Friday, September 4, 2020

 பிராட்டியார்

சென்றமாத வெளியீட்டில் குறிப்பிட்டபடி இராமாயண கதாநாயகியாராகிய சீதாபிராட்டியாரைப் பற்றிச் சிற்சில குறிப்புகளை வரைய எண்ணுகையில் வாத்தால் உயர்ந்த கவிச் சக்கிரவர்த்தியே ''சொல்லும் தன்மைத்தன்றது'' என்று தலைக்கட்டிய வாய்மை நினைவிற்கு வருகின்றது. மக்களை மக்களினமும், விலங்குகளை அவ்வினங்களும், பறவைகவாதி பல்லுயிர்களையும் அவ்வவ்வுயிர்களும், கண்டு இன்புறுதலே இயற்கை நியதியாகும். அங்ஙனமிருக்க அதற்கு மாறாகக்,


''குன்றும், சுவரும், திண்கல்லும், புல்லும்,

கண்டுருகப் பெண்கனி நின்றாள்."

 

என்று எடுத்துக் கற்றோர் உடலையும் உணர்வையும் ஒருங்கே கனிந்துருகும்படி பிராட்டியாரின் வனப்பின் இயற்கைக் காட்சியை வருணித்திருக்கும் பெருமித நிலைமையை என்போற் புல்லறிவாளர் ஆராய முந்துவது அறிவுடைமையன்றென்பது தெளிவு. எனினும், குன்றும், சுவரும் திண்கல்லும், புல்லும் இயற்கைக்கு மாறாகப் பிராட்டியாரின் சந்நிதி விசேடத்தினால் உணர்ந்து உருகும் தன்மை பெறுவது போலவே இதில் எனது தலையீடுமென அறிஞர் பொறை கூர்வாராக.

 

சர, அசரம், ஆகிய அனைத்தும் சக்தியின் பரிணாமங்களே யென்பது சுருதி யுண்மையாதலின் அவ்வுலக மாதாவைக் கண்டு உள்ளுருகும் தன்மை சடப்பொருள்களுக்கும் பொருந்து முறையேயாகும் என்னும் உண்மையைக் கவியாசர் ஆரம்பக் காட்சி ஓவியத்திலேயே புதை பொருளாக அமைத்துக் காட்டியிருக்கின்றார். பிரான், பிராட்டி யென்னும் சொற்களே, கடவுட்டன்மையை யுணர்த்துவதால் அப்பெயர் கொண்டே ஆளுதல் மரபாகும்.

 

இனி பாலகாண்டத்தில் தான் நமது கவிஞர் பிராட்டியாரைப் பற்றி முதலாகக் கூறப்புகுகின்றார்.


“பொன்னின் சோதி பூவினில் நாற்றம் பொலிவேபோல்
தென்னுண்டேனிற் றீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்."


என்று எப்பொருள்களிலும் ஊடுருவி அபின்னமாகி நின்று அவைகளை உயிர்ப்பிக்கும் ஸத்துவ சக்தி இவர் என்பதை தொடக்கத்திலேயே உணர்த்தி வழிபடுகின்றார்.

 

ஒளியில்லாத பொன்னையும், மணமும் மலர்ச்சியுமில்லா மலரையும், சுவையில்லா மதுவையும், இன்பந்தராத கவியினையும் எவர் விரும்புவர்? எல்லா ஜடப் பொருள்களிலும் பரிணமித்து நின்று நிலவச் செய்வது எந்த மகாசக்தியோ அச்சக்தியே இவர் எனின் இவரது பெருமையை இவரால் ஒளியுற்ற சீவர் எடுத்துக்காட்ட ஒண்ணுமோ? கண்ணன், தநஞ்சயனை நோக்கி நீரில் சுவைபோலவும், சந்திர சூரியர்களுக்குள் இருவகை ஒளிகளாகவும் வேதங்களுக்குள் பிரணவமாகவும், ஆகாயத்தில் நாதமாகவும் நரர்களுக்குள் புருஷனாகவும் நான் வியாபித்திருக்கின்றேன் என்று கூறுவதன் பொருட்செறிவே இங்கு திகழ்கின்றது காண்க. பின்னும்,

 

“உமையாள் ஒக்கு மங்கையர் உச்சிக் கரம்வைக்கும்

கமையாள்"

 

என்று பிராட்டியாரின் தோற்றத்திலேயே திகழ்வதாகிய பரம சாந்தத்தின் பூரணப் பொலிவினை ஒருவாறு விளக்குகின்றனர். பொறைக் கடவுளாகிய பூமியிற் பிறந்த இப்பெண்மைத் தோற்றத்தில் தலையாய கமை அதாவது பொறை சிறப்பாக விளக்க முறுவது இயல்பேயன்றோ? தாய்க்குணம் மகள் பால் இலங்குவதாகவே கவி புனைந்துரைக்கின்றார். இவரை ஒப்பதோர் பெண் வடிவினை இன்றளவும் பிதாமகனாகிய பிரமன் படைத்தானில்லை. படைத்த துண்டெனில் இவாபோலவோ அல்லது இவர்க்கு ஒரு சிறிது ஒப்பவோ இன்னம் ஒரு பெண்ணை இதுகாறும் தோற்றுவித் திருக்கலாம். அவ்வாறு இன்றளவும் படைத்ததில்லை. ஆகவே தானே அறத்தை நிலைநிறுத்த அவனியில் அவதரித்த அழகுத் தெய்வம் இவர் என்னும் உண்மை தோன்ற,


"பெருந்தேர் அல்குற் பெண்ணிவள் ஒப்பாள் ஒரு பெண்ணைத்

தருந்தான் என்றால் நான் முகன் இன்னுந் தரலாமே''

 

எனவும் அருளிச் செய்துள்ளார். தன்னையீன்ற தாயைத் தான் தருவ தெப்படி? உலகனைத்தையும் ஒருங்கே யீன்ற அன்னையிவர் என்பதை இதனாலும் உணர்த்தும் நுட்பம் புலப்படுகின் றது. தேவாசுரர் கடைந்த காலத்தில் கடலிற் பிறந்ததாகக் கூறப்படும் திருமகள் சீதையாக அவதரித்து மண்ணுலகில் வயங்குதலால் இனி அக்கடலும் இவர்போலும் ஒரு பெண்ணை இனித் தோற்றுவிக்க மாட்டா தெனவும் முடிவு கட்டுகின்றா. கடலமுதும் புவிநலமும் ஒருங்கே பெண்வடிவங்கொண்டு அவதரித்துத் திகழ்வதால் இனி அவ்விரண்டும் இவர்போன்றொரு திருவைத் தோற்றுவிக்க இயலாதெனபது குறிப்பு. படைப்பில் எழும் பெண்மைத் தோற்றங்களை யெல்லாம வியந்து புகழவேண்டுவதற்குப் பெருஞ்சுட்டாகக் கொள்வது எந்த சோபைத் திருவினையோ - அந்த ஒப்பில்லாத் தெய்வச் செழுஞ்சுடரே, இப்பிராட்டியாராகத் திருவுருக்கொண்டு விளங்குதலால் இவரை வேறு எவரைக் கொண்டு ஒப்பிடுவது? எவ்வகை நாடியுரை செய்வது? என்று அந்தரவானத்தவ ரெல்லாம் தியங்குகின்றார் எனவும் கவிவேந்தர் பெருமூச் செறிகின்றார்.
 

உமையாள் உச்சிக்கரம் வைக்கும் என்றுரையாமல் உமையாள் ஒக்கும் மங்கையர் என்றருளிய குறிப்பு அரிய பெரிய கருத்துக்களைத் தன்னுள் அடக்கிக்கொண்டு திகழ்கின்றது.

 

என்னை? ஆதிபரா சக்தியாகிய உமையாளை ஒத்த பெண் தெய்வம் பிறர் ஒருவர் உளரோ? இல்லை யென்பது வெள்ளிடைமலை. ஆயின் ஒக்குமங்கையர் என்று கலி கூறியது பொருந்துமோ வெனின், கற்பிற் சிறந்த மங்கையர் என்பதே அதன் உண்மைக் கருத்து. உவமை யாட்சியிலும் உவமிக்கமுடியாத ஒன்றைக் கூற நேரிடுங்கால் ஒப்புவமையில்லா வுயரிய ஒன்றனைச் சுட்டுதல் வழக்காதலின் தனக்கிணைவேறில்லா உமையவளுக்குச் சமமான கற்புடை மங்கையரும் கைகூப்பி வணங்கும் நிறையுடையவர் இவர் என்பது குறிப்பு. முன்னம் இமயத்தில் சிவபெருமான் உமையவளைத் திருமணங் கொள்ள எழுந்தருளியபோது வடபுறம் பாரத்தினா றாழ்ந்து தென்புறம் சிமிர்ந்ததாக, அக்கால் தேவர் அச்சந் தீர குறுமுனி என்னை யொப்பான் லோபா முத்திரை உமையை யொப்பாள் என்று பரசிவக கடவுள் பகர்ந்து அம்முனிவனரப் பொதியத்திற் கனுப்ப அதனால் பூமி சமநிலை பெற்றதாக ஓர் புராண கதையமுண்டு. அன்றியும், பெண்மைக்கே பிராட்டியார் அவதாரம் பெருஞ் சிறப்பளித்த தென்பதில் ஐயமில்லை. அறததை நிலைநிறுத்தி, உலகை யுய்விக்கவே அவதாரங்கள் தோன்றுதல் நியதி. இம்மட்டோடு அம்மட்டோடு அமையாமல் பெண்மையின் மான் பினையும் கற்பின் திண்மையினையும், பரஸ்பர நம்பிக்கையில் இருபாலார்கட்கும் உள்ள இயற்கைப் பேதங்களையும் நிரூபிப்பதற்குப் பிராட்டியாரின் தோற்றம் பயன்பட்டதாகும். இது குறிப்பிடுங்கால் உமையாள் ஒக்கு மங்கையர் உச்சியிற் கரங்கூப்பி வணங்குவதில் வியப்போ? இழுக்கோ? இல்லை. இல்லை. இராவணனிடம் அசோகவனத்தில் பிராட்டியார் தமக்கும் தமது நாயகருக்கும் உள்ள அன்பின் ஆழத்தை விளக்கிக் காட்டு முகத்தினால்


"எனக்குயிர் பிறிதும் ஒன்றுண்
டென்றிரேல் எனக்கும் அன்றித்
தனக்குயிர் வேறின்றாகி."


எனும் கவியைக் கூறுவதாகக் காண்கின்றோம். தன்னைப் பிரிந்திருக்கையிலும் ஆடவரும் பெண்மையை அவாவும் தோளினனாகிய தனது காதற் கணவனவரது சதிவிரத உறுதியில் பூரண நம்பிக்கையுடையவராயிருப்பது இக்கவியினால் நன்கு உணரப்படுகின்றது. இராவண வதத்திற்குப் பின்னர் பிராட்டியார் இராமனை யணுகியபோது தன்னை ஐயுற்றுக் கடுமொழி வழங்கியதாயும் அந்நிந்தை பொறாமல் தீயில் மூழ்கத் துணிந்த பிராட்டியார் கூறியதாகவும் ஒரு செய்யுள் உளது அதாவது,


''பங்கயத் தொருவனும் விடையின் பாகனும்
சங்குகைத் தாங்கிய தருமமூர்த்தியும்
அங்கையின் நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்
மங்கையர் மனநிலை யுணர வல்லரோ''


என்பதே. இச்செய்யுளின் கருத்து ஆடவர் குலமே நாணித் தலைகுனியத்தக்க தொன்றாகும், உயிரையே வெறுத்து அனற் குளிக்கத் துணிவுபூண்ட பிராட் டியார் அஞ்சாது பெண்கள் மனநிலையை அறியும் வல்லமை ஆக்கல், காத்தல், துடைத்தல் என்னும் முத்தொழிலையும் செய்யும் மும்மூர்த்திகட்கும் இல்லை யென்று கூறினர்.

 

வேஷ்டி கட்டி விபரீத காரியங்களி லீடுபடும் இனத்திற் சேர்ந்த ஒருவர் இருகர் இந்நாளிலும் சேலை கட்டிய மாதரை நம்பலாகாதெனக் கவிபுனைந்திருப்பதும் கண்கூடன்றோ? கற்பைக் காப்பதில் பெரும்பாலும் ஆடவரிலும் பெண்கள் கவனமும் கண்டிப்பும் உடையவர்கள் என்பது முழு உண்மை, அங்ஙனம் இன்றி ஒரு சில பெண்கள் தவறாய முறையில் இறங்குவதற்கும் அநேகமாய் ஆண்பாலாரின் தீவிர முயற்சியே காரணமென்பதை யறியாதார் இரார். அங்ஙனமிருந்தும் சேலைகட்டிய மாதரை நம்பலாகாதென மகுடமிட்டுக் கவிபாட ஆடவர் துணிந்தனர். வேட்டி கட்டிய வேடதாரிகளை நம்பலாகாதெனப் பெண் கவி எவரும் கண்டித் தெழுத விழைந்திலர். இதுதான் பெண்மையின் இயற்கை. தன்னடக்கத்தின் பெருமை. பிராட்டியார் கூற்றாக இப்பெரிய உண்மையை நிலைநிறுத்திய கவியாசர் பெருமானுக்குப் பெண்ணுலகம் யாது கைம்மாறிழைக்கவுளது

 

அன்றி இக்கவியினால், தன்னை, தான் எதிர்பாராத முறையில் இழிவுபடப் பேசிய கணவனை எழுந்த சினத்தினால் தாச்கியும் பேசாது, தனது கணவனே தன் மன நிலை காணவல்லவர் அல்லவரானபோது கடவுளர்கட்கும் அத்தகைய ஆற்றல் இல்லையென்று முடிவுகட்டுகின்றார். எத்துணை கோபமூண்டபொழுதும் தனது கணவனைவிடக் கடவுளரை மேன்மை யறிவுடையவராக மதிக்கப் பிராட்டியார் மனம் துணியவில்லை, புதிய கோபக் கனலினால் பழைய மதிப்பு குன்றாதிருந்த நயமும் அவர்தம் பெரும் பண்புக்குப் பின்னும் ஒளிநல்குவதாகும். பெண்ணுலகத்தின் பெருமையை அரியாசனத் தேற்றிய பிராட்டியாரை உமையாள் ஒக்கு மங்கையர் உச்சிமேற் ரங்குவித்திறைஞ்சுவதில்
என்ன தடையுளது.

 

ஏனைய பெண்ணரசிகட்கும் பிராட்டியாருக்கும் உள்ள பேதத்தினைக் கவியரசர் பின்னும் இடங்கண்டபோதெல்லாம் விளக்கிவைத்துள்ளார். இவைகளில் சதாநந்தராகிய ஜனக குருவானவர் விசுவாமித்திரரிடம் பிராட்டியாரின் வரலாறுகளை விளக்கும் போதும்,

 

“குணங்களை யென் கூறுவது கொம்பினைச்

சேர்ந்தவை யுய்யப் பிணங்குவன"                  எனவும்,

 

'அழகிவளைத்தவம் செய்து பெற்றது காண்'         எனவும்

 

ஒரு கவி கூறுகின்றார்.

 

என்னை, குண நலங்களே இருபாலராகிய மக்களை யுயர்விக்கும். அங்ஙனமிருக்க பிராட்டியார் இதயதாமரையில் இடம்பெற்றுத் தாம் பிரகாசிக்க வேண்டும் என்னும் பெரு வேட்கையினாக் நற்குணங்களெல்லாம் தம் முன்போட்டி போட்டு நான் முந்தி நீ பிந்தி என விரைந்து குடி புகுந்தன. கொடிகள் மீதேறிப் படர்வதற்கு ஒரு சிறந்த கொழு கொம்பினை வளைந்து பற்றுதல் போல இவர் குழவிப் பருவத்திலிருந்தே பெண்மைக் இயல்பாகிய பல   பெருங் குணங்கள் யாவும் விளக்கமுறத் தலைப்பட்டன என்பதே பொருளாகும்.

 

துற்குணம் உள்ள இடத்திலும் ஒரு சில நற்குணம் அமைந்துளது.
பிழையிலான் கடவு ளன்றிப் பின்னையோர் மாந்தர் இல்லை" என்பதாகிய ஆன்ற மொழியும் முற்றும் நற்குணங்கள் நிரம்பப்பெற்ற மக்கள் இல்லை என்பதையே குறிக்கின்றது. தீயரோடு அளவளாவ கேருங்கால் நல்லோர் அருவருப்புறுதல் போல நற்குணங்களும் தீக்குணங்களோடு ஒன்றி நிற்கும்படி திகழ்வதில் இன்புறமாட்டா. அவரவர்களின் வினைகட்கேற்பவன்றோ இவ்விருவகைக் குணங்களும் அமைய வேண்டி
வருகின்றது. இத்தகைய இடர்ப்பாடு ஏதுமின்றி முற்றும் தூய குணங்களே பிராட்டியாரின் இதயமலரிற் குடிபுகும் பேறு வாய்த்ததில் அக்குணங்கட்குப் பெரிய ஆவல் பொங்கிப் போட்டி போடவும் தலைப்பட்டன எனக் கவி கூறுகின்றார். எப்பொருள் கட்கும் குணமாக நின்றிலகும் இவரை குணங்களினின்றும் வேறு பிரித்து விளக்குவதே ஈண்டுப் படிப்போர்க்கின்பம் பயப்பதாகும். இதற்கடுத்தாற்போல்,


“அழகிவளைத் தவஞ் செய்து பெற்றது காண்."


என்றும் அமையா வியப்பிற் புகல்கின்றார். உலகனைத்தையும் பெறாது பெற்ற பிராட்டியாரை அழகுபெற்றதென்று கூறினர் கவிவேந்தர். அதாவது பிராட்டியாரின் ஸர்வ அவயவங்களிலும் நிரம்பி நின்று (அழகு என்னும் கண்கவா வனப்பு) பிரகாசிக்கும் பாக்கியத்தினைப் பல்லூழிகாலம் தவம் செய்து பெற்ற தென்றார். சிறந்த அழகு என்பதும் மக்களிடை பூரணமாக நிரம்பியிருப்பதில்லை. விரும்பத்தக்க சில அவயவ விசேடங்களிடையே வெறுக்கத்தக்க சில அமைப்புகளும் உள. பெரும்பாலும் அழகற்ற வடிவங்களிலும் ஒரு சிறு இலக்கணம் இடையே திகழ்வதும் உண்டு. இவைகளுமன்றி அன்பு பூண்டார்க்கு அரூபம் தோன்றுவதில்லை. அன்பில்லா
அன்பில்லா இடத்தில் உள்ள ரூபமும் தோன்றுவதில்லை. இம்மட்டில் அமையாமல் ஒரு நலனும் இல்லாரையும் சுயநலமிகளான சிலர் எல்லா நலமும் இருப்பதாகப் புனைந்து போற்றவும் பின்வாங்குவதில்லை. இத்தகைய பொருத்தமற்ற எண்ணிறந்த இடர்களால் உலகில் படைப்புத் தோன்றிய காலந் தொட்டே கலப்பற்ற தனது சோபையைப் பிரகாசிக்கச் செய்ய உரியதாகிய ஓர் உத்தம அவதாரத்தைத் தவஞ்செய்தாவது பெறுதல் வேண்டிய, அழகுத் தெய்வம் நோன்புழந்தே பிராட்டியாரின் திருமேனியைத் தனக்குரிய பீடமாகப் பெற்ற தென்பதே இதன் பொருளாகும். குணங்களையும் பேரெழிலையும் தொடர்ந்து கூறிய காரணம் இரண்டிற்கும் உள்ள தொடர்பினைப் பற்றியே என்பது தெளிவு. இதனை,


"நாமநூல் பகரு முன்னூலோர்
இலங்கெழில் அளவு குணமென இசைப்பர்."


என்ற 'நைடத' காவியத்தினாலும் உணர்கின்றோம். இவ்வளவையும் படிப்போர் இவைகள் யாவும் புலவர்களின் கற்பனைத் திறமையேயாகும். பிராட்டியார் அவதரிப்பதற்கு முன்னிட்ட காலத்தில் ரூபவதிகள் தோன்றியதில்லையா? புலவர்கள் அழகிற் சிறந்தவர் எனப் போற்றியதில்லையா? எனக் கூற முற்படலாம். இத்தகைய விவாதத்தினை எதிர்நோக்கி மேலும் கவி,

 

 "கணங்குழையாள் பிறந்ததற்பின் கதிர்வானிற் கங்கையெனும்
அணங்கிழியப் பொலிவிழந்த ஆறாத்தார் வேறுற்றார்."

 

எனத் தக்கவாறு சமாதானமும் கூறுகின்றார். ஆகாய கங்கை யென்றழைக்கும் புனிதாதியை பகீரதச் சக்கிரவர்த்தி தனது சலியா முயற்சியினால் மண்ணில் பெருகச் செய்தான் என்பது சரித்திர வரலாறு. அவ் வாலாற்றின்படி அக் கங்கையாறு இந்நிலவுலகில் வருவதற்கு முன்பும் இங்குப் பல பல புண்ணிய நதிகள் பெருகிக்கொண்டிருந்தன என்பதை மறுப்பாரில்லை. என்றாலும் உலகிலுள்ள எல்லா நதிகளுக்கும் கங்கையாறு பெருகத் தொடங்கியபின் மகிமை மழுங்கியதென்ப துண்மை. அதாவது தெய்வாதியின் வரம்பு கட்ட முடியாத மாண்புக்கு முன்னர் பழைய நதிகளின் புகழ்கள் எல்லாம் சூரியன் உதித்தபின் நட்சத்திரங்கள் ஒளிகுன்றுதல்போல மறைந்தொழிந்தன. கிணற்றிலோ குழாய் நீரிலோ ஸ்நானம் செய்பவீர்கள் கூட் (நாகரிகம் மிகமிகக் கொழுந்தோடிப் படர்ந்திருப்பதாகக் கொள்ளும் இஞ்ஞான்றும்) கங்கா ஸ்நானம் என்று தமக்குள் (தம்மை யறியாமலேயும்கூட) சொல்லிக் கொள்ளுவவதைக் காண்கின்றோம். ஆதலின் கங்கையெனும் அணங்கிழியப் பொலிவிழந்த ஆறுகள் என்று கம்பர் கவி இன்றும் பொருந்துவதொன்றே யாகும். இதைப்போலவே உலகம் தோன்றிய காலத்திலிருந்தே பிரமன் படைப்பில் எத்தனை எத்தனையோ ரூபவதிகள் தோன்றியிருந்திருப்பார்கள். அத்தனை யத்தனை வனிதையர்களின் பேரழகெல்லாம் பிராட்டியார் அவதரித்த பின்னர் தத்தமது பெருமை யிழந்தன. இருந்தும் பிரகாசியா தொழிந்தன என்று முற்றத் துறந்த முனிவராகிய சதாநந்தர் கூறியதாகக் கவியரசர் கூறுகின்றார். பஞ்ச கன்னிகைகளுள் ஒருவராகிய அகல்யை அழகிற் சிறந்த அணங்கென்பது அவர் சரித வாலாற்றிலிருந்தே யுணரலாம். அவர் வயிற்றில் உதித்தவர் சதானந்தர். அவரே இவ்வாறு புகன்றார் எனில் அழகின் எல்லை காணாத ஒருவரால் சொல்லப்பட்ட வாய்மொழியென இதனைப் புறக்கணிக்க விடமுண்டோ? இது நிற்க கோலங்காண் படலத்தில்


"துன்றுபுரி கோதையெழில் கண்டுலகு சூழ்வர்
தொன்றுபுரி கோலொடு தனித்திகிரி யுய்ப்பான்
என்று முல கேழுமர செய்தியுளனேனும்
இன்று திரு வெய்தியதி தென்னவயம் என்றான்''


என்று அதிசயித்ததாகப் பின்னும் ஓரிடத்தில் உரைக்கின்றார்.

 

பல ஆயிரக்கணக்கான அரசகுல மங்கையர்களை மணந்து திருவிற்றொடர் போக பௌவத்திற் றோய்ந்து கடந்தவராகிய தசரத சக்கரவர்த்தியே பிராட்டியாரின் திருமேனிக் காட்சியை முதலாகக் கண்டபோது திடுக்கிட்டு எழுலகங்களும் அரசுபுரிந்து வெற்றிக்குரிய எட்டுத் திருமடந்தையர்களும் என்னிடம் இன்றும் பொலிந்து வாழ்கின்றனர். எனினும் இன்றே என்பால் உண்மைத் திருமகள் வந்தனள். இஃதென்ன வெற்றியெனத் தனக்குள்ளேயே வியந்து விம்மித மெய்தினார் என்பது பெறப்படுகின்றது. இத்தகைய நித்திய மங்களஸௌந்தரிய சோபையின் அதிதேவதையாகிய பிராட்டியாரைத் தோற்றுவாயிலேயே கவிவேந்தர் 'சொல்லுந் தன்மைத் தன்றது' என்று முடிவுகட்டியதில் பிழையுண்டோ? மாசற்ற ஞானிகள் மனக் கண்களால் கண்டு களிக்கத்தக்க பேரின்பத்தினை வாக்கினாற் புகலுதல் எங்கனம் பொருத்தும். பின்னரும் பிராட்டியாராகிய அழகுத் தெய்வத்தினை அதிர்ஷ்ட தேவதையை அரசபோகத்தில் நவ யௌவன சுகானுபவத்தில் கவலையின்றித் திளைத்திருக்கும் சந்தர்ப்பத்தில் நமது கவிவேந்தர் செலுத்திய கவனத்திலும், மரவுரி யணிந்து ஒப்பனை செய்யும் பாங்கியரின்றி அறுசுவை யுண்டியைப் பரிந்தூட்டி யுபசரிப்பாருமின்றி இளமடந்தையர்க் கியல்பான பல்வகைக் கோலங்களுமின்றி, வனத்தில் தவமடந்தையாக வதியுங்கால், காட்டிய காட்சி சிறப்புடையதாகும். மனிதகுலத்தையே இயற்கையிற் பகைக்கும் தன்மை வாய்ந்த வல்லாக்கியாகிய சூர்ப்பாகை இராவணனிடம் சென்று பிராட்டியாரைப்பற்றிப் பல படத் துதிக்கின்றாள். அவைகளுள் தலைமையாய கவி.


"காமர முரலும்பாடல் கள் எனக்கனிந்த இன்சொல்
தேமலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்கா மென்னத்
தாமரை யிருந்ததையல் சேடியாம் தரமும் அல்லள்
யாம் உரைவழங்க லென்பதேழைமைப் பாலதன்றோ"


என்பதேயாம்,

 

பெண் இனத்திற்கே பெருமை யளிப்பவள் திருமகள். அத்திருமகள் என்று கூறப்படும் அழகின் தெய்வம் நான் கண்ட வனவாசியான தவமடந்தைக்குத் தாதிவேலை செய்யவும் தகுதி யுடையவளாகாள் என்று சூர்ப்பநகை கூற்றாக மொழிகின்றார். திருமகளே பிராட்டியாராகப் பூவில் அவதரிக்கின்றனர் எனினும் இவர்பால் குடிகொண்டு ஒப்புவமை யற்றதாய் - சொல்லுந்தன்மை கடந்ததாய் விளங்கும் சவுந்தரிய வெள்ளத்திற்கு இவரது மூலவடிவமாகிய இலக்குமியின் பிரகாரம் மிக மிகக் குறைவென்பதே இக்கவியின் கருத்தாகும். உலக வளர்ச்சி முறை கண்டோரும் தோற்றங்கள் ஒன்றை பிட மற்றொன்று சிறந்த முறையில் அமைவதியல்பெனக் கூறும் முடிவிற்கும் இது பொருத்தம் உடைய தொன்றாகும்.

 

விவாககாலத்தில் ஆபரணாதிகளின் மீதுள்ள மோகத்தினால் பேதமைத்தாதியர் பற்பல அணிகளினால் பிராட்டியாரின் திருமேனியை மறைத்தனர் என்று கூறவந்த கவி அழகினுக்கழகு செய்வதாக எண்ணி அவர் மேனி யழகினை மறைத்துத் தமது அறியாமையை வெளிப்படுத்தினார் என்று மனம் வருந்தி இமிழ்திரைப் பரவைஞாலம் ஏழைமையுடைத்தென்று இரங்குகின்றார். இயற்கை யழகிற்கும் செயற்கை யழகிற்கும் உள்ள வேற்றுமை அறிவுடையோர்க்கு இன்றும் விளங்குவ தொன்றாம். அறிஞரில் அறிஞராய்க் கவிஞரிற் கவிஞராகிய பெரியாரின் மனம் இயற்கைப் பொலிவினை மறைக்கும் செயற்கை யொப்பனைகளை அருவருக்காமல் எங்கனம் ஏற்கும்? இவைகள்
அன்னார் செல்வப் செல்வப் பெருக்கினை வெளிப்படுத்தும் அடையாளங்களாகக் கொள்ளலாம். அதோடு பெண்கள் அறியாமையிற் சிறந்தவர்கள் ஏமாற்றத்தக்கவர்கள் எனச் சிலர் கூறும் கூற்றிற்கு நற்சாட்சிப்பத்திரம் அளிப்பதாகவும் பாவிக்கலாம்.

 

இனி பிராட்டியாரின் ஒப்பற்ற ஒளிவடிவச் சிறப்பினையும், பெண்மை நிறைந்த தண்மையையும் புல்லறிவுடையேன் ஆராய்வதற்கும் போதிய ஆற்றல் இன்மை கருதி மேற்செல்லுவதற்கு முயல்கின்றேன்.

 

கம்பநாடாரின் தீஞ்சுவைக் கவிகளாகிற தெய்வத் தருவினைப்பற்றிப் படர்ந்து மேலேற அவாவுறும் எனதாசைக் கொடி தனது மென்மை வளர்ச்சிக்கேற்பத் தாவ முடியுமன்றி முற்றும் சென்றேற முடியுமோ? பிராட்டியாரைத் தான் செய்த தவத்தினால் தன்னிடை வதியப்பெற்றதாகிய மிதுலைமா நகரத்தில் இராம லக்ஷ்மணர்கள் விசுவாமித்திர மஹரிஷியைப் பின்பற்றினவர்களாக பிரவேசித்த போது அந்நகரத்திலுள்ள உந்நதமான மாடமாளிகை கோபுரங்களில் நாட்டப்பட்ட கொடிகளின் அசைவு, தன்னிடத்தில் பூமகள் வசிப்பதனால் அவரைத் திருமண முடிக்க வேண்டிய புருஷசிரேஷ்டனின் வரவு கண்டு ஆசந்தத்தால் அசைந்தசைந்து விரைவின் வருக வருகவெனத் தன் துகிற்கரங்களை நீட்டி அழைப்பது போல் இருந்ததெனக் கவியரசர் முதலிலேயே நல்வரவு கூறிவிட்டார். அதைத் தொடர்ந்தே பிராட்டியாரைக் கன்னிமாடத்தில் முதன் முதலாக வீதி வழி கண்ணுற நேர்கின்றது.

 

இராமனை ஆடவர் பெண்மையை அவாவும் தோளினான் என்று பல இடங்களில் கூறும் கவி அவர்ககேற்ற பெண்ணருங்கலனையும் "மங்கையர்க்கினியதோர் மருந்து மாயவன்'' என்று தொடக்கத்திலேயே எடுத்துக் காட்டியிருக்கின்றார். வெங்+ளி விழிக் கொருவிழாவாக விளங்கும் காந்தியையுடையவள் எனவும், கண்களிற் காணவே களிப்பு நல்கும் கோமளவடிவழகி எனவும் போற்றுகின்றார். மனதைக் கவரும் எழில்கனிந்த தோற்றங்கள் எவர்கள் மனதைத்கான் மகிழ்வுறச் செய்யாது? பெண்களைப் பெண்கள் கண்டாலே மகிழ்ச்சியை எழுப்பும் பேரெழில் உடைய இவரை ஆடவர் திலகனான அரசிளங்களங்குமரன் காண நேர்ந்தபோது ஏற்பட்ட புதிய உணாச்சியை எவ்வாறு பிறர் ஊகித்துரைக்க முடியும்? என்பது தோன்ற,

 

"எங்கணாய கர்க்கினி யாவதாங் கோலோ''

 

என்றருளியுள்ளார்.

 

ஓர் யுவதி சவுத் திரியவதியாகக் காணப்பட்ட மாத்திரத்தில் ஓர் யுவன் மனதைச் சிதறவிடலாமோ? அஃது ஒழுங்கு முறையின் பாற்பட்டதாகுமா? என்று வினாக்கள் எழலாம். பொது விதிக்கு இது பொருத்தமற்றதே. உண்மையில் இது பேதைமையுடைய அறிவிலார். செய்கையே யாகும். ஆனால் தமது கதாநாயகர் எத்தகையவர்? அருந்ததி கணவரிடம் ஞான வைராக்கிய நூல்களைப் பயின்றவர். வேதமாதி கலைகளில் விற்பனர். விதிதவறாதவர். இருபாலினரின் இயற்கையே யுணராத கலைக்கோட்டு முனிவரின் அநுக்கிரகத்தால் உதித்தவர். உத்தம க்ஷத்திரிய குலத்தில் அவதரித்தவர். ஆடவர்க்கும் கற்பு அவசியம் என்னும் சமதர்மத்தை நிலைநாட்டும் நியாயபுத்தி யுடையவர்.


“ஆசலம்புரி ஐம்பொறி வாளியும்
காசலம்பு நகிலவர் கண்ணெனும்
பூசல் அம்பும் நெறியின் புறஞ்செலாக்''


கோசல நாட்டின் அரசுரிமைக் கதிபர் ஆகிய இராமன் மனம் இன்னாரெனவும் அறியாத ஒரு பெண்ணைக் கண்டமாத்திரத்தில் நெகிழ்ச்சியுற்ற தெங்கனம்? இத்தகைய உத்தமர்களின் மனமாற்றங்களி னிடமாகத்தான் பழ வினையின் தொடர்பினை நாம் நன்கு காணமுடிகின்றது. ஆனால் இவ்விபரீத உணர்ச்சி இராமன்பால் மட்டில் விளைந்திருந்தாலும், அதனை ஒருகால் (தடைவிதிக் கிலக்காக வேண்டிய விதியைப்பெறாத) ஆண்பாலின் இயல்புக்குணம் எனவும் கொள்ள இடமேற்படும். அவ்வாறின்றிப் பெண்மையின் பெரு வாழ்வாகிய பிராட்டியார் மனதில் இன்னன் என்றும் அறியப்படாத ஒரு குமானைக் கண்டவிடத்திலேயே நிறை தளர்வதியல்போ? சாமானியமான பெண்கள் கூட கன்னிகைப் பருவத்தில் கண்டவர்களையெல்லாம் நாண் துறந்து பெற்றோர் சங்கற்பமின்றிக் காதலிக்க முற்படமாட்டார்களே, அங்ஙனமிருக்க இருவர் நிலையும் வேறுபட்டது விதியின் வன்மையே யன்றி வேறென்னென்பது? தற்காலத்தில் காதல் மணமென ஒரு புதிய ஆவேசம் தலைகாட்டுகின்றது.
ஆனால் சரியாகவோ? தவறாகவோ அஞ்ஞான்று சமாசாரப் பத்திரிகைகள் இருந்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் உலக அநுபவம் பெறாத இளைஞர் உலக அநுபவம் பெற்றவர்களும் தங்கள் வாழ்வின் நலத்தையே நாடுவதில் கவலையுடையவர்களுமான பெற்றோர் பெரியோர்களின் ஆலோசனையின்றி மண முடித்துக் கொள்ளலும் நடைபெற்றிருக்கக்கூடிய தென்றும் எண்ண முடியவில்லை. அவ்வக் காலத்திய பழக்க வழக்கங்களே அந்தந்த நாடுகளிலும் இருபாலர்களின் எண்ணங்களை நடத்திச் செல்லும் வழிகாட்டிகளாகுமென்பது மறுக்க முடியாத தொன்றாம். வழக்கில் இல்லாத முறையில் மனம் செல்ல நேருவதும் இயற்கைக்கு மாறுபட்டதே யாகும். சுயம்வரம் என்பதைத் தற்கால நாகரிகர்கள் காதல்மண மென்னும் தலைப்பின் கீழ் உதாரணமாகக் காட்டவும் துணிகின்றனர். இதிலும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ளும் வகை வேறிலை.

 

சுயம்வரமென்பது அரசகுல மடந்தையர்கட்கே அக்காலத்தில் அங்கீ--கரிக்கப்பட்டு வந்தது. அம் மங்கைமார்களும் தம்மால் வரிக்கப்படவேண்டிய அரசரைப்பற்றிய தகுதிகள் அனைத்தையும் முற்கூட்டியே பெற்றோர் வாயிலாகவும் சேடியர் மூலமாகவும் நன்கு விசாரித்துக் கொண்டு மனதில் ஒரு முடிவுக்கு வருகின்றனர். வந்த பின்னர் சுயம்வரத்திற்காகக் குறிப்பிட்ட திருநாளில் அரசவையில் குழுமியுள்ள எல்லா மன்னர்களின் பண்புகளையும் தாதியர் உணர்த்தக் கேட்டு இறுதியில் ஏற்கெனவே தமது மனதில் நிச்சயித்தவரனுக்கு மணமாலை சூட்டுகின்றனர்.

 

சபையில் கன்னிகை வந்தபின் அரசர்குல அறிக்கை படிக்கப்படுவது ஒரு சம்பிரதாயமே தவிர அப்படி எடுத்துரைக்கப்பட்ட அறிக்சையைக் கேட்ட பின்புதான் அவர்கள் தகுதிகளை இவ்வனிதையர் உணர்கின்றார்களென்பதில்லை. பொது அழைப்பின்படி எல்லா அரசர்களும் வந்து கூடிவிடுகின்றனர். எனினும் இன்னாரை வரிப்பதென்கிற தீர்மானம் ஏற்பட்டேயிருக்கிறது. பெற்றோர் பால் ஏனைய அரசர்கட்கு மனவலி ஏற்படாதபடி தடுக்கவே இம்முறை கையாளப்பட்டதாக எண்ண நேருகிறது. ஆதலின் சுயம்வரம் என்பது பொறுப்புணர முடியாத யௌவனாவஸ்தையுடைய இருவர் தனித்து கள்ளத்தனமாகக் காதலிக்கும் காதல் மணத்திற்கு எட்டுணையும் பொருத்தமுடையதன்றாகும். சுயம்வரம் என்னும் பதமே காண்போர்க்கு சுயமாக வரித்தல் எனப் பொருள் படுமாயினும் சுயம் என்பது தன்னைச்சார்ந்த அனைவர்களின் ஆராய்ச்சி அங்கீகாரம் இவற்றின் வழியாகிய உருவாகிய ஓர் திட உணர்ச்சியே யாகும். இதனை வில்லிபுத்தூர் ஆழ்வார் பாரதத்தில் திரௌபதி சுயம்வரத்தில்


"சூட்டிய தொடையல் மாலைத் தோழியர் வைகல்தோறும்
தீட்டிய படங்களும் தம் சிந்தையும் பொலிவு கொள்ளக்
கோட்டிய தனுவினோடும் கொடி மணித் தேரினோடும்
காட்டிய கோலமன்றிப் பிறிதொன்றும் காண்கிலாதாள்"
                எனவும்,


"ஆதியிற் குந்திமைந்தர் ஐவர்க்கும் உரியளா மென்
றோதிய விதியினால் நெஞ்சுலப் புறாவுவகை கூர்வாள்
சோதிடம் பொய்யாதென்றும் தோன்றுவர் உரியோர் என்றும்
தாதியர் தேற்றத்தேற்றத் தன்மனத் தளர்வு தீர்வாள்''
                  எனவும்,


"பூன் திகழ் அலங்கலான் இப்பொன்னவை பொலியத் தோன்றி

ஈண்டெரி முன்னர் மன்னர் இழிவுற வேட்டிலானேல்

மீண்டெரி புகுவன் என்னும் எண்ணமே விளையும் நீராள்''              எனவும்

 

வரும் கவிகளால் ஐயமற விளக்கியுள்ளார். இப் பாஞ்சாலியைத் தனஞ்சயனே மணமுடிக்க வேண்டிய சங்கற்பங்கொண்டே தந்தை தவம் இழைத்துப் பெற்றதும், தனஞ்சயனைத் தவிர மற்றெவராலும் குறிவைத் தெய்ய முடியாத மச்சயந்திரத்தை ஓர் பணையமாக திருஷ்டத்துய்மன் நிறுவியதுமன்றி வேறுண்டோ? இதனால் குடும்பத்தார் யாவராலும் கோரப்பட்ட வரனே பாஞ்சாலி மனதிலும் நிலைபோகிய உண்மையை யுணர்கின்றோம்.

 

மச்சயந்திரத்தை எய்து வீழ்த்திய பின்னர் அந்தணர் வடிவத்தோடிருந்த
பார்த்தனைச் சமீபித்த அரசகுமாரி

 

"பூஞ்சாரல் மணி நீலக் கிரிபோல் நின்று பூசுரனை அவன் இவனே போலும் என்று

பாஞ்சாலர் பதிகன்னி தன திருகட் பங்கயத்தாற் பாங்காகப் பரிந்து நோக்கி

தேஞ்சாரல் வளர்கழுநீர்ச் செய்யதாமம் செம்மணிகாலருவியெனச் சேர்த்தினாளே''


எனத் தான் படத்திற்பன் முறையும் கண்டு கண்டு களித்த அடையாளம் உடைய அருச்சுனனே இவனாதல் வேண்டும் எனத் துணிந்த பிறகே மணமாலை சூட்டின நுட்பத்தினையும் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளார். இதுகாறும் கூறியவாற்றால் சுயம்வாமென்பது கள்ளத்தனமாக காதலிக்கும் தன்மையினின்றும் வேறுபட்டதாயும், பகிரங்க நிர்ணயமாகியும் உள்ள தென்பதே பெறப்படுகின்றது.

 

இனி ஈண்டெடுத்துக்கொண்ட பிராட்டியாரின் திருமணத்தினைத் தொடர்ந்து மேற்செல்வோம். இதில் மேலே காட்டியபடி முற்கூட்டிய திட்டமான முடிவு இருந்ததில்லை.

 

எனினும் பிராட்டியாரின் ஒப்புவமையற்ற பேரழகினால் மதிமயங்கிப் பித்தேறிய அரசாகளின் ஓயாப்போரினின்றும் விடுதலை பெறும் உபாயமாகவே சிவனாரின் வில்லை முறிப்பவருக்கே பெண்ணைத் தருவதென்கிற ஒரு பணையத்தை ஜனகர் ஏற்படுத்தினாரென்பது தெளிவாகின்றது. புராரியின் தநுவினைப் புராரிக்கிணையாகிய ஒருவர் முறிக்கக்கூடுமல்லது ஏனையோரால் இயைவதன் ரென்பதை ஞானியர் போற்றும் ஞானியாகிய ஜனகர் நன்குணர்ந்தவர். பிராட்டியார் திருமகளின் அவதாரமென்பதையும் அவர் தமது பேரறிவால் உணர்ந்தவரே. அதுபற்றியே,

அரசசபையில் இராமனைக்கண்ட மாத்திரத்தில் அவரது அந்தரங்க ஆன்மா இவரே பிராட்டியாரைக் கைப்பிடிக்கத் தோன்றிய புருஷோத்தமன் என்றும் நன்கு உணர்த்தியது. உண்மை ஞானியாகிய சுகப்பிர்மத்திற்கும் ஞானாசாரியராக விளங்கிய ஜனாருக்கு இந்நுட்பம் தெரியக் கூடாததா? யோககியர் உள்ளத்தில் உறைந்து அமுத மூற்றும் பரமான்மாவை அந்த யோகி அறிவதில் என்ன தடையுள தாகும்?

 

சைவ சமயாசாரியரில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் திருப்போ
ரூரில் ஆலயத்தில் எம்பெருமான் இல்லை யெனபதை உணர்ந்து பள்ளர்களோடு பள்ளராகி வயலில் களை கட்டுத்தொழில் புரிந்த ஆதியைக் கண் இணர்ந்து அசதியாடினாரெனும் சரிதவரலாற்றினால் பக்தர்களே ஈசன் விளையாடலை உணர்தல் கூடுமென்று உணாகின றோம். இது பற்றியே 'பக்தி வலையிற் படுவோன்க காண் என்றருளி யுள்ளார்கள்.

 

பக்தர்கள் தன்மைக்கே வெளிவரும் பரமன் அகண்டமான ஞானியர் களின் உணர்விற்கு அப்பாற்பட்டவ ராவரோ? இக்குறிப்பினை.


"மாற்றம் யாதுரைப்பது மாயவிற்கு நான்
தோற்றவாறெண மனம் துளங்குகின்றதால்
 நோற்றனள் நங்கையும் நொய்தின் ஐயன்வில்
ஏற்றுமேல் இடர்க்கடல் ஏற்று மென்றனன்"


என்னும் ஜனகர் வாக்கினால் கவியரசர் உணர்த்துகின்றார். இச்செய்யுளின் முன்னிரண்டடிகளால், எண்ணவும் உரியவர்களல்லாத பிற அரசர்களால் விளையும் தீராக் கலகத்திற்கு ஒரு தடைகல்லாகச் சிவதனுவினை ஒரு பணையம் கூறினோம். அரசர் குலமும் ஏமாற்ற மடைந்து திசையையும் நோககித் திரும்பா தொழிந்தது. மலர்மகள் கேள்வனே இன்று வந்து விட்டபடியால் அவர்க்குரிய மங்கையை வணங்கி யளித்து மகிழ்வதற்கு இடையூறாக நான் ஏற்படுத்திய பழைய சபதம் தடுக்கின்றதே, ஆகவே அந்த வில்லால் முடிவில்யானே தோல்வியை யடைந்ததாக மனம் தத்தளிக்கின்றது.

 

தவிர வஞ்சனையாற் பிறரைத் தோல்வியுறச் செய்பவர் எவரும் தாமும் அதே காரணத்தால் ஒரு காலத்தில் ஏமாற்றப்படுவது நிச்சயம் என்னும் விசேடக்கருத்தும் துணியப்படுகின்றது. சொத்திற் குடையவர் வரும் காலத்தில் சோதனைக் குட்படுத்தி அதன் பிறகு அவர் தம் உடமையை ஈவதும் ஒழுங்கோ?

 

ஜனகன் வாய்மை தவறி வில்லைவளைக்காத ஓர் அரசகுமாரனுக்கு மணம் புரிவித்தான் என வரும் பழிக்கும் அஞ்சுகின் எறமை ''நொய்தின் ஐயன் வில் ஏற்றுமேல் என்னையும் இடாக்கடல் ஏற்றும் என்றனன்'' என்று பின்வரும் அடிகளால் இனிது தெளிவாகின்றது.

 

உலகத்தோ டொப்ப வொழுகாதான் மன்ற பலகற்றும் கல்லாதவன் எனும் கருத்து ஈண்டு சிந்திக்கத் தக்க தொன்றாம். யான் தவறுதலாக வில்லை முறிப்பவருக்கே விளங்கிழை உரியவள் எனும் ஓர் நிபந்தனையை அன்று ஏற்படுத்தி யிருந்தாலும் “நங்கையும் நோற்றனள்'' திருமாதும் தனது நாயகனை யடையும் பொருட்டுத் தவம் புரிந்து நிற்பவளாதலின் அவள் நோன்பின் பயனாக இக்குமரன் (லேசாக) வருத்த முறாமல் வில்லை நாணேற்றுவானேல் என்னையும் இடர்க்கடலினின்றும் கரையேற்றியதாகும் என இரங்கித்தனது நிலையை யுணர்த்துகின்றார்.

 

நங்கை தனது பதியை யடையச் செய்த நோன்பின் பயனாக இப்பணியை ஏற்க ஐயன் இசைதல் கூடும். அதனால் நானும் துயர்க்கடலிலிருந்தும் மீண்டவனாவேன் என்று இருவகையிலும் ஏற்படும் பயனை விளக்குகின்றார். தீன தயாபரனாதலின் தலனை இப்பெரிய பொறுப்பினின்று விடுவிக்கும் பொருட்டாவது சபதத்தை முடிக்க வேண்டுமென நயம்பட வேண்டுகின்றார். தாடகை வதம் புரிந்து தனது குலகுருவா கிய சதாநந்தரையீன்ற அன்னை யாகிய அகலிகையின் சாப விமோசனம் செய்தருளிய இவர்க்கு இவ்வில்லை வளைப்பது அற்பகாரியமேயன்றி அசாத்தியமான தன்று. எனினும் இதைச் செய்தால்தான் உமக்குரிய தேவியை நீர் பெறலாம் என துணிந்து கூறுவதெப்படி? எனத் தன்னுள் எழுந்த இடர்ப்பாட்டை அச்செய் யுளால் விளக்குகின்றார். இதனால் பிராட்டியாரின் மனமும் தவறாய வழியில் நெகிழ்ச்சி யுறவில்லை. இராமன் கருத்தும் குறிதவறிப் பாயவில்லை. பிராட்டியாரின் ஞானத் தந்தையும் இவ்விருவர்களின் உரிமை பினை உணரத்தவறி விடவில்லை. பழவினை தொடர்ந்து பற்றும் என்பதையே இவ்வுதார-ணம் வலியுறுத்துகின்றது. அன்றியும் ஆபரணங்களும் மெல்லிய பூம்பட்யான் டாடைகளும் தொன்று தொட்டே அதாவது (பிராட்டியார் அவதரிப்பதற்கு முன்னிருதே) எழிலுடைய மடந்தைமார்களிடம் பழகிவரும் பேற்றினை யுடையவைகளே. பெண்கள் தம்மைப் பின்னும் இயற்கையால் அழத பதித்திக்கொள்ளவே இவைகளை அணிய விழைகின்றனர். ஆனால் பிராட்டியார் அவதரித்த பின் அவ்வணி *ளும் துகில்களும் பிராட்டியாரின் ஒளிவடிவினையடைந்து இது வரையில் தாம் பெற்றிராத ஓர் புதிய அழகினப் பெற்றுச் சிறந்தனவென்று கூறும் நுட்பத்தை எழுத்தினால் எடுத்துக்காட்ட முடியுமோ? பிறரை அழகு செய்யவல்ல பொருள்கள் பிராட்டியாரை அடைந்தமையால் தாமே அதிக அழகைப் பெற்றனவென இடங்கண்டு அமையாவன்பினால் போற்றுகின்றார். இனி,


"எண்ணரு நலத்தினாள் இனைய நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கௌவி ஒன்றையொன்
றுண்ணவும் நிலைபெறா துணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்"


என்ற அடுத்த கவியில் திருக்குறளாசிரியர் “கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனு பில'' என்றமைத்த அமைப்பினையே வடித்துக் கூறுகின்றனர் என்பது உணமையே ஆயினும் கண்ணொ கண்ணிணை நோக்கொக்கின் என்ற குறட்பாவின் அடியை விட ஈண்டு கண்ணொடு கண்ணிணை கௌவி என்று கவிச்சக்கிரவர்த்தி கூறியது அதற்கு முகப்பு இழைத்தது போ லாகும். அவ்விடத்தில் கௌவி என்று அமைத்தருளிய அழகினை எவ்வாறு போற்றுவது? அழகெனும் அதுவுமோர் அழகு பெற்ற தெனக் கூறியதற்கொப்ப கவியரசரின் இன சுவைக் கவிகளாக இராமகதை அமையப்பெற்றதினால் தமிழ்மொழி யின், தானொரு புதிய இன்பத்தினை யடைந்தறுரைத்தலே பொருந்தும். கௌவப்படுவதெல்லாம் உண்ணுதற் பொருட்டே யாகும். ஈண்டு பரஸ்பரம் கௌவப்பட்ட கண்ணிணைகள் அவைகளை யுட்செலுத்த முடியவில்லை என்று விளக்குகின்றார்.

என்னே! ஓர் இந்திரியத்தின் தொழிலை மற்றோர் இந்திரியம் புரியுமோ? ஆகவே கௌவிய கண்ணிணைகள் உண்ண முடியாதவைகளாயின. கௌவியதன் பயன் தான் என்னே எனில், உணர்வு இருவரிடையும் ஒன்று பட்டமைதான் என்றருளி யுள்ளார்.

 

இந்த நிலையிலும் அண்ணலும் நோக்கினான் என முற்பட இராமனே பாலின் தன்மைக் கியல்பாக நோக்கிய பின்னரே, அவளும் நோக்கினாள் எனப் பெண்மை யியல்பு வெளிப்படப் பெய்துள்ளார். எண்ணத்தின் நெகிழ்ச்சி ஒரு தன்மைத்தேயாயினும் அதனை வெளிப்படுத்தும் விடயமுயற்சியில் ஒரு போதும் உத்தமப் பெண்களின் இயல்பு முன்னதாக ஈடுபடாதென்பதுறுதி. ஆண் இனத்திலும் பெண் தன்மையுடைய ஒரு சிலர் இருக்கின்றனர். அவ்வாறே பெண்பாலாரிலும் ஆண் தன்மைபினையுடைய சிலர் இருத்தல் காண்கின்றோம். அவரவர் பாலிற்கு ஒவ்வாத இந்நிலை நல்லோரால் வெறுக்கத்தக்க தொன்றென்பதில் ஐயமில்லை. இம்மாதரி இடங்களில் தான் பேதமை யென்பது மாதர்க்கு (அலங்கரிக்கும்) அணிகலம் என ஒளவையார் அருளியதன் கருத்துநயம் தருகின்றது. தமதெண்ணத்தினை அடக்கிப் புறங்காட்டாது ஆளும் திறம் பெண்களுக்கே யுண்டு. இத்திறமை யமையாதவராகிய ஆண்பாலார் இக்காரணம் பற்றி இவரை அறியாதவா பேதையர் என்று கூறுகின்றனர். அவ்வாறு அவர்களால் எண்ணப்படுவது இவர்கட்குச் சிறப்பாக முடிவ தல்லது இழிவன் றென்பதே மூதாட்டியாரின் கருத்தாகும்.

 

அறிஞரை உணர முடியாதவர்கள் அறிவிலார் எனக் கூறுவதால் அறிஞருக் கிழுக்குண்டோ? தமது அடக்க வுணர்ச்சியின் அளவினைக்காணாத பிறர்தம்மியல்புக் கேற்ப எவ்வாறெண்ணினும், பெண்மைக்குச் சிறப்பாக முடிகின்றதென்னும் நுட்பம் வெளிப்படும் தோடு, அத்தகைய அடக்க வுணர்ச்சியை இன்றியமையாத தருணம் நேருங்கால் கையாளாமல் தமதறிவுடைமையை வெளிப்படுத்தும் இயல்பும் பெண்களிடை யுண்டென்பது தோன்றவே அவயவம் என்று அமைக்காமல் அணிகலம் என்றருளி யுள்ளார்.

 

கண்ணொடு கண்ணீணை கௌவி உணர்வும் ஒன்றுபட்ட இவ்விருவரிலும் பெண்மைக் கியல்பாய அடக்க வுணர்ச்சி தோன்ற அண்ணல் நோக்கத் துணிந்த பின்னரே பிராட்டியாரும் நோக்கியதாகக் கவி விழிப்புடன் அமைத்துள்ளார்.

 

இனி பிராட்டியாரும் தாசரதியும் ஊழின் வலியால் தற்செயலாக ஒருவரை ஒருவர் காண நேர்ந்தமையும், அங்ஙனம் நேர்ந்த கணத்திலேயே இருவர்களின் உள்ளுணர்ச்சியும் ஒத்த வேகத்தில் எழுந்து, தகைய முடியாதபடி கண்களின் வழி கருத்திற்றாக்கி ஆண்மையின் திண்மையையும் பெண்மையின் பெருமையையும் விழுங்கி நிமிர்ந்த தென்பதாகவே கவி கூறுகின்றார்.

 

பெண்களின் நோக்கம் முதற்கண் தோள்களில் சென்று படியும் (நாணம் தலைநிற்பதாகிய) குறிப்பையும், ஆடவரின் நோக்கம் கூசுதலின்றிக் குறிக்கொள்ளும் இயல்பினையும் கூட எடுத்துக்காட்டத் தவறினாரில்லை.


"பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணித்
தொருவரை யொருவர் தம்முள்ளம் ஈர்த்தலால்
வரிசிலை அண்ணலும் வாட்கணங்கையும்
இருவரு மாறிப்புக்கிதைய மெய்தினார்'

 

ஒத்த குலனும், ஒத்த நலனும், ஒத்த இளமையும் உடைய இருவர் தனிமையில் விதி வலியால் எதிர்ப்பட்டு சமமான அன்பில் ஈடுபடுவரேல் பழைய நிலை மாறிப் புதிய மாறுதலை யடைகின்றனர். அந்த மாறுதலே ஈண்டு தம்மை மறந்து ஒருவர் உள்ளத்தில் மற்றொருவரின் ஓவியம் காட்சி யளிக்கத் தொடங்குவதாகும்.

 

என்னே! எதிர்ப்பட்ட ஞான்றே இறங்கு துறையில் நீச்சாயினமை போல இத்துணை தீவிர எண்ணம் எழுவதும் சால்புடைத்தோ? எனும் சங்கை நிகழ்வதியல்பு. அதற்குச் சமாதானமாகக் கவி,


"கருங்கடற் பள்ளியிற் கலவி நீங்கிப்போய்
பிரிந்தவர் கூடிடிற் பேசல் வேண்டுமோ?"


என இவ் விருவர்களின் பழமைத் தொடர்பை நினைவூட்டுகிறார். பழைய கேண்மையாளர் தொடர்பே இத்தகைய சலனமற்ற விழுமிய நிலைமையை விரைந்தடைதல் கூடுமென்பது குறிப்பு.

தனக்கென இதுகாறும் தன்பா லமைந்து கிடந்த எண்ணங்கள் அனைத்தும் புதிதாய்க் குடிபுகுந்த வேட்கை யுணர்ச்சி காரணமாக மறையலாயின. கன்னிகை யாதலின் செயத்தக்க திதுவென அறியாராய் எண்ணமிழந்து செயலிழந்து உயிரில்லாத சித்திரத்திற் றீட்டப்பெற்ற பதுமை போலாயினார் பிராட்டியார்.

 

இவர்தம் சிந்தையும், கற்பும், அவயவப் பொலிவும் இராமனைப் பின் தொடர்ந் தன. இவைகள் தன்னைத் தொடா இளவலாகிய இராமன் விசுவாமித்திரர் பின்பு நடந்து சென்று மறைந்தனர் என்றருளிய கவி இராமனும் முனிவ ருள்ளம் ஐயுறாதபடி எண்ணத்திற் கடிமைப்பட்டுத் தயங்கி நில்லாமல் சென்றனர் என்பதைக் குறிப்பால் உணர்த்துகின்றார். அவ்வாறே பிராட்டியாரின் கண்வழி புகுந்து கருத்திடங்கொண்ட காதனோய் பாலுறுபிரையெனப் பரந்த தென்று மிகப் பொருத்தமாக அந்நோயின் இயற்கையை வெளியிடுகின்றார். அவ்வாறு பாலில் பட்ட பிரைபோற் பரந்துநின்ற தெனினும்,


"நோமுறு நோய் நிலைநுவ லகிற்றிலள்
ஊமரின் மனத்திடை யுன்னி விம்முவாள்"


என உண்மைப் பெண்மையின் ஆற்றுந் திறமையையும் குறிப்பிடுகின்றார்.

 

இத்தகைய நிலையிலும் தன் எண்ணம் முறைகடந்து விட்டதோ? எனும் அச்சமும் தோன்றுகிறது. அதனைத் தெளிவாக்கக்கூடிய சின்னங்களாகிய


"வரிசிலைத் தடக்கையன் மார்பினூலினன்
அரசிளங் குமரனே யாகல் வேண்டுமால்"

என்று கைப்பிடி வில்லையும் முப்புரி நூலினையும் கண்ட காட்சியை நினைந்து சாந்தி யடைகின்றார். உத்தமப் பெண்மணிகள் எப்போதும் பழைமை பாராட்டும் பண்புடையவர் என்பது இதனாற் பெறப்படுகின்றது. இனி கவி மரபுப்படி படிப்படியாக நோயின் வளர்ச்சி அதனா லெய்தும் வேறுபாடுகள் முதலிய தன்மைகளை வெகுவாக விரிக்கின்றார். மறுநாள் அரசவையில் ஜனக மகாராஜன் விசுவாமித்திர முனிவருடன் வீற்றிருந்த அரச குமாரர்கள்ளாகிய இராம லட்சுமணர்களைக் கண்ணுற்றதும், அவர்களை இன்னாரென்றுணர்த்தக் கேட்டதும், குல குருவாகிய சதாநந்தர் முகத்தால் சிவ தநுஸை முறிக்கவேண்டிய அவசியத்தினை விளக்கியதும், அவ்வாறே தநுவினை லேசாக முறித்ததும் கதையின் தொடர்புகளாம்.

 

அவ்வாறு அரசவையில் புதிதாக வந்த அழகிய அரசிளங் குமரன் ஒருவனால் வில் முறிந்தது என்னும் மகிழ்ச்சிக்குரிய செய்தியைப் பிராட்டியாரின் தாதிகளில் ஒருத்தி ஓடிச்சென்று தன் தலைவியிடம் கூறுகின்றாள். ஞானவானாகிய ஜனக மகாராஜரே என்றும் இனி மணமும் இலை என நிராசையுடனிருந்த நிலைமையில் வில் முறிபட்டது எனக் கூறியதனால் கரைகடந்த களிப்பெய்தவேண்டிய திருக்க, பிராட்டியார் தாதி கூறிய குறிப்பில்
 

"கோமுனியுடன் வரு கொண்டல் என்றபின்
தாமரைக் கண்ணினான் என்ற தன்மையால்
ஆம் அவனே கொல் என்றையம் நீங்கினாள்''
       என்றும்,


"இளைய கோவொடும், பராவரு முனியொடும் பதிவந் தெய்தினான்"

 

என்பனவாதி அடையாளங்களையும் எண்ணித் தனக்குள்ளாகவே,


"சொல்லிய குறியின் அத் தோன்றலே அவன்
அல்லனேல் இறப்ப லென்றகத்துள் உன்னினாள்'


என்றும் பிராட்டியாரின் சுயநிர்ணயத்தை வலியுறுத்துகின்றார்.

 

தந்தையால் நிறுவப்பட்ட வில் ஒருவனால் முறிக்கப்பட்ட தாயினும், அவ்வொருவன் தன் மனதில் இடம்பெற்ற அரச குமாரனாக இருந்தால் மணம் புணர்வது வேறு பிறனாயின் இறப்பது என்னும் முடிவுக்கு வந்தனர் என்று தெரிகிறது. காதலுக்காக மணப்பதென்னும் கருத்தே ஈண்டு மலர்ந்து மணம் வீசுகின்றது. மணமும் வாழ்வும் அறிவுடைய இருபாலார்களிலும் ஓர் கட்டாயச் சடங்காக அஞ்ஞான்று ஏற்கப்படவில்லை என்பதும் தெளிவு.

 

முன்னோர் ஒழுக்கத்திற் கடங்கி, நேர்மையான வழியில் ஏற்பட்ட உணர்ச்சியைப் பின்பற்றுவதே மணமெனப் படுகிறது. யௌவனம், இன்பம், இவ்விரண்டினைமட்டில் கருதி இயற்கை விதிகளை மதியாது கொள்ளும் உடன்பாடு மண மாகாமல் நாற்றமாகவே பெரும்பாலு முடிவதென்பது இந்தியப் பெரியார் கொள்கை. தலைகீழும் கால்மேலுமாக நடப்பதே சிறந்த நாகரிக மென்னும் உணர்ச்சி மிக மிக வேகமாய் வளர்ந்து வரும் இந்ற்றாண்டிலும் அப்பழைய கொள்கையாளர்களின் தொகை சுருங்கவில்லை. நிற்க பிராட்டியார் தந்தையார் பிரதிக்ஞையின்படி வில்லை முறித்தவருக்குத் தன்னையளித்தாலும், தன் மனம் இச்சித்த இளைஞனைவிட்டுப் பிறனுக்கு மாலை யிடுவதில்லை - மடிவது என்று மனதை உறுதிப்படுத்தினாரே யொழியத் தடைமீறித் தன்னால் காதலித்த ஒருவனை மணப்பேன் என்று சங்கற்பித்தாரில்லை. வேறொருவன் வில்லை முறித்திருப்பின் தந்தைக்கும் பெண்மைக்கும் பழிவிளைய என் மனதுக்கினிய நாயகனை காந்தர்வமாக வரிக்கின்றேன் என்று கருதினாரில்லை.


இதுவே மதியிற் சிறந்த மாதர் இயல்பு. திரௌபதா தேவியும்,


"பூண்டெரி மார்பன் இன்றிப் பொன்னவை பொலியத் தோன்றி
ஈண்டெரிமுன்னர் மன்னர் இழிவுற வேட்டிலானேல்
மீண்டெரிபுகுவன் என்னும் எண்ணமே விளையும் நீராள்”


என்று இறக்கக் கருதியதாகக் கவி கூறியுள்ளார். இரகசியக்கூட்டம் என்னும் காந்தர்வத்தை விரும்பாமல் அக்கினி சாட்சியாக ஒழுக்கப்படி மணம் புரிதல் வேண்டு மெனவும் வற்புறுத்துகின்றார். இவைகளினாலெல்லாம் தங்கள் வாழ்க்கைக்கு நேர்மையான முறைகளைத் தாங்களே நிர்ணயிக்கும் வயதைடைந்திருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. கிடைக்கக்கூடிய உதாரணங்களெல்லாம் அரசகுல மடந்தையர்க ளிடையில் தான் என்பதும் விளக்கமே. ஆடவர்கள் 16- வயதில் பெறக்கூடிய இயற்கை யுணர்ச்சியின் வளர்ச்சி யளவினைப் பெண்கள் 12-வயதிலேயே நிரம்பப் பெறுகின்றனர். எத்துணை மந்தமதியினராயினும் பதினான்கு வயதிற்குள் நிரம்பாது பெண் அறிவிருப்பதில்லை. அதற்குள் ஏற்படும் உலக அறிவு 60 - வயதிலும் வளரக்கூடியதில்லை. ஏற்படும் அநுபவங்களினால் அவ்வியற்கை செம்மைப்படவும் உரம் பெறவும் இடமுண்டாகின்றது. ஆதியில் குழந்தை மணம் இருந்ததாகவும் எண்ண முடியாது. பாரதநாடு பின்னர் காம துரந்தார்களாய் அறிவிழந்து யதேச்சாதிகாரம் புரிந்த சில துன்மதி யரசர்களின் ஆதிக்கத் துட்பட்டதிலிருந்தே இச்சிசு மணம் தோன்றியிருக்க வேண்டும் ஊகிக்கவேண்டியிருக்கிறது. தர்ம ராஜ்யம் எனப் புகழ்பெற்ற மலையாள நாட்டில் உயர் வகுப்பினரிலேயே என்றும் குழந்தை மணம் அநுஷ்டானத்தில் இருந்ததில்லை என்பதே போதிய சான்றாகும். விவாக விஷயங்களில் பெற்றோர் பெரியோர் தலையீடு வெறுக் கத்தக்கதென்றும், அவரவர்கள் சுயநிர்ணயமே இன்பமளிக்கு மென்றும் சிலர் கருதுகின்றனர். சுயமாகக் காதலித்துக் கூடிய சகுந் தலையின் வாழ்வு பின்னர் யாதாயிற் றென்பதைச் சிறிது நினைவு கூர்வோமாகில் மனித முயற்சி மட்டில் தெய்வாநுகூலமின்றிப் பலன் தரமுடியா தென்பது தெற்றென விளங்கும். பெரியோர் தலையீட்டினால் உள்ள நன்மையும் போற்றப்படும். இதனால் தெய்வா நுகூலத்தை நம்பி மனிதன் தனது கடமையில் பிறழலாம் என்பது மடமையாகும்.

 

அறிஞர்கள் தலைவனாகிய மிதுலாபுரி மன்னன் தன்பால் வளர்ந்து வரும் வனிதாரத்தினம் தாமரை மலரில் வாழும் இலக்குமியே யென உணராதவபல்லர். எனினும் மனிதன் அதிலும் மனிதரையாளுமன்னவன் தனக்குரிய தந்தையின் கடமையைப் புறக்கணிக்கக் கூடாதென்றே பற்பல இன்னல்களை ஏற்றிருந்தனர் என்பது தெளிவு. இனி இவண் இராமன் தநுவினை முறித்ததனால் பிராட்டியாரின் திருமணம் ஜனகர் மன பதில் உறுதிப்பட்டது. தானிதுகாறும் போற்றி வந்த நிபந்தனைப்படித் தனது திருமகளை இராமனுக்கு மணம் புரிவிக்கக்கருதி விசுவாமித்திரர் அனுமதிப்படி தசரத சக்கிரவர்த்திக்குத் திருமுகம் விடுத்தனர். அரசர்க்கரசனும் அளவு கடந்த மகிழ்வுடன் நகர மாந்தர்கள் புடைசூழப் பரிவாரங்களுடன் மிதுலை யடைகின்றார். அவ்வாறு போந்த சக்கரவர்த்தியாரும் அவரை யுள்ளிட்டாரும் கண்டுகளிக்குமாறு அரசவையில் ஜனகர் மங்கல தெய்வமாகிய ஜாநகியை வரச் செய்கின்றார். இதற்குக் கோலங்காண்படலம் எனப் பெயர் அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மணமகளை மணமகன் வீட்டில் மணத்திற்கு முன் காண்பதென்னும் ஓர் முறைமையேயாகும்.

 

இவ்விடத்தில் தான் பிராட்டியார் தம்மனதில் ஏற்பட்ட சந்தேகம் நீங்கித்தாம் கண்ணுற்ற ஆடவர் திலகனே வில்முறித்த வீரன் என்று திடப்படுகின்றனர். இதனைக் கவியரசர்


எய்யவில் வளைத்ததும் இறுத்தது முரைத்தும்
மெய்விளை விடத்துமுதலையம் விடலுற்றாள்
அய்யனை யகத்து வடிவேயல் புறத்தும்
கைவளை திருத்துபு கடைக்கணின் உணர்ந்தாள்.


செய்யுளால் விளக்குகின்றார். பெண்கள் நாணத்தால் கைவளை திருத் தும் வியாஜத்தினாற் காண்பதும் காலினால் மண் கிளைத்து நிற்றலும் இயற்கைக்குண மாதலின் அதனையும் சுட்டுகின்றார்.

செயலருஞ் செய்கை செய்த இரவிகுல திலகனும் தனது இப்பெரிய வெற்றிக்காக அளிக்கப்படும் பெண்ணரசி தான் கன்னிமாடத்தில் கண்ட மங்கை தானோ? அல்லவோ? எனத் தம்முள் நோய் செய்திருந்த ஐயம் நீங்கப் பெற்றனர் என்பதை


"அன்னவளை அல்லள் என ஆமென அயிர்ப்பான்
கன்னியமிழ் தத்தையெதிர் கண்டகடல் வண்ணன்
உன்னுயிர் நிலைப்பதோர் அருத்தி யொடுழைத்தாண்
டின்னமிழ் தெழக்களி கொளிந்திரனை யொத்தான்.''


என்னும் கவியால் விவரித்துள்ளார்.

 

வருந்தி முயன்று அதமும் பெற்ற இந்திரனைப் போன்று மகிழ்ந்தான் இராமன் என்ற கவி ஐயம் நீங்கப்பெற்ற பிராட்டியார் அவ்வமிழ்தத்தை முழுதும் உண்டவளைப் போன்றாள் என்று வெகு விநயமாக,


"அருங்கலன் அணங்கரசி ஆரமிழ் தனைத்தும்
ஒருங்குடனருந்தினரை யொத் துடல் தடித்தாள்''


எனக் கூறியுள்ளார். துன்பம் எய்துங்கால் அதனை மிக மிகப் பெருக்கி வருந்துவதும் இன்பமுறின் மீறிய மகிழ்ச்சியுற்றுத் தம்மையே மறப்பதும் பெண்கள் இயல்பாதலின் அவ்வியற்கைக் கேற்ப இருவகை யுணர்ச்சிகளையும் கவி சீதைபாற் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றார். இங்குதான் உண்மையான விவாக நிர்ணயம் வதூவரர்களுக்குள் நிலைபேறாயிற்று.

 

குலகுருவாகிய வசிஷ்டமுனிவரர் இராமன் விஷ்ணுவின் அவதாரமென்பதை யுணர்ந்தவராதலால், அத்திருமாலுக்குரிய "அல்லிமலர் புல்லும் மங்கை யிவளாமென வசிட்டன் மகிழ்வுற்றான்" என்று கூறுகின்றார். தசரதரோ பிராட்டியாரின் வடிவழகினைக்கண்டு திகைத்து இந்நாள்காறும் நாம்
அடைந்திருந்தது எந்தத் தெய்வத்தின் கடாக்ஷமோ? அந்த கடாக்ஷத்திற்குரிய பிம்பமே இதுவாகும் என்றே என்பாலில் இலக்குமி எய்தினாள் என்று புளகாங்கிதரானார் என்று கூறுகின்றனர்.

 

ஏனையோர் இவ்வொளி வடிவினைக்கண்டதும் கடவுளைக் கண்டவுடன் கைகூப்பும் வழக்கில் அரசகுமாரி யென்கிற எண்ண மறைந்து கரங்குவித்துக் கண்களில் ஆநந்தம் அரும்பச் சித்திரம் போல் அசைவற்று பரவசமாயினார் என்பது மிகவும் ஊன்றி இன்புறத் தக்கதாம். பிராட்டியார் மறுதினம் மணம் புரி மண்டபத்தெய்திய காலையில் விளங்கிய சோபையைக்கண்டு வானவரும் அலைகடற் பிறந்த திருமகள் தாமரைக்கண்ணனை முதலில் மணந்த காலத்திலிருந்ததைவிட இன்றே அதிக அழகுடன் விளங்குவதாக மதித்து மகிழ்ந் என்னே பேரழகின் எல்லையைப் பேசலாகுமோ? காணுந்தோறும் புதுமைக் காட்சியின்பம் வழங்குதல் அவ்வழகிற் கியற்கை யன்றோ? கூறிக்
கூறிச் சலித்த கவிவேந்தர்


"ஒலிகடல் உலகினில் உம்பர் நாகரில்
பொலிவது மற்றிவள் பொற் பென்றாலிவள்
 மலி தரு மணம்படு திருவை வாயினால்
மெலிதரு முணர்வினேன் விளம்பு கேனரோ'


எனக் கூறிப் பிராட்டியார் பேரழகினோடு புதிதாகக்கூடிய திருமணக் கோலத்தினைத் திறம்படக் கூற முடியவில்லையே யென வருந்தும் நிலைமையை ஒரு வாறு எடுத்துக் காட்டுகிறார்.

 

பூவுலகிலும் தேவுலகிலும் நாகர் உலகு முதலிய எல்லா வுலகிலும் பொலியும் பொலி வெல்லாம் பிராட்டியாரின் ஒரு பாக மென்றால் அத்தனைக்கும் இருப்பிடமாகிய இப்பூர்ணப் பொலிவினை மெலிந்த வுணர்வு கொண்டு வாயினால் விளம்ப முடியாதெனக் கவியரசர் பின் வாங்கினாரெனில் வேறு சிறப்பும் வேண்டுவதோ?


"கோமகன் முன்சனகன் குளிர் நன்னீர்
பூமகளும் பொருளும் மென நீ என்
மாமகடன் னொடு மன்னுதி யென்னாத்
தாமரை யன்ன தடக்கையி னீந்தான்"


என்ற கவியினால் இராமன் சீதேவி பூதேவிகளாகிய உபய சக்திகளையுடைய திருமாலே யெனவும், அவ்விருவரும் ஒருருவிற்றிகழும் எனது மாமகடன்னொடும் (இலக்குமியாகிய பெண்ணி னொடும்) நிலைபெற்று வாழ்குக என்ற குறிப்பினால் பிராட்டியாரின் அவதார இரகசியத்தினை அறிந்துள்ள பண்பும் வெளிப்படுகின்றது.

 

பிறமணவினைக் குரிய சடங்குகள் யாவும் முனிவரர் முறைப்படி யியற்றினர். ஜனகரின் தம்பியாகிய குசத்துவஜன் என்னும் அரசரின் குமாரத்திகள் மூவரையும் பரதராதி மூவருக்கும் திருமணம் புணர்த்தியதாகவும் யாவரும் இன்புற்று அம்மிதுலாபுரியிற் சின்னாள் வைகிப் பின்னர் அயோத்தியையடைந்ததாயும் தெரிகிறது. பிராட்டியார் இதுகாறும் கவலையின்ன தென்றறிய வேண்டிய காலத்தை எதிர்ப்படவில்லை.

 

அயோத்தியில் எய்தி அரசபோகத்தை இயற்கை நியதிப்படி இருவரும் துய்த்து வருநாளில் மன்னன் இராமனுக்கு முடிபுனைவிக்க எண்ணுவதும் அதன் காரணமாக அரண்மனைக் கலகமும் வரத்தினாற் பிணிப்புண்ட அரசன் வருத்தமும் மாற்றாந்தாயின் கட்டளைப்படி இராமன் வனம்புகத் தீர்மானித்ததும் கதையின் தொடர்பாய நிகழ்ச்சிக ளென்பது எவரும் அறிந்த தொன்று. மாசற்ற மனதொடு ஒப்பற்ற சுகபோகக்கடலில் உயிரும் உடலும் போல் திளைத்திருக்கும் பிராட்டியார் தனது நாயகன் முடிபுனையும் உரிமை யிழந்து வனம் புகநேரிட்டதை நாயகனே உணர்ந்த முதலில் உணர்கின்றார்.

 

பேரழகு நிறைந்து பிறந்ததாகக் கூறப்படும் இருபாலார்களிலும் அதற்குப் பொருத்தமாகிய செல்வாநுபவமோ, மனமகிழ்ச்சியோ அமைவதாக நாம் சென்ற உதாரணங்களினாலாவது, கண்ணெதிர் நின்ற உதாரணங்களினாலாவது காணவில்லை. என்றாலும் அழகுடை வடிவங்களை விரும்பாத மன்பதையும் உலகில் இல்லை. இத்தகைய பலர் மனதையும் கவரக் காரணமாயிருக்கும் அழகிற்குப் பயன் அதிர்ஷ்டம் அல்லவாயினும் அழியாப் புகழை நிலைநிறுத்தத்தக்க சிறந்த குணங்கள் என்பதில் ஐயமில்லை.

 

இதுகொண்டே நாம நூல் பகரு முன்னூலோர் இலங்கெழி லளவு குணமென விசைப்பர் என்றனர் அழகிலக்கண நூல் உணர்ந்த அறிஞர். குணங்களால் எய் துவது ஒழுக்கம், பரந்ததயை ஆகிய பலவும். இவைகளினால் தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்தற் கிடமுண்டாகிறது. இதனால் முத்தி யெளிதாகின்றது. ஆகவே பிரமன் படைப்பில் அமையும் பெரும் பொலி வெல்லாம் அன்னார் அருங்குணங்களையே உணர்த்துவதாகுமென்ப தெளிவு. இந்நியதியைப் பிராட்டியார் மட்டில் கடக்க முடியுமோ? அவரது தூய நறுங்குணங்களை வெளிப்படுத்த வேண்டிய காலதேவதையின் கடமை ருக்கொள்வதற்கு இவ்வரண்மனைக் கலகம் காரணமாயிற்று. அழகிற்கும் அதிர்ஷ்டத்திற்கும் ஒருவித தொடர்பு மில்லை என்பதற்கு இச்சரிதமே போதிய சான்றுமாகும்.

 

மன்பதைகள் சோரவும், மன்னவர் தயங்கவும், சம்பரனை வென்று அமரர் கோமானின் சஞ்சல மகற்றி உலகனைத்தினையும் அடிப்படுத்திப் பல்லாயிரக் கணக்கான வருஷங்கள் உறுபகையின்றி மன்னுயிர்களையும் தாவரமாதி இன்னுயிர்களையும் தன்னுயிர் என ஓம்பி வந்த சக்கரவர்த்தி ஆவி நீங்கவும், மக்களை மாதர் மறக்கவும், ஒக்கலையுரியர் துறக்கவும், ஏற்பட்ட இவ் வனவாஸத்தில் சிறிதும் கவலையுறா தவர் நமது பிராட்டியார் ஒருவரே யென்பதை மறுப்பதற்கில்லை. பெண் பாலார்கட்கு அற்ப வஸ்துக்களிலும் பற்றுவிடுவதில்லை என்பது இயற்கையே. உடைந்த பாண்டங்களையும், சிதைந்த ஆடைகளையும், ஓட்டையான தட்டு முட்டுகளையும், நைந்த நாண்களையும் ரஸம் குன்றிய கண்ணாடிகளையும் காதற்ற ஆசிகளையும் கூடப் புறத்திலெறிய மனம் வராமல் வைத்துப் போற்றும் குணம் செல்வர் வீட்டில் பிறந்த சீமாட்டிகளுக்கும் உண்டு. இதனைத் தவறாகக் கருதிக் குறிப்பிடுவதன்று. அன்னிய நாட்டுச் சாமான்களை விட நம் நாட்டில் செய்யப்பட்ட ஒடிந்த மரப்பதுமையும், முறிந்த தடியும், அறுந்த வாருள்ள பாதுகையும் கூட ஒவ்வோர் விஷயங்களுக்கு உதவும். ஆனால் பிராட்டியார் அரச குடும்பத்தில் வளர்ந்து அரச போகத்தில் திளைப்பவராதலால் அற்பமான மேலே சுட்டியபடியான சாமான்களைக் கண்டிருக்கவு முடியாது. என்றாலும் தனது சுகபோகங்களுக்கு இன்றியமையாத பல பல சிறந்த பொருள்கள் மனதைக் கவரத்தக்கவைகள் அரண்மனையில் இருப்பதியல்பு. அவைகளைப் பிரிவதிலாவது, அகண்ட பூமண்டலாதிபத்தியம் கணத்தில் தனக்கு இல்லை யென்கிற முடிவைக் கேட்டதினாலாவது, ஆடையாபரணங்கங்களை எண்ணியாவது அல்எல் கூர்ந்திருக்கக்கூடாதோ?

உண்டையில் அகப்பற்றறுத்த ஆத்மஞானியர் வணங்கும் ஆசானாகிய ஜனகரால் வளர்க்கப்பட்ட இவருக்கு இவைகளிலெல்லாம் மயக்கம் உண்டாகாதது இயற்கையே யாகும். தனது உயிரினும் சிறந்த காந்தனைப் பிரிந்திருப்ப தொன்றே அவருக்கு சகிக்கக்கூடாததாகத் தோற்றியது. அதிலிருந்தும் தான் விடுதலை பெற்ற தொன்றே அவருக்கு அளவிறந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஈசனோடுறவு கொள்ளப்பெற்ற மெய்யறிவினர் உலகாயதப் பொருள்களை எண்ணி யிரங்குவரோ? அழியாப் பேரின்பமெய்தினோர் அழியக்கூடிய புன்மை யின்பங்களை வெறுப்பது போலவே பிராட்டியாரும் மரவுரி புனைந்து மன்னனோடு வழி கடக்கத் தொடங்கினர்.

 

பொன்னிடத்து மையல் கொள்வோர் மாந்தரே யன்றிப் பொன்னல்ல. அதுபோல, பாக்கிய தேவதைக்குப் பாக்கியங்களில் பற்றிருப்ப தெங்ஙனம்? இவ்வாறு சென்றவர்களைத் தொடர்ந்து சென்ற தேர்ப்பாகனாகிய சுமந்திரன் விடை கொண்டபோது பிராட்டியார் கூறியதாகக் கவியரசர் தீட்டியுள்ள,


''அன்னவள் கூறுவாள் அரசர்க் கத்தையர்க்
கென்னுடை வணக்க முன்னியம்பி யானுடைப்
பொன்னிறப் பூவையும் கிளியும் போற்றுகென்
றுன்னுமென் தங்கையர்க் குணர்த்துவா யென்றாள்.''


எனவரும் செய்யுளினால் பிராட்டியாரின் கவலை யின்மையும் இளமைக்குரிய களங்கமற்ற மன நிலைமையும், மாமன் மாமியர்பால் சிறிதும் குறையாத மரியாதையும் தெற்றெனப் புலனாகின்றன.

 

முடிசூட்டக் குறித்த தினத்தில் முற்றுமிழந்து பஞ்சைகள்போல் பறக்கவடித்த மாமிக்கு உலகில் எந்த மருகி வணக்கமுள்ள வழிபாட்டினைத் தெரிவிப்பாள்? இஃதொன்றே பிராட்டியாரின் மனிதவியல் கடந்த புனிதத் தன்விளக்குவதாகும். தான் வளர்த்த பூவை, கிளி இவைகளின் மீதுள்ள நேயமட்டில் இவர் உள்ளத்தில் இடம்பெற்றது. உயிர் நேயமாகிய கருணை தெய்வ குணமாதலின் அதனை மறந்தாரில்லை. இது குறித்தே முதலில் சதானந்தர்,


"குணங்களை யென் கூறுவது
கொம்பினைச் சேர்ந்தவை யுய்யப் பிணங்குவன.'


என எடுத்துக் காட்டியுள்ளார் போலும். இவர்கள் சென்றபறடைதலால் கங்கைக் கரையில் வதிந்த தபோதனர், அனைவரும் தாங்கள் அடைய விரும்புவதாகிய (செல்கதி) மோட்சவின்பமே தம்மை நாடி வந்ததாகக் கருதிப் பெருமகிழ்வெய்தினர் என்று கூறிய கவி பிராட்டியாரை அத்தவத்தினர் கண்ட போது,


"பெண்ணினோக்கும் சுவையிற் பிறர் பிறர்க்
கெண்ணினோக்கி யியம்பரு மின்பத்தைப்
பண்ணினோக்கும் பராவமுதைப் பசுங்
கண்ணினோக்கினர் உள்ளங் களிக்கின்றார்.'


என இன்புற்றனர் எனக் கவி எடுத்துக் காட்டுகிறார். பிராட்டியாருடைய தெரிசனத்தினால் தவக்கனலால் வற்றிச் சுருங்கியிருந்த விரதியர்களின் கண்களும் குளிர்ச்சியும் மகிழ்ச்சியும் பெற்றன என்பதைக் குறிப்பதாகப் பசுங்கண்ணினால் என்று கவி போற்றுகின்றார். முற்றத் துறந்த முனி - ர்களுக்கும் நாவினார் சுவை காண்பதுபோல் காட்சியின் காட்சியின் சுவையைக் கண்களால்காண்பதில் உணர்ச்சி எழுந்தது.

 

பண்ணி னோக்கும் பராவமுதமாகவும் அறிவாற் பருகி யின் புற்றனர் என்றும், பிறர் பிறர்க் கெண்ணி னோக்கியியம்பரும் இன்பத்தை என்றும் குறித்தலால் இன்னதென இயம்பொணாத பேரின்பக் காட்சியென ஒருவாறு முடிக்கின்றார். இதனாலெல்லாம் பிராட்டியாருக்குத் துன்பமென்பது ஒரு சிறிதும் உள்ளத்தில் கால்கொள்ளவில்லை யென்பது தெளிவாகின்றது. செல்வம், பதவி, போகம் இம்மூன்றிலும் இச்சைகொள்ளாத ஓர் அரச புத்திரியை எவ்வாறு துதிப்பது? திருவருட் பிரகாசவள்ளலார் தெய்வமணி மாலையில்,


“நிலையுறு நிராசையாம் உயர் குலப் பெண்டிர்"


என எடுத்தாண்டிருப்பது ஈண்டு நினைவிற்கு வருகிறது. நிலைத்த நிராசையே வடிவமான மனைவியரைப் பெற்ற பேற்றினாலேயே ருஷ்ய ஞானியாகிய டால்ஸ்டாயும், மகாத்மா காந்தியடிகளும் சூரிய பிரகாசம் போல் இன்றும் உலகில் பிரசித்திபெற்றொளிர்கின் ரறனர் என்பது மிகையாகாது. பிராட்டியார் வனத்திற்குத் தானும் உடன் வரும் விஷயத்தில் இராமரின் கருத்தை நிராகரித்து எவ்விதமாகவோ தன் எண்ணத்தை இராமர் ஏற்கும்படி செய்த சக்தியை நோக்கும்போதும், பின்னால் மாய மானைப் பற்றித் தருதல் வேண்டும் என்கிற அவாவினால் ஒருங்கே இராமர் இலக்குவர் ஆகிய இருவர்களின்
முயற்சியும் பயன்படாமற் செய்ததாகிய ஆற்றலையும் நோக்குங்கால், பிராட்டியாருக்கு அரசுரிமையில் ஆசையிருந்திருக்குமேல் இராமன் இந்த விரதத்தினை ஏற்றிருக்கவு முடியாமல் தவிர்க்கவும் நேர்ந்திருக்கலாமென்று ஊகிப்பதும் மிகையாகாது. உண்மையாகவே தந்தையும் தாயும் இட்ட கட்டளை யாதாயினும் அதை ஏற்க வேண்டியதே கடமை என்பது பிராட்டியாரின் திடமான எண்ணமாதலின் இதற்காக ஏனைய நஷ்டங்களை ஒரு பெரிதாக எண்ணவில்லை; அன்றியும் சிற்றின்ப மெனப்படும் உலக போகத்திற்காகவே ஆண் மகனொடு பெண்மகளின் கூட்டுறவு ஏற்பட்டதாக எண்ணியிருந்தாலும் மரவுரியுடுத்துத் தவக்கோலம் பூணத் தயங்கியிருப்பர். அத்தகைய சிறுமைக் குணமும் இன்றி தியாகத்திற்கு அஞ்சாத பெருந்தகைமை பிராட்டியாரிடம் இருந்தது. என்பிடைக் கலந்து பரிணமித்த தூயமெய்யன்பே தனது கேள்வனைப் பிரியமுடியாத நிலையை உண்டுபண்ணியது.

 

பிரதான அம்சமாகிய அரச போகத்தைத் துறந்தது பற்றி ஒரு சிறிதும் குறுக்கிடாது தன் தவ ஒழுங்கினைத் தானும் பின்பற்றிய பிராட்டியாரின் குணத்தின் நேர்மை கண்டே இராமனும் சிறிய கொள்கையாகிய உடன் போதலுக்கு இசைந்தவராயினார். இந்நிகழ்ச்சியினால் மகளிரின் கருத்து ஒற்றுமைப்பட்டிருப்பதனால் போதரும் நன்மையும் புலனாகின்றது. எத்தகைய வீரப்பிரதாபர்களாயினும் வீட்டிலுறையும் பெண்கள் இணக்கம் பெறாரெனின் அவர்தம் முயற்சி முற்றுறாதென்பது திண்ணம். சக்கரவர்த்தியின் ஆணை அவர் மனைவியாகிய கைகையினால் அழிக்கப்பட்ட தொன்றே இதற்குத் தக்க சான்றாகும். பிராட்டியார் கணவனின் நிராசைக்குத் துணை நின்றதொன்றே அவர் புகழ் நிலவுலகில் நின்று நிலவுவதற்கும் தக்க உதாரணமுமாகும். இத்தகைய பிராட்டியாரைத் தபோதனர்கள் நிவர்த்தியின் சோபையாகவே தரிசித்து இன்புற்றதில் வியப்பென்னை? செல்வந் துறந்ததில் மனத்தே சிறிது வருத்தம் இருப்பினும் அது புறத்தே மறைக்க முடியாதிருக்கும். களங்கமற்ற உள்ள ரமுடைய இவர் திருமுகம் கண்ட முனிவரர்களது இதையங்களை ஆநந்தப்படுத்தி ஆந்தத்தின் அடையாளமாகிய விழி நீர் அரும்பிக் குளிர்ந்தனர். இது பற்றியே கவியரசர் பசுங் கண்ணிற் கண்டனர் எனப் பகரத் துணிந்தனர் போலும்.

 

இத்தகைய பிராட்டியார் சித்திரகூடத்தில் இலக்குவனால் அமைக்கப்பட்ட தழைக்குடிலில் கவலாது புகுந் தமர்ந்தனர். இராமன் மட்டில் அதுகண்டு மனம் சகியாது,


"மிதிலையர்கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தாவிலெம்பிகைச் சாலை சமைத்தன
யாவை? யாதுமிலார்க் கியையாதவே.''


என எண்ணி இரங்குகின்றார். ஆனால் பிராட்டியார் அவ்வாறும் எண்ணியதாகத் தெரியவில்லை. பின்னர் இராமனை நாடி வனம் போந்த பரதனால் சக்கரவர்த்தி இறந்தமை யுணர்ந்தபோது தான்,


“அன்னமும் துயர்க்கட லடிவைத் தாளரோ''


எனக் கவி கூறினர். கண்டோரையும் மகிழ்விக்கும் களிக்கடவுளாக விளங்கிய காரிகை துன்பமாகிய கடலிடை இறங்கத் தொடங்கி அடியிட்டார் என்று விளங்குகின்றது. தனது நாயகனுக்குரியதாய நானிலத்தினை மாற்றாந் தாய் மகனுக்களித்ததோடு நில்லாமல் வனத்திற்கும் செலுத்திய அரசன் இருந்தாலென்? இறந்தாலென்? என மக்களினத்திற் பிறந்த எவருமெண்ணுவர். நமது ஜானகிக்கோ அத்தகைய எண்ணம் கடுகளவும் தலைகாட்டவில்லை. முடியா முடிமன்னன் முடிந்தமை கேட்டு ஆற்றாது வாய்விட்டாற்றினர். புல்லினாலும் தழைகளினாலும் அமைக்கப்கப்பட்ட பிராட்டியார் இருந்த தவச்சாலையையும் அதிலிருந்த ஜனக புத்திரியையும் கண்ட பரதன் மனம் சிதறி,


"கைகளிற் கண்மலர் புடைத்துக் கான் மிசை
அய்யன் அப்பரதன் வீழ்ந்தரற்றினான்.''


எனக் கவிவேந்தர் பரதனது துன்பத்தினைக் குறிப்பிடுகின்றார்.

 

வனம் புகப் பணித்த கைகேசியுள்பட மாமிமார்கள் பூவையைத், துன்னி மார்புறத் தொடர்ந்து புல்லினார் எனக் கூறுவதனால் வன்மங்கொண்ட கைகை யுள்ளமும் பிராட்டியாரின் தனிமையையும் எளிமையையும் காணத் தரியாது கரைந்ததெனில், அன்புடைய பிறர் நிலையை அளப்பதெங்ஙனம்? பிராட்டியார் படிப்படியாகத் துன்பக் கடலின் ஆழ்ந்த விடத்தை யணுகுவதற்கு இந்தத் துக்காரம்பமே கால்கோள் விழா வாகியது; பிறகு சாபத்தினால் அரக்கர் வடிவங்கொண்டு உணர்விழந்து வனத்திலுழன்ற விராதனால் கவரப்பட்டு உடனே மீட்கவும் பட்டனர் பிராட்டியார். பின்னா
லெய்தும் பெருங் கேட்டிற்கு முன்னாலெய்தும் அறிகுறியாகவும் கொள்ளலாம். இதை யடுத்து நேர்ந்த நிகழ்ச்சி சூர்ப்பநகையாகிய இராவணன் தங்கையின் வரவேயாகும்.

 

அரக்கர் குலமனைத்து மடிய வேண்டிய காலம் மிகமிக நெருங்கியதால் ஊழினால் உந்தப்பட்டனள். இவ்வரக்கி, தற்செயலாகப் பஞ்சவடியையடைந்து, அங்கே வசிக்கும் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினனாகிய இராமனைக் காண்கின்றாள். மூவுலகமும் தடையின்றிச் சஞ்சரிக்கும் இக்கொடியாள் இராமனது சவுந் தரியத்தினைக் கண்டு திகைப்புற்று போதிசயமெய்துகின்றாள். அவ்விடையில் சாலையினின்றும் வெளிவந்த பிராட்டியாரையும் காணப் பெறுகின்றாள். இவ்விடத்தில் கவியரசர் அரக்கரென்னும் வனத்தைச் சுட்டெரிக்கப் பிறந்திருக்கும் கற்புக்கனலாகிய பிராட்டியாரை
“வான்சுடர்ச் சோதி வெள்ளம் வருவது போலக் காண்கின்றாள்'' என ஆரம்பக்காட்சியிலேயே அவதார ரகஸ்யத்தினையும் காட்சிக்கினிமையையும் உணர்த்துகின்றார். சோதி யென்பதே கண்கவர் தன்மையைக் காட்டும். அதிலும் சுடர்ச்சோதி யென்பது தனக் கொப்பாயதும் மேம்பட்டதும் வேறிலாத தென்பதை மீமிசையாகக் குறிக்கின்றது. அதனிலும் ஒருபடி சென்று வான்சுடர்ச்சோதி என்பது, பிராட்டியாரின் தோற்றம் மனித நீர்மை கடந்தது என்பதைத் தெளிவுபடுத்துவதாகும். இவ்வாறு திடுக்கிட்ட சூர்ப்ப நகை தானே தன்னுள்,


"உருவிங்கி துடையராக மற்றையோர் யாருமில்லை
அரவிந்த மலருள் நீங்கி யடியிணை படியிற்றோயத்
திருவிங்கு வருவாள் கொல்லோ?"


என்று எண்ணித் திகைத்து நிற்கின்றாள். இவ்வாறு தான் பிறந்தது தொட்டிதுகாறும் காணாத காட்சியைக் கண்டு திகைப்புற்ற அரக்கி வேறு சிந்தனை தொன்றாமல் நெடுநேரம் நோக்கி நோக்கிப் பின்னர் ஒரு முடிவிற்கு வருகின்றாள். அதாவது சிருஷ்டி கர்த்தாவின் திறமையின் குறைவேயன்றி அழகென்பதற்கு ஓர் எல்லையில்லை யென்பதே யாகும். இதனைப்,


"படைக்குநர் சிறுமையல்லால் எண் பிறங்கழகிற் கெல்லையில்லையா
மென்று நின்றாள்."


எனும் தொடரினாற் சுட்டுகின்றார் கவியாசர். அன்றியும்,

 

"கண்பிற பொருளிற் செல்லா கருத்தெனில் அஃதே கண்ட

பெண்பிறந் தேனுக்கென்றால் எனப்படும் பிறருக்கென்றும்''

 

எண்ணியதாக எடுத்துக் காட்டுகின்றார். பெண்கள் பெண்களைக் காண்பதனால் எவ்வித தடுமாற்றமும் ஏற்படாது, மயக்கம் பிறவாது, இச்சையெழாது, வியப்பொன்றே ஏற்படும். அத்தகையான இயற்கைச் சட்டத்தினையும் கண்டது போதுமென்று கண்களையும் கருத்தையும் பறித்துத்திருப்ப எனக்கே முடியவில்லை யென்றால் இவளது பேரழகின் பிரவாகத்தை ஆடவராகப் பிறந்தார் காளின் அவர் நிலை யாதாகும்? என அலமரல் எய்தினாள் என்பதே அதன் பொருள். சூர்ப்பநகை இவ்வாறு கண்கவர் வனப்புடைய காட்சியைப் பற்றிப் பல படச் சிந்தித்துத் திகைத்து நிற்கையில் சாலையிலிருந்தும் வெளிப்பட்டுவந்த பிராட்டியார் இராமனை யணுகி யருகில் நின்றனர். தனித் தனியாகக் கண்டே மனதாலும் வருணிக்க முடியாத அழகினையுடைய அவ்விருவரும் ஒருங்கே சேர்ந்து நின்றதைக் கண்டபோது எவ்வாறு மதிப்பிட முடியும். உண்மையில் சூர்ப்பநகை அரக்கியாயினும் பழந்தவம் புரிந்தவளே யாதல் வேண்டுமென இதனைப் படிப்போர் எவர்க்கும் தோன்றாமலிருக்க முடியாது.

 

புண்ணிய முடையோர்கட்கன்றி இவ்வொருமைப் பொற்பின் பொருவில் காட்சி காணக்கிடைக்குமோ? தலைகளையறுத்து ஓமத்தீயிலிட்டு பல்லாயிரமாண்டுகள் தவம் செய்தவனாகக் கூறப்படும் இலங்கேசனுக்கு இந்த தெரிசனம் வாய்க்கவில்லை. தேவ காரியத்தினை முடிக்கத் தோன்றிய பிரதமபாத்திரம் சூர்ப்பநகையே யாதலின் இவ்வொப்பில்லாத சன்மானத்தைப் பெறத்தக்கவளாக எண்ணுதலே சால்பு. இவ்வாறு இருவரையும் ஒருங்கே கண்டபோது அவ்வாக்கி ஒப்பு நோக்கி,


"கருதமற்றினி வேறில்லை கமலத்துக் கடவுடானே
ஒருதிறத் துணரநோக்கி உருவினுக் குலக மூன்றின்
இருதிறத்தார்க்கும் செய்த வரம்பிவர் இருவர் என்றாள்.'


எனக் கவி முடிவு காண்கின்றார். இராமாயணம் முழுமையும் தேடினாலும் இருவரிலும் எவர் பொலிவு சிறந்ததென்றறியவோ, சமமென்றுன்னவோ இடமில்லை. சூர்ப்பநகை வாயிலாகத்தான் கம்ப நாடர் இருவரும் தனித்தனி இருபாலார்க்கும் அழகின் எல்லையைக் காட்ட இரு உதாரணங்களாகப் பிதாமகரால் படைக்கப்பட்டவர்கள் எனத் துணிந்து கூறுகின்றார். உயர்வு தாழ்வின்மையே வெளிப்படுகின்றது. இத்தகைய சிறப்பமைந்தோர் தம்பதிகளாக அமைவது தரணியில் இல்லை. நிறையும் குறைவுமாகவே இணைக்கப்படுவதியல்பு. இயற்கைக்குமாறாக இது நிகழ்ந்திருக்குமாயினும் இத்தகைய மெல்லியலைக் கல்லும் முள்ளும் செறிந்து வனசரரே சஞ்சரிக்கத்தக்க வனத்திற்கு அழைத்துவந்து அல்லல்தர எவன் துணிவான்? ஆதலின் உரிய மனை
வியுமல்லள். அழகினாற் காதலித்துச் சேர்ந்த சோர நாயகியாகவே யிருத்தல் கூடும். அங்ஙனமாயின் இவ்விருவரிடையும் மனவேற்றுமையை உண்டாக்குதல் வேண்டும். அது முயன்றால் முடியும் எனத் தனக்குள் ஆலோசிக்கின்றாள்.
உருவத்தால் இகழவோ இடமில்லை. குணத்தாற் கொடியவளெனக் கூறுவது சரியான உபாயமாக எண்ணினாள். இவ்வளவு சித்தாந்தம் செய்ய வல்ல சூர்ப்பநகைக்கு இவ்வுபாயம் புதியளாக வந்த தன்னால் பழகிவரும் அவர்களுக்குள் பயன்படும் படாதென்பது ஏன் புலப்படவில்லை என்று வாசகர்கள் கருதலாம்.

 

இராமனைக்கண்டது முதல் அவரது சவுந்திரியத்தில் மூழ்கி மதிகெட்டு எவ்வாறாயினும் அவரையடைந்தாலன்றி உயிர் வாழ்வதில்லையென்று பேதுறும் நிலையே சூர்ப்பநகை நிலை. கரைகடந்து பொங்கும் கடல்போல் அவளது காதல் நோய் வளரத் தொடங்கியது. பேரறிவுடையாரும் இந்நோய்க்குள்ளாவரேல் கண்ணிழப்பர் என்பது மறைமொழியாகும். அங்ஙனமிருக்க கட்டுக் காவலையும் பழிபாவத்தையும், நாணம் மடம் முதலிய ஒன்றையும் அறியாது இச்சைப்படி முயலும் இயற்கையையுடைய இந்த சூர்ப்பநகை எவ்வாறு கண்ணுடையளாயிருத்தல் கூடும்? எவ்வகையிலாவது பெண்ணழகியைப் பிரித்தாலல்லது ஆணழகன் வசப்படான் என்று திண்ணமாக எண்ணினாள். பிரித்தாளுந்தந்திரம் சுயநலம் விழைவோர்பால் எந்த யுகத்திலும் கைக்கொள்ளப் பட்ட ஓர் ஆயுதமென்பது புலப்படுகின்றது. இம்முடிவுக்கு வந்த அரக்கி இராமனை நோக்கிப் பின்வருமாறு கூறலானாள்.


"வரும் இவள் மாயம் வல்லாள் வஞ்சனை யாக்கி நெஞ்சம்
தெரிவிலள் தேறுந்தன்மை சீரியோய் செயலிற் றன்றால்
உருவிது மெய்யதன்றால் ஊனுகர் வாழ்க்கை யாளை
வெருவினேன் எய்திடாமல் விலக்குதி"


என இகழ்ந்தனள். இவைகளினாலேயே இவள் புல்லிய தன்மையை இராமன் உணர்ந்து சாலையை விட்டு அகலும்படி எச்சரித்து சந்திக் கடனாற்றச் செல்கின்றார். சூர்ப்பநகை, இப்போழகி இவன்பால் இருக்கு மட்டும் இவன் என்னை விழையான்; இவளை வெள்விச் செல்வேன் என்று எண்ணி முயல எத்தனிக்கையில் இவைகளைப் புறத்தேயிருந்து கவனித்துக் கொண்டிருந்த இலக்குவன் ஓடிவந்து வல்லரக்கியின் மூக்கு காது முதலிய உறுப்புக்களைக் கொய்து வீழ்த்தினான். சூர்ப்பநகை இதனையும் சகித்துக்கொண்டு அவர்களில் ஒருவருடனாகிலும் சுகிக்க நேர்ந்தால் போதுமெனப் பின்பும் முயன்றாள். ஒன்றும் பயன்படா தொழிதலின் வன்மம் கொண்டு கரதூஷண திரிசிரனாதியரைப் போர் செய்யத் தூண்டுகிறாள். கடல்போல் நெருங்கிய கரனாதியர் படை ஒரு முகூர்த்தத்தில் மாய்ந்தது; கானாதியரும் மடிந்தனர்.

 

பிறகு இலங்கேசனிடம் சென்று தன்னைத் தாபதர் அவமானம் செய்ததையும் பிராட்டியின் பேரழகையும் விவரித்து அவ் வரிதையைக் கவரும்படி போதித்தாள். அதுவே அவன் வாழ்க்கையின் இறுதி ஓலையானமையினால் இனிதாக ஏற்று அதற்குரிய உபாயமாக மாமனாகிய மாரீசனிடம் சென்று அவனைக்கொண்டு இராமனைச் சீதையினின்றும் பிரிக்கும் உபாயம் செய்யத் தூண்டுகின்றான். இதன் மேல் விளைவாகிய மாரீசன் வருகை தான் பிராட்டியாரின் பெருஞ்சோதனையின் தோற்றுவாய். பொன்மானாகி வந்த உருவம் பிராட்டியின் மனதைக் கவர்ந்தது. அதன்மாட் டெழுந்த ஆசை அடக்க முடியாததாயிற்று. ஆகவே அதனைப் பற்றித் தரும்படி இராமனை மிகவும் வற்புறுத்தி வேண்டினார். இராமனுக்கும் ஏறக்குறைய பிராட்டியாரைப் போலவே அம்மானின் அழகில் விருப்ப மெழுந்தது. இதனைக் கவிவேந்தர் வெகு பொருத்தமாக,


"சேக்கையினரவு நீங்கிப் பிறந்தது தேவர் செய்த
பாக்கிய முடைமையன்றோ அன்னது பழுதுபோமோ.''


என ஆரம்பத்திலேயே சமாதானம் கூறுகின்றார். பொன்னால் இயல்பாகவே ஒரு மிருகம் புவியில் தோன்றுமா? என்பது இராமர் மனதில் படவேண்டியதிருக்க, இதனை மாயமென்றெண்ணி அறிவுறுத்திய இளவலையும் அசட்டை செய்து அதனைப் பற்றவே முடிவு கொண்டு தொடர்ந்தனர் என்பது பேரறிவாளனாகிய இராமனுக்குப் பெருமை தராதென்பதைக் கவி யுணர்ந்தே தொடக்கத்திலேயே அவர் எந்தக்காரியத்திற்காகப் பிறந்தாரோ, அந்தக் காரியம் தேவகாரிய மாதலின் அது முடிவுறாது பழுதுபடா தென்று நினைவூட்டினார் போலும். பிரானுக்கே அந்த உருவத்தில் விருப்பம் ஏற்பட்டபோது பெண்மை யுடைய பிராட்டியாருக்கு அவ்விருப்பம் பெரிதா யிருந்ததில் வியப்புண்டோ? பிரான் விருப்பத்தினை விடப் பிராட்டியாரின் பெருவிருப்பமே ஈண்டு தேவகாரியத்தை முடித்து வைக்க ஏற்பட்ட தூண்டுகோலாகும். பிராட்டியார் விருப்பம் முற்றிப் பிணக்காக முடியும் பான்மை கண்டே இராமன் விரைந்து சென்றதும், தடுத்த தம்பிக்குப் போலிச் சமாதானம் புகன்றது மென்பதும் தெளிவே.

 

முன்னர் அயோத்தியில் மந்தரையினால் போதிக்கப்பட்ட கைகையின் மாசற்ற மனம் திரிவுற்றதற்குக் காரணமாகக் கவி இமையோர் மாயையின், அவர் பெற்ற நல்வர வுண்மையாலும், ஆயவந்தணர் இயற்றிய அருந்தவத்தாலும், தேவி தூயசிந்தையும் திரிந்தது எனக் கூறுகின்றார். இயற்கையான மனநெகிழ்ச்சியும் எண்ணியதை முடிப்பதில் பிடிவாதமும் ஆண்மக்களைவிடப் பெண் தன்மைக்கே பெரிதுண்டாதலின், தேவர்கள் தமது காரிய சித்திக்கேற்ற காரியாலயமாகப் பெண்கள் உள்ளத்தையே பெரிதும் கைக்கொள்ளுவதாக எண்ணவேண்டி யிருக்கிறது. இதன் பயனாகப் பின்பு இராமபாணத்தினா லடிப்பட்டு உயிர்விடு மாரீசன் சீதைதையை மயக்கவும் இலக்குவனைப் பிரிக்கவும் எண்ணி இராமர் அழைப்பதுபோற் பெயர் இட்டழைத்து மரித்தான். இராவணன் இராமனை மட்டில் பிரித்தல் போதுமென் றெண்ணி இராமன் இலக்குவன் இருவர்களின் வில்வன்மையையும் மாரீசன் வேள்விக்காலத்தில் நேரில் உணர்ந்தவ னாதலின் இலக்குவனையும் சாலையிலிருந்து பிரிக்க எண்ணி மாயத்தால் விளித்து ஆவி நீத்தான்.

 

அவ்வழைத்த குரல் கேட்ட பிராட்டியார் உண்மையாகவே இராமன் வீழ்ந்து பட்டதாகக் கருதினாரேயன்றி ஐயுறவுமில்லை. சேடனின் அவதாரமாகிய பேரறிவுடைய இலக்குவன் எவ்வளவ தூரம் தேற்றியும் அவர் சொல்லைத் தவறாக மதித்து அடாத சொற்களையும் இயம்பி இராமன் வீழ்ந்ததில் இலக்குவன் கவலையில்லாதவன் எனவே முடிவு செய்து கொண்டு காட்டுத் தீயில் விழுவதாக விரைந்து பர்னகசாலையை நீங்கி செல்லலானார். கைகையுள்ளம் திரிந்தது போலவே பிராட்டியுள்ளமும் திரிந்ததெனக் கம்பநாடர் குறிப்பா லுணர்த்தியபடியே கொள்ளலும் கூடும். அன்றிப் பெண்கள் சாகஸத்திற்குச் சிறந்த பாத்திரங்கள் என்பதற்கு நல்ல உதாரணமாக உலகம் தூற்றவும் கூடும். எனினும் ஆண்பாலாரிலும் தருமன் நளன் என்று புகழ்பெற்றனான். உத்தமவேந்தர்கள் தமது சற்குணத்திற்குச் சிறிதும் பொருத்த மற்ற சூதாட்டத்திற்கு இணங்கினர் என்பதை நோக்க,


"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்.''


என்ற பொய்யாமொழிப் புலவர் வாக்கின்படி பிராட்டியார் இதன் பயனாகத் தொடர்ந்து அநுபவிக்க வேண்டிய பீழைகள் உளவாதலின் அதனை யடைவிக்கச் செய்யும் ஊழ்வலி எல்லாவற்றினையும் தடுத்து முன்னேறிச் சென்று தன் கடமையில் வெற்றிபெற்ற தென்பதே துணிபு. பின்னர் வியாசர் மகாபாரதம் வரைந்ததிலும் மனையாளை வைத்தும் சூதாடும் மனநிலைமை தருமனுக்கு வந்தது. பூர்வம் இராமன் பொன்மானுருவம் கண்டு ஐயுறாது தொடர்ந்துபற்றச் சென்ற மதிமயக்கத்திற்கு ஒப்பாயதென்றும், ஊழின் வலியினால் உணர்வு சிதைதல் இயல்பென்றும் எடுத்துக் காட்டுகின்றார். அரண்மனை நீத்து அடவிக்குப் புறப்படுகையில் தானும் உடன் வருவேன் எனப் பிடிவாதம் செய்த மைதிலியைத் தடுத்த இராமன் முடிவில் பிராட்டியின் உறுதி கண்டும்,


"அல்லைபோத அமைந்தனை யாதலின்
எல்லையற்ற இடர் தருவா யென்றான்.'


என எதிர்காலத்தில் எய்தும் பெருந் தொல்லைகளை எடுத்துக் காட்டுகிறார்.
தன் மனம் இசைவின்றியும் பிராட்டியை உடன் கொண்டு போந்ததும், மான் விஷயத்தில் நாயகியின் வேண்டுகோள் விபரீதத்தினை யுண்டு பண்ணுமென அனுமானிக்கவுமில்லை, கொள்ளற்பாலதே எனவும் மனைவி கருத்தை (அன்பினால்) ஆமோதித்தார்.

 

எவ்வாறு நோக்கினாலும் காலதேவதையின் கற்பனையில் கண்ணிழக்காதவர்கள் இல்லை. எல்லாப்பற்றுகளையும் அறுத்த இருந்தவர்கட்கே அஃது எளிதாகும். நிற்க ஈண்டு, பிராட்டியார் தம் கொடுமொழிக்கும், செல்லாதொழியின் இறப்பர் என்கிற எண்ணத்திற்கும் அஞ்சி இலக்குவன் பெருந்துயர் கூர்ந்து பிராட்டியார் திருவடிகளிற் பணிந்து,


"அஞ்சுவதென்னை நீர்சொற்ற சொல்லை யான்
அஞ்சுவென் மறுக்கிலேன் அவலந் தீர்ந்தினி
இஞ்சிரும் அடியனேன் எகு கின்றொனென்
வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ.''


"போகின்றேன் அடியனேன் பொருந்தி வந்துகே
டாகின்ற தரசன்றன் ஆணை நீர்மறுத்
தேகென்றீர் இருக்கின்றீர் தனியிர் என்றுபின்
வேகின்ற சிந்தையான் விடைகொண் டேகினான்.''

என்றும் இலக்குவன் தெளிந்த அறிவினையும் முன் யோசனையையும் கவி விளக்குகின்றார். இவ்விடத்தில் இலக்குவன் வாயிலாக் கவி காட்டும் நீதியின் நுட்பமே எவ்வெவரும் சிரத்தாலேற்கத் தக்கதாகும். என்னை; மகளிர் எத்துணை மனவுறுதியும் நல்லொழுக்கமும் நல்லறிவும் அமைந்தவராக விருப்பினும் தற்காப்புக்கு உரிமையாளராக ஒருவரை ஏற்கவே வேண்டும். அவ்வாடவராகிய துணைவலியாளரை இகழ்ந்து அகற்றித் தனிமையில் இருக்க ஒரு போதும் எண்ணுதல் கூடாது. பிறர் து பிறர் துணைவலியின்றி நாமே ஏன் நம்மைக் காத்துக்கொள்ளுதல் முடியாதென ஒருகால் எண்ணுவரேல் அக்கணமே அவர் தம் பெண்மையின் பெருமை அழிந்து படும். தற்காலத்தில் ஒரு சிலர் சுயேச்சை யென்னும் பெயரால் இதற்குக் கால்கோள் விழா வியற்றவும் கருதலாம். ஆனால் அத்தகையார் கருத்தில் உயிரினும் சிறந்ததாய ஒழுக்கத்தினை ஓம்பும் எண்ணம் உயிர்த்திருக்க முடியாது. இருப்புப்பாதைப் புகைவண்டி பிரயாணத்தினால் சகிப்புக்குணமும், காபி பானக்கடைகளினால் எச்சிலை இகழாத இயல்பும் ஏற்பட்டது போலப் பெண்கள் தம்மைத் தாமே காத்துக் கொள்ளலாம் என்கிற விஷயத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் சுயேச்சையும், கற்பில் கூட தியாகபுத்தியை மேற்கொள்ளும் நிர்ப்பந்தத்தில் கொண்டு விடுமென்பதையே மேலே கண்ட கவி உணர்த்துகின்றது. தம்பியைக் காவலாக நிறுவினான் நாயகன். அந்நாயகனது உத்திரவை மறுத்துச் செல்லும்படி பணித்தார் பிராட்டியார்.


"அரசன்றன் ஆணைநீர் மறுத் தேகென்றீர் இருக்கின்றீர் தனியிர்

இதனால் பொருந்தி வந்து கேடாகின்றது.


எனத் தெளிவாகக் கூறியே செல்கின்றார். இத்தகைய செய்கையே பின்னர் பிராட்டியாரின் பெருந்துன்பங்களுக் கெல்லாம் அடிகோலியதாகின்றது. கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்பது உலகில் வழங்கும் பழமொழி. இம்முதுமொழி பிராட்டியார் அளவில் முற்றும் பொருத்தமாக முடிந்தது. இளவலை மனநோகப் பேசியதும், அவரது தூய பக்தியிலும் ஐயம் கொண்டதும், இராமன்மாட்டு தமக்கே அன்பு அதிகமென் றெண்ணியதும், தீயில் விழுவதாகக் கூறி ஏகியதும், தனிமையில் இருக்கத் துணிந்ததும், உத்தமப்பெண் தன்மைக் கொவ்வாதவைகள் ஆதலின் அவைகளின் தீய பலன்களே இராவணன் வரவா 5 முடிந்த தென்பதில் இழுக்குண்டோ? தெய்வமாண்பினரெனினும் நீதியிற் றவறுவரேல் அத்தவறுக்குரிய தீயபலனை அடைந்தே நலிதல் வேண்டும் என்னும் உண்மையையும் இந்நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகின்ற தென்பதை மறப்பதற்கில்லை. இதுவுமன்றி இருவினைப் பயன்களையும் எத்தகையினரிடத்தும் காலந்தாழ்க்காமல் எய்துவிக்கும் எல்லாம் வல்ல இயற்கைத் தெய்வத்தின் வல்லமையே வல்லமை என்று போற்றவும் இத்தகைய சம்பவங்கள் துணை செய்கின்றன.

 

அன்றியும் உடல் எடுத்தோர் கடவுளராயினும் "அவ்வுடலுக்கேற்ற ஊழ்வினை உடனுற்றன்றிப் போதரா" தெனத் தணிகைப் புராண ஆசிரியர் அருளிய பொன்மொழியும் புலன் கொள்ள வேண்டும். தவிர மனிதனாகப் பிறந்தவர்கள் அரிதாக ஒவ்வோர் சமயம் தவவறிழைக்க நேருவதும் உலகியற்கை யென்பாரும் உளர். இனி பிராட்டியார் இலக்குவனை வள்ளல் பாற் செல்லும்படி ஏவிவிட்டு சாலையிற் றனித்திருந்து தமது நாயகனைப்பற்றிய கவலையுடன் மனவமைதியின்றி இருக்கின்றார். பிராட்டியார் பிடிவாதம் பொருளாசை பற்றியோ, வஞ்சத்தாலோ, சுயநலப்பற்றினாலோ எழுந்ததொன்றன்று. காதலன்மேல் வைத்த கரைகடந்த அன்பொன்றினாலேயே எழுந்ததென்பதை ஈண்டு வாசகர்கள் மறவாதிருத்தலே அறமாகும். அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்? என்றபடி பிராட்டியார் உள்ளங் குழைந்து கண்ணீர் வடித்துக் கவலையுற்றிருக்கும் அவ்வமையம் இராவணன் முதிய தவசிவேடம் பூண்டு கோலூன்றி இவர் இருந்த சாலை மேவினான். வயது முதிர்ந்து தவக்கோலம் பூண்ட கோலம் வஞ்சனை யென்றுண ராத எமதன்னையார் உண்மைத் தவத்தர் என எண்ணி உள்ளே வரும்படி அழைத்துத் தமது கண்களினீரைத் துடைத்துக் கொண்டு பிரம்பினால் வனைந்த ஓர் ஆதனமளித்து இருக்கும்படி உபசரித்து இன்னுரை பகர்ந்தனர்.

 

கொடியோனாகிய அரக்கன் கள்ளமறியாத பிள்ளைக் குணமுடைய பிராட்டியை பெருவஞ்சம் செய்து கவர எண்ணி கபட சந்நியாசி வேடம் பூண்டு அவர் இருந்த சாலைக்குள் எய்தி தண்டு கமண்டலங்களாகிற சின்னங்களுடன் உட்கார்ந்தபோது தாவரங்களாகிய மரங்களும் பிறவும் நடுங்கின, வரைகளும் குலுங்கின, பறவைகளும் விலங்குகளும் அஞ்சின, பாம்புகளும் படம் குறைந்தொடுங்கின என்றார் கவியரசர். வஞ்சத்திற் கஞ்சாதவை எவை? இப்பாதகன் மனமட்டில் பாவத்திற் கஞ்சவில்லை. அவன் வாழ்விழந்து தாழ்வுழந்து வாணாள் முடியும் காலம் நெருங்கியதினால் போலும். அத்தகைய தசமுகன் ஒன்று மறியாதவனைப்போல இவ்விருக்கை எவருடையது? இதில் வசிக்கும் முனிவன் யார்? நீர் யாவர்? என வினவுகின்றான். அதுகேட்ட பிராட்டியார் தயரத சக்கரவர்த்தியின் தவப்புதல்வன் குலமுதல்வன் தம்பியோடும் இதில் வசிக்கின்றார். அவர் பெயர் நும் போன்ற அருந்தவர் கேட்டிருப்பீர் அன்றோ? என நாயகன் பெயரினை நவிலாமல் பாரத தேச மடநல்லாரின் பண்டைக் கால மரியாதை வழக்கின்படி குறிப்பாலுரைத்தார். இதனைக் கவி வேந்தர்,


"தசரதன் றொல்குலத்தலைவன் தம்பியோ
டுயர்குலத் தன்னை சொல் உச்சி யேந்தினான்
அயர்வில் திவ்வழியுறையும் அன்னவன்
பெயரினைத் தெரிகுதிர் பெருமையீர்''


என்னும் செய்யுளில் அமைத்துக் காட்டுகின்றார்.

 

வஸிஷ்ட முனிவரரின் தலை மாணாக்கராகிய தமது நாயகனின் திருப்பெயரினை எவரே முனிவர்களில் கேளாதிருப்பர் என்பது பிராட்டியாரின் சொற்குறிப்பு. விசுவாமித்திரரின் வேள்வி காத்ததும், தாடகை வதமும், அகலிகை சாபவிமோசனமும், சிவதநுவின் பங்கமும், பரசுராம ஜெயமும், அகில உலகங்களும் அறிந்த பெருங் கீர்த்தி மாலைகளன்றோ? இத்தகைய வீரனை அறிஞரில் அறியாதாரும் இருப்பரோ? இரார் என்பது
பிராட்டியார் நம்பிக்கையுமாகலாம். தவிர ஒரு சிறப்புமில்லாத நாயகன் பெயரையும் பாரத
நாட்டுப் பெண்கள் கூறுவது வழக்கில் இல்லை. வயதிற் பெரியர்களாய் மரியாதைக் குரியவர்களாய் உள்ளவர்களின் பெயர்களையும் சொல்லத் துணிவு கொள்ளார். ஆனால் தற்காலம் ஆங்கிலக் கல்வியின் பயனாக அன்னார் நடையுடைகளில் ஆர்வம் பூணும் நம் நாட்டு நாகரிகர் பலர் மிஸ்ஸெஸ் கணபதி, மிஸ்ஸெஸ் ரங்கநாதன், மிஸ்ஸெஸ் சுப்பிரமணியம் எனத் தத்தம் நாயகர்கள் பெயரால் வெளிப்படுகின்றனர். தமக்கு இயல்பாகவே இடப்பெற்ற லெட்சுமி, பார்வதி, சரஸ்வதி, முதலிய பெயர்கள் மறைப்பட்டு மண்ணைக் கவ்விவிடுகின்றன. மகாத்மா தற்கால நாகரிகம் ஒரு நோய்க்குச் சமானமென்று எழுதியிருக்கிறார். இது முற்றிலும் போற்றத் தக்க உவமையன்றோ? பெயரில் கூட சுதந்தர மிழந்தவர்களாய் இருப்பதையே அது குறிக்கின்றது. ஆனால் நாகரிக
மரத்தில் ஏறிச் செல்லும் நங்கைமார்களும், அவர்களுக்கு வழி காட்டிகளாக வெளிவருபவர்களும் கூட இப்புது வழக்கத்தினைக் கைவிடல் தமக்குச் சிறப்பென எண்ணுவதாகத் தெரியவில்லை. இது நிற்க நமது பெண்ணின் அருங்கலமாகிய பிராட்டியார் கபட சந்நியாசியை உண்மைத் துறவியாக நம்பியதால் பெருமையீர் தெரிகுதிர்" எனக் குறிப்பிட்டனர். வஞ்சகனும் அதை அங்கீகரித்ததன் போல,


“கேட்டனன் கண்டிலேன் கெழுவுகங்கை நீர்
நாட்டிடை யொருமுறை நண்ணினேன் மலர்
வாட்டடங் கண்ணினீர் யாடன் மாமகள்
காட்டிடை யரும்பகல் கழிக்கின்றீரென்று"


வினவுகின்றான். பால்போன்ற உள்ளமுடைய தேவியார்,


"அனகமா நெறிபடர் அடிகள் நும்மலால்
நினைவதோர் தெய்வம் வேறிலாத நெஞ்சினான்
ஜனநன் மாமகள் பெயர்ஜனகி காகுத்தன்

மனைவியான் என்றனள் மறுவில் கற்பினாள்'


பிர்ம ஞானிகளின் மத்தியில் எப்போதும் பொலிந்து எப்பற்றுமின்றி விளம்கும் தமது தந்தையைப் பிராட்டியார் பெருமை தோன்றக் குறிப்பிடுகின்றார். பிறந்தகம் பெருமை தழைத்ததாயின் பெண்களுக்கு அதிலும் சிறந்த ஆனந்தம் வேறுண்டோ? பிறந்த குடியின் பெருமையாலன்றோ ஆயிழையார் பெருங்குணங்களால் மலர்ந்து மணங் கமழ்வதும்? அவ்வாறே ஜனகரின் பண்பைக் குறிப்பிட்டு அவர்தம் பெயரினாலேயே ஜனகி என்று தன் பெயரினையும் சுட்டுகின்றார். ஜனகரால் தமக்கிடப்பட்ட காரணவிடுகுறிப் பெயராகிய சீதை என்கிற நாமத்திலும் பாவமற்றவராகிய பிதாவின் பெயரால் அமைந்த ஜநகி யென்னும் நாமமே பிராட்டியாருக்கு உவப்பாயிருந்ததென்பதும் ஈண்டு விளக்க முறுகின்றது. அதன் பின்னர் புகுந்த குடிப்பெருமை விளங்ககாகுத்தன் மனைவி யான் என்றனள். ககுஸ் தன் என்னும் சிறந்த மன்னவனின் வழி வந்தமையால் இராமனைக் காகுத்தன் என்பது மரபு. ஈண்டும் இராமனது பெயரினைக் குறிப்பிடாமலே அவர் பிறந்த குல முதல்வன் பெயரினாற் சுட்டினார். இவ்வாறு விடையளித்த பிராட்டியார் மூப்பினால் இளைத்த நீர் வருந்த வழி நடந்து எவ்விடத்தினின்றும் இங்கடைந்தீர் என அக்கப்படவேடத்தினனை எதிர் வினவினார்.

 

இதுவே தருணமென இடங்கண்ட பாதகன், இலங்கை வேந்தன் என்றொருவன் உளன் . அவன் ஆண்மையும் வன்மையும் அளப்பில் எனத் தனித்தனி புகழ்ந்து அவனுடைய அரசிருக்கையாகிற இலங்கையில் சில காலம் வசிக்க எண்ணி மாதவர்களைப் பிரிந்து போந்தேன் என விளம்புகின்றான். பிரமன் மரபில் பிறந்தவன், வேதமோதும் நாவினன், இந்திரனுக்கும் இந்திரன், கயிலையை ஊசிவேரோடும் பெர்த்தவன் என்பனவாதிய தன்னால் வெளியிடப்பட்ட சிறப்புக்களால் பிராட்டியார் மதிப்புக்குப் பாத்திரமாகலாம் இலங்கை வேந்தன் என எண்ணினான். பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்ததுபோல இராவணன் என்பதை யுணர்ந்த கணத்திலேயே பிராட்டியாருக்கு மனமாறியது. செல்வமும் சிறப்பும் பட்டமும் பதவியும் நல்லறிவுடையோரை எங்ஙனம் மயக்கும்? மன்னுயிர் தின்னும் மகா பாதகர் வைகும் நகரில் உடலையும் உணக்கித் தவம் செய்யும் நும்போல்பவர் உறைவது எதற்கு? தவத்தினர் வைகும் வனங்களில் வசிக்க விரும்பாமலும் நல்லோர் வாழும் நகரங்களில் உறையாமலும் தருமநெறி இன்னதென்றும் உணராத தீயர்கள் குழுவில் வசிக்க எண்ணினீர், அந்தோ? என்ன காரியம் செய்தீர் என இகழ்ந்து அஞ்சாது உசாவினர். இது கேட்ட அரக்கன் எழுந்த கோபத்தை ஒருவாறு வெளிக் காட்டாமல் உண்மையை நோக்குங்கால் அந்நிருதர் தேவர்களை விடக் கொடியவர் அல்லர். அன்றியும் எம் போன்ற துறவியர்கட்கு அவ்வரக்கரே மிக நல்லவர்களாய் ஒழுகுவோர் என்று விடை பகர்ந்தான். பொய் வேடம் புனைந்தான் எனினும் பிராட்டியாரால் அலட்சியமாகத் தன் இனத்தினர் பேசப்பட்ட வகையினைப் பொறுக்க இயலாதவனாய் ஜாதி மானத்தால் தூண்டப்பட்டு நிருத்தரைச் சிறப்பிக்கவும் துணிந்தான். எனினும் தூயோர் தூயோரை நாடுவதல்லது தீயோர் இனம் சேரார் என மீட்டும் தடுத் துரைத்தார். ஆயினும் வேண்டிய எந்த உருவங்களையும் எய்துவர் அரக்கர் என்பதை மனங் கொள்ளாமலே இச் சம்பாஷணையில் வெறுப்புற்றனர்.

 

பிராட்டியார் அரக்கரைச் சிறப்பித்துக் கூறிய மொழிகேட்டு மனம் வேறாகியதைக் குறிப்பாலுணர்ந்த தசமுகன் அதனை மாற்றக்கருதித் தன்னை யொருவாறு திருத்திக் கொண்டவனாய்ப் பிராட்டியை நோக்கி வன்மையினையுடைய அவ்வரக்கர் தமது தன்மைகளை மாற்றிக் கொண்டால்அல்லது பிறர் என்ன செய்தல் கூடும் என விளம்பினான். கள்ளம் சிறிதுமுணராத பிராட்டியார், தருமமூர்த்தியாகிய காகுத்தன் இவ்வனத்தில் உறையும் கால முடிவுக்குள்ளாகவே வருக்கத்தோடும் அரக்கர் குலம் இறுதியடையும்; பின்பு உலகம் துயரின்றி இன்புறும் என்று அஞ்சாது விடை யிறுத்தனர்.

 

என்ன தான் காரியசித்தி குறிக்கொண்டு வஞ்சன் பேச்சில் விட்டுக் கொடுத்தபோதிலும் மங்கையின் நேருக்கு நேராகப் பாயும் சுடுசுரங்களையொத்த வீரமொழிகளை ஜாதிமானத்தினாற் றாங்க முடியாதவனாகி அரக்கர்களை மீண்டும் சிறப்பிக்க முற்படுகின்றான். இவன் கொண்ட வேடத்திற்காகக்கூட ஒரு சிறிதும் தயவு காட்டிப் பிராட்டியார் தன் கொள்கையிற் பின் வாங்கவில்லை. இறுதியிற் றருமத்தைப் பாவம் வெல்லாதென்று கூறி எதிர்த்துரையாடினார். மேலும் நீர் பெருமையாக எடுத்துக் கூறிய பத்துத் தலைகளையுடைய அரக்கனைச் சிறை வைத்த ஆயிரம் புயங்களையுடைய கார்த்தவீரியனை இரண்டு தோள்களை யுடைய பரசுராமர் வென்ற வரலாறு நீர் அறியீர்போலும் என்றிகழ்ந்தும் கூறினார்.

 

இதனால் பிராட்டியாரின் அஞ்சாமையும் வேடம் கண்டு வழவழப்பாய்ப் பேசாமல் உண்மையை வெளியிடும் வீரத்தன்மையும் சரித்திர ஆராய்ச்சியின் மாண்பும் வெளிப்படுகின்றது. இராவணன் பிராட்டியாரால் இகழ்வாகவும் அலட்சியமாகவும் தான் கருதப்பட்டிருப்பதைக் காணத் தரியாதவனாய்க் கடும் கோபத்தின் வசப்படுகின்றான். கோபத்தின் வளர்ச்சி பொய்க் கோலத்தை மாய்த்தது. தனது உண்மைத் தோற்றம் வெளிப்பட்டது. இதனை நேரிற்கண்ட பிராட்டியார் உயிர் கவரும் கூ பற்றுவனை எதிர்கண்டது போல் துணுக்கமும் துயரமும் கொண்டனர்.

இராவணன் கோபித்து “நீ சொன்ன சொற்களுக்காக உன்னைப் பிசைந்து தின்பேன். அவ்வாறு செய்யில் என் உயிரும் நீங்கும். அது கருதிப் பொறுத்தேன். அச்சம் தீர்தி. பதினான்கு உலகமும் உன் சீறடி வணங்கும்படியான செல்வத்துள் வாழவிரும்பு” எனத் தன் கருத்தை விளக்குகின்றான். தன் எதிர் நின்று பேசுபவன் அரக்கர் தலைவன், தேவரை யேவல் கொண்டு செருக்கியுள்ள இராவணன், என்று நன்குணர்ந்த நங்கை அத் தருணத்திலும் அஞ்சாமல் தனது இரு செவிகளையும் தனது மெல்லிய இரு கரங்களாலும் பொத்திக் கொண்டு வஞ்சனை அரக்க! தேவர்க்காகும் புனிதமான அவிர்ப்பாகத்தை
இழிந்த நாய் விரும்பியது போல காகுத்தனுக்குரிய கற்புத் தெய்வமாகிய என்னை நோக்கி என்ன சொன்னாய்? எனக் கடுங் கோபத்துடன் கூறுகின்றார். கற்புக் கடவுளாகிய பிராட்டியார் தமது தனிமையை எண்ணினாரா? தமது மென்மை வாய்ந்த பெண்மைத் தன்மையைக் கருதினாரா? அல்லது எதிரில் நிற்பவன் திரிலோக கண்டகன் என்பதற்காவது கலங்கினாரா? இல்லை. இல்லை. உத்தமக் கற்புடைய மங்கையர்க்கு உயிர் ஒரு பெரிதாகத்தோன்றுமோ? சித்திரவதை செய்யப்பெறினும் உள்ளம் நெகிழ்ச்சியுறுமோ? பிறிதோரிடத்தில் பிராட்டியார் வாயிலாகக் கவிவேந்தர்,


"கல்லொடுந் தொடர்ந்த நெஞ்சம்
கற்பின்மேற் கண்டதுண்டோ?"


என்று கற்பின் கடினத் தன்மையை விளக்கியுள்ளார்.

 

இரக்கத்திற்குத் தாயகமாகிய மகளிர் உள்ளத்தில் கற்பென்னும் கடினமான ஒப்பற்ற ஓர்வகை யுணர்ச்சி கால் கொண்டிருப்பதை எவ்வுரைகளால் போற்றுவது. நெருப்பிலிருந்து நீர் எழுதல்போலக் கற்பென்னும் வன்மையிலிருந்து அன்பென்னும் மென்மை அரும்புகின்றது. தன்னுடலைப் பல கூறுகளாக்க முயன்ற தந்தையாகிய இரணியனைக் கண்டு அஞ்சி உயிர் வாழும் விருப்பத்தினால் பிரகலாதன் தன் கொள்கையை விடவில்லை. இவ்வாறே மனிதரை உணவாகக்கொள்ளும் மகாபாதகனாகிய வல்லரக்கன் தனது தனிமையில் எய்தி அடாமொழி கூறியது கேட்ட பிராட்டியார் எட்டுணையும் மறுத்துக் கூற அஞ்சினாரில்லை. கடவுள் பால் நாட்டும் பக்தியும் கணவன் பால் நாட்டும் கற்பும் ஒரே தன்மையின வென்பதை உணர்ந்தன்றோ மணிவாசகப் பெருந்தகை திருக்கோவையாரைத் தலைவன் தலைவி பாவனையாக இயற்றி வைத்தருளினார். நமது பெரியாராகிய காந்தியடிகள் காட்டும் உண்மைச் சத்தியாக்கிரகம் இதுவே யன்றோ? பிராட்டியாரின் சத்தியாக்கிரக உணர்ச்சிக்கு முன் அச்சம் தலை தூக்க வல்லதோ? "அஞ்சவது யாதொன்றும் இல்லை'' “அஞ்சவருவதும் இல்லை" என்று அருளிய பொன்மொழி தமிழ்நாட்டுச் சத்தியாக்கிரகியாகிய நம் திருநாவுக்கரசரால் பெறப்பட்ட தன்றோ? ஆதலின் பிராட்டியார் மனக்களத்தின் முன் அச்சமென்னும் பேயிருள் அழிந்து பட்டது. தவிர தகாத மொழிகளை ஒருவர் கூறுவாராயின் செவிகளை அம் மொழியோசையை ஏற்காவண்ணம் சேமம் செய்தலும் பெண்பாலார் பெரிதும் கைக்கொள்ளும் ஓர் அறத்துறையுமாகும். இது குறித்தே தனது “செவிகளைத் துளிர்க்கையாலே சிக்குறச் சேமம் செய்தாள்" எனக் கவியாசர் உணர்த்துகின்றார்.

 

மேலும் இவனைக்கடிந்து கூறுவதால் வெகுண்டு கொல்லத் துணிவான். இவ்வுடல் இறப்பதன்றிப் புகழ்மாயுமோ? புல்லின்மீது நீர்தங்கி நிற்பதுபோல் தோன்றி மறைதற் பாலதாகிய வாழ்வை விரும்பி உயர் குடிப்பிறப்பிற் கொவ்வாத தொன்றை ஏற்பாருண்டோ? என்று மனதைத் திடப்படுத்திக்கொள்கின்றார். இதனைப்


"புன்னுனை நீரினொய்தாய்ப் போதலே புரிந்து நின்ற
இன்னுயிர் இழத்தலஞ்சி இற்பிறப் பழிதலுண்டே''


என்னும் அடிகளாற் கவி எடுத்துக் காட்டுகின்றார்.

 

இவ்வாறு பெண்மை மறைந்து ஆண்மை திகழ்ந்து சுடர்விடும் அனற்கொழுந்துபோற் பொலிந்து வீரமங்கையாகிய பிராட்டியார் இரக்கமுற்று பாதகனை நோக்கி அனற்பொறிகளைக் கக்கிக்கொண்டு போலும் இராமபாணம் உன்னை நோக்கி வரா முன்னம் உன் உயிர்த்கு உறுதியை நோக்குவாயாயின் ஓடி ஒளித்திடுதி என்றும் புகல்கின்றார். இராமபாணம் வில்லினின்றும் வெளிப்பட்ட பின்பு நீ ஓடினாலும் ஒளித்தாலும் அது உன்னை விடக்கூடிய தன்று ஆதலின் அது புறப்படு முன்னர் நீங்குதி
என்று தமது நாயகனது வல்லமையில் தமக்குள்ள நிச்சயத்தையும் அறிவிக்கின்றார். காமத்தினால் கண்ணிழந்தவனாகிய கொடியவனுக்கு உண்மை புலப்படுமோ, இவைகளை யொன்றையம் பொருட்படுத்தாமல் இராமன் வருமுன் கொண் டகல்வதே அறிவுடமையெனக் கருத்தித் தனக்கு பூர்வம் வேதவதியிதல் ஏற்பட்டுள்ள சாபத்தினை யெண்ணி அகிலாண்டங்கட்கும் அன்னையாகிய கற்புக்கடவுளை மெய்தொடக் கூசி ஒரு யோசனை யகலமுள்ள பூமியை அகழ்ந்தெடுத்து விரைந்து தேரிலேற்றிச் சென்றகன்றனன்.

மண்வழி செல்லாமல் விண்வழி படர்ந்தனன். பிராட்டியார் கிராதகன் கண்ணியிற் சிக்கிய பார்ப்பெனப்பதறி ஆவி சோர்ந்து இறைவா, இளையோய் எனக் கூவிக்கூவி அரற்றலாயினர். இரதத்திலிருந்தும் அவனது பழி படு செயலைக்கண்டு இகழ்ந்தும் வெறுத்தும் தம்மாலியன்ற மட்டில் தேரைச் செலுத்தாம லிருக்கும்படி அறிவுறுத்துன்றார். இந்நிலையில் இடையே தம்மை மீட்கும் பொருட்டு வந்து அரக்கனை வழி மறித்து அருஞ்சமர் ஆற்றிய சடாயவும் தரையில் விழக்கண்டபோது பிராட்டியார் முதன் முதலாகத் தம் குற்றத்தை யுணர்ந்து உள்ளழிகின்றார். இதனை


"பின்னவன் உரையினை மறுத்துப் பேதையேன்
அன்னவன் தனைக்கடி தகற்றினேன் பொறா
மன்னவன் சிறையற மயங்கினேன்.''


என்னும் உரைகளால் எடுத்துக் காட்டுகின்றார்.

 

இதுவுமன்றித் தமது செய்கையால் தம்மை யளித்த குடிக்கே இழி வெய்தியதென்று எண்ணி ஏக்கமெய்துகின்றார். இதனை,

 

"கற்பழியாமை யென்கடமையாயினும்
பொற்பழியாவலம் பொருந்தும் போர்வலான்
விற்பழியுண்டது வினையினேன் வந்த
இற்பழியுண்ட தென்றிரங்கி ஏங்கினாள்

என்னும் செய்யுளால் உணர்த்துகின்றார் கவிவேந்தர். நாயகனால் நிறுவப்பட்ட காவலைத் தவிர்த்துத் தனிமைப்பாடெய்தி இத்தகைய பழிக்காளாயினாள் ஜனகி யென்னில் இப்பழி தம்மைப் பெற்ற குடிக்கன்றோ இழிவென்று பெரிதும் நாணுகின்றனர் பிராட்டியார். பிறந்த குடிக்குப் பழி விளைத்ததோடு நில்லாமல் ஒப்பில்லாத தமது நாயகன் தாங்கிய கோதண்டத்திற்கும் மாசுண்டாக்கியது தமது பிடிவாதத்தோடு கூடிய தடை கடந்த செய்கை என்பதை மிகமிக எண்ணித் தமது நல்லறிவு இவ்வாறு புல்லறிவாக மாறியதற்கு வருந்தும் பான்மை ஈண்டு பிராட்டியாரின் உயரிய பெண்மை இயல்பிற்கு ஒளி தருவதாகும். தவறு செய்தல் மன்பதைக்கியல்பே. செய்த தவறினைப் பின்னர் தவறெனக் கண்டு வருந்துவதே பெரியோர் இயற்கை. தான் செய்தது தவறென வுணர்ந்தாலும் அதனை ஏற்கத் துணியாமல் நியாயமெனச் சாதிக்க முற்படுவது சிறியோர் செய்கையாகும்,

 

பெரியோர் தவறிழைக்க நேருவது விதியின் வன்மையால் என்பது அறிஞர் துணிபாகும். அதே குறிப்பினைப் பிராட்டியாரும் நினைவு கூர்ந்ததைக் கவி


"விதி, இன்னமும் எவ்வினை யியற்றுமோ?"


என்னும் தொடரினால் காட்டுகின்றார். எவராலும் தடுக்க முடியாத ஆற்றலையுடைய இராவணனால் பிராட்டியார் விரைவிலேயே இலங்கையில் உள்ள அசோக வனமென்னும் அடர்ந்த காட்டில் சிறையாகி அரக்கியர் காவலுக்குள்ளாயினார்.

 

பின்னர் பிராட்டியாரைச் சுந்தரகாண்டத்தில் அநுமான் காட்சிப் படலத்தில் தான் காணப்பெறுகின்றோம். சுக்கிரீவனால் நாடவிட்ட வானரத் தலைவருள் தென்றிசை சென்ற சேனையில் அநுமார் முக்கிய புருஷராவார். அறிவாலும், திறலாலும் அனைவரிலும் மேம்பட்டவரான அநுமானிடமே இராமன் பிராட்டியாரின் அடையாளங்களைத் தனிமையில் வைத்து உணர்த்தியதாகத் தெரிகிறது. கல்லும் சுவரும் கண்டமாத்திரத்தில் கண்டுருகும் கவின்வாய்ந்த பிராட்டியாரை மனவமைதி கெடாமல் காணத் தகுதி வாய்ந்தவர் நித்திய பிரமசாரியாகிய அஞ்சனையின் குமாரனைத் தவிர வேறில்லையென்பதை இராமர் உணர்ந்தார். அத்தகைத் தூய்மைவாய்ந்த அநுமனிடமும் பலப்பல கூறிய இராமன் முடிவாகவும் சுருக்கமாகவும் இறுதியில்


"மங்கையர் இவளை யொப்பார் மற்றிலை யென்ன நின்ற
சங்கையில் உள்ளந்தானே சான்றெனக் கொண்டுதேர்தி"


எனக் கூறுகின்றார். அதாவது,

 

கலங்காத சித்த சுத்தியையுடைய உனது உள்ளம் எந்தப் பெண் வடிவினைக் கண்டு இவர்க்கிணை படைப்பிலேயே இல்லையென்று திட்டமாகக் கருதுகிறதோ அந்தப் பெண் வடிவே சீதையென நிச்சயம் செய்து கொள்வாயாக என்பதே. பிராட்டிக்கு உவமிக்கக்கூடிய அழகிய அமைப்பெதுவும் உலகிலேயே இல்லாமையை அம்மொழி சாஸனம் செய்கின்றது.

அத்தகைய பிராட்டியாகிய அழகுத் தெய்வத்தினை அருந்தவ முடைமையினால் அநுமன் இலங்கைத் தீவில் காணும் பேறு பெறுகின்றான்.

ஐம்புலன்களை வென்றவனாதல் பற்றி அப்பேறு அநுமானுக்கு வாய்ந்ததென்பதில் ஐயமுண்டோ?

 

அநுமான் காண்பதற்கு முன் பிராட்டியார் ஆண்டிருந்த தவ நிலையைக் கவிவேந்தர் தமது முழுப் புலமையும் விளங்க விளக்குகின்றார்.

 

தடித்த இடையினை யுடையவர்களும், இரக்கமென்பதைவர்களுமாகிய கொடிய அரக்கியர்களின் நடுவில் பன்னாளாக மழையின் ஓர்சிறு திவலையைக்கூட வாய்க்கப் பெறாமல் வாடி வதங்கி, வற்றி உலர்ந்து கரும் பாறைகளின் இடையில் ஜீவசஞ்சீவியாகிய சிறந்த தெய்வ மூலிகை காணப்படுவதை ஒத்து விளங்கினதாக உவமிக்கின்றார்.

பிராட்டியாரின் சோகம் அரக்கனால் சிறை வைக்கப்பட்ட பிராட்டியாருக்கு உறக்கம் என்பதுமில்லை, விழிப் பென்பது மில்லை.

 

வெய்யிலில் வைக்கப்பட்ட விளக் கொளிபோல சோபை மறைந்தமேனி யுடையவரானார். கொடிய புலிக்கூட்டத்தின் நடுவில் அகப்பட்ட இளமானைப்போல் உள்ளழிந்து உணர்வு கலங்கி உயிர் நசையற்றவராகக் காணப்பட்டார்.

 

ஆடவர் பெண்மையை அவாவும் தோளினனாகிய தம் தின்னுயிர்க் காதலனா நாகிய இராமனது வடிவம் மனக் கண்ணில் தோன்றும் தோறும் தோன்றும் தோறும் பெருகும் கண்ணீர்ப் பெருக்கினால் நனைந்தும் பிரிவுக்கனலால் வீசப்பெற்ற தமது திருமேனியின் வெப்பத்தால் உடனுக்குடன் உலர்ந்தும் உடுத்த மரவுரி ஒரு நிலையின்றி யிருந்தது.

 

தம்மை நாடித் தமது நாயகன் வரக்கூடும் என்கிற எண்ணத்தால் நாற்றிசைகளையும் சுற்றிச் சுற்றி நோக்கி நோக்கிப் பேதுறும் கண்களையும் உடைத்தாயிருந்தார்.

 

மகளிர் இயற்கைப்படி தமது நாயகனுக்கு வனத்தில் வந்த பிறகு உணவாக அமைந்த இலைக் கறிகளையும் கிழங்கு வகைகளையும் (தாமில்லாமையால்) எவர் பரிமாறுவார் என்றெண்ணிக் கரைந்தனர். விருந்தொருவர் மேவின் யாது செய்வார் என எண்ணி விம்முவார். நான் கொண்ட மனநோய்க்கு மருந்தும் உண்டோ? என்று மயங்குவார். தாம் வீற்றிருக்கும் இடத்தில் கரையான் எழுந்து மூடினாலும் உணராதவரா யிருந்தார்.

 

அழுதலும் விம்முதலும், காதலனை நினைந்து கைம்மலர் கூப்பித் தொழுதலும் ஏங்குதலும், இரங்குதலும் வெருவுதலும், வெதும்புதலும் துவண்டு விழுதலுமேயன்றி வேறு செயலற்றவராயினார்.

 

உயிராகிய ஆடை தரித்திருப்பதைமட்டில் உணர்ந்தார். மங்கள ஸ்நானம் செய்யாமையினால் மன்மதனால் செய்யப்பட்ட ஓர் அமுதப் பதுமை புகையேறி மழுங்கியதை யொப்பத் தோன்றினார். முன்னறிவிற் சிறந்த இளையவனும் இலங்கையென்று கடலிடையுள்ள இந்நகரினை யுணர்ந்திலர் போலும் என்று ஏங்குவார்.

 

கழுகரசன் இறந்தமையால் அவர்கட்கு உணர்த்தக்கூடியவர்களும் இல்லை. ஆதலின் இப்பிறப்பில் எனக்கு விடுதலையும் இன்றென நிராசை கொள்வார்.

 

அதுவுமின்றி முன்பின் எண்ணிப் பாராமல் காவலாக இருந்த இளவலைக் கடிந்து தீவினை வசப்பட்ட யான் கூறியதாகிய பாப மொழிகளைச் செவியுற்றதால் அறிவில்லாதவள் என வெறுத்து இகழ்ந்து விட்டாரோ இறைவன் என்று எண்ணி வாய் நீரும் உலர்ந்து ஆவி சோர்ந்து பதைப்பார். வேறொரு வகையால் அரக்கன் கொண்டகன்றா னாதலின் அவர்கள் தின்று பசி தீர்ந்திருப்பர் என்று தேடும் முயற்சியும் ஒழிந்திருக்கலாம் என்றும் கருதினார்.

 

இவைகளல்லாமல் நகரத்திலிருந்து தாய்மாரும் தம்பிமாரும் ஒரு சமயம் வந்து நகரத்திற் கழைத்துச் சென் றன் ரோ? என்று பலப் பல விதங்களெல்லாம் எண்ணி இரங்கினார். கர துஷணாதியரை ஒரே நாழிகையில் விண்ணுலகிற் கனுப்பிய வீரத்தினையும் ஏழை வேடனிடம் காட்டிய உண்மை நட்பினையும் தந்தைக்கு பிதிர்ப்பலி உதவியபோது நடந்த நிகழ்ச்சிகளையும், தான் மரவரியும் சடைமுடியும் கொண்டதற் கிரங்காமல் ஆரூயிர்த் தம்பியாகிய பரதன் சடைமுடி கட்டியதைக் கண்டு துணுக்குற்றுத் துயருழந்ததையும் பிறபலவும் நினைந்து நினைந்து கலங்கிக் கலுழ்ந்தனர்.

 

பரசுராமரை வென்ற வெற்றியும், காகமாய் வந்து இன்னல் விளைத்த ஜயந்தன் என்னும் இந்திர குமாரனை அடர்த்த வென்றியையும், தாம் நேரிற்கண்ட விராத வதமாகியவைகளையும் தம் சிரசால் மதித்து வணங்கி அந்தகைய வள்ளலைப் பிரிய நேர்ந்த வல்வினைக்கு நைந்துருகி நின்றார் பிராட்டியார்.

 

அன்றியும் இம்மையே மறுமைதானும் நல்கினை இசையோடு என்று பிராட்டியார் பாராட்டிய பண்பு ஆழ்ந்த கருத்தமைதி கொண்டிலங்குகின்றது. என்னை? இம்மை என்னும் இவ்வுலக வாழ்வு தீர்ந்து தூலவுடம்புவிட்டு சூக்கும தேகத்தினுடன் அடையப்பெறும் ஒருவித நிலைமையே மறுமையென் றழைக்கப்படுவ அத்தகைய மறுமை யின்
பத்தினைத் தூலவுடம்போடு கூடிய இம்மை வாழ்விலேயே எய்தப் பெறுவதென்பது பெரியதோர் வியப்பே யன்றோ? அத்தகைய இயற்கைக் கொவ்வாத பெரும் பேற்றினை நல்கினை என்ற கருத்து அச்செய்யுளில் மிளிர்கின்றது. அதுவும் இசையோடு நல்கினை என்றது பின்னும் பெருமை யுடைத்தாவதாகும்.

 

துர்மரணத்தினால் உயிர் விடுவது பாவமே என்பதைப் பிராட்டியார் உணராமல் இல்லை. தமது துன்பத்தினைச் சகிக்க முடியாமல் இந் நிலைமைக்கு விதியின்றித் துணிந் தனர். அந்தப் பாவத்தினின்றும் தம்மை விடுவித்ததையும் போற்றுகின்றார். தவிர அரக்கன் காவலில் தாம் கற்பைக்காக்கும் கடுந்தவம் இத்தன்மையதென வெளியுலகோர் பின்னர் உணர்வதற்கும் ஈண்டுத் தோன்றிய இவன் தக்கதோர் சான்றாகின்றான். இவன் தமது நாயகரது நம்பிக்கைக்கு உரியவனாகித் தூதுவனாக வந்ததோடு இராஜமுத்திரையையும் அளித்துள்ளான். இவன் உள்ளம் எனது மாசற்ற நிலையை யுணர்ந்து கொண்டதால் இனிப் பழிக்காதாரமான வசையும் தீர்ந்தது. ஆகவே இசை விளங்கியது. படத்தகாத துன்பம் உழந்தாலும் கீர்த்தி குன்று வதைப் பெண்மைத்தன்மை சகியாது. இதனை மயிர்நீப்பின் வாழாக்கவரிமாவன்னார், உயிர்நீப்பர் மானத்திற் கென்றது உண்மையாகும். மானமும் உயிரும் ஒருங்கு நில்லாத வழி, உயிர் தன்னையே விடுத்துத் தானுறு பொருளாய் மானமே கொள்ளுதல் தக்கார் செயல். அதற்கு ஏற்பவே பிராட்டியார் தமது கேடருங் கற்பினை யுணராமல் உலகம் பழி தூற்றுவது கூடும் என்று கருதியே பழிபட வாழ்வதிலும் உயிர்விடல் சிறந்ததெனக்கொண்டு துணியலானார். இராமதூதன் வரவினால் அப்பழி மாய்ந்திட இடம்பெற்றது குறித்தே இசையோடு இம்மையு மறுமையும் நல்கினை என்றருளின ரென்க.

 

இது பற்றித் தமக்குள் எடு எழுந்த பேருவகையினாலேயே உலக மேழும் எழும் வீவுற்றஞான்றும் இன்றென விருத்தி என்று ஆசி புகல்கின்றார். இன்று எனது பெரும் பழியைத் துடைத்ததில் ஏற்படும் புண்ணியத்தினால் உனக்கு அழியாப்புகழ் உலகம் அழியும் காலத்திலும் அழியாத தொன்றாம். கவே எனது கீர்த்தியைப் போலவே உனது கீர்த்தியும் நிலைபெற்றதாகும் என்னும் குறிப்பே இன்றென விருத்தி என்னும் கருத்தினை யுணர்த் துகின் தவிர செய்யுள் வழக்கும் ஆன்றோர் வழக்கும் இருத்தல் என்ற சொல்லிற்குப் புகழுடம்பினைச் சுட்டுதல் இயல்பாகும். இங்ஙனம் கூறிய தேவியார் அநுமனை நோக்கி வீரன் யாண்டையான் இளவலோடும்? எவ்வழி யெய்திற்றுன்னை? ஆண்ட கை அடியேன் செய்கை யார் சொல வறிந்தது? எனப்படிப்படியாக வினவலானார். இவை யனைத்திற்கும் சுருக்கமாக விடையிறுத்த அநுமான் வெகு சாதுர்யமாகப் பிராட்டி அஞ்ஞான்று செய்தவற்றை ஒருவாறு சுட்டியும் சுட்டாமலும் - ''இக்குரல் இளவல்கேளா தொழிகென இறைவனிட்டான். மெய்க்குரல் சாபம் பின்னை விளைந்தது விதியின் மெய்ம்மை” எனக் கூறியதாகக் கவி காட்டியிருப்பது அநுமானின் சான்றாண்மையைச் சித்தரிக்கின்றது. தவறு செய்தோர் அந்தப் பிழையின் பயனாகத் துன்பத்தில் நைகின்ற போது அப்பிழையைச் சுட்டிக்காட்டுவது பின்னும் மனத்தைப் புண்படுத்து மாதலின் அறிஞர் அம்முறையைக் கைக்கொள்ளார். அறிஞர்க்கறிஞனாகிய அநுமான் எவ்விதம் பிராட்டியார் மனம் நோகப் பேசுவார். தவிர உத்தம குணங்கட்கோர் உயிர்நிலையாகிய இப்பிராட்டியாரே பிழை செய்தாரெனின் அது விதியின் வன்மையே என்று கொண்டார் என்பதும் பொருந்தும். முன் கண்டபோதே பிராட்டியின் அருந்தவ கிலையைக் காண கற்றிலன் அவன் கமலக்கண்களால் என அநுமான் வியந்ததாகக் கவி கூறி யிருக்கின்றார். ஆகவே பிராட்டியின் பெருங்கற்புடைமையை அநுமான் அவ்விரவில் பலபடியாலும் கண்டுகொண்டார். அத்தகையார் கணவன் கட்டளையை மீறி இளவலை வன் மொழி புகன் றகற்றினார் எனில் அது விதியின் வன்மையேயாகும் எனக் கருதுவதிலும் இழுக்கொன்றில்லை. பின்னர் தேவியார் பிரிவினால் அடைந்த துன்பத்தினைப் பத்தி பத்தியாகச் சுவைகுன்ற விவரியாமலும், சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் முறையிலும்,


"வண்டுறை சாலை வந்தான் நின்றிருவடிவு காணான்
உண்டுயிர் இருந்தான்.''


என மிக விநயமாக விண்ணப்பிக்கின்றார். இதனால் இராமன் உணர்விழந்து அவசமாயினான். எனினும் உயிர் உடம்பில் உளது என்று கண்டோர் கூறும் அளவில் இருந்தான் என்பது குறிப்பு.

 

இத்தகைய பரிதாபகரமான ஸ்திதியில் நாயகன் வருந்தினார் என்பதைப் பிராட்டியார் செலிக்கொண்டதும் ஆற்றா திரங்குதல் கூடுமாதலின் அந்தக் கவலையை உடனே மாற்றல் அவசிய உபாயமாக வுணர்ந்த அநுமான் அடுத்த  தொடர் மொழிபோல,


"தேண்டிநேர் கண்டேன் வாழி தீதிலன் எங்கோன் ஆகம்

பூண்ட மெய்யுயிரே போகப் பொய்யுயிர்போல நின்ற

ஆண்டகை நெஞ்சினின்றும் அகன்றிலை அழிவுண்டாமோ
ஈண்டு நீ யிருந்தாய் ஆண்டு அங்கு எவ்வுயிர் விருமிராமன்?"


அவரது மெய்யான உயிராகிய தாம் இங்கு ஜீவித்திருக்கையில் இராமன் அங்கு விடுவதற்கு வேறு உயிர் ஏது? அன்றியும் ஆண்டகை நெஞ்சினின்றும் அகன்றிலை அழிவுண்டாமோ? எனவும் திறம்படக் கூறி ஆற்றினர். இதனால் நித்தி பமங்கள ஸ்வரூபியாகிய நீர் இராகவன் உள்ளத்தில் பூரண கலைகளுடன் டம் பெற்றிருக்கையில் அமங்களமான மரணம் எங்ஙனம் எய்தும் என்பதும் பெறப்படுகின்றது.

 

அந்த இராமகதையின் தத்துவார்த்தத்தை உணர்த்தவந்த வேறு சில வரலாறுகளில், பிராட்டியாரை இராவணன் அணுகா முன்னமே இராமன் இராவணனை வதம்புரியும் மிருத்யு தேவதையை அழைத்து சீதையாக நிறுவி ஜன நந்தனியாகிய உண்மைச் சீதையைத் தனது இருதய கமலத்தில் அரூபியாக வசிக்கும்படி ஸ்வீகரித்தார் காணப்படுகன்றது. அந்த உண்மைக்கேற்ப மேலே காட்டிய கவியில் அநுமான் வாசகமாகக் கவி வேந்தர் வண்டுறை சாலை வந்தான் நின் திருவடிவு காணான். என்றும், ஆண்டகை நெஞ்சினின்றும் அகன்றிலை எனவும் குறித்திருக்கும் நுட்பம் ஆதரவு செய்கின்ற தென்பதும் புலனாகின்றது. இக் கருத்தினைப் பின்வந்த செய்யுளிலும்,


“துன்னிருங்கானும் யாறுமலைகளும் தொடர்ந்து நாடி
இன்னுயிர் இன்றியேகும் இயந்திரப் படிவம் ஒப்பான்..."


என்னும் அடிகளால் கவி விளக்கியுள்ளார். புனலிற் றண்மை போலும் அக்கினியிற் சூடுபோலவும் பிரிக்க முடியாத அவரது சக்தியாகிய நீர் இங்கிருந்தமையால் சூத்திரப் பதுமைபோல் இராமன் வசம் அற்றவராயினார் என்பது உட் பொருள்.

 

பின்னர் ஜடாயுவாகிய கழுகரசனால், அரக்கன் கவர்ந்தமையும் சுக்கிரீவ நட்பும், அணிகலக் காட்சியும், வாலிவதமும், சுக்கிரீப் பட்டாபிஷேகமும், நாடவிட்டமையீறாக விவரிக்கின்றார்.

 

இவ்வளவும் கேட்ட நங்கை தலைவன் தனிமைத் துயரங் கேட்டு உள்ளம் கரைந்தும் செய்தி கிடைத்தமைக்கு உவந்தும் ஒரு நிலையற்றவராகி ஐயனேயாவும் பொருந்தும். கடலைக் குறுகிய தோற்றமுடைய நீ கடந்ததாகச் சொல்வது எங்ஙனம்? எனச் சந்தேகித்தவராய் வினவுகின்றார். அது கேட்ட தூதன் விநயமாகவும் பணிவாகவும் தாயே உனது நாயகனின் திருவடிகளைப் பற்றியவர்கள் மாயையாகிற பெரிய கடலையும் எளிதாகக் கடப்பர். அடியேன் இச்சிறிய கருங்கடலைக் கடந்ததோர் வியப்பாமோ? என முதலில் புகன்றனர். பிராட்டியார் அவ்விடையினால் சமாதானம் அடையாதவராய்ப் புன்முறுவல் செய்து தவத்தின் பெருமையினாற் கடந்ததா? சித்தியினாற் செய்ய நேர்ந்ததா? உண்மையை உணர்த்துக என மீட்டும் வினவ, அநுமான் பிராட்டியார் ஐயம் தீருவதற்காகத் தனது விசுவரூபத்தை எடுத்து காட்டினர். அண்ட முகட்டினை அளாவும் அவரது அவ்வுருவத்தினைக் கண்டு பிராட்டியார் அஞ்சிக் கண் புதைத்துப் போதும் போதும் குறுகுதி குறுகுதி என வேண்டினர். உடனே அநுமான் சுருங்கிப் பழைய குறுகிய வடிவத்துடன் அடிபணிந்தார். ஆனால் பிராட்டியாருக்கு இது கண்ட பிறகேதான் இராமனுக்கு வெற்றி நிச்சயம் என்பது மனதில் திடப்பட்டது. இதன் முன் கூறிய வரலாறுகளினால் வந்தவன் இராம தூதன் என்பது சந்தேகம் இன்றித் தெளிவாயிற்று. எனினும் அரக்கரது வன்மையும் படைப் பெருக்கும் கண்டு தனது நாயகன் எதிர்த்துவரினும் இளையவனைத் தவிர வேறு துணையில்லாத தன்மைக்காகப் பலவாறெண்ணி எண்ணி இரங்கிய தனக்கு இந்த விசுவரூபம் பெரிய தைரியத்தை யளித்தது. இத்தகைய மதிக்க முடியாத தவவலியுடைய இவனே இராமனுக்குத் துணையாயினான் எனில் இராவணனை இராமன் ஜெயம் பெறுவது நிச்சயம். நானும் என் நாயகனைச் சேர்வது உறுதியென்று தன்னுள் பெரிய நம்பிக்கை கால் கொள்ளப் பெற்றார். இதுகொண்ட பிராட்டியார் அநுமான் ஆற்றலையும் அறிவையும் அடக்கத்தையும் பற்பலவிதமாகப் புகழ்கின்றார். அவைகளுள்,


"ஆழி நெடுங்கை யாண்டகைதன் அருளும் புகழும் அழிவின்றி
ஊழிபலவும் நிலைநிறுத்தற் கொருவனீயே உளையானாய்'


என்பது மொன்று. இராமன் பெரும் புகழினை உலகில் நீடூழி நிலை நிறுத்துவதற்கு நீ ஒருவனே காரணமாகின்றாய் என்று புகன்ற மொழி பத்தினி மொழியாதலின் முழு உண்மையாயிற்று. பின்னர் போர் நிகழ்கையில் ஏற்பட்ட பல இடுக்கண் களும் அனுமான் ஒருவனாலேயே தீர்ந்தன என்பது எவரும் அறிந்ததே. உண்மைச் சேவைக்கே ஓர் இலக்கியமாகிய வாயு புத்திரன் இன்றேல் இராமகதையே சுவைத ராதென்பதை கவி சச்கிரவர்த்தி பிராட்டியாரின் வாசகத்திலேயே முதல் முதலாக அமைத்துக் காட்டியுள்ளார். மேலும் பிராட்டியார் அநுமானது மதிக்க முடியாத ஆற்றலையும், புத்தி நுட்பத்தினையும், அடக்கத்தினையும் கண்டு வியந்து தன்னாலும் அடக்க முடியாத உணர்ச்சியினால்,


''மாண்டேனெனினும் பழுதன்றே இன்றேமாயச் சிறைநின்றும்
மீண்டேன் என்னை ஒறுத்தாரைக் குலங்களோடும் வேரறுத்தேன்
பூண்டேன் எங்கோன் பொலங்கழலும் புகழேயன்றிப் புன்பழியும்
தீண்டேனென்று மனமகிழ்ந்தாள் திருவின் முகத்துத் திருவன்னாள்''


என்று மீட்டு மீட்டும் புகழ்ந்தனர். அது கேட்ட அநுமான் தன் புகழைத் தானே கேட்க நாணினவராய், மறுபடியும் அன்னையை வணங்கி அருந்ததியே, என்னைப்போலும் இராமனுக்கு உண்மைத் தொண்டாற்ற ஆங்கு குழுமியுள்ளவானார் கடலின் மணலிலும் பலராவர். அவர் தம் தொகுதியில் அடியேனும் ஒருவனே. வானரர்களின் தலைவனும் சேனாதிபதியும் இட்ட கட்டளைகளைச் செய்வதே எனது கடமை என சூசிப்பிக்கின்றார். பண்ணை என்றமையினால் போர்ப்படையின் பாகுபாட்டைக் குறிக்கின்றது.

 

இராமனுக்கு நேராக ஆட்பட்ட அடிமை யானன்று. அவ்வித தகுதிக்குரிய வானர சேனைத் தலைவர் பலர் உண்டு. அவர்கள் இட்ட ஏவலைச் செய்பவர்களுள் யானும் ஒருவன் என்ற பொருளை உள்ளடக்கி,


வண்ணக் கடலினிடைக் கிடந்த மணலிற் பலரால் வானரத்தின்
எண்ணற்கரிய படைத்தலைவர் இராமற்கடியார் யான் அவர்தம்
பண்ணைக்கொருவன் எனப்போந்தேன் ஏவக்கடவி பணிசெய்வேன்''


எனக் கூறினர். இதனால் நான் சுதந்தரனுமன்று. கேவலம் ஏவலாளன் எனத் தாழ்த்திப் பிராட்டிக்கு மேலு மேலும் சந்தோஷத்தைக் கோடி மடங்கு பெருக்குகின்றார். இவன் ஒருவன் துணைவலியே இராவணனை வெல்லப் போதுமானதெனக் கருதிய பிராட்டியாருக்கு இவனைக் குற்றேவவ் புரிபவனாகக் கொண்டிருக்கும் படைத் தலைவரான வானர வீரர்கள் எண்ணமுடியாத பலப்பலர் என்பதைக் கேட்ட பொழுது எத்தசைய மனமகிழ்ச்சி பொங்கியிருக்கும் என்பதை மனதினாலும் எவர் ஊகிக்க முடியும்?
பக்தி மார்க்கத்தில் பக்தனைக் காட்டிலும் பக்தனுடைய பக்தன் விசேஷமானவன். சிஷ்யனிலும் சிஷ்யனுடைய சிஷ்யன் அருமை வாய்ந்தவன். அவ்வாறே புத்திரனிலும் புத்திரனுடைய பத்திரன் அன்புக்குரியவன். இந்நுட்பம் பற்றியே அநுமான் ஈண்டு இராமனுடைய அடியார்க்கடியன் தாஸர்க்குத் தாஸன் என்று குறிக்கொண்டு புகன்றுள்ளார்போலும். இவ்வாறு வினவிய பிராட்டடியாரை ஈண்டும் கவியரசர் "திருவின் முகத்துத் திருவன்னாள் ' எனச் சிறப்பிக்கின்றார். எல்லா அவயவங்களும் சுந்தரமாக இலங்குமாயினும் உள்ளறையையும் தெள்ளிய அறிவையும் வெளிப்படுத்துவது திருமுகமே யாகும். அத்தகைய பூரணப் பொலிவிற்கே அதிதேவதையாகிய மகா இலக்குமி தேவியின் முகமண்டலத்தில் பிரகாசிக்கும் ஜகன் மோஹன சோபையே இங்கு பிராட்டியாரின் கோமள வடிவமாகின்றதென்பது குறிப்பு. வேறொரு இடத்தில் அதாவது சூர்ப்பநகை வாயிலாகக் கம்பநாட்டாழ்வார் "தேவர்க்கும் அணங்காம் என்னத் தாமரை இருந்த தையல் சேடியாம் தரமும் அல்லள்'' என்று போற்றியிருப்பதும் மூல தேவதையாகிய திருமகளை விடப் பிராட்டியாரது பேரெழில் பன்மடங்கு மேம்பட்டதென்பதை வலியுறுத்தும் உதாரணங்களாகும். விரோதியாகிய அரக்கியும் நிஷ்காமிய வீரனான மாருதியும் இவ்வாறு பிராட்டியாரது வனப்பை மதிக்க முடியாமல் தயங்கினர் என்பது பின்னும் சிறப்புக்குரியதாகும். இது நிற்க தன்னை மிகவும் தாழ்வுபடுத்திக் கூறிய அநுமான் அவ்வளவோடு அமையாமல் தாயே வானர வீரர்களின் தொகை ஒருவாறு எழுபது வெள்ளம் எனக் கணக்கிடப்பட்டிருக்கின்றன. அவைகள் ஒரு கை நீர் அள்ளிப்பருகினாலும் இக்கடல் நீர் வற்றவிடும். இதுகாறும் தேவரீர் இங்கு இருப்பது தெரியாத காரணத்தினால் இலங்கை நிலைகெடாமல் நிற்கின்றது.

 

இனி நிகழப்போவதைக் காண்பீராக எனச் சேனைத் தலைவர்களின் பெயர்களையும் வகுத்துக் கூறி விடைகோரும் தருணத்தில் புதிய தொரு எண்ணம் அநுமான் எண்ணத்தி லெழுந்தது. அதாவது பிராட்டியார் தன்னை முற்றும் நம்பியது தெரிந்ததால் இங்கு பயங்கரமான அரக்கியர்க் கிடையில் இவர் படும் பரிதாபமான துன்பத்தைப் பார்த்தும் மனம் துணிந்து விட்டுச் செல்வது கொடி தென்பதே தனது ஆற்றலுக்கும் அது ஒளி செய்வதாகாதென்று கருதினார். இதனை பிராட்டியாரிடம் விண்ணப்பிக்கத் துணிந்து தொடக்கத்திலேயே கேட்பீராக. அடிமையின் விண்ணப்பத்தினை முனிந்தருளல் - கோபிக்காதிருக்கப் பணிகின்றேன் என ஆரம்பிக்கின்றார். இதிலிருந்தே தனது வேட்கை தனக்கு சந்தர்ப்பம் கருதி அவசியமாகத் தோன்றினாலும் கற்பினுக் கணியாகிய பிராட்டியாருக்கு ஒருகால் கோபத்தை எழுப்பக்கூடிய தாகலாம் என்பது விளங்கியதாகவே கொள்ள வேண்டும். என்றாலும் ஒரு சமயம் இணங்கினால் இராவண வதம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்னும் அவாவினால் கேட்கவும் துணிந்தார். பிராட்டியார் இசைவதற்காக முதற்கண் இராமனெதிர் நின்னைக் காட்டி அடிதாழ்வேன். இது காண்டிவும் இப் பணியை எனக்களிப்பதற்கு இது உசிதமான உசிதமான காலம் என்று சுருக்கமாகவும் விநயமாகவும் குறிப்பிட்டார். பாதகன் சிறையில் பரிதபிக்கும் நிலைமையில் உள்ள இவர் இராம தெரிசனத்தைப் பெறக் கூடிய எதிர்பாராத பெரும்பாக்கியம் கருதியாவது இணங்கக்கூடாதா? என இவர் கருதினார். ஆனால் கற்புடை மடவார் மனநிலையைக் கடவுளரும் உணர்தற் கெளிதோ? ஆதலின் இங்கு அநுமானும் ஊகிப்பதில் தவறிவிட்டவரே யாயினர். தனது கோரிக்கை ஏற்கப்பட்டதா? என்பதை யுணருவதற்கு முன்னதாகவே எனது தோள் நெருங்கிய மயிர்க்குலங்களினால் மிகவும் மெதுவாகவுளது. தாம் அக்கணமே துன்பம் தீர்ந்தவராவீர். தம்மைச் சுமந்து செல்லும் அடியேன் நேராக இராமபிரான் எழுந்தருளியிருக்கும் மலையினிடமே ஒரே பாய்ச்சலாகத் தாவிச் சேர்ப்பேன். இடையில் எங்கும் தாமதிக்க மாட்டேன். இது உறுதி என்றும் புகன்றார். அன்றி நான் எவ்ராலும் இறவாவரம் தந்தையால் பெற்றவன். வெறும்கை வீணனாகத் திரும்பியேகுவது எனது ஆண்மைச்சே இழிவாகும். இராமனுக்கு அடிமைப்பட்ட நான் அடிமைக்குரிய கடமையைச் செய்ய அனுமதியை அளித்தல் வேண்டும். உனது தேவர் அமுதத்திற்கொப்பாகிய தேவியார் சிறையில் படும் அவதிகளைக் கண்டு இரக்கமின்றிப் பொறுப்பின்றித் திரும்பி வந்தேன் என்று புகல்வது அழகாகுமோ? அருள்வீராக என அடிவணங்கி வேண்டினார்.

 

நிறைமதி வன்மையுடையாரே யாயினும் தாம் எண்ணிய காரியம்
முற்றுப் பெறுவதில் எல்லை கடந்த ஊக்கத்தினை மேற்கொள்ளின், அதற்கு மாறாகிய நீதிகளை சிந்திக்கத் தவறுவது இன்றும் கண்கூடு. ஊக்கம் சிறந்ததேயாயினும் அவ்வூக்கமும் சில சமயம் மேற்கண்ட காரணத்தினால் தோல்வி யுறுவதியல்பு. இது பற்றியே நமது தாயுமானார் “வசன் நிர்வாக ரென்ற பேரும், பூராயமா யொன்று பேசுமிடம் ஒன்றைப் புலம்புவார், சிவராத்திரிப்போது துயிலோமென்ற விரதியரும் அரிதுயிற் போலே யிருந்து துயில்வார்" என்று அறிவுறுத்தி யருளினார் போலும், எத்துணை யெத்துணைத் தகுதியுடையாரே யாயினும் மனிதராய்ப் பிறந்தோர் தவறுதல்
இயற்கை யென்னும் நியதிக்கு அநுமானும் இங்கு உதாரண புருடரானார் எனில் ஏனையோர் அவ்வபாயத்தினின்றும் மீள முடியுமோ? ஆதலின் இராமதூதனாகிய அநுமான் தனதொப்புவமையற்ற பேராற்றலுக் கேற்பப் பிரிந்த காதலர்களை ஒன்று சேர்ப்பதாகிய இத்தூய பணியினால் மாயாப் புகழ்பெறவிழைந்தார். தனது தலைவனுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை யளிக்க விரைக்தார். பிராட்டியாரின் துன்பக்கனலை அணைக்கத் துணிந்தார்.

 

ஆனால் பிராட்டியாரோ தனது தெய்வக்கற்பினுக்கு அடாத செயல் இதுவெனத் தெற்றென வுணர்ந்தார். கோடி கோடி யின்னல்கள் குளிக்க நேரினும் பாடுறும் கற்பின் பெருமையைத் தளர்த்தல் உத்தமமடந்தையர்க் கொண்ணுமோ? ஒருதலைத் தீர்மானமாகத் தான் எண்ணியது தகுதியெனக் கொண்ட அநுமான் பிராட்டியாரின் அபிப்பிராயத்தினை வரவேற்காமலே,

“லேறினிவிளம்பவுள தன்று வீதியால் இப்
பேறுபெற வென்கண் அருள் தந்தருளு பின்போய்
 ஆறு துயரம் சொல் இளவஞ்சி அடி யன்றோள்
ஏறுகடிதென்று தொழுதினனடி பணிந்தான்.''


என்று விரைந்து தனது தோளில் ஆரோகணித் தருளும்படியும் கூறி நின்றார். இதனைக் கேட்ட பிராட்டியார் நிலைமை மிகவும் பொறுப்பு வாய்ந்ததாயிற்று. என் செய்வார்; தன்பால் தாயன்புடையவன் என்பதில் சிறிதும் ஐயமில்லை. என்னினும் தனது பெண்மை மாண்பிற் கொவ்வாத செயலைச் செய்யுமாறு அன்பின் மிகுதியால் இவன் விரும்புகின்றான். நமக்குப் பேருதவியாளனாகிய இவன் கொள் கை தவறெனக் கண்டித்து அறிவுறுத்துவோ மெனில் பெருந்துயர் அடைந்து மனம் உளைவான். உளைவான். அன்பு மிகுதியினால் அறிவிழப்பதியல்பு. ஆதலின் நயம்படு முறையினால் மறுப்பதே கடன் எனத் தீர்மானிக்கின்றார்.

 

இவ்வாறு தீர்மானித்த தேவியார் தனது கருத்தை வெளியிடக் கையாண்ட முறை பிராட்டியாரின் பெண்மை யியல்பிற்கே பெரும்பொலிவு நல்குவதாகும். கவிச்சக்ரவர்த்தி யென்னும் சிறப்புக்குக் கம்பநாடர் உரிமை பெற்றது இங்கமைத்த செய்யுளை நோக்கச் சிறியதாகிய சிறப்பென்றே சொல்லுதல் பொருந்தும். சிறந்த கவிகட் கமைந்த பேராற்றல் அந்தந்தப் பாத்திரங்களாகவே தம்மை அமைத்துக் கொள்ளுதல் தான். எனினும் இங்கு உத்தமப்பெண்மைக்கு உயிர்நிலை பாகிய தெய்வக் கற்பின் உணர்ச்சியை எட்டுதல் ஆண்பாற்றிறமைக்கும் அரியதொன்றாகும். நமது கவி அதிலும் வெற்றி பெற்றார். முக்கியமாக ஈண்டு பிராட்டியாருக்கு ஏற்க முடியாத விஷயம் அன்னிய ஆடவனின் ஸ்பரிசமே. மனதில் மாசில்லாத நிலையில் ஸ்பரிசத்தினால் குற்றம் இல்லையென ஆண்பாலுள்ளம் கருதும். மனதில் மாசில்லையாயினும் ஸ்பரிசம் ஒழுங்கீனம் குற்றம் எனவே பெண்மையுள்ளம் திடமாக எதிர்க்கும். இக்கருத்தினைத் தற்கால நவநாகரீகர்கள் மூடக்கொள்கை, யதாபூர்வீகம் என இகழ்ந்துரைப்பர். பிறர் இகழ்வ ரென்பதற்குப் பயந்து மனவுணர்ச்சியை மாய்க்க முடியாது. இன்னும் பெண்மையுள்ளம் தம்மைப் போன்ற பெண்களின் ஸ்பரிசத்தையும் சர்வசாதாரணமாகப் பாவிப்பதில்லை யென்பது அது பவவுண்மை. தொட்டாற்சிணுங்கி யென்னும் ஒர் வகை மூலிகை மனிதர் ஸ்பரிசத்தால் ஒடுங்குவது போலப் பெண் தன்மையும் பிறர் ஸ்பரிசத்தால் உணர்ச்சிகுன்றி மாறுதலடைவது இயற்கை. ஒத்த பாலினராகிய பிறரையே ஒழுக்க மின்மையாலும், பிறப்பு வகையாலும், பழக்க மின்மையினாலும் தொடக்கூசும் பெண்பால் இனத்திற் பிறந்த நமது ஜனகநந்தனி அநுமானது ஸ்பரிசத்திற்கு எவ்விதம் துணிவார். ஆகவே அக்கருத்தைப் பின்வரும்


"அரியதன்று நின்னாற்றலுக் கேற்றதே
தெரிய வெண்ணினை செய்யவும் செய்தியே
 உரியதன்றென ஓர்கின்ற துண்டதென்
பெரிய பேதமைச் சின்மதிப் பெண்மையால்.'


என்ற அழகிய செய்யுளால் மெல்ல விளக்கலானார். முதலில் உனது வல்லமைக்கு ஏற்ற தொன்றையே எண்ணினாய். நீ அதனைச் செய்து முடிக்கவும் கூடும். எனினும் அச்செயல் தகுதியல்ல என்பதாக என்மனம் கருதுகின்றது. அவ்வாறு கருதுவதற்குக் காரணம் எனது பெண்மைத் தன்மையேதான். அப்பெண்மையின் இயல்பு பொதுவாக ஆடவர் மிகச் சிறியதென எண்ணும் விஷயங்களையும், மிகப் பெரிதாக மதிக்கும் தன்மை யுடையது.
அதன் காரணமாகப் பெரிய பேதமை யென்று று ஆடவரா ரால் அழைக்கப்படும் கவசம் பூண்டதாகும். உண்மையில் இவ்விரண்டும் ஆன்றோர் நிறுவிய ஒழுக்கத்தைப் பின்பற்றும் உறுதியும், நுட்பமாக ஆராயும் இயற்கையும், என்பது தெளிவு. தன் கொள்கை முற்றிலும் சரியானதென்று தெரிந்திருந்தும் அதனைக் கம்பீரமாக வெளியிட விரும்பாமல் தனது பெண்மையின் இயற்கை யுணர்ச்சிகளைத் தாழ்த்தியும் அவ்வுணர்ச்சியை நீதியென்றோ அறிவுடையென்றோ, எண்ண முடியாத ஆண்பால் இனத்திற் பிறந்தவராகிய அது சங்கற்பத்தை உயர்த்தியும் ஈண்டு குறிப்பிட்ட சாதுரியத்தையும் பணிவினையும் சொல்வன்மையையும் எவ்வாறு போற்றுவது? இன்றும் ஆன்றோர் ஒழுக்கத்தினைப் பின்பற்றுபவர்களை அதற்கு எதிரானோர் பேதையர் என்றழைப்பது கண்கூட ன்றோ? அன்னாரைக் குறுகிய புத்தியுடையார் என்றும் தீர்மானிக்கின்றனர், இவ்விரண்டு மகுடங்களையும் தங்கள் கட்சியே சிறந்ததென தமது கொள்கைக்கு இணங்காதவர்களுக்குச்
சூட்டுதல் இயல்பாதலினால் பிராட்டியார் தானே தனக்கு அம்மகுடங்களைப் புனைந்து கொண்டார். அதிலும் இவ்வெண்ணம் பெண்மைப் பிறப்பினோடு பிறந்த தொன்றாதலின் இயற்கையாயிற்று. இடையில் மாற்றக்கூடிய தன்று என்பதும் உட்குறிப்பு. அன்றியும் ஆண்பாலிற் குரித்தாகிய ஆண்மையும் உடன் பிறந்த தாதலினால் அதனையும் இடையில் மாற்றுதல் முடியாது. ஆண்மையை யிழந்த ஆடவனும் பெண்மையை யிழந்த பெண்ணும் சிறுமையுற்ற வரே யாவர். ஆதலின் நீ எண்ணினது உனது ஆண்பாலியல் புக் கேற்றதே யாகும். எனது பெண்மை இயல்புக்கேற்ப என் கருத்தும் எனக்குத் தகுதியானதே என்ற பொருள் ஆழத்தில் மிளிர்கின்றது. சிறை மீட்சியில் இருவர்க்குள்ள ஊக்கமும் ஒரே தன்மையுடைய தெனினும் பாலின் இயற்கையினால் இருவரும் ஒன்றுபட்ட முடிவைக் கொள்ளவில்லை. இதுவே வேற்றுமை யெனப்படும் இலக்கணம். இத்துணை நயம்பட ஒன்று மறியாது அஞ்சுபவர் போலப் பிராட்டியார் மறுத்துரைத்த அழகினைப் பாராட்டியே கவி தூய மென்சொல் என முன்ன தாகப் போற்றுகின்றார். கருத்தோ மிகப் புனிதமானது; சொல்லும் சாயையோ மிகவும் மென்மை வாய்ந்தது என்பது அதன் உட்கருத்தாகும்.
 

இனி அவ்வாறு அநுமான் கருதிய செயல் தகுதியன்றெனத் தான் எண்ணிய காரணங்களில் முதலில் ஒன்றை விவரிக்கின்றார். அதாவது அரக்கர் கடலில் வழி மறிப்பர்; அதனால் போர் தொடங்கும். தனிமையில் தடுமாற்ற மடைய நேரிடும் என்பதே யாகும். இந்தக் காரணம் போலி வாதமாகப் பிராட்டியார் கூறியதேயன்றி வேறல்ல. ஏனெனில் முதற்கண் "அரியதன்று நின் ஆற்றலுக்கென்னும் கருத்தினை இப்பிராட்டியே வெளியிட்டிருக்கிறார். அதற்கு மாறான எண்ணம் உடனே கொள்ள எவ்வித காரணமுமில்லை. என்றாலும் தனக்குள் நன்கு தெரிந்த ஒரு விஷயத்தினைக் கூடத் தெரியாதவர் போலப் பேசுதல் பெண்களின் நாற்குணங்களிலொன்று. இக்குணம் பெண்மையிடத்தில் இயல்பாக அமைந்தமை அவர்களை அணிகலன் போன்று அழகு செய்யவே யாகும். இதனை ஓதாதுணர்ந்த நமது மூதாட்டியாரும் 'பேதமை யென்பது மாதர்க்கணிகலம் எனக் குறிப்பாக உணர்த்தினார். இதனால் இன்னொரு செம்பொருளும் அதனுள் அமைந்து கிடக்கின்றது. அதாவது பேதமையைப் பெண்களோடு பிறந்த அவயவம் என்று கூறாது அணிகலம் என்றமைதான். அவயவம் இடையில் உடலைவிட்டகற்ற முடியாது. அணிகலன்களோ வேண்டும்கால் புனையவும் வேண்டாக்கால் விலக்கவும் கூடும். இன்றியமையாத தருணங்களில் பேதமைப் போர்வையைக் களைந்தெறிந்து மெய்பறிவுடைமையைக் காட்டிக்கொண்ட பேரறிவுடைய மாதரசிகளை நமது பண்டை நூல்களில் பரக்கக் காணலாம். அன்றியும் இப்பிராட்டியாரே பின் போர் காலத்தில்


''பங்கயத் தொருவனும் விடையின் பாகனும்
சங்குகைத் தாங்கிய தருமமூர்த்தியும்
அங்கையின் நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்
மங்கையர் மனநிலையறியப் பாலரோ."


என மங்கையர் மனநிலையினை மும்மூர்த்திகளாகிற ஆக்கல் காத்தல் அழித்தலைச் செய்யும் கடவுளரும் உணரவல்லர் அல்லர் எனப் புகன்றிருக்கின்றார். இதனால் பெண்கள் உண்மையிற் பேதமையுடையவரு கல்லர் பேதமை தமக்குள்ள தென்னும் தென்னும் எண்ணம் உடையவர்களுமல்லர். பேதமை உடையவர் போலக் காட்டிக்கொள்ளும் ஓர்வித அடக்க வுணர்ச்சி கொண்டவர்களென்பதே உண்மை. ஆடவரிடமும் பேதமைக் குணம் உண்டாயினும் அது உண்மையில் அறியாமையையே கொண்டதாகும். உள்ளுக்குள் தெளிவும் வெளிக்கு அறியாமைத் தோற்றமும் பெண் பிறவிக்கே அமைந்த தொன் அதுபற்றியே பெண்மைப் பேதமையைப் பிராட்டியார் பேதமை
என்றுரையாமல் பெரிய பேதமையென விசேடித்தருளினார். இதனால் பெண்களைப் பேதையர் எனவே மதித்து இரங்கும் ஆண்களும் பலர். இன்னார் உண்மை யுணரமாட்டாதவர்களென்பதே பெரிதும் பொருந்தும். இதனால் பெண்கள் எவர்க்குமே பேதமை இன்றெனவாவது அதனை சமயத்திற் கேற்பப் பயன்படுத்த முடியு மென்றாவது கொள்ளுதற்கில்லை. உத்தம விலக்கணம் அமைந்த பெண்களுக்கே இவை பொருந்தும். ஆடவரிலும் பெண்மைக் குரிய மேலேகண்ட அடக்க வுணர்ச்சி யமைந்த பலப் பலர் உளர். அவர்களும் விநயமுள்ளவராக மதிக்கப்படுகின்றனர். ஆயினும் இக்குணம் பெண்மைக்கு இயல்பாகவும் ஆண்மைக்குச் சிறப்பாகவும் கொள்ளத்தக்கதே. சமூக முன்னேற்றம் செய்வதாகக் கிளர்ச்சி செய்யும் சிலர் பெண்களே தங்களைப் பேதையர் என எண்ணி நீண்டகாலமாக உரிமை யிழந்திருப்பதாக எண்ணுகின்றனர். பெண்களிலும் நவீனக் கல்விகற்ற ஒரு சிலர் ஆடவர் கூறுவதைப் பின்பற்றி உரைக்க முன் வருகின்றனர். இது மிகவும் பரிதாபம். தன்னை அறிவிலியாக எண்ணும் இயற்கை சிற்றெறும்பு உள்பட எந்தச் சிறிய சீவர்களிடத்திலும் இருக்கமுடியாது. அறிவிற் குறைந்தவர்களும் தம்மைச் சிறப்பாகவே மதித்து வினை யாற்றுவது கண்கூடு. நீ அறிவிலி என்ற சொல்லை பிறர் சொல்ல நேரின் சிறுவரும் பொறுமை யிழக்கின்றனர். அங்ஙனமிருக்க நுண்ணறிவிற் சிறந்த பெண்கள் எவ்வாறு தம்மைப் பேதையர் எனணிக்கொள்ள முடியும். ஆதலின் அவ்வா றெண்ணுவோர் தாமே தம்மை ஏமாற்றிக்கொள்பவர்களே யாவர்.

 

இதற்கேற்ப ஈண்டு பிராட்டியாரே அடுத்த செய்யுளில் தனது ஆன்ற அறிவுடைமையைக் காட்டும் வேறு இரண்டு காரணங்களைக் கூறுகின்றார். அதாவது,


“அன்றியும் பிறிதுள்ள தொன் றாரியன்
வென்றிவெஞ் சிலைமாசுணும் வேறினி
நன்றி யென்பதம் வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ?”

வில்லாளரிற் தலைசிறந்த தாசரதியின் திருக்கரத்தில் தாங்கிய கோதண்டத்திற்கு இச் செய்கையினால் பழியும் எய்துமே? அவரது கடமையை அவ்ரால் ஏவப்பட்ட நீ செய்வது அவருக்குக் கீர்த்தி யளிக்குமோ?

 

அன்றியும் அற்ற நோக்கி அயலார் பொருளைக் கவ்வும் இழிதகை நாயைப் போல் இராகவனைப் பிரியச் சூழ்ச்சி செய்து என்னைக் களவினாற் கொண்டு வந்த அவ்வரக்கனுடைய ஈனச் செய்கையை (சுத்த வீரனாகிய) நீயும் செய்யலாமென நினைக்கவும் தகுமோ? என்பது பொருள். இவ்விரண்டு காரணங்களும் பிராட்டியாரின் வீர வுணர்ச்சியைக் காட்டுகின்றன. இக்காரணங்கள் அனுமான் உள்ளத்தில் நன்கு பதியும் என்பதும் இவர் கருதிப் புகன்றிருத்தல் கூடும்.

 

இஃதோர்வகை உபாயமேயாம். இவ்விரண்டு காரணங்களையும் உலகை நோக்கிப் புகன்ற அன்னையார் அதன்மேலும் தொடர்ந்து தனது உள்ளக்கருத்தையும் படிப்படியாக விளக்குகின்றார். அதாவது இரகு வீரனது அம்புகள் பாதகனைப் போர்க்களத்திற் படுத்த பின் மண்ணும் விண்ணும் நான் மீட்கப்பட்டால் தான் என் கற்பும், உயர் குடிப் பிறப்பும், கொண்ட நாணமும் பயனுடையவைகளாகும். அவ்வாறின்றிக் காவினால் நான் தப்பியுய்ய வழிகாணின் யான் இறந்துபட்டதற்கே சமானம் என்பதே யாகும்.

 

இவ்வளவும் கூறிய பிராட்டியார் அநுமானைப்பின்னும் திருப்தி செய்விக்க விரும்பினவராய் தூதுவ,

 

இந்த இலங்கை மட்டிலன்று இதனோடு கூடிய எல்லா உலகங்களையும் கூட எனது தெய்வக் கற்பினால் சாம்பராக்கியு மிருப்பேன். சூரிய குல திலகனது வில்லின் பெருமைக்குக் குறைவுண்டாகும் என்றே இவ்வளவையும் பொறுத்து அநுபவிக்கின்றேன் என்றனர். இதனால் அந்தோ தேவியார் ஓர் திக்கற்ற பேதைப்பெண் என இரங்கும் எண்ணம் கொள்ள வேண்டாம். என்னைக் காத்துக்கொள்ளவும் எதிரியை எரிக்கவும் என்னாலும் முடியும் எனது ஒப்பற்ற நாயகன் புகழுக்குப் பழுதுண்டாக நானே எதுவும் செய்தல் தகாதென்றே தாமதிப்ப தென்பதை உணர்வாயாக என்பதையும் தெளிவாக்கியது இம்மொழிகள்.

 

இவ்வளவும் கேட்டும் அநுமான் இவ்வனைத்தையும் போதிய சமாதானமாகக் கருதமாட்டானோ என்கிற ஐயத்தின் பேரில் அநுமானால் மறுக்கமுடியாததும் தன் மனத்தில் உள்ள உண்மையான காரணமும் ஆகிய சீரிய முடிவையும் செப்புகின்றார். அதனை,


"வேறுமுண்டுரை கேளது மெய்ம்மையோய்
ஏறுசேவகன் மேனி அல்லால் இடை
ஆறுமைம் பொறி நின்னையும் ஆணெனக்
கூறும் இவ்வுருத் தீண்டுதல் கூடுமோ?”


என்னும் கவியினால் ஒளிவின்றிக் குறிப்பிட்டார். இச் செய்யுளில் தனது கற்பின் உறுதியை அநுமானால் நன்கு தெளிவுறச் செய்ததோடு அவ்வண்ணம் தெளிவதிலும் அநுமனது தூய உள்ளமும் தாய்மை யன்பும் சிறிதும் தாக்கப்படுதல் கூடாதென்று சர்வ ஜாக்கிரதையுடன் “ஆறும் ஐம்பொறி நின்னையும் என வெகு மாதுரியமாகச் சிறப்பிக்கின்றார்.

 

இந்திரியங்களை அவித்த நின்னையும் என்று கூறினும் எங்கே வருந்தநேருமோ? என்று கருதினவர்போல ஆறும் ஐம்பொறி அவித்த ஐம்புலன்களை யுடையவனாகிய நின்னையும் என்று உம்மைத் தொகையும் தந்து ஒப்பற்ற பிரமசாரியெனச் சிறப்பித்துக் கூறுகின்றார். பெண்மைக் கியற்கையாகிய சொல்வன்மை ஈண்டு அரியா தனம் பெறுகின்றது.

ஆறும் ஐம்பொறி யெனில், இனமையிலிருந்தே இந்திரிய சேட்டைகளை அடக்கிய நைட்டிக பிரமசாரி என்று பொருள்படும். அவித்த ஐம்புலன்களை புடையவன் எனில் இல்வாழ்வானாகி முன்னம் சின்னாள் இருந்து பின்னர் அவ்வெண்ணங்களை முயற்சியால் நீக்கியவன் என்பது பெறப்படும். அதுபற்றியே பிராட்டியார் ஆறும் ஐம்பொறி நின்னையும், என்று ஏற்றிப் போற்றினர்.

 

அத்தகைய உத்தம ஒழுக்கமுடைய உன்னையும் பால்வேற்றுமையினால் என்றே உலகம் கருதும் தன்மை யுண்டாதலின் அதற்கு மாறாகிய ஆண் பெண்பாற் பிறவிபெற்ற நான் பரிசித்தல் கூடுமோ? இதிலும் புதை பொருளாக மற்றோர் நயம் அமைந்து கிடக்கின்றது. உள்ளம் நம்மிருவர்க்கும் தூயதே. அதையே காரணமாகக் கொண்டு உலகம் அங்கீகரிக்க முடியாத ஒரு செய்கையைச் செய்ய எண்ணுவதும் அறிவுடைமையாகாது. அறத்தாறு மாகாது. ஆன்றோர் காட்டிய நல்லொழுக்கமே அறத்தாறென்று பெறப்படும்.
எனும் இத்தகு செம்மைக் கருத்தும் அக்கவியுள் மிளிர்கின்றது. இதுவுமன்றி இவ்வுருத் தீண்டுதல் கூடுமோ? என்றது உணர்வினால் எனக்கும் உ உன்பால் பரம பவித்திரமான சேயன்பு தலைசிறந்துளது. உணர்வினால் பரிசிக்கலாம். மாசற்ற நீயும் அவ்வாறே அன்பு பூணலாம். எனினும் ஆண் என்றும் பெண் என்றும் மாறுபட்ட பிறவிகளின் காரணமாக உலகியலை நோக்கி இவ் வுருத் தீண்டுதல் ஒவ்வாததே. அடாத செய்கையுமாகும். மெய்ம்மைக் கற் பின் நிரந்தரச் சட்டத்தினை நிலைநாட்டுகின்றார். ஆடவர் திலகனாகிய அண்ணனின் திருமேனி ஒன்றே என்னால் பரிசிக்கத்தக்கதாகும் என்னும் உண்மை நிலையை மனக்கதவத் திறந்து வெளியிட்டனர். இவைகளால்,


"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை யறிந்து"                            
என்றும்,


“உலகத்தோடொட்ட ஒழுகாதான் மன்ற
பலகற்றும் கல்லாதவன்''


எனவும் வரும் தெய்வத் திருக்குறள்கள் மணம் கமழ்கின்றன என்றல் மிகையாகாது.

 

இனி இவ்வளவும் கூறிய அன்னையார் விவேகியாகிய அநுமானுக்கு இதகைய கட்டுப்பாடான மறுப்புரை வழங்கும் இவர் இராவணன் கொண் போந்தக்கால் என் செய்தார் என மன திலாவது ஐயுறுதல் கூடுமென ஊகித்தவராய், ஐயனே அரக்கனும் என்னைத் தீண்டின் தனதாருயிர் தப்பாதென்றஞ்சியே யானிருந்த தழைக் குடிலுடன் நிலத்தை தன் தேக பலத்தினால் கீண்டு அகழ்ந்து தேரில் ஏற்றிக்கொண்டு இங்கடைவித்தான். அவ்வாறவன் செய்தகாரணம் முன்னால் இவன் பிரமதேவனால் உடன்பாடில்லாத மாதரைத் தீண்டினால் தலை வெடித் திறக்கும்படியான சாபம் பெற்ற துண்டென்னும் உண்மை விவரம் பின்னர் விபீஷணன் புத்திரியால் நான் அறியலானேன். அந்தச் சாபத்தினால் என்னைத் தொடத் துணியான் என்னும் திடமான நம்பிக்கை எனக்குண்டு, பதிதன் பலாத்காரமாக யாது தீ கிழைப்பனோ? என்கிற பயம் உனது உள்ளத்திலும்இருப்பது கூடும். ஆதலின் இவ்வீரகசியத்தினை யுரைக்கின்றேன். நீயும் அச்சந் தவிர்த்தி என்றும் அறிவுறுத்தி மேலும் பலகூறி,

 

“ஆதலானது காரியம் அன்றைய

வேதநாயகன் பாலினி மீண்டனை
போதல் காரியமென் றனள்'' பூவை

 

ஆனந்த போதினி – 1932, 1933 ௵ -

மே, ஜுன், ஜுலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், மார்ச்சு, ஏப்ரல், ௴

 

 

 

 

No comments:

Post a Comment