Thursday, September 3, 2020

 நாடகம்

 

'நாடகம்' என்ற சொல்லைக் கேட்ட துணையானே சிலர் அருவருப்புக் கொள்ளுவதையும், வேறு சிலர் அலட்சியஞ் செய்வதையும், மற்றும் சிலர் கேவலமாக நினைப்பதையும் நாம் கண்டும் கேட்டும்வருகின்றோம். ஆனால் உண்மை வழி நோக்கினால், நாடகம் புறம்பழித்தொதுக்கப்படவேண்டிய சிறுமை யுடையதா? அல்லது பாராட்டிப் போற்றக் கூடிய பெருமையுடையதா? என்பது நன்னெஞ்சுடைய அறிவாளர் எல்லோருக்கும் இனிது புலப்படும். எண்ணறிய பிறவிதனுள் பெருதற்கரிய இம்மானிடப் பிறவியைப் பெற்றதன் பயன் என்னையோவெனின்: அறம்பொருளின்பமாகிய மூன்றினால் அடையக்கூடிய இம்மைப் பயன்களை யடைந்து, மறுமையில் வீடுபெறுதலைக் கூடும்படியான முயற்சியை இம்மையிற் செய்தல் ஒன்றேயாம். அங்ஙனம் முயற்சி இம்மையிற் செய்வதற்கு மக்களினுடையஅறியாமை தேய்ந்து அறிவு விரிந்து விளங்க வேண்டுவது மிகவும் இன்றியமையாத தொன்றாம். அறம் பொருளின்பம் வீடாதிய புருடார்த்தங்களை அடைதற்கு அறிவு விருத்தி வேண்டு மெனக் கூறுவதெற்றுக்கோ வெனின், கூறுவம். உலகத்திலே பெருமை என்றும், சிறுமை என்றும், ஒளி யென்றும், இருள் என்றும், உயர் வென்றும், தாழ்வென்றும், ஒன்றனோ டொன்று பெரிதும் முரண்பட்ட இருநிலைகளிருக்கக் காண்கிறோம். அது போலவே பொருள்களுள் மெய்ப் பொருள்க ளென்றும், பொய்ப் பொருள்களென்றும் இரண்டு பிரிவுக ளிருக்கின்றன. இவைகளுள், பொய்ப் பொருள் இதுவெனத் தெரிந்து அதை யொழிக்கவும், மெய்ப்பொருள் இதுவெனத் தெரிந்து அதைத் தழுவவும் நாம் முயற்சித்தல் வேண்டும். ஏனெனில், மெய்ப்பொருள் தெரிந்தாலன்றி நாம் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி அவரைத் தலைக்கூடுதல் சாத்தியமாகாது. அங்கனம். மெய்ப்பொருளறிதற்கு அறிவே சிறந்த கருவியாக விருக்கிறது.

 

"எப்பொருள் எத்தன்மைத் தாயினு மப்பொருள் – மெய்ப்பொருள் காண்பதறிவு' என்றும்,'' எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு'' என்றும் ஆசிரியர் திருவள்ளுவனார் இரண்டு முறை வலியுறுத்திக் கூறியதே மேற்கூறிய உண்மையைப் புலப்படுத்தப் போதிய சான்றா மென்க.

 

இனி அறிவு என்பது ஒவ்வொரு ஆன்மாவினிடத்தும் இயற்கையாகவே அமைந்து கிடக்கிறது. ஆனால், பயிரைச் செழுமையாக வளர ஒட்டாமல்களை மூடிக் கொண்டிருத்தல் போல ஆன்ம அறிவை ஆணவ மென்னும் அறியாமை மலம் மூடிக்கொண் டிருக்கின்றது. களையைக் களைந்துவிட்டால்பயிர் செழித்து வளருவது போல் ஆன்ம அறிவை மூடிக் கொண்டிருக்கும் அறியாமையாகிய ஆணவ மலத்தின் ஆற்றலை அறவே ஒழித்துவிட்டால் இயற்கையாகவே ஆன்மாவினிடம் அமைந்து கிடக்கும் அறிவானது விரிந்து பிரகாசிக்கும். அவ்விதம் திகழ்வதே அறிவு விருத்தி என்று சொல்லப்படும்.

 

இனி, அவ்வறிவு திகழுமாறு யாங்ஙனமெனின், ஆன்றோரா லியற்றப் பட்ட நலம்படு நூல்கள் பலவற்றையும் நுணுகி ஆராய்வதனாலும், பேரறிவுடைய நன்மக்களுடன் அரிய விஷயங்களைப் பற்றி அளவளாவி வருவதனாலும் அறிவு விரிந்து திகழு மென்க.

 

இனி, ஒரு விஷயத்தின் உண்மைப் பொருள் தேர்தற்கு மூன்று வகையான பிரமாணங்கள் நம்முடைய ஆன்றோர் நூல்களில் கூறப்பட் டிருக்கின்றன. நூலாராய்வோரும், அறிவு விருத்தியை விரும்புவோரும், உண்மைப் பொருள் தேர அவாவுறுவோரும் அம்மூன்று பிரமாணங்களையும் அனுஷ்டிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாத தாகும். அம்மூன்று பிரமாணங்களாவன: - (1) ஆகமப் பிரமாணம், (2) அனுமானப்பிரமாணம் (3) பிரத்தியட்சப் பிரமாணம். இவைகளை முறையே சுருதி, யுக்தி, அனுபவ மென்றும் கூறுவார்கள். இம்மூன்றனுள்ளும் ஆகமப் பிரமாணம் பல நூற் பொருளையும் ஒருங்கறிந்த அறிவாளர்களாலும், அனுமானப் பிரமாணம் நூலறிவோடு கூடிய இயற்கை நுண்ணறிவுடையோர்களாலும் கொள்ளப்படுவனவே யன்றிச் சாமானிய மக்களால் கொள்ளப்படுவனவாகா. ஏனெனில், சாமானிய ஜனங்கள் இவ்விரண்டு பிரமாணங்களாலும் பொருள் நிச்சயம் செய்தல் சாத்தியமாகாது. மேலும், இவ் விரு பிரமாணங்களாலும் கொள்ளப்படும் விஷயங்கள் ஒருவருடைய கொள்கைக்கும் மற்றொருவருடைய கொள்கைக்கும் மாறுபட்டிருப்பினு மிருக்கலாம். மற்று, பிரத்தியட்சப் பிரமாணமோ எல்லோராலும் அங்கீகரிக்கத் தக்கதாயும், சாமானிய ஜனங்களுக்கும் புலப்படக்கூடியதாயும் இருப்பதாகும். இந்த மூன்று பிரமாணங்களுள் பிரத்தியட்சப் பிரமாணமே மிகவும், சிறப்புடைத் தென்பது இதனால் புலப்படுகின்றதன்றோ? இவ்வுண்மை உணர்ந்தே நம் செந்தமிழ் மொழியை முதன் முதல் பாகுபடுத்திய அகத்தியமா முனிவர், இயற்றமிழென்றும், இசைத் தமிழென்றும், நாடகத் தமிழென்றும் முப்பிரிவாகத் தமிழைப் பிரித்து இலக்கணஞ் செய்வாராயினார். இம் மூன்றுள் ஒன்றாகிய நாடகத் தமிழின்கட் படுவதாம் பிரத்தியட்சப் பிரமாணம். நிற்க, நாடகத் தமிழைச் சரியானபடி கற்பதற்கு தமிழ்ப்பாஷையின் இயல்பினை அறிந்து கொள்ள வேண்டுவது மீகவும் இன்றியமையாதாதலால் இயற்றமிழை முதலிலும், இசைத் தமிழ் நாடகத்தின் ஓர் அங்கமாக விருத்தலால் அதனை இரண்டாவதாகவும் கூறிக் கடைசியில் நாடகத் தமிழை உரைத்தார்.

 

ஆகவே, நாடகம் மக்களின் அறிவு விருத்திக்கு அவசியம் வேண்டற்பாலதாம் என்றும், இதுபற்றியே நாடகத் தமிழ் என்று அகத்தியர் தனியாக எடுத்துக் கொண்டு அதற்கு இலக்கணஞ் செய்வா ராயினார் என்றும், நம்மனோரிற் சிலர் கருதுகிற படி நாடகம் புறம் பழிக்கப்படுதற்கும், கேவலமாக நினைக்கப்படுதற்கும் உரியதாகாமல் எல்லோராலும் போற்றக்கூடிய மாட்சிமையுடையதாக இருக்கிறதென்றும் ஏற்படுகிறது.

 

இனி, நாடகம் என்பதைப் பற்றிச் சிறிது கூறுவாம். பொருள்கள் இருவகைப்படும். அகத்தைச் சார்ந்து வரும் பொருளெல்லாம் அகப் பொருளென்றும், புறத்தைச் சார்ந்து வரும் பொருளெல்லாம் புறப் பொருளென்றும் கூறப்படும். மக்களின் அகத்தே நிகழும் நிகழ்ச்சிகளெல்லாம் புறத்தே அவர்களுடைய சரீரத்தில் புலப்பட்டுத் தோன்றும் இயல்புடையனவாம். இதுபற்றியே,

 

"அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சம்
கடுத்தது காட்டு முகம்.''


என்று ஆசிரியர் திருவள்ளுவனாரும் கூறுவாராயினர். அங்ஙனம் அகத்தே நிகழும் நிகழ்ச்சிக்குத் தகப் புறத்தே காணப்படும் மெய்ப்பாடுகளை, வீரம், அச்சம், இழிவு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை, சாந்தம் என்னும் நவரசங்களும் பொருந்த சபையோர்களுக்கு நடித்துக்காட்டுதலே நாடகமாம். அங்ஙனம் நடித்துக் காட்டுதலினாலே ஜனங்களுக்குப் பலவகையான நீதிகள்பு லப்படுவதோடு, ஒவ்வொன்றையும் பிரத்தியட்சத்தில் அப்போது தான் பார்ப்பது போல் அவர்களுக்குத் தோன்றுவதால் தாங்கள் கண்ட காட்சியை அடிக்கடி நினைவு கூர்வார்கள். அவ்விதம் நினைவு கூரும் போதெல்லாம் அந்நாடகத்தால் புலப்பட்ட நீதிகளும் அவர்கள் மனத்தில் உடன் நிகழும். இவ்விதம் அடிக்கடி நிகழுவதால் மக்களின் அறிவு விரிந்து திகழவும், அவர்கள் நல்ல வழியிற் செல்லவும் எதுவுண்டாகும். இவ் வுண்மை யெல்லாம் உணர்ந்தே தமிழ் முதுமக்கள் பண்டைக் காலத்திலே நாடக மாடுதலை மிகவும் போற்றி வந்தார்கள். இன்னும் வடமொழியில் தலையாய புலவரெனக் கொண்டாடப்படும் காளிதாசர், "சாகுந்தலம்'', "குமார சம்பவம்" முதலான நாடகக் காப்பியங்கள் இயற்றி யிருப்பதையும், ஆங்கிலபாஷா விற்பன்னரான ஷேக்ஸ்பியர் என்னும் மகா கவிஞர் எண்ணிறந்த நாடகங்கள் இயற்றியிருப்பதையும் உலகம் கொண்டாடுகிறதே!

 

இப்படியெல்லாம் நாடகத்தின் மாட்சியும், பெருமையும் ஒரு புறமமைந்து கிடக்க, அதனைக் கேவலமாயும், அருவருப்பாகவும் ஜனங்கள் கருதக் காரணமென்ன? இக்காலத்திலுள்ள சில போலி நாடக பாத்திரர்கள் நாடக இலக்கணப்படி நாடகம் நடத்தாமல், அவ் விலக்கணத்தினின்றும் வழுவித் தமக்குத் தோன்றியவா றெல்லாம் நடத்துவதன்றோ காரணம்? இங்ஙனம் இவர்கள் நாடகம் நடத்துவதால் அந் நாடகத்தைக் காணச் செல்லும், பாமர ஜனங்களை காமம், குடியாதிய படுகுழிகளில் விழச் செய்வதுடன் நாடகத்திற்கே அகௌரவத்தையும், இழிவையும் உண்டாக்கித் தங்களைப் பிறர் கேவலமாக நினைக்கும் படியாகவுஞ் செய்து கொள்ளுகிறார்கள். நாடக அலங்காரம் சிறிதும் இன்றிப் புராண இதிகாசத்தில் கூறப்படும் கதை வரலாற்றினுக்கு மாறாக எத்தனை நாடகக்காரர்கள் இக்காலத்தில் நாடகம் நடத்தி வருகிறார்கள்! பயனற்றதும், நீதியைப் போதிக்காததுமான நாடகத்தைக் காமாந்த தேகாமான ஆபாசப் பாடல்களால் நிரப்பி நடத்திக் காட்டும் நாடகதாரிகளுக்குக் கணக்குண்டோ! இவர்கள் நாடகத்தைச் சென்று பார்த்து எத்தனை வாலிபர்கள் மோசம் போனார்கள். இன்னும் எவ்வளவுபேர் மோசம் போய்க் கொண்டிருக்கிறார்கள்! கற்பினை அணிகலமாகக் கொண்டு வாழவேண்டிய எத்தனை பேதை மகளிர் தங்கள் ஒழுக்கந் தவறி நாசப்படு குழியில் வீழ்ந்தார்கள்! அம்மம்ம! இவ்வளவு கெடுதிகளுக்குங் காரணமென்ன? நாடகக்காரர்கள் ஒழுங்கு தவறி நாடகம் நடத்துவதல்லவோ காரணம்? ஒழுங்காக முறைப்படி நாடகத்தை நடத்தினால் கெடுதல் உண்டாகச் சிறிதும் வழியே இல்லையன்றோ? அதனால் எவ்வளவோ நன்மை யுண்டாக மார்க்கமிருக்கிறது.

 

இனியேனும், நாடக அமைதிப்படி நாடகங்கள் முறையாகபெற்று வருமென்றே எதிர்பார்க்கக் கூடுமா?  

 

ஆனந்த போதினி – 1931 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment