Friday, September 4, 2020

 

பிரிந்தவர் கூடினர்

(இடைசெவல்-ஜி. அழகிரிசாமி.)

மிதிலை நகரில் விசுவாமித்திரளைப் பின்தொடரும் இராமனும் இலக்குவனும் பிரவேசித்தனர். நாட்டிய அரங்குகள், விளையாட்டு ஸ்தலங்கள், நீராடும் குளங்கள் முதலியவற்றைக் கடந்து ஜனகனது அரண்மனையைச் சூழ்ந்துள்ள மதில் புறத்தை அடைந்தார்கள். எங்கு பார்த்தாலும் இசை யின்பங்கள், உல்லாச விளையாட்டுக்கள், பூஞ்சோலைகள், செல்வத்தின் செழிப்பு. அப்பொழுது கன்னிமாடத்திற் கருகே அன்னங்கள் தங்கள் பேடைகளோடு விளையாடிக் கொண்டிருந்தன. அவை அம்மாடத்தில் பொன்னின் சோதி போலவும், பூவில் வாசனை போலவும், தேனில் சுவை போலவும், செஞ்சொற்களால் யாத்த கவியில் பொலியும் இன்பம் போலவும் இருந்தனவாம்.

அந்தக் கன்னிமாடத்தில் வர்து நிற்கிறாள் ஓர் அழகிய இளம் பெண். தனக்குவமை இல்லாத அழகியா யிருக்கிறாள். உலகத்தில் உள்ள அழகு மிக்க பெண்களுக்கு அவர் உவமையாக இருக்கும்போது அவளுக்கு யாரை உவமித்துச் சொல்வது? சொல்லப்புகுந்தால் பார்வதியைச் சொல்ல முடியும். பெண்களெல்லாம் உச்சிமேல் கைகூப்பித் தொழும் பொறுமையளான அந்தப் பெண், சீதையின் உடல்வனப்பைப் பார்த்தவர்கள் அந்தக் காட்சியின் எல்லை காணாமல் இப்படிப்பட்ட அழகைப் பார்க்க “இமையாத கண்களைப் பெறவில்லையே" என்று வருந்தினார்களாம். ஆனால் இமையாத
கண்களைப்பெற்ற தேவர்கள் சொல்கிறார்கள். “இந்த அழகை இரண்டு கண்களால் பார்த்துவிட முடியாது."

அவர்களுக்கும் இரண்டு கண்கள் காணவில்லை. பாருங்கள்:

“உமையாள் ஒக்கும், மங்கையர் உச்சிக்காம் வைக்கும்

சமையாள் மேனி சண்டவர் சாட்சிக் கரைகாணார்,

‘இமையா நாட்டம் பெற்றிலம்' என்றார். 'இரு கண்ணால்

அமையாது' என்றார் அந்த வானத்தவர் எல்லாம்."

 

இருந்தாலும் கம்பர் ஒருவாறு வர்ணிக்க முற்படுகிறார். சந்திரனுடைய பிரகாசம் சூரியன் முன் மழுங்குவதுபோல் மேனகை முதலிய கந்தருவ மாதர் முகங்கள், சீதையின் அழகொளியில் பொலி விழக்கின்றனவாம். இவள் இந்த உலகிடைப் பிறக்க யார் தவம் செய்தார்களோ? உடம்பு வாட அந்தணர் தாம் நோற்றார்களோ? அல்லது தருமதேவதையோ? இவ்வுலகமோ! விண்ணுலகமோ? தேவர்களோ? தெரியவில்லை.

தோழிகள் மின்னல்கள் தெளிவதைப்போல் குனிந்து மின்னரசு என்னும் சீதையின் அழகைக் கண்டு சேவிக்கின்றனர். அவளை மானே, தேனே, அமிர்தமே என்று போற்றுகிறார்கள். இன்னும் இவன் அழகைப் பார்த்து மலைகளும், சுவர்களும், கல்லும், புல்லும் உருகி விடும்போ விருக்கின்றன. இவன் பிறக்கு முன், பல பெண்களால் அணியப்பட்ட ஆபரணங்கள் அவர்களுக்கு அழகைக் கொடுத்தன. ஆனால், சீதை பிறந்து, அவற்றை அணிந்த பின் அவைகள் தாமும் அழகைப் பெற்றன. இவ்விதம் நினைக்கவும் அரிதாகிய பேரழகுடன் கன்னிமாடத்தில் நிற்கிறாள் சீதை. அப்பொழுது மதிலையடுத்து விசுவாமித்திரனுக்குப் பின்னால் வரும் இராமன் எப்படியோ இவளைப் பார்த்து விட்டான். இவளும் அவனைப் பார்த்தாள். அவ்வளவு தான். இருவர் கண்களும் போரிட ஆரம்பிக்கின்றன! ஒருவர் கண்களோடு மற்றொருவர் கண்ணிணை பற்றுகிறது. ஒன்றை யொன்ற அனுபவித்துச் சுவைக்கின்றன. ஒருவருடைய பார்வை மற்றொருவரைக் குத்துகிறது. இருவர் உள்ளத்திலும் அக்காதல் பார்வை ஆழ்ந்து விடுகிறது. அப்பொழுது தன்னுணர்ச்சி இருவருக்கும் நிலைபெறாது இருவர் அறிவும் ஒற்றுமைப்பட்டு விடுகின்றன. எவ்வளவு சக்தி மிகுந்த பார்வைகள்! சிறிது நேரத்தில் சம்பாதித்த பழக்கம்தான் எவ்வளவு!

ஒருவர் அழகை ஒருவர் அனுபவித்த பார்வை யென்னும் கயிற்றாற் கட்டி, ஒருவரை மற்றொருவரது உள்ளம் இழுக்கிறது. அதனால் வில் தரித்த இராமனும் வான்போன்ற கண் படைத்த சீதையும் ஆகிய இருரும் ஒருவர் இதயத்தில் ஒருவர் மாறி மாறிப் புகுந்து கொள்ளுகிறார்களாம். இவ்விஷயத்தைத் தெரிவிக்கும் கம்பர் பாட்டு நம் இதயத்தில் புகுந்து இடம்பெற்ற மாதிரி.

"பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்(து)

ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்

வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்

இருவரும் மாறிப்புக்(கு) இதய மெய்தினார்.''

 

உயிர் ஒன்று உடல் இரண்டாக உள்ள இவ்விருவரும் இவ்விதம் சந்தித்த மாத்திரத்தில் காதல் கொள்ள இவர்களுக்குள் முன்பின் ஏதாவது சம்பந்தம் உண்டா? ஆம். பாற்கடலில் சுகமாக இவ்விருவரும், விஷ்ணுவும் இலக்குமியுமாகப் பள்ளி கொண்டிருந்தனர். ஆனால் அந்தப் பாற் கடலை விட்டுச்சென்று இராமனாகவும் சீதையாகவும் பிறந்த பின் இதுவரைக்கும் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை, வெகுகாலங் கழித்து அவர்கள் முதல் முதலாகச் சந்தித்தார்கள், அப்பொழுது மமிழ்ச்சியும் பாசமும் உண்டாகாதா? "பிரிந்தவர் கூடினால் பேச வேண்டுமோ?" ஆம், சொல்லவா வேண்டும்?

ஆனந்த போதினி – 1942 ௵ - மே ௴

 





No comments:

Post a Comment