Thursday, September 3, 2020

 

நன்னடக்கைக்குரிய விதிகள்

 

1. ஈசுவரன் உண்மைக்கு உகறவிடமாயிருக்கிறார்; ஆதலின் எப்போதும் உண்மையே பேசு; உண்மையே தைரியத்தைத் தரும்; நீ பேசும் வார்த்தைக்ளில் சந்தேகம் உண்டாகும்படி பேசாதே; பொய்யன் என்று தெரிந்து விட்டால் நீ எவ்வளவு உண்மையான வார்த்தைகளைப் பேசின போதிலும் பிறர் உன்னை நம்பமாட்டார்கள்.

 

2. வீண் சத்தியங்கள் செய்து உன் நாவைப் பாழாக்காதே; பொல்லாத வார்த்தைகளைப் புகலாதே; கெட்டவர்களிடம் சவகாசமும் செய்யாதே; பள்ளியிலும், வீதியிலும், வீட்டிலும் அமைதியாகவே யிரு.

 

3. அன்னியர்களிடம் மரியாதையாகப் பேசு. உன்னுடைய உபாத்தியாயர், பெற்றார், பந்துமித்திரர் ஆகிய இவர்களிடம் மிகவும் கீழ்ப்படிந்தவ னாய் அன்புடனே யிரு.

 

4. ஏதாவது தப்பான காரியம் செய்துவிட்டால், தெரியாமல் செய்துவிட்டேன் என்னை மன்னியுங்கள் என்று கூறு. அதை விட்டுவிட்டு "நான் செய்தது சரி " என்று எல்லோரையும் மறுத்து, எதிர்த்துப் பிடிவாதம் செய்யாதே.

 

5. உனக்கு யாராவது உதவி செய்தால் மலர்ந்த முகத்துடன் உன் அன்பார்ந்த வந்தனத்தை அவர்களுக்குச் செலுத்து.

 

6. உன்னுடைய மூத்தோர்களையும் உபாத்தியாயர்களையும் வழியில் கண்டால் பணிவுடன் வணங்கு.

 

7. திக்கற்றவர்களையும் உன்னை விட ஏழையாயிருப்பவர்களையும் அவமதிக்காதே. செல்வமானது சூரியனைப்போல் தோன்றி மறைந்துவிடும். எனவே நீயும் இந்நிமிஷமே ஏழையாகிவிட்டாலும் விடக் கூடும் என்பதை நினைத்துக்கொள்.

 

8. வழியில் வருபவர்கட்கு அதிலும் பெரியோர்கட்கு வழிவிட்டு நட. அவர்களின் மேல் மோதிக்கொண்டு போகாதே.

 

9. உன்னால் பணத்தைக்கொண்டு தருமம் செய்யமுடியாவிட்டாலும் கூடிய வரையில் (மனம் வாக்கு காயங்களால் ஆகிய உதவியாவது பிறருக்குச் செய்.

 

10. ஒருவருடைய மனதையும் புண்படும்படி செய்யாதே. உன்னுடைய சுக துக்கங்களைப் போலவே ஏனையோருடையதும் உண்டு என்பது நினது ஞாபகத்திலிருக்கட்டும்.

 

11. உனக்குப் பிறர் எம்மாதிரியான நன்மைகளைச் செய்ய வேண்டுமென்று நீ கருதுகிறாயோ அவற்றை நீயே முதலில் அவர்களுக்குச் செய்து காட்டு.

12. உன்னால் ஒருவர் கேட்கும் உதவி செய்ய முடியாவிட்டால், நன்முகத்துடனே அவர்க்கு உனது காரணத்தைக்கூறு; கோபமுகத்தை யாரிடத்தும் காட்டாதே.

 

13. கோபத்தைச் சாந்தத்தினாலும் தீமையை நன்மையாலும், லோபித்தனத்தை ஈகையாலும் வெல்வதற்கு முயற்சி செய்.

 

14. பிறர் ஒருவிஷயம் பேசும்போது நடுவில் குறுக்கிட்டுப் பேசாதே. அவர்கள் பேசி முடியும் வரையில் பொறுத்திருந்து பிறகு உன் அபிப்பிராயத்தைத் தாழ்மையுடன் தெரிவி.

 

15. எந்தெந்தக் காலங்களில் எந்தெந்தத் தொழில்களைச் செய்யவேண்டுமோ அவற்றை அந்தந்தக் காலங்களிலேயே குறைவறச் செய்.

 

16. அற்பமான காரியம் என்று ஒன்றையும் அலக்ஷியம் செய்யாதே; நீ செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் செவ்வனே அறிந்து செய்.

 

17. ஒருவர் ஏதாவது எழுதும்போது அதை மறைவாகவிருந்து வாசிக்காதே. அன்னியருடைய விஷயத்தில் நீ அனாவசியமாகத் தலையிடாதே.

 

18. உன்னுடைய உடைகள் மட்டமானதாக இருந்தாலும் அவைகளை அழுக்கில்லாமல் வைத்துக் கொள்; உடைகளிலிருந்து ஒருவனுக்கு கௌரவம் கிடைக்காது; தாழ்ந்த உடைதரிப்பவன் யோக்கியனாகவும் உயர்ந்த உடைதரிப்பவன் அயோக்கியனாகவும் இருக்கக்கூடும்.

 

19. உன் நிலைமைக்குத் தக்கபடி ஒழுங்கான உடைகளை அணிந்துகொள். அதிகவிலையுள்ள உடைகளே தரிக்க வேண்டுமெனு மவசியமில்லை.

 

20. தினந்தோறும் குளித்து சுத்தமாயிரு; சுத்தமான தேகத்துடனிருந்தால் நல்லகுணமும் தானே அமையும்; சுத்தமாக இருப்பவரை வியாதியும் கிட்டாது.

 

21. எப்போதும் மலர்ந்த முகத்துடனேயிரு. இருப்பதைக்கொண்டு திருப்தியடையும் குணத்தைப் பெறு.

 

22. களவு, கபடு, சூது ஆகிய இவற்றைக் கனவிலும் கருதாதே. உன் சொத்தின்மீது உனக்கெவ்வளவு பிரியமோ அப்படியே அன்னியருடையதையும் கருது.

 

23. எது நல்லதென்று அறிவாளிகள் கூறுகிறார்களோ அதையே செய்; நீ செய்யும் உதவிக்காக மற்றவர்களிடத்திலிருந்து யாதொரு பிரதிபயனாவது இனாமாவது எதிர்பாராதே.

 

24. பகட்டுடைய வாழ்வை விட்டுத் தேசபக்தியுள்ளவனாய் மறதியின்றி உன் கடமைகளைச் சரிவரச்செய்.

 

25. எல்லா உலகங்களையும் ஆக்கி, அளித்து, அழிக்கின்ற சர்வேசுவரனாகிய கடவுளை என்றும் மறவாதே.

 

அவர் உருவுள்ளவராகவும் உருவில்லாதவராகவு மிருக்கிறார். ஆகவே தினம் கோவிலுக்குப்போய் நீ சித்தசுத்தியுடன் உன் குற்றங்களை மன்னிக்கும் படிக்கும் நல்ல அறிவைக் கொடுக்கும்படிக்கும், அவரை அதிக அன்புடன் பிரார்த் தித்துக்கொள். உன்னுடைய எல்லா நலங்களுக்கும் அவரே காரணகர்த்தர் என்பதை என்றும் மறவாதே.


 தி. நித்தியானந்தம், உபாத்தியாயர்,
 Board Girls'School, Rayakota.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - செப்டம்பர் ௴

 



 

No comments:

Post a Comment