Friday, September 4, 2020

 

நாரதரும் 60 பிள்ளைகளும்

 

 நமது இந்து சாத்திரங்களில், கல்விமான்களுடைய பூர்ண சாமார்த்தியங்களும், கவீஸ்வரர்களுடைய அருள் பிரசாதங்களும், ஒவ்வொரு இடங்களில் மகிமை விளங்கும்படி செய்திருக்கும் திருட்டாந்த சமத்காரங்களும், அவர்களிடம் கடவுள் பிரத்தியக்ஷமாகி, அநேக விளையாடல்கள் செய்ததும், மதி ஈனர்களுக்கும் அறிவைப் புகட்டுகின்றன. மாதர்கள் நடந்த ஒழுக்கங்களும், காதலனைக் காப்பாற்றிக் கடைத்தேற்றியதும், துஷ்டர்களைக் கற்புத்தீயாலெரித்ததும், திக்பாலர்களைத் தவிக்கச்செய்ததும், தெய்வ பலத்தை வகித்துப் பார்ப்போர் மனம் திடுக்கிடும்படி செய்த விஷயங்களும் அநேகமுண்டு. நமது பாரத, பாகவத, இராமாயண, புராண, அடியார்கள் சரித்திரங்களில் பல நீதிகளையும், தர்மங்களையும், குலாசாரங்களையும், ஒற்றுமையையும், மாதா பிதாக்களிடமிருக்கும் பக்தி விஸ்வாசங்களையும், சகோதரர் நன்னெறியையும், மித்திர வாத்ஸல்யங்களையும், பெரியோர்கள்ளிடம் வணங்கித் துதித்தலையும் இவை போன்ற இதர சத்கர்மங்களையும் பலரும் நன்கு அறிவர். ஆயினும் ஆதிகாலம் தொடங்கி அனுபவத்திற்கு விளங்கும் முன்னோர்கள் நூல்கள் பல உள. தெய்வப் புலமை வாய்ந்த மகாசித் புருடர் வரைந்துள்ள தத்வ சாத்திரங்களும் நல்லறிவு கூறுகின்றன. நமது " ஆனந்தபோதினி " யில் மாதம் தோறும் வெளியாகும் வியாசங்களும் ஆநந்தமாகவே விளங்குகின்றன என்பதில் சந்தேகமில்லை. அடியேன் சிற் றறிவிற்கெட்டிய சில விஷயங்களை இங்கே கூறுவேனாக! "ஆனந்தபோதினி" யில் குரோதன வருடம், சித்திரை மாதம் 1 - ந் தேதி பிரசுரமான, 379 - வது பக்கம் பால சோதிடம், திருநெல்வேலி ம - - - - ஸ்ரீ, கே. எஸ் முத்துகிருஷ்ண ரெட்டியார், வரைந்துள்ள "குரோ தன வருஷப்பிறப்பு' என்ற வியாசத்தில் கூறிய சில அம்சங்களைப்பற்றிக் கூறுவோம்! பதினாறாயிரத்து நூற்றெட்டு ஸ்திரீகளிடத்திலும் ஸ்ரீ கிருஷ்ணபர மாத்மா விளையாடிக்கொண்டிருக்கும் காலத்திலோர் நாள், பிரம்ம மானச புத்திரர் நாரத மகரிஷி துவாரகைக்கு வந்து கிருஷ்ணமூர்த்தியிடம் சம்பாஷித்துக் கொண்டிருக்கையில், பரமாத்மா நாரதரை மாயையி லகப்படச் செய்தார். நாரதர் ''ஸ்வாமீ! தாங்களிங்கிருக்கப்பட்ட எல்லா ஸ்திரீகளிடமும் ஆனந்தமாக விளையாடுகின்றீர்களே? அவர்களில் ஒரு பெண்ணை எனக்களிக்கலாகாதா? " என்று மிகுந்த ஆசையுடன் கேட்டனர்.

 

பகவான் புன்னகையுடன் "'நாரதரே! தடையாது? நானில்லாத வீட்டில் தாம் சுகமாக இருந்து போகலாமே!" என்று பகர்ந்தார். அதற்கிசைந்த நாரதர் துவாரகையிலிருக்கும் ஒவ்வொரு வீட்டிலுஞ் சென்று பார்க்க, ஒவ்வொரு வீட்டிலும் பகவானிருக்கக்கண்டு அலைந்து களையுண்டு நாட்டைவிட் டகன்று யமுனா நதியடைந்து நீரில் மூழ்கி யெழுந்ததும், மாயையினால் தம் சுயரூபம் நீங்கிப் பெண் வடிவடைந்து நின்றார். கிருஷ்ண பரமாத்மா அங்கு தோன்றிப் பெண்மையடைந்த நாரதரை யணைந்து பெற்ற அறுபது குழந்தைகளுக்கிட்ட பெயராகிய (பிரபவ முதல் அக்ஷய வரையில்) 60 தமிழ் வருஷங்களாகும். பின்னும் கிருஷ்ணபகவான் சொல்லியபடி நாரதர் யமுனையில் மூழ்கி யதாரூபமடைந்து விடைபெற்றேகினர் எனத் தெரிவித்துள்ளார் நண்பர்.

 

எனதன் பார்ந்த செல்வச் சீமான்களே! இராமாவதாரத்தில் தண்டகவன ரிஷிகளுக்கு அங்கசங்க விஷயத்திற்கு பகவான் ஸ்ரீராமர் துவாபரயுகத்தில், துவாரகை நகரில் கிருஷ்ணாவதாரமெடுத்து அவாள் கோரிக்கையை நிறைவேற்றுவதாகத் தெரிவித்தபடி 16108 - கோபிகைகளுடன் லீலாவினோதம் காட்டியது வெளிப்படையே யாகும். நாரதரையும் அவ் வண்ணம் செய்வதென்பது விளங்கவில்லை. தவிர கிருஷ்ணபகவான் கீதா சாத்திரத்தில் கூறிய தத்வோப தேசங்களில் நல்வழி காட்டியிருக்க, தாமே நாரதருக்கு மாயையை யுண்டாக்கி, கலங்கச்செய்து, எங்கும் தாம் நிறைந்திருந்தும், நாரதர் தவித்து யமுனையில் மூழ்கிப் பெண்ணுருவடைந்து கிருஷ்ணமூர்த்தியை மருவி கர்ப்பமோங்கி 60 -பிள்ளைகளையும் பெற்று நாமகரணம் சூட்டிய விஷயம் உசிதமாகத் தோற்றப்படவில்லை.

 

அது சாதாரண அஷ்டமா சித்திகளைச் செய்யும் மனுஷ்ய கிருத்தியமாகத் தோற்றப் படுகின்றது. ஒரு அந்தரங்க பக்தனை மயங்கச் செய்தும், பெண்ணுருவாக்கியும், அவனைக் கூடுவதென்பது கிருஷ்ண பகவானுக்குத் தகுதியான விஷய மாகுமா? மானிடராய்ப் பிறந்து மாயையிலகப்பட்டவர்களுக்கே தகுதியாகாதென்றால் பூபார நிவர்த்திக்காக அவதாரம் செய்த பரம்பொருள் துவாரகாநாதர், பற்றுதலில்லா லீலைகள் செய்தாரென்பதே சாத்திர ஆராய்ச்சி. பக்தர்களை ரக்ஷித்தும் துஷ்டர்களை சம்மரித்தும், பூர்வ வரப்பிர சாதப்படி நடத்திக் காட்டியதே சிலாக்கியம். அசந்தர்ப்பங்களில் ஈடுபட்டார் என்பது நியாய விரோதமேயாகும். கிருஷ்ணபகவான் 16108 - கோபிகைகளிடம் லீலை செய்தது போதாமல் நாரதரையும் பெண்வடிவாக்கி இச்சித்தாரென விளங்குகின்றது.

 

பண்டித சதாவதானி லக்ஷ்மணாசாரியர் "அனசூயா உபாக்கியானம்" என்ற வியாக்கியானத்தில்: - வனத்தில் சஞ்சரித்திருந்த ரிஷிபத்தினிமார்கள் அத்திரி பத்தினி அனசூயை மீது பொறாமை கொண்டு, கற்பழிக்க முயற்சிக்கும் சமயம் அவ்வழியாகத் திரிலோக சஞ்சாரி நாரதர் வீணாகானம் செய்து கொண்டு ஏகமனதாக பகவானைத் துதித்தேகும் சமயம் ரிஷி பத்தினிகள் வந்தனம் கூறி அழைத்து, பத்தினி அனசூயையின் கற்பையழிக்க வேண்டுமென மந்திரபலத்தினால் மயக்கிவிட்ட நாரதர் சந்நியாசி வேடங்கொண்டு, அத்ரி ஸ்நான கட்டத்திற்குப் போயிருக்கும் சமயம்பார்த்து, அனசூயையிடம் பிச்சைக்கேகினர். கற்புக்கரசி காதலாய் காய்கனி வர்க்கங்களைக் கொண்டு சமர்ப்பித்து வந்த அதிதியைப் புசிக்கச் சொல்லியதும், நாரத கபட சந்நியாசி ரிஷிபத்தினிகள் சொல்லிய வார்த்தையின் படி பதிவிரதாதர்மத்தைச் சோதிக்கக் கருதி நிர்வாணபிச்சை தாருமெனக் கூறினர். செவியுற்ற கற்புடையாள் ஆஸ்ரமத்திற்குள்ளே சென்று, நாதனுடைய பாதோதக தீர்த்த கமண்டலத்தைக் கையிலேந்தி, சிறிது ஜலத்தைக் கபடசந்நியாசிமீது தெளித்தனள். அத்தண்ணீர் பட்ட உடனே நாரதர் யௌவன ரூபலாவண்ணிய ஸ்திரீவடிவ மடைந்தனர். நாரதர் வெட்கித்தலை குனிந்து பத்தினியைத் துதித்து சுயரூப மளிக்க வேண்டு மெனப் பிரார்த்தித்தனர். அனசூயாதேவி அது தன்னால் முடியாத காரிய மென்று தெரிவிக்க இரஜிதகிரி சென்று ஸ்திரீவடிவம் மாற்றிக்கொள்ள எண்ணங்கொண்டு பசுபதியிடம் சென்றார்.

 

அங்கு பார்வதீரமணன், நாரதர் பெண்ணுருவானதைப்பற்றி சந்தோ ஷித்து, நாரதா! இதுவரையில் புருடவடிவாய் நமது சாமவேதம் பாடிக் கொண்டிருந்தாய்; இன்று முதல் ஸ்திரீகண்டமாக சங்கீதத்தில் சாமவேதம் கானம் செய்து கொண்டிருந்தால் காதலி பார்வதியும், யானும் சுகமாகக் கேட்டானந்திப்போ மென்றாசிகூறினர். அங்கும் பலனில்லாமையால், தம் தந்தை பிரம்மதேவரிடம் சென்று, சரஸ்வதியும் பார்க்கப் புலம்பி நடந்தவரலாறு சொல்லி நின்றார். பிரம்மாவுக்குப் பல பிள்ளைகளிருந்தும் பெண்குழவி யில்லாக்குறையை, மாதாவாகிய அனசூயை நிறை வேற்றியதைப் பற்றிப் புகழ்ந்தானந்தித்து, வத்ஸா! நாரதா, நீ ஸ்திரீயாகவே யிருக்க யான் பார்ப்பது அழகல்ல; உனது கர்ப்பத்தில் பிள்ளைகள் பிறந்து பார்த்து ஆநந்திப்பதே சிலாக்கியமெனப் பிறகு நாரதர் திருமாலைத் துதித்தனர். அவர் வாக்குப்படி நாரத அம்மாளுக்கு கர்ப்பமோங்கி 60 - பிள்ளைகளைப் பெற்றார். அக்குழவிகளுக்கு, சதுர்முகர் "பிரதமபுத்ரேன பிரபவா, த்வீதியபுத்ரேன விபவா:,'' என்று பிரபவா முதல் அக்ஷய வரையில் 60 - தமிழ் வருஷங்களாக நியமித்தனர். இது நமது பாரத நாட்டில் பூர்வீகமாக விளங்கிவருவதென்பது தெரிந்தவிஷயம். நாரதர் பெண் வடிவமடைந்ததும், பிள்ளைகளைப் பெற்றதும், அனசூயதேவியினாலேயே சுயரூப மடைந்ததும், பிரதமத்தில் அத்ரி அனசூயை தவம்புரிந்து சந்ததிக்காக வருந்தியதும் மும்மூர்த்திகள் புத்திரராய்த்தாமே பிறப்பதாக வரந்தந்ததும், திரிசக்திகளும் மானச பூசைக்கு சுவர்க்கம் சென்றதும், நாரதராலவமானமடைந்ததும், ஹரிஹரபிரம்மாதிகள் பிச்சைக்கு வந்து அனசூயையைப் பரீக்ஷித்ததும், மூன்று குழந்தைகளாக திரிமூர்த்திகளை அனசூயை யடைந் ததும், திரிதேவிகளுக்கும் பதிவிரதா மகிமை விளங்கியதும், ஸ்ரீ தத்தாத் திரேயர் என்ற திருநாமத்துடன் அத்ரி அனசூயைகளுக்கு பிள்ளையுண்டானதும் முதலிய விஸ்தாரமான விஷயம் பார்க்கவ புராணத்தில் காணலாம்.

 

இன்னும் பூர்ணவியாசம் வரைந்தனுப்ப நமது கல்விமான்களுக் கிச்சையிருப்பின் தவசிரேஷ்டராகிய அத்ரி மகரிஷி பிரதாபத்தையும், கற்புடைய அனசூயை பிரதாப மகிமையையும், மத்தியில் நாரதர் அகப்பட்டு தவித்த பரிதாபத்தையும், மும்மூர்த்திகள் பத்தினியிடம் அகப்பட்டு பல்லிளித்த பரிகாசத்தையும், லக்ஷ்மி பார்வதி தமது பர்த்தாக்களை விட்டு மனஸ்தாபப்பட்டதையும், திரிமூர்த்திகளும் "தத்தாத்ரேயர்'' வடிவடைந்து நாளைக்கும் அத்ரி அனுசூயையின் பிள்ளையாக விளங்கும் பிரதாபத்தையும் சரிவரக் காணலாம். ஸ்ரீ தத்தாத்திரேய மூர்த்தியை உபாசித்து பல சித்துகள் விளையாடுகின்றனர். இந்தமூர்த்தியைத் துதித்தவர்கள் மும்மூர்த்தி களுடைய அருளையடைவர்.

 

ஆனால் நமது பாலசோதிடம் ரெட்டியாரைப்பற்றிக் குற்றமாகக் கூறவில்லை. சோதிட சாத்திரத்திற் குரிய பலாபலன் குரோதன வருடம் அதாவது 59 - வது ஆண்டைப்பற்றிக் கூறியதாயினும் நாரதர் பெண்வடிவ மடைந்து, கிருஷ்ணபரமாத்மாவை மருவி 60 - புத்திரர்களைப் பெற்றார் என்பது அவ்வளவு உசிதமாய் விளங்கவில்லை. நாரதருக்கு 60 - குழந்தைகள் உண்டான விஷயம் பிதாவாக்கினால் வரமடைந்து பிறந்த குழந்தைகள் 60 - வருடங்களாக விளங்குகின்றன வென்பது பிரசித்தம். நாம் கூறிய வியாசத்தில் குற்றமிருப்பினும் மன்னிக்கக் கடவீர்களாக.


"சர்வோஜனான சுகினோ பவந்து.''


 ஜி. வி. இரங்கய்ய நாயுடு,

 S. M. I. Co., East Street, Poona. 

 

 

No comments:

Post a Comment