Thursday, September 3, 2020

 

நன்மைக்கும் தீமைக்கும் நாமே காரணம்

உலகத்தில் மக்களாய்ப் பிறந்த நாம், மிகுதியும் விரும்புவது நன்மையே. அப்படியிருந்தும் நமக்கு நன்மையும் தீமையும் கலந்தே வருகின்றன. இப்படி வருதற்குக் காரணம் நாமே. இங்குள்ள பற்பல மார்க்கங்களையும் ஆராய்ந்து நன்மார்க்கத்தைக் கடைப்பிடித் தொழுகுவோர் நன்மையையே அடைகின்றனர்; தீயமார்க்கத்தைப் பின்பற்றி நடப்போர் தீமையையே அடைகின்றனர். நன்மார்க்கம், கெட்டமார்க்கம் ஆகிய இரண்டையும் பின்பற்றுவோர் நன்மை தீமை என்னும் இரண்டையு மடைகின்றனர்.

 

புண்ணிய பூமியாகிய நம் நாட்டில் நாம் கஷ்டமின்றி மகிழ்ச்சியுடன் ஜீவிப்பதற்கு எத்தனையோ மார்க்கங்களிருக்கின்றன. அவற்றுள், விவசாயம், வியாபாரம், கைத்தொழில் முதலியன மனிதர்க்குச் செல்வத்தையும், சிறப்பையும், சௌக்கியத்தையும் உண்டாக்கக் கூடியன. இவற்றினுட் பிரிவாகக் கிளைக்கும் எத்தனையோ ஆயிரக் கணக்கான தொழில்கள் இருக்கின்றன; அவையெல்லாம் மனிதர்க்கு மகிழ்ச்சி மிக்க வாழ்வை விருத்தி செய்யக்கூடியனவே; இதைப்போல் இன்னும் எத்தனையோ உலகங்களையும் காப்பாற்றக் கூடியவையே.

 

விவசாயத்தில், உணவுப்பொருள்களாகிய நெல், கேழ்வரவு, சோளம், கம்பு, தினை, சாமை, துவரை, உழுந்து, கடலை, மொச்சை முதலிய தானிய வகைகளும், கரும்பு, காய்கறிகள், கனிகள், கிழங்குகள், அறுசுவைப் பொருள்கள் முதலியவைகளும், ஆடைக்கும் யோகமாம் பருத்தி, பட்டு, நார் வகைகள் முதலியவைகளும், வியாபாரத்துக்குரிய பற்பல பொருள்களும் உற்பத்தியாகின்றன.

 

வியாபாரத்தில், உள்நாட்டுச் சரக்குகளை இலாபத்திற்கு வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதாலும், வெளிநாட்டுச் சரக்குகளை உள்நாட்டில் இலாபத்திற்கு இறக்குமதி செய்வதாலும், ஒரு நாட்டுப் பொருளை மற்றொரு நாட்டிற்குக் கொண்டு போய் இலாபத்திற்கு விற்பதாலும், உள்நாட்டிலோ உள்ளூரிலோ உள்ள பொருள்களைச் சில்லறையாக வாங்கி இலாபத்திற்கு விற்பதாலும், இன்னும் பற்பல விதங்களாலும் அவரவர் செய்யும் வியாபார அளவிற்குத் தக்கபடி ஊதியங் கிடைக்கும்.

 

கைத்தொழிலில், உள்நாட்டிற்கும், வெளிநாட்டிற்கும் மனிதர்க்கு இன்றியமையாதனவாகிய பற்பல பொருள்களை உற்பத்தி செய்து விற்று மிகுந்த பொருள் தேடலாம்; அவற்றுள் சொந்தத்துக்கு வேண்டியவற்றையும் உபயோகித்துக்கொள்ளலாம்.

 

இவற்றுள், விவசாயம், ஒரு வித்து எத்தனையோ நூற்றுக் கணக்கான தானியங்களைத் தரக்கூடிய விசேஷ இலாபகரமான தொழில். வியாபாரம் முதல்வைத்த பொருளுக்கு மேல் எத்தனையோ மடங்கு அதிகமான திரவியலாபத்தைத் தரக்கூடியது; கைத்தொழிலும் அத்தகையதே. இவற்றைச் செய்யத் தக்க முறைப்படி புத்தியுடன் ஜாக்கிரதையாகச் செய்துவந்தால் நிச்சயமாக இவற்றால் அதிகரித்த செல்வத்தை அடையலாம்; உலக அனுபவத்திலும் குறைவின்றிச் சௌக்கியத்தை அடையலாம்; உயர்ந்த தான தருமங்களைச் செய்து மறுமை யின்பத்தையும் பெறலாம். இத்தொழில்களில் ஒன்றைக் கிரமப்படி செய்து குடும்ப வாழ்க்கையையும் ஒருவன் ஒழுங்கான முறையில் நடத்தி வருவானாயின் அவன், இம்மை, மறுமை ஆகிய இரண்டிடங்களினும் மேன்மையையே அடைவான்.

 

உத்தியோகம் ஒருவகையில் மனிதர் ஜீவிப்பதற்கேதுவாயிருப்பினும், பொருள் விருத்தி செய்வதற் கேதுவில்லாததாகும். இதில் எவ்வளவு ஊதியங் கிடைப்பினும் இதன் அந்தஸ்திற்குத் தக்கபடி இடம்பமான உடை, வாகனம், உணவு, வாசஸ்தானம் முதலியவற்றிற் செலவாகிவிடும்; பணம் மீதியாவது அருமை. அதிகரித்த சம்பளமுடைய சிலரே கொஞ்சம் ஐசுவரியம் சேர்த்துவைக்க முடியும்.

 

இவற்றுள், மேற்கூறிய விவசாயம், வாணிகம், கைத்தொழில் ஆகியவற்றையும், அவற்றினுட் பிரிவான பற்பல தொழில்களையும் கைக்கொள்வோர் செல்வத்திலும் சௌக்கியத்திலும் சிறந்து விளங்குவார்கள்; அவற்றைப் புறக்கணிப்போர் கஷ்டநஷ்டங்களுக்குள்ளாவர். மேல்நாடுகளெல்லாம் மேற்கூறிய தொழில்களில் பயனுடைய தொழில்களையே அறிந்து செய்து செல்வத்திற் சிறந்து மேலோங்கி மேல்நாடுகள்' என்னும் தங்கள் பெயர்க் காரணத்தை மெய்ப்பித்து நிற்கின்றன. நம்முடைய நாடோ, பெரும் பயன் தரும் அத்தகைய தொழில்களையெல்லாம் கைநழுவவிட்டுப் பயனற்றவைகளைக் கைக்கொண்டு தாரித்திரமுற்றுக் கீழ்மையடைந்து, 'கீழ்நாடு' என்னும் தன் பெயர்க்காரணத்தை விளக்கி வருகின்றது. அதனால் நம் நாட்டினர் பிற்போக்குடையவர்களாய்ப் பற்பல தீமைகட்குள்ளாகி வருகின்றனர். இதற்கு, சிறந்த கொள்கைகளை அனுசரிக்காத நம்மவர்களே காரணமின்றி வேறொரு காரணமு மில்லை.

 

நம்மவர், திருப்தியான வாழ்க்கையை அடைதற்குரிய விவசாயம் முதலிய எத்தனையோ மார்க்கங்களிருந்தும் அவற்றைக் கவனிப்பதில்லை; வறுமையும் துயரமும் வளர்ந்தோங்கும் இடம்பமிக்க காரியங்களையே செய்து இடர்ப்படுகின்றனர்: எல்லோருமே - கிராமாந்தரங்களிலுள்ளவர்களும் - நகரங்களில் நெருங்கி, அதிகப் பணத்தைச் செலவிட்டு ஆங்கிலங்கற்று உயர்தர பரீக்ஷைகளில் தேறி, உத்தியோக பதவிகளில் ஏறி, நாகரிக வாழ்க்கை வாழுதற்கே இரவும் பகலும் இடைவிடாது முயலுகின்றனர். இதனாலுண்டாகும் தொல்லைகள் பல: வருஷந்தோறும் ஆங்கில பரீக்ஷையில் தேறிவருபவர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களாயிருக்கின்றனர். முன்னரே உத்தியோக ஸ்தானங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவர் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கப் புதியவராக வருகிறவர்களுக்கு எங்கே இடங் கிடைக்கும்? முன்னிருந்தவர்கள் மேலுலக யாத்திரை செய்யவேண்டும்; அல்லது பென்ஷன் வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படியானால் மாத்திரமே சிலருக்கு இடங்கிடைக்கும். அவ்வாறே எங்கோ சிற்சில ஸ்தானங்கள் காலியாகின்றன; அப்படியாவது தெரிந்தவுடன் ஒவ்வொன்றிற்கும் புதிதாகப் படித்து வெளியேறியவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் அப்ளிகேஷன் அனுப்புகிறார்கள். அவர்களில் ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்று கிடைக்கின்றது. மற்றவர்கள் உத்தியோகந் தேடி அலைந்து திரிந்து பத்தோ பதினைந்தோ சம்பளம் கிடைக்கும்படியான ஏதேனுமொரு தாழ்ந்த வேலையில் அமருகிறார்கள்; அந்தச் சம்பளம் அவர்களுடைய ஜீவனத்திற்குப் போதுவதில்லை; அதனால் அவர்கள் வருவதை நம்பி உள்ளதை இழந்து உள்ளம் கலங்குகிறார்கள். இன்னும் சிலர் ஒரு வேலையும் அகப்படாமலும், நாட்டுப்புற வாசஞ் செய்ய இஷ்டமில்லாமலும் சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டாவது எதை எதையோ செய்தும், எங்கெங்கோ அலைந்தும் திரிகிறார்கள்.

 

உத்தியோகம் பெற்றவர்கள், உயர்ந்த சம்பள முடையவர்களாயினும் விருதாச் செலவு செய்து வறிஞராகும் வழியில் நடக்கிறார்கள். நாகரிகமென்னும் மயக்கந் தலைக்கேறி அன்னிய நாட்டாசார வலையிலகப்பட்டு மேல்நாட்டாரைப் போல் நடிக்கத்தொடங்கி உடையிலும், ஒய்யார நடையிலும், உணவிலும், உன்னத மாளிகை வாசத்திலும், கேட்டிற்கேதுவான மோட்டார் சவாரியிலும், மயிர் வெட்டிலும், இஞ்சு மீசையிலும், காப்பிக்குடியிலும், பீடி, சிகரெட்டிலும், இன்னும் பற்பல இடம்ப காரியங்களிலும், வரவுக்குமிஞ்சிச் செலவு செய்து கடன்பட்டு முடிவில் கஷ்டப்பட்டுக் கலங்குகிறார்கள்.

 

நாட்டுப்புறங்களில் ஆங்கிலம் பயிலாமல் பயிர்த்தொழில் செய்து கொண்டிருந்தவர்களுள்ளும் பலர், நகரத்தில் நாகரிக வாசஞ் செய்ய விரும்பி நிலங்களைப் பாழடையப் போட்டுவிட்டு வந்து சேவக வேலை கிடைத்தாலும் போதுமென்று சிறுசிறு வேலைகளில் அமர்ந்து இரண்டுங் கெட்டவர்களாய்க் கஷ்டமடைகிறார்கள்.

 

சிலர், உத்தியோகத்தை விரும்பாமல் வியாபாரம் கைத்தொழில் முதலியவற்றைச் செய்கிறார்கள். எனினும், அவர்கள் அன்னியருக்கடங்கியவர்களாய்ப் புறநாட்டார் இலாபமடையும் விதமாகவும், நம் நாட்டார் நஷ்டத்தை அடையும் விதமாகவும் தங்கள் வணிகத்தைப் பணிவுடன் நடத்துகின்றார்கள்; நம்மவர்களுக்குள்ளேயே ஒருவர் செய்யும் வியாபாரத்தையும், வேறு தொழில்களையும் போட்டி போட்டுப் பலரும் செய்து எல்லோருமே இலாபமின்றிக் கெடுகிறார்கள்.

 

அன்னிய நாட்டுப் பழக்கமாகிய காப்பிக்குடியையும் காரணமின்றி நம்மவர் பெருமைக்காகப் பழகிக்கொண்டார்கள்; அதனால், நகரங்களிலும் நாடுகளிலும் காப்பிக்கடைகள் அடிக்கொன்றாக அளவற்றுப் பெருகிவிட்டன; இவற்றில் நம்மவர்கள் அனாவசியமாகச் செலவிடும் பணங்கள் அளவற்றனவாகும். கட்குடியினால் பல குடும் பங்கள் கெடுவது இயற்கை; எனினும், இப்போது காப்பிக்குடியினாலேயே அதிகப் பொருள் செலவாகி அநேக்குடும்பங்கள் கெட்டொழி கின்றன.

 

பல கெடுதிகளை உண்டு பண்ணக்கூடியனவும், சீக்கிரம் அழிந்து போவனவும், அனாவசியமானவையும், நம் நாட்டுப் பணங்களை வெளியே ஒதுக்கித் தள்ளுவனவுமாகிய புறநாட்டுப் பொருள்களையே நம்மவர் மிகுதியும் வாங்கி உபயோகிக்க விரும்புகின்றனர். இதனாலுண்டாம் பொருள் நஷ்டம் அளவற்றனவாம்.

 

நம்மவர் செய்யும் சுபாசுபகாரியங்களில் அவரவர் சக்திக்கேற்பக் கிரமப்படி செலவு செய்வதை விடுத்து அதிக்கிரமித்துத் தங்கள் சக்திக்கும் மீறி அனாவசியமாகப் பொருளைச் செலவிடுகின்றனர். குடும்ப செலவுக்குப் போதிய வருமானமில்லாதவர்களுங்கூட பெரிய கோடீசுவரரைப் போலச் சகல விஷயங்களிலும் இடம்பச் செலவு செய்ய விரும்புகின்றனர்.

 

நாடகம், பயாஸ்கோப், சர்க்கஸ் முதலிய வேடிக்கைத் தொழில்களும், பிரயாசைப்பட்டு அவற்றைக் கற்றுக்கொண்டவர்களால் நடத்தப்படுவன குறைந்திருப்பினும், முறைப்படி பயிலாதவர்களால் நடத்தப்படுவன எங்கும் பெருகியிருக்கின்றன. பெரும்பான்மையும் ஒவ்வொரு இடத்திலும் தினந்தோறும் இவை நடைபெறுகின்றன. அவற்றாலும் பொதுஜனங்களுடைய பொருள் ஏராளமாகச் செலவாகி வருகின்றது.

 

ரெயில் வேகட்டணம் அளவுக்குமிஞ்சி அதிகரித்திருக்கும் இக்காலத்தில் பலர் அனாவசியமான காரியங்களுக்கெல்லாம் அடுத்தடுத்துப் பிரயாணம் செய்து பெரும்பொருளைப் போக்கிவிடுகின்றனர்.

 

அநேகர் சமாதானத்துடன் நடத்தும் சிறு சிறு காரியங்களிலும் மனம் மாறுபட்டு வம்பு வழக்குகளை விளைவித்து அவ்வழிகளில் அளவற்ற பணத்தை அழிக்கின்றனர்.

 

இன்னும் இவர்கள் பொருளழிவுக் கேதுவாகச் செய்து வரும் காரியங்கள் எத்தனையோ உண்டு. அவற்றை யெல்லாம் எழுதப்புகின் மிக விரிவெய்தும். பல பெரியோர்கள் அவைகளைப் பற்பல சமயங்களிலும் பத்திரிகைகள் மூலமாகவும், பிரசங்கவாயிலாகவும் வெளியிட்டே வருகின்றனர். அங்ஙனம் வெளியிடினும் அநேகர் அத்தகைய பெரியோர் உரைகளை மதியாமல் மறுத்துவிட்டுத் தங்கள் மனம் போல் நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் கருதி இத்தகைய தீய மார்க்கங்களையே பின்பற்றி யொழுகு கின்றனர். இதனாலேயே கஷ்டம் நீங்குவதற் கேதுவில்லாமலிருக்கின்றது. நாம் சௌக்கிய முறவேண்டுமானால் இத்தீய நடைகளை யொழித்து நன்னடையை அனுசரிக்க வேண்டும்.  

 

இப்பொழுது செல்வாக்குடன் வாழ்ந்துவரும் புறநாட்டினர் எவ்விதம் நடந்து வருகிறார்களென்பதை நாம் கவனிக்க வேண்டும். நாம் அன்னிய நாட்டுப் பழக்கவழக்கங்களை விரும்புவது போல மேல் நாட்டாருள் ஒருவராவது நம்முடைய ஆசாரங்களை விரும்புகிறார்களா? நம்மைப் போல கேட்டிற்கான மார்க்கங்களிற் செல்கின்றார்களா? இல்லையே. அவர்களைப் போல் நாமும் ஏன் நடந்து சௌக்கிய முறலாகாது?

 

நாம் பெரும் பணத்தைச் செலவிட்டுக் கிடைக்காத உத்தியோகத்திற்குப் போட்டி போடுவதைக் காட்டினும், நம் வாழ்க்கைக் குரிய தொழில்களை நடத்தப் போதுமான கல்வியைக் கற்றுக் கொண்டு விவசாயம் முதலிய தொழில்களில் ஒன்றைக் கைக்கொண்டால் மிகுந்த நன்மையுண்டாகும். உத்தியோக முள்ளவர்கள் சுலபமாக இடங்கள் கிடைத்தால் மாத்திரம் அவற்றில் புகுந்து கொள்ளலாம்.

 

ஒருவர் செய்யும் ஒரு தொழிலில் பலரும் போட்டி போடுவதை விடுத்து ஒவ்வொருவரும் தனித்தனி ஒவ்வொரு தொழிலை மேற்கொள்வதால் அவர்க்கு விசேஷ இலாபங்கிடைக்கும். அதிகச் செலவிற்கேதுவாகிய அன்னிய நாட்டாசாரங்கள், புறநாட்டுப் பொருள்கள், இடம்பமான காரியங்கள், வீண்காரியங்கள் முதலியவற்றை ஒழிப்பதால் செல்வம் ஓங்கி வளர்தற் கேதுவாகும்.

 

நாம் இங்குக் கூறியவற்றுள் விலக்கத்தக்கவற்றை விலக்கி, கொள்ளத்தக்கவற்றைக் கொள்வோமானால் எப்பொழுதும் சுகம் பெறலாம். நம் நாடு பொன்னாடாக விளங்கும். நாம் அடிமைத்தனத்தினின்றும் நீங்கி ஆனந்தவாழ்வில் அமரலாம். எல்லாம் வல்ல இறைவன் நம்மெல்லோரையும் நன்னெறிக்குட் புகுத்தி உய்வித்தருள் வானாக.

 

ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஜுலை ௴

 

 

 

No comments:

Post a Comment