Friday, September 4, 2020

நிலமெங்கும் நலமுண்டு 

 

நீலக் கடலாடை தரித்த இப்பரந்த புவியில் வாழும் மனிதர்கள் எத்தனை கோடியுளர்! அவர்களிடை வழங்கி வரும் ஜாதிமதப் பாகுபாடுகள் எத்தனை ஆயிரம்! அவர்களுடைய வாழ்க்கையில் காணப்படும் விசித்திர விநோதங்களோ எண்ணில் அடங்கா! பற்பல தேசத்தவர்களுடைய நடையடை பாவனைகளிலும் குணாதிசயங்களிலும் உள்ள வேறுபாடுகளோ, எண்ணுந்தோறும் விரிதலால் முடிவு காணவொண்ணாத தன்மை பனவாயுள். எனினும் கோடிக் கணக்கிலும் கோடிச்காண வியலாது விகற்பித்துக் காட்டும் மானிட இயற்கையை சற்றே நடுவு நிலைமை பிறழாத மனதுடன் ஆராய்ந்தால், நாம் ஓர் மகத்தான உண்மையை உணர்கின்றோம். சிற்சில அம்சங்களில் வித்தியாசங்கள் தோன்றிய போதிலும், மனிதர்கள் எல்லோரும் பெரும்பாலும் அநேக அம்சங்களில் ஒத்திருக்கின்றார்கள் என்பதை உன்னும் போதெல்லாம் நமது மனதில் இன்ப உணர்ச்சியே எழுகின்றது.

 

நாம் பிறதேசத்தவர்களைக் காணும் பொழுதும், அவர்களைப் பற்றிக் கேள்விப்படும் பொழுதும் நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாஸங்களைத் தான் முதல் முதலில் உணர்கிறோம். இது மிகவும் சகஜமா யிருக்கிறது. ஆனால் மானிட சமூகத்தின் பொது நலத்தையே எக்காலும் தமது நெஞ்சில் பாராட்டும் அருளுடையோர் பல மனிதர்களும் எந்தெந்த விஷயங்களில் ஒத்திருக்கின்றார்கள் என்பதை உணரவே முயற்சிப்பார்கள். இச் சிறந்த மனப்பான்மையின் மகிமை யாவரும் அறிதல் அவசியம். ஏனெனில் குறித்ததோர் நிலைமையில் பெரும்பாலும் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி நடந்து கொள்வதும், இன்பத்தையோ, துன்பத்தையோ, சுகத்தையோ, கஷ்டத்தையோ பயக்கும் சம்பவங்கள் எல்லா மனிதரையும் சமமாகவே பாதிக்கிறது என்பதும் நாம் கண்கூடாகக் கண்டதன்றோ!

 

மேற்கண்ட விஷயங்களை உய்த்துணர்தல் ஜகமெங்கும் ஸமாதானம் நிலைபெறுவதற்கு இன்றியமையாதது. எல்லாத் தேசத்தவர்களும் அந்நிய நாட்டார்களையெல்லாம் தம்மைப்போலவே சுக துக்கங்களுக் காளாகி, பற் பல மனோ சக்திகளும் வாய்க்கப்பெற்று உயிர் வாழும் மனிதர்களின் தனித் தனிப் பகுதிகள் என்று எண்ணும் மனப்பான்மை உலகில் நிலைபெற்று விட் டால் புவியெங்கும் சாந்தம் பூரண உருவோடும். ஒளியோடும் திகழாதிருக்குமோ?

 

சில தீர்க்கதரிசிகள் இனி வருங்காலத்தில் ஒவ்வொரு தேசத்திலுள்ள சிறுவர்களும் சிறுமிகளும் பல அந்நிய நாடுகளுக்குச் சென்று கல்விப் பயிற்சி பெற வேண்டிய பிரமேயம் ஏற்படக் கூடும் என்று கூறுகிறார்கள். இவ் வகைப் பயிற்சி மாணவர்களுக்கு பிறநாடுகளைப் பற்றிய அறிவை அநுபவ முறையில் போதித்து அவர்களது மனது விரிந்து விசாலமான கொள்கைகளையே நாடி நிற்கச் செய்யுமன்றோ! இவ்விதம் மருளற்றுத் தெளிவு செறிந்த காலம் வருமுன், ஒவ்வொரு நாட்டாரும் அவரவர் தேசத்தில் கையாண்டு வரும் போதனா முறைகளில் சில நூதன சீர் திருத்தங்களைச் செய்வது நல்லது. விசேஷமாக மாணவர்களுடைய தேசசரித்திர பாட புத்தகங்களைச் சீர்திருத்துவது நல்ல அடிகோலி வைப்பதாகும்.

 

ஒவ்வொரு தேசத்திலும் கற்பிக்கப்படும் தேச சரித்திரங்களில் பெரும் பாலும் உண்மையானது மறைந்தும் விகற்பித்தும் காணப்படுகிறது. தகாலத்தில் நிகழ்ந்த சம்பவங்களில் முக்கியயமானவைகளில் உண்மை வடிக்கைகள் இன்னவையென்று இச் சரித்திரங்களினின்றும் காண்பதரிது. வாடர்லூ (Waterloo) யுத்தத்தில் பிரெஞ்சு சக்கிரவர்த்தியான நெபோலியனை முறியடித்தது இரண்டு ஜர்மானிய தளகர்த்தரே என்று ஜர்மானியர் பயிலும் தேச சரித்திரங்கள் போதிக்கின்றன. அதே யுத்தத்தைப் பற்றி எழுதும் ஆங்கிலேய சரித்திர ஆசிரியர்கள் வாடர்லூ வெற்றியை தமது தளகர்த்தரான வெல்லிங்டனுடைய ஒப்பற்ற போர்த் திறமைக்கும் ஆங்கிலேயருடைய வீரத்திற்கும் எடுத்துக் காட்டாக விளங்கும் தனிச் சிறப்பு வாய்ந்த சின்னமாகப் புகழ்ந்து கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் நடந்த சிபாய்க் கலகத்தைப் பற்றி எழுதும் ஆங்கில சரித்திர நூலாசிரியர்கள் ஆங்கிலேயர் நீதிதவறாது நடந்து கொண்டதாகவும் இந்தியர்களே இகழத்தக்க அட்டூழியங்களைச் செய்தவரென்றும் நிரூபணம் செய்கிறார்கள். அக்கலகத்தைப் பற்றிய நடவடிக்கைகளை ஆராய்ச்சி செய்த இந்தியர் ஆங்கிலேயரும் நீதி நெறிவழுவி அநேக கொடுமைகளைச் செய்ததாகக் கூறுகிறார்கள். எனவே ஒரே சம்பவத்தை வர்ணிக்கும் பல தேச சரிதங்கள் நம்மை ஐயப்பாடுகளில் மயக்குகின்றன. தமது தாய் நாட்டை அபரிமிதமாகப் பெருமைப்படுத்திப் பேசுவதும் பிற தேசத்தின் சிறப்பைச் சிறுமைப்படுத்தி அவைகளிடத்து வெறுப்பூட்டுவதும் தற்கால தேச சரித்திர நூல்களின் இயல்பாக இருப்பது வெளிப்படையான உண்மை.

 

இப்போதனைகள் மாணவர் மனதில் பல தீங்குகளை விளைக்கின்றன. அவர்கள் தமது தேசம் பிரதேசங்களை அடக்கி ஆள விசேஷ உரிமை பெற்றிருப்பதாக எண்ணுவார்கள். தமது தேசத்தின் சுபிஷத்தைக் கோரியே உலகம் படைக்கப் பட்டிருப்பது போன்ற பாவனை அவர்கள் மனதில் உருக்கொள்ளும். தமது தேசத்தவரும், அவரது செய்கைகளும், தமது தேசத்தில் விளையும் விளைபொருள்களும் உலகிலேயே நிகரற்று நிற்கும் சீருடையன வென்று செருக்குக் கொள்வார்கள். பிறநாட்டாருடைய எளிய நிலைமையைக் கண்டு தாம் அநுதாபம் காட்டுவதே தாம் அவர்களுக்குச் செய்யும் பேருதவி என்ற கருத்துத் தோன்றி அவர்களிடம் மமதையை வளர்க்கும்.

 

இவ்விதமான வரம்பு கடந்த சுயமதிப்பு ஸமாதான உடன்படிக்கைகளில் ஸம்பந்தப்படும் க்ஷியினருடைய உள் கருத்தில் நின்று ஸமாதான உணர்ச்சிக்கே கேடு விளைக்கும் சம்பவங்களை சரித்திரத்தில் காணலாம். உதாரணமாக காங்கிரஸ் உடன் ஸமாதானம் செய்து கொள்ள இந்திய அரசாங்கத்தார் ஒப்புக் கொள்ளச் சம்மதித்த நிபந்தனைகளை எடுத்துக் காட்டலாம். அவைகளிலிருந்து இந்திய அரசாங்கத்தார் தமது சுயமதிப்பையே பெரிதாகக் கருதினார்கள் என்றுணரலாம். தமது மதிப்பே பிறர் மதிப்பினும் மாணப் பெரிதென்று நினைக்கும் மனப்பான்மை எவ்வித ஸமரஸ உணர்ச்சிக்கும் முற்றிலும் விரோதமானது. இம் மனப்பாபான்மையினாலன்றோ நமது நாட்டில் சென்ற ஆண்டில் தண்டப்பிரயோகங்களும், சிறைவாஸ தண்டனைகளும் அநேகருக்கு சம்பவித்தன!

 

வையக முழுதும் சாந்தம் என்னும் முழுமதி விளங்கி அன்பும் அருளுமாகிய தண்ணிலாவை விரிக்க வேண்டுமென்ற விழைவு எவ்ரெவர் நெஞ்சத்தில் ஓங்காரமாக நிற்கிறதோ அவர்களெல்லாரும் மனிதர்க்கு நிலமெங்கும் நலமுண்டென்றும், நல்லோர் எத்தேசத்தவராயினும் போற்றத்தக்கவரென்றும் வற்புறுத்த வேண்டும். பிறநாட்டாரிடம் காணப்படும் வேற்றுமைகளைக் கண்டு அவர்களிடம் வெறுப்பையோ பகைமையையோ காட்டாது அவர்களிடம் பரஸ்பர நட்பும், அன்பும், மரியாதையும் காண்பித்துப் பழக வேண்டும். மனிதர்களிடையே காணப்படும் வேற்றுமைகள் ஒருவரை யொருவர் விரும்பி நேசிக்கவும், பரஸ்பர வாஞ்சையினால் மானிட சமூகத்தின் பெருமையும் இன்பமும் ஓங்கித் தழைத்து, வாழ்க்கையில் கைப்பின்றி இனிப்பும், ரம்மியமும், ரவிகரமும் மல்கவே ஈசுவரனால் ஏற்படுத்தப்பட்டனவன்றோ!

 

ஆனந்த போதினி – 1931 ௵ - டிசம்பர் ௴

 

No comments:

Post a Comment