Friday, September 4, 2020

 

நாலடியார் வசனம்

தொகுப்பு

பூ. ஶ்ரீனிவாசன்,

தமிழ்ப்பண்டிதர், சித்தூர்.

 

 

 

 

மாத இதழ்

1925 ஜுலை யில் இருந்து 1926 ஆகஸ்ட்டு வரை

உள்ள இதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டது

 

 

 

 


தொகுப்பில் உள்ள அத்தியாயங்கள்

 

கடவுள் வாழ்த்து. 4

1 - ம் அதிகாரம் - செல்வ நிலையாமை. 4

2 -ம் அதிகாரம் - இளைமை நிலையாமை. 5

3 - ம் அதிகாரம் - யாக்கை நிலையாமை....... 7

4 - ம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல். 8

5 - ம் அதிகாரம் தூய தன்மை. 10

6 - ம் அதிகாரம் - துறவு. 11

7 - ம் அதிகாரம் சினமின்மை. 13

8 - ம் அதிகாரம், பொறையுடைமை. 14

9 - ம் அதிகாரம். பிறர் மனை நயவாமை....... 16

10 - ம் அதிகாரம். ஈகை. 17

11 - ம் அதிகாரம். பழவினை. 19

12 - ம் அதிகாரம்  மெய்ம்மை. 20

13 - ம் அதிகாரம் தீவினையச்சம். 22

14 - ம் அதிகாரம். கல்வி.... 23

15 - ம் அதிகாரம்.  குடிப் பிறப்பு. 25

16 - ம் அதிகாரம் - மேன்மக்கள்.. 26

17 - ம் அதிகாரம் - பெரியாரைப் பிழையாமை. 28

18 - ம் அதிகாரம் - நல்லினஞ் சேர்தல். 29

19 - ம் அதிகாரம் - பெருமை....... 31

20 - ம் அதிகாரம் - தாளாண்மை (முயற்சி) 32

21 - ம் அதிகாரம்சுற்றந்தழால்.. 34

22 - ம் அதிகாரம் - நட்பாராய்தல். 35

23 - ம் அதிகாரம் - நட்பிற் பிழைபொறுத்தல். 37

24 - ம் அதிகாரம் - கூடா நட்பு. 39

25 - ம் அதிகாரம் - அறிவுடைமை. 40

26 - ம் அதிகாரம் - - அறிவின்மை. 42

27 - ம் அதிகாரம் - - நன்றியில் செல்வம். 43

28 - ம் அதிகாரம் ஈயாமை. 45

29 - ம் அதிகாரம் - இன்மை....... 46

30 - ம் அதிகாரம் - மானம். 48

31 - ம் அதிகாரம் - இரவச்சம். 49

32 - ம் அதிகாரம் - அவையறிதல். 51

33 - ம் அதிகாரம் - புல்லறிவாண்மை. 52

34 - ம் அதிகாரம் - பேதைமை. 54

35 - ம் அதிகாரம் - கீழ்மை....... 55

36 - ம் அதிகாரம் - கயமை....... 57

37 - ம் அதிகாரம் - பன்னெறி (பல் x நெறி) 58

38 - ம் அதிகாரம் - பொதுமகளிர். 60

39 - ம் அதிகாரம் - கற்புடை மகளிர். 61

40 - ம் அதிகாரம் - காமநுதலியல். 63

 


 

நாலடியார் வசனம்

 

கடவுள் வாழ்த்து.


வானிடு வில்லின் வரவரியா வாய்மையால்
கானிலந் தோயாக் கடவுளை - யானிலம்
சென்னியுற வணங்கிச் சேர்தும் எம்முள்ளத்து
முன்னியவை முடிக வென்று.

 

1 - ம் அதிகாரம்.

செல்வ நிலையாமை.

 

மனைவியானவள் சமீபத்தில் உட்கார்ந்து அறுசுவையோடு கூடிய உணவை ஊட்ட முதற்கவளம் உண்டு (இது நன்றாயில்லை இது நன்றா யில்லை யென்று) மறுகவளத்தை நீக்கி, வெகு கஷ்டத்தோடு உண்ட செல்வந்தர்களும், மிக்க ஏழைகளாகி மற்றவர்களிடஞ் சென்று 'அய்யா! அம்மா! பசி பிராணன் போகிறது, சிறிது கூழ் கொடுங்கள்' என்று பிச்யையெடுப்பார்கள். ஆகையால் செல்வமானது ஒரு பொருளாக வைத்து மதிக்குந் தன்மையுடையதல்ல.                                                             (1)

 

செல்வமானது நடு நிலைமை பொருந்த ஒருவரிடத்தும் நிலைத்திராமல், வண்டிச்சக்கரம் போலப் போவதும் வருவது மாகச்) சுழன்று கொண்டே யிருக்கும். ஆதலால் (ஓ மனிதனே!) நீ கஷ்டப்பட்டு நல்ல வழியில் சம்பாதித்த பொருள் உன்னிடமிருக்கும் பொழுதே பலர்க்குமிட்டு நீயும் உண்ணக்கடவாய்.              (2)

 

யானையின் முதுகின் மேல் வெகு அலங்காரத்துடன் வீற்றிருந்து வெண்கொற்றக் குடையின் நிழலில் சதுரங்க சேனைக்குத் தலைவராய்ச் சென்று கொண்டிருந்த ராஜாக்களும், (சுக போகத்துக்குக் காரணமான நல்வினை நீங்க) தீவினையானது தோன்றிக் கெடுத்தலால், நிலைமை வேறுபட்டுத் தங்கள் மனைவியரைப் பகைவரபகரித்துக் கொள்ளக் கேட்டைவார்கள்.                                                   (3)

 

(ஒ மானுடா!) உன் ஆயுளின் நாட்கள் கழிந்தன. மிக்க கோபத் தோடு (உன்னைப் பிடித்துச்செல்ல) எமன் வந்துவிட்டான் வந்துவிட்டான். ஆதலால் உன்னிடத்திலுள்ளவைகளாகிய உன் பொருள்கள் நிலை பெற்றிருக்கமாட்டா என்றறிந்து, பொருந்திய ஒருவகைத் தருமத்தைச் செய்வதாயிருந்தால், விரைவில் செய்.       (4)

 

ஏதாவது ஒரு பொருள் தம்மிடத்திலிருக்கப்பெற்றால் அதைப் பின் னுக்காகுமென்று பிடித்திராமல் உடனே தருமஞ் செய்தவர்கள், தன் தொழிலில் தவறுதலில்லாத கொடிய எமன் பாசத்தாற் பிணித்துக் கூட்டிச்செல்லும் பாலைவனத்தின் வழியினின்றும் நீங்கிப் பிழைத்துப்போவார்கள்.                                                         (5)

 

(இவ்வளவென்று) தமக்களவு செய்து கொள்ள நாள்கள் தம்மளவைக் கடவா. எமனைத் தப்பி நீங்கி அவன் குறிப்பைக் கடந்து பிழைத்தவர்கள் இவ்வுலகில் ஒருவருமில்லை. நாளையதினமே 'தழீ இந் தழீஇம்' என்னும் ஓசையுடனே பிணப்பறை அடிக்கப்படும். ஆகையால் மிகுந்த பொருளைத் தேடிவைத்திருப்பவர்களே! தருமஞ் செய்யுங்கள்.                                                                 (6)

 

(ஓ மனிதர்களே!) எமனானவன் சூரியனை அளவு கருவியாகக் கொண்டு உங்கள் ஆயுள் காலத்தை உண்டு கொண்டேயிருக்கிறான். ஆகையால் யாவ ரும் மிக்க அருமையாகிய மனிதப்பிறவி வீணாகாத படி பிறந்தும் பிறவாமல் மோக்ஷத்திலிருப்பவர்களைப் போல் மிகுந்த தருமங்களைச் செய்து கிருபை யுடையவர்களாகுங்கள்.                                                          (7)

 

நாம் செல்வமுடையவர்களென் றெண்ணிக்கொண்டு, தாம் செல்லு மிடமாகிய மோக்ஷ நரகங்களைப் பற்றியும், மறுமையைப் பற்றியும் சிறிதும் நினையாத மூடர்களுடைய செல்வமானது, இராக்காலத்தில் கரிய மேகம் வெளிப்படுத்தும் மின்னலைப் போல் தோன்றி உடனே இருந்த இடமும் தோன்றாமல் முழுதும் அழிந்துவிடும்.                                                                (8)

 

ஒருவன் (மிகுந்த செல்வத்தைப் பெற்றிருந்தும்) தானும் உண்ண மாட்டான்; மதிப்பை நிலைநிறுத்தமாட்டான்; மேம்பட்ட கீர்த்தியைத் தேடமாட்டான்; தான தருமங்களைச் செய்யமாட்டான்; (இவ்வாறு எவ் வகையிலும் உபயோகப்படுத்தாமல்) வீணாக அந்தப் பொருளைப் பத்திரப்படுத்திக் காவல் செய்திருப்பானானால், (எந்த விதத்திலும் பிரயோஜனப் படாத பொருள் இருந்தும் இல்லாதது போலவேயாகும். (ஆகையால்) அவன் 'ஐயோ பாவம்! அவன் பொருளில்லாதவனே'என்று, எல்லோராலும் எண்ணப்படுவான்.                                                                            (9)

 

ஆகாயத்தை யளாவியுள்ள மலைகள் பொருந்திய நாட்டையுடைய பாண்டியனே! நல்ல உடைஉடுக்காமலும், நல்ல உணவு உண்ணாமலும், தம்முடலை வருத்தியும், கெடுதலில்லாத நல்ல தருமங்களைச் செய்யாதவர்களாயும், (இவ்வாறு யாதுங்) கொடாமல் திரவியத்தைத் தேடி வைத்தவர்கள் அச்செல்வத்தை வீணில் இழப்பார்கள். புஷ்பங்களிலுள்ள தேனை ஆராயந்து சம்பாதித்து (தாமும் உண்ணாமல் பிறர்க்கும் கொடுக்காமல்) சேர்த்துவைக்கும் தேனீக்களே இதற்குச் சாட்சியாம்.                  (10)


 
2-ம் அதிகாரம்.

இளைமை நிலையாமை.

 

நல்ல விவேகிகள் (இளைமைப் பருவம் நீர்க்குமிழிபோன்றதாகலின், விரைவில் நீங்கி யாதொன்றும் செய்யமுடியாத) நரையோடு கூடிய மூப்புப் பருவம் வந்து விடுமென்றெண்ணி, இளைமைப் பருவத்தேதானே இவ்வாழ்க்கையை விட்டு நீங்கினார்கள். குற்றமுள்ளதும், அநித்தியமானது மாகிய இளைமையை இச்சித்தவர்கள் தடியை ஊன்றிக்கொண்டு துன்பத்துடன் எழுந்திருப்பார்கள்.                                (1)

 

(மரணகாலத்தில்) உறவின் முறையாகிய பாசங்களும் அற்றுப்போயின. (உபயோக முள்ள பொழுது மிக்க அன்புவைத்திருந்த) மாதர்களும் அன்பில் குறைந்தார்கள். அன்பாகிய பந்தங்களும் அவிழ்ந்தன. ஓர் கப்பலானது கடலில் மூழ்குங் காலத்துண்டாவது போன்ற அழுகுரல் தோன்றிவிட்டது. ஆதலின் வாழ்க்கையினால் என்ன பயன் உண்டாகும்? (இது விஷயத்தைச் சற்று) உனக்குள்ளாகவே ஆலோசித்துப்பார்.                           (2)

 

சொற்கள் தளர்ந்து, கோலை ஊன்றிக்கொண்டு, நடை தள்ளாடி, பற்கள் உதிர்ந்து, உடலானது பிறரால் பழிக்கப்படுமளவும் இவ்வாழ்க் கையிற் பொருந்தி, ஆசையின் வழியே செல்லும் தன்மை யுடைபவர்களு க்கு (மறுமைக்குப் பாதுகாப்பாகும்) கோட்டையாகிய நன்மார்க்கத்திற் குச் செல்லும் வழி இல்லையாகும்.                                   (3)

 

தன் தாயின் கைக்கோலானது தன் கைக்கோலான காலத்தில், சரீரம் வளைந்து, தளர்ந்து, தலை நடுக்கங்கொண்டு, அத்தடியை ஊன்றிக் கொண்டிருந்து, விழுந்து சாகுந்தன்மையுடைய இப்பெண்ணிடத்திலும் உறுதியில்லாத காமமயக்கங் கொண்டிருக்கும் மாந்தருக்கு எப்போதும் துன்பமே உண்டாகும்.                       (4)

 

என் தாயானவள் என்னையிங்குப் பெற்று வைத்து விட்டுத் தனக்கு ஒரு தாயைத் தேடிக்கொண்டு போய்விட்டாள். அவளுடைய தாயும் அவ்வாறே சென்றாள். ஆகையால் இவ்வுலகமானது தாயைத் தாயைத் தேடிச் செல்லும் ஏழைமையுடையது.            (5)

 

வெறி யாடல்களைச் செய்யும் பலிக்களத்தில், பூசாரியானவன் கையிற் கொண்டிருக்கின்ற தளிர் நிறைந்த வாசனை பொருந்திய மாலை தன்னெதிரில் அசைந்து தொங்கக்கண்டு, பலியின் பொருட்டு நிறுத்தப்பட்டிருக்கும் ஆடானது அதை உணவாக உண்டு இன்பம் அடைந்தது போன்ற, நிலை யில்லா (இளைமையாலுண்டாகும்) மகிழ்ச்சி அறிவுடையவர்களிடத்தில் இல்லை.                                              (6)

 

இளைமையானது குளிர்ச்சிபொருந்திய சோலையிலிருக்கும் பலனைத் தரும் எல்லா மரங்களிலும் பழங்கள் உதிர்ந்து போவது போன்றது. ஆதலால் மிகப் பெரிய வேல் போன்ற அழகிய கண்களையுடையவளென் நு இப்பெண்ணை இச்சியாமலிருங்கள். பின்பு இப்பெண்ணும் உடல் வளையப்பெற்று கைக்கோலையே கண்ணாகவுடையவளாவாள். (7)

 

('ஐயா!) உமக்கு எவ்வளவு வயதாயிற்று. பற்களின் பலம் எப்படி யிருக்கிறது. மிருதுவும் கடினமுமாக இருக்கும் இருவகைப் பதார்த்தங்களையும் புசித்தீரோ?' என்று வரிசையாக உங்கள் உள்ளம் பிறரால் ஆராய்ச்சி செய்யப்படுதலால், பெரியோர்கள் உடலின் தன்மையைப் பொருளாக நினையார்கள்.                                   (8)

 

பெருங் காற்றடிக்கும் பொழுது முற்றியிருந்த பழங்கள் மாத்திர மன்றி, நல்ல காய்களு முதிர்ந்து போதலுமுண்டு. (வயது முதிர்ந்தவர் கள் மாத்திரமல்ல இளைஞரும் கொள்ளை நோய், பெருவாரி முதலியன வந்தால் மாண்டு போதலுமுண்டு.) ஆகையால் நாம் சிறுவர்கள்; தருமகாரி யங்களைப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்'என்று நினையாமல், கையில் பொருளிருக்கும்பொழுதே ஒளிக்காமல் தருமஞ் செய்யுங்கள்.     (9)

 

ஆள்களைத் தேடிக்கொண்டே திரியும் தயையில்லாத எமன் இருக்கின்றானாதலால், (மறுமைக்குப் பயன்படும் தருமமாகிய) கட்டுச்சோற்றை இளைமையிலேயே தேடிக்கொண்டு பிழையுங்கள். கருப்பத்திலுள்ள சிசுவைப் பதுங்கச் செய்து (பத்து மாதம் சுமந்த) தாயானவள் அலரும்படி பிள்ளையைக் கொண்டு போவதால், அத்தகைய எமனுடைய வஞ்சகத்தைத் திடமா யறிந்துகொள்ளுதல் நல்லது.                      (10)

 

3 - ம் அதிகாரம்.

யாக்கை நிலையாமை

 

மலையின் மேல் உதயமாகும் பூரணச் சந்திரன் போல, யானையின் தலையின் மேல் கவிந்திருக்கும்படியான (சந்திரவட்டக்) குடையையுடைய மஹாராஜாக்களும் (முடிவில்) இப் பூமியில் மாண்டு போனார்கள் என்று கூறப்பட்டார்களேயல்லாமல், உயிரோடிருந்தவர்கள் இவ்வுலகத்தில் ஒரு வருமில்லை.                             (1)

 

(நமது) வாழ்நாளை யளப்பதற்கு அளவு கருவியாக இருக்கின்ற கிர ணங்களையுடைய சூரியன், ஒருநாளும் தவறாமல் உதயமாய்க்கொண்டே யிருப்பதால், அவ்வாயுட்காலம் முடிவடையுமுன் தருமத்தைச் செய்யுங்கள். தம் வாழ்நாளைக் கடந்து இப்பூமியில் யாரும் ஜீவித்திருக்கமாட் டார்கள்.                                    (2)

 

"சபை முழுதும் சப்திக்கும்படி விவாகத்திற்காக ஏற்படுத்திய வாத்தியங்கள் அன்றைய தினமே அவ்விடத்திலேயே அதே மாப்பிள்ளைக்கு சாவுக்குக் கொட்டும் பறையாய் முழங்கவுங்கூடும்" என்று நினைத்து பெரியோர்களுடைய மனமானது துறவற மார்க்கத்திலேயே உறுதியாக நிற்கும்.                                                 (3)

 

ஒருவன் இறந்தவுடனே பறை கொட்டுவோர் அங்குப் போய் (முதன் முதலாக) ஒரு முறை பறையைக் கொட்டுவார்கள். (பிறகு) சிறிதுநேரம் சும்மா இருந்து (இரண்டாம் முறையாக) மறுபடியும் அடிப்பார்கள். மூன்றாம் முறை அடிக்கும்பொழுது அச்செத்தவனை இனிமேல் சாகப்போகிறவர்கள் (பாடையில் வைத்துத்) துணி கொண்டு மூடி கொள்ளிச்சட்டியைக் கையிற் கொண்டு (தோள்களில் வைத்துச்) சுமந்து (சுடு காட்டிற்குக் கொண்டு போகப்) புறப்பட்டு விடுவார்கள். (இத்தன்மையான இவவுலக இயற்கையை ஒ மனிதனே!) நன்றாகக் கவனித்துப்பார்.                                                 (4)

 

பந்துக்களெல்லோரும்'கலீல்'என்று மிக்க சத்தமிட்டுப் புலம்ப, யாவரும் கூட்டமாகக் கூடிக்கொண்டு சவத்தைத் தூக்கிக்கொண்டு போய்ச் சுடுகாட்டில் வைப்பதைக் கண்டிருந்தும் விவாகத்தைச் செய்து கொண்டு இவ்வுலகத்தில் 'இன்பமுண்டு'' இன்பம் உண்டு'' இன்பம் உண்டு' எனக்கருதும் அறிவீனனுக்கு 'தொண் தொண் தொண்' என்று அடிக்கப்படும் (பிணப்) பறையே (இன்பத்தை யனுபவிப்பதற்கிடமான சரீரம் நிலையற்றதென்பதைத் தெரிவிக்கும்.                                               (5)

தோல்பை போன்ற உடம்பிலிருந்து கொண்டு வினைகளை மிகுதியாகச் செய்து அவற்றின் பலனை அனுபவிக்கப்பண்ணும் உயிராகிய கூத்தாடி, உடம்பினின்றும் வெளிப்பட்டு விட்டால் (அவ்வுடலைக்) கயிற்றாற்கட்டி இழுத்துக்கொண்டு போனாலென்ன? நன்றாகச் சுத்தஞ்செய்து அடக்கஞ் செய்தாலென்ன? கண்ட கண்ட இடத்தில் போட்டுவிட்டாலென்ன? பலரும் பார்த்துப் பழித்தால் என்ன? எப்படிச் செய்தாலும் பயனில்லை.                                                                   (6)

 

பெய்கின்ற மழைநீரில் தோன்றும்படியான குமிழிபோலப் பலமுறை யும் தோன்றி யழியுந் தன்மையுடையது இச்சரீரமென்று நினைத்து, பிறவித் துன்பத்தை நீக்க வேண்டும்' என்றறியும் உறுதியான விவேகிகளை ஒப்பானவர் இவ்வுலகில் யாவர்? (ஒருவருமில்லை.)

(7)
 

உயிரானது, மலையின் மேல் அசைந்து கொண்டிருக்கிற மேகம்போ லக் காணப்பட்டு, உடனே நிலைபெறாமல் நீங்கிப்போகும். ஆதலால் சரீரத்தைப் பலமுடையதாகப் பெற்றுள்ளவர்கள், தாங்கள் பெற்ற அவ்வுடலால் ஆகவேண்டிய பிரயோஜனத்தை விரைவில் அடைந்து கொள்ள வேண்டும்.                     (8)

 

(ஐயோ பாவம்! அவன்)'இப்பொழுது தான் இங்கு நின்றிருந்தான். இப்பொழுது தான் இங்கு உட்கார்ந்திருந்தான். இப்பொழுது படுத்திருந் தான், (இதற்குள்) தன் சுற்றத்தார்கள் கதறிப் புலம்பும்படி இறந்து போ னான்'என்று ஊரார் சொல்வதை அடிக்கடி கேட்கிறோமாகையால், சரீர மானது புல்லின் நுனியில் தங்கியுள்ள பனித்துளிபோல நிலையற்றதென்று நினைத்து இப்பொழுதே தருமத்தைச் செய்யுங்கள்.                   (9)

 

மனிதர்கள் கேளாமலே வந்து உறவினர்களாக வீட்டில் பிறந்து, 'மரத்தில் (தன் காரியமானவுடனே) கூட்டைச் சும்மா விட்டுவிட்டுத் தூரத்தில் பறந்து போய்விடுகின்ற பறவையைப் போல்' சரீரத்தைப் பந்துக்களிடத்தில் வைத்துவிட்டுச் சொல்லாமல் இறந்து போவார்கள்.                                                                   (10)

4 - ம் அதிகாரம்.

அறன் வலியுறுத்தல்.

(தருமத்தின் சிறப்பைக் கூறுதல்.)

 

முற்பிறப்பில் (தருமமாகிய) தவத்தைச் செய்யாதவர்கள், இப்பிறப்பில் வறியர்களாய் பிச்சையின் பொருட்டு வீடுகள் தோறும் சென்று, 'இவ்வீட்டில் வசிப்பவர்களை நல்ல வாழ்க்கையுடையவர்கள்' என்று (தலை நிமிர்ந்து ஏக்கங்கொண்டு பார்த்து) உள்ளே நுழைய முடியாமல் வாயிற்படியைப் பிடித்துக்கொண்டு மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டு நிற்பார்கள்.                                                                         (1)

 

(நாம் மேலும் மேலும்) செல்வமுடையவர்களாக வேண்டுமென்று செல்வத்தை விரும்பி, தருமத்தை மறந்துவிட்டு, நாம் இறந்து போவோ மென்பதைச் சிறிதும் ஒப்பாத ஓ அற்ப மனமே! நீ இடைவிடாமல் பணம் சம்பாதிக்கப் பலவாறு முயற்சி செய்து வாழ்ந்தாலும், உன் வாழ்நாள் கழிந்து போய்விட்டன. இனி நீ செய்வதென்ன சொல்?     (2)

 

முற்பிறப்பில் செய்த தீவினைப்பயன் அனுபவிக்க வந்து நேர்ந்தால், அறிவில்லாதவன் அதற்காகக் கடுமையாகப் பெருமூச்செறிந்து மனத்தினால் நினைத்து வருந்துவான். அத்தீவினையின் பலனை ஆராய்ந்து அது முற்பிறப்பின் தீவினையால் வந்ததென்று அறிகின்றவர்களே சம்சார துக்கத்தின் எல்லையைவிட்டு நீங்குவார்கள்.                                                                                (3)

 

பெறுதற்கரிய உடலையடைந்த பயனால் பெரிய தருமப் பயனையும் மிகுதியாகவே அடைந்து கொள்ளுங்கள். அத்தருமமானது கரும்பானது தன்னைப் பக்குவமாக ஆலையிலிட்டு ஆட்டினவர்களுக்குத் தன்னிடத்திலுள்ள சாற்றைத் தருவது போல, மறுமையில் மிகுந்த பயனைத் தரும். உடம்பு அக்கரும்பின் சக்கை போல் அழிந்து போகும்.                                                                              (4)

 

கரும்பை, அது பதன் கெடுதற்கு முன்பே ஆலையிலிட்டாட்டி, அதன் பயனாகிய வெல்லத்தை யடைந்தவர்கள், அக்கரும்பின் சக்கை அவ்விடத்தில் நெருப்பில் எரியும் பொழுது துக்கப்படமாட்டார்கள். அதுபோல உடம்பினாலடைய வேண்டிய பயனாகிய தருமத்தைப் பிரயாசைப்பட்டு அடைந்தவர்கள் எமன் வருங்காலத்தில் வருந்தமாட்டார்கள்.                                                                         (5)

 

எமன் நம்மைப் பிடிக்கவருங் காலம் இன்றைக்கோ? நாளைக்கோ? வேறு என்றைக்கோ? என்று சந்தேகிக்காமல் எமன் பின்னாலேயே நிற்கிறானென்றெண்ணிப் பாப காரியங்களைச் செய்யாமல் ஒழியுங்கள். பெருமை பொருந்திய முனிவர் முதலான பெரியோர்கள் சொல்லிய தருமகாரியங்களைக் கூடியவரையில் செய்யுங்கள்.        (6)

 

மனிதர்களால் அடையப்பட வேண்டிய பெரும் பயனும் ஆராயுமிடத்து மிகப் பலவாகையினால், நீங்கள் முற்பிறப்பிலியற்றிய நல்வினையின் பயனாகக் கிடைத்த உடலுக்கு உபயோகப்படும் காரியங்களைச் செய்து கொண்டிராமல், மறுமையில் சுவர்க்கலோகத்திலிருந்து கொண்டு பேரின்பத்தை யனுபவிக்கச் சிறந்த தருமங்களையே செய்ய வேண்டும்.                                                                 (7)

 

நகத்தால் கிள்ளி யெடுக்குமளவுள்ள மிகச் சிறிய ஆலம் விதையானது வளர்ந்து மிகுதியாக நிழலைக் கொடுப்பது போல, தருமத்தின் பயனும் தான் மிகச் சிறிதாயிருந்தாலும், தகுந்த பெரியோர்கள் கையிற் பட்டால் மிகப் பெரிய ஆகாயமும் சிறியதென்னும்படி மேலான பயனைப் பரப்பிவிடும்.                                     (8)

 

தினந்தோறும் பொழுது கழிந்து கொண்டிருப்பதைத் தமது ஆயுள் நாள்களில் கழிந்து போகிறதாகச் செல்லுவைத்து, நாள் கழிதலின் உண்மை நிலையை யறியாதவர்கள், தினந்தோறும் நாள் கழிந்து கொண்டிருப்பதைக் கண்டும் அதை யறியாமல் தினந்தோறும் நாள் இப்படியேயிருக்கு மென்றெண்ணி யின்பமடைவார்கள்.                      (9)

 

மிக்க இழிவான தொழில்களைச் செய்து உணவு முதலியவற்றைக் கொடுத்து வளர்த்தால், அப்பொழுதேனும் இவ்வுடல் வெகுகாலம் நிலை பெற்றிருக்குமானால் நான் மானமென்னும் அருமையான ஆபரணத்தை நீக்கி, யாசகம் முதலாகிய மிக்க இழிவைத் தரும்படியான தொழில்களால் ஜீவிப்பேன். (அப்படி யில்லாமையால் இந்நிலையில்லா உடம்பிற்காக மானத்தை விட்டு இழிதொழில் செய்து ஜீவிப்பதால் யாது பயன்?)     (10)

 

5 - ம் அதிகாரம்.

தூய தன்மை.

(உடலின் அபரிசுத்தத்தன்மை கூறல்)

 

(சரீரத்தினின்றும்) ஈயின் இறகளவு (சிறிய) தோலானது உரிந்தாலும் (அவ்விடத்தில் காகமும் கழுகும் விரும்பும் இரத்தமும் சீழும் நிறைந்த புண்ணுண்டாமாகலின்) காக்கையைத் துரத்துவதற்காக ஒரு கோல் வேண்டுமல்லவா? (ஆதலால் பெண்ணினுடலைப் பார்த்து 'மாந்தளிர் போன்ற நிறத்தையும் இளைமையையு முடைய பெண்ணே!' யென்று பிதற்றும் மூடர்கள் சரீரத்தை இத்தன்மையான இழிவுடையதென்று பார்க்க மாட்டார்களோ?                                                           (1)

 

உடலானது, ஒன்பது வகைப்பட்ட துவாரங்கள் தோறும் கொழிக்கும் மலங்களைத் தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் மேற்போர்வை யாகிய தோலால் பெருமையுடையது. ஆதலால், மேல் மூடிய மலங்களை மறைக்கும் தோலைக்கொண்டு அதனிடத்து ஆசை வையாமல் (உடலை) உள் பாகம் வெளிப்புறமாகும்படி திருப்பிய பையைப்போல பார்க்க
வேண்டும்.                                                                     (2)
 

எப்பொழுதும் உண்ணும் போஜன பதார்த்தங்களின் காரியத்தால் துர்க்கந்தம் வீசுமென்று கண்டு, பெரியோர்கள் வெறுத்துவிட்ட சரீரத்திற்கு தாம்பூலம் தரித்தல், தலை நிறையப் பூச்சூடல் முதலிய பொய்யழகுகளைச் செய்தால் உள்ளேயுள்ள மலம் நீங்கிவிடுமோ? (எவ்வளவு அலங் காரம் செய்யினும் உடல் மலபாண்டமே என்றபடி.) (3)

 

உள்ளிருக்கும் நீரை எடுத்துவிட்டபோது, 'நுங்கைத் தோண்டிவிட்ட காலத்தில் பனங்காய் எப்படி யிருக்குமோ அப்படி யிருக்கும்' என்று, கண்களின் தன்மையைக் கண்டு நடப்பேன். (அதைவிட்டு) 'மாதர்களின் கண்கள் தெளிந்த நீரிலுள்ள நீலோற்பல மலரையும் சேற்கண்டையையும் வேலாயுதத்தையும் ஒத்திருக்கின்றன' எனக் கூறி, அறிவில்லாத அற்ப மனிதர்கள் என் மனதைக் கவலைப்படுத்துவதினால் யான் (முத்திசாதன மாகிய) துறவறத்தை விட்டுவிடுவேனோ? (விடமாட்டேன் என்றபடி.)                  (4)

 

எல்லாரும் காணும்படியாகச் சுடுகாட்டில் உதிர்ந்து மக்கிக்கிடக்கின்ற பல்லாகிய எலும்பைப் பார்த்து, அதன் தன்மையை யறிந்து நடப்பேன். (அதைவிட்டு) அப்பற்களை, 'முல்லையரும்புகளென்றும் முத்துக்களென் றும்' பிதற்றும் உண்மைக் கல்வியைக் கல்லாத அற்பமனிதர்கள், பெண்கள் வழியிற் செல்லும்படி என் மனதைக் கவலைப்படுத்துவதனால் யான் துறவறத்தை விட்டு விடுவேனோ? (விடமாட்டேன் என்றபடி.)                                                                       (5)

குடலும், மூளையும், இரத்தமும், எலும்பும், தொடர்ச்சியான நரம்பும், தோலும் இடையிடையே வைக்கப்பட்டுள்ள மாமிசமும், கொழுப்பும் ஆகிய இவற்றுள் குளிர்ந்த மாலையைத் தரித்த இப்பெண்ணானவள் எத்தன்மையை யுடையவள்? (இவற்றுள் எதனைப் பெண்ணென்றெண்ணுவது என்றபடி                                              (6)

 

நவத்துவாரங்களிலும் மலங்களூறி, வெறுக்கத்தக்க மூளை, சளி, எச்சில், குறும்பி, மலமூத்திரங்களாகிய மலங்களைக் கொழித்து ஒதுக்கும் சரீரமாகிய குடத்தை மேலே மூடியுள்ள தோலால் கண்களுக்கழகாய் இருப்பதாகக் கண்டு, மூடனானவன் 'பெருமை பொருந்திய (மூங்கிலை யொத்த) தோள்களையுடையவளே!' என்று (புகழ்ந்து) கூறுவான்.

(7)

 

உயிராகிய அச்சு முறிந்து போனால், துர்க்கந்தம் வீசும்படியான உடலாகிய வண்டியை வலியக் கழுகுகள் பெட்டைகளும் சேவல்களுமாகக் கூடி கால்களைப் பெயர்த்துப் பெயர்த்து நடந்து குத்தித் தின்னும். (ஆதலால்) உடலின் தன்மையை யறியாதவர்களாய் வாசனை பொருந்திய சந்தனத்தையும் மாலையையும் தரித்துக் கொண்டு உடலைப் பெருமையாகப் பேசிக்கொண்டாடுபவர்கள், அக்கழுகுகள் குத்துவதைக் காணமாட்டார்களோ?                                                          (8)

 

மயானத்திலிடப்பட்டு (தோல் முதலியவைகளின்றி எலும்பு மாத்திரமாகக் கிடக்கும்) இறந்தவர்களின் தலைகளானவை, பார்த்தவர்கள் மனம் நடுங்கும்படி குழிந்தாழ்ந்த கண்களையுடையவைகளாய்க் காணப்பட்டு, சாகாமலிருப்பவர்களைப் பார்த்து (மிகவும் சிரித்து)'கண்டீர்களா? உங்களைப்போலிருந்த என் நிலைமை எவ்வாறிருக்கின்றது? இவ்வுடலின் தன்மை இத்தகையது! இதனையறிந்து இனியேனும் பாதுகாத்து நன் மார்க்கத்தில் நில்லுங்கள்'என்று கூறுகின்றன போலும்.                             (9)

 

இறந்தவர்களுடைய வெண்மையாகிய தலைகள் பார்த்தவர்க ளஞ்சும் படியாகச் சிரித்து, இல்வாழ்க்கையி லிருமாந்திருப்போர் குற்றத்தை நீக் கும். அதைக் குற்றமற்றவர்கள் பார்த்து, இவ்வுடலின் தன்மை இத்தகைய தென்றறிவதால், தங்கள் சரீரத்தை ஒரு பொருளாக மதியார்கள்.                                           (10)


6 - ம் அதிகாரம்.

துறவு.

(யான், எனது என்னும் அகப்பற்று, புறப்பற்றுக்களை விடுதல்)

 

விளக்குப் புகுந்தவுடனே இருள் நில்லாமல் நீங்கிவிடுவதுபோல, ஒருவன் தவத்தின் முன் பாவமானது நில்லாது. அந்த விளக்கிலுள்ள எண்ணெய் குறைவு பட்டபொழுது (மீண்டும்) போய்ப் பாய்வது போல, புண் ணியம் நீங்கினவிடத்துப் பாவம் வந்து சேரும். (இருள் சேராமலிருக்க எண்ணெய் குறையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டியது போல, பாவம் சேராதிருக்கப் புண்ணியம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்றபடி)         (1)

 

செல்வமும் இளைமையும் சரீரமும் நிலைபெற்றிராமல் அழிந்து போவன வென்றும், நோய்களும், கிழத்தனமூம், மரணமும் காத்திருக்கின்றன வென்றும் நினைத்துப் பெரியோர்கள் தங்கள் காரியமாகிய தவத்தை (இடைவிடாது) செய்வார்கள். (அதைவிட்டு) அளவில்லாத இலக்கணம் சோதிடம் முதலிய நூல்களைப் பிதற்றித் திரியும் பித்தர்களைப் போல அறிவீனர்களில்லை. (இதனால் அவற்றைக் கற்கலாகாது' என்பதல்ல. தருக்கம் வியாகரணம் முதலியவை வேதாந்த நூல்களைக் கற்பதற்குக் கருவி நூல்களாகலின், அவற்றை வேண்டியவளவு பயின்று, ஞான நூல்களையே மிகுதியாகக் கற்கவேண்டுமென்பது கருத்து.)                                                     (2)

இல்வாழ்க்கையும், இளைமையும், நிறமும், அழகும், மிகுந்த சுற்றத் தாராதரவும், செல்வமும், பலமும், ஆகிய இவைகளெல்லாம் ஆராய்ந்து பார்க்குமிடத்து அநித்தியமானவை யென்றறிந்து, பெரியோர்கள் தாங்கள் கடைத்தேறும் வழியைக் கைக்கொண்டு தாமதியாமல் (பந்தத்திற்குக் காரணமான) இருவகைப் பற்றையும் விடுவார்கள்.                                                              (3)

 

அறிவில்லாதவர்கள் பலகாலமும் துன்பத்தை யனுபவித்தாலும் (மேலும் இல்வாழ்க்கையிலுண்டாகும்) இன்பத்தையே யிச்சிப்பார்கள். அறிவுடையோர், இல்வாழ்க்கையிலுண்டாகும் இன்பத்தின் வேறுபாட்டை (துன்பக் கலப்புள்ளதென்பதை) யறிந்து, அதில் உண்டாம் துன்பத்தைப் பார்த்து, அவ்வில்வாழ்க்கையின் சம்பந்தத்தை யொழிப்பார்கள்.                                                                   (4)

 

(எது நல்லது? எது கெட்டது? என்பதைப்பற்றிச் சிறிதும்) என்னோடு கலந்து ஆலோசிக்காமல் துணிச்சல் கொண்டு (விஷயங்களிற்) பாய்ந்து செல்கின்ற என் மனமே! இளைமைப் பருவமும் வீணாகக் கழிந்து போய்விட்டது. இப்பொழுதே வியாதியும் விருத்தாப்பியமும் வந்து விடும். ஆகையால், (துன்பங்களுக் கிருப்பிடமாகிய பிறப்பையொழிக்கும்) நன்மார்க்கத்தை யடைவோம் வருவாயாக.                         (5)

 

மனைவியானவள் இல்லறத்திற்குரிய மாட்சிமை பொருந்திய குணங்களோடு புத்திரரைப் பெறுதலும் இல்லாதவளாயிருந்தாலும், அவளை மணந்தவன் (அவளை) விடுதல் அருமையாகும். ஆகையால், கற்றறிந்த பெரியோர்கள் உனக்குள்ள வறுமை காரணமாக, மேலாகிய துறவறத்தை விரும்பி, (மணம் புரியுமுன்பே) இல்வாழ்க்கையை விட்டுவிடு என்றார்கள்.                                                           (6)

 

உறுதியுடன் தாங்கள் கைக்கொண்ட தவங்களால் மனங் கலங்கும்படி சகிக்க முடியாத் துன்பங்கள் நேரினும், அவற்றைப் பொருட்படுத்தாமல் தள்ளி, அத்தவத்தில் தங்களை நிறுத்தும் வல்லமையுடையோரே, நற்றவ வொழுக்கத்தைக் காப்பாற்றும் சிறப்புடையவ ராவர்.                                                        (7)

 

(பிறர்) தம்மை இழிவாக நிந்தித்துப் பேசினதைத் தாங்கள் பொறுத்துக் கொள்ளுவதுமல்லாமல், 'ஐயோ பாவம்! இவர்கள் நம்மை இவ்வாறு வைத்தாகிய தீவினையின் பயனாக, மறுமையில் எரிவாய் நரகத்தில் வீம்வார்களே!' என்று அவர்களுக்காக இரக்கங் கொள்வதும் பெரியோர் கடமையாம்.                     (8)

 

மெய், வாய், கண், மூக்குச், செவி என்னும் ஐம்பொறிகளாலுண்டாம் ஆசைகளையும், மனத்தால் வரும் ஆசையையும் தீயவழியிற் செல்லா தடக்கி, நல்லொழுக்க வழியில் கலங்காமல் செலுத்தும் வல்லமையுடையவன் தவறாமல் மோக்ஷமடைவான்.             (9)

 

(இல்லறத்தில்) துன்பமே மேலும் மேலும் வருவதைப் பார்த்தும், அறிவில்லாதவர்கள் அதனையே அடைய ஆசிப்பர். பெரியோர் இன்பம் உண்டாகுந்தோறும் அதனால் வரும் துன்பத்தைப் பார்த்து அதனை அபே க்ஷியார்.                   (10)

 

7 - ம் அதிகாரம்.

சினமின்மை.

 

(தம்மை மேன்மையாக) மதித்து நடப்பவர்களும் நடக்கட்டும், (மதியாமல்) கீழ்மைப்படுத்தி நடப்பவர்களும் நடக்கட்டும். (அதற்காக கோபிக்கலாகாது) (மிக்க இழிவாகிய) ஈயும் தன் காலால் மிதித் தேறித் தலை மேலிருக்கிறது. (அதற்காக அதனைக் கோபிப்பாருளரோ?) ஆகையால் அவ்வீயின் தன்மையை யறிந்தவர்கள் பகைத்தற்குக் காரணமான கோபமடையா திருத்தல் நல்லது.                                     (1)

 

அடிகளைப் பெயர்த்துவைக்க முடியாதபடி, மிகவும் நெருக்கடியான இழிவு வந்த காலத்திலும் (மனந்தளராமல்) எண்ணினவைகளை முடிக்கும் மனவுறுதியுடையவர்கள், கோபங்கண்ட விடத்தெல்லாம் தங்கள் அழியாச் சிறப்பினையுடைய உயிரை விட்டுவிடுவார்களோ? (விடமாட்டார்கள்)                                      (2)

 

ஒருவன் தன் நாவைக் காக்காமல் தன் வாயைத் திறந்து சொல்லும் கடுமையான வார்த்தைகள், இடைவிடாமல் அவனையே வருத்தும்; ஆதலால், பல நூல்களை ஒழியாமல் ஆராய்ச்சி செய்து அதனால் நிறைந்த கல்வியறிவுடைப் பெரியோர் ஒருபோதும் பிறரைக் கோபித்து, கொடுமை நிறைந்த சொற்களை உருத்துச் சொல்லமாட்டார்கள்.                                                           (3)

 

(தம்மோடு) சமானமாக வைத்தெண்ணத்தகாத கீழோர் (தம்மை) எதிர்த்து, குணமில்லாத (இழிவான) சொற்களைச் சொன்னால் (அதற்காக) மேலோர் மனம் புழுங்கி (அவர்களைக்) கோபிக்கமாட்டார். (ஆனால்) இழிந்தோன் பிறர் கூறின வசவுச் சொற்களை (அப்பொழுது என்ன சொன்னான்? இப்பொழுது என்ன சொன்னான்? என்று பலமுறையும்) ஆராய்ந்து (அடிக்கடி அவற்றையே மனத்தில்) நினைத்துக்கொண்டு ஊரா ரெல்லாம் கேட்கும்படி போய்ச் சொல்லித் துடித்து தூணில் முட்டிக் கொள்வான்.             (4)

 

(விஷய நுகர்ச்சிக்கேற்ற) இளமைப் பருவமுடையவன் ஐம்பொறி எளையும் (விஷயங்களிற் செல்லாதபடி) அடக்குதலே (சிறந்த) அடக்கமாகும். (மேன்மேலும்) விருத்தியாகும்படியான செல்வமில்லாதவனாகிய வறியவன் கொடுக்கும் கொடையே நற்பயனைத்தரும் கொடையாகும். எல்லாவற்றையும் அழித்து விடக்கூடிய வெற்றியையும் வல்லமையைபுமுடைய சுத்தவீரன் பொறுக்கின்ற பொறுமையே சரியான பொறுமையாகும்.                                                                (5)

(சீறி படம் விரித்தெழும்பொழுது மந்திரக்காரன்) மந்திரித்திடும் திருநீற்றால் படத்தை யடக்கிக்கொள்ளும் பாம்மைப்போல, (பெரியோர்) தங்கள் தங்களுடைய குடிப்பிறப்பின் மேன்மையால் தடுக்கப்பட்டு கல்லெறிந்தாற் போலக் கீழோர் வாயிலிருந்து வரும் கடுஞ்சொற்களை, யாவரும் காணப் பொறுத்துக் கொண்டு போவார்கள்.              (6)

 

பகைவர்களாயிருந்து தம்மோடு மாறுபாடு கொண்டு எதிர்ப்பவர்களுடன் தாமும் எதிர்த்து நில்லாமல் தாழ்ந்து போவதை அறிவுடையோர் வல்லமையில்லாமை (பலஈனம்) என்று சொல்லமாட்டார்கள். அப்பகைவர் தம்மை எதிர்த்து, சகித்தற்கரிய துன்பங்களைச் செய்தாலும், தாம் திரும்பி அவர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலே நல்லது.            (7)

 

கீழ் மக்களுக்குண்டாகும் கோபமானது எவ்வளவு காலங் கழிந் தாலும் நீங்காமல் வளர்ந்து கொண்டேயிருக்கும். சிறப்புடைய பெரியார் கோபமோ காய்ச்சுங் காலத்து நீரானது அடைந்த வெப்பத்தைப் போல, (காலம் செல்லச் செல்ல வெப்பம் தணிந்து கொண்டே போய்விடுவது போல) தனக்குத்தானே ஆறிவிடும்.                       (8)

 

(ஒருவர்) தாம் உபகாரம் செய்ததை மறந்து, தமக்கு அபகாரத்தை மிகுதியாகச் செய்தாலும், (மேலும்) அவருக்கு உபகாரம் செய்வதேயல்லாமல், அவர்கள் செய்த குற்றத்திற்காகத் தீமையைச் செய்தலாகிய குணம் மேன்மை பொருந்திய குடியிற் பிறந்தவர்களுக்கு இல்லை.                                                     (9)

 

நாயானது கோபங்கொண்டு தம்மைக் கடிக்கப் பார்த்தும், பதிலுக்குத் தம் வாயால் அந்த நாயைக் கடித்தவர் இவ்வுலகில் ஒருவருமிலர். (அதுபோல) கீழானவர்கள் குணமில்லாமல் இழிவான சொற்களைச் சொல்லி வைதால், மேலோர் தாமும் திரும்பத் தங்கள் வாயால் அத்தகைய இழி சொற்களைச் சொல்வார்களோ? (சொல்லமாட்டார்கள்.)                                                                          (10)

 

8 - ம் அதிகாரம்.

பொறையுடைமை.

 

மாலை போலப் பொருந்திய நீரருவிகளையுடைய குளிர்ந்த மலைகளையும் நாட்டையுமுடைய பாண்டியனே! அறிவில்லாதவனிடம் யாதொன்றையும் சொல்லாதே. அப்படிச் சொன்னால் அம்மூடனானவன் அதைத் திரித்துக் கூறுவான். (அதனால் துன்பமுண்டாகும்.) ஆதலால் கூடிய வரையிலும் (அவனை விட்டுத்) தப்பி நீங்கிவிடுவதே நல்லது.                                                                        (1)

 

சமானமில்லாதவர்கள் குணமற்ற சொற்களைக் கூறினால் அவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல் தகுதியாகும். அப்படிப் பொறுக்கா விட்டால் மிகுந்த நீரையுடைய கடல் சூழ்ந்த உலகத்திலுள்ள பெரியோர் அதைப் புகழ்ச்சியாகக் கொள்ளாமல் இழிவாகக் கருதுவார்கள். (பொறுப்பதையே புகழ்வார்கள் என்றபடி.)                                          (2)

 

மலர்கள் தோறும் அழகிய வண்டுகள் சப்தித்துக் கொண்டிருக்கும்படியான மிகக் குளிர்ந்த கடற்கரைச் சோலையையுடைய பாண்டியனே! நமக் காகவேண்டிய நன்மைகளை அறிந்தவர்களைப் பெற்றிருந்தால் (நம் க்ஷேமத்தில் கருத்துடையவர்களாகிய) அப்படிப்பட்டவர்கள் சொல்லும்படியான கடுமையான சொல்லானது அன்னியர் (முக) மகிழ்ச்சி யுண்டாகக் கூறும் (காதுக்கு) இனிய சொல்லைலிட குற்றமுடையதாகுமோ? ஆகாது. (அன் புள்ளார் கடுஞ்சொல்லே இனியது என்றபடி.)                               (3)

 

அறியவேண்டியதை யறிந்து அடங்கி, பயன்படவேண்டியதற்குப் பயந்து, செய்யவேண்டியதை உலகத்தார் மகிழும்படி செய்து, அதனாலுண்டாகும் பலனால் இன்பமடைந்து வாழும் குணமுடையவர்கள் எக்காலத்திலும் துன்பமடைந்து வாழமாட்டார்கள். (இன்பத்துடன் வாழ்வார் என்றபடி.)                              (4)

 

இரண்டு நண்பர் ஒருவரோடொருவர்) ஒற்றுமையுடன் கலந்து சிநேகிக்குங்காலத்தில் (அவர்களில்) ஒருவனிடம் நல்லொழுக்கமில்லாதிருந்தால் (மற்றவன்) பொறுக்கக்கூடியவரையில் பொறுக்க வேண்டும். பொறுக்கமுடியாவிட்டால் (அவன் நடக்கையை யாவரு மறியும்படி) தூற்றாமல் அவன் நட்பை விட்டுவிடல் வேண்டும், (5)

 

(தன் சிநேகிதனொருவன் தனக்குத்) துன்பங்களைச் செய்தாலும் (அவற்றை) நன்மையாகவே நினைத்து,'ஒழிந்து போகட்டும்'என்று கோபம் நீங்கி (அப்படிப்பட்டவனோடு சிரேகித்ததற்காகத்) தன்னைத்தானே நொந்து கொள்வதேயல்லாமல், மிகவும் நெருங்கிச் சிநேகித்தவர்களைக் கைவிடுதல் அருமையாம். ஏனெனில் மிருகங்களுக்கும் (நேசித்தபின்)
நீங்குதல் அருமையாகும்.                                                       (6)

 

'ஒல்' லெனும் சப்தத்துடன் பாயும் அருவிகளுள்ள உயர்ந்த மலைகள் பொருந்திய நல்ல நாட்டையுடைய பாண்டியனே! தாங்கள் செய்த சகித்தற்கரிய குற்றத்தையும் பொறுப்பார்களென்றல்லவோ பெரியோர்களுடைய சிறந்த சிநேகத்தை (ஒருவர் விரும்பி) அடைவது? நன்மைகளைச் செய்பவர்களுக்கு சுற்றத்தார் கிடைக்க மாட்டார்களோ? (இழிந்தோரும் நன்மை செய்வோரிடம் நட்பினராக விருப்பார்) அதனால் பெரியோருக்குச் சிறப்பு என்ன? (குற்றங்களைப் பொறுத்தலே பெரியோரிலக்கணமாம் என்றபடி)         (7)

 

(வறுமையால்) உடல் வாடி மிகவும் பசி உண்டானகாலத்திலும், (அதனை நீக்கும்) சிநேககுணமில்லாதவனுக்கு அவ்வறுமை தெரியும்படி சொல்லாதே. அப்படி வறுமையை நீக்குந் தன்மையுடையவர்களுக்கும் தம் உயிரை விட்டுவிடும் துணிவில்லாதவர்களே சொல்வார்கள். (மானத்திற்குப் பயந்து உயிர்விடும் துணிபுடையார் அத்தகையோரிடத்தும் தமது வறுமையைக் கூறார் என்றபடி.)                                             (8)

 

சிறந்த ஆறு பொருந்திய நாட்டையுடைய பாண்டியனே! முதலில் (ஓரிடத்தில்) இன்பம் உண்டாகிப் பின்பு அவ்விடத்திலேயே துன்பம் முதன்மையாக வந்தால் அவ்வின்பம் நீங்கினதேயாகும். அப்படியில்லாமல் அவ்வின்பமே நீங்காமல் உண்டாவதாயினும் தமக்குப் பழிக்கு இட மில்லாத வழியே சிறந்ததாகும்.         (9)

 

(ஒருவன்) தான் கெட்டாலும் தன்னைக் கெடுக்கும் பிறர்க்குக் கேடு நினையாமலிருக்க வேண்டும். தன்னுடம்பிலுள்ள தசைமுழுதும் அழிந்து போவதாயினும், உண்ணத்தகாதவர்களுடைய கைப்பொருளை உண்ணாம லிருக்க வேண்டும். ஆகாயத்தால் சூழப்பட்டுள்ள உலக முழுதும் பெற்றா லும் பொய்பொருந்திய சொற்களைச் சொல்லாதிருக்க வேண்டும்.                                                   (10)

 

9 - ம் அதிகாரம்.

பிறர் மனை நயவாமை.

(பிறர் மனைவியை இச்சியாதிருத்தல்)

 

(பிறன் மனைவியை இச்சித்தலால் நேரிடும்) பயமோ பெரிது. அப்பயத்திற்குத் தக்க (இன்பமாவதுண்டோ வென்றால் அந்த) இன்பமோ சிறிய அளவினையுடையது. நித்தமும் ஆலோசிக்குமிடத்து இராஜதண்டனையும் வரும். (மேலும்) நரகத்திற் கேதுவாகிய பாவமும் நித்தமும் பெருகிக் கொண்டே வரும். ஆதலால், நாணமுடையவர்கள் பிறர் மனைவியை நம்பி இச்சியாதிருப்பார்களாக.                                                   (1)

 

அன்னியனுடைய மனைவியை இச்சிப்பவர்களிடத்தில், தருமம், கீர்த்தி, புகழ், மேன்மை என்னு மிந்நான்கும் சேரமாட்டா. (அவைகளுக்குப் பதிலாக) அவர்களிடத்தில், பகை, பழி, பாவம், அச்சம் என்னும் இந்நான்கு பொருள்களும் சேரும்.               (2)

 

பிறன் மனைவியை விரும்பி அவளிடத்திற்குப் போகும் பொழுதும் (யார் பார்ப்பார்களோ வென்று) பயம். திரும்பி வரும்பொழுதும் பயம். கூடி யின்பமனுபவிக்கும் பொழுதும் பயம். (விஷயத்தைப்) பிறர் அறியாம லிருக்கும்படி காத்தலில் பயம். (இவ்வாறு) எந்நாளும் பயத்தைக் கொடுக்கும். (ஆகையால்) சிறிது மஞ்சாமல், பிறன் மனைவியை இச்சித்துப்போதல் யாது பயன் கருதியோ?                                      (3)

 

ஓ காமியே! (அன்னியன் தாரத்தைக் கூடும் போது மற்றவர்கள்) பார் த்துவிட்டால் குடிப்பழிப்பு நேரிடும். அவர்கள் கையில் அகப்பட்டுக்கொண் டால் (காலை உடைத்துவிடுவார்களாகலின்) கால் குறைந்து போகும். (இத் தனை இக்கட்டுகளுக்கிடையில்) பெருமையில்லாத காரியத்தைச் செய்யும் பொழுதும் பயமுண்டாகும். நீண்ட நரகத்தில் மிக்க துன்பத்தை யுண் டாக்கும். (ஆகையால்) பிறன் மனையாளை இச்சித்து நீ கண்ட இன்பந்தான் எத்தன்மையது? எனக்குக் கூறு.        (4)

 

நல்லொழுக்கம் சிறிதுமில்லாமல் இழிந்த தன்மையுடையவர்களாய், திரட்சியும் தேமலும் பொருந்திய தனங்களையுடைய மாதர்களின் தோள்கள் ளைத் தழுவுவதே தொழிலாய், முற்பிறப்பில் தம் வலிமையினால் பிறருடைய மனைவியிடத்தில் சென்றவர்களே, இப்பிறப்பில் பேடிகளாகப் பிறந்து கூத்தாடிப் பிழைப்பவர்கள்.           (5)

 

நல்லநாள் கேட்டு, பலரும் அறியும்படி மணப்பறை யறைந்து, விவாகம் பண்ணி (ஒருவனுடைய) பாதுகாப்பிற்குட்பட்ட மேன்மையான இயல்பினையுடைய பிறனால் இச்சிக்கப்பட்ட மனைவியும், அவன் வீட்டிலிருக்க, அவ் வயலான் மனைவியை வேறொருவன் (தன் மனைவிபோ லெண்ணிப்) பார்த்தல் யாது காரணம்?        (6)

 

அயலார் புறங்கூறப் பயந்து, பந்துக்கள் வருந்த, அயலானுடைய மனை வியைத் தழுவி, (காம) மயக்கத்தையடைந்து, அவளையே நம்பியிருக்கும் நிலையில்லாத மனமுடையவனது அனுபவமானது, பாம்பின் தலையை நக்கி இன்பமடைந்தாற் போன்றது. (ஆபத்தேயன்றிச் சுகமில்லை யென்றபடி.)                                       (7)  

 

அறிவாளிகளிடத்தே தோன்றும் மிகவும் கொடிய காம நோயானது, அதிகரித்துப் பரவாது; வெளிப்படாது; பலராலும் அறியப்படாது; அய லாரிடத்து மானத்திற்குப் பயந்து, யாதொன்றும் சொல்லாமல் உள்ளுக் குள்ளேயே ஆறிவிடும்.                        (8)

 

(பகைவரால் விடப்படும்) பாணமும் அக்கினியும், பிரகாசிக்கும் கிரணங்களையுடைய சூரியனும் வெப்பமுண்டாக்கிச் சுட்டாலும், மேலே சுடும். காமமானது, (அங்ஙனமின்றி வெம்பச் செய்து, மனத்தைக் கவலைப்படுத்திச் சுடுகின்றபடியால் அவைகளை விட அதற்கே மிகவும் அஞ்சவேண்டும்.                                             (9)

 

ஊரில் தோன்றிய வெப்ப மிகுந்த சிவந்த நெருப்பிற்குத் தண்ணீரில் முழுகியாவது தப்பிவிடலாம். (ஆனால்) காமமோ, தண்ணீரில் குளித்தா லும் சுட்டுவிடும்; மலைமேலேறி ஒளித்தாலும் சுட்டுவிடும். (ஆகையால் அஃது உண்டாகாதபடி எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.)                                                                         (10)

 

10 - ம் அதிகாரம்.

ஈகை.

 

       (தம் கையில் ஒன்றும்) இல்லாதகாலத்திலும், கூடியவரையில் இருக் கிற காலம் போலவே மிகவும் சந்தோஷமடைந்து நேர்மையுடன் கொடுக்க வேண்டுமென்னும் நற்குணமுடையவர்களுக்கு சொர்க்கவாசற் கதவுகள் மூடப்படமாட்டா.               (1)

 

சாகுங்காலம் முன்னேயிருக்கிறது; (யாவரும்) வெறுக்கும்படியான விருத்தாப்பியமு மிருக்கிறது; அதன்பிறகும் பெருமையைக் கெடுக்கும் நோய்களிருக்கின்றன; (ஆகையால்) வீணாக அலையாதேயுங்கள்; கையிற் பொருளுண்டான பொழுது அதனை உறுதியாகப் பிடித்திராதேயுங்கள்; (மற்றவர்களுக்குப்) பங்கிட்டு நீங்களும் உண்ணுங்கள்; ஒன்றையும் ஒளியாமல் கொடுங்கள்.                                                       (2)

 

தரித்திரத்தால் சரீரம் நடுக்கமுற்றுத், தம்மை யடைந்தவர்களுடைய துன்பத்தைப் போக்காதவர்கள், (அப்படிச் செய்யாமல்) பிறருக்குக் கொடுத்துத் தாம் உண்டாலும், செல்வம் பெருகும் காலமானால் வந்து கொண்டேயிருக்கும். செலவிடாமல் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருந்தாலும் (முற்பிறப்பில் செய்த) நல்வினை நீங்கிவிட்டால், செல்வமும் நிலைத்திராமல் விட்டுப்போய்விடும்.                                                (3)

 

(மிகச் சிறிதாகிய) புல்லரிசியினளவாயினும், தினந்தோறும் உம்மால் கூடுமானவைகளைப் பிறர்க்குக் கொடுத்துச் சாப்பிடுங்கள். (ஏனெனில்) ஆழமான கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் (பிச்சையெடுத்துண்ணுதலால்) நெருப்பு மூட்டப்படுதலில்லாத அடுப்பையுடைய யாசகர்களை முற்பிறப்பில் கொடுக்காதவர்கள் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். (ஆகையால்)                                                 (4)

 

மறுபிறப்பின் பயனையும், இப்பிறப்பின் பயனையும் (நன்றாக) ஆராய்ந்து, வறியோர்க்குக் கொடுத்தலே ஒருவனுக்குப் பொருந்திய நல்வழியாம். தரித்திரத்தால் கொடுக்க முடியாவிடினும், பிறரிடம் சென்று யாசியாதிருத்தல் கொடுப்பதைவிட இரட்டிப்பு மேன்மையுடையதாம்.                                                            (5)

 

பலரும் விரும்பும்படி (கொடுத்து) வாழ்பவர்கள், ஊர் மத்தியில், சுற்றிலும் திண்ணையிட்டிருக்க அதன் நடுவிலிருக்கும் காய்ந்த பனைமரத்திற் கொப்பானவர்கள். தம் குடி செழிப்பாக இருந்தாலும், கொடுத்து உண்ணாத மனிதர்கள் சுடுகாட்டிலிருக்கும் ஆண் பனைக் கொப்பானவர்கள்.                                                         (6)

 

புன்னைப் பூக்களின் வாசனையானது கயல்மீனையும் புலால் நாற்றத்தையும் போக்கும் படியான (அலைகள்) மோதுகின்ற குளிர்ந்த கடலையும், கரையையுமுடைய பாண்டியனே! பெய்யவேண்டிய மழை பெய்யாவிட்டாலும், உயர்ந்தோர செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாவிட்டாலும் உலகம் பிழைக்கும் வழியாது? (பெரியோர் கடமை கொடுத்துண்ணலாம் என்ற படி.)                                                  (7)

 

ஆற்றினால் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய கடலையும், கரையையு முடைய பாண்டியனே! (தம்மிடம் வந்து) யாசிக்கின்ற கைக்கு இல்லையென் னாமல் ஏதாகிலுமொன்றைத் தம் சக்திக்கேற்றபடி கொடுப்பதே ஆண் தன்மையாகும். பதிலுக்குக் கொடுப்பவர்களுக்குக் கொடுப்பது, விளங்குகின்ற கடனெனும் பெயருடையதாகும்.     (8)

 

மிகவும் சிறிதென்று சொல்லாமலும் இல்லையென்னாமலும், தருமப் பயனை எல்லாரிடத்தும் செய்யக்கடவாய். (அது சிறிதாயினும்) வரிசையாக வாயில்கள் தோறும் சென்று பிச்சைவாங்கும் தவசியின் கையிலிருக்கும் பிக்ஷாபாத்திரம் (சிறுகச் சிறுக நிறைந்துவிடுவது) போல மெல்ல நிறைந்து விடும்.                                     (9)

 

சிறு தடியைக் கொண்டு அடிக்கப்படுகின்ற விசாலமான வாயையுடைய பேரிகையின் சத்தத்தைக் காத தூரத்திலுள்ளவர்கள் கேட்பார்கள். இடி இடிக்கும் சத்தத்தை ஒரு யோசனை தூரத்திலுள்ளவர்கள் கேட்பார்கள். (ஆனால்) பெரியோர்களுக்குக் கொடுத்தார் என்று சொல்லப்படும் சொல்லை, ஒன்றின் மேலொன்றாக அடுக்கியுள்ள சுவர்க்கம் மத்தியம் பாதாளம் என்னும் மூன்று உலகத்தாரும் கேட்பார்கள்.            (10)

 

 

 

 

11 - ம் அதிகாரம்.

பழவினை.

(முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகள்)

 

(ஓர் பசுவின்) இளங்கன்றானது பல பசுக்களின் மத்தியில் (தாய் தன்னை) விட்டு விட்டாலும், (தனது) தாயைத் தேடிச்சென்று அடைவதில் வல்லமை யுண்டாகும். (அதுபோல) முற்பிறப்பிற் செய்த கர்மமும் தன்னைச் செய் தவனைத் தேடி அடைவதில் அக்கன்றைப்போலவே வல்லமையுடைய                                      (1)

 

அழகும், இளமையும், மிகுந்த செல்வமும், மதிப்பும் (ஆகிய இவைக்ளெல்லாம்) ஒரிடத்தும் நிலையாக இராமல் அழிந்து போவதைப் (பிரத்தியக்ஷமாகப்) பார்த்திருந்தும், ஏதேனும் ஒரு வழியில், சிறிது நல்வினையாயினும், செய்யாதவனுடைய வாழ்க்கையானது, இவ்வுடலைச் சிலகாலம்பெற்றிருந்து அழியுந் தன்மையுடையது. (தோன்றியது; அழிந்தது; என்பது மாத்திரமேயன்றி, வேறு சிறிதும் பயன் இல்லாதது என்றபடி).                                                                       (2)

 

(செல்வம் முதலியவைகளால்) மேன்மையடைய வேண்டு மென்று விரும்பாதவர்கள் யாரிருக்கின்றார்கள்? ஒருவருமில்லை (ஆனாலும்) (அவரவர்) இன்பங்கள் (அவரவருடைய) ஊழ்வினைக்குத் தக்கபடி (முன்னமே) அளவு செய்யப்பட்டுள்ளன. (அதற்குத் தக்கபடிதான் இன்ப துன்பங்களுண்டாம்.) விளாங்காயைத் திரண்ட வடிவாகச் செய்தவர்களுமில்லை; களம்பழத்தைக் கறுப்பாகச் செய்தவர்களுமில்லை. (அவைகள் இயற்கையாகவே அவ்வாறிருத்தல் போல, இன்பமும் அவரவர்கள் செய்த புண்ணியங்களுக்குத் தக்கபடி உண்டாகும். என்றபடி.)        (3)

 

மழையானது பெய்யாவிட்டாலும் (அதைப்) பெய்யும்படி செய்பவர்களுமில்லை. அதிகமாகப் பெய்தால் (அதனைத்) தடுப்பவர்களுமில்லை. (இவைபோல) (பூர்வ வினையால்) வரக்கூடிய துன்பங்கள், வல்லமை மிக்க முனிவர்களாலும் தடுக்க முடியாதனவாம். வரக்கூடிய இன்பங்களும் அப்படியே நீக்க அறியனவாம்.         (4)

 

பனையினளவாக (மிக்க உயர்ந்த நிலையில்) இருந்தவர்கள், தினையளவாகித் (தாழ்ந்தவர்களாய்) தமது சாமர்த்தியங்களை யெல்லாம் உள்ளே அடக்கிக் கொண்டு, தினந்தோறும் தங்கள் பெருமை கெட்டு வாழ்வார்கள். இதன் காரணத்தை யோசித்தால், முற்பிறப்பில் செய்த வினையேயல்லாமல் வேறு என்ன இருக்கிறது? (வேறு காரணமில்லை.)                                                                   (5)

 

பலவகைப்பட்ட சிறந்த நூல் கேள்விகளால், உயிர்வாழ்க்கையின் பயனை அறியவல்லவர்கள், விரைவில் இறக்கவும், அத்தகைய கல்வியைச் சிறிதும் கல்லாத மூடர்கள், பலநாள் உயிர்வாழ்ந்திருத்தலை (இதற்குக் காரணம் யாதென்று) ஆராய்ந்தறிவீராயின், கல்லாத மூடர்கள், அறிவு என்னும் சாரத்தைத் தம்மிடத்தில் பெற்றிராமையால், யமன் (அம்மூடரைத்) திப்பி என்றெண்ணி, கொல்லமாட்டான்.      (6)

 

அன்னப்பறவைகள், அடம்பம் பூக்களைத் தங்கள் அலகுகளால் கோதிக் கிழிக்கும் படியான அலைகள் நெருங்கிய கடலின் குளிர்ச்சி பொருந்திய துறையையுடைய பாண்டியனே! (சிலர்) துன்பம் பொருந்திய மனத்தை யுடையவர்களாய் எல்லாரும் பார்க்கும்படி (பல வீடுகளின்) பெரிய வாயில்களிலே (சென்று) நின்று (பிச்சையின் பொருட்டு) உழலும் செயல்களெல்லாம் முற்பிறப்பில் செய்த தீவினைகளின் பயனேயாகும்.                                                               (7)

 

காற்று வீசுதலினால், நெய்தல் மலர்கள் தேனைச் சிந்துகின்ற, பெரிய கடலின் குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய பாண்டியனே! சிலர், அறி யாதவர்களு மல்லர்; அறிய வேண்டியவற்றை அறிந்தும் நிந்தையோடு கூடிய காரியங்களைச் செய்தல், (முற்பிறப்பில்) செய்த தீவினையால் வரும்.                                         (8)

 

நெருங்கிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தில், எல்லாரும் எவ்வள வாயினும், துன்பத்தை (யடைய) விரும்ப மாட்டார்கள். (அவர்கள் யாவரும்) விரும்பும் பயன் நல்ல இன்பங்களேயாகும். (ஆனாலும்) (ஒருவர்) விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஊழ்வினையால் வரத்தக்க இன்பதுன்பங்கள், அவ்வவரை அடையாமல் விடுதல் இல்லை.

                                                                        (9)

 

முற்காலத்தில் செய்யப்பட்ட வினைகளும் (அனுபவிக்க வேண்டிய காலத்தில்) குறையமாட்டா; அதிகப்படமாட்டா; முறைதவறி வரமாட்டா. துன்பம் வந்தகாலத்தில் உதவி செய்யமாட்டா. ஆகையால் துன்பம் வந்த காலத்தில் வருந்துவது ஏன்? (அனுபவித்தே தீரவேண்டும், ஆதலால் துக்கிப்பதாற் பலனில்லை. என்றபடி.)            (10)


 12 - ம் அதிகாரம்

மெய்ம்மை.

(அவ்வப் பொருள்களின் உண்மைத்தன்மை.)

 

வரிசையாகிய வளையல்களை யணிந்தவளே! (தம்மால்) கொடுக்க முடியாத ஒரு பொருளை (தம்மிடம் வந்து கேட்பவர்களுக்கு) இல்லை என்று சொல்வது யார்க்கும் குற்றமாகாது. அது உலகத்திலுள்ளவர்களின் இயற்கையே. (ஆனால்) கொடுப்பதாகச் சொல்லி, (பின்) வெகுநாட்கள் கழித்து, (அவர்கள்) ஆசை கெடும்படி (இல்லையென்று) தாம் சொன்ன சொல்லைப் பொய்யாக்குதல், (அதாவது, நம்பிக்கை மோசம் செய்தல்), (தமக்குஒருவர்) செய்த நன்றியைக் கொன்றவர்களுடைய குற்றத்தைவிட மிகுந்த குற்றமுடையதாம்.                                                               (1)

 

தகுதியுடைய பெரியோரும், தகுதியில்லாச் சிறியோரும் எக்காலத்தும் (யாவரிடத்தும்) தமது இயற்கையான குணத்தினின்றும் மாறுபடார். (எதுபோலவெனின்), வெல்லம் யார் தின்றாலும் கசக்காது. வேப்பங்காய் தேவர்கள் தின்றாலும் (இனிக்காது) கசக்கும்.                                                                      (2)

 

குளிர்ச்சி பொருந்திய மலைநாட்டையுடைய பாண்டியனே! (ஒருவர்க்குச்) சாய்கால் (சம்பத்து) உள்ள காலத்தில் (அவர்க்கு) மிகுந்த பந்துக்கள் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் நக்ஷத்திரங்களை விட அதிகமாயிருப்பார்கள். ஒருவர் துன்பமடையுங் காலத்தில் (அவர்க்கு நாங்கள்) பந்துக்கள் என்று சொல்கின்றவர்கள் (மிகச்) சிலரே யிருப்பார்கள்.           (3)

 

குற்றமில்லாத இவ்வுலகத்திற் பொருந்திய (அறம் பொருள் இன்பம் என்னும்) மூன்றில், இடையிற் கூறப்படுவதாகிய பொருளை (ஒருவன்) பெற்றிருந்தால், (அவன்) மற்ற இருபுறங்களிலுள்ள அறத்தையும் இன்பத்தையும் அடைவான். அந்த இடையிற் கூறப்பட்ட அப்பொருளையடையாதவன் உலைக்களத்திலே போட்டு காய்ச்சுவதாலுண்டாகும் துன்பத்தைப் போன்ற துன்பத்தை யடைவான்.                                     (4)

 

நல்ல பசுவின் கன்றானால், இளங்கன்றா யிருந்தாலும் (அதிக விலைபெறும். (அதுபோல) கல்வியில்லாதவர்களானாலும், செல்வமுள்ளவர்கள்ளாயிருந்தால், அவர்கள் வாயிலிருந்து வருஞ் சொற்கள் (யாவராலும்) அங்கீகரிக்கப்படும். (படித்த புலவர்களாயினும்) தரித்திரர்களாயிருந்தால், அப்படிப்பட்டவர்களுடைய வாயிலிருந்து வருஞ் சொற்கள், சொற்ப ஈரமிருக்குங்காலத்தில் (பூமியை) உழுதால் எப்படியோ அதுபோல், மேலே மாத்திரம் காணப்பட்டு எவராலும் அங்கீகரிக்கப்படாவாம்.          (5)

 

விசாலமான கண்களையுடைய பெண்ணே! உப்பு, நெய், பால், தயிர், பெருங்காயம் (முதலியவற்றைச் சேர்க்கவேண்டிய பக்குவப்படி) சேர்த்து சமைத்தாலும், பேய்ச்சுரைக்காய் தன் இயற்கையான கசக்கும் குணத்தை விடமாட்டாது. (அதுபோல) இயற்கையில் அடக்கமில்லாதவர்கள் தத்துவஞானத்தை யுணர்த்தும் நூல்களை மிகுதியாக எப்பொழுதும் படித்து வந்தாலும் அடங்கமாட்டார்கள்.                                            (6)

 

புன்னை மரங்களின் பெருமை பொருந்திய மலர்கள் வாசனை வீசிக் கொண்டிருக்கும் படியான சோலை பொருந்திய மிக்க நீரையுடைய கடற்கரையையுடைய பாண்டியனே! தம்மைப் பிறர் (காரணமில்லாமலே) இழிவாகப் பேசினால், தாமும் அவர்க்கு எதிரிலேயே நிந்திக்கக்கடவர். அப்படிப்பட்டவர்களிடத்தில் தாக்ஷிணியமென்ன? வரவேண்டிய நன்மை தீமைகள் (தடையின்றி) எல்லார்க்கும் வரும்.                  (7)

 

பசுக்கள் வெவ்வேறு நிறமுடையனவாயிருந்தாலும் அப்பசுக்களால் கொடுக்கப்படும் பால் வெவ்வேறு நிறமுடையனவல்ல. (ஒரேவிதமாக வெண்மையாகவே யிருக்கும்) அப்பசுக்களைப் போல தரும் மார்க்கங்களை இவ்வுலகத்தில் வெவ்வேறு உருவினவாகக்கொள்க. அந்தப் பால் போல தருமமானது ஒரே தன்மையுடையதாகும். (தருமம் செய்யும் வழிகள் பலவாயிருந்தாலும் தருமம் என்பது ஒன்றேயாம். என்றபடி.) (8)

 

ஆராய்ந்து பார்க்குமிடத்து இவ்வுலகத்தில் ஒரு பழிப்பான சொல்லையும் அடையாதவர் எவர்? (ஏதாவது) ஒரு உபாயத்தால் வாழாதவர்கள்எவர்? (தம் வாழ்நாளின்) இடையிலே துன்பத்தை யடையாதவர்கள்எவர்? (தம் வாழ்நாளின்) முடிவுவரையில் செல்வத்தை அனுபவித்தவர்எவர்? (ஒருவருமில்லை என்றபடி.)                       (9)

 

ஆராயுமிடத்து இறந்த பின் தம் உயிரோடு வருவது, தாம் தாம் செய்த நல்வினை தீவினைகளேயல்லாமல், வேறொன்றும் எங்கும் இல்லை. தாம் (பலவகை உண்டி முதலியவற்றால்) போஷித்து, (அணி முதலியவற்றால்) அலங்காரம் செய்த உடம்பும் யமன் உயிரைக் கொண்டு போகும் காலத்தில் பிரயோசனம் இல்லாததாய்விடும்.     (10)

 

13 - ம் அதிகாரம்.

தீவினையச்சம்.

(தீய காரியங்களைச் செய்ய அஞ்சுதல்.)

 

சுடுகாடுகள், சிலகாலம் சம்சார துக்கத்தில் தங்கியிருந்து (பின்) துறவற நெறியில் சேராத மனிதர்களின் பிணங்களை யுடையவையாம். ஆனால், நல்லறிவில்லாத அற்ப அறிவையுடைய மூடர்களின் வயிறுகள், பொருந்திய (இழிவாகிய) மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் சுடுகாடுகளாம்.                                               (1)

 

வண்டுகள் சப்திக்கும்படியான காட்டிற் பொருந்தி வசிக்கும் கவுதாரி காடை முதலிய பறவைகளைப் (பிடித்து) கூட்டில் பொருந்தும்படி வைத்து வளர்ப்பவர்கள், (மறு பிறப்பில்) இரும்பு விலங்கு மாட்டப்பட்ட கால்களையுடையவர்களாய், கருமையான வட்டை நிலங்களிலும் விளை நிலங்களிலும் (வேலை செய்யச்) செல்வார்கள்.                  (2)

 

முற்பிறப்பில் நண்டைப் பிடித்துத் தின்ன விரும்பி (அதன்) கால்களை முரித்துத் தின்றதனாலாகிய பழைய தீவினையானது (மறு பிறப்பில்) வந்து சேர்ந்தால், (அத் தீவினையைச் செய்தவர்கள்) உள்ளங்கை மாத்திரம் சங்கு மணிபோல நிற்க, (மற்ற) விரல்களெல்லாம் அழுகிப்போய் (மிகுந்த) துன்பத்தைத் தரும்படியான குஷ்ட நோயையடைவார்கள்.                                                           (3)

 

(குளிர்ந்த தன்மையுடைய) நெய்யும் நெருப்பின் வெப்பத்தை யடைந் தால், (உடம்பை) எரிக்கும்படி காய்ந்து, (தன்னைச் சேர்ந்தவர்களுக்கு) துன்பமடையும்படியான நோயை யுண்டாக்கும். (அதுபோல), (நல்லொழுக்கத்தினின்றும்) தவறுதலில்லாத மேலோரும், தீய காரியங்களைச் செய்யும் கீழ் மக்களோடு சேர்ந்து, (அதனால் தமது நல்லொழுக்கத்தினின்றும்) தவறி, மிகவும் கொடிய செயல்களைச் செய்வார்கள்.   (4)

 

(அறிவினால்) பெரியோர்களுடைய சிநேகமானது, இளஞ் சந்திரன் போல, தினந்தோறும் படிப்படியாக வளரும். (அறிவினால்) சிறியோர் சிநேகமோ, ஆகாயத்திற் செல்லும் பூரணச்சந்திரன் போல, (தினந் தோறும் படிப்படியாக) தானாகவே குறைந்து போகும்.                                                                       (5)

 

(இவர் நற்குண நற்செய்கைகளால்) நிறைந்தவரென்று மதித்து (நீ) சிலரிடம் சிநேகம் செய்தாய். (அப்படிச்) சேர்ந்த உனக்கு, (நீ நினைத்தபடி) அந் நற்குணங்கள் அவர்களிடம் இல்லையானால், (அது) ஒருவன் ஒரு சிமிழியைப் பார்த்து, அதில் வாசனைப் பொருள் இருக்கின்றதென்று நினைத்து, திறந்து பார்த்த பொழுது அதற்குள் வாசனைப் பொருள் காணாமல் பாம்பைக் கண்டது போன்றதாம். சிநேகம் செய்தவனே! (நீ இதைக்) கேட்பாயாக.

(6)

மலைச்சாரல்களில் சிறந்த இரத்தினங்களிருந்து கொண்டு பிரகாசிக்கும் படியான நாட்டை யுடையவனே! (நாம் சொல்வதைக்) கேள். (இவ் வுலகத்தில்) மனிதர்களுடைய (மனமும் செய்கையும் ஒன்று பட்டிராமல்) எண்ணம் வேறாகவும் அவர்களுடைய செய்கை வேறாகவுமிருக்கும். (ஆகையால்) ஒருவருடைய மனதை ஆராய்ந்தறியத்தக்க வல்லமையுடையவர்கள் யாரிருக்கிறார்கள்! (ஒருவருமிலர் என்றபடி.)                (7)

 

சேற்றை நீக்கித் தெளிந்துநிற்கும் அருவி நீர் பொருந்திய அழகிய மலை நாட்டையுடைய பாண்டியனே! மனமார சிநேகிக்காமல் (தங்கள் சொந்த நன்மையையே நாடும் தொழிலையுடையவர்களாய், வஞ்சனையாக சிநேகித்தவர்களுடைய மிகுந்த சிநேகமானது, மனதில் குற்றமுடையதாகும்.                                         (8)

 

(ஒருவன் தனது பகைவனைக் கொல்லுவதற்காக) ஓங்கிய பிரகாசமுள்ள வாளாயுதமானது, அப்பகைவன் கையில் அகப்பட்டு விட்டால் அப் பகை வனைக் கொல்லாமற் போவது மாத்திரமல்லாமல், அவன் வலிமையையும் அழித்துவிடும். இது உண்மை. (அதுபோல) (மூடர்களுக்குச் செய்யும்) உபகாரமானது இம்மையில் மாத்திரமன்றி, மறுமையிலும் தொடர்ந்து துன்பமுண்டாக்குவதால், அறிவில்லாதவர்களிடத்தினின்றும் நீங்குதல் நல்ல காரியமாம்.                                                    (9)

 

என் மனமே! மனையாளிடத்துக் கொண்டுள்ள அன்பைவிடாமல், பிள்ளைகளுக்காகவும் ஏக்கங்கொண்டு எவ்வளவு காலம் வாழ்வாயோ! எவ்வளவு சிறியதாயிருந்தாலும் (ஒருவன்) செய்த நற்காரியமே யல்லாமல் அவனது உயிருக்கு அடையும்படியான நற்பயன் வேறில்லை.                                          (10)


 
இரண்டாவது பொருட்பால்.

(பொருளின் பகுப்பை யுணர்த்துவது.)

 

14 - ம் அதிகாரம்.

கல்வி

(மனிதர்களுக்கு) மயிர் முடியின் அழகும், மடிப்புள்ள வஸ்திரங்களின் கரையின் அழகும், மஞ்சள் பூச்சின் அழகும் அழகல்ல; நாம் நற்குணமுடையவர்களாயிருத்தல் வேண்டுமென்கிற நல்ல அறிவைக் கொடுப்பதால், கல்வியின் அழகே சிறந்த அழகாகும். (மஞ்சளழகு என்றது பெண்களைக் குறித்து; ஆகவே பெண்களும் கற்க வேண்டும்; அதுவே அவர்களுக்கும் அழகாகும் என்பது விளங்குகின்றது.)                         (1)

 

(கல்வியானது) இவ்வுலகத்திற்குரிய இன்பங்களைக் கொடுக்கும்; பிறர்க்குக் கொடுப்பதால் குறைவு படுதலில்லை; (கல்வி கற்றவர்களாகிய) தங்களை (புகழையுண்டாக்குவதால்) விளங்கச்செய்யும்; தாம் உயிரோடிருக் கும்பொழுது அழிந்து போவதில்லை; (ஆதலால்) கல்வியைப் போல், அஞ்ஞானமாகிய நோயைப் போக்கும் (ஒரு) மருந்தை நாம் எவ்வுலகத்திலும் பார்க்கவில்லை. (கல்வியே அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தை யளிக்கும் சிறந்த மருந்தாம்.)                                (2)

களர் நிலத்தில் உண்டான உப்பைப் பெரியோர்கள் (நல்ல) விளைச்சல் நிலத்தில் உண்டாகும் நெல்லைவிட மேலானதாகக் கொள்வார்கள். (அதுபோல), இழிவான சாதியில் பிறந்தவரானாலும், (நூல்களைக்) கற்று (அவற்றின்) பொருளை அறிந்தவர்களை, உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து மேன்மைப்படுத்த வேண்டும்.                                  (3)

 

(கல்வி, செல்வத்தைப்போல) வைத்துள்ள இடத்திலிருந்து அந்நியரால் அபகரிக்கப்படமாட்டாது. (பெற்றுக் கொள்ளத்தக்கவர்கள்) கிடைத்து, (அவருக்குக்) கொடுத்தால் குறைவுபடுதலில்லை. மிக்க சிறப்பையுடைய அரசர்கள் கோபித்தால் (அதனை) கவர்ந்து கொள்ளமாட்டார்கள். (ஆகையால்), ஒருவன் தன் பிள்ளைகளுக்கு ஆஸ்தியாகச் சேர்த்து வைக்கத்தக்கவை கல்விப்பொருளேயாம். செல்வம் முதலிய மற்றைப் பொருள்களல்ல.                                                     (4)

 

(கற்க வேண்டிய) கல்விகளோ அளவற்றன. (முழுமையும் கற்போ மென்றால்) கற்பவர்களுடைய வாழ்நாட்களோ சிலவாம். (அவற்றிலும்) மெல்ல யோசித்துப்பார்த்தால் (படிப்பிற்குத் தடையாகும்) நோய்களோ பலவாம். (ஆதலால், அறிவுடையோர், நீரையும் பாலையும் கலந்து வைத்தால்) நீரை ஒழித்துப் பாலை உண்ணும் அன்னப் பறவைபோல, (நூல்களின் தன்மையை) அறிந்து, தெளிவாக ஆராய்ச்சி செய்து (உயிர்க்கு உறுதியாக்கும்) பொருத்தமான (ஆன்மார்த்த நூல்களையே) கற்பார்கள்.                               (5)

 

(ஆற்றில்) மரக்கலத்தை ஓட்டுகிறவன், ஆராயுமிடத்து பழமையான சாதியில், தாழ்ந்த சாதியில் சேர்ந்தவனென்று இகழாமல் (பெரியோர்) அவன் துணையால் அந்த ஆற்றைக் கடப்பார்கள். (அதுபோலவே) நூல்களைக் கற்றறிந்த புலவனை (அவன் தாழ்ந்த சாதியானானாலும்) அவனைத் துணையாகக் கொண்டு நல்ல நூல்களைக் கற்க

வேண்டும்.                                                                     (6)

 

கெடுதலில்லாத பழமையாகிய நூற் கேள்விகளைக் (கேட்கும்) தன்மை யுடையவர்கள், பகைக்கும் குணமில்லாதவர்களும் நுண்ணறிவு உடைய வர்களுமான கற்றவர் கூட்டத்திலே சேர்ந்திருந்து சந்தோஷமடைவதை விட, விசாலமான ஆகாயத்தில் வசிப்பவர்களாகிய தேவர்களுடைய சுவர் க்கலோகம் இன்பமுண்டாக்குவதாயிருந்தால் பார்ப்போம். (சுவர்க்க இன்பத்தைவிட, நற்கல்விகற்ற புலவரோடு கலந்திருந்து அனுபவிக்கும் இன்பமே சிறந்தது என்றபடி)                                        (7)

 

சப்திக்கின்ற கடலினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய பாண்டியனே! (பல நூல்களைக்) கற்றறிந்தவர்களுடைய சிநேகமானது, கரும்பை நுனியிலிருந்து தின்றது போன்றதாம். (வர வர அதிக இன்பத்தைக் கொடுக்கும்.) கல்வி யறிவாகிய குணமில்லாத அன்பற்றவர்களுடைய சிநேகமானது, (கரும்பை) நுனியிலிருந்து தின்பதை விட்டு வேரிலிருந்து தின்றதைப் போன்ற தன்மையை உடையதாகும். (முதலில் இன்பம் மிகுந்திருந்து போகப்போக குறைந்து விடும்.) (அதி - 13 பாட்டு. 5 - ன். கருத்தை இதனோடு ஒப்பிடுக.)                                                                     (8)

 

பழமையான சிறப்பையும் ஒளிபொருந்திய நிறத்தையு முடைய பாதி ரிப்பூவைச் சேர்தலால், புதியபானையானது (வாசனை பெற்று), (பின்பு), தன்னிடத்திலுள்ள தண்ணீர்க்கும், அந்தப் பரிமளத்தைக் கொடுக்கும். அதுபோல, (ஒருவர்) தாம் படியாதவரானாலும், படித்தவர்களைச் சேர்ந்து ஒழுகினால், தினந்தோறும் நல்லறிவு உண்டாகப் பெறுவர்.                                                       (9)

 

அளவுமிகுந்த சாஸ்திரங்களுக்குள் தத்துவ ஞானத்தைத் தரும் நூல் களைக்கற்காமல், இவ்வுலகத்திற் குரிய நூல்களைப் படிப்பதெல்லாம், 'கல கல' வென்று வீணாகக்கூவும் அளவுடையதே யல்லாமல், அவற்றைக் கொண்டு பிறவித் துன்பம் நீங்கும் வகையை அறிபவர் இல்லை. (அதி. 6. பாட்டு. 2 - ன். கருத்தையும் இதனோடு ஒப்பிடுக.)

(10)

 

15 - ம் அதிகாரம்.

குடிப் பிறப்பு.

 

சிங்கமானது தனக்கு (பசியினாலாகிய) துன்பம் மிகுதியாய் உண்டானாலும் கொடியாகப் படர்ந்திருக்கும் புல்லைத் தின்னுமோ? (தின்னாது). (அதுபோல) நல்ல குலத்தில் பிறந்தவர்கள் (வறுமையினால்) உடுக்கப்படும் ஆடை கெட்டுச் சரீரம் அழிந்தாலும் தங்கள் நன்னடக்கையிற் குறைவு                                   (1)

 

ஆகாயத்தை யளாவி மேகங்கள் தவழ்கின்ற மலையையுடைய அரசனே! பெருந்தன்மை, சாந்தகுணம், நன்னடக்கை என்னும் இம் மூன்று குணங்களும் பெருமை பொருந்திய நற்குடியிற் பிறந்தார்க்கு உண்டாகுமே யல்லாமல் மற்றவர்களுக்குப் பெரிய செல்வம் வந்தாலும் உண்டாக மாட்டாவாம்.                                          (2)

 

நற்குடியில் பிறந்தவர்கள் பெரியோரைக் கண்டால் இருப்பிடத்தை விட்டு எழுந்து நிற்றலும், எதிராகச் செல்லலும், இன்னமும் அப்பெரியோர்கள் திரும்பிப்போகும் பொழுது (அவருடன் சென்று) அவர் விடை கொடுக்கத் தாம் (அவரை விட்டுப்) பிரிதலும் (ஆகிய) இத்தன்மையான செய்கைகளைக் குறைவுபடாத ஒழுக்கமாகக் கொண்டவர்களாவார்கள். (இக்குணங்கள்) கீழ்மக்களிடம் பொருந்தியிரா. (ஆதலால் அத்தகைய நற்குலப் பிறப்புடையாரை) கீழ்மக்களோடு ஒரு தன்மையாக வைத்து எண்ணுதல் தகுதியன்று. (3)

நன்மையான காரியங்களைச் செய்தல் இயல்பாகும். தீய காரியங்களைச் செய்தல் பலரும் தூற்றும் பழிப்பாகும். (ஆதலால்) நற்குணமெல்லாம் அறியும் உயர்குடிப் பிறப்பு (முன்னைய நல்வினையால் ஒருவர்க்கு வந்து) கூடினால் அதைவிட லாபகரமானது வேறென்ன இருக்கிறது?                                                             (4)

 

(கல்வி) கல்லாமையாலுண்டாகும் அச்சம் உள்ளது. கீழ்மக்களுக்குரிய தொழில்களைச் செய்வதாகிய அச்சம் உள்ளது. (பொய், கோள், கடுஞ்சொல் முதலிய தீச்சொற்களைச்) சொல்லாமலிருப்பதிலும் (எந்த இடத்தில் எப்பொழுது தவறு நேரிடுமோ என்று) ஒரு தளர்ச்சிக்கு அஞ்சு தல் உள்ளது. எல்லாவற்றையும் இரக்குந் தன்மையுள்ள யாசகருக்குச் சிறிதும் கொடுக்காமலிருப்பதாகிய அச்சம் உள்ளது. (ஆகையால், இவ்வித அச்சங்களை யடைதற்குக் காரணமான) மாட்சிமைப்படாத இத்தகைய உயர்குடியிற் பிறந்தவர்கள் மரக்கலத்தில் உள்ளவர்களைப்போல எப்பொழுதும் அச்சமுடையவர்களே யாவார்.                                                                       (5)

 

பொன்னும் இரத்தினங்களும் முத்துக்களும் பிரகாசிக்கும்படியான முழங்குகின்ற குளிர்ந்த கடலினது கரையையுடைய பாண்டியனே! நல்லினத்தாரோடு சேர்ந்திருத்தலும், இனிய சொற்களைச் சொல்லுதலும், (தம்மால் கொடுக்கக்கூடிய) ஒரு பொருளைத் (தம்மிடம் வந்து யாசிப்பவர்க்குக்) கொடுத்தலும், மற்றுமுள்ள மன நன்மைகளுமாகிய இவைகளெல்லாம் உயர்குடியில் பிறந்தவரிடத்தே இருக்கின்றன,                         (6)

 

(ஒரு) பெரிய வீடானது கட்டுக்குலைந்து கறையானால் அழிக்கப்பட்டிருந்தாலும், ஒழுக்கில்லாத ஒரு பக்கத்தையுடைத்தாயிருக்கும். (அது போல) நற்குடியிற் பிறந்தவர்கள் துன்பம் அனுபவிக்கும்பொழுதும் தாங்கள் செய்யத்தக்க கடமைகளைச் செய்வார்கள்.   (7)

 

ஒரு பக்கம் பாம்பு பற்றினாலும் மற்றொரு பக்கத்தினால் அழகிய இடமுடைய பெரிய பூமியைப் பிரகாசமடையும்படியாகச் செய்கின்ற (பூரண) சந்திரன் போல, உயர்குடியிற் பிறந்தவர்கள் தங்களுக்கு வறுமையானது மிகுதியாக நேரிட்டாலும் (பிறர்க்கு) உதவிபுரிவதற்குச் சோர்வடைய மாட்டார்கள்.                                           (8)

 

மானானது சேணம் முதலிய போர்க் கோலத்தைத் தாங்கினாலும், பாய்ந்து செல்லுந் தன்மையுள்ள குதிரையைப் போல போர்புரியும் வலிமையைப் பெற்றிருப்பதில்லை. (அதுபோல) உயர் குடியிற் பிறந்தவர்கள் (தரித்திரம் முதலியவற்றால்) செய்ய முடியாத காலத்திலும் செய்யும் தரும் காரியங்களைக் கீழோர் (செல்வம் முதலியவற்றால்) செய்யக்கூடிய காலத்திலும் செய்வதில்லை.                                        (9)

 

விசாலமான ஆறானது வற்றிக்கிடக்குங் காலத்திலும் தோண்டினால் தெளிந்த நீரைக் கொடுக்கும். (அதுபோல) நல்ல குடியிற் பிறந்தவர்கள் தங்களிடத்தில் யாதொரு பொருளுமில்லாத (தரித்திர) காலத்திலும், வேறு கதியில்லாமல் தம்மை யடைந்தவர்க்குத் தளர்ச்சி நேர்ந்தகாலத்தில் ஊன்றுகோல் போல உதவி செய்வார்கள். ("ஆற்றுப் பெருக்கற்று அடி சுடு மந்நாளு மவ்வாறு - ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு - நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தா ரானாலும் - இல்லையென மாட்டா ரிசைந்து" என்னும் பாடலின் கருத்தையு மிதனோடு ஒப்பிடுக.)                                                 (10)

 

16 - ம் அதிகாரம்.

மேன்மக்கள் - (மேன்மக்களின் தன்மை.)

 

அழகிய இடமகன்ற ஆகாயத்தில் பரந்த நிலாவை வீசுகின்ற சந்திரனும் பெரியோரும் சமமாவார்கள். ஆனால், சந்திரன் களங்கத்தைத் தாங்கும். பெரியோர்கள் களங்கத்தைப் பொறுக்கமாட்டார்கள். சிறிது களங்கம் (குற்றம்) தம்மை யடையுமாயினும் (அதற்காக) வருந்தி அழிந்துவிடுவர்.                                              (1)

 

பெரியோர் பிறரால் பொருள் கிடைத்தாலும் கிடையாவிட்டாலும் குற்றம் நினையார். விசையால் நரியின் நெஞ்சைப் பிளந்த அம்பைவிட சிங்கமானது (குறித்த இலக்குத் தவறிப்) பிழைக்கும்படி தொடுத்த அம்பு தீமையுடையதாகுமோ? (ஆகாது)        (2)

 

(உணவில்லாமையால் உடம்பு மெலிய அதனால்) நரம்புகள் மேலே தோன்றி வறுமைப்பட்டாராயினும் பெரியோர்கள் (நல்லொழுக்கத்தின்) வரம்பினின்றுங் கடந்து குற்றமான காரியங்களில் அதிக்கிரமித்து நடவாமல், (தமது) அறிவைக் கருவியாகக் கொண்டு முயற்சியென்னும் நாரினால் மனதைக் கட்டி, தமக்குள்ள பொருளளவிற்குத் தக்கபடி செய்யத்தக்க தருமங்களைச் செய்வார்கள்.                                  (3)

 

பெரியோர் தாங்கள் போகும் வழியில் ஒருநாள் (ஒருவரைக்) கண்டாலும், பழைய வழியால் வந்த சிநேகம் போலக் காணப்படும்படி விரும்பி அவரைச் சிநேகிப்பார்கள். நல்ல மலைகளைக் கொண்ட பாண்டிய நாட்டை யுடையவனே! கல்மலையில் சிலகாலம் காலடிபட்டால் வழியுண்டாய்விடும்.                                                (4)

 

இலக்கண நூலைப் பொருந்தாததும் அர்த்தஞான மில்லாததுமாகிய மூடர் சங்கத்தில், கல்வியில்லாத ஒருவன் ஒன்றைச் சொல்லக் கேட்டு வருத்தமடைந்தும், மேன்மக்கள் அவனிடத்துத் தயை தாக்ஷண்யங்கொண்டு, அவ்வறிவில்லாதவன் பலபேர் முன்னிலையில் அவமானப்படுவதற்காக மனமிரங்கிக் கேட்பார்கள்.               (5)

 

கரும்பைத் துண்டு துண்டாகத் தரித்து (அதன்) கணுக்கள் நொறுங்கும்படி ஆலையிலிட்டாட்டி நசுக்கி இரசத்தைக் கொண்டாலும் (அக்கரும்பு) இனிய மதுரமுடையதேயாகும். (அதுபோல) நற்குடியிற் பிறந்தோர் (தம்மைப் பிறர் தமது) குற்றந் தோன்றும்படி திட்டிப்போனாலும் தம் நற்குணங்கெட்டுத் தம் வாயால் அவரைத் திட்டமாட்டார்கள்.                                                                 (6)

 

குற்றமற்ற அறிவையுடைய மேன்மக்கள் திருடார். கள்ளைக் குடியார். (நூல்களால்) விலக்கப்பட்ட தீச்செயல்களை வெறுத்துச் செய்யாதொழிந்து, பிறரை அவமதித்து நிந்தித்துப் பேசார். மறந்தும் (தம்) வாயால் பொய் சொல்லார். (தரித்திரம் முதலியவற்றால்) தளர்ச்சி நேர்ந்த காலத்தும் வருந்தமாட்டார்.                                          (7)

 

(ஒருவன்) அன்னியருடைய இரகசியத்தை யறிவதில் செவிடனாகவும், நல்லொழுக்கத்தின் வகையை யறிந்து அயலார் மனைவியரைக் காதலோடு காண்பதில் குருடனாகவும், கொடிய புறங்கூறுவதில் ஊமையாகவும் இருப்பானானால் அவனுக்கு எந்தத் தருமமும் (பிறர்) உபதேசிக்க வேண்டிய தில்லை.                              (8)

 

மேன்மைக் குணமில்லாதவர்கள் (தம்மிடத்தில் பிறர்) பலமுறை வந்தால் (இவர்கள் நம்மிடத்தில்) யாதாயினும் விரும்பிக் கேட்பரென் றெண்ணி அவரை (உபேட்சை செய்து) இகழ்ச்சி செய்வார்கள். பெரியோர் (பிறர்) யாதாயினும் விரும்பினாலும் நல்லதென்று சொல்லி (அவர்களைக் காணும் பொழுதெல்லாம் அவர்களுக்குச்) சிறப்புச் செய்வார். (9) சிலர், இவர் செல்வமுள்ளவ ரென்றெண்ணி ஒரே துணிவாய்ப் பிடித்துக் கீழ்மக்களின் பின் சென்று வாழ்வார்கள். (இது தகாத செய்கையாம்.) நல்ல குலத்திற்பிறந்த மேன்மக்களைச் சேர்ந்தால் (வேண்டும் பொருள்க ளெல்லாவற்றையும்) உடையதொரு சுரங்கம் கிடைத்துவிட்டது போலாகாதா?                                                  (10)

 

17 - ம் அதிகாரம்.

பெரியாரைப் பிழையாமை.

(பெரியோர்களை அவமதியாதிருத்தல்.)

 

சப்திக்கும்படியான நீரருவிகள் பொருந்திய அழகிய மலைகளையுடைய நல்ல பாண்டிய நாட்டையுடையவனே! பொறுத்துக்கொள்வார்களென்று நினைத்து, குற்றம் நீங்கிய பெரியோர்களிடத்திலும் (அவர்கள்) வெறுக்கத் தகுந்த காரியங்களைச் செய்யாதிருத்தல் வேண்டும். (அவர்கள்) வெறுத்து விட்டபின் (அவ்வெறுப்பினால் வரும் தீங்கை) நீக்குதல் யாவர்க்கு மருமையாம்.                                          (1)

 

நல்ல மேன்மையில்லாத அறிவுடையார், மிகுந்த திரவியத்தைக் கொடுத்தும் சிநேகிப்பதற்கரிய பெரியோரை சும்மா சிநேகிக்கப் பெற்றிருந்தாலும் (அவர்களாலடையவேண்டிய பயனை அடைந்துகொள்ளாமல்) ஐயோ ! (தங்கள் காலத்தை) பிரயோசனமில்லாத காலமாகக் கழிப்பார்கள்.                                           (2)

 

இழிவாக மதித்தலும், மேன்மையாக மதித்தலும் என்னுமிவ்விரண்டும் மேன்மக்களால் மதிக்கத்தக்க தன்மையுடையன. நற்குணமில்லாதவர்களும் நல்லொழுக்க மில்லாதவர்களுமாகிய கீழ்மக்கள் அவமதித்தலையும் சிறப்பித்துப் புகழ்தலையும் தெளிந்தெடுத்த நூல்களைக் கற்ற பெரியோர்கள் ஒருபொருளாக மனத்திற்கொள்ள மாட்டார்கள்.                                                                 (3)

 

படம் விரிக்குந் தன்மையுள்ள ஒளிபொருந்திய பாம்பானது பூமியின் வெடிப்பிற்குள் இருந்தாலும், இடியினது கடுங்கோபமானது (சப்தமானது) ஆகாயத்திலிருந்தாலும் (அதற்குப்) பயப்படும். (அதுபோல) பெரியோர்கள் கோபித்தால், அருமையான பாதுகாப்பில் தாங்களிருந்தாலும் தப்பி உயிர் வாழமாட்டார்கள்.                                 (4)

 

'எம்மை நீர் அறிந்துகொள்ளவில்லை. எமக்குச் சமமானவர் ஒருவருமில்லை' என்று தம்மைத் தாமே உயர்த்திக்கொள்வது பெருமையாகாது. தம்மை எளியவர்களாக மதித்து, தருமமார்க்கமறிந்த பெரியோர்கள் (தம்மை) பெரியவர்களாக மதித்துக் கொள்வதே பெருமையுடையதாம்.                                                           (5)

 

பெரிய கடலின் குளிர்ந்த கரையைச் சார்ந்துள்ள நாட்டையுடைய பாண்டியனே! சிறியவர்களுடைய சிநேகமானது காலை வெய்யிலின் நிழலைப் போல (போகப்போக) குறைந்துகொண்டே போகும். தொன்று தொட்டு பரம்பரையாக வருகிற பெரியோர்களுடைய சிநேகமானது (அவ்வாறு) குறைவுபடுதலில்லாமல் சாயங்காலத்து நிழல் போல, வளர்ந்து வளைந்து செல்லும். (அதி - 13. பா - 5. அதி - 14. பா - 8. இவற்றின் கருத்தைனோடு ஒப்பிடுக.)                                                                    (6)

நெருங்கித் தளிர்த்துத் தழைத்திருக்கும் குளிர்ந்த மரங்களெல்லாம் தம்மிடம் வந்தவர்களுக்கு வேறுபாடில்லாமல் ஒரே தன்மையாக புகலிடமாவது போல, அரசர்களுடைய செல்வத்தையும் பெண்களுடைய அதிகரிக்கின்ற அழகின் நன்மையையும் இடைவிடாமல் சேர்ந்திருப்பவர்கள் அனுபவிப்பார்கள்.                          (7)

 

பெரிய வற்றாத மிக்க (நீரையுடைய) கழிக்கரையையுடைய பாண்டியனே! ஆராய்ச்சி யறிவில்லாதவர்களிடத்திலும் சிநேகஞ் செய்து பார்க்க அவர்களது குணாகுணந் தெரியும். அவர் சிநேகம் பிரிய, பெரிய துன்பமாகிய நோய் உண்டாகும். (ஆதலால்) யாரிடத்திலும் சிநேகியாமையே பல மடங்கு நல்லது.                                               (8)

 

சொல்லப்புகுந்தால் நற்குண நற்செய்கைகளை உடையவரிடத்தில் நூலைக் கல்லாமல் கழிந்த நாளும், பெரியோர்களிடத்தில் போகாமல் கழிந்த நாளும், (தம்மால் கொடுக்கக்) கூடிய பொருள்களை (தம்மிடம் வந்து யாசிப்பவர்க்குக்) கொடாமல் கழிந்த நாளும் உண்டாகமாட்டா.                                                          (9)

 

பெரியோர்களுக்குப் பெருமையாவது பெருமை பாராட்டாமல் வணங்கியிருத்தல். (கல்வி முதலியவற்றில் யாதாயினும்) ஒன்றிற்கு உரிமையுடையவர்களுக்கு உரிய குணமாவது அடங்கியிருத்தல். ஆராயுமிடத்து, தன்னைச் சேர்ந்தவர்களின் துன்பத்தை நீக்குவார்களானால் செல்வரும் செல்வ முள்ளவர்களே.                            (10)


 18 - ம் அதிகாரம்.

நல்லினஞ் சேர்தல்.

(பெரியோர்களது சேர்க்கை.)

 

வெயிலானது அதிகரித்தலால் புல்லின் மேலிருக்கும் பனியின் பற்றானது நீங்கிவிடுவது போல, சிறுபிராயத்தில் அடக்கமில்லாதவர்களுடன் சேர்ந்து சன்மார்க்கமல்லாத பாபகாரியங்களைச் செய்து நடந்த குற்றங்களும் நல்ல மார்க்கமறிந்த நல்ல பெரியோர்களைச் சேர்தலால் கெட்டுவிடும்.                                    (1)

 

தரும் மார்க்கத்தை அறியுங்கள். எமனுக்குப் பயப்படுங்கள். பிறர் (சொல்லும்) கொடுஞ் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுங்கள். வஞ்சம் (உம்மிடம் வராதபடி தடுத்துப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள். தீய செயல்களையுடையவர்களுடைய சிநேகத்தை வெறுத்து விடுங்கள். எந்நாளும் பெரியோர்வாயிற் பிறக்கும் சொல்லைப் பெறுங்கள்.       (2)

 

(உறவினர் நண்பர் முதலிய) அடைந்தாரைப் பிரிதலாலும், (சகிப்பதற்கு) அருமையான நோய்களும் மரணமும் சரீரத்தைப் பெற்றவர்களுக்குருங்கே உண்டாதலாலும், வினைத்தொடர்பால் வரும் பிறவியானது இனிமயைத் தராதது (துன்பத்தையே தருவது) என்று அறியும் பெரியோர் என் மனமானது உறுதியாகச் சேரக்கடவது.                                                              (3)

 

பிறவிகளுள் நற்குணமுடையவற்றைச் செய்யவேண்டுமென்னும் மனமுடைய நல்லோர்களுடனே எந்நாளும் சிநேகஞ் செய்து (பிரியாமல்) கூடிவாழப் பெற்றால் துன்பமுடையதாயிருந்தாலும் இப்பிறவியை யாரும் வெறுக்கமாட்டார்கள்.           (4)

 

ஊரிலுள்ள சலதாரை நீரானது மகிமை பொருந்திய (நதி குளம் முதலியவற்றின்) நீரைச் சேர்ந்தால் (அதன்) பெயரும் வேறுபட்டு தீர்த்த மாகும். (அதுபோல) குலப்பெருமை யில்லாதவர்களும் நல்ல பெருமை யுள்ள நல்லவர்களைச் சேர்ந்து மலைபோல் உயர்ந்து நிற்பர். (மிக்க கௌரவமுடையவராவர், என்றபடி.)                                  (5)

 

ஆகாயத்திலுள்ள விளக்கமாகிய கிரணங்களையுடைய பிரகாசமான சந்திரனைச் சேர்ந்திருத்தலால் (களங்கமாகிய) முயலும் (உலகத்தவரால்) வணங்கப்படுகிறது. (அதுபோல) சிறப்பில்லாதவர்களாயினும் மலைபோலுயர்ந்த பெருமையுடையவர்களுடைய சிநேகத்தைக் கொண்டால் சிறப்படைவார்கள். (சந்திரனது களங்கத்தை முயல்'என்பது மரபு.)

(6)

 

பாலுடன் கலந்த நீரானது பாலாகக் காணப்படுவதேயல்லாமல் நீர் போல நிறம் தெளிந்து காணப்படாது. (அதுபோல) ஆராயுமிடத்தில் நல்ல பெரியோர்களுடைய பெருந்தன்மையைச் சேர்ந்த சிறியோருடைய இழிதன்மையும் தெரியாது.        (7)

 

கொல்லைகளாகிய பெரிய வயல்களிலே (நடப்பட்டிருக்கும்) மரக்கட்டையைச் சேர்ந்துள்ள (பசும்) புற்கள், பயிரிடுவோர் உழுகிற கலப்பைக்கு அசையமாட்டா. (அதுபோல) வலிமையில்லாதவர்களானாலும் நல்ல சார்பைச் சார்ந்தவர்களிடத்து பகைவருடைய கோபங்கள் செல்லமாட்டா. (மெலியார் வலிய விரவலரையஞ்சார், வலியோர் தமைத் தாம் மருவில் - பலி யேல் - கடவுளவிர் சடைமுன் கட்செவி யஞ்சாதே - படர்சிறைய புள்ளரசைப் பார்த்து. என்னும் செய்யுளின் கருத்தைக்கொண்டது இது. விரவலர் = பகைவர். கட்செவி = பாம்பு. புள்ளரசு = கருடன்)                                                 (8)

 

கழனியின் நல்ல வளத்தால் வளர்ந்த நெல்லைப்போல (மனிதர்களும்) தாங்கள் சேர்கின்ற கூட்டத்தின் நன்மையால் பெரியோராவார். மரக்கலத்தின் வலிமையைக் கடுங்காற்றானது கெடுத்தலால் அம்மரக்கலம் கெடுதல் போல, பெரியோரது தன்மை தீய இனத்தைச் சேர்தலால் கெட்டு விடும்.                                               (9)

 

வெட்டப்பட்ட மரச்செறிவில் தீப்பட்டால் அந்த வனத்திலுள்ள வாசனை வீசுகின்ற சந்தன மரமும், வேங்கை மரமும் கூட வெந்து போகும். (அது போல) (ஒருவர் தம்) மனத்தால் குற்றமற்றவரானாலும் தாம் சேர்ந்த (கெட்ட) இனத்தால் இகழப்படுவார். (10)

 

 

 

 

 

 

19 - ம் அதிகாரம்.

பெருமை

(பெருந்தன்மை.)

 

(தேவையானவைகளைக்) கொடுக்க முடியாமல் இளமைப் பருவமானது நீங்கிப் போவதால் (அன்புடையவர்களாயிருந்த) பெண்களும் நினைத்தலு மில்லாதவரானார்கள். (ஆதலால்) (இல்லறத்தை) இச்சித்து நாம் வாழக்கடவோ மென்னும் ஆசையைக் கைவிட்டு (துறவை நாடிச்) செல்வதே நல்ல காரியமாம்.                                  (1)

 

அறிவில்லாதவர்கள், இல்வாழ்க்கை யடைந்ததால் (நாங்கள்) இன்பமடைந்தோம். இவ்வுலகத்தில் எல்லாவற்றையும் நிறையப் பெற்றிருக்கிறோம் என்று நினைத்து (பின்னால் வரக்கிடக்கும் துன்பங்களை) மறந்து நடப்பார்கள். அவ்வில் வாழ்க்கையில் நிலையாகக் காணப்படுபவை நிலையற்றவைகளென்றறிந்த பெரியோர்கள் (அவ்வாழ்க்கையைச் சிந்தித்து) வருந் தமாட்டார்கள்.                             (2)

 

மறுமைக்கு (நல்ல பயனைத் தரும்) வித்துப் போன்ற நற்காரியங்களை மயக்கமில்லாமல் செய்து (அதனால்) நீங்கள் துன்பமடையாமல் வாழுங்கள். விவேகிகளாய் நின்ற நிலையில் இருந்தாலும் குணம் வேறுபடுதற்குரிய காரணங்களில்லாமலே பலவேறுபாடுகளுண்டாகும். (அவ்வேறுபாடுகளுக் குட்படாமல் நற்காரியங்களைச் செய்தலில் ஊன்றி நிற்றல் வேண்டு மென்பது கருத்து.)                             (3)

 

மழை பெய்தல் அருமையாய்விட்ட காலத்திலும் ஊற்று நீருள்ள குளமானது இறைத்துக் குடித்தாலும் ஊரிலுள்ளவர்களைக் காப்பாற்றும் என்று (பெரியோர்) கூறுவார். (அதுபோல) தருமஞ் செய்தலாகிய கடமையையும், வறுமையால் தளர்ந்த காலத்திலும் பெரியோர்கள் செய்வது போல செல்வமுடையோரான காலத்திலும் சிறியோர் செய்தலருமையாம்.                                                           (4)

 

மிகுந்த நீரைக்கொடுத்து உலகத்தை உண்பித்து நீரற்ற காலத்திலும் தோண்டப்படுகிற ஊற்றுக்குழியிலே ஊறுகின்ற (நீரினால் உதவி செய்யும்) ஆற்றைப் போல, (பெரியோர் தங்களிடத்திலிருந்த) செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து (பின்பு, அச்செல்வம்) கெட்டழிந்தகாலத்திலும் சிலருக்குக் கொடுத்து செய்யத்தக்க உபகாரங்களைச்

செய்வார்கள்.                                                                   (5)

 

பெரிய மலைபொருந்திய நாட்டையுடைய பாண்டியனே! பெரியவர்களிடத்திலுண்டாகும் குற்றமானது பெரிய வெள்ளை எருதின் மேலிருக்கும் சூட்டைப் போல் (பிரகாசமாய்க்) காணப்படும். பெரிய எருதைக் கொன்றது போன்ற தீச்செயல்களைச் செய்தாலும் சிறியவரிடத்து ஒரு குற்றமும் தோன்றாமல் மறைந்து விடும்.                                                                    (6)

 

சிறிதேனும் பொருந்திய நற்குணமில்லாதவர்களிடத்தில் சிநேகித்தவளவும் துன்பமேயாம். (எவ்வளவு சிநேகிக்கிறோமோ அவ்வளவும் துன் பமேயுண்டாகும்.) நன்னிலையினின்று மாறுபட்ட தீச்செயல்களை விளை யாட்டாகவேனும் விரும்பாத நல்லறிவாளிகளிடத்தில் விரோதமும் பெருமையடையும். (சிநேகிக்காமல் விரோதங்கொண்டாலும் நன்மையே உண்டாவதாம்.)                                   (7)

 

(ஒருவன்) வலிமையில்லாத சுவபாவமுடைய பெண்களிடம் மேன்மைத் தன்மையைக் காட்டுவதற்கும், வலிய பகைவரிடத்து அம் மேன்மைத் தன்மையை விட்டு யமனும் அஞ்சத்தக்க பயங்கர சுவபாவத்தை யுடைமைக்கும், பொய் (பேசுந்தன்மை) யுடையோர்களிடத்தில் முற்றும் பொய்யையே யுடைமைக்கும், நல்லோர்களிடத்து நன்மையே செலுத்துவதற்கும் எல்லையாயிருக்கக் கடவன். (பெண்களிடத்து மேன்மையாகவும், விரோதிகளிடத்து அப்படிக்கில்லாமல் கடுமையாகவும், பொய்யருக்குப் பொய்யராகவும், நல்லோருக்கு நல்லோராகவும் இருத்தல் வேண்டுமென்பது கருத்து.) (8)

 

ஒருவன் (முகத்தைக்) கடுமையாக வைத்துக்கொண்டு கொடிய கோள் வார்த்தைகளைச் சொல்லி மயக்கினும், தம் மனத்து (சிறிதும்) வேறுபாடில்லாமல் தீபத்துள் (பொருந்திய) பிரகாசமான ஜூவாலை போன்று அசைவற்றிருப்பவர்களே பரிசுத்த

மனமுடையோராவார்.                                                          (9)

 

பெரியோர் எப்பொழுதும் (தாங்கள்) முன்னே உண்பதற்குரிய உணவைத் தருமஞ்செய்து பின்பு உண்ணுதற்குரிய உணவையே உண்பர். அவ்வுணவானது, காமம் வெகுளி மயக்கமென்னும் மூன்று குற்றங்களையும் நீக்கி முத்தி பெறுமளவும் (அவர்களைத்) துன்பத்திலிருந்து நீக்கும்.                                     (10)


 20 - ம் அதிகாரம்.

தாளாண்மை (முயற்சி)

 

கொள்ளுதற்குரிய நீரை மிகுதியாகக் கொள்ளுதலில்லாத (சிறிய) குளத்தின் கீழுள்ள பசுமையான பயிரைப்போல, சில சோம்பேறிகள் (தங்கள்) இனத்தார் கொடுப்பதைப் புசித்து (அப்பந்துக்களுக்குத் தரித்திர முண்டான பொழுது தாங்களும்) வருந்துபவராவர். வாளின் மேலிருந்து ஆடும் கூத்தாடிகளது கண்ணைப்போல ஒரேகாலத்தில் பல விஷயங்களிலும் (தங்கள்) கருத்தை விரைவாகச் செலுத்தும் முயற்சியுடையவர்களுக்கு குறையுண்டாகுமோ? (உண்டாகாது)                                                 (1)

 

துவளும்படியான சிறிய கொம்பாக வழியில் நின்ற இளமரமும் உள்வயிரம் கொண்ட காலத்தில் மதயானையையும் கட்டுதற்குரிய தறியாகிவிடும். (ஒருவன்) சோம்பலுக் காளாகாமல் முயற்சியால் (தன்னை) மேன்மை யடையச் செய்வானாயின் அவ்வாறே மேன்மையடைவான்.                                                 (2)

 

(வலிமை) பொருந்திய புலியானது (தனக்கு) மாமிச ஆகாரம் கிடைக்காமல் ஒருகாலத்தில் சிறிய தவளையையும் பிடித்துத் தின்னும் (ஆதலால்) அறிவால் (எதையும்) காலால் எளிதிற் செய்யத்தகுந்த சிறு தொழில் என்று அலட்சியம் செய்து விடாதே. கையால் செய்தற்குரிய மேலான செய்கையும் அச்சிறு தொழிலைச் செய்து வரும்பொழுதே மிகவும் உண்டாகும். (அற்பத்தொழிலே பெரியதாகிவிடும். ஆகையால் எக்காரியத்தையும் சிறியதென்று அலட்சியம் செய்யலாகாது என்பது கருத்து.)                             (3)

 

அலைகள் தாழஞ் செடிகளை அசைத்துக்கொண்டிருக்கும் சோலை பொருந்திய குளிர்ந்த கடற்கரையை யடுத்த நாட்டையுடைய பாண்டியனே! (ஒரு காரியம்) செய்யக் கூடாததாயிருந்தாலும் (சிரமப்பட்டுச் செய்து ஒருவகையாலும் தளர்ச்சியடையாமல் நிற்பதே ஆண்மையாகும். (எல்லாம் எளிதில்) கைகூடுமானால் பெண்களும் (செய்து முடித்து) வாழமாட்டார்களோ?                                                      (4)

 

(உலகத்தில்) நல்ல குலமென்றும் தீய குலமென்றும் (சொல்வ தெல்லாம்) சொல்மாத்திரமேயல்லாமல் (அதற்கு) யாதொரு பொருளுமில்லை. (ஆனால்) சிறந்த செல்வமொன்று மாத்திரத்தாலோ? (அல்ல) தவமும் கல்வியும் முயற்சியும் என்னுமிவைகளாலேயே குலமாகும். (பொருள், தவம், கல்வி முயற்சி இவற்றையுடையோரே மேற்குலத்தோராவர் என்பதாம்.                          (5)

 

அறிவுடையார் ஒரு காரியத்தைச் செய்து முடிக்கும் வரையும் (தங்கள்) அறிவை உள்ளடக்கிக்கொண்டு தம் வலிமையைப் பிறரறியச் சொல்லார். (பிறருடைய) மனவலிமையை (அவர்களது முகம் கண் முதலிய) அவயவங்களின் குறிப்பினால் ஆராய்ந்தறியும் புத்தி நுட்பத்தில் உலகம் அடங்கி யிருக்கின்றது.                    (6)

 

செல்களால் தின்னப்பட்ட ஆலமரத்தை அதன் வீழ்தானது ஆதாரமாய்த் தாங்கிக் கொண்டு நிற்பது போல, தன் தந்தையிடம் தளர்ச்சி தோன்றினால் அவனுடைய பிள்ளையானவன் தன் முயற்சியால் மறைக்க (அத் தளர்ச்சி) நீங்கும். (ஆலமரத்துக்கு விழுதானது மகன் போன்றது என்றறிக.)                                       (7)

 

யானையினுடைய புள்ளிகள் பொருந்திய முகத்தைப் புண்படுத்தும் கூர்மையான நகங்களையும் வலிய கால்களையுமுடைய சிங்கத்தைப் போன்ற வலிமையுடையவர்கள் இழிவடைந்து வீட்டிலே தானே யிருந்து கொண்டு யாதொரு முயற்சியுமில்லாமல் சாக நேர்ந்தாலும் இழிவு நேரும்படியான காரியங்களைச் செய்வார்களோ? (செய்யார்.)      (8)

 

இனிமையான கரும்பிலிருந்துண்டான திரண்ட தாளையும் (குதிரையின்) பிடரி மயிர்போன்ற கற்றையையுமுடைய புஷ்பமானது (கரும்பின் பூவானது) தேனோடு கூடிப் பரிமளிக்கின்ற வாசனையை இழந்திருப்பது போல, தன் பெயரை நிலை நிறுத்துவதற்குக் காரணமான பெரிய முயற்சியில்லா விட்டால் (அப்படிப்பட்டவர்களுக்கு) மிகச் சிறந்த நற்குடிப் பிறப்பால் யாது பயனுண்டாகும்? (ஒரு பயனு முண்டாகாது.) கரும்பின் பூவானது நல்ல இடத்தில் தோன்றியும் வாசனை யில்லாமையால் ஒருவராலும் மதிக்கப்படுவதில்லை. அதுபோல, உயர்குடியிற் பிறந்தாலும் முயற்சியால் தன் பெயரை எங்கும் பரப்பாதவன் பயனற்றவனேயாவன் என்பது கருத்தாம்.)                     (9)

 

(முற்காலத்தில் பிரசித்தமாக அன்னதானஞ் செய்து வந்த வள்ளலாகிய) பெருமுத்தரையர் என்பவர் மிகவும் மகிழ்ந்து இடும் பொறிக்கறியையும் சோற்றையும் புசிப்பார் கீழ்மக்கள். பொறிக்கறியின் பெயரையும் அறியாதவர் மிகவும் விரும்பிச் செய்த (தமது) முயற்சியால் சம்பாதித்து உண்ட கூழும் (சிறப்பினால்) அமுதத்திற் கொப்பானதாகும்.                                                              (10)


21 - ம் அதிகாரம்.

சுற்றந்தழால்.

 

கருப்பந் தரித்திருக்கிறதினால் உண்டாகும் நோயும், அதைச் சுமக்குந் துன்பமும், பிரசவிக்குங் காலத்தில் நேரிடும் கஷ்டமும் (ஆகிய எல்லாத் துன்பங்களையும்) மடியில் பிள்ளையைக் கண்டவுடனே தாயானவள் மறந்து விடுவது போல, (ஒருவன்) க்ஷேமவிசாரணை செய்யுந் தன்மையுள்ள தனது உறவினரைக் கண்டவளவில் தளர்ச்சியால் (அவன்) அடைந்த துன்பம் முழுதும் நீங்கும்.                          (1)

 

(சூரியனது) வெயில் நெருங்கிய (கோடை) காலத்தில், தன்னைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் (அவ்வெயிலைத்தான் தாங்கிக்கொண்டு) (ஒரே சமமாக) நிழலைத் தரும் மரத்தைப் போல, (யாவரையும்) ஒரு சமமாகக் காத்து, பழுத்துள்ள விருட்சம்போலப் பலரும் பயனை அனுபவிக்கும்படி, தான் வருத்தமடைந்து வாழ்வதே சிறந்த ஆண்மகனுக்குக் கடமையாம்.                                             (2)

 

வரிசை வரிசையாகவுள்ள மலைகள் பொருந்திய நாட்டையுடைய பாண்டியனே! மேலும் மேலும் (அதிகமாக) வலிய காய்கள் பற்பலவாகக் காய்த்தாலும் தன் காய்களைச் சுமக்கமாட்டாத கொம்புகளில்லை. (அது போல) பெரியோர்கள் தம்மைச் சேர்ந்தோரைப் பாதுகாக்க மாட்டோம் என்று சொல்லமாட்டார்கள்.                                   (3)

 

உலகமறியும்படி முழுமையும் கலந்தாலும் கீழ்மக்களுடைய சிநேகமானது நிலைபெற்றிராமல் சில தினமே யிருக்கும். மேன்மக்கள் சிநேகமானது, (தம் தம் வர்ணாச்சிரம்) நிலைகளினின்று மாறுபடாமல் (ஒரே நிலையில்) நிற்கின்ற பெரியோர்கள் (முத்தி) நெறியை யடைய உறுதியாக (யோக மார்க்கத்தில்) நிற்கின்ற அத்தன்மையைப் போன்றது. (நெடுங் காலம் அழியாமலிருக்கும் என்றபடி.)                            (4)

 

(இவர்) நல்லவர் - (இவர்) தீயவர் - (இவர்) உறவினர் - (இவர்) அன்னியர் என்று சொல்லும் சொல் சிறிதும் இல்லாதவர்களாயிருக்குந் தன்மையால் தம்மைச் சேர்ந்து (துன்பத்தால்) தளர்கிற மனிதர்களுடைய துன்பங்களை நீக்குபவர்களே எல்லோரிடத்திலும் மேன்மக்களாகுந் தகுதியுள்ளவர்கள்.                                            (5)

 

பொன்னால் செய்யப்பட்ட பாத்திரத்தில் புலியின் நகம் போன்ற (வெண்மையும் கூர்மையுமான) சிறந்த சோற்றைச் சர்க்கரையோடும் பாலோடும் உறவினராகப் பொருந்தாதவர் கையினிடத்து உண்பதைப் பார்க்கிலும், தன் உயிர்போன்ற உறவினரிடத்தில் உப்பில்லாத புல்லரிசிக் கூழை (மரக்கலம் முதலிய) எந்தக் கலத்திலாயினும் உண்பது இன்பமுடையதாம்.                                  (6)

 

தமது பகைவர் வீட்டில் காலத்தில் உபகாரமாக விருப்பந்தரும் பொரிக்கறியோடு கூடிய சோற்றைப் பெற்றாலும் (அது) வேம்புக்கொப்பாகும். பிற்பகற்பொழுதிலே (அகாலத்திலே) இலைக்கறிச் சோற்றை யிட்டாலும் உறவினரானவரது வீட்டில் உண்ணலே இன்பமாம்.                                                                       (7)

 

(கொல்லனது) சம்மட்டி போல வெறுப்பில்லாமல் (ஓயாமல்) தினந் தோறும் அடித்து உண்டாலும் அன்புடைய உறவினரல்லாதவர்கள் துன்ப காலத்தில் (அக்கொல்லனது) குறட்டைப் போல கைவிட்டு விடுவர். அன்புடைய உறவினரென்று சொல்லப்படுவோர் துன்பம் நேர்ந்த காலத்தில் உலையாணிக்கோல் (தானும் நெருப்பில் விழுந்து வருந்துவது) போல, கூடவே துன்பமாகிய நெருப்பில் விழுவார்கள்.                          (8)

 

நல்ல வாசனை பொருந்திய குளிர்ந்த (மலர்) மாலையை யுடையவளே! இனத்தார்க்கு இனத்தார் சாகும் வரையிலும் (ஒருவர்க்கொருவர்) இன்பத்தில் இன்பமடைந்தும் துன்பத்தில் துன்பமடைந்தும் நடந்து கொள்ளாவிட்டால் உயிரொழிந்த பிறகு மறு வுலகத்திலும் செய்யத்தக்க ஒருவிதக் கடனுண்டோ? (இல்லை)          (9)

 

தம்மிடத்தில் அன்பில்லாதவர்கள் வீட்டில் (மனவொற்றுமை யில்லாமையால்) வேறுபட்டிருந்து உண்ணும் பூனைக்கண் போலும் நிறமுடைய விருப்பந்தரும் பொரிக்கறி போசனம் வேம்புக்கொப்பாகும். தன்மேல் ஆசையுடைய தன்னை யொத்தவர்கள் வீட்டில் தெளிந்த நீரையுடைய குளிர்ந்த புல்லரிசிக் கூழானது உடம்பிற்கொத்த அமுதமாகும். (10)

22 - ம் அதிகாரம்.

நட்பாராய்தல்.

(சிறந்த குணமுடைய சிநேகிதரை இன்னாரென்று ஆராய்ந்தறிதல்)

 

(நூல்களின்) உட்பொருளை அறிந்து கற்றறிந்தவர்களுடைய சிநேக மானது எக்காலத்தும் கரும்பை நுனிக்குருத்திலிருந்து (அடிவரையில்) கடித்துத்ஃப் தின்றாற் போலும்; (வர வர இனிமை தரும் என்றபடி). கல்வி மதுரமில்லாதவர்களுடைய சிநேகமானது எப்பொழுதும் (கரும்பை) குருத்திற்கு எதிரே செல்லும்படி (அடியிலிருந்து நுனிவரையில்) தின்றாற் போன்ற தன்மையை யுடையது. (வரவர இனிமை யில்லாமலிருக்கும் என்றபடி.) (அதி: 14: பாட்டு 8. அதி: 17: பாட்டு: 6. இவற்றின் பொருளையுமிதனோடு ஒப்பிடுக.)                                            (1)

 

அழகிய நல்ல நிறமுள்ள அருவி நீரானது விழ (அதனால்) பறவைகள் ஓடுதற்கிடமான அழகிய மலைகள் பொருந்திய நாட்டையுடைய பாண்டியனே! (ஒருவரது) நற்குடிப் பிறப்பைப் பார்த்து (உயர்வாகிய குடியிற் பிறந்தவர்) இடையிலே தமது குணத்தினின்றும் மாறுபடார் என்பதாகிய ஒரு சார்பை (சிநேகிப்பதற்கு ஒரு நல்ல காரணமாகக்) கொண்டதே யல்லாமல் (ஒருவருடைய) மனநிலை (ஒருவரால் உள் நுழைந்து) அறியப்பட்ட தென்பதொரு தன்மையதல்ல. (இவர் நற்குடியிற் பிறந்தவரா யிருத்தலால் நல்லொழுக்கத்தினின்றும் தவறாரென்று சிநேகிப்பதே யல்லாமல் மனநிலை யறிந்து சிநேகிக்க முடியாது என்பது கருத்து.)                                        (2)

யானையைப் போன்றவர்களுடைய சிநேகத்தைவிட்டு (நன்றியறியுந் தன்மையுள்ள) நாய் போன்றவர்களுடைய சிநேகத்தைச் சேர்த்துக்கொள்ளல் வேண்டும். (ஏனெனில்) யானையானது (தனக்கு இரை தருவோ னென்பதை) நன்றாயறிந்தும் பாகனையே கொன்றுவிடும். நாயானது (தனது) எஜமான் எறிந்த வேலானது உடம்பில் தைத்துக்கொண் டிருக்கும் பொழுதும் (அவனைக் கண்டு) வாலை யாட்டும்.                         (3)

 

எந்நாளும் அருகிலிருந்தாலும் மனப்பொருத்த மில்லாருடன் அறிஞர் சிலநாளும் கூடியிரார். தம் மனத்தில் அன்பால் கஷ்டப்பட்டவர்களுடனே கொண்ட சிநேகத்தை (அவர்கள்) பலநாளும் நீங்கி யிருந்தாரென்றெண்ணிக் கைவிடுவதுண்டோ? (இல்லை) (பலநாளும் பழகினாலும் மனப்பொருத்தமில்லாச் சிநேகம் பொருந்தியிராது. பல காலம் பிரிந்திருந்தாலும் மனம் பொருந்திய நட்பு நீங்காது என்றபடி.) " புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் - நட்பாங்கிழமை தரும்'' என்னும் குறளின் பொருளையுடையது

இச்செய்யுள்.                                                                   (4)

 

மரக்கிளைகளிலுண்டாகிற மலர்போல, மலர்ந்து பின்பு (அம்மலர்ச்சி) குவியாமல் (முன் ஒருவரோடொருவர்) விருப்பங்கொண்டதே, விருப்பமாயிருப்பதாகிய சிநேக தர்மத்தைக் காத்ததாகும். தோண்டப்பட்ட (குளம் முதலிய) நீர் நிலைகளிலுண்டாகும் மலர்போல பின்பு (அம்மலர்ச்சி ஒழிந்து முகம்) சுருங்குபவர்களை (சிநேகம் மாறுபவர்களை) விரும்புபவர்களும் சிநேகிப்பவர்களும் இல்லை.

                 

(மரக்கிளைகளிற் புஷ்பிக்கும் பூவானது மறுபடி குவிவதில்லை. அது போல, என்றும் முகஞ் சுருங்காதவர்களே சிநேகிக்க தக்கவராவர். நீர்ப்பூக்கள் மலர்ந்தவாறிராமல் மறுபடியும் குவிந்து விடுந் தன்மை யுடையவை. அவ்வாறு முகமலர்ச்சி மாறுந்தன்மை யுடையோர் உத்தம சிநேக ராகார் என்பது இதன் கருத்தாம்.)                         (5)

 

கடைப்பட்டவர்கள் சிநேகத்தில் பாக்குமரத்தைப்போன் றிருப்பர்; மற்றை மத்திமர் தென்னமரத்தை யொத்திருப்பர்; முதல் தரமானவர்கள்ளாகிய பழமை என்னும் பெருங் குணத்தையுடைய மேன்மக்களது சிநேகமானது நினைத்தற்கும் அருமையான சிறப்பினையுடைய பனைமரத்தை யொத்து நட்ட அந்தக் காலத்தில் விரும்பி நட்ட தன்மையதே.

 

(பாக்குமரம் இடைவிடாமல் போஷித்து வந்தாலே பயன் தரும். தென்னை சிலகாலம் தவறினாலும் சிலகாலம் போஷித்து வந்தால் பயன் தரும். பனையை நட்டுவிட்டால் போதும்; பிறகு யாதொரு போஷணையையும் வேண்டாமலே நல்ல பலன் தரும். அவ்வாறே எப்பொழுதும் கொடுத்துக்கொண்டு வந்தால் அதமர்கள் சிநேகமும், ஒரு சமயமில்லாவிடி னும் ஒருசமயம் (அடிக்கடி) கொடுத்து வந்தால் மத்திமர்கள் சிநேகமும் நிலைக்கும். உத்தமர்களுடன் சிநேகிப்பதுதான் வேண்டுவது. பின்பு யாதொன்றும் தராவிட்டாலும் சிநேகம் என்றும் நிலைத்து நற்பயனளிக்கும் என்பது அறியத்தக்கது.)      (6)

 

அரிசி கழுவின நீரில் வெந்த பசுமையான இலைக்கறியாகிலும் சிறந்த அன்புடையதாகச் சிநேகரிடத்து வாங்கி உண்டால் (அது) அமுதத்திற் கொப்பாகும். சிறந்த தாளித்த கறியும் துவையலும் நிறைந்த வெண் சோறாயினும் நட்பில்லார் கையில் வாங்கி யுண்ணல் எட்டிக் காய்க்கு ஒப்பாகும்.                                                 (7)

 

நாயின் காலிலுள்ள சிறு விரல்களைப்போல மிகவும் அருகில் நெருங்கி யுள்ளவரானாலும் ஈயின் காலளவாகிலும் (மிகச் சிறியதாயினும்) உதவி செய்யாதவர்களுடைய சிநேகத்தால் யாது பயன்? கழனியை விளைவிக் கும் நீர்வாய்க்காலை ஒத்தவர்களுடைய நட்பைத் தூரத்திலிருந்தாலும் போய் அடைதல் வேண்டும்.                                                                      (8)

 

தெளிவான அறிவில்லாதவர்களுடன் சிநேகம் செய்வதை விடப் பகை நல்லது; எந்த உபாயத்தாலும் தீராமல் நீடித்து வருகின்ற நோயைக்காட்டிலும் மரணம் நல்லது; (ஒருவனது மனம்) புண்படும்படியாக இகழ்தலைப் பார்க்கிலும் (அவனைக் கொல்லுதல் நல்லது; இல்லாதவற்றை யெல்லாம் சொல்லி (ஒருவனைப்) புகழ்வதைவிட (அவனைத்) தூஷிப்பது நல்லது.                                                          (9)

 

பலருடனும் சேர்ந்து பல நாளும் கலந்து (இருவர் குணமும்) ஒத்து நன்கு மதிக்கும் பொருளாகத் தக்கவர்களையே சிநேகஞ்செய்து கொள்ளல் வேண்டும். (ஏனெனில்) ஒருவரைச் சிநேகித்துப் பின்பு (அவர் குணம் பிடிக்கவில்லை யென்று) அவரை விட்டுப் பிரிதல், கடித்துப் பிராணனை ஒழிக்கின்ற பாம்போடு செய்து கொண்ட சிநேகத்தை விட (அதிக) துன்பந் தருவதாம்.                                                       (10)

 

23 - ம் அதிகாரம்.

நட்பிற் பிழைபொறுத்தல்.

(சிநேகரிடத்திற் காணப்படும் குற்றங்களைப் பொறுத்தல்.)

 

நல்லவர்க ளென்று (நினைத்து) மிகவும் இச்சைகொண்டு சிநேகிதர்களாகக் கொண்டவர்கள் (நினைத்தபடி) நற்குண நற்செய்கைக ளில்லாதவரா யிருந்தாலும் அக்குற்றங்களை அடக்கிக்கொள்ளல் வேண்டும். நெல்லுக்கு உமியுண்டு, நீருக்கு நுரையுண்டு, பூவிற்குப் பயனற்ற புற விதழுண்டு. (நெல் முதலியவற்றினிடத்தில் உமி முதலியவை யிருப்பினும் அவற்றை நீக்கிவிடாமற் கொள்ளுதல் போல் சிநேகரிடமிருக்குங் குற்றங்களையும் பொருட்படுத்தாமல் சிநேகத்தைக் கொள்ள வேண்டு மென்பது கருத்தாம்.)                                                            (1)

 

அணைகோலி அடைக்குந் தோறும் (அவ்வணையை) உடைத்தாலும் தண்ணீரைப் பயன் படுத்திக்கொள்ள விரும்பிவாழ்பவர்கள் அத்தண்ணீரின் மேல் சிறிதுகோபமு மில்லாதவர்களாய் மறுபடியும் (மறுபடியும்) அணை கோலிக் கட்டிவைப்பார்கள். (அதுபோல) தாங்கள் விருப்பத்தோடு சிநேகங் கொண்டவர்கள் வெறுக்கும்படியான காரியங்களைப் பலமுறை செய்யினும் பொறுத்துக் கொள்வர்.                     (2)

 

நல்ல நிறமுள்ள கோங்கு மரங்களின் மலர்களில் அழகிய வடிவத்தையுடைய வண்டுகள் சப்திப்பதற் கிடமான உயர்ந்த மலைபொருந்திய நாட்டையுடைய பாண்டியனே! தம்மோடு சிநேகமாயிருப்பவர்கள் மிகவும் தீயகாரியங்களைச் செய்தாலும் பொறுத்துக் கொள்ளுதல் தகுதியல்லவா?                                                    (3)

 

ஒருவர் பொறுமை இருவர் நட்பிற்குக் காரணமாம். மடிந்து விழும் அலைகள் ஒதுக்கிய சிறந்த ஒளியையுடைய முத்துக்களும் மிகுந்த வேகத்தையுடைய மரக்கலங்களும் பொருந்திய கடல் துறையையுடைய பாண்டிய மன்னனே! சிநேகம் விடுதற்குக் கூடாதவர்கள் (நீக்க முடியாத சிநேகிதர்கள்) இயற்கையான நற்குண மில்லாதவராயின் (அவர்கள் தங்களைச் சிநேகித்தவர்களுடைய) மனதைச் சுடுவதற்காக மூட்டிய நெருப்புக் கொப்பாவார்கள்.                                            (4)

 

(வீட்டிலுள்ள) சகலபொருள்களோடு நல்ல வீட்டையும் எரித்து அழித்துவி ட்ட நெருப்பை (அது கொடியதாயிற்றே யென்று நீக்கிவிடாமல்) தினந்தோறும் தேடி வீட்டில் (சமையலின் பொருட்டு) வளர்த்தலால், துன்பங்களைச் செய்தாலும் விடத் தகுதி யில்லாத சிநேகரைப் பொன்னைப் போலக் காப்பாற்றி (நட்பாகக்) கொண்டிருத்தல் வேண்டும். (5)

 

பொருந்துதற் கருமையான சிறப்புக்களைப் பெற்றுள்ள தும் ஆகாயத்தை யளாவியுள்ளதும் மூங்கில்களுள்ளது மாகிய மலைநாடனே! தம்முடைய கையானது கண்ணைக் குத்திவிட்டதென்று (அக்கையை) வெட்டி விடுவார்களோ? (வெட்டமாட்டார்கள்.) (அதுபோல) துன்பங்களைச் செய்தாலும் விட்டு விடுதற்கரிய சிநேகிதரைச் சேர்க்காமல் விட்டிடுதல் தகுதியா குமோ? (ஆகாது)                                                (6)

 

விளங்குகின்ற நீரையும் குளிர்ச்சியையும் பொருந்திய கடற்கரை நாடனே! (ஒருவர்) குற்றங்களைச் செய்தாலும் பெரியோர் (அவரோடு) சிநேகித்து அக்குற்றங்களைக் கவனியார். சிநேகஞ் செய்த பின்பு அச்சிநேகர்களுடைய குற்றங்களை எடுத்துச் சொல்லும் உறுதியான அறிவில்லாதவர்கள் (தங்களுக்குத் தீமை செய்யும்) அவர்களைப் போலவே கடைப்பட்டவராவர்.                                                           (7)

 

சப்திக்கின்ற அருவியாறுகளையுடைய பாண்டிய நாடனே! (யாதொரு சம்பந்தமு மில்லாத) அன்னியர் செய்த குற்றம் மிகவும் கொடிய தாயினும் பார்க்குமிடத்தில் வெறுக்கத் தக்கது யாது? அன்பு மிகுந்த சிநேகிதர் செய்த தீங்குகள் ஆராய்ந்து யோசித்தால் (அவற்றைவிட) சிறப்புடையன வாய்விடும்.                                     (8)

 

(நல்ல), சிநேகிதர்களென்று தம்மால் சிநேகிக்கப்பட்டவர்களை, தமது நண்பரென்று கொள்வதற்குத் தகுந்த நற்குணமுடையவரா யில்லாத தன்மையைத் தாம் ஆராய்ந்தறிவாரானால், அவரைத் தமது உறவினரைவிட நன்றாகக்கருதி (சிநேகமற்ற தன்மையை வெளிக்காட்டாமல்) தமது மனத்திலேயே அடக்கிவைத்துக் கொள்ளல் வேண்டும்.                                                                       (9)

 

(ஒருவனைச்) சிநேகித்த பின்பு (அவனிடத்திலுள்ள) குற்றத்தையும் குணத்தையும் ஆராய்ந்து கொண்டு திரிவேனானால், ஒலிக்கின்றகடல் சூழ்ந்த பூமியிலுள்ளவர்க ளெல்லாம் இகழ்ந்து நகைக்கும்படி, சிநேகிதனுடைய இரகசியத்தை அடக்கிவைத்துக் காவாமல வெளியிட்டு விட்ட பாவி செல்லுமிடமாகிய தீக்கதியை அடைவேனாக. (10)

24 - ம் அதிகாரம் - கூடா நட்பு.

(மனப் பொருத்த மில்லாத சிநேகம்)

 

கறுப்பான மலைகளிலிருந்து மிகுந்த அருவிகளாகப் பெருகும் நீரின் எல்லையையுடைய நாட்டையாளும் பாண்டியனே! கட்டுக்கோப்பில்லாத (மிகப்) பழமையான கூரையையுடைய வீட்டில் (மழைநீர் பெருகும் பொழுது) சேற்றை அணையாகக் கட்டி நீரை யிறைத்துக்கொண்டும் ஒழுகும் நீரை மேலே தாங்கிக்கொண்டும் தங்கள் காரியம் முடியுமளவு மிருப்பார்கள். (அதுபோல, சிலர் மனப்பொருத்தம் இல்லாவிட்டாலும் தங்கள் காரியம் கைகூடும் வரையிலும் உண்மையான சிநேகர் போல சொற்களாலும் செய்கைகளாலும் பாசாங்குகாட்டி நண்பர்போலொழுகுவர் என்பது கருத்தாம்.)                                                                     (1)

 

வெண்மையான மலையருவிகள் பொருந்திய நாட்டை யுடையவனே! மேன்ம பொருந்திய பெரியோர்களுடைய சிநேகமானது மிகுந்த சிறப்புடையதாய் மழைபோல மாட்சிமைப்பட்ட பயனையுடையதாம். சிறப்பில் லாத தாழ்ந்தோருடைய சிநேகமானது அதிகரித்தால் அம்மழை பெய்யா திருத்தல் போலவாம்.                           (2)

 

நுட்பமான அறிவையுடையவர்களோடு சேர்ந்து (இன்பங்களை) அனுபவிக்குந் தன்மையானது தேவருலகத்தைப் போல விரும்பப்படும் தகுதி யுடையதாம். நுட்பமான நூலுணர்ச்சி யில்லாதவர்களாகிய பயனில்லாதவர்களைச் சேர்ந்திருத்தல் நாகத்துன்பங்களுக் கொப்பாகும்.                                                       (3)

 

பக்கங்களி லெல்லாம் நீண்ட சந்தனச் சோலைகளும் சாரல்களும் பொருந்திய மலைநாடனே! (மனத்தில் அன்பாகிய) பந்த மில்லாதவர்களுடைய சிநேகமானது (முதலில்) வளர்வதுபோலக் காணப்பட்டுப் (பின்பு) வைக்கோலிற் பற்றிய நெருப்பைப்போல சிறிது பொழுது கூட நிலைத்திராம லழியும்.                                               (4)

 

தம்மால் செய்யக்கூடாத காரியங்களை நாம் செய்வோம்' என்று சொல்லுதலும், செய்யக் கூடியவற்றைச் செய்து முடிக்காமல் தாமதம் செய்து கொண்டு காலங்கழித்தலும், உண்மையாக (ஐம்புலன்களின்) இன்பங்களை அடையுந்தன்மையை யிழந்தவர்களுக்கும் அப்பொழுதே துன்பங்களை மிகவும் அடையுந் தன்மையை யுண்டாக்கும்.             (5)

 

ஒரு குளத்து நீரிலே பிறந்து ஒன்றாகவே வளர்ந்தாலும் மலர்ந்து விளங்கி வாசனை வீசுந் தன்மையுள்ள நீலோற்பல மலர்களை ஆம்பல் மலர்கள் ஒத்திருக்கமாட்டா. (அதுபோல) நற்குணமுடையவர்களின் சிநேகத்தைப் பெற்றிருந்தாலும் நற்குண மில்லாதவர்கள் செய்யுங் காரியங்கள் வேறுபா ைெடயனவாகவேயிருக்கும்.       (6)

 

வயது முதிராத (இளமையான) பெண்குரங்குகள் தமக்கு எதிரே (இரை தேடிக்கொண்டு) வந்த தமது தந்தையான பருவம் முதிர்ந்த பெரிய ஆண் குரங்கினை, பயற்றம் நெற்றைப் போலிருக்கும் தமது கைவிரல்களால் கெரித்துக்குத்தி (அதன் கையிலுள்ள பழம் முதலியவற்றைப்) பறித்துக் கொண்டு போவதற்கிடமான மலைகள் பொருந்திய நாடனே! மனத்தில் ஒற்றுமையில்லாதவர்களுடைய சினேகமானது துன்பந் தருவதாம்.                                                                        (7)

 

(சிநேகனுக்குத்) துன்பமுண்டான காலத்தில் விரைவாகச் (சென்று) எனது அருமையான உயிரை (அந்தச்) சிநேகனுடைய கையில் (நான்) கொடேனாயின், தனது சிநேகிதனுடைய காவலிலுள்ள மனையாளின் உறுதியான கற்பையழித்த பாவிசெல்லும் தீக்கதியில் மிகப் பலகால மளவும் அழியாமல் வழங்கும் புகழும் பழியுமாகிய சொற்களைச் சொல்லும் இவ்வுலகத்திலுள்ளவர்க ளெல்லாம் (பழித்துச்) சிரிக்கும்படி செல்வேனாக.                                                                  (8)

 

தேன்கூடுகள் பொருந்திய நல்லமலைநாடனே! இனிய சிநேகதர் மத்தை யறிந்தவர்களின் சிநேகத்தைவிட்டு அற்ப அறிவுடையவர்களோடு செய்யும் சிநேகமானது, பசுவின் நெய்யைவார்த்து வைத்திருக்கும் பாத்திரத்தில் அதையெடுத்துவிட்டு வேம்பின் எண்ணெயை வார்த்தாற்போலும்.                                                 (9)

 

பெருமைக்குரிய சிலநற்குணங்க ளுள்ளவனிடத்தில் ஊரிலுள்ள மற்றவர்களுக்கு உபகாரஞ்செய்யுங் குணமில்லாமலிருப்பது குடிப்பதற்காக வைத்திருக்கும் பாலில் நீர் கலந்தாற் போலும். அறிவுடையோர் கொடியவர்களோடு கூடியிருப்பது நல்லசாதிப்பாம்பு பெட்டை விரியன் பாம்பு புணர்ந்து நீங்கினாற்போலும். (நாகம் விரியன் பாம்புப் பெட்டையோடு புணர்ந்தால் அழிவடைவது போல, நல்லோர் தீயோர் சேர்க்கையால் கெடுவர் என்பது கருத்தாம்.)                                                  (10)

 

25 - ம் அதிகாரம்.

அறிவுடைமை.

 

வருந்துதலில்லாத வலிமையையுடைய (இராகுவென்னும்) பாம்பானது, சந்திரனை (அது) இளம்பிறையாயிருக்கும் பொழுது பிடிப்பதில்லை. (அதுபோல) அறிவுடையார் தம் பகைவர் தாழ்ந்த நிலையை யடைந்திருக்குஞ் சமயம் பார்த்து, தாங்கள் அவர்களுக் கிரங்கி (வெல்வதற்கு) அச்சம யத்தில் அவரிடம் போகமாட்டார்கள்.                     (1)

 

பெரிய கடலின் குளிர்ந்த கரையையுடைய பாண்டியனே! தரித்திர நிலைமையை அடைந்துள்ள மனிதர்களுக்கு ஆபரணமாவது அடக்கமேயாம். (அவ்வாறின்றி ஒருவன்) அடங்குதலில்லாத உயர்ந்த தன்மையுடனே நடப்பானானால் அவன் வசிக்கும் ஊரிலுள்ளவர் யாவராலும் (அவனது) குலம் பழிக்கப்படும். (அவன் தன் குலத்திற்குப் பழிப்பை யுண்டாக்குவான்)                                                       (2)

 

எந்த நிலத்தில் விதைத்தாலும் எட்டி விதை தென்னமரமாகாது. (எமன் திசையாகிய) தென் திசையிலுள்ளவர்களும் தருமகாரியங்களைச் செய்து சுவர்க்கத்திற் பிரவேசிப்பார்கள். ஆதலால் தனது தருமகாரியத்தாலேயே மறுமைக்கதி கிடைக்கும். வடக்குத் திக்கிலும் (நற்கதிபெற முயலாமல்) வீண்காலம் கழிப்பவர்களுமுண்டு.                        (3)

வாழைப்பழமானது வேப்பிலையில் பழுத்தாலும் தன் இனிய மதுரத்தில் சிறிதும் மாறுபடாது. அதுபோல, (இயல்பாகவே) நற்குணமுடை யோர் தீய இனத்தாரோடு சேர்ந்திருந்தாலும் (அவருடைய) மனம் கொடிய தன்மையை யடைவதில்லை.             (4)

 

அலைகளை வீசும்படியான கடலின் குளிர்ந்த கரையையடுத்த நாட்டை யுடையவனே! (உப்பு நிறைந்த நீர் பொருந்திய) கடலுக்கருகிலும் நல்ல நீர் உண்டாகும். மலைசார்ந்த விடத்திலும் உப்பு மிகுந்த உவர் நீர் உண்டாகும். ஆதலால் மனிதர்கள் (தமது குணம் செயல்களில்) தங்கள் தங்கள் மனத்தாலொத்தவரல்லது இனத்தாரை ஒத்தவரல்லர்.

(5)

 

பருத்த அடிப்பாகங்களை யுடைய புன்னை மரங்களுள்ள கடற்கரையை யுடையவனே! (ஒரே நிலையில் உறுதியாய்) நிற்கும் மனமுடையவர்கள் நற் குணங்கள் பொருந்திய செய்கையையுடைய வரிடத்திலும் நீங்குதலும் கூடுதலுமாகிய காரியங்களைச் செய்வார்களோ? (அவ்வாறு செய்தலினும்) ஒருவருடனும் கலந்து சிநேகஞ் செய்யாதிருத்தலே நல்லது.                                                      (6)

 

சிநேகஞ் செய்தறிவதனால் சிநேகத்தின் தன்மையை யறிந்து கொள்ளும் படியான அறிவுடையோரை நட்பாகக்கொள்ளுதலாலே பலவித இன்பங்களுண்டாகும். (ஆராயாமல்) சிநேகஞ்செய்தால், சிநேகஞ் செய்தறிவதனால் சிநேகநிலை தெரியும்படியான அறிவிலாதாரை (உடனே) விட்டுப் பிரிவதனால் துன்பமானது நீங்கும்.                  (7)

 

தன்னை நல்ல நிலையிலே நிற்கச் செய்பவனும், அந்நிலை கெடச் செய்து தன்னைக் கீழாக்கிக்கொள்பவனும், (தான்) முன்னிருந்த நிலைமையினும் மேலும் மேலும் உயரும்படியாகச் செய்து (அந்நிலையிலேயே) தன்னை நிறுத்திக்கொள்பவனும், தன்னை முதன்மையானவனாகச் செய்து கொள்பவனும் தானேயாவன். (ஒருவன் தனது உயர்விற்கும் தாழ்விற்கும் தானே காரணனாகின்றான் என்பது கருத்தாம். " தானே தனக்குப் பகைவனும் நட்டானும்','பெருமையும் சிறுமையும் தான்தர வருமே" என்னும் வாக்கியங்களும் இங்கு உணரத்தக்கவையாம்.)                                     (8)

 

அலைகள் மிகவும் சப்திக்கும் குளிர்ந்த கடற்கரையையுடைய பாண்டிய மன்னனே! சிறந்த குலத்திற் பிறந்த பெருமையுடைய அறிவாளிகளும் (யாதாமொரு) காரியத்தினிமித்தம் கல்வியறிவில்லாதவர்களின் பின்னாகச் செல்லுதல் அவிவேகமல்ல; அவ்வாறு செல்வது அறிவுடைமையேயாம்.                                        (9)

 

(ஒருவன், அறத்திற்கும் பொருளுக்கும் காரணமான) தொழில்களையும் உடன்பட்டுச் செய்து, உலக இன்பங்களையும் அநுபவித்து, தருமத்தையும் தகுந்த பெரியோர்களுக்குச் செய்து (இவ்வாறு) மூன்று காரியங்களும் ஒரு பிறவியிலேயே (ஒருவனுக்குத்) தடையில்லாமல் நிறைவேறு மானால், அந்த நிலைமையானது (அன்னிய நாடுகளுக்குப் போய் வியாபாரம் செய்து லாபத்தோடு திரும்பவும் தன்னுடைய) பட்டினத்தை யடைந்த மரக்கலத்திற்குச் சமானமானதாகும் என்று கூறுவர் பெரியோர்.                     (10)
 

 

26 - ம் அதிகாரம்.

அறிவின்மை.

 

(ஒருவனுக்கு) கூரிய அறிவு இல்லாமலிருத்தலே தரித்திரமாகும். அந்த அறிவைப் பெற்றிருத்தலே மிகவும் வளர்ந்த செல்வமாம். ஆராயுமிடத்து, பெண்தன்மை மிகுந்து ஆண் தன்மை குறையப்பெற்ற பேடியானவள் யாவர் கண்களும் காண விரும்பத்தகுந்த ஆபரணங்களை அணியமாட்டாளோ? அணிவாள். (அறிவில்லான் செல்வத்தைப் பெற்றிருத்தல் பேடி அழகிய ஆபரணமணிந்திருத்தல் போன்றதாம்.              (1)

 

பலவிதமாகிய நிறைந்த நூற்கேள்விகளின் பயனை அறிந்தவர்கள் (வறுமையால் தற்பெருமை கெட்டுத் துன்பத்தால் வருந்துவதின் காரணத்தையறிய (நீங்கள்) விரும்பினால் (சொல்வேன்.) பழைய சிறப்பினையுடைய சரஸ்வதிதேவி (அப்புலவர்களின் நாவில்) வாசம் பண்ணுதலால், செந்தாமரை மலரில் வசிப்பவளாகிய ஸ்ரீ மகாலக்ஷ்மி கோபங்கொண்டு (அவர்களிடம்) சேரமாட்டாள். (மாமிக்கும் மருகிக்கும் ஒற்றுமை கிடையாதென்பது உலகப்பிரசித்தம் இலக்குமி மாமியும் சரஸ்வதி மருகியுமா யிருத்தலால் ஒருவர் இருக்கும் இடத்தில் மற்றொருவரிருக்கமாட்டார்.)                                              (2)

 

தந்தையானவன் (பிள்ளையைப் பார்த்து)'' அப்பா நூல்களைச் செவ்வையாகப் படித்துக் கல்வியைக் கற்றுக்கொள்'' என்று வற்புறுத்திக் கூற, அவ்வார்த்தையை ஒரு பொருளாகக் கொள்ளாமல் பழித்தவனது கையில் ஒருவன் ஒரு கடிதத்தைப் படித்துக் காட்டு என்று பலபேர் முன்னிலையில் மெல்ல நீட்ட (அவன்) கோபங்கொண்டு கெடுதியாக (அவனை) அடிப்பதற்குத் தடியை எடுத்துக்கொள்வான்.                            (3)

 

கவ்வி கற்காமல் வளர்ந்த ஒருவன் உலகத்தில் நல்ல அறிவுள்ளவர்கள் (கூடியிருக்கும்) கூட்டத்தின் நடுவில் புகுந்து மெல்ல இருந்தாலும் நாய் இருந்தாற்போன்றதாம். (யாதாமொன்றைச்) சொன்னாலும் நாய் குரைத்தாற்போன்றதாம்.

(4)

கீழ்மக்கள் (இலக்கணத்தோடு) பொருந்தாத இழிவாகிய சபையில் கூடியுள்ள (கல்வியறிவு இல்லாத அற்ப) புலவர்களின் நடுவே புகுந்து (தாம்) கல்லாதவற்றை யெல்லாம் சொல்லுவர். பெரியோர்களெல்லாம் தாம் கற்ற விஷயங்களைச் (சொல்லும்படி பிறர்) கேட்டாலும், (அவர்களறிவு தாம் கூறும் அருமையான) பொருளின் மேல் முழுதும் செல்லாமல் நீங்கிப்போகும் விதத்தை அறிந்து (அவர்களால் கிரகிக்க முடியாதென்பதை யறிந்து) சொல்லமாட்டார்கள்.                                                       (5)

 

பனைமரத்தின் மேலுள்ள உலர்ந்த ஓலையானது (சாரமற்றதாகையால்) 'கலகல' வென்று சப்திக்கும். பச்சோலைக்கு எப்பொழுதும் (அவ்வித) சப்தமில்லை. (அதுபோல) (நூல்களைக்) கற்றறிந்த நாவினையுடையோர் (தாம் சொல்லும் சொற்களில்) தமக்கு ஏதாவது பிழை நேரிடுமோ என்று பயந்து ஒன்றும் சொல்லாமலிருப்பர். அறிவில்லாத சிறியோர் (அப்படிப் பட்ட குற்றத்திற்குப் பயப்படாமல் கண்டபடி) பேசுவர்.             (6)

 

பன்றிக்குக் கூழ்வார்க்கும் தொட்டியில் தேன் பொருந்திய மாம்பழத்தின் ரசத்தைப் பிழிந்தாற்போல, நன்மையையறியாத மனிதர்க்குத் தரும் மார்க்கத்தைச் சொல்லுமிடத்து மலைமேல் அடிக்கப்படும் கட்டுத்தறி போலத் தலை சிதறி காதிற்குள் ஏறாவாம். (மரமுளையைக் கற்பாறையின் மேல் அடித்தால் அம்முளை பாறைக்குள் இறங்காமற்போவதோடு அதன் முனையும் சிதைந்து போவது போல, மூடர்களுக்குத் தருமோபதேசஞ் செய்வதும் பயனற்றதாக முடியும் என்பது கருத்தாம்.)             (7)

 

(அடுப்புக்) கரியைப் பலநாள்ளவும் பால் வார்த்துக் கழுவி உலர்த்தி வைத்தாலும் (அதனிடத்தில்) வெண்ணிறத்தையுடையதானதொரு பாகம் உண்டாக மாட்டாது. (சிறிதும் வெண்மையாகாது.) (அதுபோல) கோலினால் அடித்துக் குத்திச் சொன்னாலும் முற்பிறப்பில் நல்வினை செய்யாத (உயிரையுடைய) உடம்பிற்கு அறிவு நுழையாது.               (8)

 

தேனைச் சொரிந்து இனிமையாக நல்ல வாசனை வீசினாலும் பூவிலுள்ள தேனை உண்ணப்போகாமல் (துர்க்கந்தமுள்ள) இழிவான பொருளையே விரும்பும் ஈயைப்போல, இழிவாகிய செய்கைகள் பொருந்திய மனமுடையார்க்குப் பெரியோர் வாயிலிருந்து வரும் தேன் கலந்தாற்போன்ற தெளிவையுண்டாக்கும் உறுதிமொழிகளினுடைய தெளிவு (சாரமான நீதிகள்) யாது பயன்படும்?                                            (9)

 

கற்றவர்கள் கூறும் குற்றமற்ற நுட்பமான நூற்கேள்விகளை ஏற்றுக் கொள்ளாமல் தன்மனம் தள்ளிவிடுவதால், கீழ்மகன் பின்னும் தன் போன்ற ஒருவன் முகம்பார்த்து தானுமொரு இழிவான பிரசங்கம் செய்வான்.                                         (10)

 

27 - ம் அதிகாரம்.

நன்றியில் செல்வம்.

(சம்பாதித்தவனுக்கும் பிறர்க்கும் பயன்படாத செல்வம்.)

 

சமீபத்திலிருப்பதாய் மிகுதியாகப் பழுத்திருந்தாலும் பொருக்குள்ள அடிப்பாகத்தையுடைய விளாமரத்தை வெளவால்கள் சேரமாட்டா. (அது போல) மிகவும் சமீபத்திலுள்ளவர்களானாலும் (பிறர்க்கு உதவி செய்யும் படியான) பெருமை பொருந்திய குணம் இல்லாதவர்களுடைய செல்வமானது (எளியவர்களால்) தமக்குக் கிடைக்குமென்று நினைக்கத்தக்க முறைமையை யுடையதன்று. (எளியவர்க்குப் பயன்படாது.)         (1)

 

(கள்ளிப்பூவானது கைகளால்) அள்ளி எடுத்துக்கொள்ளத்தக்கவை போன்ற (அழகு நிறைந்த) சிறிய அரும்புகளை யுடையவைகளாயினும் அணிந்து கொள்ளத் தகுந்த பூவல்லாமையால் (அவற்றைப்பறிக்க) அக்கள்ளிச் செடியின் மேல் (ஒருவரும்) கை நீட்டார். (அதுபோல) செல்வத்தை மிகுதியாகப் பெற்றுள்ளவராயினும் கீழ்மக்களை அறிவுடையோர் ஒருவரும் விரும்பிச் சேரார்.                                                       (2)

 

மிகுந்த அலைகளையுடைய சமுத்திரத்தின் கரையிலிருந்தாலும் வலிமையான நீர் ஊறும் உப்பில்லாத கிணற்றினிடம் சென்று (அதன் நீரையே) உண்பார்கள். (கடல் நீர் சமீபத்திலிருந்தாலும் அதைவிட்டு தூரத்திற் சென்றாயினும் கிணற்றுநீரையே குடிப்பார்கள்). (அதுபோல) சமீபத்திலுள்ளவர் மிக்க செல்வமுள்ளவராயிருப்பினும் (அவர்களை விரும்பாமல்) வெகு தூரத்திற்போயாயினும் பயன்படுகிறவர்களாகிய கொடையாளிக்ளிடத்திலேயே வெரியோர்க்கு விருப்பமுண்டாகும்.                  (3)

 

அறிவுள்ளவர்கள் வறியராயிருக்க, பனைவட்டும் வழுதுணைக்காயும் போன்ற அறிவில்லாதவர்கள் பட்டாடைகளையும் நல்ல வஸ்திரங்களையும் தரித்து (செல்வர்களாக) வாழ்வார்கள். (ஆதலால்) பொருந்திய கடல் சூழ்ந்த உலகத்தில் புண்ணியமாவது வேறுபட்டிருக்கும். (அவ்வாறிருப்பது பூர்வபுண்ணியப் பயனாம் என்பது கருத்து.      (4)

 

வேல் போன்ற நீண்ட கண்களையுடையவளே! நல்லவர்களும் நீதியுள்ள வர்களும் தரித்திரராயிருக்க, நற்குணமில்லாத கல்லாதவர்களுக்கு செல்வ முண்டாயிருக்கும் காரணம் (யாதெனில்) பூர்வபுண்ணியப் பயனேயல்லாமல் ஆலோசிக்குமிடத்து வேறொரு காரணமும் காணப்படவில்லை.                                                       (5)

 

வாசனையில்லாத (பூவின்) புறவிதழ் போன்ற, நல்ல தாமரைமலர் மேலிருக்கும் பொற்பதுமை போன்ற இலக்குமியே! (நீ) பொன் போன்ற நல்ல மனிதர்களிடத்தில் (சேர்ந்திருப்பதை) விட்டு, வேறுபட்ட குணத்தையுடைய அற்ப மனிதர்களிடத்தில் சேர்ந்திருப்பாய். (ஆதலால்) நீ இவ்வுலகத்தில் சாம்பலாய் (வெந்து) அழியக்கடவாய்.      (6)

 

வேல் போன்ற கண்களையுடையவளே! உபகாரிகளிடத்தில் இருக்கும் தரித்திரத்திற்கு வெட்கமில்லையா? (ஒருவர்க்குங்) கொடாத லோபிகளிடத்தில் நீங்காமல் பரவுவதற்குச் செல்வம் (ஏற்ற) பிசினோ? இவ்விரண்டும் அவ்வவ்விடத்திலே நன்மையடையாமல் நிற்கும் நிலையை நீ வியந்து பார். (வறுமையும் செல்வமும் எவ்வெவ்விடத்திலிருக்க வேண்டு மென்னும் தராதரந்தெரியாமல் நின்று துன்பமடைகின்றன.                                                           (7)

 

வல்லமை யில்லாதவர்கள் தூரதேசங்களுக்குச் சென்று (யாசகத்தால் கிடைக்கும்) பலவகைக் கலப்பான போசனங்களையுண்டு காலங்கழிப்பார்கள். வல்லமையுள்ளவர்கள் செல்வமுடைமையால் (அவ்வாறு) தூரதேசங்களுக்குப் போகாமல் சரீரம் வியர்க்க கஷ்டப்பட்டு இருக்குமிடத்திலிருந்தே பொரிக்கறியுடன் போசனத்தை உண்பார்கள்.    (8)

 

மின்னல் விளங்கும்படியான மேகமானது (வயல்களில்) பொன்னிறமுள்ள செந்நெற் பயிர் கதிர்களோடு கருவும் வாடிக்கிடக்க (அங்கே மழையைச் சொரியாமல்) சமுத்திரத்தில் நீரைப் பொழியும். (அதுபோல) அறிவில்லாதவர்கள் மேன்மையான ஐசுவரியத்தைப் பெற்றால் அவர்களுடைய செல்வமும் அப்படிப்பட்ட தன்மையையே யுடையதாகும். (தரித்திரத்தால் வாடும் நற்குணமுள்ள பெரியோர்க்குக் கொடாமல் துன்மார்க்கர்க்குக்
கொடுத்துதவுவர்).                                                              (9)

 

பகுத்தறிவில்லாதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தாலும் (அவர்கள்) படியாதவர்களே யாவர்; அறிவுடையோர் படியாதிருந்தாலும் படித்தவராவர். (பிறரிடம் சென்று) யாசியாதவர் (மனம்) பரிசுத்தமுடையதாயிருக்க (அவர்கள்) தரித்திரர்களா யிருந்தாலும் செல்வமுடையவர்களே; (செல்வவான்களாயிருந்தாலும்) (வறியோர்க்குக்) கொடாதவர்களாயின் (அத்தகையோர்) தரித்திரர்களேயாவர்.                        (10)

28 - ம் அதிகாரம்.

ஈயாமை.

 (கொடாமலிருக்குந்தன்மை.)

 

சமையல் செய்து சாப்பிட்டு வாழ்தலாயது சிநேகர்க்கும் சிநேகங் கொள்ளாதவர்க்கும் தமக்குள்ள அளவால் சமைத்த வுணவைப் பங்கிட்டுக் கொடுத்து உண்ணுதலாம். (அவ்வாறு செய்யாமல்) சமைத்ததைக் கதவைச்சாத்தித் தாளிட்டுக்கொண்டு தாம் உள்ளேயிருந்து சாப்பிட்டு ஒழுகும் பயனில்லாத மனிதர்களுக்கு மேலுலகத்தின் கதவு மூடப்பட்டிருக்கும். (10 - ம் அதிகாரத்திலுள்ள முதல்பாட்டின் பொருளை இங்கு ஒப்பு நோக்குக.)           (1)

 

எவ்வளவானாலும் தம்மால் கூடியவளவு சிறிய தருமங்களையாயினும் செய்தவர்களே சிறப்படைவார்கள். (அவ்வாறின்றி) மிகுந்த செல்வம் கிடைத்தபொழுது பிறகு பார்த்துக்கொள்வோம் என்று சொல்வோர் உலக நிந்தையாகிய கடலில் விழுந்து வருந்துவார்கள்.                                                                 (2)

 

(தானும்) அனுபவித்துக் கழியாமலும் துறவிகளுக்குச் சிறிதும் கொடாமலும் பொருளைச் சேர்த்துவைத்து இறந்து போகும் அறிவில்லாத லோபியை அவன் தேடிவைத்த (அந்தப்) பொருளும் அவனைப் பார்த்துச் சிரிக்கும், உலகத்திலுள்ள அருளும் அவனைப்பார்த்து நகைக்கும்.                                                       (3)

 

(பிறர்க்குக்) கொடுத்தலும் (தான்) அனுபவித்தலும் அறியாத லோபகுணம் பொருந்திய மனமுடையவன் பெற்ற செல்வமானது (ஒருவனது) குடியிற் பிறந்த வடிவழகுள்ள பெண்ணைப் (அன்னியன் அனுபவிப்பது) போல, அனுபவிப்பதற் குரிய காலம் வரும்போது அயலானால் அனுபவிக்கப்படும்.                                     (4)

 

அலைகளை வீசுகின்ற நீரையுடைய பெரிய சமுத்திரத்தைச் சேர்ந்திருந்தாலும், குறைந்து குறைந்து சுரக்கும் நீரையுடைய கிணற்றின் நீரூற்றைத் (தேடிக்) கண்டு (அதையே) உண்பார்கள். (அதுபோல) மறுமைப்பயனாகிய தருமத்தையறிந்து செய்யாதவர்களுடைய செல்வத்தை விடப் பெரியோர்களுடைய மிக்க தரித்திரமே மேலானது.                                                                     (5)

 

அறிவில்லாத லோபியானவன் (தான் தேடிய பொருளைப்பார்த்து இது) என்னுடையது என்னுடையது என்று நினைந்திருப்பான். நானும் பயன்படாத அப்பொருளை என்னுடையது என்னுடையது என்று எண்ணியிருப்பேன். (அப்பொருள்) அவனுடையதாயிருந்தால் ஏன அவன் தானும் அதை (பிறர்க்குக்) கொடாமலும் அதனால் வரும் பயனை அனுபவி இருக்க வேண்டும்? நானும் அப்படியே பிறர்க்குக் கொடுப்பதுமில்லை. அனுபவிப்பதுமில்லை. (ஆகையால் 'அது என்னுடையதேயென்று கூறுவதில் குற்றமென்ன' என்று பணப்பெட்டி கூறுவதாகச் சொல்லப்பட்டது இது.)  (6)

 

தருமம் செய்யாத லோபகுணமுள்ள செல்வரைவிட தரித்திரர் (பல வகைத்) துன்பங்களினின்றும் தப்பினவராவர். எவ்வாறெனின் (செல்வத்தின் பயனை அடைதலில்லாமையால் இவர் பொருளையிழந்தவரே யாவர் என்று சொல்லப்படும் பழிச்சொற்களினின்றும் தப்பினார்கள். வருத்தப்பட்டு அப்பொருளைக் காப்பாற்றும் கஷ்டத்தினின்றும் தப்பினார்கள். தம் கைநோக இறுகப் பிடிக்கும் சிரமத்தினின்றும் தப்பினார்கள். (இவ்வாறு இவர்கள்) தப்பினவை பல (உண்டு).                        (7)

 

(ஒருவன், செல்வம்) தன்னுடையதாக (இருக்கும் பொழுது) தான் (அப்பொருளைப் பிறர்க்குக்) கொடான். (அவனுடைய பங்காளிகளும் (அப்பொருள்) தம்முடையதான காலத்தில் (பிறர்க்குக்) கொடுக்க மாட்டார்கள். (அது) முன் தன்னுடையதாக இருந்தபொழுது தான் கொடுத்தால் அதை அப்பங்காளிகள் (வேண்டாமென்று) தடுக்கமாட்டார்கள். தானிறந்த பின் அவர்கள் கொடுத்தால் தானும் கோபிக்கமாட்டான். (இவ்வாறு பொருளைச் சம்பாதித்தவர்களும், அவர்களுக்குப் பிறகு அதையடைந்தவர்களும் லோபிகளாகவே யிருக்கும் குடும்பங்களும் உண்டு என்கிறபடி).                                   (8)

யாசிப்பவர் கன்றாகவும் கொடுப்போர் பசுவாகவும் சந்தோஷத்தோடு விரைந்து கொடுப்பதே கொடையாம். (பசுவானது கன்றைக்கண்டவுடன் விரைந்து சென்று பால் தருவது போலக் கொடுப்பதே சிறந்த தருமமாகும்.) லோபகுணமுள்ள கீழ்மகன் (அவ்வாறின்றி) பலமுடையவர்கள் அழுத்தி வருத்த மெதுவாகப் பால் தருகிற பசுவைப் போல அடித்தல் உதைத்தலாகிய பல உபாயங்களைச் செய்து வருத்தினால் கொடுப்பன். '' பல்லு திரத் தாடையினில் போடுவார்க் கீவார் பொருள்''; ''இரணங்கொடுத்தாலிடுவர் இடாரே சரணங் கொடுத்தாலுந் தாம்'' என்றார் பிறரும்.                             (9)

 

பொருளைச் சம்பாதித்தாலும் துன்பம்; (சம்பாதித்த) அப்பொருளைக் காப்பாற்றலும் துன்பம்; காக்கப்பட்ட (அப்பொருள்) குறைவுபட்டால் துன்பம்; அழிந்து விட்டால் துன்பம்; (ஆகையால்) பொருளானது துன்பத்திற்கெல்லாம் இருப்பிடமாம். (இன்னல் தரும் பொருளை ஈட்டுதலுந் துன்பமே - பின்னதனைப் பேணுதலுந் துன்பமே - அன்ன - தழித்தலுந் துன்பமே யந்தோ பிறர்பால் - இழத்தலுந் துன்பமேயாம்) என்னும் செய்யுளின் கருத்தையும் இதனோடு ஒப்பிடுக.                                             (10)

 

29 - ம் அதிகாரம்.

இன்மை

(பொருளில்லாமை.)

ஒருவன் செந்நிறம் பொருந்திய ஆடையை இடையில் உடுத்திக் கொண்டு வாழ்ந்தாலும், பத்தோ எட்டோ பொருளை உடைத்தா யிருத்தலால் பலரிடத்தும் பெருமை யடைவான். மதிக்கத் தகுந்த (உயர்வாகிய) குடியிற் பிறந்தாலும் சிறிதும் பொருளில்லாதவர் செத்த பிணத்தைக்காட்டிலும் கடைப்பட்டவராவர்.                (1)

 

நெய்யானது நீரைவிட நுட்பமானது. நெய்யைவிட புகை நுட்பமானதென்பதை யாவரும் அறிவர். ஆராயுமிடத்து யாசகம் செய்தலாகிய துன்பத்தையுடைய தரித்திரன் (அந்தப்) புகையும் புகமுடியாத வாயில்களில் புகுவான்.                           (2)

 

(தினைக்) கொல்லைகளில் காவல் புரிவோர் கல்லைக் கொண்டு கிளிகளை அதட்டி ஓட்டுதற்கிடமான காடுகள் பொருந்திய நாட்டையுடைய பாண்டியனே! கற்கள் மிகுந்துள்ள உயர்வாகிய மலைகளில் காந்தள் என்னும் புஷ்பங்கள் புஷ்பிக்காவிட்டால் சிவந்த புள்ளிகளையுடைய வண்டின் கூட்டங்கள் (அங்கே) போகமாட்டா. (அதுபோல) பொருளில்லாதவர்களுக்கு விரும்பி வரும் பந்துக்களில்லை.                        (3)

 

சையிற் பொருள் உண்டான காலத்தில் உயிர் நீங்கின உடலைச் சுற்றிக் கொண்டிருக்கும் காக்கைகளைப்போல ஆயிரம் பேர் அடிமைகளாகக் கூடியிருப்பார்கள். (கைப்பொருளில்லாமல்) வண்டு போலலையுங்காலத்தில் 'சுகமா யிருக்கின்றீரா?' எனக் கேட்போரும் இல்லை.                                                       (4)

 

சப்திக்கின்ற நீரருவியானது கற்களின் மேல் விழுந்து (அவற்றின் மாசைக்) கழுவிச் சுத்தஞ்செய்தற்கிடமான கூட்டமான மலைகள் பொருந்திய நல்ல நாட்டையுடைய பாண்டியனே! தரித்திரத்தால் பீடிக்கப்பட்ட வர்களுக்கு (அவர்கள் பிறந்த) குலப்பெருமை கெடும்; பெரிய ஆண்தன்மையும் அழியும்; மிக்க கல்வியும் கெடும்              (5)

 

வயிற்றினுள் உண்டான மிகுந்த பசியாகிய நோயால் தன்னிடத்து ஒன்றை (ப்பெற) விரும்பி வந்தவர்களுக்கு உள்ளூரிலிருந்தும் ஓர் உதலியும் செய்யமாட்டாத தரித்திரன், உள்ளூரி லிருந்து கொண்டு தன் உயிரைப் பயனில்லாமல் கழித்துவிடாமல் தான் தூரதேசத்திற்குப் போய் (அன்னியரின்) விருந்தாளியாயிருப்பது நல்லது.                  (6)

 

கூர்மையாகவுள்ள முல்லையரும்புகளை (தம் அழகினால்) அழியச் செய்யும் பற்களையுடையவளே! தரித்திரமென்னும் துன்பத்தை யடைந்திருப்போர், நற்குணங்களையும், மிகுதியாகத் தமக்குள் உண்டான புத்திகூர்மையையும், மற்றும் யாவையும் ஒருங்கே இழந்துவிடுவர்.                                              (7)

 

இழிவாகிய தரித்திரத்தின் வழியிலே அகப்பட்டு (தம்மிடம் வந்து யாதாயினும் ஓர் பொருளை) யாசித்தவர்களுக்குக் கொடுக்கமுடியாமல் கஷ்டமான வழியிலே பொருந்தி (தன் வயிற்றை வளர்ப்பதற்காக மாத்திரம்) முயற்சி செய்து உள்ளூரில் வாழ்வதைவிட, தூரமானவழியிலே போய் வரிசையாயுள்ள வீடுகளிலெல்லாம் பிச்சையெடுப்பதற்குக் கையை நீட்டுவதாகிய கெட்ட வழியில் வாழ்தலே சிறந்ததாம்.                       (8)

 

(மனிதர்கள்) தங்கள் செல்வம் முழுவதும் அழிந்து ஒழிந்து போனால், பொன்னால் செய்யப்பட்ட கடகங்களை யணிந்து கொண்டிருந்த தங்கள் கைகளால் குனிந்து கீரைகளைப் பிடுங்கிச் சமைத்து (உண்ணப் பாத்திர மில்லாமல்) தேங்காய் ஓட்டைப் பாத்திரமாகக் கொண்டு அந்த உப்பில்லாத வெந்த கீரையைத் தின்று மன உத்சாகங்கெட்டு வாழ்வார்கள்.

(9)

 

நீரருவியானது ஒழுகும்படியான மிக்க சிறப்புப் பொருந்திய குளிர்ந்த மலைகள் பொருந்திய நல்ல நாட்டையுடையவனே! சப்திக்கும்படியான புள்ளிகளையுடைய அழகுமிகுந்த வண்டுக் கூட்டங்கள் புஷ்பங்களில்லாத காலத்தில் கொம்புகளின் மேல் போகமாட்டா.                                                               (10)


30 - ம் அதிகாரம்.

மானம்.

 

(எப்பொழுதும் தம் நிலையினின்று தாழாமலிருத்தலும், வினையால் தாழ்வுவந்தால் உயிர் வாழாதிருத்தலுமே மானம்.) (தங்கள்) செல்வம் வலிமையுடையதாக இருப்பதால் நற்குணமில்லாதவர்கள் (அந்தப் பணத்தைக் கொண்டு) செய்யும்படியான வரம்பு கடந்த நடக்கையைக் கண்டபொழுது மானமுடையவர்களின் மனமானது மூண்டெரிதல் பொருந்திக் காட்டில் பற்றியெழுந்த அக்கினியைப்போலக் கொதிக்கும்.              (1)

 

தமது மானத்தை (அழியாமல்) காத்துக்கொள்ளும் குணத்தையுடையவர்கள் (வறுமை முதலிய துன்பங்களால் தங்கள் உடம்பு) எலும்பு மாத்திரமாய்ச் சிதைந்து போவதா யிருந்தாலும் நற்குணமில்லாதவர்களின் பின் சென்று தமது கஷ்டத்தைச் சொல்வார்களோ? (சொல்லார்.) (ஆயினும்) தமது துன்பத்தை (த்தாம்) சொல்வதற்கு முன்னமே தெரிந்துகொள்ளும் தன்மையுடைய சூக்ஷமபுத்தியுள்ளவர்களுக்குத் தாமடைந்த துன்பத்தைச் சொல்லமாட்டார்களோ? (சொல்வார்.)                                     (2)

 

(எளியவர்கள்) நாமானால் (செல்வர்கள் நம் வீட்டிற்கு வந்த காலத்தில் அவர்களைக் கனப்படுத்தக்கருதி) உள்ளே அழைத்துச் சென்று நம் வீட்டைக் காட்டுவோம். செல்வச் செருக்குடையவர்களானால் (பிறர்) கண்டுவிட்டால் (நம்வீட்டுக்) குட்டு வெளிப்பட்டுவிடும் என்று நினைப்பவர் களைப்போல (தம் வீட்டைக்காட்டக்) கூச்சப்பட்டு வீட்டின் வெளிப்புறத்தில் வைத்துச் சோறு போடுவார்கள். ஆகையால் செல்வர்களுடைய சிநேகத்தை மறந்துவிடு.                                                        (3)

 

கஸ்தூரி வாசனை வீசும் கூந்தலையுடையவளே! மானமுள்ளவர்களுடைய மதிப்பானது இம்மைக்கும் நல்லது; நியாயவழிக்கும் தவறாது; மறுமையிலும் நன்மைதரும். ஆகையால் (அது) நன்மையுடையதாம்.                              (4)

 

பெரியோர் (தங்களுக்கு) மரணம் நேரிடுவதாயிருந்தாலும் பாவமும் பழியும் உண்டாகும்படி நேருகிற காரியங்களைச் செய்யமாட்டார்கள். மரணமானது ஒருநாளே துன்பந்தருவது. (அது) பாவம் பழி என்பவை களைப்போல (அநேக்காலம் வரையில்) சகிக்கமுடியாத துன்பங்களைச் செய்வதில்லை. (நெடுங்காலம் நரகம் முதலிய சகிக்க முடியாத துன்பங்களைத்தரும் பழிபாவங்களைச் செய்வதைவிட, ஒரு நாளைய துன்பத்தைத் தரும் மரணம் மிகவும் சிறந்ததல்லவார்)                           (5)  

 

வளப்பம் பொருந்திய இப்பெரிய உலகத்தில் வசிப்பவர்களெல்லாரிலும் செல்வமுள்ளவராயினும் கொடாதவரானால் (அவர்கள்) தரித்திர முள்ளவர்களே; தரித்திரமடைந்தகாலத்திலும் செல்வமுடையவர்களிடம் சென்று யாசியாதவர்கள் பெருமுத்தரையரென்னும் பிரபுவைப் போன்ற செல்வர்களே.                        (6)

 

பக்கங்களில் பரவிய வில்லைப்போன்ற புருவங்களையும் வேல் போன்ற நண்ட கண்களையு முடையவளே! அதமன் எப்பொழுதும் (தன்னை) வருத்தும் பசிக்குப் பயப்படுவான்; மத்திமன் எப்பொழுதும் துன்பத்திற்குப் பயப்படுவான், உத்தமன் சொற்குற்றத்திற்குப் பயப்படுவான்.                                              (7)

 

இவர் (மிகவும்) நல்லவர்; மிகவும் அருளுடையவர்; (பாவம் மிகவும்) தரித்திரராய் விட்டார் என்று அவமதித்துச் செல்வமுடையவர்கள் அற்பப் பார்வையாய்ப் பார்க்கும்பொழுது உத்தமர்களாகிய பெரியோர்களின் மன மானது கருமானுடைய உலைக்களத்தில் ஊதும் நெருப்பைப் போல உள் ளுக்குள்ளே கொதிக்கும்.          (8)

 

தம்மை விரும்பி வந்தவர்களுக்குக் (கொடுக்க இயலாததைக்) கொடாதிருத்தல் நாணமன்று; பயத்தால் நாணுதல் நாணமன்று; தாம் செல்வக் குறைவையுடைய எளியவர்களாயிருக்கையில், தம்மைவிட மேலான செல்வவான்கள் தமக்குச் செய்த எளிமையைப் பிறர்க்குச் சொல்லாமலிருப்பதே நாணமாம்.                              (9)

 

காட்டுப் பசுவைக் கொன்ற காட்டில் வசிக்கும்படியான புலியானது (தனக்கு) இடது பக்கத்தில் விழுந்ததைத் தின்னாது. (அதுபோல மிக்க) செல்வத்தையுடைய சொர்க்கலோகமே தம் கைவசமாவதாயிருந்தாலும் பெரியோர் மானம் கெடுவதாயிருந்தால் (அதை) விரும்பார்.                                                                 (10)

 

31 - ம் அதிகாரம் - இரவச்சம்.

(யாசகம் செய்வதற்கு அஞ்சுதல்.)

 

தெளிந்த அறிவினையுடையோர், 'இந்தத் தரித்திரர் நம்மால் தான் செல்வமுடையவராவர்; தமது முயற்சியால் சம்பாதிக்கும் செல்வமுடை யவரல்லர்'என்று தம்மைத்தாமே மேலானவராகக்கருதி மயங்கும் மனத்தையுடைய அறிவீனர்களின் பின்னால் சென்று யாசகம் செய்வார் களோ? (யாசிக்கமாட்டார்.)                      (1)

 

ஒருவன் செத்துப் பிறக்கும் பிறவியானது, கண்ணை (ஒருமுறை) திறந்து மூடும் நேரத்திற்குள் அழியுந்தன்மையுடையதல்லவா? (ஆம். ஆத லால்) ஒருவன் இழிவிற்குக் காரணமாகிய யாசகத்தொழிலைச் செய்து வயிறாரச் சாப்பிடுவதைக்காட்டிலும், பழிக்கத்தக்க காரியங்களைச் செய்யா தவனாகிய மற்றொருவன் (யாசிக்க மனமில்லாதவனாய்ப்) பசியோ டிருத்தல் குற்றமாகுமோ? (ஆகாது என்றபடி.)        (2)

 

தரித்திரத்தின் காரணமாக யாசகம் செய்யத் துணிந்து, (அந்த) அற்ப மாகிய வழியில் போகாதவர் ஒருவரும் இலர். (ஆயினும்) மேன்மக்கள் (தாம் சென்றவுடனே தம்மைத்) தழுவிக்கொண்டு 'எமது வீட்டிற்கு வாருங்கள்; உண்ணுங்கள்' என்பவர்களிடத்திலே யல்லாமல் (பிறரிடத்தில்) முகம் காட்டிக்கொண்டு போவதைப் பொறுப்பார்களோ? (பொறுக்க மாட்டார்கள்.                                                             (3)

 

மேன்மக்கள் லக்ஷ்மி (தம்மைக்) கைவிட்டாலும் தெய்வம் கோபித்து வருத்தப்படுத்தினானும் (சோர்வடையாமல்) ஊக்கங்கொண்ட மனத்தோடு மேன்மையை நினைப்பதேயல்லாமல், (லோ பகுணத்தால்) பணத்தைப் புதைத்து வைக்கும் அறிவில்லாதவர்களின் பின்னால் போய்த் தலை குனிந்து நிற்கமாட்டார்கள்.            (4)

 

யாசகத்தைப்பற்றி நினைக்கும்பொழுதே மனமுருகிவிடும். ஆகையால் (யாசகம்) வாங்கும் பொழுது (அதை) வாங்கும் யாசகருடைய எண்ணம் எப்படியிருக்குமோ! (ஆதலால்) தம்மிடம் வந்து யாசிப்பவர்க்குத் தம்மால் தரக்கூடிய தொன்றை ஒளித்துவையாத வலிய அன்பினையுடைய கண்ணை யொத்த மேன்மக்களிடத்திலும் யாசியாமல் வாழும் வாழ்க்கையே (நல்ல) வாழ்க்கையாம்.                            (5)

 

'(நமக்குத்) துன்பங்களே வரட்டும்; இன்பங்கள் இல்லாமற் போகட்டும்' என்று தமது மனத்தைத் தாம் திருப்தி செய்து கொள்வதால் நீங்கிப் போகும்படியான வறுமையின் பொருட்டுப், பொருளாசையால் கவலைப் படுத்தும் மனத்தினால் துன்பமடைந்து, அன்னியரிடம் சென்று யாசித்தல் என்ன பயன் கருதியோ! (" செல்வமென்பது சிந்தையின் நிறைவே'' 'போதும் என்ற மனமே பொன் செய்யு மருந்து': என்னும் பெரியார் வாக்கின்படி, செல்வமானது மனத்திருப்தியே. பொருளாசையால் அலையும் மனமுடையோன் எவ்வளவு செல்வமுள்ளோனாயினும் அவன் தரித்திரனே. ஆசையால் எப்பொருளிடத்தும் செல்லாத அடங்கிய மனத்தான் செல்வ மில்லாதவனானாலும் அவனே செல்வன்' என்பது கருத்து.' இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக், கிடும்பை படாதவர்' என்னும் குறட்பாவையும் நோக்குக).                                                                      (6)

 

மலையின் அகன்ற இடங்களிலெல்லாம் அழகுமிகுந்த பாயுந்தன்மையுள்ள நீரருவிகள் பொருந்திய பாண்டிய நாட்டரசனே! இந்த உலகத்தில் எக்காலத்தும் புதியவர்களாகப் (பலர்) பிறந்து கொண்டிரூந்தாலும், யாசிப் பவர்களை இகழாத உத்தமனே என்றும் பிறவாதவனாவான். (பிறவித் துன்பமின்றி முத்தியடைவான் என்றபடி.)     (7)

.

தன்னுடைய தரித்திரமானது, வெளியாகிய வுடம்பிலே வருத்தப்படுத்த, (அதனால்) தன்மனத்திலுள்ளதாகிய நல்ல ஞானத்தை யிழந்து, (அறியாமையை) நிலைநிறுத்தி, (செல்வமுள்ள) ஒருவனை (யடைந்து), எனக்குப் பொருள் கொடு' என்று யாசித்தகாலத்தில் (அச்செல்வன் கொடுப்ப தில்லையென்று) மறுத்துவிடுவானானால், யாசித்த அவன் அவ்விடத்திலேயே இறவானோ? (இறந்தவனுக்கே யொப்பாவன்.)                    (8)

 

(வறுமையுள்ள) ஒருவர் (செல்வமுள்ள) மற்றொருவரைச் சேர்ந்து (அவர் பிரியப்படி) நடந்து வணக்கத்தோடிருத்தலில் வல்லவராயிருப்பது கிரமமேயல்லாமல், பெருமை கெட்டு (பிறரிடம் சென்று எனக்கு) ஏதாகிலும் (உதவி) செய்யமாட்டீரா என்று சொல்லும் சொல்லைக்காட்டிலும் தாம் துன்பமுண்டாகச் செல்லும் வழி (துன்பவழியே) இனிமையானதாக இராதா! (யாசித்து உண்டு இன்பமடைவதைவிட வறுமையால் துன்பப் படுதலே சிறந்ததாம் என்பது கருத்து.)                                              (9)

பழைய பழக்கம் காரணமாக (ஒருவர் மற்றொருவர்மேல்) அன்பு கொண்டவிடத்து, (நட்புக்கொண்ட அவருக்கு) யாதாயினுமொரு தக்க உதவியைச் செய்க. அவ்வுதவியை அவர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் (அச் செய்கையானது) தமது மனதில் பதிந்து நீங்காமல் எரியும் நெருப்பாமாகும்.                                                          (10)

 

32 - ம் அதிகாரம்.

அவையறிதல்.

 (சபையிலுள்ளோரின் தன்மையையறிந்து அதற்கேற்றவாறு நடத்தல்.)

 

மெய்ஞ்ஞான நூல்களைக் கற்றவர்கள், (நிறைந்த) சபையில் சேரும் முறைமையை விட்டு, அவ்விடத்து அறிவில்லாமைக் குரியதான ஒருவார்த்தையைக் கொண்டுவந்து எடுத்துச் சொல்லி, அந்த விஷயத்தை அவ்விடத்தில் மிகுதியாக விவரித்து, அற்பமாகிய அறிவைக்கொண்டு ஒழுகும் குற்றமுள்ள அறிவையுடையவர்களுக்கு முன்பு, யாவரும் புகழ்ந்து கூறும் தமது ஞானத்தை (ஒருவர்) தளரவிடக்கடவர். (மூடர்களினெதிரில் விவேகிகள் தமது ஞானத்தைச் சொல்லலாகாது என்பது கருத்து.)                     (1)

 

அடக்கமுள்ள பெரியோர், வாய்க்குவந்த பாடங்களை எடுத்துச் சொல்லி நல்ல நூற்பொருள்களை யறிந்தவர் போலக் (காட்டிக்கொண்டு) கூட்டஞ்சேர்க்குந் தன்மையுள்ள கெட்ட அறிவினையுடைய புலவனைச் சேர மாட்டார். (ஏனெனில்) கெட்ட அறிவையுடையவன் (கேட்பவர் மனம்) வருந்தும்படி சபையில் (அவர்களது) குடியைப் பழிப்பான். இல்லாவிட் டால் தோள்களைத் தட்டிக்கொண்டு (சண்டைக்குக்) கிளம்புவான்.

(2)

 

(பிறரது) கல்விச் சமர்த்தையும் (பேசுதல் முதலியவற்றிலுள்ள) திறமையையும் தாம் அறியாதவராய், (தமது) சொற்களாகிய முள்ளங் கோல்களைக் கொண்டு தினவுகொண்டு (வாதஞ்செய்ய) எழுந்திருப்பதை விரும்புவார்கள்; தாம் கற்றறிந்தவைகளை (பிறர் மனத்திற்) புகும்படி செய்யும் வழியை யறியார்கள்; தோல்வியுண்டாகுமென்பதையும் அறியார்கள்; (இவ்வாறு) அநேக வார்த்தைகளை (வீணாகச்) சொல்லும் மனிதர் பலர் (உண்டு).                                                                      (3)

 

அறிவிலானொருவன் (தான்) கற்றது சிறிது மில்லாமல், பாடசாலை யில் படிப்பவர்கள் சொல்லும் வாய்ப்பாடத்தைக்கேட்டு அதனால் ஒரு சூத்திரத்தை யறிந்துகொள்வானானால், அச்சூத்திரத்தை அறிவுடையோ ரிடையிற்போய் வெட்கமில்லாமல் சொல்லித் தனது அற்பவறிவைக் காட்டிவிடுவான்.                   (4)

 

வெற்றியடைய வேண்டுமென்னுங் காரணத்தால் மிருகங்களைப் போல உண்மைப் பொருளைக் கொள்ளாமல் மிகக் கோபித்துச் (சண்டைக்குச்) சித்தமாய் மனங்கொதிப்பவர்களாகிய தீயவர்களுடன் சேர்ந்து, தம் சொல்லின் சாமர்த்தியத்தைக் காட்டப் பிரயத்தனப்படுபவர்கள் தம்முடைய பற்கள் சுரைவிதைகளைப் போலத் தம் கையிலிருக்கக் காண்பார்கள். (மூடர் அறிவுடையோரின் உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்ளாமல் உபேக்ஷை செய்வதுமன்றி அவர்கள் பற்களை புதிர்த்துக் கையில் கொடுப்பர்.)                                                                        (5)

 

ஒரு பாட்டின் மூலபாடத்தை மாத்திரம் வாய்ப்பாடமாகச் சொல்லி, அதன் பொருளை ஆராய்ந்தறியமாட்டாத மூடர்கள் வெறுக்கத்தக்க குற்றமான சொற்களைச் சொல்லும்போது, அழிவில்லாத சிறப்பையுடைய அறிவாளிகள் வெட்கங்கொண்டவர்களாய் (அந்த) மூடர்களைப் பெற்றவளுக்காக மிகவும் மன மிரங்குவார்கள்.                        (6)

 

நூல்களானவை, வேசிகளின் தோள்களைப்போல (படிக்கிற) வழியிலே யிறங்கிக் கற்பவர்களுக்கெல்லாம் எளிதில் கைக்கொள்ளத் தக்கவையாம். (ஆனால்) அந்த நூல்களின் பொருள்கள், தளிர் போன்ற அந்த விலை மாதருடைய மனம்போல எவர்க்கும் உணர்தற்கரியவையாம்.                                                         (7)

 

புத்தகங்களை மிகுதியாகச் சேர்த்துவைத்தும் அவற்றின் பொருள்களை அறியாதவர்கள் (புத்தகங்களைக்) கொண்டுவந்து வீடெல்லாம் நிறைத்து வைத்தாலும், (அவற்றைப்) பாதுகாக்கும் புலவரும் வேறு; அவற்றின் பொருளைப் (பிறர்க்கு) அறிவிக்கும் புலவரும் வேறு.                                                                 (8)

 

கூட்டமாகிய காட்டுப்பசுக்களை (மேய்ப்பர்) சேர்த்துவைக்கும்படியான நீண்ட மலை பொருந்திய நாட்டையுடைய பாண்டியனே! பொழிப்புரை, விரிவுரை, நுட்பவுரை, எச்சவுரை என்னும் இந்த நான்கால் நன்றாக ஆராய்ந்து ஒரு நூலினுடைய விரிவான பொருள்களை (விளக்கிக்) காட்டாதவர்களுடைய உரையானது பழிப்பில்லாத நல்லவுரையாகுமோ? (ஆகாது.)                                                                      (9)

நற்குடியில் பிறவாதவர்கள் எவ்வளவு நூல்களைக் கற்றாலும் பிறருடைய சொற்களை (இகழாமற்) காத்தற்குரிய (அடக்கம் முதலிய) சாத னங்களை யுடையவராவரோ? (ஆகார்); நற்குடியிற் பிறந்த நல்லறிவுடையோர் (முன்னோர்) சொன்ன நூல்களின் பொருளைத் தெளியாதவர்களுடைய அற்ப வறிவைத் தாங்கள் (மேற்கொண்டு) அறிந்து கொள்வதில்லை.                                                       (10)

 

33 - ம் அதிகாரம்.

புல்லறிவாண்மை.

(அற்ப அறிவை ஆளுந்தன்மை.)

 

அறிவுடைப் பெரியோர், கிருபையால் தருமமார்க்கத்தைச் சொல்லும் அன்புடையவர்களின் வாய்ச்சொற்களைப் பயன் தரும் சொற்களாகக் கொள்ளுவார்கள். பாற்சோற்றின் ருசியை அகப்பை அறியாதது போல, பொருளாகாத சிற்றறிவுடையவன் அச்சொற்களை இகழ்ந்து சொல்லுவான்.                                           (1)

 

தோலைக் கடித்துத் தின்னும் புலையர்களுடைய நாயானது பால் சோற்றின் சுவையைக் கொள்ளுதலை அறியாதது போல, பொறாமைக் குணமில்லாத பெரியோர் தருமமார்க்கத்தைச் சொல்லும் போது நல்லறி வில்லாதவர்கள் காதுகொடுத்துங் கேட்கமாட்டார்கள்.                                                                  (2)

 

தமது இனிய வுயிரானது கண்மூடித் திறக்குங்காலத்தில் (உடலை விட் டுப் பிரிந்து) போகும் வழியை, எல்லாவகைகளாலும் தாம் அறிந்திருக் தும், தினையளவாயினும் நற்காரியத்தைச் செய்யாத வெட்கமற்ற சிற்றறி வுடைய மனிதர்கள் செத்தாலென்ன வாழ்ந்தாலென்ன?                                                                  (3)

 

(ஒருவன்) தனது வாழ்நாள் சிலவாயிருத்தலாலும், (தனது) உயிர்க்கு (அது உடம்பை விட்டுப் போகாதபடி செய்யக்கூடிய) காவல் இல்லாமை யாலும், (பார்ப்போர்) பலரும் தூற்றத்தக்க பழியாகுமாதலாலும் (உலகிலுள்ள) பலபேர்களுள்ளும் கண்டவர்களெல்லோருடனும் (இனிமையாகக் கூடி) மகிழாமல், விலகித் தனியாக இருந்து விரோதம் பாராட்டுதல் என்ன காரணமோ!                                      (4)

 

ஒருவன் பலர் கூடியிருக்கும் சபையின் முன்பு போய், மற்றொருவனை இழிவாகப் பேசி வைதான். (அவ்வாறு அவன்) வைய, வையப்பட்டவன் யாதொன்றும் பதில் பேசாமல் சும்மா இருப்பானானால், வைதவன் வாழான்; அங்ஙனம் வாழவானானால் (அவன்) அதிசயப்படத்தக்கவனே யாவான்.                                                (5)

 

விருத்தாப்பியமானது மிகுதியாக வராமலிருப்பதற்கு முன்பே தரும காரியங்களைச் செய்யத்தொடங்கி இளமையில் அவ்விஷயத்தில் முயற்சியில்லாதவன், (பின்பு) வேலைக்காரியாலும் தள்ளப்பட்டு வெளியிலிரு போ'' என்னுங் கடுஞ்சொற்கள் சொல்லப்படுவான். (மிக்க எளியவனாகி வேலைக் காரிகளாலும் இழிவாகப் பேசப்படுவான்.)                                                                          (6)

 

அற்பவறிவுடையோர், (தாம் பெற்ற செல்வத்தைக் கொண்டு) தாங்களும் இன்ப மனுபவிக்கமாட்டார்கள்; பெரியோர்களுக்குத் தானம் செய்யவுமாட்டார்கள்; (தமது) உயிர்க்குப் பாதுகாப்பாகவுள்ள நல்ல தரும மார்க்கத்தையுஞ் சேரமாட்டார்கள்; தாங்கள் அறிவுகெட்டுச் செல்வத்திலேயே ஒன்றுந் தோன்றாமலிருந்து தங்கள் வாளை வீணாகவே ஒழித்து விடுவார்கள்.                                                             (7)

 

இளம்பிராயத்திலேயே (தாம் இறந்த பின்பு) போகும்படியான மறுவுலகத்திற்குத் தமக்கு வேண்டிய (தருமமாகிய) கட்டுச்சோற்றை மிகவும் அழுத்தமாகத் தோளிற்கட்டிய மூட்டையாகக் கொள்ளாதவர்களாய், பொருளைக் கெட்டியாகப் பிடித்துத் தருமத்தைப் பிறகு செய்வோமென்றெண்ணியிருக்கும் அறிவற்ற லோபிகள், (தங்கள் மரணகாலத்தில்) கை யாற்காட்டும் பொன் குவியலும் புளித்த விளாங்காயாகும். (மரணகாலத்தில் தருமஞ்செய்ய வெண்ணித் தம் மனைவி மக்களைப் பார்த்துத் தம்மிடமுள்ள பொன்னைக் கொண்டு வரும்படி கையைக்குவித்துச் சைகை காட்ட அக்கருத்தை யறியாமல் அவர்கள் விளங்காயைக் கொணர்ந்து கொடுப்பார்கள் என்பது கருத்து)                    (8)

 

அற்பபுத்தி யுடையவர்கள், செல்வமில்லாத தரித்திரகாலத்திலும் வியாதிகள் வந்தகாலத்திலும் மறுமைக் குபயோகமாகும்படியான தருமத்தைச் செய்யவேண்டு மென்னும் மனமுள்ளவர்களாயிருந்து, (தரித்திரமும் வியாதியும் இல்லாமல் தருமம்) செய்யக்கூடிய காலத்தில் (சிறிய) கடுகளவாவது மறுமைக்குரிய தான தருமத்தைப்பற்றி நினைக்கவும் மாட்டார்கள்.                                                       (9)

 

ஐயோ! அளவு கடந்த ஆசையையுடைய தமது அருமையான உயிருக்கொப்பான உறவினரை எடுத்துக்கொண்டு போவதற்கு வேண்டிய முயற்சியைச் செய்கிற எமனைப் பார்த்திருந்தும் (பெறுதற்கருமையான) உடலைப் பெற்றிருந்தும் (சிறிதும்) தருமத்தைக்குறித்து நினையாதவர்களாய் அறிவில்லாதவர்கள் வீணாகத் தமது வாழ்நாளைப் போக்குவார்கள். இது என்ன அதிசயம்!                           (10)


 34 - ம் அதிகாரம்.

பேதைமை.

 (யாதோன்றையும் அறியாமை.)

 

கொலை செய்யும்படியான வலிய பெரிய எமன் (உயிரைக்) கொண்டு போகுஞ்சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்க, (அதைக்குறித்துச் சிறிதும் சிந்தியாமல்) இவ்வுலக வாழ்க்கையாகிய வலையில் மிகவும் களித்திருப் அவர்களுடைய தன்மையானது, ஆமையைக் கொலை செய்பவர்கள், (அதை) உலையில் போட்டு நெருப்பை மூட்டி யெரிக்கையில், (அந்த ஆமையானது) தனது (அபாய) நிலைமையை யறியாமல் அந்த உலை நீரில் முழுகி விளையாடினாற் போலும்.                               (1)

 

குடும்பத்தின் பொருட்டுச் செய்யவேண்டிய காரியங்களையெல்லாம் குறைவற (ச்செய்து) முடித்து விட்டு அதன்பின்பு தரூமகாரியங்களைச் செய்வோம்' என்றிருப்பவர்களுடைய தன்மையானது, பெரிய கடலில் நீராடுதற்குச் சென்றவர்கள், (கடலின்) ஓசை முழுதும் அடங்கினபின்பு நீராடுவோம் என்று காத்திருந்தாற்போலும்.

(2)

 

நல்லகுலமும் தவமும் கல்வியும் நற்குடிப்பிறப்பும் முதுமையும் ஆகிய இந்த ஐந்தும் தவறாமல் ஒருவனடைந்திருந்தாலும், பெருமை மிகுந்த குற்றமற்ற பழமையான சிறப்பினையுடைய சவர்க்கம் முதலிய உலகங்களின் தன்மையை யறியாமலிருத்தல் நெய்யில்லாத வெண்சோற்றுக்குச் சமமாகும். (நெய்யில்லா வுண்டிபாழ்' என்பதனாலும் நெய்யில்லாச் சோற்றின் தன்மையையறிக.)                                      (3)

 

கற்களானவை (பிறர் சொல்லும்) சொற்களை மிகவும் அறியமாட்டாவாயினும், அந்தந்தக்காலத்திலே தம்மையடைந்தவர்க்கு நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தல் என்னுங் காரியங்களுக்கு உதவியாயிருத்தலால் (ஒன்றுக்கு முதவாத) கடைப்பட்ட மனிதர்களைவிட அந்தக் கற்களே மிகவும் நல்லவைகளாம்.                       (4)

 

தாம் அடையும் பயன் ஒன்றுமில்லாவிட்டாலும் (ஏதோ ஒரு பயனை) அடைந்தவன் போலக் கோபங்கொண்டு, தான் கோபிக்கத்தகாதவர்களாகிய மேன்மக்கள் முதலானவர்களிடத்திலும் கோபங்கொண்டு அக்கோபத்தால் கோடுஞ்சொற்களைத் தொடர்ச்சியாகச் சேர்த்துச் சொல்லி, அக்கொடுஞ் சொற்களின் பொருளை யுரைத்து விளக்காவிட்டால் அறிவில்லாதவனுக்கு நல்ல தினவானது நாக்கை வருத்தும் போலும்!

(5)

 

நல்ல தளிருள்ள புன்னை மரங்கள் மலர்ந்திருக்கும் கடற்கரை போருந்திய பாண்டிய நாடனே! தம்மிடத்து (அடக்கம் முதலான) நல்லொழுக்கம் இல்லாதவர்களின் பின்னால் போய், அவர்களைத் தம்மிடத்தில் வணங்கி மிருக்கும்படி செய்வோம் என்பவர்களுடைய இழிவான சிநேகமானது கல்லைக் கிள்ளிக் கையை யிழந்தாற்போலும்.            (6)

 

ஒரு பாத்திரத்திற்குள் நெய்யிருந்தால், (அந்த செய் தமக்கு உண்ணக் இடைப்பது) இல்லையானாலும், எறும்புகள் அப்பாத்திரத்தை விட்டுப் போகாமல் அதன் வெளிப்பக்கத்தில் சுற்றிக்கொண்டே யிருக்கும். (அது போல) யாதொன்றும் கொடாதவர்களானாலும் செல்வமுடையவர்களை (உலகத்தார்) விடாமல் சுற்றிக்கொண்டே யிருப்பார்கள்.                                                                  (7)

 

(இவ்வுலகத்திற் பலர்) தினந்தோறும் நற்குண நற்செய்கைகளையடைய மாட்டார்கள்; தருமம் செய்யமாட்டார்கள்; வறியோர்களுக்கு யாதொரு பொருளும் கொடுக்கமாட்டார்கள்; குணஞ் செயல்களிலெல்லாம் இனியவரான தம் மனைவியர்களுடைய தோள்களைச் சேரமாட்டார்கள்; புகழுண்டாக வாழமாட்டார்கள். (இப்படிப்பட்ட அறிவில்லாதவர்கள்) தாங்கள் உயிர்வாழ்ந்திருக்கும் நாள்களை வெறுக்கமாட்டார்களோ! (அவர்களின் வாழ் நாட்கள் வெறுக்கத்தக்கவையாமென்பது கருத்து.)                                   (8)

 

ஒருவரை மற்றொருவர் விரும்பிக் கொண்டாட, (அப்புகழ்ச்சியை நாங்கள் விரும்பமாட்டோம் என்று நினைத்திருக்கும் ஆராய்ந்தறியும் நல்லறிவில்லாத மூடர்களிடம் கொண்ட சிநேகமானது, முழங்குகின்ற ஓசையுடையதும் பாயும்படியான அலைகளையுடையதுமாகிய கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் தருவதாயிருந்தாலும் இனிமை தராததேயாம்.                                                            (9)

 

(ஒருவன் தான்) கற்ற கல்வியையும் மிகுந்த மேன்மைக்குணத்தையும் உயர்குடிப் பிறப்பையும் அன்னியர் புகழ்ந்து கொண்டாடினால் பெருமையடைவான். (அப்படிக்கின்றி) தானே புகழ்ந்து பேசுவானானால் (பரிகாசஞ் செய்து நகைக்கும்) மைத்துனர் அதிகரித்து, எவ்வித மருந்தாலும் தீராத வெறிகொண்டவனென்று (எல்லோராலும்) இகழப்படுவான். (10)

 

35 - ம் அதிகாரம்

கீழ்மை

(கீழோரது தன்மை.)

(உணவு வேண்டிய) காலத்தில் போதுமான அளவினதாகத் தானியத்தைத் தனது வாயில் போட்டு ஊட்டினாலும் குப்பைகிளறுந் தொழிலை விடாத கோழியைப் போல, மிக்க மேன்மை பொருந்திய தருமசாஸ்திரங்களை விரிவாக எடுத்துக் கூறினாலும் கீழ்மகன் தன்மனம் விரும்பியவிதமே போவான்.                                  (1)

'உறுதியான நூற்பொருள்களைக் கற்றுக்கொண்டு குற்றமில்லா திருப்பவர்களாகிய பெரியோர்கள் பக்கத்தில் போய்ச் சேரலாம்வா' என்று (ஒருவன்) சொன்னால், கீழ்மகன் (அதற்குச் சம்மதியாமல்) தூங்கப் போகலாம் என்று எழுந்து போவான்; அப்படிக்கில்லாவிட்டால் வேறொன்றைச் சொல்லித் தடுப்பான்.                    (2)

 

விளங்குகின்ற அருவி பொருந்திய நல்ல நாட்டையுடைய அரசனே! பெரியோர்கள், தாங்கள் மிக்க செல்வத்தைப் பெற்றாலும் (முன்னே கொண்டிருந்த பெருமைக்குணம் மாறாமல் ஒரேதன்மை யுடையவராவர். கீழ்மகனோ மிக்க செல்வத்தை யடைந்தகாலத்திலும் (முந்திய நடைக்கு மாறான) ஒரு நடை நடக்க வல்லவனாவான்.

(3)

 

விளங்குகின்ற ஆற்றையும் நல்ல நாட்டையுமுடைய பாண்டியனே! மேலோர் தினையளவு சிறிதாயினும் பிறர் செய்த உபகாரத்தை (த்தாங்கள்) அநுபவித்தால் (அதை) பனையளவு பெரிதாகக் கருதுவார்கள். செய்ந்நன்றி யறியாதவர்களிடத்தில் பனையளவு நன்றியை எக்காலத்தும் செய் தாலும் (அந்நன்றிகள்) சிறப்பில்லாதவைகளாம்.            (4)

 

பொன்பாத்திரத்தில் (உணவை வைத்து) ஊட்டிக் காப்பாற்றினாலும் நாயானது பிறருடைய எச்சில் சோற்றிற்குக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும். அதுபோல (கீழ்மக்களைப் பிறர்) சிறப்புள்ளவராக ஏற் றுக்கொண்டாலும் கீழ்மக்கள் செய்யும் செய்கைகள் (பெருமைக்கு) வேறு பட்டிருக்கும்.                                     (5)

 

பூமண்டலம் முழுவதையும் அரசாளுவதாகிய பெருஞ் சிறப்பைப் பெற்றாலும் மேலோர் எக்காலத்தும் வரம்பு கடந்த வார்த்தையைச் சொல்ல மாட்டார்கள். (ஆனால்) கீழ்மகனானவன் முந்திரிக்கு மேல் காணி அதிகமானால் எந்நாளும் தன்னை இந்திரனாக மதித்து விடுவான்.                                                             (6)

 

குற்றமற்ற பசுமையாகிய பொன்னின் மேல் மாட்சிமைப்பட்ட இரத்தினங்களைப் பதித்து செய்யப்பட்டதானாலும் செருப்பானது தன்னுடைய காலுக்கேயாகும். (அதுபோல) பொருந்திய செல்வமுடையவரானாலும் கீழ்மக்களை அவர்கள் செய்யுந்தொழிலால் அறியக்கூடும்.                                                                  (7)

 

பலம்பொருந்திய மலைகளையுடைய பாண்டியநாட்டரசனே! கீழ்மகனானவன் கடுமையாகப் பேசவல்லவனாவான்; தாக்ஷண்ய மில்லாதவனாவான்; அன்னியருக்குண்டாகும் துன்பத்திற்காகச் சந்தோஷப்படுவான்; அடிக்கடி கோபாவேசங்கொள்வான்; கண்டவிடத்தும் செல்வான்; பிறரைத் தூஷிப்பான்.       (8)

 

தேனைச்சொரியும் நெய்தற் பூக்களையுடையதாய் சப்திக்கும் குளிர்ந்த கடற்கரையையுடைய பாண்டியனே! பெரியோர் தங்களிடத்தில் பல நாளும் ஒருவன் பின்னே நின்றால் 'இவர் பழமையானவ' ரென்று நினைத்து அவர்களிடத்தில் இன்பமுள்ள சிநேகராவர். கீழானவர் விரும்பாமல் இகழ்வார்கள்.                                   (9)

 

பாண்டியனே! கேட்பாயாக. அறுக்கும்படியான புல்லை அறுத்து எப்பொழுதும் வாயில் கொடுத்து உண்பித்தாலும் சிறிய எருதுகள் (பெரிய) இரதத்தைத் தாங்கி இழுக்கமாட்டா. (அதுபோல) பொருந்திய செல்வ முடையவரானாலும் கீழோரை அவர்கள் செய்யுந் தொழிலால் அறியக் கூடும்.                                                 (10)

 

36 - ம் அதிகாரம்.

கயமை

(முடரியல்பு.)

 

      நிறைந்த அறிவினையுடையோர் வயதால் இளையவராயிருந்தாலும் தங்களைப் பாதுகாத்துப் பொறிகளை அடங்கி நடக்கச் செய்வர். அறிவில்லாதவர்கள் வயது முதிருந்தோறும் தீமையாகிய தொழிலிலேயே வருந்தித் திரிந்து கொறுக்கந்தண்டு போல் உள்துளை யுடையவரா யிருப்பார்கள்.                                                 (1)

 

தவளைகள் எப்பொழுதும் செழித்த பெரிய தடாகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், (தங்கள் உடலிலுள்ள) வழுவழுப்பாகிய அழுக்கைப் போக்கிக்கொள்ள மாட்டாவாம். அதுபோல) குற்றமில்லாத சிறப்புடைய நூல்களைக் கற்றாலும் நுண்ணறிவு சிறிது மில்லாதவர்கள் அவற்றின் பொருளை ஆராய்ந்தறியுந் தன்மையராத லருமையாம்.    (2)

 

கூட்டமாகிய மலைகள் பொருந்திய நல்ல நாட்டையுடைய அரசனே! ஒருவருடைய எதிரிலிருந்து அவருடைய நற்குணத்தையாகிலும் சொல்லதற்கு அருமையாயிருக்க, அவரது குணம் அழியும்படி (அவர்களுக்குச்) சமீபத்தில் நின்று குற்றங்களை யெடுத்துக் கூறும் அறிவில்லாதவர்களுக்கு நாவானது (தசையினா லல்லாமல் வேறு) எப்பொருளாற் செய்யப்பட்டதோ!                                                              (3)

 

குலமாதர்கள் தங்கள் பெண்தன்மையைத் தாசிகள் போல் அழகு செய்து காட்டலை யறியமாட்டார்கள். விலைமாதர் புதிய வெள்ளம் போலத் தம்முடைய பெண்தன்மையைக் காட்டித் தம்மை மதித்து நடப்பர். (கீழ் மக்கள் வேசைகளைப்போல் வெளியாடம்பரத்தில் கருத்துள்ளவரென்பதும், மேன்மக்கள் குலஸ்திரீகளைப் போல வெளியாடம்பரத்தில் கருத்தில்லாதவரென்பதும் இதனால் விளங்கும்.)                                   (4)

 

கீழ்மக்கள், தளிரின் மேலே நின்றாலும் அடியாவிட்டால் உள்ளிறங்காத உளியின் தன்மையை யுடையவராவர். (எவ்வளவு சிறிய வேலையிலும் பிறருடைய தூண்டுதலில்லாமல் செல்லமாட்டார்க ளென்பது கருத்து.) (மேலும்) அருளையே இயற்கைக் குணமாகவுடைய பெரியோர்க்கு எந்தச் சிறியவுதவியையும் செய்யமாட்டார்கள். (தமக்குத்) துன்பஞ் செய்வோரைக்கண்டால் எவ்வளவு பெரிய உதவியையும் செய்வார்கள்.

(5)

 

குறவனானவன் மலையிலுள்ள வளங்களை நினைத்துக்கொண்டிருப்பான்; உழவனானவன் பயன் தந்த விளைநிலத்து வளங்களை நினைத்துக் கொண்டிருப்பான்; பெரியோர் (தமக்கு) ஒருவர் செய்த நன்மைகளை எண்ணிக்கொண்டிருப்பார்கள்; கீழ்மகன் தன்னை ஒருவன் வைததை எண்ணிக்கொண்டிருப்பான்.                              (6)

 

மேலோர் தமக்கு ஒரு உதவி செய்தவர்களிடத்தில் இடைவிடாமல் தொடர்ச்சியாகத் தோன்றிய நூறு குற்றங்களையும் பொறுத்துக் கொள்வார்கள். கீழ்மக்களுக்கு எழுநூறு நன்மைகளைச் செய்தும் ஒன்று குற்ற மானால் முன்செய்த எழுநூறு நன்மைகளும் குற்றமாய்விடும். ('ஒரு நன்றி செய்தாரை உள்ளத்தேவைத்துப் பிழை நூறுஞ் சான்றோர் பொறுப்பர்' என்பதனையும் நோக்குக.                                           (7)

 

வாள் போன்ற கண்களை யுடையவளே! பன்றியானது தன் கொம்பில் அழகிய பூணைக்கட்டினாலும் கோபம் பொருந்திய யானையாதலில்லை. (அதுபோல) தரித்திரகாலத்திலும் நற்குடியிற் பிறந்தார் செய்யும் காரியங்களைக் கீழ்மக்கள் (செல்வத்தால்) உயர்நிலை யடைந்திருக்குங் காலத்திலும் செய்யமாட்டார்கள். ('செல்லாவிடத்தும் குடிப்பிறந்தார் செய்வன - செல்லிடத்துஞ் செய்யார் சிறியர்'என இந்நூலின் 15 - ம். அதி. 9 - ம் செய் புளில் கூறப்பட்டிருத்தலுங் காண்க.)          (8)

 

(இவ்வுலகத்தில்) நாம் இன்றைக்குச் செல்வமுடையாராவோம்; இப்பொழுதே செல்வமுடையோராவோம்; சிலகாலங்கழித்துச் செல்வம் பெறுவோம் என்றெண்ணி யிருந்து, பொருந்தி அடுத்தடுத்துச் சொல்லுதலால் மகிழ்ச்சியடைந்து, (அதனால்) தம் மனம் வேறுபட்டுத் தாமரையிலை போல் இறந்தொழிந்தவர் அநேகர்.                      (9)

 

நீரில் பிறந்து பசிய நிறமுடையதாயிருந்தாலும் சடையினுள் சிறிதும் ஈரம் (பற்றுதல்) இல்லையாகும். (அதுபோல) நிறைந்த பெரிய செல்வத்தில் நின்றாலும் அறுக்கப்பட்ட பெரிய பாறைக்கொப்பானவரை இவ்வுலகம் உடைத்தாயிருக்கிறது.       (10)

 

37 - ம் அதிகாரம்.

பன்னெறி (பல் x நெறி)

(பலவழிகளைச் சொல்லுதல்)

 

(யாவரும்) விரும்பத்தக்க நற்குண நற்செயல்களையுடைய மனைவியைப் பெற்றிராதவனுடைய வீடானது, மேகங்கள் தவழும்படியான மாளிகையாய் சிறப்பு மிகுந்த காவலையுடையதாய் ஆபரணங்கள் விளக்குப் போல நிலைபெற்று விளங்கினாலும் என்ன பிரயோஜனம்!                                                                  (1)

 

(பெண்கள்) குற்றம் சிறிதுமில்லாத வாள் வீரரின் காவலிலிருந்து (கற் பொழுக்கத்தினின்று) தவறுதலை தாங்கள் அடையாரானாலும், அச்சிறு குற்றத்தை யாராயினும் செய்யாமல் தம்மைப் பாதுகாத்துக் கொண்டகாலம் சிறிதே. (ஆனால்) இனிமையாகப் பேசும் சொற்களையுடைய அப்பெண்கள் நல்லொழுக்கத்தைக் கைக்கொள்ளாத காலமோ பெரிதாம்.                                            (2)

 

(கணவள் கோபித்து அடிக்கச் செல்லுகையில்)'அடி'என்று எதிர்த்து நிற்கும் மனைவியானவள் எமனுக்குச் சமமானவள்; உதயகாலத்தில் (உண்டி சமைத்தற்காக) சமையலறைக்குள் செல்லாதவள் (சகிப்பதற்கு) அருமையான வியாதிக்கொப்பானவள்; சமைத்ததைக் (கணவனுக்குச்) சாப்பிடுங்களென்று கொடாதவள் வீட்டில் வாழும் பேயாவள்; இம்மூவரும் தம்மைக் கொண்ட கணவனைக் கொல்லும் ஆயுதங்களுக் கொப்பாவார்கள்.                                                                (3)

 

(இல்வாழ்க்கையை)'நீக்கிவிடு'என்று (பெரியோர் சொல்லக்) கேட்டும் நீக்காதவனாய், தலை வெடித்துப் போகும்படி (பிணப்பறையானது 'டொண், டொண்' என்று) சப்திப்பதைக் கேட்டும் இல்வாழ்க்கையின் தன்மையைத் தெரிந்துகொள்ளாதவனாய் மறுபடியும் ஒரு மனைவியை மணந்து கொண்டு இன்பமா யிருக்கின்ற மயக்க புத்தி யுள்ளவனை (ப் பார்த்துப் பெரியோர் இவன்) கல்லைக் கொண்டடிக்கும் வெறியனென்று கூறுவர். தவத்தில் முயற்சி செய்து வாழ்தலே ஒருவருக்கு உத்தம (மார்க்க) மாகும்;                     (4)

 

நற்குண நற்செய்கைகளையுடைய மனைவி மக்களிடம் (இல்லறத்தில்) தங்கி வாழ்தல் மத்திமமே; பொருள் கிடைக்கா தென்றெண்ணியும் செல்வத்தினிடத்து வைத்த ஆசையால் தமது குடிப்பிறப்பு கல்வி முதலிய மேன்மைகளை அறியாதவர்களின் பின்னே போய் நிற்கின்ற நிலையானது அதமமாம்.                                      (5)

 

உத்தமர்கள் பல நூல்களைக் கற்றுக் காலங்கழிப்பார்கள்; மத்திமர் நல்ல போகங்களை அனுபவித்துக் கொண்டு கழிப்பார்கள்; அதமர் 'யாம் இன்பமாக உண்டிலோம், செல்வம் நிரம்பப் பெற்றிலோம்' என்று நினைக்கும் வெறுப்பால் தூக்கமுமில்லாமல் (துக்கித்துக்) கழிப்பார்கள்.                                                       (6)

 

செந்நெல்லானது வயல் முழுதும் காய்க்கும் வளமுள்ள கழனி சூழ்ந்த மருதநிலத்தையுடைய பாண்டியனே! செந்நெல்லிலிருந் துண்டான செழித்த முளையினால் மறுபடியும் அந்தச் செந்நெல்லே தோன்றி விளையும். ஆதலால் பிதாவினறிவே பிள்ளையினறிவாம். (தந்தை நல்லறிவுடையவனாக விருந்தால் பிள்ளையும் நல்லறிவுடையவனாயிருப்பான் என்றபடி.)                                        (7)

 

இவ்வுலக வியல்பானது, (தொன்று தொட்டு தொடர்ச்சியாக வரு தலை) உடைய பெரிய செல்வரும் (கல்வி கேள்விகளால் நிறைந்த பெரியோரும் அழிந்து, (இழிகுணமுள்ள) வைப்பாட்டிகளின் பிள்ளைகளும் கீழ் மக்களும் பெருகி, கால்மாட்டிலிருக்கவேண்டியது தலைமாட்டிலிருப்பதா கிய குடைக்காம்பு போல, கீழானது மேலான தய்நிற்கும்       (8)

 

இரத்தினங்களை வாரிக்கொண்டு விழுகின்ற ஆற்றையும் பெருமை பொருந்திய மலைகளையுமுடைய நல்ல பாண்டியராட்டானே! நற்குணமுள்ள சிநேகர்கள் (தம்மிடம் வந்து) தங்களுடைய மனத்திலுள்ள துன்பங்களைச் சொல்லியபின்பும்; அத்துன்பங்களை நீக்காத மனமுடையவர்கள் உயிர் ழ்ந்திருப்பதைவிட மலையின் மேலேறிக் கீழே விழுந்து உயிர்விடுதல் (மிகவும்) நல்லது.                                                  (9)

 

நிதானமாக ஆராய்ந்து பார்த்தால் புதிய (வெள்ள) நீரும் அழகிய காதணியையுடைய வேசைகளின் சிநேகமும் (ஆகிய) இவ்விரண்டும் வேறுபாடில்லாதனவாம். (எங்ஙன மெனில்) புது நீரும் மழை நின்ற மாத்திரத்தில் நீங்கிப்போகும் அப்பெண்களினன்பும் பொருள் வருவாய் நின்றால் நின்று விடும்.                                          (10)

 

38 - ம் அதிகாரம்.

பொதுமகளிர்.

 

(பொருள் தருவோர்க்கெல்லாம் பொதுவாகவுள்ள வேசையர் தன்மை) விளக்கிள் ஒளியும் வேசிகளின் சிரேகமும் இரண்டும் திடமாக ஆராயுமிடத்து வித்தியாசமில்லாதவைகளாம். (எவ்வாறெனில்) எண்ணெய் வற்றிய பொழுதே விளக்கொளியும் அற்றுப்போகும். வேசிகளன்பும் கைப்பொருளற்றபொழுதே அற்றுப்போகும். (முன் அதிகாரத்துக் கடைசி செய்யுளையும் இதனோடு ஒப்பிடுக.)   (1)

 

ஆராயந் தணிந்த ஆபரணங்களையுடைய பொதுமகளானவள் நாம் (மலையிலேறி விழுந்தால் தாமும்) நம்முடன் செங்குத்தான மலையினுச்சியி லிருந்து குதிப்போமென்று சொன்னவள் (இப்போது நம்மிடம் பொரு ளில்லாமையால்) தனது காலில் வாதநோய் வந்திருக்கிறதென்று பொய்க் காரணங்காட்டி (பொய்யாககே) அழுது மலைச் சிகரத்திலேறி விழுவதற்கு எம்முடன் வராமல் நீங்கினாள்.                                          (2)

 

கொய்யும் தளிர்போன்றவராகிய பொது மகளிர், அழகிய இடமகன்ற தேவலோகத்திலுள்ள தேவர்களால் வணங்கப்படும் மகாவிஷ்ணுவே யானாலும் ஆகட்டும், தமது கையில் கொடுக்கும் பொருள் சிறிது மில்லாதவர்கள்ளைத் தமது கையால் கும்பிட்டு விட்டு விடுவார்கள்.                                                        (3)

 

அன்பில்லாத மனமும் நீலோற்பல மலர்போன்ற கண்களுமுள்ள வேசையர்க்குப் பொருளில்லாதோர் விஷம் போன்றவராவர்; யாவரும் காணும்படி செக்காடும் தொழிலையுடைய சாமானியராயினும் பொருள் தேடிவைத்திருப்போர் அவ்வேசையர்க்குச் சர்க்கரைக் கொப்பாவர்.                                                             (4)

 

மிருகத்தையொத்த அறிவற்ற மூடர், பாம்பிற்கு ஒரு தலையைக் காட்டி மற்றொருதலையை இனிமை பொருந்திய தெளிந்த நீருள்ள தடாகத்திலுள்ள மீனுக்குக் காட்டுகின்ற விலாங்கு மீனைப்போன்ற செய்கையை யுடைய வேசையரின் தோள்களைச் சேர்வர்.                                                                       (5)

 

(எனது) நல்ல மனமே! நூலிற்கோக்கப்பட்ட உள்ளே துளையை யுடைய இரத்தினத்தையும் இணை பிரியாத அன்றில் பறவையையும் போல, எப்பொழுதும் நம்மைவிட்டுப் பிரியமாட்டோமென்று சொன்ன பொன்வளையலை யணிந்த பொதுமகளும், போர் செய்யும் தன்மையுள்ள ஆட்டுக் கடாவின் கொம்பு போல முறுக்குள்ள (மாறுபாடான) குணமுடையவளாயினாள். (ஆதலால்) நீ அவளிடத்தில் நிற்பாயோ! என்னுடன் வருவாயோ!                                                             (6)

(முதலில்) காட்டுப் பசுவைப்போல இன்பமுண்டாகும்படி நக்கி, அவர் கையிலிருக்கும் பொருளை வாங்கிக்கொண்டு, (பின்பு) இடக்குச் செய்யும் எருதைப் போல குப்புறப் படுத்துக்கொள்ளும் வேசையினிடத்திலுள்ள அன்பை மெய்யென்று (நம்பி) ஏமாந்து, (அவள்) எம்முடைய பொருளென்றிருப்போர், பலராலும் பழிக்கப்படுவார்கள். (காட்டுப்பசு உடம்பை நக்கினால் அச்சமயம் சுகமாயிருந்து பின்பு மரணத்தை யுண்டாக்கும்)

(7)

 

செம்மையான முத்திநெறியில் சேர்வோமென்று கருதுவோர், (ஒருவர் மோகவலையிலகப்பட்டுக்கொண்டு) மயங்கிய பொழுது அவர்க்கு இன்ப முள்ளவர்கள் போலிருந்து, (பிறகு வறுமையடைந்து) தாமே இச்சித்துச் சென்றகாலத்தில் அன்பில்லாதவர்களாய் ஆட்டுக்கடாவின் கொம்பு போல், மாறுபடும் (குணத்தையுடைய) மான் போன்ற பார்வையுடைய தமக்குரிய மோசவழியில் நடக்கின்ற வேசையர்களிடத்தில் சேரமாட்டார்கள்                                                               (8)

 

ஒளிபொருந்திய நெற்றியையுடைய வேசையர், (பிறர்க்குத்) துன்பத்தை யுண்டாக்கும்படியான (தங்கள்) மனதைப் பிறரறியாதபடி தமக்குள்ளே மறைத்து வைத்துக்கொண்டு (பிறர்) நம்பும்படி பேசின வார்த்தைகளைக் கேட்டு (உண்மையென்றே) நம்பி, (இவ்வேசையர் எம்மிடம் அன் புடையா ரென்று எண்ணுகிறவர்களும்) எண்ணிக் கொள்ளட்டும். (அவ்வாறு நினைப்போர்) மற்ற யாவர்க்கும் உரியவராகார். தமக்கே புரியவுடம்பை புடையவராவர்.                                                      (9)

 

பாவம் மிகுந்த உடம்பையுடையவர்கள், பிரகாசம் பொருந்திய நெற்றியையுடைய வேசையர், தமது மனம் (வேறு) ஒருவரிடத்திலிருக்கவும் (தம்மிடமேயிருப்பதாக) வஞ்சனையால் செய்யும் நினைவெல்லாம் தெளிவாக ஆராய்ந்தறிந்த விடத்தும் (அவ்வஞ்சனையை) அறியாதவராவர்.                                                 (10)


39 - ம் அதிகாரம்.

கற்புடை மகளிர்.

(பதிவிரதைகளின் தன்மை.)

 

பெறுதற்கரிய கற்பினையுடைய இந்திராணிக்குச் சமதையான மிகக் கீர்த்தி பொருந்திய மனைவியானாலும், இச்சை கொண்டு (தன்னைப்) பெற்றுக் கூட வேண்டு மென்னுமாசையால், தன்னழகைக் கண்டு பின்னால் நிற்கும் புருஷர் இல்லாமையாகிய நல்லொழுக்கத்தையே விரும்பிப் போற்றுகின்ற அழகிய நெற்றியை யுடையவளே (கணவனுக்கு) நல்ல துணையாவாள். (தன்னைப் பார்த்துப் பிறர் ஆசை கொள்ளாமலிருக்குமாறு தன்னை அலங்கரித்துக் கொள்ளாமலிருப்பவளே கற்புடைய மனைவியாவாள் என்பது கருத்து.)                                             (1)

 

(உண்பதற்கு வேறு பண்ட மில்லாமையால்) ஒரு குடம் நீரையே காய்ச்சிக் குடிக்கும்படியான தரித்திரம் வந்த காலத்திலும், கடல் நீர் முழுவதையும் உண்ணும்படியான (பெருங்கூட்டமான) உறவினர் வந்தாலும் (தான் செய்ய வேண்டிய) கடமையாகிய குணங்களை நல்லொழுக்க நெறியாகக் கொண்டிருக்கும் பெண்ணே இல்லற வாழ்க்கைக்குரிய பெருமை யுடையவளாவாள்.                                     (2)

 

(தான் வசிக்கும் வீடானது) நாற்புறங்களிலும் வழியுடையதாய் மிகவும் சிறியதாய் எவ்விடத்திலும் மேலிருந்து தன்மேல் மழை நீர் வழியும் படியான ஒழுக்குடைய வீடாயிருந்தாலும், சிறந்த தருமங்களைச் செய்ய வல்லவளாய்த் தான் வாழும் ஊரிலுள்ளோர் தன்னைப் புகழும்படியான மாட்சிமை பொருந்திய கற்புடை மனைவி வசிப்பதே வீடாகும்.                                                         (3)

 

கண்ணுக் கினிய ரூபவதியாய், கணவன் பிரியப்படி தன்னை அலங்கரித்துக் கொள்பவளாய், அச்சமுடையவளாய், ஊரார்க்கு நாணத்தக்க குணமுடையவளாய், நாயகனுக்குப் பயந்து, சமயமறிந்து (கணவனோடு) பிணங்கி இன்பத்துடன் புணரும் சமயத்தை (நன்றாக) அறிந்து கூடிக் களிப்பையுண்டாக்கும் மெல்லிய சொற்களையுடைய பெண்ணே கற்புடைப் பெண் ணாவாள்.                                           (4)

 

எம்முடைய நாயகர் தினந்தோறும் எமது தோள்களின் மேல் சேர்ந்தெழுந்திருந்தாலும், (புதிதாக விவாகம் செய்து கொண்ட) அக்காலத்தில் நாம் பார்த்தது போலவே (இன்னமும்) நாணமடைகின்றோம். (அப்படி யிருக்க) எந்நாளும் பொருளாசையால் பலபேருடைய மார்புகளைச் சேர்ந்தொழுகும் வேசையர் (பலரிடத்தும் நாணமின்றி அடிக்கடி கூடி அவர் களுக்கு) உரியவர்களா யிருக்கின்றனரே! (இது) என்ன தன்மையோ! (இது குலமக ளொருத்தி வேசையரைப் பழித்துக் கூறியது).          (5)

 

(நாணமில்லாதவள் பெற்ற அழகானது) இதயத்தில் அறிவுடைவன் கற்ற நூலறிவு போலவும், தருமகுணங் கொண்டவனிடத்திலுள்ள சிறந்த செல்வம் போலவும் பொதுவாகப் பலர்க்கும் உரியதாகும். நாணமுடையவளின் அழகானது மிகச் சிறந்த சுத்த வீரன் கையிலுள்ள கூர்மையான வாளாயுதத்திற்குச் சமமாகும். (சுத்த வீரன் கையிலுள்ள வாளானது அவன் உயிரோடிருக்கும் வரையில் பகைவர் கையில் அகப்படாது. அதுபோல, நாணமுள்ள பெண்ணின் அழகும் அவள் உயிரோடிருக்கும் வரையில் அன்னியர் வசமாகாது.)                                                                   (6)

 

(குலஸ்திரீயோடு) முழுவதும் சமமாகாத வேசையரைக் கூடிய மலை போன்ற மார்பையுடையவராகிய என் தலைவர் நீராடாமல் என்னையும் சேர வருகின்றார். (இது எப்படி யிருக்கிறதென்றால்) கறுப்புக் கொள்ளையும் சிவப்புக் கொள்ளையும் (சமமாகக் கருதி) பணத்துக்குத் தூணிப்பதக்காக வாங்கினாற் போலிருக்கின்றது. (கருங்கொள்ளையும் செங்கொள்ளையும் சம மாகக்கருதி வாங்கின கதை போல, என் கணவர் வேசையையும் என்னையும் சமமாகக் கருதிவிட்டாரே என்று ஒரு கற்புடைப் பெண் கூறியது.)          (7)

 

* பாணனே! (நீ என் தலைவரைப் பற்றிய) தூஷண வார்த்தைகளை (என்னெதிரில்) சொல்லாதே. (அப்படிச்) சொல்வதாயிருந்தால் யாம் எமது நாயகருக்கு உடுக்கையின் இடப்பக்கத்தைப் போல (பயன்படாமல்) இருக்கின்றோ மாகையால், உன் அடிகளை மெல்ல வைத்துப் பதுங்கிக்கொண்டு போய் (உடுக்கையின்) வலப்பக்கம் போலப் பயன் படுகின்ற பரத்தையர்க்குச் சொல்வாயாக. (கற்புடைய மாதர் தம் கணவரைப்பற்றிய தூஷணைகளைக் கேட்கச் சகிக்கமாட்டாரென்பது இதில் குறிப்பாக விளங்குதல் காண்க.                 (8)

 

* பாணர் - தென்னாட்டில் பாட்டுப் பாடிப் பிழைக்கும் ஓர் வகைச் சாதியார்; இவர்கள் தலைவன் தலைவியரிடத்தில் தூது செல்வது முண்டு.  

 

கோரையைப் பிடுங்கினவளவில் தண்ணீர் விளங்கப்பெற்ற குளிர்ந்த வயலையுடைய எனது நாயகர்மேல், ஈ பறப்பதைக்காண (ச் சகிக்காமல்) மனம் நொந்தவளும் நானே. (இப்போது) தீப்பொறி பறக்க, வேசையாது மார்பை இறுக்கத் தழுவிய குளிர்ந்த சந்தன மணிந்த மார்பைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருந்தவளும் நானே. (வேசையரிட மிருந்துவிட்டு வந்த கணவனைக் கோபித்துக் கொள்ளாம லிருப்பதென்ன?' என்ற தோழிக்குக் கற்புடைய மனைவி கூறியது இது. இதனால் கற்புடைய மாதர் கணவரது குற் றத்தைப் பாராட்டமாட்டாரென்பது விளங்குகின்றது.)                          (9)

 

பாணனே! அரும்புகள் மலரப்பெற்ற மலர்மாலையை யணிந்த தலைவர் எமக்கு அருள் செய்வார் என்று பெரிய பொய்யை (என்னிடம்) சொல்லாதே. நான் (எனது) நாயகருக்குக் கரும்பின் கடைசியிலுள்ள கணுக்களைப் போல ருசி குறைந்திருக்கின்றேன். (ஆகையால் இந்த வார்த்தையை) (கரும் பின்) இடையிலுள்ள கணுக்களைப் போல, (அவருக்கு இனிமை மிகுந்து) உள்ள பரத்தையரிடம் (போய்ச்) சொல்.             (10)

 

40 - ம் அதிகாரம்.

காமநுதலியல்.

(காமவின்பத்தின் பகுதிகளைக் கூறல்.)

 

விளங்குகின்ற கடலானது நிலைத்திராமல் அலைகளை அலைக்கின்ற நீண்ட கழிபொருந்திய குளிர்ந்த கரையையுடைய பாண்டியனே! கூடாவிட்டால் சரீரத்தில் பசலையுண்டாகும்; பிணங்கி வருந்தா விட்டால் காமம் இன்பமற்றதாகும்; கூடிப்பிணங்குதல் (காமநுகர்ச்சியில் இன்பம் மிகுதற்கு) ஒருவழி யாகும்: - (இது, தலைமகனுக்கு வாயிலில் நேர்ந்த தோழி, தலைமகள் புலவி நீங்கச் சொல்லியது.) பசலை - விசனத்தைக் குறிக்கின்ற ஒருவகை நிறம்.                                         (1)

 

தம்மிடத்தில் விருப்பமுள்ள நாயகருடைய மலர்மாலை யணிந்த அழகிய மார்பை அழுந்தத் தழுவத் தகுந்த தலைவரைப் பெற்றிராதவர்களுக்கு 'இம்' என்னும் ஒலியோடு மழை பொழியும்படி மேகங்கள் சப்திக்கும் திசையெல்லாம் சாப்பறை யடித்தாற் போன்ற தன்மையுடையதாம். (இது, மழைக்காலத்தில் திரும்பிவருவதாகச் சொல்லிப் போன கணவன் குறித்த காலத்தில் வராமையால், மனைவியானவள் காலத்தைக்கண்டு சகிக்காமல் வருந்திக் கூறியது.)                                                    (2)

 

கம்மியத்தொழிலைச் செய்யும் கம்மாளர்களுடைய ஆயுதங்களை (வேலை செய்ய வொட்டாமல்) அடங்கச்செய்த மயக்கத்தைக் கொண்டிருக்கின்ற மாலைக் காலத்தில் மலர்களை ஆராய்ந்தெடுத்து அவற்றைத் (மாலையாகத்) தொடுத்துக் கொண்டிருந்தவள். கணவரை யில்லாதவர்களுக்கு இம்மாலை என்ன பயனைத் தரும்!' என்று கையிலிருந்த மாலையைப் போட்டுவிட்டு அழுதாள். (இது, நாயகனில்லாத காலத்தில் நாயகியிருக்கும் நிலைமையைத் தோழி நாயகனுக்குக் கூறல்.)                                  (3)

 

பாகனே! எனது மனைவியானவள் (மாலைக்காலத்தில்) மறையும் சூரியனைப்பார்த்து, சிந்தியவை போலப் பரவிய சிவந்த ரேகைகளையுடைய கண்களில் நிறைந்துள்ள நீரைத் தனது) மெல்லிய விரலால் அடிக்கடி எடுத்தெறிந்து அழுது கொண்டு, தன்னுடைய மெல்லிய விரலால் (நாம் பிரிந்து சென்ற) நாள்களைக் கணக்கிட்டு வைத்து, படுக்கையின் மேல் தோளைவைத்துப் படுத்துக்கொண்டு ஐயோ! நம்முடைய குற்றங்களை நினைப்பாளோ! (வேலையை முடித்துத் திரும்பியதலைவன் பாகனைப்பார்த்துச் சொன்னது)

(4)

 

(தோழா! எனது நாயகியின்) கண்களைப் பார்த்துச்) சேற்கெண்டை என்னுங் கருத்தினால் அந்தநாயகியின் பின் சென்ற சிச்சிலிக்குருவி யானது, (அவளுடைய) ஒளிபொருந்திய புருவமானது வளைக்கப்பட்ட வில்லைப்போலிருந்ததை யறிந்து (பயந்து), பின்னே தொடர்ந்து சென்றும் (குத்து தற்கு) ஊக்கங்கொண்டு எழும்பியும் குத்துதற்கு முடியாமலிருந்தது; (தலைவியின் கண்ணழகையும் புருவத்தினழகையும் தலைவன் வியந்து கூறியது.)                                                              (5)

 

ஆம்பல் மலரைப்போன்ற வாயையும் அழகிய இடையையு முடைய (எனது) மகளுக்கு செந்நிறம் பொருந்திய செம்பஞ்சுக் குழம்பைத் தடவினாலும் (சகிக்க முடியாமல்) 'மெல்ல, மெல்ல' என்று பயந்து பின் வாங்கிப் போன பாதங்கள் பருக்கைக் கற்கள் நிறைந்த காட்டை ஐயோ! பொறுத்தனவோ! (தலைவி தலைவனுடன் சென்ற சுரத்தருமை கூறி அவளது நற்றாய் இரங்கியது.)                                                       (6)

 

(தலைவனே! தலைவி) ஓலையெழுதும் கணக்கருடைய ஓசை அடங்கும் இழிவாகிய செவ்வானத்தையுடைய மாலைக்காலத்தில் (மணம்புரிந்த கணவரை நினைத்துக் கொண்டு பூமாலையை அறுத்தெறிந்து அழகிய மார்பின் மேல் அலங்காரஞ் செய்திருந்த சந்தனப் பூச்சை யழித்து விட்டு அழுதாள். (தலைவன் பிரிவை ஆற்றாத தலைவியின் நிலைமையைத் தோழி தலைவனுக்குச் சொல்வியது.)                           (7)

 

கடந்து போவதற் கருமையாகிய காட்டில் காளை போன்ற தலைவரின் பின்னே நாளைய தினம் நடந்து போகவும் வல்லமை பெற்றிருக்கிறாயோ? என்று என்னைக் கேட்டாய்; பிரயாசமுள்ள வளையலையணிந்த தோழி! (நான் சொல்வதைக்கேள்) பெரிய குதிரையை அடைந்தவனொருவன் அக்குதிரை மேலேறி நடத்தும் முறைமையையும் கற்றுவல்லவனானான். (அதுபோல, காதலனை யடைந்த பிறகு அவன் பின் செல்வது அருமையல்ல.) (இது, தலைவனோடு போகத் துணிந்த தலைவி தோழிக்குச் சொன்னது.)

(8)

 

(எனது மகள் நேற்று என்னைத் தன் மார்பிற் பொருந்தும்படி) (என்) உடல் முழுவதையும் தழுவிக்கொண்ட முறைமையை (அப்போது) நான் அறியவில்லை; எனது அழகிய சித்திரப் பதுமை போன்ற மகள் என்னைத் தழுவிக் கொண்டதன் கருத்து, மான்கூட்டம் வேங்கைப்புலிக்குப் பயந்து திரிகின்ற காட்டுவழியில் (தலைவனுடன்) போவதற்குத்தான் போலும். (மகளை அனுப்பிவிட்ட நற்றாய் இரங்கிக்கூறியது.)      (9)

 

தோழீ! முக்கண்ணனாகிய சிவபெருமானும் காக்கையும் படத்தையுடைய இராகுவென்னும் பாம்பும் என்னைப்பெற்றதாயும் எனக்குப் பிழை செய்த துயாது? (ஒன்றுமில்லை.) பண ஆசையால் (என்) தலைவர் சென்ற நெறியே (எனக்குப் பிழை செய்தது.) (தான் எரித்த மன்மதனை மீட்டும் உயிர்ப்பித்ததனால் சிவனும், குயில்கள் தம் கூட்டில் வைத்த முட்டை பொரித்த குஞ்சைக்கொல்லாமல் காப்பாற்றியதனால் காக்கையும், விழுங்கும் சந்திரனை மறுபடி வெளிப்படுத்துவதனால் இராகுவும், நான் பிறந்தபோதே என்னைக் கொல்லாமல் விட்டதனால் என் தாயும் எனக்குப் பிழை செய்தவர்களே யாவர். ஆயினும், என் தலைவர் என்னை விட்டுப் பிரியாமலிருந்தால் மேற்சொன்ன மன்மதன் முதலானவர்கள் எனக்குத் துன்ப முண்டாக்காமல் இன்பமே தருவார்கள். ஆதலால், அவர்கள் பிழை செய்ததாகச் சொல்ல நிமித்தமில்லை. தலைவர் பிரிந்து சென்ற நெறியே பிழை செய்தது, எனத்தலைவி கூறி இரங்கு கிறாள்.) (மன்மதனும் குயிலும் சந்திரனும் பிரிந்தார்க்குத் துன்பமும் புணர்ந்தார்க்கு இன்பமும் உண்டாக்குத லறிக.)                                                                       (10)

 

நாலடியார் வசனம் முற்றுப் பெற்றது.

 

ஓம் தத் ஸத்.

 

 
 பூ. ஸ்ரீனிவாசன், தமிழ்ப்பண்டிதர், சித்தூர்.

 

ஆனந்த போதினி – 1924, 1925, 1926 ௵

மே ௴ முதல் ஆகஸ்டு ௴ வரை.

 

 

 

 

 

No comments:

Post a Comment