Friday, September 4, 2020

 

நாட்டுப்புறமும் அதன் சீர்திருத்தமும்

(முருகவடிவு.)

ஒரு நாட்டின் வாழ்வு நாட்டுப்புறங்களின் வாழ்வைப் பற்றியே நிற்கின்ற தென்பதைப் பல காலமாக அறிஞர் கூறி வருகின்றனர். நாடு நலமுற வேண்டுமானால் அதன் சுற்றுப்புறங்க ளெல்லாம் செழிப்பாக இருந்தால் தான் முடியும். கிராமங்களென நாமழைக்கும் நாட்டுப்புறங்கள் தாம் தேசத்தின் உயிர் நாடி. ஒரு நாடு நலமாக வாழ்கின்ற தென்றால்; அந் நாட்டிலுள்ளார் அனைவரும் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தையும் பெற்று, கவலையின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பது பொருளாகும் அன்றோ!

இன்றைய நிலைமையில் நம் தேசத்திலுள்ள 70 லக்ஷம் கிராமங்களும், பரம ஏழைகளாகிய இந்தியர்களாகவே தோற்றுவிக்கப் பட்டவைகள் போல் இருக்கின்றன. நாம் தக்க சமயத்தில் அவைகளைக் காக்காவிடில் நாமும் துக்ககரமாக வீழ்ச்சி யடைவோம் என்பதில் தினையளவும் ஐயமில்லை. மகாத்மா காந்தி யவர்களும் ஏனைய தொண்டுகளை விட நாட்டுப் புறங்களின் நலத்தையே குறிக்கொண்டு வார்தாவில் வாழ்ந்து வருகின்றார்.

கடந்த 180 ஆண்டுகட்கு முன் நடந்த சரித்திரத்தைப் பார்ப்போமானால்; அந்தக் காலம் நாட்டுப் புறங்கள் பன்னலங்களிலும் சிறந்து விளங்கியதைக் காணலாம். ஆனால் நம்முடைய தவக்குறைவால் கி.பி. 1857-ம்ஆண்டிற்குப் பின் நாட்டுப்புறம் நலியத் தொடங்கியது. உலகத்தைக் காக்கும் திறன் கொண்ட நமது கிராமங்கள் அழிவை நோக்கி மிக வேகமாக விரைந்து சென்று கொண்டிருந்தன. திடீரென்று தோன்றிய அறிவாளிகளின் முயற்சியால் அழிவுப்பாதை சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு வருகின்றது.

பல்வளமும் நிறைந்து சீரும் சிறப்பும் எய்தியிருந்த நம்முடைய நாட்டுப்புறங்கள் ஏன் நாசத்தை நாடிச் சென்றன? அதனை எவ்வாறு சீர்திருத்தம் செய்ய முடியுமென்று ஆராயின், உண்மை புலப்படும்.

உண்மையாக இயற்கையோடிசைந்த இன்ப வாழ்வை இனிய முறையில் நாட்டுப்புற மக்களால் தான் நடத்த இயலும். வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும் காலம்; மக்கள் நன்னெறி நின்று பன்னலமும் உடையவராயத் திகழும் காலமே என்பது தெளிவாம். ஆனால் நம் கிராமங்கள் கவலையே உருவோடு கல்வியில்லா அறிவோடு வறுமையே உடைமையாகக் கொண்டு விளக்குகின்றன. வயிற்றுக்கு ஒரு வேளை கஞ்சி அகப்படாத ஏழை மக்கள் ஆயிரக் கணக்கில் அலைகின்றார்கள். இவைகளை யெல்லாம் ஒருவன்
கூர்ந்து நோக்கின் நெஞ்சம் குமுறும். எழுதவும் கை வராது. பேசவும் நா எழாது.

ஆகவே, காலச்சுழலில் உள்ள நம் நாட்டுப்புறங்கள் எந்த நிலையில் இருந்தால் சீர்திருத்தம் அடைய முடியும்? என்று கவனிக்கின், கல்வி, செல்வம், சுகாதாரம், விவசாயம், கைத்தொழில், வாணியம், ஒற்றுமை முதலியன கிராமங்களில் பல்கி யிருத்தல் வேண்டும். முதலாவதாக தற்கால நாட்டுப்புறக் கல்வியைப் பற்றி அறிந்து கொள்வது நலம்.

தற்போது "நாட்டுப்புறங்களின் கல்விக்கு நாட்டாண்மைக் கழகத்தார் அடிப்படை போட்டு வருகின்றார்கள். பல மாறுதல்களுக் கிடையே, நாட்டின் கல்வி முறையும் பல மாறுதல்களுக்கு ஆளாகி வருகின்றது. மாறுதல்கள் எவ்வாறாயினும் நித்தல் நிகழ்ச்சி யாகிய குடி வாழ்க்கைக்கு முற்றும் பொருந்திய தொன்றாக கல்வி முறை இருத்தல் இன்றியமையாதது. மக்கள் வாழ்க்கைக்கு, உடம்பிற்குக் கண் போன்று உதவக் கூடியது கலைத்துறையேயாகும். கம்பரும், கல்வியை ''பொருந்து கல்வி" என்பர். நாட்டுப் புறங்களில் பயிலும் கல்வி முற்றும் தொடக்கக் கல்வியே யாகும். எழுதப் படிக்கக் கணக்குப் பார்க்கக் சற்றுக் கொள்வதாகி தொடக்கக் கல்வி யானே, அதில் பயில்வோர் தங்கள் வாழ்க்கை நிலைக்குரிய பல்வகை யறிவுகளையும் பெற வேண்டியோர் ஆவர்.

கிராமச் சிறுவர்களை, பிழைப்புப் பற்றிய வேளாண்மைத் தொழில் அவர்களை ஐந்து வயது வருவதற்கு முன்னும் தொடரும். அல்லும் பகலும் அகலாது மேவும். வாழ்நாள் முற்றும் வரும். அவர்கள் தொடர்பாக நான்கு ஆண்டுகள் படிப்பதோ அரியதினும் அரியதாகும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளே அவர்களுக்குப் பள்ளிக் கூடத்தில் படிக்கும் காலம் உண்டாகும். எனவே, இச் சிற்றெல்லையினுள்ளே அறிதற்குரியன பலவற்றையும் அறிய வேண்டுவார் மாணவர்களாகிய அச் சிறுவர்களே.

ஆதலின், அவர்கட்கு இயற்கையோடு ஒன்றுபட்ட, வாழ்க்கையோடு இயைபுள்ள, பொது அறிவுக் கல்வியை கிராம ஆசிரியர்கள் புகட்ட முன் வரவேண்டும். கிராமத்தைப் பற்றிய பல விஷயங்களையும் மாணவர்கள் தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகும். கிராமத்தைச் சுற்றியுள்ள ஊர்கள், தன் கிராமத்தின் எல்லை, பரிபாலனம் செய்யும் முறை, நஞ்சை புஞ்சை நிலங்களின் வரி, மற்றைய வரிகள், கடிதம் எழுதும் முறை, பத்திரம் எழுதும் முறை, முதலியனவற்றை அவர்கட்கு அச் சிறிய கால அளவிலேயே கற்றுக் கொடுத்தல் வேண்டும்.

மற்றும், கல்வியின் முன்னேற்றத்திற்கு வாசக சாலைகளும், பல்வேறு இடங்களில் நடக்கும் பலவற்றையும் அறிதற்கு பத்திரிகைகளும், ஒற்றுமைச் சங்கங்களும், ஏற்பட வேண்டியது மிகவும் முக்கியம். நாட்டு மக்கள் அடிக்கடி கிராமங்கட்குச் சென்று அரிய சொற்பொழிவுகள் ஆற்றல் வேண்டும். நாட்டு மக்களோடு - நெருங்கிய தொடர்பு கிராம மக்களுக்கு ஏற்பட வேண்டும்.

இரண்டாவதாக, உலகம் வளமையுற பல தொழில்கள் அவசியம். அவற்றுள் தலை சிறந்தது விவசாயம். விவசாயத்தைப் பற்றி புகழ்ந்து கூறாத
அறிஞர்களும், பாடாத புலவர் பெருமக்களும் இல்லை-என்றே சொல்லலாம். இவைகளைப் பார்த்தால், உழவுத் தொழிலும் அதன் தலைவனுமாகிய உழவனும் வாழ்ந்தால் தான் உலகத்திலுள்ள 200 கோடி மக்களும் வாழ முடியும். அவன் வீழ்ந்தால் அனைவரும் இறப்பது நிச்சயம் என்பது புலப்படும். ஆனால் சிற்சில சமயங்களில் மனிதர்களுடைய சுயநலம் உண்மையை மறுத்து அதனுடன் போட்டியிடும். அல்லது அதனுடைய வளர்ச்சியில் அசிரத்தை உணர்ச்சியைக் காட்டும். தூரதிருஷ்டமாக ஒரே காலத்தில்
போட்டியும், அசிரத்தை உணர்ச்சியும் இப் பரத கண்டத்து உழவுத் தொழிலின் மீது சீறிப் பாய்ந்தன. ஆனால் இளமையும் ஆற்றலும் மிகுந்த இந்திய விவசாயத்தை அடியுடன் அழிக்க முடியவில்லை. எனினும் நம் நாட்டு விவசாயம் பலங் குன்றி வலிமையை யிழந்து விட்ட தென்பதில் ஐயமில்லை. கடன் சுமைக ளெல்லாம் விவசாயிகளின் தலையில் சுமத்தப்பட்டன. வரிகள் பல்கின. விவசாயிகள் தங்களுடைய தொழிலின் பயனால் தாங்களே வாழ வகையறியாது தவித்தனர். இந்த நிலைமையில் “நனைந்த ஆட்டிற்கு நரி உதவி புரிந்தது” போல, இயந்திரங்கள் நம் நாட்டில் காலடி யெடுத்து வைத்தன. உடலிலுள்ள இரத்தத்தைச் சுண்டவைத்து, எலும்பை உருக்கி, நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபட்டும் கஞ்சிக்கும் வகையறியாத விவசாயிகள் நிலங்களை யெல்லாம் விட்டு விட்டு ஆலையை நோக்கி வேலையை நாடிச் சென்றனர்.

இவைகளால் அநேக ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாய்க் கிடக்க நேரிட்டது.
பல ஏரிகளும், குளங்களும் தூர்க்கப்பட்டன. துன்பம் வந்த காலத்தில் தான் மனிதர்கள் தங்களுடைய அநீதியான செயல்களுக்காக வருந்துவார்கள்.

சென்ற 1914-ம் ஆண்டில் நடந்த மகா பயங்கரமான யுத்தத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டு கோடிக்கணக்கான மக்களைக் கொல்ல, பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் விஷ குண்டுகளையும் லக்ஷக்கணக்கில் செய்ய கோடிக் கணக்கில் மனிதர்கள் தேவையா விருந்தனர், நான்கு வருடங்கள், உலகத்திலுள்ள உழவர்களிற் பெரும் பாலோர் போர்ப் பேய் பிடித்து அழி நடனம் ஆடினர்.

மோழி பிடித்த அவர்கள் கை பீரங்கியைப் பிடித்தது. விதைத்த அவர்கள் கை ஜனங்களை மாய்த்து வீதிகளிலே கொட்டை பரப்பியது. இரக்கமுள்ள காராளர்கள் போர் முகத்தில் சுட்டுத் தள்ளினர். கட்டிடங்களை தீக்கிரையாக்கினர். அம்மம்ம! எங்கு நோச்சினும் போர் அரக்கியின் அழி நடனம்.

காலம் என்பது கறங்கு போற் சுழன்று மேலது கீழா, கீழது மேலா மாற்றிடும் வன்மை யுடையதல்லவா? எந்தப் பொருளுக்கும் செய்கைக்கும், ஆதியும் அந்தமும் உண்டன்றோ? சண்டையும் ஒழிந்தது. சமுதாயத்தின் பைத்தியமும் தெளிந்தது. விதைக்கின்ற காலத்தில் யமனுக்கு விருந்திட்டு மகிழ்ந்திருந்து பின் அறுவடைக் காலத்தில் வயலுக்கு அரிவாளை எடுத்துக் கொண்டு வந்தால் அங்கே என்ன கிடைக்கும்? எங்கு நோக்கினும் வறுமை. மக்கள் மிடி என்னும் இடியால் அடியண்டு வாடினர். பசி, பசி என்று மக்கள் கதறினார். கால் நடைகள் நின்ற இடத்திலேயே உணவில்லாமல் விழுந்து மடிந்தன. 1919-ம் வருடத்தில் ஜெர்மனியில் உணவில்லாமல் இறந்தவர் தொகை மாத்திரம் 2 லக்ஷத்துக்கு மேலிருக்கும் என்றால் உலகத்தின் நிலைமையை எண்ணிப் பார்க்கவும் நமக்குக் கற்பனைத்திறன் ஏற்படுமா?

விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் நாட்டுப்புறங்களை மறந்த சர்க்காரெல்லாம் இதற்குப் பிறகு கிராமங்களைக் கவனிக்க ஆரம்பித்தன. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் உய்ய ஆரம்பித்தனர். ஆனால் இந்த நற்காலம் இந்தியாவைப் போன்றுள்ள காடுகளுக்கு ஏனோ கிடைக்கவில்லை. திக்கற்ற நம்மைத் தெய்வந்தான் காப்பாற்ற வேண்டும். முயற்சி செய்ய வேண்டியது நம்முடைய கடமை. பலனனிப்பது ஆண்டவன் திருவருள். ஆனால் நம்முடைய முயற்சிகள் முற்றும் நடை பெறாமல் ஏதோ ஒரு பலத்த சக்தி நம்மை நசுக்குகின்றது. நாம் அனைவரும் ஒன்று கூடி அச் சக்தியைக் கிள்ளியெறியா விட்டால் நாம் என்றும் தலை யெடுக்க முடியாது. அது தான் நாட்டுப்புறங்கள் சீர்திருந்த பின்பற்ற வேண்டிய அவசரமான முதற்காரியமாகும்

நாட்டுப்புறம் சீர்திருத்த வேண்டுமானால், நம் நாட்டு மக்கள் அனைவரும் நலமுற வேண்டுமானால், உயர்ந்த முறையில் வாழ்க்கைக்கு வேண்டிய கல்வி முறைகளைக் கையாளவேண்டும். நகரத்திற்கும் கிராமத்திற்கும் உள்ள பேதம் நீக்கப்பட வேண்டும். விவசாயிகளின் வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும். தானியத்தை விற்க சர்க்காராலேயே கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட வேண்டும். விவசாயம் பெருகி நற்பயன் அளிக்கும்
முறைகளை அறிதல் வேண்டும் அடிமைத் தொழிலில் மோகங்கொண்டு அலையாது உரிமைத் தொழிலை நடத்த வேண்டும். உலகில் மனிதன் இரண்டு விதத் தொழில்களை செய்கின்றான். 1. உரிமைத் தொழில். 2. அடிமைத் தொழில். உரிமைத்தொழில், விவசாயம், வர்த்தகம், கைத்தொழில் இவைகளாம். கூலிக்கு வேலை செய்வது அடிமைத் தொழில்.
உரிமைத் தொழிலில் இலாபம் அதிகம் உண்டு. உரிமைத் தொழில் உள்ள
நாடுகள் கெளரவமும் மதிப்பும் உடையதாகின்றன. தற்போது உலகில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகள் உரிமைத் தொழில் செய்வதிலேயே விருப்பம் உடையதாக இருக்கக் காணலாம். அவர்கள் அடிமைத் தொழிலை வெறுப்பவர்களாக இருப்பார்கள். உதாரணமாக இங்கிலாந்திலுள்ள பெரிய பிரபுக்கள் விவசாயம் வர்த்தகம் கைத்தொழில் இவற்றையே மதிப்பார்கள். அவர்கள் இராணுவந் தொழிலை கௌரவத் தொழிலாக மதிக்கிறார்கள்.
நம் நாட்டோர் இவற்றுள் எப் பகுதியைச் சார்ந்தவர் என்று பார்க்கின், ஒவ்வொருவர் முகத்திலும் அடிமைத் தொழில் என்ற பதம் வரையப்பட்டிருக்கிற தென்று கூரலாகும். பலர் காலக் கேட்டினால் மேற்சொன்ன உரிமைத் தொழில்களை இழிவான
தொழில்களாகவும் கருதியுள்ளனர். இவைகள் அடியோடு நீங்கி உரிமை வாழ்வை அடைய வேண்டும். வாழ்க்கை வாழ அந்நிய நாட்டை எதிர் நோக்காது, பலவித தொழில்களையும்
இல்லேயே செய்தல் வேண்டும். ஏரிகளையும் குளங்களையும் தோண்ட வேண்டும். அல்லது, பாரதியார்

"வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து பாடுகளில் பயிர் செய்குவோம்"


என்று கூறியது போல, எந்நாளும் பயிர் செய்ய கங்கையையும், காவிரியையும் இணைத்து நாட்டை வளமாக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நாடு நலமடையும். நாமும் நலமடைவோம். வறுமை போகும். நல்ல காலம் உதயமாகும். நாடும், மொழியும் சிறக்கும். இதற்கு கவிச் சக்ரவர்த்தியாகிய கம்பர் பாடிய "ஏரெழுபது” என்ற நூலே சான்று பகரும்.

முடிவாக நாம் எட்டு விஷயங்களை மனதில் வைத்து செயலில் செய்ய வேண்டும். எளிதில் மறந்துவிடுதல் நன்நன்று. அவை யாவன: -

1. கிராமங்களுக்கு, வாழ்க்கையோடு ஒன்றுபட்ட கல்வி முறைகள்.

2. சிறந்த முறையில் விவசாயம் செய்தல்.

3. நகரத்திலுள்ள அறிவாளிகள் கிராமங்களுக்குச் சென்று, அறிந்து தெளிந்தவைகளை உபதேசித்தல்.

4. உணவுக்கு வேண்டிய பொருள்களுக்கும், உடைகளுக்கும், அந்நிய நாட்டை எதிர்பார்க்காது அவைகளை நாமே உற்பத்தி செய்துகொள்ளல்.

.      5. கல்வி கற்ற எல்லோருக்குமே அடிமை வாழ்வு கிடைப்பது அரிதாகு மன்றோ! ஆதலால் துரைத்தனத்தாரிடம் வேலை செய்து நாம் உயிர் வாழவேண்டும் என்ற எண்ணத்தை அடியோடொழித்து, தக்கபடி, கைத் தொழிலோ, வர்த்தகமோ, விவசாயமோ, செய்து பிழைப்பதற்கேற்ற கல்வியை பெற்றோரும் ஆசிரியரும், மற்றையோரும் முயற்சி எடுத்து சிறுவர்களுக்குப் போதிக்கவேண்டும்.

6. கிராம மக்களுக்கு நகரத்தோடு தொடர்பும், நாட்டுப் பொருளை ஆதரித்தலும்.

7. கோழிப் பண்ணை, தேனீ வளர்த்தல், பாய் பின்னல், துணி நெய்தல், கால்நடை வளர்ச்சி இவைகளைக் கவனித்தல், கைத்தொழிலில் முன்னேற்றம்,

8. சுகாதாரத்தோடு, வாழ்தலும்; ஒற்றுமையும் செல்வமும் பெருகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தலுமாம். இந்நெறியில் முனைந்து நின்று வெற்றி பெற்றால், நமது நாட்டுப்புறங்கள் பன்னலமும் பெற்று திகழும் வாழ்க்கை புனிதமுறும்.

ஆனந்த போதினி – 1942 ௵ - ஏப்ரல் ௴

 

No comments:

Post a Comment