Friday, September 4, 2020

 பிரம சூத்திரம்



இரண்டாவது அத்தியாயம் - முதல் பாதம்

 

குறிப்பு: - உபாதான காரணம் என்பது முதற்காரணம். குடத்திற்கு மண் உபாதான காரணம்.


காரணம் காரியமாவது நான்கு வகைப்படும். அவையாவன: -


1. விருத்தி, 2. பரிணாமம், 3. ஆரம்பம், 4. விவர்த்தம். என்பன வாம். இவற்றுள்,

 

1. விருத்தி: - ஆடை வீடுருவமாதல்; மண் கடமாவதும் இதுவே, (விருத்தியாவதி உபாதான (முதற்) காரணத்தினின்றும் காரியம் சூக்குமத்திரிபாய் உண்டாவது. உதாரணம்: - ஆடை வீடுருவமாக அமைதல் போல் வீடு (டேரா) மறுபடியும் தன் உபாதான காரணமான ஆடையின் வடிவமாவதாம். விருத்தி என்பது இங்குச் சூட்சும பரிணாமம்.

 

2. பரிணாமம்: - ஒரு பொருள் தன் வடிவத்தை விட்டு வேறு வடிவத்தை யடைவது. உதாரணம்; - பால் தயிராதல், (தயிர் மறுபடியும் தன் உபாதான காரணமான பாலின் வடிவமாகாது. இது ஸ்தூல பரிணாமம், பரிணாமம் = திரிவு,

 

3. ஆரம்பம்: - பல அவயவங்களோடு கூடிய பல காரணங்களினின்றும் பல அவயவங்களோடு கூடிய ஒரு காரிய முண்டாவது. உதாரணம்: - பல அவயவங்களோடு கூடிய பல நூல்களினின்றும் பல அவயவங்களோடு கூடிய ஓர் ஆடை உண்டாதல் போல்வது.

4. விவர்த்தம்: - ஒரு பொருள் தன் வடிவத்தை விடாமல் வேறுவடிவத்தைத் தன்னிடத்தில் காட்டுதல், உதாரணம்: -- கயிற்றில் பாம்பு தோன்றுதல்.

 

(கயிறு தன் வடிவத்தை விடாமல் வேறு வடிவமாகிய சர்ப்பத்தைத் தன்னிடத்திற் காட்டுதல் காண்க.)

 

பிரம்மத்திற்கும் உலகிற்கு முள்ள சம்பந்தம் கயிற்றிற்கும் சர்ப்பத்திற்கும் உள்ள சம்பந்தம் போல்வதாம் என்று முன்னர்க் கூறப்பட்டது. எனவே, பிரம்மம் உலகிற்கு விவர்த்த உபாதான காரணமா யிருப்பதாம். பிரம்மம் நிர்வயவ மென்றும் சுருதி சொல்லுதலின், விகாரத்தாலுண்டாவதாகிய பரிணாமவாதமாவது அவயவங்களை வேண்டுவதாகிய ஆரம்ப வாதமாவது பொருந்தா தென்றறிக.

 

மேற் கண்ட விஷயங்கள் பின் வரும் விஷயங்களை யறிதற்கு அத்தியாவசியமாகலின் இவற்றை மறவாமல் மனத்தில் வைத்தல் வேண்டுவது அத்தியாவசியமாம்.)


கீழ்வருவது பூர்வபக்ஷ சூத்திரம்,

 

8-வது சூத்திரம், அவதாரிகை: - (சத்காரியவாதம் - காரியம் சத்தியம் என்று வாதித்தல். அத்வைதம் சத்காரியவாதமல்ல வாயினும் காரண காரியங்கள் அபின்ன மென்றும் காரியத்தன்மை காரணத்திலுள்ள தென்றும் கூறுதலால் அது சாத்காரியவாதம் என்று கொண்டு பூர்வபக்ஷிகள் வாதிக்கின்றனர் என்றறிக) சத்காரியவாதம் சித்திப்பதற்காக காரண காரியங்களுக்கு அநந்யத்தன்மை (வேறாகாத்தன்மை) அங்கீகரித்தால், தண்ணீரில் ஒடுங்கிய உப்பானது அந்தத் தண்ணீரைக் கெடுப்பது போல, காரணத்திற்கும் காரியத்தைப் போலவே அசுத்த முதலாகியவைகளைச் சொல்ல வேண்டிவரும் என்று நிரூபிப்பதற்காக,


சூ. 8. "அபீதௌ தத்வத்ப்ரஸங்காத ஸமஞ்ஜஸம்"

 

பதவுரை: - அபீதொ=பிரளயத்தில், தத்வத்ப்ரஸங்காத்=விகாராதி தோஷப் பிரசங்கம் பிரம்மத்திற் குண்டாவதால், அஸமஞ்ஜஸம் = வேதாந்தமதம் அயுக்தமாம்.

 

கருத்து: - காரியமானது காரணத்தில் ஒடுங்கி (லயித்து) ஏகரூபமாவதே பிரளய மெனப்படும். அவ்வாறு ஒடுங்கின காலத்தில் காரியத் தினிடத்திலுள்ள ஸ்தூலத்தன்மை, அவயவத் தன்மை, அசேதனத்தன்மை, பரிச்சின்னத் தன்மை, அசுத்தத்தன்மை முதலிய தருமங்கள் (தன்மைகள்) பிரமத்திற்கு உண்டாகும். இது முதலாவது தோஷம். மேலும்,

 

எல்லா விபாக பதார்த்தங்களும் (வெவ்வேறாகப் பிரிபட்டுள்ள பதார்த்தங்களும்) பிரளயத்தில் அவிபாகத் (வேற்றுமையற்ற) தன்மையைப் பொருந்தியிருத்தலாலும், புனருற்பத்திக்கு (மீண்டும் தோன்று தற்கு) நியமமானமில்லாமலிருத்தலாலும் (ஒடுங்கின முறையே வேற்றுமைப்பட்டனவாய்த் தோன்ற முடியாமையாலும்,) போக்த்ரு (போகத்தை வனுபவிப்பவன்) போக்ய (போகப் பொருள்கள்) வேறு பாட்டுடன் அத்தகைய (ஒடுங்குதற்கு முன்னம் இருந்தது போன்ற) உற்பத்தியாவதற்கு இயலாமற் போகின்றது. இஃது இரண்டாவது தோஷம். மேலும்,

 

ஜீவர்கள் பிரம்மத்தோடு வேறு படாத்தன்மையோடு கூடிய நிலையையடைந்திருத்தலால் முக்தர்களும் மீண்டும் மற்றவர்களோடு நிஷ்காரணமாகப் பிறக்க வேண்டிவரும். இது மூன்றாவது தோஷம். தவிர,

 

அப்படிக்கின்றி, எல்லாப் பதார்த்தங்களும் பிரம்மத்தினிடத்து வேறுபட்ட தன்மையோடு சேர்ந்திருக்கின்றன என்று கூறின் பிரளயமே இல்லை என்று சொல்ல நேரும். இது நான்காவது தோஷம்.  ஆகலின், பிரம்மகாரணவாதம் அயுக்தமாம்.

 

9-வது சூத்திரம்: - அவதாரிகை: - அழிவுபட்ட குடமானது தனக்குக் காரணமான மண்ணில் ஒடுங்கினபோது அந்த மண்ணை எப்படிக் கெடுப்பதில்லையோ அப்படியே பிரளயத்தில் ஜகத்தானது தன் காரணத்தில் ஒடுங்கும் போது அதனைக் கெடுப்பதில்லை என்று சித்தாந்தப் படுத்தப்படுகிறது.


சூ. 9. ''நதுத்ருஷ்டாந்த பாவாத்."

 

பதவுரை: - நது = பூர்வபக்ஷிகள் சொன்ன தோஷம் சரியன்று, த்ருஷ்டாந்த பாவாத் = காரியத்தின் குணங்கள் காரணத்தைக் கெடுப்பதில்லை என்பதற்கு திருஷ்டாந்தம் இருத்தலால்.

 

கருத்து: - காரியத்தின் குணங்கள் காரியத்தைக் கெடுப்பதில்லை என்பதற்கு அனுபவ பூர்வமான திருஷ்டாந்தங்கள் இருக்கின்றன. காரியத்திற்கு அக்காரியத் தன்மையைக் குறிக்கும் ஏதுக்களான பரிமாணம் (அளவு) முதலிய விகாரங் (வேறுபாடு) களைத் தரித்து காரணத்தில் அது (காரியம்) ஒடுங்குவதல்லவா அதற்குப் பிரளயமாகும்? மனித வடிவாகச் செய்யப்பட்ட மண்ணானது அந்த மனித வடிவம் அழிந்தவுடனே மீண்டும் மண்ணேயாகின்றது. அப்பொழுதே அது மறுபடியும் காரண பாவத்தை அடைந்ததாகிறது.
அவ்வாறு அடைந்தபோது முன்னேயிருந்த மனித வடிவத்தின் அவயவங்களெவையும் அந்த மண்ணைப் பாதிப்பதில்லை. அப்படியே, பிரபஞ்சத்திற்குக் காரணமான பிரம்மத்தில் அது (பிரபஞ்சம்) ஒடுங்கும்போது அதன் (பிரபஞ்சத்தின்) விகாரங்களைக்கொண்டு பிரம்மத்தைப் பாதிப்பதில்லை. காரிய காரணங்கள் அன்னிய மானவையாயினும், காரியத்திற்குக் காரணாத்மத் தன்மை காரணத்தை விட்டிராத தன்மை) உண்டேயன்றி, காரணத்திற்கு காரியாத்மத் தன்மை (காரியத்தை விட்டிராத் தன்மை) இல்லை. (காரணத்தை விட்
இக் காரியமிராது; காரியத்தை விட்டுக் காரணம் இருக்கும் என்பது கருத்தாம்.) (இந்த விஷயம் மேல்வரும் 14-ம் சூத்திரத்தினுரையில் விளக்கப்படும். ஆண்டுக் காண்க).

காரிய காரணங்கள் முக்காலத்தும் அருந்தியம் என்று சுருதிகள் கூறுகின்றன. தவிர, வேதாந்த மதத்தில் காரியமான ஜகத்தும் அதன் தர்மங்களும் சத்திய மன்றெனவும், அவித்தியாரோபிதமானவை (அஞ்ஞான கற்பிதங்கள்) எனவும் சொல்லப்படுதலால், அவை (ஜகத்தும் அதன் தர்மங்களும்) காரணமாகிய பிரம்மத்தைப் பாதிக்கும் என்னும் தோஷம் எக்காலத்தும் உண்டாகாது. இந்த விஷயத்தில் மற்றொரு திருஷ்டாந்த முண்டு. அதாவது: - பலவித மாயகாரியங்களைச் செய்யும் இந்திரஜால வித்தைக்காரன் தன்னிடத்திலுள்ள அந்த மாயையால் தாக்கப்படுவதில்லை. அதுபோல அவஸ்திவாகிய சம்சார மாயையால் பரமாத்மாவும் தாக்கப்படுவதில்லை. மேலும்,

சொப்பனங் காண்பவன் அந்தச் சொப்பனத்திற்காணும் பொருள்களால் விழிப்புக் காலத்திலும் சொப்பன காலத்திலும்கூட எப்படி பாதிக்கப்படுவதில்லையோ, அப்படியே அவஸ்தாத்திரய (சாக்கிரம், சொப்பனம் சுழுத்திஎன்னும் மூன்று அவஸ்தைகளுக்கும்) சாட்சியாகிய பரமாத்மாவும் ஜன்மஸ் திதிலயங்களாகிய மூன்றினும் அவற்றின் தோஷங்களால் பாதிக்கப்படான். தவிர, சயிற்றி னிடத்துண்டாகும் பாம்பின் தோற்றமானது முக்காலத்தும் அசத்தியமாக விருத்தல் போலவே, பரமாத்மாவினிடத்து உண்டாகும் ஜன்ம ஸ்திதி லயத் தன்மைகளின் தோற்றமும் மாயா மாத்திரமாகவே யிருக்கின் மறது. “மாயா மாத்ரமிதம் த்வைதம் அத்வைதம் பரமார்த்தத' என்று கூறும் சுருதியையும் காண்க. ஆகலின், காரியத்தின் தோஷங்கள் காரணத்தைக் கெடுக்கும் என்னும் முதல் ஆக்ஷேபம் சரியான தன்று.

 

சுஷப்தி சமாதி முதலிய காலங்களில் ஜீவன் ஆத்மாவோடு அவிபாகநிலையை யடைந்தும், பித்தியாஞானம் நாசமாகாமையின், விழிப்புக் காலத்தில் மீண்டும் விபாக நிலையையே அடைகின்றான். அப்படியே பிரளயத்தும் எல்லா ஜீவர்களும் ஈசுவரனோடு அவிபாக நிலையை யெய்தியும், அவர்களுக்கு அவித்தை (அஞ்ஞானம்) நாசமாகாமையின் பிரளயாந்தத்தில் மீண்டும் விபாகத்தையே அடைகின்றனர். சுருதியானது, "நாள்தோறும் ஜீவர்கள் பரமாத்மாவை யடைகின்றார்கள்; ஆனால், அந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ள முடியாமலிருக்கின்றார்கள்" என்று என்று கூறுவதையும் காண்க. ஆகையால், பூர்வபக்ஷிகளின் இரண்டாவது ஆக்ஷேபமும் யுக்தமான தன்று.

 

முக்தர்களுக்கு அவித்தை நாசமாய் விடுதலால் மீண்டும் உற்பத்தியாவார்கள் என்னும் தோஷம் சம்பவியாது. ஆதலின் மூன்றாவது ஆக்ஷேபமும் பொருந்தாது.

 

பிரளயத்தில் ஜகத்தானது பிரம்மத்தினும் வேறாக இருக்கும் என்று வேதாந்திகள் எங்கும் கூறி யிருக்கவில்லை. ஆகையால் நான்காவது ஆக்ஷேபமும் சரியன்று.

 

10 வது சூத்திரம். அவதாரிகை: - பூர்வபக்ஷிகளாகிய தார்க்கிகர்களால் செய்யப்பட்ட மேற்கண்ட ஆக்ஷேபங்கள், பூர்வபக்ஷிகளில் ஒரு சாராராகிய சாங்கியர்களுக்குப் பொருந்துமேயன்றி, காரியமித்தியாத்துவ (காரியம் மித்தை என்னும்) வாதிகளாகிய வேதாந்திகளுக்குப் பொருந்தா என்று கூறப்படுகிறது.

 

சூ. 10. “ஸ்வபக்ஷ தோஷாச்ச."

 

பதவுரை: - ஸ்வ பக்ஷதோஷாத்-ச=பிரதிவாதிகளாகிய சாக்கியர்களின் பக்ஷத்தில் தோஷ மிருத்தலாலும் (உபநிடதங்களை யாதாரமாகக் கொண்டுள்ள வேதாந்தமதம் யுக்தமானதே.)

 

கருத்து: - அத்வைதிகள் காரியமித்யாத்வ வாதிகள் (காரியம் மித்தை என்று கூறுவோர்) துவைதிகள் காரியம் சத்தியம் என்று கூறுவோர். நையாயிக, வைசேடிக, சாங்கிய, யோக, மீமாம்சகர்க ளனைவரும் துவைதிகனே. மேலே பூர்வபக்ஷிகளால் சொல்லப்பட்ட அவிலக்ஷணத்வாதி தோஷக்கள் முக்கியமாகச் சாங்கியர்களுக்கே பொருந்தும், எப்படி யெனில்: - அதிக சூட்சுமமானதும், விகாரமற்றதும், அவயவமற்றதுமாகிய பிரதானத்தி (பிரகிருதியிலிருந்து அதில் வேறான தருமங்களையுடைய ஜகத்து உற்பத்தியாவிற்றென்று அவர்கள் தான் கூறுகின்றார்கள். ஆதலால், அவர்களே காரணத்தினும் வேறான லக்ஷணத்தையுடைய காரியத்தி னுறபத்தியை அங்கீகரித்தவர்களாகின்றார்கள். ஆகையால், ஜகத்தி னுற்பத்தியில் அசத்காரியவாதம் சொல்லவேண்டி நேரும்.

 

பிராயத்திலும் முன் 8-ம் சூத்திரத்திற் காட்டப்பட்ட நான்கு தோஷங்களும் உண்டாகும். எவ்வாறெனில்: -

 

(1) பிரளயத்தில் காரியத்திற்குக் காரணத்தோடு அவிபாகம் அங்கீகரிக்கப்படுதலால், பிரபஞ்சத்திற்குள்ள ஸ்தூலத் தன்மை முதலிய தோஷங்கள் பிரதானத்தை (காரணத்தை)ப் பாதிக்கும் (காரியம் சத்தியமாக இருத்தலால்.)

 

(2) பிரளயத்தில் ஜீவர்கள் பிரதானத்தோடு ஐக்கிய மடைந்தால் மறுபடியும் அவைகள் நியமகாரண மில்லாமற் போதலால் போக்த்ரு போக்கிய விபாகத்தோடு தோன்ற மாட்டா.

 

(3) காரணம் இல்லாவிடினும் போக்த்ரு போக்கிய விபாகத்தோடு தோன்றும் என்று கூறும் பக்ஷத்தில் காரணாபாவ ஒற்றுமையால் முக்தர்களுக்கும் மீண்டும் பந்தம் (பிறப்பு) உண்டாகும் என்று சொல்லவேண்டி யிருக்கும்.

 

(4) பிரளயத்தில் பத்த ஜீவர்களின் பிறவிக்கேதுவான காரண சரீரங்கள் வெவ்வேறாக வேறு பட்டிருக்கும் என்றும், முக்தர்களின் காரண சரீரங்சன் பிரதானத்தில் ஒடுங்கும் என்றும் கூறும் பக்ஷத்தில், பெத்தர்களின் காரணசரீரங்கள் பிரதானத்தின் காரியங்களல்ல என்று சொன்னதாகும். இது அவர்களின் கொள்கைக்கே விரோதமானது.

 

இவ்வாறு இந்தத் தோஷங்கள் பூர்வபக்ஷிகளுக்கே பொருந்துகின்றனவன்றி, காரியம் மித்தை என்று கூறும் வேதாந்திகளுக்குப் பொருந்துவனவல்ல என்றறிக.

 

11-வது சூத்திரம். அவதாரிகை: - தர்க்கத்தினால் சுபக்ஷ தோஷங்களைப் பரிகரிக்கின்றோம் என்று பிரதிபக்ஷிகள் கூறுதலால், வேதபாகியங்களும் மனிதரின் ஊதை மாத்திரத்தா லுண்டானதுமான தர்க்கங்கள் இந்திரியங்களுக் கெட்டாத பிரம்மத்தை நிரூ ரூபணஞ் செய்வதற்குச் சக்தி யுடையவையாகா என்று கூறப்படுகின்றது.


சூ 11. தர்க்காப்பதிஷ்டாநாதப்யந்யதா நுமே யமிதிசேதேவமப்ய விமோக்ஷ ப்ரஸங்க:

 

பதவுரை: - தர்க்கா ப்ரதிஷ்டாநாதபி= தருக்கத்தின் அஸ்திரத்தன்மையாலும், (சுபக்ஷதோஷம் பரிகரிக்கக் கூடாமல் வேதாந்தமதம் யுக்தமுடையதா யிருக்கின்றது); அந்யதா= அந்த அஸ்திரத்தன்மை உண்டாகாம விருப்பதற்காக, அதுமேயம் = சாங்கிய தர்க்கஸ்வரூபம் யோசிக்கத்தகுந்தது, இதசேத் = இவ்வாறு கூறுவாயானால், எவம்பி = இவ்வாறு யோசித்தாலும், மோக்ஷப்ரஸங்க: = மோக்ஷராகித்ய தோஷம் சம்பவிக்கும்.

 

கருத்து: - தர்க்கமானது ஸ்திரமற்றிருப்பதனாலும் சுபக்ஷ (பூர்வ பக்ஷிகளின்) தோஷம் நிவர்த்திக்கக் கூடாததாகிறதினால் வோதந்தமதம் யுத்த முடையதாகின்றது. எவ்வாறெனின்: கபிலன் சர்வஞ்ஞன் (பேரறிவுள்ளவன்) ஆகலின் அவனால் உண்டாக்கப்பட்ட தர்க்கம் (தார்க்கிக மதம்) குற்றமில்லாதது என்று அனுமானிக்கத் தக்கதாயிருக்கின்றது என்று பிரதிபுகள் ஒரு கால் உரைக்கலாம். ஆனால் அப்படியே கௌதமரும் (இவர் நையாயிகமத காத்தா), கணாதரும் (இவர் வைசேடிகமத கர்த்தா), பதஞ்சலியும் (இவர் யோகமத கர்த்தா), ஜைமிளியும் (இவர் மீமாம்சையின் கர்த்தா), முதலியவர்களும் கூட சர்வஞ்ஞர்களே என்று சொல்லப்படுகிறார்க ளாகலின், சாங்கியமதத்திற்கு விபோதமாகப் போதிக்கும் இவர்களின் மதங்களும் ஸ்தாபிக்கப்படத்தக்கவையாகின் நன. ஒன்றற்கொன்று விரோதமாக வுள்ளவைகளாகிய இந்தத் தர்க்கங்களெல்லாம் ஸ்தாபிக்கப்படத்தக்கவையே என்று கூறுதல் அசம்பாவிதமல்லவா?

 

இப்படி எல்லாத் தர்க்கங்களுக்கும் போல சாங்கிய தர்க்கத்திற்கும் ஸ்தாபிக்கப்படத்தகாதது என்னும் தன்மையே விளங்குகின்றது. ஆதலினால், அதனால் என்றைக்கும் மோக்ஷப்பிராப்தி யுண்டாகாது. சுருதியின் அனுக்கிரகத்தோடு கூடிய தர்க்கமே உபாதேயம் (கிரகிக்கத்தக்கது) என்று ஸ்மிருதிகளும் கூறுகின்றன. உலக விவகாரத்தில் சில விஷயங்களுக்குத் தருக்கம் உதவி செய்வதாக விருப்பினும் ஜெகத்காரண வஸ்துவை நிர்த்தாரணம் செய்யும் விஷயத்தில் அது பிரயோஜன முடையதாதலில்லை. ஏனெனில், அந்த ஜகத்காண வஸ்துவானது அத்விதீயமாயும், சச்சிதானந்தமாயும், வேதைக வேத்ய
மாயும் இருப்பது. அது உருவம் முதலியவை அற்றதாகலின் இந்திரியங்களால் அறியப்படாதது. லிங்கம் (குறி) முதலியவை யில்லாததா யிருத்தலின் அனுமானம் முதலிய பிரமாணங்களால் அறியப்படத் தகுந்ததாகாது.

 

4-வது சிஷ்டா பரிக்ரஹாதி கரணம்.

 

12-வது சூத்திரம். அவதாரிகை: - பிரதான காரண வாதத்தை (பிரதானமே ஜெகத்கா ரண மென்று கூறும் சாங்கியர்களின் வார்த்தை) நிராகரித்ததனால் கணாதர் முதலியவர்களின் வாதங்களும் நிராகரிக்கப் பட்டனவாகும் என்று கூறப்படுகின்றது.


சூ. 12. "ஏதோசிஷ்டா பரிக்சஹா அபிவ்யாக்யாதா:"

 

பதவுரை: - ஏதேந= பிரதான காரணவாத நிராகரணத்தினால் சிஷ்டாபரிக்ரஹா அபி = எந்த அமிசத்திலும் சிஷ்டர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத அணுவாதி காரணவாதங்களும், வ்யாக்யாதா: = நிராகரிக்கப்படும்.

 

கருத்து: - பிரதானம் காரணம் என்னும் மதம் (சாங்கிய மதம்) சில அமிசங்களிலாவது வேதானுசாரமாய், மிக்க தர்க்கவாத பலமுடைய தாய், பெரியோர்களால் அங்கீகரிக்கப் படத்தக்கதா யிருக்கின்றது. அத்தகைய சாங்கிய மதத்தை நிராகரித்ததனாலேயே, எந்த அமிசத்திலும் வேதானுசாரியாகாததும் சிஷ்டர்களால் அங்கீகரிக்கப் பட்டதுமாகிய பரமாணு முதலியவற்றை ஜகத்காரண மென்று வாதிக்கும் மதங்களும் நிராகரிக்கப் பட்டனவாகும். சாங்கியர்கள் சத்காரியவாதிகளாகலின் அவர்கள் மதம் சில வகைகளிலாது அங்கீகரிக்கத்தக்கதாகும். அணுவாதிவாதிகள் அசத்காரிய வாதிகளாகலின் அவர்கள் மதங்களில் சிறிதளவேனும் அங்கீகார யோக்யமன்று. ஆகலின் அவைகளும் நிராகரிக்கப் பட்டனவேயாகும்.


5. போக்த்ரா பத்யதி கரணம்.

 

13-வது சூத்திரம். அவதாரிகை: - மனோவாக்குக் காயங்களுக் கெட்டாத பிரம்மத்தைக் குறித்து தர்க்கம் ஸ்திரமுடையதாகாது என்று முந்திய அதிகரணத்தில் போதிக்கப்பட்டது - ஜகத்தின் பேதங்கள் ஸ்திரமுள்ளனவாக விருத்தலின் அவற்றைக்குறித்து அது பிரமாணமாகலாம் என்றும், பின்னங்களாகிய கடபடக் (ஆடை) கள் பின்னப் பொருள்களாகிய மண் நூல் இவைகளால் உற்பத்தியானதாகத் தர்க்கத்தினாலல்லவா நாம் தெரிந்து கொள்கின்றோம் என்றும், அவ்வாறே பிரபஞ்சத்தில் நாநா பேதங்களும் நாநா காரணங்களினின்றும் தோன்றியிருக்க வேண்டுமேயன்றி, ஒரு காரணத்தினின்றும் தோன்றுயிருக்கமாட்டா என்றும் பூர்வபக்ஷிகள் ஆக்ஷேபிக்கின்றனர். இந்த ஆக்ஷேபம் வேதாந்தமதத்தைப் பாதிக்காது என்று காட்டி இச்சூத்திரம் நிரூபிக்கின்றது.


சூ. 13. போக்த்ரா பத்தேரவிபாகச் சேத்ஸ்யால் லோகவத்.

 

பதவுரை: - அவிபாகச் சேத் =பிரம்மமும் ஜீவப்பிரபஞ்சங்களும் அபின்னங்களாயிருந்தால், போக்த்ராபத்தே8=போக்த்ருத்துவ தோஷம் உண்டாவதால் (பிரம்மமே காரணம் என்னும் வாதம் அயுக்தம் என்று ஆக்ஷேபம் வந்தால்) லோகவத் =கடலையும் அதன் அலைகளையும் போலவே, ஸ்யாத் =பிரம்மத்தினிடத்து போக்த்ரு போக்கிய விபாகம் உண்டாகின்றது.

 

கருத்து: - போக்துரு (அனுபவிப்பவன்) போக்கியம் (அனுபவிக்கப்படும் பொருள்) இவற்றின் பாகுபாடு (இரண்டும் வெவ்வேறு என்பது) உலகத்தில் பிரசித்தமல்லவா? ஜீவர்கள் போக்தா; விஷயங்கள் போக்கியம். இவை இரண்டும் பிரம்மத்தை விடப் பின்னமானவையல்ல என்று கூறினால் போக்தா போக்கியமாகவும், போக்கியம் போக்தாவாகவும் ஆகவேண்டியிருக்கும். மேலும் பிரம்மமும் ஒரு காலத்தில் போக்தாவாகவும் போக்கியமாகவும் ஆக வேண்டிருக்கும். இது அயுக்தமல்லவா? ஆகையால் அத்விதீய பிரம்ம காரணவாதம் பொறுத்த முடையதன்று என்று இவ்வாறு பூர்வபக்ஷிகள் கூறும் வாதம் சரியன்று என்பது உலகப்பிரசித்தமான திருஷ்டாந்தத்தால் தெளிவாகின்றது. எப்படியெனில்.  

 

சமுத்திரத்தின் விகாரங்களாகிய அலை திவலை நுரை குமிழி முதலியவை ஜலத் தன்மையால் அக்கடலினும் அன்னியமாகாவிடினும் ஒன்றற்கொன்று வேறானவை என்னும் விவகாரம் ஏற்பட்டிருக்கின்றதல்லவா? அவ்வாறு வேறுபாடு ஏற்பட்டிருந்தாலும் அவை கடலினும் பின்னமாக இருக்கவில்லை. இப்படியே போக்துரு போக்கியங்கள் ஒன்றற்கொன்று பின்னமானவையாயிருந்தும் பிரம்மத்தினும் வேறாகாதிருக்கின்றன என்றறிக.

6. ஆரம்பணாதிகரணம்

 

14-வது சூத்திரம். அவதாரிகை: - வியாவகாரிகமாகிய போக்தா போக்கியம் என்னும் பேதங்களை யங்கீகரித்து அதனால் உண்டாகும் தோஷங்கள்லைகடல் முதலிய திருஷ்டாந்தத்தால் முன் சூத்திரத்தில் விளக்கப்பட்டன. இந்த திருஷ்டாந்த பலத்தால் பிரம்ம ஜகத்தாகப் பரிணமித்த தெனவும் அதனால் அதற்கு விகாரத் தன்மை சம்பவித்த தெனவும் மந்தபுத்தி யுடையோர் கருதுவராகலின், முன்னே அங்கீகரிக்கப்பட்ட போக்தா போககிய விவாகங்கள் (வேறுபாடுகள்) கற்பிதமே யன்றி பாரமார்த்திக மல்ல வென்று விவர்த்தவாதத்தால் முக்கியாபிப்பிராயம் கூறப்படுகின்றது.

 

முன் அதிகரணத்திலும் இந்த அதிகரணத்திலும் விஷயம் ஒன்றேயாயினும் வாதங்கள் வெவ்வேறு. முன்பு பரிணாம திருஷ்டாந்தத்தால் பிரம்மம் ஜகத்திற்குப் பரிணாமோபாதான காரண மென்று கூறப்பட்டது. இப்போது அது (பிரம்மம்) ஜகத்திற்கு விவர்த்தோபாதான காரண மென்று கூறப்படுகின்றது.


சூ. 14. "த்தாந்யத்வ மாரம்பண சப்தாதிப்ய,"

 

பதவுரை: - ததநந்யத்வம்=காரணமாகிய பிரமத்தைக் காட்டிலும் காரியமாகிய ஜகத்திற்கு அபின்னத்துவம் அவகம்யதே = அறியப்படுகின்றது) ஏனெனில், ஆரம்பண சப்தாதிப்பு =சுருதியிலுள்ள ஆரம்பணம் முதலிய வார்த்தைகளால்.

 

கருத்து: - காரணமாகிய பிரம்மத்தைக் காட்டிலும் காரியமாகிய போக்தாபோக்கியம் முதலிய பிரபஞ்சக் கூட்டம் அநந்யம் (வேறானதல்ல) என்று சுருதியால் அறியப்படுகின்றது. அகந்யத்துவ மென்றால்; காரணத்தினும் காரியத்திற்கு வேறான இருப்பு இல்லாமற் போதலேயன்றி அவிபாக (பிரிக் கப்படக் கூடாத) நிலையை அடைவதன்று. முந்திய சூத்திரத்தில் காரியத்திற்குக் காரணத்தை விட வேறான இருப்பு அலைகடல் திருஷ்டாந்தத்தால் வியவகார தசையில் அங்கீகரிக்கப்பட்டுப் பின்பு அவற்றிற்கு அவிபாகம் (வேறல்ல என்பது) கூறப்பட்டது. அத்தகைய வேறுபட்ட நிலை காரியத்திற்கு பாரமார்த்திகமாக (உண்மையாக) எக் காலத்தும் இல்லை யென்று இங்கு நிஷேதிக்கப்பட்டு (விலக்கப்பட்டு) காரிய காரணங்களுக்கு அன்னியத்தன்மை நிரூபிக்கப் படுகின் றது. ஆதலால் பரிணாம வாதத்தில் பிரம்மகாரண வாதிகளுக்கு நேரிடும் தோஷங்கள் விவர்த்த வாதத்தில் போக்கப்படுகின்றன.

 

காரியம் காரணத்தினும் வேறன்று: - (சுருதியில் கூறப்பட்டுள்ள விஷய வாக்கியம் அதற்குத் திருஷ்டாந்த வாக்கியம் என்பவற்றின் பொருள் கீழே காட்டப்படுகின்றது.)
விஷய வாக்கியத்தின் பொருள்: 'எந்த உபதேசத்தால் கேட்கப் படாதது கேட்கப் பட்டதாகுமோ, அறியப்படாதது அறியப்பட்டதாகுமோ நிச்சயிக்கப்படாதது நிச்சயிக்கப்பட்டதாகுமோ அந்த உபதேசத்தை உன் குருவைக் கேட்டாயா?

 

திருஷ்டாந்த வாக்கியத்தின் பொருள்: - பிரியதரிசனனாகிய ஒ சுவேத கேதுவே! ஒரு விஞ்ஞானத்தால் சர்வ விஞ்ஞானமும் எப்படித் தெரியும்? என்றால் ஒரு மண்ணுருண்டையின் ஞானத்தால் அதன் காரியங்களாகிய குடம் சட்டி முதலிய யாவும் மண்ணின் விகாரமே என்று தெரிகின்றது. (அதாவது: மண் தன்மையால் மண்ணினும் வேறுபட்டவை யல்ல வென்பது தெரிகின்றது.) குடத்தின் ஒடுங்கிய கழுத்து முதலிய வடிவங்களும் குடம் முதலிய பெயர்களும் சொல் மாத்திரமே யன்றி சத்திடமல்ல. அதன் காரணமாகிய மண் மாத்திரமே சாத்தியம்.'' எனவே குடம் முதலியவற்றின் வஸ்துதத்துவம் மண்ணேயன்றி வேறல்ல. இப்படியே திருஷ்டாந்தத்திலும் பிரம்மத்தினும் வேறாக காரியத்திற்கு இருப்பில்லை என்று சுருதி வாக்கியங்கள் தெரிவிக்கின்றன.

 

“திருசியங்கள் (பார்க்கப் படுபவை) எல்லாம் பிரம்மத்தினும் வேறுபடாதவை யாயின், சுருதியில் சொல்லப்பட்டது போல் ஒரு விஞ்ஞானத்தால் சர்வ விஞ்ஞானமும் எப்படி யுண்டாகும்?" என்று இங்கு ஓர் ஆக்ஷேபம் தோன்றலாம். இதற்குச் சமாதானம் இதுவாம்.

 

"மகா காசத்தை விட கடாசாகம் எப்படி அனன்னியமோ, மணற்பூமியினும் கானற்சலம் எப்படி அனன்னியமோ, இப்பியினும் வெள்ளி எப்படி அனன்னியமோ, கயிற்றினும் பாம்பு எப்படி அனன்னியமோ அப்படியே பிரம்மத்தினும் போக்தா போக்கியம் முதலிய பிரபஞ்சமும் அனன்னியமாம். அதாவது பிரம்மத்தினும் வேறாக சத்தியமான இருப்புடையதல்ல. ஆகையால் திருஷ்டமானவுடனே நஷ்ட சொரூப முடையதாகின்றது.

(இவ்வாறு சுத்தாத்வைதம் ஸ்தாபிக்கப்பட்டது. இனி இச்சூத்திரத்தின் பலத்தைக் கொண்டே பேதாபேத மதம் சித்து அசித்து ஈசுவரன் மன்பவைகளுக்கு காரியாவஸ்தையில் பேதத்தையும் காரணாவஸ்தையில் அபேதத்தையும் கூறும் மதம். அதாவது விசிஷ்டாத்வைத மதம்) கண்டிக்கப்படுகின்றது).

 

அவர்கள் மதக்கொள்கை இதுவாம்: - "சமுத்திர வடிவத் தன்மையால் ஏகத்தன்மையும் அலை நுரைகளின் வடிவத் தன்மையால் நாநாத்துவமும் எப்படி காணப்படுகின்றனவோ; மண்வடிவத் தன்மையால் ஏகத்தன்மையும் குடம் சட்டி பானை முதலிய வடிவங்களின் தண்மையால் நாநாத்துவமும் எப்படிக் காணப்படுகின்றனவோ அப்படியே அநேக சக்திப் பிரவிருத்திகளையுடைய பிரம்மத்தினிடத்தும் அவஸ்தா பேதத்தால் ஏகத்துவமும் நாநாத்துவமும் ஆகிய இரு தன்மைகளும் தோன்றலாம். மேலும் சிருஷ்டிக்கு முன்பு அந்தப் பிரம்மம் நாமரூப வேறுபாடுகளுக்குத் தகுதியற்ற சிதசித்வஸ்து பேதத்தோடு கூடியதாய் ஏகத்தன்மையைப் பொருந்தி யிருக்கின்றது. சிருஷ்டிக்குப் பிறகு அது ஸ்தூலசிதசித் விசிஷ்டமாய் கூடியதாய்) நாநாத்துவத்தை யடைகின்றது. மேலும் ஏகத்துவ அமிசத்தால் ஞானத்தால் மோக்ஷ வியவகாரமும் நாநாத்துவ அமிசத்தால் கர்மகாண்ட ஆசிரியமாகிய வைதிக லௌசிக வியவகாரமும் சித்திக்கின்றன. மேலே கூறப்பட்ட மண் முதலிய பரிணாமதிருஷ்டாந்தங்கள் தங்கள் வாதத்திற்குப் பொருந்துவ தாகவே யிருக்கின்றன" என்பது இவர்களது மதம்,

 

இந்த வாதம் யுக்தமன்று. ஏனெனில்: - திருஷ்டாந்த சுருதி வாக்கியத்தில் (இதன் பொருள் மேலே காட்டப்பட்டது) பிரகிருதிக்கு மாத்திரம் சத்தியத்துவமும் அதன் விகாரங்களுக்கு அநித்தியத்தன்மையும் விவகாரத்திற்கு இருப்பு நிஷேதிப்பதின் வாயிலாக பரிணாமவாதம் சுருதி விரோதமானதென்றும் விவர்த்தவாதமே சுருதி சம்மதமான தென்றும் சொல்லப்பட்டன.

(பரிணாமவாத விவர்த்தவாதங்கள் முந்திய சஞ்சிகையில் விளக்கப்பட்டன. பரிணாமமாவது: -உபாதானத்தோடு சமமான சத்தையுடையது, இந்தவாதத்தில் காரிய காரணங்களிரண்டும் சாத்தியமே. காரணம் காரணத்தினால் லீனமானாலும் வேறுபட்ட சத்தையாய் அவிபாக தசையைப் பொருந்துயிருக்கும்.

 

விவர்த்தமாவது: - உபாதானத்திற்கு விஷமமான (வேறுபட்ட) சத்தையை யுடையது. இந்த வாதத்தில் காரியத்திற்கு எக்காலத்தும் சாத்தியத்தன்மை இல்லை.)

 

இவ்வாறே தாஷ்டாந்தத்திலும் "ஐத்தாத்ம்ய ஸர்வம்", "தத்ஸத்யம்" என்பன போன்ற வாக்கியங்களால் பரம காரணமாகிய பிரம்மம் மாத்திரம் மிதமசத்தியம் என்றும் “ஸ ஆத்மா தத்வமஸி ச்வேதகேதோ" என்னும் வாக்கியத்தினால் ஜீவனுக்கு பிரம்மபாவம் உண்டென்றும் போதிக்கப்பட்டது. ஆப்தவாக்கியத்தினால் உண்டாகும் ரஜ்ஜு (கயிறு) முதலியவற்றின் ஞானம் சர்ப்பம் முதலியவற்றின் ஞானத்தைப் பாதிப்பது போலவே "தத்வமஸி' முதலிய உபதேசத்தினால் உண்டாகும் ஜீவப் பிரம்மைக்கிய ஞானமும் அவித்தையாலுண்டாகும் ஜீவ ஞானத்தைப் பாதிக்கின்றது. அதனால் ஜீவனையாசிரயித்துள்ள எல்லா லோக வியவ காரமும் பாதிக்கப்படுகின்றது. இங்ஙன மாதலால் வியவகார சித்திக்காக பிரம்மத்தினிடத்து கற்பிக்கப்பட்ட நாநாத்துவ
அமிசமும் பாதமடைகின்றது. இவ்வாறு கர்த்தாகர்மபல வியவகார அபாவத்தைச் சுருதி சாற்றுகின்றது. இத்தகைய எல்லா விவகாரங்களின் அபாவமும் (அபாவம் = இன்மை) மோக்ஷாவஸ்தைளில் மாத்திரமல்லாமல் சர்வாவஸ்தைகளிலும் சத்தியமாமென்று 'தத்துவமஸி', 'பிரஹ்மை வேதம் ஸர்வம்', 'நேஹநாநாஸ்தி கிஞ்சந" முதலிய வாக்கியங்கள் தெரிவிக்கின்றன.

 

இனி, இது விஷயமாக மற்றெரு ஆக்ஷேபம். அது யாதெனில்: - மேலே கூறியவாறு ஏகத்தன்மையை அங்கீகரிப்பதால் நாநாத் தன்மை இல்லாமற் போவதோடு உலக வியவகாரங்க ளெல்லாம் இல்லையாகும். அதனால் பேதத்தை அபேக்ஷித்துக் கூறப்பட்டுள்ள விதிநிவேத சாஸ்திரங்கள் பிரயோஜன மற்றவையாகும். குரு சிஷ்ய பேதத்தைக் கோரும் மோக்ஷ சாஸ்திரமும் நிஷ்பிரயோஜனமாகும்; பொய்யான மோக்ஷ சாஸ்திரத்தால் போதிக்கப்கப்பட்ட ஆத்மை கத்துவத்திற்கு சாத்தியம் சித்திக்காமற்போகும்" என்பதாம். இதற்குச் சமாதானம் இதுவாம்: -

 

நித்திரை செய்வோனுக்கு சொப்பன காலத்தில் காணப்படும் பொருள்களைக் குறித்து நிச்சயமானவை என்னும் ஞானம் இருக்கிறதேயன்றி பொய்த் தோற்றம் என்னும் எண்ணம் இருப்பதில்லை. எனவே, விழிப்பதற்கு முன்பு வஸ்துக்களுக்கு சத்தியத்துவ வியவகாரமே இருக்கின்றது. அப்படியே பிரம்மாத்ம ஐக்கிய விஞ்ஞானம் உண்டாவதற்கு முன்பு வியவகாரங்களின் அடைவும் உண்டாகின்றது. அதுவரையிலும் நான் எனது முதலிய அவித்தியா சம்பந்த உலக விவகாரங்களும், கர்த் துருகர்ம பலாபேக்ஷை யுடைய
எல்லா சாஸ்திர விவகாரமும் சத்தியமாம், அசத்தியமாகிய சொப்பன தார்த்தங்கள் சத்தியமாகிய ஸ்மிருதிக்கு நினைப்பிற்கு) எப்படி காரணங்களாகின்றனவோ, அசத்தியமாகிய கயிற்றரவு சத்தியமாகிய பயாடுக்கங்களை எப்படி உண்டாக்குகின்றனவோ அப்படியே அசத்தியமாகிய மோட்ச சாஸ்திரங்களும் சத்தியமாகிய ஆத்மைகத்வ ஞானத்திற்குக் காரணமாகின்றது. ஆகையால் மேற் காட்டிய தோஷங்கள் அத்வைத மதத்தில் உண்டாக மாட்டா.

 

15-வது சூத்திரம் அவதாரிகை: - காரணத்தினும் காரியம் வேறன்று என்னும் வாதத்தில் உளதாகும் பிரத்தியக்ஷாதி விரோதங்களைப் போக்கி மீண்டும் அனுமானத்தால் அந்த வாதமே ஸ்தாபிக்கப் படுகின்றது.


சூ. 15. பாவே சோபலப்தே:

 

பதவுரை: - பாவே காரணத்தின் பாவத்தால் உபலப் தேச்ச=காரியத்தின் அடைவு இருத்தலாலும் (அனன்னியத் தன்மை ஏற்படுகின்றது.)


(மற்றொரு பொருள்)

 

பாவேச=காரணத்தின் பாவத்திலும், உபலப்தே8= காரணத்தின் பிரத்தியக்ஷத்தினின்றும் (காரியத்தின் பாவமும் பிரத்தியக்ஷமும் உண்டாவதால் அவற்றின் அனன்னியத் தன்மை ஏற்படுகின்றது.)

 

கருத்து: - காரண பாவத்தினிடத்தில் காரியத் தினடைவு உண்டாதலால் அவை அனன்னியமென்று சொல்லப்படத்தக்கதா யிருக்கின்றன.

 

(இரண்டாவது அர்த்தம்) காரணத்தை விட்டு காரியத்திற்கு பின்னமான இருப்பும் பிரத்தியக்ஷமும் இல்லாமற் போதலால் அவை அனன்னியமென்று நிச்சயிக்கப்படுகின்றது.

 

மண் குடங்களிலும், நூல் ஆடைகளிலும் காணப்படுவது போல காரணசத்தியங்களினடைவு இல்லாமலே காரிய சத்தியங்களினடைவு சம்பவித்தலில்லை யாதலால், காரிய காரணங்கள் அனன்னியங்களாகும். மயக்க வுணர்வால் தோன்றும் பாம்பு அதற்கு ஆதாரமாகிய கயிற்றைத் தவிர இல்லாதது போலவே பிரமத்தினிடத்துத் தோன்றும் இந்தப் பிரபஞ்சமும் பிரம்மத்தினும் பின்னமாக இல்லை.

 

எங்கெங்கு குடமிருக்கின்றதோ அங்கங்கு மண் பாவங்களின் அடைவுகள் இருக்கின்றன. இப்படியே எங்கெங்கு ஜகத்து இருக்கின்றதோ அங்கங்கு பிரம்மபாவ அடைவுகள் இருக்கின்றன. ஆகையால் ஜகத்து பிரம்மத்தினும் அனன்னியமாக இருக்கின்றதென்று அனுமானத்தால் சாதிக்கப்பட்டது.


(மற்றொரு பொருள்.)

 

பிரத்தியக்ஷ பிரமாணத்தாலும் காரிய காரணங்களுக்கு அனன்னியத்துவம் போதிக்கப்படுகின்றது. குறுக்கும் நெடுக்குமாகவுள்ள நூலிழைகளே ஆடையாக பிரத்தியக்ஷமாகின்றன. நூலினும் வேறாக ஆடை பிரத்தியகூமாவதில்லை. இவ்வாறு காரியத்தினிடத்து காரணத்தின் அடைவு இருத்தலால் காரியமானது காரணத்தினும் வேறான இருப்புடைய வஸ்துவல்ல என்து விளங்குகின்றது. ஆகலின் பிரபஞ்சம் பிரபஞ்சானனன்னியம்.

 

16-வதுசூந்திரம். அவதாரிகை: - காரிய காரணங்களின் அனன்னியத் தன்மை மீண்டும் வேறு யுக்தியால் நிரூபிக்கப்படுகிறது.

சூ. 16. "ஸ்த்த்வாச்சாபரஸ்ய"

பதவுரை: - அபரஸ்ய=காரிய வடிவமான இப் பிரபஞ்சத்திற்கு, ஸத்வாச்ச = உற்பத்திக்கு முன் காரண வடிவமாக இருப்பு இருத்தலாலும் (காரிய காரணங்கள் அனன்னியங்களே.)

கருத்து: - பரம் காரணம்; அபரம் காரியம்; காரிய வடிவமான இந்தப் பிரபஞ்சம் சிருஷ்டிக்கு முன் தன் காரண வடிவமான பிரம்மமாக இருந்த தென்று சுருதி கூறுவதால் அது பிரம்மத்தினும் வேறு பட்டதன் றென்பது அறியப்படுகின்றது.

எந்தப் பொருள் எதனிடத்து காரண வடிவத்தோடிருப்ப தில்லையோ அந்தப் பொருள் அதிலிருந்து தோன்றாது. திருஷ்டாந்தமாக: - மணலிலிருந்து எண்ணெய் தோன்றுவதில்லை. ஏனெனில், காரிய வடிவப் பொருளாகிய எண்ணெய், மணலாகிய பொருளினிடத் தில்லாமையால் தோன்றுவதில்லை. ''மண்ணினின்று குடம்” - காரியப் பொருளாகிய குடம் தன் உற்பத்திற்கு முன் தன் காரணமாகிய மண்ணிலிருப்பதனால் தோன்றுகின்றது. காரணப் பொருளிலில் காரியத்தின் தன்மை இல்லா விட்டால் அக் காரணத்தினின்று அக் காரியம் தோன்றுவதில்லை. எனவே, காரியமானது தனது உற்பத்திக்கு முன்பு காரணத்தில் ஒரே சாத்தையா யிருத்தலால் அக் காரியமானது காரணத்தினும் வேறன்று.

17-வது சூத்திரம். அவதாரிகை: - "அஸதேவேதமக்ர ஆஹீத்” (பிரம்மம் இல்லாமலிருந்தது.) முதலிய சுருதி வாக்கியங்களிலுள்ள "அஸத்” என்னும் பதத்தால் சிருஷ்டிக்கு முன்பு இந்தப் பிரபஞ்சம் சூனியமா யிருந்தது'' என்று சொல்லப் பட்டிருத்தலால் காரணத் தன்மை யுடைய தாக இப் பிரபஞ்சம் சிருஷ்டிக்கு முன்பு இருந்தது எனக் கூறும் சத்வாதம் சரியன்று என வரும் பூர்வபக்ஷம் மறுக்கப்படுகின்றது.

சூ. 17. ''அஸதவ்யபதேசாந்நேதிசேந்த, தர்மாந்தரேண வாக்ய சேஷாத்."

பதவுரை: - அஸத்வ்யபதேசாத் = சிருஷ்டிக்கு முன் அஸத் வியவகாரமிருத்தலால், ந = அப்பொழுது காரியத்திற்கு உள்ள தாந்தன்மை இல்லை; இதி சேத் என்று இவ்வாறு கூறுவாயானால், ந= அது சரியன்று; ஏனெனில், வாக்ய சேஷாத் =அந்த வாக்கியத்தின் பிற் பகுதி வாக்கியத்தால் தர்மாந்தரேண = வேறு வடிவத்தோடு (அதாவது அவ்யக்த (வெளிப்படாத) வடிவத்துடன்) சிருஷ்டிக்கு முன்பு அது இருந்ததாகக் கூறப்பட்டிருத்த
லால்,

கருத்து: - 'அஸதேவேதமக்ர ஆஸீத்' என்னும் வாக்கியத்தில் எந்தப் பதார்த்தம் 'அஸத்' என்று கூறப்பட்டதோ அதுவே, 'தத்ஸதாவீத்' என்ம் வாக்கிய சேஷத்தில் (அந்த வாக்கியத்தின் பிற் பகுதியாக விடப்பட்ட வாக்கியத்தில்) 'தத்' என்னும் பதத்தால் கூறப்பட்டு ‘அது சத்தே’ யாய் இருப்பதாக போதிக்கப்பட்டது. இங்கு 'அசத்' என்னும் பதத்திற்கு அத்தியந்த அசத்துவம் (முழுதும் இன்மை) அர்த்தமன்று. விகாரப் படாத (அவ்வியாகிருத) நாமரூபத்தன்மை யடையா தென்பதே கருத்தாம். 'சத்' என்னும் பதமும் அப்படியே பிரம்ம பரமாகவும் வியாகிருத (விகாரப்பட்ட) நாம ரூப பரமாகவும் பொருள் படும். எனவே, இந்தப் பிரபஞ்சம் வெளிப் படுவதற்கு முன்பு இல்லாததைப் போல (அவ்வியக்தமாக அதாவது வெளிப்படாததாக) இருத்தலால், அசத் என்னும் பதத்தால் குறிப்பிடத் தக்கதாயிருந்தது. ஆகையால், இந்த சுருதி வாக்கியங்களிலுள்ள 'அசத்' என்னும்
பதத்திற்கு சூனியம் என்பது பொருளன்று; சிருஷ்டிக்குப் பின் விகாரப்பட்ட நாம ரூபங்ககளை யுடைய பிரபஞ்சம், சிருஷ்டிக்கு முன்பு வேறு வடிவத்தோடு அசத் எனச் சொல்லத் தகுந்ததா யிருந்த தென்பதே அதன் கருத்தாம் எனக் கொள்க.

18-வது சூத்திரம். அவதாரிகை: - முன் சூத்திரத்தில் வாக்கிய சேஷத்தை யொட்டி அசத் என்னும் பதத்திற்கு அவ் வியாகிருத பரமாக அர்த்தம் செய்யப்பட்டது. ஏன் அவ்வாறு பொருள் கொள்ள வேண்டும்? வாக்கியத்தின் முற் பகுதியை யொட்டியே பிற் பகுதிக்கு ஏன் பொருள் கொள்ளலாகாது? என்று பூர்வ பக்ஷிகள் ஆக்ஷேபிக்கின்றனர். ஆகலின், வேறு
காரணத்தால் காரியத்தின் இருப்பிற்கு அனன்னியத் தன்மை காட்டப் படுகின்றது.

சூ. 18. ''யுக்தேஸ் சப்தாந்தராச்ச''

பதவுரை: - யுக்தே: = யுக்தி யிருத்தலாலும், சப்தாந்த பாச்ச = வேறு
சுருதி வாக்கிய மிருத்தலாலும் (காரியத்தின் இருப்பும், காரணத்தினின்றும்
அனன்னிய மென்பதும் பெறப்படுகின்றது.)

கருத்து: - தயிர் குடம் இவற்றி னிருப்பால் அவற்றிற்கு இன்றியமை
யாத காரணங்களாகிய பாலும் மண்ணும் கிரகிக்கப் படுகின்றது. ஆனால்,
தயிரின் இருப்பால் மண்ணும், கு-த்தி னிருப்பால் பாலும் பெறப்படுவதில்லை. ஆகலின், தயிர் குடம் இவற்றிற்கு காரணமாகவுள்ள வஸ்துக்களுக்காகவே பிரயத்தனம் செய்யப் படுகின்றது. ஆகவே, ஒவ்வொரு காரியமும் தன் தன் காரணத்தினிடத்து அபின்னமாக விருக்கின்ற தென்று விளங்குகின்றது. இப்படியே காரிய வடிவமான இந்தப் பிரபஞ்சம் காரண வடிவமாகிய பிரம்மத்தில் அபின்னமாக இருக்கின்ற தென்பது உறுதிப் படுகின்றது.

19-வது சூத்திரம். அவதாரிகை: - மேற் சொன்ன விஷயமே மீண்டும் உறுதிப்படுத்தப் படுகின்றது.

சூ. 19. 'படவச்ச"

பதவுரை: - படவத்-ச=மடிப்பு விரிப்பு ஆடை நியாயத்தால் (காரியம் காரணத்தினும் அனன்னியம்.)

கருத்து: - மடித்தாலும் விரித்தாலும்ஆடை ஒன்றே யல்லவா? அப்படியே காரணமாக விருக்கும் நிலையிலும் காரியமாக விருக்கும் நிலையிலும் பிரம்மம் ஒன்றே.

20-வது சூத்திரம். அவதாரிகை: - காரியமானது காரணத்தினும் அபின்னமானால் காரியத்திலுள்ள பிரயோஜன மெல்லாம் காரணத்திலும் இருக்க வேண்டு மல்லவா? அப்படியிருப்பதில்லையே என்று பூர்வபக்ஷிகள் ஆக்ஷேபிக்கின்றனர். இதற்குச் சமாதானம் சொல்லப் படுகின்றது.

20. "யதாசபிராணாதி:''

பதவுரை-ப்ராணாதி: = பிராணாபானாதிவாயுக்கள், யதாச = எவ்வாறே
(அவ்வாறே ஒன்றாகிய பிரம்மம் நாசாத்தன்மையை யடைகின்றது.)

கருத்து: - ஒரே வாயுவானது ஸ்தான பேதத்தால் பிராணன் அபானம்
முதலாகிய ஐந்து பேதங்களை யடைந்து, எப்படி வெவ்வேறு பிரவிருத்திகளை யுடையதா யிருக்கின்றதோ, அப்படியே ஒன்றாகிய பிரம்மமும் மாயோ பாதிகளால் நாநாத் தன்மையை யடைந்து பிரபஞ்ச பாவத்தையுடையதா பிராணன் அபானன் முதலாகியவை எப்படி வாயுவினும் அனன்னியமோ, அப்படியே, பிரபஞ்சமும் பிரம்மத்தினும் அபின்னமாயிருக்கின்றது.

7-வது. இதரவ்யபதேசாதிகரணம்.

21-வது. சூத்திரம். அவதாரிகை: - முந்திய அதிகாணத்தில் ஜீவன் பிரம்மத்தினும் அபின்ன னென்றும், பிரம்மம் ஜகத்காரண மென்றும் ஏற்படுகின்றது. அப்படியானால், பிரம்மத்திற்கு, இதமான காரியத்தைச் செய்யாமையும் அகிதமான காரியத்தைச் செய்வது மாகிய தோஷங்கள் சம்பவிக்குமே என்று பூர்வ பக்ஷிகள் செய்யும் சங்கை காட்டப் படுகின்றது. பூர்வ பக்ஷ சூத்திரம்.

சூ. 21. இதாவ்யபதேசாத்திதாகாணாதி தோஷப்ரஸக்தி:"

பதவுரை: - இதாவ்யபதேசாத்=ஜீவனுக்குப் பிரம்மா பின்னத்துவ உபதேசத்தால் (அதாவது - பிரம்மத்திற்கே ஜீவத்துவ வியவகாரத்தால்),
ஹிதாகரணாதி தோஷ ப்ரஸக்தி: = சிருஷ்டியில் ஹிதகரண தோஷம் சம்ப
விக்கும்.


கருத்து: - ''ஸ ஆத்மா தத்வமஸிச்வேத தோ" என்னும் வாக்கியத்தால்
ஜீவனே பிரம்மமா யிருப்பதாக போதிக்கப் பட்ட வேறு "இந்த ஜீவசொரூபமாக நான் சரீரத்தில் பிரவேசித்து நாம ரூபங்களைச் செய்கின்றேன்.' என்பது போன்ற வாக்கியங்களால், பிரம்மமே ஜீவத்வ விவகாரத்தைப்பொருந்தின தாகப் போதிக்கப் பட்டது.

இதில், முதல் பக்ஷத்தில் ஜீவனுக்குப் பிரம்ம பாவம் சம்பவித்துப் பிரம்மத்திற்குள்ள சிருஷ்டி கர்த்தா வாகுந் தன்மை அவனுக்கு சம்பவிக்கின்றது. இப்படி சுதந்தர கர்த்தருத்துவம் சித்திப்பதால் அவன் தனக்கு இதமாகிய (நன்மையாகிய) சிருஷ்டியையே செய்து கொண்டிருக்க வேண்டுமே யன்றி, அகிதமாகிய பிறப்பு இறப்பு மூப்பு பிணி முதலிய பலவகைத் துன்பங்களைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கலாகாது. எவனாவது தனக்குத் தானே பந்தத்தைத் யுண்டாக்கிக் கொண்டு அதில் பிரவேசிப்பானா?

 

பரமாத்மாவே ஜீவனானானென்று கூறும் பக்ஷத்தில் அத்தியந்த நிர்மலனாக வுள்ளவனுக்கு அத்தியந்த மலினமாகிய தேகத்தினிடத்தில் ஆத்ம பாவம் நேர்ந்ததாக ஏற்படும். ஒரு வேளை அவ்வித பாவம் நேர்ந்தாலும், அது துக்ககாமென்று அறிந்த வுடனே அதனை அவன் விட்டு விடுவான். ஆனால் அவன் அப்படிச் செய்வதில்லை. இத்தகைய தோஷங்கள் சம்பவிப்பதால் பிரபஞ்சம் சேதனத்தின் காரிய மெனச் சொல்வது நியாயமற்ற வாதமாகும்.

22-வது சூத்திரம். அவதாரிகை: - மேற் காட்டிய பூர்வ பக்ஷம் மறுக்
சப்படுகிறது.

சூ. 22. ''அதிகந்து பேத நிர்தேசாத்.''

பதவுரை: - பேத நிர்தேசாத் = ஈசுவரனை விட ஜீவன் வேறு என்று
விவகார தசையில் நிச்சயிக்கப்பட் டிருத்ததால், அதிகம் = ஜீவனை விட ஈசு
வான் மேலானவன், து = ஆகையால் பூர்வ பக்ஷம் சரியன்று.

நித்திய சுத்த புத்த முக்த சுபாவ முடையவனும், சர்வஞ்ஞனும், சர்வ சக்தனும், ஜீவனை விட மேலானவனுமாகிய பரமாத்துமா ஜகத்தைச் சிருஷ்டிப்பவன் என்று சொல்லப்பட்டது. அவனிடத்தில் இதத்தைச் செய்யாமை முதலிய தோஷங்கள் சம்பவியா. நித்திய முக்தனாகலின் அவனுக்கு செய்யத் தகுந்ததாகிய இதம் என்பதில்லை; நீக்கத் தகுந்ததாகிய அகிதமுமில்லை. சர்வஞ்ஞனும் சர்வ சக்தனுமாகலின் அவனுக்கு ஜீவனிடத்
துள்ளவைகளாகிய கிஞ்சிஞ்ஞத்துவம் அற்ப சக்தித்துவம் முதலிய தோஷங்களும் சம்பவியா.

ஜீவன் இத் தன்மையானவ னல்லன். அவன் ஜகத்திற்குக் கர்த்தாவாயிருந்தால் மேலே பிரதி பக்ஷிகள் கூறும் தோஷங்கள் சம்பவிக்கும்; ஆனால், அவன் (ஜீவன்) ஜகத் கர்த்தா வென்று எங்கும் கூறப்பட்டிருக்க வில்லை யாகலின், அத் தோஷங்கள் சம்பவியா.

பரமேசுவரன் ஜகத்கர்த்தா வென்றும் அவனைவிட ஜீவன் வேறென்றும் சுருதிகள் போதிக்கின்றன. ஈசுவரன் உபாசியன் (உபாசிக்கப் படத்தக்கவவன்) என்றும், ஜீவன் உபாசிப்பவன் என்றும் சுருதிகள் கூறுகின்றன. இதனாலேயே, ஈசுவரன் ஜீவனை விடமேம்பட்டவன் என்றும், ஜீவனிடத்துள்ள கிஞ்சிஞ்ஞத்வம் முதலிய தோஷங்கள் அவனிடத்து இல்லை யென்றும் விளங்க வில்லையா?

(இவ்வாறு கூறப்பட்ட கர்த்தாவும் காரியமும் பேதம் என்னும் நிச்சயம். 'தத்வமசி' முதலிய வாக்கியங்களால் கூறப்பட்ட அபேத நிச்சயத்தைப் பாதிக்காது என்பது இதற்கு முன்பு சொல்லப்பட்ட மகாகாச கடாகாச திருஷ்டாந்தத்தால் தெரிந்து கொள்ளத் தக்கதாகும். எப்போது "ப்ரஹ்மாஹமஸ்மி'' என்னும் அனுபவம் உண்டாகின்றதோ, அப்போது ஜீவனுக்கு ஜீவத்தன்மையாவது, ஈசுவரனுக்கு சிருஷ்டிகத் தன்மையாவது பொருந்துவதில்லை. அவ்வித ஏகத்துவஞானம் உண்டான மாத்திரத்திலேயே மித்யாஞானத்தா லுண்டாகும் பேத விவகார மெல்லாம் நசித்து சிருஷ்டியே இல்லாமற் போகின்றது; ஆகவே, இதத்தைச் செய்து கொள்ளாமை, அகிதத்தைச் செய்து கொள்ளல் என்று பூர்வ பக்ஷிகள் கூறும் தோஷங்களும் இல்லையாகின்றன.

ஆனந்த போதினி – 1936, 1937 ௵ -

ஜுலை, ஆகஸ்டு, மே, ௴

 

No comments:

Post a Comment