Friday, September 4, 2020

 

நோக்கெனும் பாசம்

(S. ராமசாமி ஐயங்கார்)

‘நோக் கென்ப தழகு பார்வை' என்பது நிகண்டு. இவ் விடத்துப் பார்வை என்பது பொருள். பாசம் என்பது இங்கு கபிறெனப் பொருள்படும்.

கண்பார்வை பலதிறப்படும். குளிர்ந்த பார்வை சில. இப் பார்வையில் அன்பு ததும்பி நிற்கும். ஓர் தாய் தன் மகவை அன்புடன் நோக்கும் நோக்கிதாம். ஒத்த அன்பின் வயத்தானோர் நோக்கு மீதேயாம். அருள் நோக்குமிதன் பாலதேயாம். காந்திஜியின் அருள் நோக்கிற் கிலக்கானோரிதை நன்கறிவர். கம்ப நாட்டாழ்வாரும் 'வேரியங் கமலை நோக்கும்' என அருள் நோக்கின் விசேடத்தைக் கூறிப் போந்தார். சாந்தம், சமாதானம், சாத்வீகம் யாவற்றையும் கலந்து காட்டும் இயல்பது இந் நோக்கு.

சில கொடும் பார்வையாம். இதற்கிலக் கானோர் அனல் பட்டு வாடும் கொடியே போல்வார். பெரும்பாலும் இது தம்மினும் பல் வகையில் வலியோர் பால் நிகழ்வது. இப் பார்வை அச்சத்தையும், திகிலையும், சமாதானமற்ற நிலைமையையும் உண்டாக்க வல்லது. இதன் பெயருக் கேற்ப கொடிய சுபாவம் வாய்ந்தது.

சில பார்வையில் விஷத்தன்மை கூடி நிற்கும். இது நோக்கப்பட்டோர் உடலுக்கு ஊறு செய்வதாகும். 'திருஷ்டி தோஷம்' எனக் கூறுவதும் அத் தோஷங் கழிப்பதற்கான செய்வதி லிருந்தே இப் பார்வையின் தன்மை அறியக் கிடக்கிறது. குழந்தைகளுக்கு உணவூட்டுங்கால் அவ் வுணவைப்பிறர் பார்த்தல் கூடா தென்பது நம்மவர் வழக்கு.

அச்சப்பார்வை, அலக்ஷியப் பார்வை, வீரப் பார்வை, இராஜபார்வை என்பவை பார்வைகளில் மற்றும் சிலவாம். அவை அவ்வப்பதப் பொருட் கேற்ற தன்மை வாய்ந்தவை. சர்வேந்திரியாணாம் நயனம் ப்ரதானம்' என்றார் வட மொழியாளர். என்னை யெனின் நயனங்களினின்று தோன்றும் பார்வை செயலாற்ற வல்லது. அத்துட னமையாது முகவேறு பாட்டிற்கும் காரணமாகிறது. இவை பொதுவாக ஆண் பெண் இரு பாலர்க்கும் உரித்து.

பெண் பாலர்க்கே உரித்தான பார்வை குறித்துத் தமிழ் மறையாங் குறள் மிக அழகாகக் காட்டி நிற்கின்றது. அவற்றுள் சில கீழே குறிப்பிடுதல் மிகையாகா.

‘அழகுடைய இவள் என் பார்வைக்கு எதிர்ப் பார்வை பார்த்தால் ஒரு தெய்வப் பெண் தன் சேனையுடன் வந்து என்னைத் தாக்குதல் போல்வது.'

'நான் கூற்றின் வடிவத்தை முன்பு கண்டறியேன். இன்று அது ஒரு பெண் தன் கண்களால் ஆடவர் மேல் போர் செய்யும் வடிவம் உடையது எனக் கண்டறிந்தேன்.'

'இந்தப் பெண் கண் பார்வையானது என்னை வருத்தலால் கூற்றம் போலவும் இருக்கிறது.'

 

'பிணையேர் மடகோக்கு' என ஓர் தலைவன் கூற்றாக அமைந்திருக்கின்றது.

இனி காதல் நோக்கைச் சிறி தாராய்ந்து கம்பநாடர் இது பற்றிக் கூறியிருப்பதைக் கவனிப்பாம். ஒத்த வயதும், ஒத்த குணமும், ஒத்த வழகும், ஒத்த அன்புமுள்ள நம்பியும் நங்கையும் ஒருவரை யொருவர் அன்பினுணர்ச்சி ததும்ப காதல் வயப்பட்டு நோக்கும் நோக்கே காதல் நோக்காம். கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின், வாய்ச் சொற்க ளென்ன பயனுமில்' என்னும் பேருரையால் இப் பார்வையின் அரியதன்மை ஈதென்பது அறியற் பாலது.

இராம பிரானும் சீதாப் பிராட்டியும் கொண்டு களித்த காதல் நோக்கைக் கம்பநாட்டாழ்வார் மிக மிக அழகு பெற எழுதி யமைத்திருக்கிறார்.

இராமன் மிதிலா நகரத்தைக் கண்ணுற்றுச் சென்றார். யானைகள் போர் புரிவதையும், கொடிகள் ஆடுவதையும் கண்டு மகிழ்ந்து சென்றார். செந்தாமரை மலர் போன்று பொலிந்து காண்கின்ற பொன்மதில் சூழ்ந்த மிதிலா நகருக்குள் பிரவேசித்தார். நெடிய வீதி கடை வீதி முதலிய வீதிகளை கடந்து சென்று இராஜ வீதியை அடைந்தார். ஜனக மஹாராஜன் அரண்மனையைக் கண்டார். கன்னிகா மாடத்தினருகில் அன்பின் மிக்க பேடொடு ஆணன்னங்கள் ஆடும் மூன்றில் கண்டு அவ் விடத்துச் சமீபமாய் நின்றார். அது போழ்து அரண்மனைக் கன்னிகா மாடத்தில்,

''உமையா ளொக்கும் மங்கைய ருச்சிக்கரம் வைக்கும்

கமையாள் மேனி கண்டவர் காட்சிக் கரைகாணார்

இமையா நாட்டம் பெற்றில் மென்றா ரிரு கண்ணால்

அமையா தென்றா ரந்தரவா னத்தவ ரெல்லாம்.”

 

என்று புகழத்தக்க அழகமைந்த பெண்ணாம் சீதாபிராட்டி வந்து நின்றாள். தன் மேனி யழகாலும் இன் சொலாலும் யாவரையும் ரமிக்கச் செய்யும் விசேடத்தால் இராமன் என்று பேர் படைத்த அழகனும் பிராட்டியா மழகியும் ஒருவரை யொருவர் நோக்கினர். இந் நோக்கின் மாண்பை கம்பர் மிக அழகு பெறக் கூறுகின்றார்.

“எண்ணரு நலத்தினா ளினைய ணின்றுழி

கண்ணொடு கண்ணிணை கவ்வியொன்றை யொன்

றுண்ணவு நிலைபெறா துணர்வு மொன்றிட

அண்ணலு நோக்கினா னவளு நோக்கினாள்.”

 

நினைத்தற்கு மரிதான அழகையுடைய சீதாபிராட்டியார் அங்கு நின்ற காலத்தில் ஒருவர் கண்களோடு மற்றொருவர் கண்ணினைப் பற்றி ஒன்று ஒன்றினை மற்றொன்று அனுபவித்துக் கொண்டிருக்கவும் தத்த மிடங்களில் நிலை பெற்றிராமல் இருவரறிவும் ஒற்றுமைப் படும்படி இராமபிரானும் நோக்கினர்; சீதாபிராட்டியும் நோக்கினா ளென்பதாம். இந் நிலை பார்த்தற்குஞ் சொல்லுதற்குமே யன்றி நினைத்தற்கு மரிது. காம மேலீட்டை யுடைய ராயினும் மாதர் ஆடவரை முன்பு நோக்க லாகா தென்பது தோன்ற அண்ணலு
நோக்கினா னவளு நோக்கினாள்' என்ற நயம் பெரு மகிழ்ச்சி தருவதாகும். இப் பார்வைகள்
வகள் இருவரையும் ஓராவிற் கிரு கோடு போல ஒருவயப் படுத்தின. சீதா பிராட்டியி னுடைய இரு கண்களி னின்றுந் தோன்றிய பார்வை இரு கூரிய வேலே போன்று மிக்க உரம் பொருந்திய இராமபிரான் மார்பகத்தே சென்றாழ்ந்தன. உரம் பொருந்திய
மார்பகம் ஓர் இரும்புப் பெட்டியே போன்றதாம். அதனுள்ளிருக்கும் உள்ளமாகிய சொத்தைத் தனக்கு உரித்தாக்கிக் கொள்ளத் தன் பார்வையாம் திறவு கோல் கொண்டு திறக்க முயல்கின்றார் பிராட்டி. சீதாபிராட்டியின் உள்ளத்தைக் கவர இராமபிரானும் அதே தொழிலி லீடுபடுகின்றார். சீதா பிராட்டி பிறவிடத்து 'என் கண்வழி நுழையு மோர் கள்வனே கொலாம்' என்பதும் 'என் உள்ளங்கவர் கள்வன்' என் வேறு பிறரும் கூறியிருப்பதும் இங்கு கவனிக்கற் பாலது. இவ்விருவர் தொழிலும் முடிந்தன. ஒருவருள்ளத்தை ஒருவர் அடைகின்றனர். அங்கோர் போராட்டம் நிகழ்கின்றது. ஒருவருள்ளத்தை மற்றவர் தம்மிடம் ஈர்த்து வைத்துக் கொள்ள முயல்கின்றார். ஒருவருள் எத்தை மற்றவர் கட்டி இழுக்கின்றார். அவர்களுக்குக் கபிறேது? அக் கயிறு தான் நோக் கெனும் பாசம். அன்பும், குளிர்ச்சியும், ஆர்வமும் நிறைந்த பார்வை இப் பார்வை கொண்டு ஒருவரை யொருவர் கட்டலாம்.

“பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணித்

தொருவரை யொருவர் தம்முள்ள மீர்த்தலால்

வரிசிலை யண்ணலும் வாட்க ணங்கையும்

இருவரு மாறிப்புக் கிதய மெய்தினார்”

 

ஒருவாழகை யொருவ ரனுபவித்து, பார்வை யென்கிற கயிற்றினாற் கட்டி ஒருவரை மற்றொருவருடைய மனமானது இழுத்தலால் இராமபிரானும் சீதா பிராட்டியுமாகிய இருதிறத்தாரும் மாறிப் புகுந்து ஒருவரிதயத்தை யொருவரடைந்தார் என்பதனால் இந் நோக்கின் வலிமைதா னென்னே யென அறியலாகும்.

      இராமனது பார்வை சீதையை அவன் வயப்படுத்தியது. சீதை தன் செயலற்று நின்றாள். அவளுக் குரித்தான அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி யாவற்றையும் இப் பார்வை இராமன் பாற் சேர்த்தது. அவள் மனமும் சௌந்தர்யமும் இப் பார்வையாம் கயிற்றினா லீர்க்கப் பட்டு இராமன் பின்னே சென்றன. என்னே இப் பார்வையின் வன்மை!

சீதாபிராட்டியும் இது கண்டு ஆச்சரிய முற்று,

“பெண்வழி நலனொடும் பிறந்த காணொடும்

எண்வழி யுணர்வுநா னெங்குக் காண்கிலென்

மண்வழி நடந்தடி வருந்தப் போனவன்

கண்வழி நுழையுமோர் கள்வனே கொலாம்”

எனக் கூறி நிற்கின்றாள்.

சீதா பிராட்டியின் நோக்கிற் கிலக்கான இராமபிரானும் தன் மனம் சீதா பிராட்டியின் பாற் போய் லயித்து விட்டதைக் குறித்து ஆச்சரியமுற்று,

'ஏகுநல்வழி யல்வழி என் மனம்

ஆகுமோ வதற் காகிய காரணம்

பாகுபோன் மொழிப் பைந்தொடி கன்னியே

ஆகும் வேறிதற் கையுற வில்லையே’

 

எனத் தன் மனம் பிறரால் கொள்ளை கொண்டு போகப் பட்டதைக் குறித்துக் கூறி யாறுத லடைகின்றார்.

      எனவே இராமபிரானும் சீதா பிராட்டியும் நோக் கெனும் பாசத்தால் கட்டுண்டு இருவரு மொருவராயினர்.

எனவே குளிர்ந்த தன்மையும், அருள் வழிந்தோடும் பான்மையும், மிக்க அன்பின் நிறைவையும் கொண்ட கண்ணோக்கு பல அரிய செயலாற்றுந் தகைத்து என்பது பெறப்படுகின்றது. உலகத்து ஒருவரை மற்றவர் தம் வயப்படுத்தி நன் மார்க்கத்திலுய்க்க வேண்டின் இரு நோக்கு இன்றி யமையாததாகும். காந்திஜீ ஒவ்வொருவருடைய உள்ளத்தையும் தம் வயப் படுத்துவது இத்தகைய அன்பு மிகுந்த நோக்காற்றா னென்பது போதரும். அவரது பொக்கை வாய்ச் சிரிப்புடன் இந் நோக்கு கலந்து காண்போர் அடையுமின்பம் என்னே என்னே!

இராமன் சீதைபால் நிகழ்ந்த காதல் நோக்கே போன்ற நோக்கின் தன்மையால் ஒரு தலைமகனும் தலைமகளும் மனங் கட்டுண்டு ஒன்றுபட்டு அவர்கள் ஒருவரை யொருவர் 'மணந்து நடத்தும் இவ் வாழ்க்கை எத்துணை சிறப்பினதாகு மென்பதையும் நாமிங்கு அறிதல் வேண்டும். இவ்விராமாயணப் படிப்பினை பிற்போக்காளருக்கும் பிடிவாத குணமுடைய பெற்றோர்க்கும் அறிவுச் சுடர் கொளுத்துவதாகும்.

      அன்பு செறிந்து குளிர்ச்சி மலிந்து அருள் வழிந்தோடும் நோக்கால் நம் “ஆனந்தன்'' நம்மை நோக்குகின்றது. நம்முள்ளத்தை யது தன் வயப் படுத்துகின்றது. எனவே அதன் அருள் நோக்கிற்கு நா மிலக்காதல் மிக மிக அவசியமாம். அதனால் மடையும் பயன் மிகப் பெரிது.

ஆனந்த போதினி – 1937 ௵ ஜுன் ௴

 



No comments:

Post a Comment