலையும், மற்ற உயர்ந்த பொருள்களின் விலையை நோக்க ஜனங்களுக்குச் சகாயமானதாகவே தெரிகின்றது. வியாபாரிகள் செய்யும் இவ்வகைத் தந்திரத்தால் ஆகாரப் பொருள்களின் இயற்கை மாறுந்தன்மை அதிகரித்து விட்டது. அங்ஙனம் அதிகரிக்கவே, பணக்காரர்களுக்கு வேண்டுமென்று கூட உயர்ந்த இயற்கைப் பொருள்கள் வைப்பதையும் விடுத்து முழுவதையும் போலிப் பொருள்களாகவே அவர்கள் மாற்ற ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் எல்லோருமே இப்படிச் செய்யவில்லை. சுத்தமான பொருள்களை வைத்து விற்போருமிருக்கின்றார்கள். எனினும் அவர்கள் குறைந்த அளவாக இருப்பதால் மேகபடலத்தில் எங்கோ ஓரிடத்தில் தோன்றும் நக்ஷத்திரம் போல அருமையாக விளங்குகின்றார்கள். அவர்களைக்கண்டு சுத்தமான சரக்குகள் வாங்கப் பிரயத்தனப் பட்டால் நச்சுச் செடிகளே மிக்க ஓர் மலையில் ஒரிடத்தில் அருமையாயிருக்கும் சஞ்சீவியைத் தேடிக் கண்டுபிடிப்பது போன்றிருக்கின்றது.

 

மேற்கூறியபடி போலிச்சரக்கின் சிருஷ்டிகர்த்தாக்கள் ஏற்பட்டபின், உணவுப் பொருள்கள் எவ்விதம் இயற்கை மாற்றமடைகின்றன வென்றால் அவற்றுள் ஒவ்வொன்றையும் விவரமாக எடுத்துக் கூறுதல் எவராலுமியலாது. எனினும் சிலவற்றை மாத்திரம் விளக்கி எடுத்த விஷயத்தை முடிப்பாம்:

 

ஆகாரவஸ்துக்களில் அரிசிதான் பிரதானமானது. இதனை, வியாபாரிகள் படாதபாடெல்லாம் படுத்துகிறார்கள். முகத்தலள வையில் படி அதிகமாகும் பொருட்டும், எடுத்தலளவையில் நிறை அதிகரிக்கும் பொருட்டும் அளவுக்கு மிஞ்சித் தண்ணீர்த் தொட்டிகளில் நெல்லை ஊறவைத்துச் சகிக்க முடியாத துர் நாற்றம் கிளம்பிய பின் வேகவைத் துலர்த்தி அரிசியாக்கப் படுகின்றது. இதைக் கையிலெடுக்கும் போதே மூக்கைப் பிடித்துக்கொள்ளும் நாற்றம் கிளம்புகிறது; உலையிலிட்டாலோ ஈரற்குலை நடுங்குகிறது; சாதமாக்கி இலையிலிட்டாலோ தலை சுழலுகிறது; வாயிற் போட்டாலோ பாயிற்படுக்கும் நோய் பேய்போல் வந்து பீடிக்கிறது. இன்னும் இந்த அரிசியில் மரக்கால் அளவை அதிகப்படுத்தும் பொருட்டுக் கல்லும் மண்ணும் கலக்கப்படுகின்றன.

 

பருப்புவகைகளுடன் போலிப் பருப்பினங்கள் பல இரக்கமின்றிக் கலக்கப்படுகின்றன. அவை, பருப்புக்குள்ள குணங்களைக் கெடுத்து வெறுப்புக்கிடமான பல உபத்திரவங்களைக் கிளப்பிவிடுகின்றன. நெய்யோ ஐயோ! வென்று கூக்குரலிடக்கூடியதா யிருக்கின்றது. எருமை நெய்யாவது, பசு நெய்யாவது, கேவலம் ஆட்டு நெய்யாவது கலப்பில்லாமல் வாங்க வேண்டுமென்றால் அது முடிகிறதில்லை. நெய் வியாபாரிகள் செய்யும் பேதத்தை எழுதுவ தென்றால் கையும் நடுங்கும். இதில் பல தாழ்ந்த எண்ணெயினங்கள் சேர்ப்பது ஒரு பக்கமிருக்க, வாயினாலும் சொல்லத்தகாத சில அருவருக்கத்தக்க ஜீவ ஜெந்துக்களின் நிண வினங்களெல்லாம் மிஸ்ரம் செய்யப்படுகின்றன. நீரே பாலும் மோருமாக விளங்குகின்றது; மாவினங்களெல்லாம் வெண்ணெயாய் விட்டன. எள்ளின்தைலம் கலப்பில்லாமல் காண்பது அரிதாயிருக்கின்றது; வேர்க்கடலை எண்ணெயும், வேறுபல தாழ்ந்த எண்ணெய்களும் நல்லெண்ணெயாக விற்கப்படுகின்றன. கடுகில் போலிக்கடுகும், மிளகில் போலிமிளகும், சீரகத்தில் போலிச் சீரகமும், பெருங்காயத்தில் வெறுங்காயமும், ஏலரிசியில் நத்தைச்சூரி விதையும், கலக்கப்படுகின்றன. முத்துச் சோளக்கதிரின்மேல் உரோமம்போல் மூடிக்கொண்டிருக்கும் ஒரு விதமானவஸ்து சிவப்புச் சாயத்தில் தோய்க்கப் பெற்றுக் குங்கு மப்பூவுடன் கூட்டப்படுகின்றது. புளியைக்கண்டாலோ புலியைப் பார்த்தது போலிருக்கின்றது; அது, கொட்டையும், கோதும், கல்லும், மண்ணும், தூசியும், நீரும் சேர்த்து மிதித்துத் துவைக்கப்பட்டு மிக்க ஆபாசமாக விற்கப்படுகின்றது. வெல்லமோ சொல்லவேண்டிய தில்லை. கோணியின் நாரும், ஈயும், எறும்பும் செங்களிமண்ணும், சேர்த்து மிதிக்கப்பட்டும் கோணிகளில் போடப்பட்டும் கண்ணீர் விட்டழுவது போல் கசிந்தொழுகிக் கொண்டு வண்டியில் வருவதைக் கண்டால் அதனைக் கையினாலும் தொட மனம் வராது. இவ்விதமே எல்லாச் சரக்குகளும் இயற்கை மாறி வருகின்றன.

 

இவையன்றி அருவருப்பான விடங்களில் போட்டுப் புரட் டிய காய், கீரையினங்களும், மிக அழுகிப்போன வேறுவகைக் கறி பதார்த்தங்களும், அழுகித் துர்நாற்றம் வீசும் பழவகைகளும் விற் கப்படுகின்றன.

 

ஜனங்கள் வேறு விதியில்லாமல் இவற்றையெல்லாம் வாங்கி உணவாக்கி உபயோகிக்கிறார்கள். இவற்றுள் ஒன்றை உட்கொண்ட அன்றே நூதன வியாதி யொன்று தோன்றி விடுகின்றது. இப்படியே கெட்டுப் போன பற்பல வஸ்துக்களாலும் பற்பல வியாதிகள் தோன்றிக்கொண்டே யிருக்கின்றன. அவற்றால் உண்டாம் ஜனச் சேதத்திற்கும் கஷ்டத்திற்கும் அளவேயில்லை. இப்படி ஆகாரத்தினாலேயே அவஸ்தையை உண்டாக்கிக் கொள்ளும் ஜனங்கள் வைத்தியரிடம் சென்றால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்! அவர்களுக்கு மருந்தைக் கொடுத்துப் பத்தியம் சொல்லி அவர்களை அனுப்புகிறார்கள். அவர்கள் மருந்தைச் சாப்பிட்டு விட்டுப் பத்தியத்திற்கு அந்தக் கெட்ட வஸ்துக்களையே வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள். அதனால் வியாதி இலகுவில் நீங்குவதில்லை. அந்தோ! பரி தாபம்! வியாபாரிகள் அதிக விலை வாங்கிக்கொண்டாவது நல்ல பொ ருள்களை விற்பார்களானால் ஏழை மனிதர்களுக்கு இவ்வளவு கஷ்ட முண்டாகாது. இத்துன்பங்களைக் கவனித்து நீக்குவோர் யாவர்? ஜனங்களால் இவற்றை நீக்கிக் கொள்ளுதல் முடியாது. காருண்யமுள்ள ஆட்சியாளர் இவற்றைக் கவனிக்க வேண்டும், தவறினால் ஜனங்களுக்குச் சுகாதாரத்தை நாடும் நகர சங்கத்தார் இத்தீங்குகளை யொழிக்க முயற்சி செய்யவேண்டும். இவர்கள் ஜனங்களின் சுகாதார நிலைகளுக்கான பல வழிகளிற் கவனஞ்செலுத்தி வருகின்றார் களெனினும், இத்தகைய கெட்ட வஸ்துக்களின் விற்பனையை ஒழிப்பதில் அநேகமாக முயற்சி யெடுத்துக் கொள்ளவில்லை. எனினும் சில மேதாவிகள் தூண்டுதல் செய்தால் இவர்கள் கவனித்து இந்நன்மையைச் செய்தல் கூடும். இது செய்யமுடியாத காரியமன்று; அறிஞர்க்கு மிக எளிதானதே. எளிதாயினும், போலிப் பொருள்களும், கெட்ட உணவுப் பொருள்களும், அழுகற் சரக்குகளும் ஒழியும்படி செய்வதால் ஜனங்களுக்குப் பெரிய நன்மையுண்டு. நம் நாட்டினர் அளவிறந்த நன்மைகளை யடைய வேண்டுமென்னும் நோக்கத்துடன் ஊக்கங்கொண்டு பெரும் பெரும் காரியங்களிலெல்லாம் அரிய முயற்சி யெடுத்துவரும் பேரறிவாளர்களெல்லாரும் இச்சிறிய காரியத்தைச் செய்யத் துணிவார்களானால், இதனால் மனிதர்க்கு முக்கியமாகிய ஜீவாதாரம் ஏற்படும். அதன்மேல் பல நன்மைகளுண்டாவதோடு, தாங்கள் குறித்த பெருங்காரியங்களும் நிறை வேறும். இந்தப் பொது நன்மையான விஷயத்தில் மேதாவிகள் புத்தி செலுத்தும்படி இறைவன் அருள்புரிவானாக.


 ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - நவம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment