Friday, September 4, 2020

 நாடென்ப நாடாவளத்தன

 

''நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு."                       என்பது வள்ளுவர் இன் குறள்.

 

உலகுய்வான் திருமறை வகுத்தருளிய ஆசிரியர் வள்ளுவனார், நாட்டின் இலக்கணம் கூறப்போந்த விடத்து, தன்னகத்தே வாழ்பவர் தேடித் தேடி முயன்றாலன்றி அவர்கட்கு வேண்டும் பொருள்கள் நல்காத நாட்டை ஒருநாடு என்று சொல்வது தகாது என்றும், நாடென்றால் ஒருவரது முயற்சியுமின்றி அதனகத்தே வாழும் மக்களுக்கு வேண்டும் பொருள்களைத் தானே நல்கும் நாடே நாடாகும் என்றும் கூறுகின்றார். ஒரு நாட்டின் இலக்கணம் இதுதான் என்று கொண்டால், கவியரசர் கம்பர் பெருமானது உலகம் போற்றும் உயரிய நூலாம் இராம காதையில் காணுகின்ற கோசலை நாடும் ஒரு நாடாகவே வேண்டும். அந்நாடு நம் வள்ளுவர் அருளிய தெள்ளிய குறளில் காணுகின்ற இலக்கணத்திற்கு எத்துணைப் பொருத்தமாய் அமைந்துள்ளது என்றுபார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

கவிதை யியற்றிய கவிஞர் அனைவரும் அவரவர் தம் காவியத்தில், அவர்கள் எடுத்துக் கொண்ட நாட்டின் வளங்கூறப் போந்தவிடத்து, அந்நாட்டிலுள்ள உழவர் பெருமைகளையே போற்றிப் புகழ்வர்.'' உழுதுண்டு வாழ்வதற கொப்பில்லை'' என்னும் உயரிய கொள்கையுடைய உழவர் பெருமக்கள்தம் தம் வயல்களுக்குச் சென்று, ஏரிலே எருதுகளைப் பூட்டி, நிலத்தை உழுது பண்படுத்தி, விதை விதைத்து, களைகழித்து, பயிர் வளர்த்து, வளர்ந்தபயிரை அறுத்து, அடித்துப் புடைத்து, பின்னர் அத்தானியங்களை வண்டியிலேற்றி வீட்டில் சேர்ப்பர். இதுவே அவரது வாழ்க்கையாய் அமைந்து கிடக்கக் காண்கின்றோம். இத்தியாதிய வேறுபட்ட தொழில் முறைகளைப் புனைந்து கூறுவதே கவிகளது மரபாகும். ஆனால் உழவர்களை இவ்வளவு தொழில் கட்கும் ஆளாக்கி, அதனால் அவர்கள் வளம் பெற வாழ்ந்ததாய் அமைத்திருக்கும் நாடு, நம் வள்ளுவர் அருளிய நாட்டின் இலக்கணத்திற்கு மாறுபட்டதே யன்றோ. அதனாற்றான் கவியரசர் கம்பர் பெருமான் மற்றைய கவிஞர்கள் கூறும் முறையினின்றும் மாறுபட்டு, தமிழின் தனிப் பெரும்புலவரான வள்ளுவர் அருளிய நாட்டின் இலக்கணத்திற்கு ஒப்பவே தமது கோசலை நாட்டை அமைத்தருளுகின்றார். கம்பரது கவியால் புனைந்து கூறப்பட்டுள்ள கோசல நாட்டில் மககள் சிறிதும் மெய் முயன்று தமக் கென ஒருபொருள் ஈட்டிக் கொண்டாரல்லர். உழவர் பெரு மக்கள் நிலங்களை உழுது பண்படுத்தியதற்கு இரண்டொரு குறிப்புகளே காணப்படுகின்றன. ஆனால் இவ்வுழு தொழில் செய்யும் மள்ளர்கள் பயிர் செய்ததைப் பற்றி ஒரு குறிப்பும் காணப்படவில்லை. அவர்கள் தம் நிலத்தில் விதை விதைத்ததாவது, நீர்பாய்ச்சியதாவது நாற்று நட்டதாவது கவியரசர் கம்பர் கண்ணுக்குத் தோன்றவில்லை. களை தான் பறித்தனர் என்றாலோ கோசல தேசத்து மள்ளர் நினைத் தனர் பறித்திலர். ஏனெனில்

 

“பண்கள்வாய் மிழற்று மின்சொல் கடைசியர் பரந்து நீண்ட

கண்கைகால் முகம்வா யொக்கும் களையலாற் களையிலாமை கண்டு

உண்கள் வார் கடைவாய் மள்ளர் களைகலா துலாவி நிற்பார்

பெண்கள் பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்''

 

என்று கூறும் திறன் கற்றோர் உளத்திற்கு கழிபேருவகையைத் தருகின்றது. கோசல நாட்டு மள்ளர்கள் களைபறியாது நின்றதற்குக் காரணம் கூறி அம் மள்ளரது உள்ளத்தன்மை விளக்கிய கம்பரது கவிப் பெருமையே பெருமை.

 

நிலத்தையும் உழாது, விதையும் விதையாது, நீரும் பாய்ச்சாது, நாற்றும் நடாது, களையும் பறியாது, தானே விளைந்த பயிரை அறுக்கவேனும் கவியாசர் கம்பர் தம் மள்ளர்களை ஏவவில்லை, அரிந்ததும் அறியார் அரிந்த கதிரை அடுக்கி வைத்ததும் அறியார். ஆனால்,


 "எறிதரு மரியின் சும்மை எடுத்து வானிட்ட போர்கள்
 குறிகளும் போற்றிக் கொள்வார் கொன்ற நெற் குவைகள்
 வறியவர்க் குதவி மிக்க விருந்துண மனையி னுய்ப்பார் (செய்வார்
 நெறிகளும் புதையப் பண்டி நிரைத்து மண் ணெளிய வூர்வார்''


என்று ஒரு பிரயத்தனமும் இல்லாது, தானே விளைந்த பயிரைத் தம் மனையகம் சேர்ப்பது மட்டுமே தமது உறு தொழிலாகக் கொண்டனர் கோசலநாட்டுக் குலமள்ளர் என்று கம்பர் பெருமான் அருளிய சித்திரம் எத்துணை அழகுடையதாய்த் திகழ்கின்றது என்பதை அன்பர்களே உற்று நோக்குங்கள். ஆகவே பல் வளமும் பல் பொருளும் இவ்விதம் எளிதில் கோசல நாட்டார்க்குத் தந்து நாடென்பது நாடா வளத்தன என்று வள்ளுவர் அருளிய நாட்டின் இலக்கணத்திற்கு இலக்கியமாக நின்றது நம் கோசலை நாடு என்று யான் கூறுவேனே யானால் அது ஒரு சிறிதும் மிகையாகாது.

 

ஆனால் ஒரு ஐயம்: வண்டுகள் எல்லா மலர்களிடத்தும் சென்று தேனைக் கொண்டு வந்து ஓரிடத்தில் சேர்ப்பது போல இம்மள்ளர் வயல்களுக்கும், பொழில்களுக்கும் சென்று அவ்விடத்தில் உள்ள பொருள்களைக் கிரகித்துக் கொண்டு வந்து தமது இருப்பிடத்தில் சேர்ப்பர் என்னும் பொருள்பட.


 "கதிர் படு வயலிலுள்ள கடிகமழ் பொழி லுள்ள
 முதிர் பல மரத்தினுள்ள முதிரைகள் புறவி னுள்ள
 பதிபடு கொடியிலுள்ள படிவளர் குழியி னுள்ள
 மதுவள மலரிற் கொள்ளும் வண்டென மள்ளர் கொள்வார்''


என அமைத்திருக்கும் செய்யுளின் உண்மை என்னே என்று சிலர் வினவலாம். தேடித் தேடித் தேனைக் கொள்ளும் வண்டுகள் முயற்சியே செய்யாது வளம் பெற வாழும் மள்ளர்கட்கு உவமை யாவதெங்ஙனம் என்னும் கேள்வி ஏழலாம். ஆனால், தேனிருக்கும் மலரையும் செடியையும் அவ்வண்டுகளே வைத்து வளர்த்ததில்லை. மற்றும் அத் தேனைச் சேகரிக்கிறதே யொழிய அத்தேனையும் அவை தாமே ஆக்கியதில்லை. பின்னும் தேடி எடுத்த தேனைத் தனக்கெனக் கொள்ளாது பிறர்க் கெனவே சேர்த்து வைக்கும் இயல்புடையதுவண்டு. ஆகவே, வித்திடாது பயிர் விளைத்தும், விளைந்த பயிரை அரியாது தம் மனையகத்தே சேர்த்தும், சேர்த்ததை " தம்தம் இல்லிருந்து தாமும், விருந்தொடும், தமரினோடும் " உண்டு வாழும் மள்ளர்கள் வண்டிற்கு உவ மையே யாவர். இவ்விதம் நாடா வளத்ததாய் வேண்டிய பொருளை ஒருவரது முயற்சியு மின்றித் தானே நல்கும் கோசலை நாட்டின் வளத்தைப் போற்றிப் புகழும் கம்பர் கவிநலம் நாம் கண்டு மகிழ்வதற் குரிய ஓர் இடமாகும்.

 

''வரம் பெலாம் முத்தம்தத்தும் மடையெலாம் பணில மாநீர்க்

குரம் பெலாம் செம்பொன் மேதிக் குழியெலாம் கழுநீர்க்கொள்ளை

பரம் பெலாம் பவளஞ்சாலிப் பரப்பெலாம் அன்னம் பாங்கர்க்

கரம் பெலாஞ் செந்தேன் சந்தக் காவெலாம் களி வண்டீட்டம் "

 

என்று கம்பர் கூறுவது கோசல தேசத்தின் பெருமையைப் பெரிதும் விளக்குவதாகும். இன்னும் சேவலோடு கூடிய பெட்டைகள், தம் தம் கால்களால் குப்பை கூளங்களைக் கிண்டிய காலத்தும் அங்கும் அழகிய மணிகளே பிரகா இம் மணிகளைக் கண்ட குருவிக் கூட்டங்கள் அவைகளை மின்மினி யெனக் கருதித் தம் கூடுகளுக்கு எடுத்துச் சென்று அவ்விடத்தே வைத்துக் கொன்ளும் என்று கோசலத்துச் செல்வத்தின் மிகுதியை குப்பை மேட்டிலும், குருவிக் கூட்டிலும் காட்டி கம்பர் தீட்டியுள்ள சித்திரத்தை உற்று நோக்குங்கள். பொன்னாலும், மணியாலும், முத்தாலும், சங்காலும் வளம்பெறவிருந்த நாடு கோசலை நாடு என்பதே கவியரசர் கருத்தாகும். முற்றத்தில் உலர்த்திய பாக்கைக் கொழிக்கும் மாதர்கள் இவைகளிலுள்ள முத்தையே கொழித்தெடுத் தெறிவர் என்று கோசலத்துச் செல்வத்தின் மிகுதியை அழகாகப் போற்றி யுரைக்கின்றார் கவியரசர் கம்பர் பெருமான்.

 

இவ்வாறு செல்வங் கொழித்து, யாதொரு முயற்சியுமின்றி தன்னகத்தேவாழும் மக்களுக்கு வேண்டும் பொருளை நல்கி நாடா வளத்ததாய்க் கோசலநாடு விளங்கியதற்குக் காரணம், அத்தேசத்து மாந்தரின் விருந்தோம்பும்வாழ்க்கையும், மாதர்தம் கற்புடைமையுமே யாகும். நாடென்ப நாடா வளத்தன என்று நாட்டின் இலக்கணத்தை கவியரசர் கம்பருக்கு எடுத்துக் கொடுத்தவள்ளுவரே


 "வித்து மிடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
 மிச்சின் மிசைவான் புலம் "                                  என்றும்
 "தெய்வந் தொழா அள் கொழுநற் றொழு தெழுவாள்
 பெய்யனப் பெய்யும் மழை"    

                             

என்றும் இரண்டு அழகிய குறள்கள் அமைத்துக் கொடுத்திருக்கின்றார்.

 

"விருந்தினர் முகங்கண்டன்ன விழவணி விரும்பும்''


 கோசல தேசத்து மக்கள்


''முந்து முக்கனி யினானா முதிரையின் முழுத்த நெய்யிற்
செந் தயிர் கண்டங் கண்டம் இடையிடை செறிந்த சேற்றில்
தம்தமில் லிருந்து தாமும் விருந்தோடும் தமரினோடும்
அந்தணர் அமுத உண்டி அயில்வறும்”


என்று விருந்தோம்பும் வாழ்க்கையைப் போற்றிப் புகழும் கம்பர் கவிநலம் அழகுடையதே யன்றோ. இவ்வாறு விருந்தோம்பும் வாழ்க்கையுடையராய மக்கள் வாழ்ந்த நாட்டில் மாதம் மும்மாரி தவறாது பெய்தது. ஆகவே வள்ளுவர்கூறிய நாட்டின் இலக்கணத்திற்குப் பொருத்தமாகக் கம்பரது கோசல நாடு இலக்கியமாக அமைந்தது போற்றத் தக்கதொரு பொருளாகும்.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - ஆகஸ்ட்டு ௴

 

 

 

No comments:

Post a Comment