Thursday, September 3, 2020

 

நாகரிக மயக்கம்

 

உலகத்தில் மனிதர், கண்ணுக்கினிமையும், புதுமையும் தரும் ஆடையாபரணங்களையணிந்தும், அலங்காரங்களைப் புரிந்தும், நாவிற்கினியவும் நூதனமுமான உணவாதிகளை யுண்டும், இன்னும் களிப்பைத்தரும் நுகர்பொருள்களை நுகர்ந்தும், கல்வியிற் சிறந்தும், அழகிய வார்த்தைகளைப் பேசியும் தங்கள் வாழ்க்கையை நடத்தும் இயற்கையே நாகரிகமெனப்படும். இதனாலேயே நாகரிகம்' என்பதற்கு விநோதம், சாதுரியம், புதுமை என்னும் பல பெயர்கள் வழங்குகின்றன. இதனையுடையோர், மனிதரிற் சிறந்தோராகக் கருதப்படுவர். பஞ்சகாவியங்களில் முதன்மை பெற்றதாகிய சீவகசிந்தாமணியில் அறிவு, அழகு, ஆற்றல் முதலியவற்றிற் சிறந்தவனாகிய சீவகனை 'நாகரிகன்' எனக் கூறியிருப்பதால் இது விளங்கும். இத்தகைய சிறப்புக்கள் மிகுதியும் நகர மாந்தர்களிடமே உண்டென்றும், அதனாலேயே அவர்கள் நாகரிகர்களென அழைக்கப்படுகிறார்களென்றும், ஆகவே நாகரிகம்' என்பது 'நகரமாந்தர் ஒழுக்கம்' என்று பொருள்படுமென்றும் சில அறிஞர் கூறுகின்றனர்; வேறு சிலர், நாகர்கள் - (நாகலோகத்தார் அல்லது தேவர்கள்) களிப்பிற் சிறந்த வாழ்க்கையுடையவர்க ளென்றும், அதனால் அவர்களின் வாழ்க்கை போன்ற சிறந்த வாழ்க்கைக்கு நாகரிகம்' எனப் பெயருண்டாயிற்றென்றும் உரைக்கின்றனர். நாகர் சிறந்த வாழ்க்கை யுடையவரென்பது சீவகசிந்தாமணியில் பல விடங்களில் கூறப்பட்டிருக்கின்றது. இதன் கருத்து எவ்வாறாயினுமாகுக; பொதுவாக நோக்குமிடத்து இது, மனிதரின் அழகிய நடக்கை யென்பது துணியப்படும். இது நகரத்துக்கு மட்டுந்தான் உரியதென்பதன்று; நாட்டிற்கும் உண்டு; நகரத்திலுள்ளவர்களாயினும் சரியே நாட்டிலுள்ளவர்களாயினும் சரியே அறிவின்மிக்காரிடத்திலேயே இஃதுண்டாகும்; சாதாரணமானவர்களிடத்தில் உண்டாவதில்லை; அதனால் நாகரிக முடையார் அறிஞரென்றும், அஃதில்லார் அறிவில்லாரென்றும் பலராலும் மதிக்கப் படுவர்.

 

இந்நாகரிகம் அறிஞரால் விரும்பக்கூடியதா யிருத்தலின், அவர்கள் அதனைத் தங்கள் இயற்கையிலும் உண்டாக்கிக் கொள்வார்கள்; அன்னிய நாட்டினரின் ஆசாரங்களைப் பார்த்தும் விருத்தி செய்து கொள்வார்கள். இந்நாகரிகமானது மனித சமூகத்தாருக்கு வேண்டியது அவசியந்தான். நாகரிகமுடைய நாடே உலகத்தில் உயர் வெய்தி விளங்கும்.

 

எனினும் நாகரிகத்தைச் சார்ந்த செயல்கள் எவை யென்பதை ஆராய்ந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டார் நாகரிகமடைவதில் தங்கள் நாட்டியல், குலவொழுக்கம், அறநெறி முதலியவற்றிற்குக் கேடுண்டாகாத செய்கைகளையே எடுத்துக் கொண்டு மற்றவற்றை அறவே ஒழித்துவிடவேண்டும். ஒரு நாட்டிற்குப் புறநாட்டு நாகரிகங்களுள் பொருந்தாதன பலவுண்டு; பொருந்துவன சிலவுண்டு; ஆதலின், புறநாட்டாசாரங்களைக் கைக்கொள்வதிலும் பொருந்துவனகொண்டு பொருந்தாதன தள்ள வேண்டும். அன்னிய நாட்டார் சிலரிடத்தில் சிரத்தையுடன் கல்விகற்றல், விடாமுயற்சியுடன் தொழில் முடித்தல், காரியங்களுக்கென்று நியமித்துக் கொண்ட காலங்களைத் தவறவிடாதிருத்தல், குறித்த ஒரே காலத்தில் உணவுண்ணல், குறித்த நேரத்தில் உறங்குதல், விழித்தல், உடம்பு, உடைகள், வாசஸ்தானம், ஆகாரம் முதலியவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், ஆபரணங்களை நல்ல அமைப்பில் செய்து கொள்ளுதல், அளவறிந்து பேசுதல் முதலிய பல சிறந்த நாகரிகச் செயல்களிருக்கின்றன. இவை போன்றவைகளை நம் நாட்டினர் எடுத்துக் கொள்ளலாம். அவர்களிடத்தில், மதுபானம், சிகரெட், சுருட்டுப் பிடித்தல், பிறர்பார்க்க வொண்ணாத தேகவுறுப்புக்கள் வெளிக்குத் தோற்றும்படி உடையணிதல், பெண்களும் ஆண்களும் கைகோத்தாடுதல், பெண்கள் தனியே பல விடங்களிலும் சஞ்சரித்தல், எந்த ஆடவரோடும் தனித்துச் செல்லுதல், தனித்துப் பேசுதல், பெண்ணும் ஆணும் கைகோத்துக் கொண்டு தெருவில் நடத்தல், தலை முடிகளைப்பல விகாரங்களாக வெட்டுதல், இஞ்சு மீசை வைத்தல் முதலிய எண்ணிறந்த தீய வொழுக்கங்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை நம் நாட்டவர் கனவிலும் கருதலாகாது. இங்ஙனம் பலவற்றையும் பகுத்துணர்ந்து தங்கள் நாட்டியலும் குல வொழுக்கமும் குன்றாது தீயன வொதுக்கி நல்லன கொண்டு நடப்போரே நாகரிகர்களெனப் படுவார்கள். மற்றையர் அநாகரிகராவர். பொருந்தாத புறநாட்டாசாரங்களை நாகரிகமெனக் கொள்ளுதல் நாகரிக மயக்கமெனப்படும்.

 

இங்குக் கூறியபடியே நம் நாட்டில் சில விவேகிகள், நம் நாட்டியற்கை குன்றாத விதத்தில் நாகரிகமடைந்து சிறப்புற்று வருகின்றார்கள். வேறு பலரோ, நம் நாட்டிற்குப் பொருந்தாத அனாசாரமானக் கேடான - செயல்கள் எத்தனையுண்டோ அத்தனையும் நாகரிகச் செயல்களென மயங்கி மேற்கொண்டு மக்கட்டன்மையை விடுத்து, மாக்கட்டன்மை பூண்டு தேசத்திற்கே இழிவுண்டாமாறு செருக்கித் திரிகின்றனர். அந்தோ! இவர்களால் உலகம் கெட்டிருக்கும் கேட்டை எழுதுதற்குக் கையும் மனமும் நடுங்குகின்றன : சிலர், தங்கள் நாட்டியலை மறைத்து அன்னிய நாட்டார் போல் உடையணிந்து வேடத்தை மாற்றிக் கொள்ளுகிறார்கள்; தலைமயிரைப் பல விகாரங்களாக வெட்டி வளைத்துத் திருத்தி முருக்கி வித்தியாசமாகச் சின்னா பின்னப்படுத்துகின்றனர்; நாசிக்கு நேரேஈ ஒட்டினது போல் இஞ்சு மீசை வைத்து முகத்தை விகாரப்படுத்துகின்றனர்; தங்கள் மதக்குறிகளாகிய விபூதி தரித்தல், நாமமிடல், சந்தன மணிதல் முதலியவற்றை அறவே யொழித்து இன்ன மதத்தினரென்று பிறர் உணர்ந்து கொள்ளாத விதத்தில் உலவுகிறார்கள்; அறநெறிகளை அகற்றி விடுகின்றனர்; தெய்வத்தைச் சிறிதும் சிந்திப்பதேயில்லை; கோவில் பக்கம் திரும்பிப் பார்ப்பதுமில்லை; பெரியோர்க்கு வணக்கம் புரிவதில்லை; ஐரோப்பியரைப் போல் போலி வேடந்தரிந்துக் கையில் வாக்கிங் ஸ்டிக் (உலவு கைக்கோல்) பிடித்துத் தலை நிமிர்ந்து ஒய்யார நடை நடந்து எதிரில் பெரியாரைக் கண்டால் மரியாதை செய்வதற்குப் பதிலாக இடக்கை ஆட்காட்டி விரலை நெற்றியில் வைத்து அவமரியாதை செய்து செல்கின்றனர்; படுக்கையிலிருந்த படியே பல் துலக்காமல் காபி யருந்துகின்றனர்; சதா சர்வகாலமும் பீடி, சிகரெட் முதலியவைகளைக் கொளுத்தி வாயில் வைத்துப் புகையை யிழுத்து விட்டுக் கொண்டு திரிகின்றனர்; (திருவிழா முதலியவை நடக்கும்போது ஜனங்கள் திரண்டு செல்லும் தெருக்களில் ஒரு வீட்டின் மேல் ஏரி நின்று பார்த்தால் மனிதர் வாயிலுள்ள சிகரெட் பீடிகளின் நெருப்பு அக்கூட்டத்தினிடை யிடையே மிகநெருக்கமாக ஆகாயத்தில் நக்ஷத்திரக் கூட்டங்கள் தெரிவது போல் விளங்குவதைக் காணலாம்; இஃதொன்றினாலேயே அநாசார நாகரிக மயக்கம் எவ்வளவு பரவி யிருக்கிறதென்பதை நன்குணரலாம்).

 

சிலர் மதுபானம் முதலிய லாகிரி வஸ்துக்களை அதிகமாக உட்கொண்டு தலை விரித்தாடுகின்றனர்; அனாவசியமாகக் காப்பிக் கிளப்புகளில் புகுந்து இருக்க விடமில்லாமலும் நெருங்கிப் பெருமைக்குத் துட்டைச் செலவழித்து கஷ்டத்திற்குள்ளாகிறார்கள்; அடுத்த தெருவுக்குப் போவதற்கும் துடித்த மோட்டார்களில் ஏறுகிறார்கள்; விரைவில் ஒழிந்துபோம் புற நாட்டுப் பொருள்களை வாங்கி வீட்டில் நிரப்பி வறிஞராகின்றனர்; நூதன முறையில் கல்வி கற்பதாகப் பூர்த்தியற்றதும், பிழை மலிந்ததுமாகிய கல்வியைக் கற்றுச் செருக்கி முறைப்படி கற்றாரை அவமதிக்கின்றனர்; தங்களுக்கு ஒன்றுமே தெரியாத விஷயங்களில், தவறான அபிப்பிராயங்களை உயர்ந்த அபிப்பிராயங்களாகக் கூற முற்படுகின்றனர். எழுத்துப் பிழையின்றி எழுதத் தெரியாதவர்களும் ஒரு வியாசத்தில் உள்ள உட்கருத்தை உணராமல், 'இதென்ன பாட்டிகதை' என்று உயர்ந்த பத்திரிகைகளையும், பெரியார் உரைகளையும் அவமதிக்கின்றனர். பெண்மக்கள் விஷயங்களிலும் முறை கேடான ஒழுக்கங்களைப் புகவிட்டு வருகின்றனர். அறியாத இளம் பெண்களைத் தனியே எங்கும் சஞ்சரிக்க விடுகின்றனர்; வண்டியோட்டுவோர் முதலிய ஆடவருடன் தனியே அவர்களை வண்டியில் எங்கு மனுப்புகின்றனர்; வாலிப வயதுள்ள ஆடவர்களை வீட்டுச் சமையல் வேலைக்கமர்த்திப் பருவமங்கையர் தனித்திருக்கு மிடங்களில் சஞ்சரிக்கச் செய்கின்றனர்; இன்னும் பெண்களுக்குப் புத்தியை மயக்கும் நாடகப் பாடல்களைக் கற்றுக் கொடுக்கின்றனர்; நாடகம் பயிற்றுவிக்கின்றனர்; அவர்கள் நாடகம் நடத்துமாறு செய்தும் பார்த்துக் களிக்கின்றனர். புருஷரைப் போலவே பெண்களும் சுயேச்சையாகப் பல துறைகளில் இறங்க வேண்டுமென்று முயலுகின்றனர். இவற்றின் பயனாகப் பெண்மணிகளிற் சிலரும் தனியே தூரதேசப் பிரயாணம் செய்கின்றார்கள்; எந்த ஆடவரோடும் கூசாமல் வார்த்தையாடுகின்றார்கள்; உடல் தெரிய ஆடையணிகின்றார்கள்; கழுத்துக்குக் கீழ் முன்பக்கமும் பின்பக்கமும் தெரியும்படி இரவிக்கையணிகிறார்கள்; சங்கீதம் கற்றுக் கச்சேரி நடத்துகிறார்கள்; நாடகமும் ஆடுகின்றார்கள்; இன்னும் எத்தனையோ விநோதச் செயல்களுண்டு; அவை விரிக்கிற் பெருகும்.

 

இவைகளே பெண்களின் விருத்திக்கும் தேச க்ஷேமத்திற்கும் உரிய மார்க்கங்களென்றும், இவற்றை மறுப்போர் நாகரிகம் தெரியாத கருநாடகப் பேர்வழிகளென்றும் சில நூதன விவேகிகள் கூறுவர். இவை ஒருபோதும் நன்மையை யுண்டாக்கமாட்டா. பெண்களும் தேசமும் மேன்மையடைய வேண்டுமானால் பெண்மக்கள் உயர்தரக் கல்வி பயின்று நல்ல சீலத்தையும், குடும்பம் நடத்தும் இயற்கைகளையும், நம் தேசாசாரங்களையும், தெய்வ வழிபாடு முதலியவற்றையும் நன்குணர்ந்து அறநெறியிற் பிறழாது குடும்ப காரியங்களை ஏற்று நடத்திவர வேண்டும். தங்கள் ஒழுக்கங் கெடாது தமக்கென ஏற்பட்ட தொழில்களைச் செய்ய வேண்டும். இவையே அவர்களுக்குச் சிறப்பைத் தருவனவாம். இவற்றை விட்டுப் புறநாட்டாசாரங்களைப் பார்த்து அன்னியர் போல் நடக்கத் தொடங்கி நம்நாட்டாசாரங்களை விடுத்து எங்கும் வெளியேறித் திரிவதாலும், ழுக்க ஈனமான வேறுசில துறைகளிற் புகுவதாலும் சிறப்புண்டாகமாட்டாது. இவற்றாலுண்டாகும் தீங்குகளுக்களவில்லை. ஸ்திரீகள் தனித்துச் சுயேச்சையாக வெளியேறித் திரிதல், உடல் தெரிய உடையணிதல், நாடகமாடல் முதலிய தீய வொழுக்கங்களால் என்ன தீமை விளையுமென்பதை, புத்திமான்கள் ஆழ்ந்து யோசிப்பார்களாயின் அது அவர்களுக்கு விளங்காமற் போகாது. அனுபவமாக நடந்து வரும் சில விஷயங்களாலும் தெரிந்து கொள்ளலாம்.
 

மனத்தைப் போன போக்கில் விட்டுத் திருப்தியடையும் சிலர், தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு இவ்வாறு அநாகரிகச் செயல்களை யெல்லாம் நாகரிகமென வாதித்துப் பொது ஜனங்களைத் தங்கள் வழிக்குத் திருப்பித் தீய வொழுக்கங்களைப் பரப்பி வருகின்றனர் மேல்நாட்டுத் துராசாரங்கள் வந்து இங்கே தலைக்காட்டுவது இவர்களுக்கனுகூலமா யிருக்கின்றது. அவற்றைப் பார்த்தே இவர்களும் அவற்றின் வழியிற் புகுகின்றனர். மேல்நாட்டுப் பெண்கள் மிகுதியும் நாடகமாடுவதைப் பார்த்து நம் நாட்டுப் பெண்களும் இப்பொழுது நாடகத் தொழிலில் அதிகமாய்ப் புகுந்து வருகின்றார்கள். சில வருடங்களுக்கு முன் நாடகத்தில் பெண்களே ஆக்டராக இல்லாமலிருந்தார்கள்; இப்பொழுதோ ஒவ்வொரு கம்பெனியிலும் பெண்களே மலிந்திருக்கின்றனர். அதிலும், நாகரிக மயக்கம் அதிகமாக அதிகமாக கண்ணால் பார்க்கத் தகாதனவும், வாயால் சொல்லத் தகாதனவுமாகிய செய்கைகளெல்லாம் நடந்து வருகின்றன. நாடகப் பெண்கள் உடல் தெரியும் மெல்லிய உடையணிந்து, திருடனாகவும், அரசனாகவும் வேடந்தரித்து வரும் ஆண்மக்களுடன் அருவருப்பான சம்பாஷணைகள் செய்வதும், எதிர்த்தாடுவதும், கைகோத்தாடுவதும் கேட்கவும், பார்க்கவும் கூடாதனவா யிருக்கின்றன.
 

இப்பொழுது புற நாடுகளில் நாகரிக முதிர்ச்சியால் இன்னும் எத்தனையோ ஆபாசச் செய்கைகள் தோன்றி வருகின்றன; கண்ணால் பார்க்கத்தகாத பயாஸ்கோப் (புகைப்படம்) காட்சிகள் நடைபெற்று வருகின்றன; சமீபத்தில், அமெரிக்காவின் தலைநகராகிய நியூயார்க்பட்டணத்தில், எரல்கரோல்' என்னும் பிரபு ஒரு நாடகசபை போஷகராயிருப்பதாகவும், அவர், தம்முடைய பிறந்ததினக் கொண்டாட்டத்தன்று நாடகமேடையில், இராக்காலத்தில் 17 – வயதுள்ள ''மிஸ் -ஜாம்ஸ் ஹாலி " என்ற அழகிய நாடகப் பெண்ணை, திகம்பரி - நிர்வாணி - யாக்கி 'ஷாம்பொயின்' என்ற சாராயமுள்ள தொட்டியில் இறங்கிக் குளிக்கச் செய்து, அங்கிருந்த ஆடவர்களை வரிசையாக நிறுத்தி, அந்தச் சாராயத்தை ஒவ்வொருவருக்கும் ஊற்றிக்கொடுத்து, அந்தப் பெண்ணின் அழகை வர்ணித்துப் பிரசங்கம் புரிந்து, 'இவளுடைய அழகை நினைத்துப் பருகுங்கள்' என்று சொன்னதாகவும், அவர்கள் அவ்வாறே குடித்ததாகவும், அந்தப் பெண் தன்னை அவ்வாறு அவமானஞ் செய்ததற்கு அவர்மீது வழக்குத் தொடுத்திருப்பதாகவும், விசாரணை வெகு விநோதமாக நடந்து வருவதாகவும் ஒருவர்த்த மானம், 2 - 7 - 1926. " சுதேசமித்திரன்” 2 - ம் பக்கத்தில் "சாராயத் தொட்டியில் ஸ்நானம், ஒரு நாடகப் பெண்ணின் ரஸமான வாக்குமூலம்" என்ற தலைப்பின் கீழ் வெளிவந்திருப்பதைப் பலர் பார்த்திருக்கலாம். இதைக் கொண்டே அன்னிய நாட்டு நாகரிகங்களினடியாக எவ்வளவு ஒழுங்கீனச் செய்கைகள் உற்பத்தியாகின்றன வென்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளலாம்.
 

இத்தகைய அனாசாரங்களை யெல்லாம் நம் நாட்டவர் நாகரிகமென மிக்க ஆவலுடன் வரவேற்பவரா யிருக்கின்றனர். ஆதலின், இனி இங்குக் குறிப்பிட்ட மானக் கேடான செய்கை போன்றவைகளும் நம்மவரிடம் வந்து நுழைந்து கொள்ளும் காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் வந்துவிடவும் கூடும். இத்தகைய ஒழுங்கீனச் செய்கைகளால் பல மானக் கேடுகள் நேரினும் நாகரிக மயக்கந் தலைக் கேறியவர்கள் அவற்றை வெளிக்குக் காட்டாமல் மறைத்துக் கொண்டு, அவற்றால் பற்பல நன்மைகள் விளைவது போலப் பேசி இந்த அனாசாரங்கள் மேன்மேலும் விருத்தியடையும் படி செய்து வருகின்றனர். இந்த அனாசாரங்களை யொழிக்காவிடில், நம் நாடு, அன்னியர் பரிகசிக்கும் படி அநாகரிகப் படுகுழியில் ஆழ்ந்து மிக்க கேவல நிலையை அடைந்து விடுமென்பதில் ஐயமில்லை. இவற்றை நீக்க முயலுவாரில்லை. நம் தேயப் பெரியார் செய்த உயரிய அறநெறிகளைப் போதிக்கும் நூல்களில் எங்கோ ஓரிடத்தில் இடக்கரான சொல் வந்துவிட்டால் அதைப் படிப்பவர் கெட்டு விடுவார்களென்று அந்த நூல்களையே ஒழிக்க வழிதேடிய அதிகாரவர்க்கத்தினராகிய பெரியார்களும்கூட நம் நாட்டு நாடக மேடைகளில் நடக்கும் ஆபாசங்களை அகற்ற முயலவில்லை. அது குற்றமாகத் தெரிந்த இவர்களுக்கு இது நலமாகத் தோற்றுகிறது போலும்! என்ன காலவிகற்பம்!

 

தேசமுன்னேற்றத்தை விரும்பும் சகோதரர்களே! சகோதரிகளே! நம் நாடு நலமுற வேண்டுமானால் நாகரிக மயக்கத்தால் நாடகங்களில் நடக்கும் அருவருப்பான செய்கைகளையும், முன்னுரைத்தவாறு இதரவகைகளில் விருத்தியாகி வரும் அனாசாரங்களையும் ஒழித்து உண்மையான ஒழுங்கான நாகரிகம் பெற்று வாழ முயலுங்கள்; கல்வி, கைத்தொழில், விபசாயம், வியாபாரம், முதலியவற்றை விருத்தி செய்யுங்கள்; நம் தேசாசாரப்படி உயர்ந்த ஆடையாபா ணங்களை யணிந்து, இனிய அனுபவங்களை அனுபவித்து, அறநெறியைக் கடைப்பிடித்துச் சீரும் சிறப்பும் பெற்று வாழ்வீராக. சீலம்குறையாமல் வாழ்வதே சிறந்த நாகரிக வாழ்க்கையாகும்.


 ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஆகஸ்ட்டு ௴

 

 

No comments:

Post a Comment