Thursday, September 3, 2020

 

 

நனவோ, கனவோ?

(ரா. பி. சேதுப் பிள்ளை, பி. ஏ., பி. எல்.)

 

மந்தியு மறியா மரங்கள் செறிந்த மலைச் சாரலில் மலய மாருதம் மகிழ்ந்து தவழ்ந்தது. குழன்ற கருங்கூந்தலில் நறுமலர் பெய்து, நஞ்சினும் கொடிய கண்களில் அஞ்சனம் எழுதி, பஞ்சின் மெல்லியபாதம் சிவக்க நடந்த மங்கையர் சிலர் அங்குவந் துற்றார்கள். கருமலையில்வெள்ளருவி கறங்கி வழிந்திறங்கிய காட்சியைக் கண்டு களிப்புற்று நின்றாள் ஒரு மங்கை; கானகப் பூஞ்சோலையில் களியன்னமும் மட அன்னமும் நடமாடக் கண்டு மகிழ்ந்து நின்றாள் ஒரு மங்கை; காமர் பூஞ்சுனைகளில் கமலங்கள் குவியக் கண்டும் குமுதங்கள் நெகிழக் கண்டும் களித்து நின்றாள் ஒருமங்கை; மதுவுண்ட மாந்தர் போல் எங்கும் ஓடி இடறிய வண்டுகளைக் கண்டு இன்புற்றாள் ஒரு மங்கை; வாச மலர்க் கொடியில் ஊசலாடி மகிழ்ந்தாள் ஒருமங்கை; மரக் கொம்புகளில் ரஞ்சிதமாய்க் கொஞ்சிக் குலாவிய பஞ்சவர்ணக்கிளிகளைக் கண்டு பரவசமுற்று நின்றாள் ஒரு மங்கை; இவ்வாறு தோழியர்பலவாறாகப் பிரிந்து செல்ல இனம் பிரிந்த த மான் போல் கலங்கி நின்ற கற்பகவல்லியின் கண்ணெதிரே ஓர் கானமயில் தோகை விரித்தாடத் தொடங்கிற்று. தோகை மயிலின் அழகைக் கண்டு ஓகையுற்று நின்ற பூங்கோதையின் முன்னே மாரன் எனத்தகைய ஓர் வீரன் தோன்றினான். மஞ்சள் வெயில் வீசியமாலைப் பொழுதில் மல்லிகை மணம் கவர்ந்த மெல்லிய பூங்காற்றில் தனியேநின்ற தையலைக் கண்ட வீரன் மையலுற்றான். தலை கவிழ்ந்து நின்ற நங்கையின் அழகினைக் கண்களாற் பருகி ஆனந்தவாரியில் மூழ்கிய தலைமகன், தவத்தால் வந்த அத்தையலை நோக்கி,


 "மலர் சொருகும் - கொண்டையிலே
 கலகவிழிக் - கெண்டையிலே
 மனம் லகித்துன் - அண்டையிலே
 வந்தேனடி செந்தேனே."


என்று கூறும் மொழிகளில் காதல் மணம் கமழக் காணலாம். மையல் விளைத்த மங்கையின் மலர் சொருகிய குழலையும், மை யெழுதிய விழியையும் தலைமகன் புகழும் முறை புதியதோர் இன்பம் அளிப்பதாகும். உண்டாரை மயக்கும் தேன் போல், கண்டாரை மயக்கும் கட்டழகு வாய்ந்த காரிகையைச் “செந்தேனே'' என்று வீரன் சிறப்பிக்கும் முறை செம்மை சான்ற இன்பம் தருவதாகும். கள்ளமற்ற உள்ளத் தடத்தில் ஊற்றெடுத்துப் பொங்கும் இன்பவெள்ளத்தின் அலைகளே இனிய காதல் மொழிகளா மென்பதில் ஐயமொன்றுண்டோ?

 

முன்னொரு நாள் பந்தடிக்கும் மேடையிலே அஞ்செஞ் சீறடிச் சிலம்புகள் சிலம்ப, செங்கையிலணிந்த சங்கு வளைகள் புலம்ப, பொய்யோ எனும் இடை துவண்டு நைய, தென்னன் வாழ்க வாழ்க என்றும் மன்னன் வாழ்க வாழ்க என்றும் பாங்கியொடு மகிழ்ந்து பந்தாடிய போது, மங்கை நோக்கிய நோக்கை நினைந்து நெஞ்சம் தழைத்த தலைமகன்,


 "பந்தடிக்கும்- மேடையிலே
 வந்துவிளை - யாடையிலே
 பார்த்து நின்ற - ஜாடையிலே
 பறிகொடுத்தேன் என்மனசை.''


என்று கரவா துரைக்கும் காதல் மொழிகள் கற்போர் மனத்தைக் கவர்வனவாம். இவ்வாறு கற்பகவல்லியைக் கண்டு இன்புற்ற காதலன், அம்மங்கையின் மொழிகளை வேட்ட நெஞ்சோடு கேட்டு இன்புற்ற முறை இனி, அறியத்தக்கதாகும். மாங்குயிலின் குரலோடு மங்கை, பாங்கியுடன் பேசும்பொழுது மறைந்து நின்று கேட்டு மதுவுண்டவன் போல மகிழ்ந்த தலைமகன்,


 “மாங்குயிலின் -- ஓசையிலே
 பாங்கியுடன் - பேசையிலே
 மான்விழி உன் - ஆசையிலே
 நான் முழுகிப் போனேனடி."


என்று நயந்து கூறும் மொழிகளில் நங்கையின் மொழியின் செம்மையும் விழியின் வெம்மையும் மாண்புற இலங்கக் காணலாம். இவ்வாறு எழுதரிய நலம்வாய்ந்த நங்கை பின் அயில் விழிகளைக் கண்டும் குயில் மொழிகளைக் கேட்டும், இன்புற்ற காதலன் நேசம் நிறைந்த நெஞ்சினனாய் நெருங்கும் பொழுது, நேசமடையை நிறைக் கதவாலடைத்த கன்னி,


 "என்றெனது - செங்கையிலே

. . . . . . .. .  .. . . . . . . . .
 இட்டமாய் - நெருங்கையிலே
 கிட்டவரக் கூடாதென்றேன்.''


என்று கூறும் மொழிகள் அறிந்து இன்புறத் தக்கனவாம். பள்ளத்துட்பாயும் வெள்ளம் போற் பாவைபாற் பரந்து பாய்ந்த தள்ளரிய காதலை உள்ளத்தேஅடைத்துத் தலைமகன் மீண்டும் பேசலுற்றான்.

 
“துலங்கிடும் உன் - மூக்கினிலே
இலங்கிடும் புல் - லாககினிலே
தூக்கின துன் - வாக்கினிலே
சொன்னால் அதே போதுமென்றான்.''


உள்ளங் கவர்ந்தெழுந்து ஓங்கு காதலை அறிவினாற் காத்து, மான் போல் மருண்டு நின்ற மங்கையை நோக்கி ''மாதே! உன் வாக்கின் இனிமை யறிந்தேன். இனி, உன் மூக்கில் தொங்கும் புல்லாக்கில் தூக்கி யிருப்பதை உன்வாக்கினால் சொல்; அவ்வளவே! எனக்குப் போதும் என்று வேண்டினான். வெல்லுதற்கரிய வீரனை ஒரு சொல்லால் விலக்கக் கருதிய மங்கை'முத்து' என்று மெத்தனமாய்க் கூறினாள். முத்து என்னும் சொல், வாய்விட்டுச் செல்லு முன்னமே வீரன் விரைந்தணைந்து மங்கையை முத்தமிட்டான்.


 "மெத்தவெகி -ழித்தனமாய்
 முத்து என்றென் - மெத்தனமாய்
 மின்னேகப - டத்தனமாய்
 என்னை முத்தம் இட்டானடி.''


என்று காவா நாவால் விளைந்த தீமையை நங்கை பின் தோழியிடம் கரவாது எடுத்துரைத்தாள். காதலில் தோற்றவர் வென்றார் என்னும் கட்டுரையைவிளக்கி நின்றான் காதலன். நாணத்தால் கண் புதைத்து நின்ற நங்கை மீண்டும் கண்களைத் திறந்த போது அங்க நலம்வாய்ந்த முருகன் தங்க மயில்மீது நிற்கக் கண்டாள்.


''சீர்பெருகும் - காலழகும்
 மார்பினில் முந் - நூலழகும்
 செங்கையினில் - வேலழகும்
 கண்குளிரப் பார்த்தேனடி.''


என்று கோலமா மயில் மீது குலவிய குமான் பெருமையைக் கற்பகவல்லி எடுத்துரைத்தாள். கொஞ்சித் தமிழ் பகர்ந்த குமரனே, தஞ்சமென்றுணர்ந்த தலைமகள்,


 "முருகனே செந்தி முதல்வனே மாயோன்
 மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
 தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்போதும்
 நம்பியே கைதொழுவேன் நான்.''


என்று கைகூப்பித் தொழுது நிற்கையில் கற்பகவல்லியின் தோழி, அயர்ந்த தூக்கத்தில் ஆழ்ந்த தலைமகளைத் தட்டி எழுப்பித் துயிலொழித்து, முருகனையும் வல்லியையும் பிரித்து வைத்தாள்.

 

ஆனந்த போதினி – 1930 ௵ - ஜுலை ௴

 

   

 

No comments:

Post a Comment