Friday, September 4, 2020

 பிரபஞ்ச வாழ்வின் பித்தலாட்டம்

 

உலகவாழ்வின் அநித்தியத்தை ஒருவன் உள்ளவாறுணர்ந்து அதற்கேற்ப ஒழுகி உண்மை ஞானம் உதிக்கப் பெற்றால் துக்கம் நீங்கி மன அமைதியும் சந்தோஷமுமடைந்து உய்வா னென்பதற் கையமில்லை. அறிவின்மை காரணமாக நம்மவருள் அநேகர் சிறிது நேரத்திற்கு மாத்திரம் இன்பந்தரத்தக்கவைகளை இடைவிடாது இயன்ற மட்டும் தேடியடைந்து அனுபவிப்பதற்குப் படுங்கஷ்டம் கொஞ்சமல்ல. நிலையுள்ள இன்பத்தைநாடி நீங்காத அன்புடன் எம்பெருமானை நினைப்பவர்களுடைய தொகை மிகவுஞ் சிறிதா யிருப்பதால் இவர்களுடைய சொல், செயல், சிந்தனை முதலியவைகளைப் பார்த்து நகைப்பவர்களுக்கு மிகவும் வசதியாயிருக்கிறது. ஆனால் கடைசியாய் உண்மையும் நன்மையுமேயன்றி வேறொன்றும் நிலையுறா தென்பது நிச்சயம்.

 

நாம் நற்கதியடைய விரும்பினால் இப்பிரபஞ்சத்தில் என் வந்து பிறந்திருக்கின்றோ மென்பதை முதலில் ஆராய்ந்தறிதல் வேண்டும். அப்படிச் செய்து பிறவியின் நோக்கத்தை அறியும் வரையும் பிழையான வழியிலிருந்து விலகிப் பெருமானைப் போற்றிப் பெறற்கரும் பேறு பெறுதல் முடியாத காரியம். திருவருளைத் தந்து இரட்சிக்கும்படி சிவபெருமாளைக் கேட்பதை விட்டு, மனைவி, மக்கள், காணி, பூமி முதலியவைகளைத் தரும்படி கேட்க நம்முடைய மனம் எப்பொழுதும் நம்மை ஏவினபடி இருப்பது இயல்பு. அழியும் பொருள்களில் ஆசை வைத்து அவற்றைப் பெறுவதன் பொருட்டு அல்லலுறா திருப்பது இலகுவான காரியமல்ல. பிறக்கும் பொழுது ஆடையாபரணம் முதலியவைகளின்றி எப்படி இவ்வுலகி லுதித்தோமோ அவ்வண்ணமே இறக்கும் பொழுது மிருப்போமென்னும் எண்ணம் எப்பொழுதும் நம்மிடத்திலிருத்தல் வேண்டும். நாம் பாடுபட்டுத் தேடும் பணம் முதலியவைக ளெல்லாம் உண்மைப் பயனை நல்காதென்பதை ஊன்றி யுணர்ந்து பரம்பொருளை மாத்திரம் பற்றும் பழக்கம் மனதிற் பதிதல் வேண்டும்.

 

சந்தோஷத்தையும் மன ஆறுதலையும் நாடும் ஒருவன் தனக்குக் கீழ்ப்பட்டவர்களைப் பார்த்து அவர்களை விட தான் மேலான நிலையிலிருப்யதை உணர்ந்து அந்த நிலையி லிருக்கத்தக்கதாகச் செய்த எம்பெருமானை அனுதினமும் வாழ்த்தித் துதித்தல் வேண்டும். அப்படிச் செய்யாமல் தன்னிலும் மேலான நிலையிலிருப்பவர்களைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு அவர்களைக் கெடுக்க நினைத்தால் அல்லது அவர்களுடைய நிலையையடைவதற்குப் பிழையான வழிகளைக் கையாடினால் மனஸ்தாபப்பட்டுத் தேகசுகம். மனோசுகம் இரண்டையும் இழக்க வேண்டி வருமென்பதிற் சந்தேகமில்லை. அவனன்றி யோரணுவு மசையா தென்பதை நாம் அனைவரும் முற்றாயுணர்ந்து அன்னை பிதாக்களைவிட நமக்குச் சொந்தமாயுள்ள இறைவனில் அளவிலா அன்பு வைத்து அல்லலறறிருப்பதை விட்டு அல்லும் பகலும் விள்ளற்கரும் வேதனைகளை விலைக்கு வாங்கி விழலுக்கு இறைத்த நீர் போல் எம்பிரயாசை முழுவதையும் வீணாக்குவது எவ்வளவு மதியீனம். எத்தனை பேர்சுத்த இருதயமுடையவர்களாய் பரமபதியின் பாதாரவிந்தங்களில் பற்றுவைத்துப் பழவினைகளை யறுத்துப் பஞ்சப்புவன்களை யடக்கிக் கடைத்தேறும் பாதையைக் கனவிலுங் கருதாது கண்டதே காட்சி கொண்டதே கோலமென்பதற் கிணங்கச் சீவித்துத் தாம் சின்னாட் பலபிணிச் சிற்றறி வினரென்பதைச் சிறிது மெண்ணாது சீவியகால மெல்லாம் மனங்கலங்கிக் கஷ்டப்படுகிறார்கள்.

 

நம்முடைய உற்றாருறவின் ரெல்லாரும் சந்தையிற் கூட்டத்தைப் போன்றவரென்று எத்தனையோ சமய சாஸ்திர விற்பன்னரான சற்சனர் சாற்றி யிருக்கின்றனர். அதற்குச் சாட்சியான காட்சிகளை ஒவ்வொரு நாளும் இவ்வுலகில் நாம் காண்கின்றோம். பல ஊரிலிருக்கும் ஆண்களும் பெண்களும் ஒரு மத்தியஸ்தானத்தி லிருக்கும் சந்தைக்குப் பொருட்களை விலைக்குவாங்கவும் விற்கவும் வந்து சந்திப்பதை நாம் காண்கிறோம். சந்தையிலுள்ள பல பக்கங்களிலும் கூட்டங் கூட்டமா யிருப்பவர்கள் ஒருவரையொருவர் முன்னொரு போதும் காணாதவர்களா யிருந்தபோதும்சிறிது நேரமே அங்கே நிற்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறபடியால் ஒருவரோ டொருவர் உறவு பாராட்டுவது மிகவும் கவனிக்கத் தக்கது. அக்கா, தம்பி, அண்ணன், பேத்தி, பேரன் முதலிய உறவு பாராட்டிப் பின்தாங்கள் வந்த காரியம் முடிந்தவுடன் ஒருவருக் கொருவர் பயணஞ் சொல்லிக்கொண்டு தத்தம் இல்லங்களுக் கேகுவது எல்லாரும் நன்கறிந்த விஷயம். எப்படிப்பட்ட உறவு பாராட்டினாலும் ஒவ்வொருவரும் தாம் தாம் வந்த நோக்கத்தை மாத்திரம் ஒருபோதும் மறப்பதில்லை. அதுவுமன்றிதாம் உறவு பாராட்டுவது சொற்ப நேரத்துக்கு மாத்திரம் என்னும் எண்ணம் அவர்கள் மனதை விட்டகல்வதில்லை. ஆனால் மாயையின் வசப்பட்டு மதியிழந்து மலைவுறும் மனுஷனோ இப்பிரபஞ்சமும் ஓர் சந்தையைப் போன்றதென்பதை உணராது பிறவியின் நோக்கத்தை முற்றாய் மறந்து மனைவி மக்கள், உற்றார் உறவினர், செல்வம், செல்வாக்கு முதலிய சீரற்ற வலைகளிற் சிக்கிச் சிதைவுறுகின்றான்.

 

பிரபஞ்ச வாழ்வின் பித்தலாட்டத்திற் பெரிதும் வெறுப்புற்றுப் பேதமை யொழிந்து சிவபெருமானின் திருவருளே திவ்ய கதியிற் சேர்க்கும் சிறந்த சாதன மென்பதைத் திண்ணமா யெண்ணினால் பிறவிப்பிணியோறெவாடாமல் முத்திப்பேறு சித்தி யெய்துவது சத்தியம். ஞானிக்கு வேந்தனும் துரும்புக்குச் சமானமென்றால் உண்மை ஞானம் உதிக்கப் பெற்ற உத்தமனது உன்னத நிலை இன்னதென் றியம்புதல் எளிதன்று. முடிதாங்கிய மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு பிடிசாம்பராவது நிச்சயமென்பதை நினைத்து இப்பொய்யுலகிலும் அதிற்பொருந்திய பெண்டு பிள்ளை, பண்டு பதார்த்தம் முதலியவைகளிலும் சற்றும் பாசம் வையாது சற்சனருறவைச் சார்ந்து எத்தனையோ மகான்கள் இத்தரையிற் சீவித்து நற்கதியடைந்திருக்கின்றனர். அவர்களுடைய சீவிய சரித்திரங்களை நாம் வாசிக்கும் பொழுது நம்முடைய சீவியத்தின் நிலையைக் குறித்து வெட்கித் தலைகுனிவதேயன்றி, வேறென்ன செய்யலாம்? கௌபீன தாரிகளா யிருந்து மேலான உண்மைகளை விளக்கிய மேதாவியர்களை அஷ்டைஸ்வரியமும் பொருந்திய அரசர்கள் கூடப் போற்றித் துதிக்கும் பொழுது ஞானிகளின் பெருமையை என்னென் றியம்பலாம்? இப்பெருமைக்கும் இப்பிரபஞ்சத்தின் நிலையிலா வாழ்வில் நிகழும் நிகழ்ச்சிகளாலாகும் பெருமைக்கு முள்ள வித்தியாசம் மிகவும் பெரிதென்று சொல்வது மிகையாகாது. முன்கூறிய பெருமையே உண்மையான பெருமை யென்று மதிக்கப்படத் தக்கது.

 

ஆலய வழிபாடு அனைவராலும் செய்யப்பட வேண்டிய தென்பதை ஒருவரும் மறுக்கத் துணியார். ஆனால் இப்பிரபஞ்சத்தின் பித்தலாட்டத்திற்குத் தேவையானவைகளைத் தேடுவதற்குச் சாதனமாக மாத்திரம் ஆலயங்களிற் சென்று வழிபடுவதென்றால் அதிலுங் கொடிய பேதமை பிறிதொன்றில்லை. அநேகர் கோயில்களுக்குப் போய், கல்விச் செல்வம், பொருட்செல்வம், பிள்ளைப் பேறு முதலியவைகளைக் குறித்து விண்ணப்பம் செய்வதை நாம் அனைவரு மறிவோம். பிறவிப் பெருங்கடலை நீந்திப் பெருமானின் பெருமையை யுணர்ந்து பேரின்பம் பெற்றுய்வதற்குப் பெரிதும் வேண்டப்படுவதாகிய திருவருளைத் தரும்படி தெய்வங்களைக் கேட்பவர் சிலரினும் சிலரேயாவர். சிதம்பரம், காசி, கதிர்காமம் முதலிய சிவஸ்தலங்களைப் பல முறையும் தரிசித்து வரும் அனேகரைப் பார்த்தால் அவர்கள்ளுடைய மனதில் நல்லமாற்ற மிருப்பதாகக் காண்பது மிகவும் அரிதாயிருக்கிறது. யாத்திரைகள் செய்யுமுன் எப்படிப்பட்ட குணமுடையவர்களா யிருந்தார்களோ அப்படிப் பட்டவர்களாகவே யாத்திரைகள் முடிந்த பின்பும் காணப்படுகிறார்கள். இதனால் நாம் தெரிந்துகொள்ளக் கூடியதென்னவென்றால் யாத்திரை செல்பவர்களி லனேகர் பிழையான இலக்குள்எவர்களும் பேதமை நிறைந்தவர்களு மென்பதேயாம். பட்டினத்தடியார் பாடிய பல பாக்களுள்,

''ஆரூரனிங்கிருக்க அவ்வூர்த் திருநாளென்

அரூர்கடோறும் முழலுவீர் - நேரே

உளக்குறிப்பை யறியாத ஊமர்காணீவிர்

விளக்கிருக்கத் தீத்தேடு வீர்.''

என்ற வெண்பாவை நாம் அனைவரும் சிந்தித்துத் தெளிதல் அதிக நன்மை பயத்தற் கேதுவாகும்.

 

தனக்காக மாத்திரம் சீவிப்பவனுக்கு உள்ள நிலையைவிட எள்ளளவும் கூடாது. ஆதலால் நாம் எப்பொழுதும் நம்மாலியன்ற மட்டும் ஏழைகளுக்கிரங்கி அவர்களுடைய இன்னலைத் தீர்க்க முன்வர வேண்டும். அதோடுகூட நாளுக்கு நாள் பிரபஞ்சப் பற்றைக் குறைத்து பரம் பொருளில் அன்புபரவச் செய்ய வேண்டும். ஆண்க ளனை வரையும் சகோதரர்களாகவும் பெண்களனை வரையும் சகோதரிகளாகவும் கருதி நடக்கும் பழக்கம் மனத்தைப் பற்றுதல் வேண்டும். தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்வதையே விரதமாக எண்ண வேண்டும். மெய்யை மெய்யாகவும் பொய்யைப் பொய்யாகவும் பகுத்தறியும் ஆற்றலை யிழந்து மாயையிற் சிக்கி மயங்காமல் நம்மைக்காத்து இரட்சிக்கும்படி கருணாநிதியாகிய பெருமானை இடை விடாது எப்பொழுதும் இரந்து கேட்டல் வேண்டும். அகப்பற்றுப் புறப்பற்றுக்களை அறவே விடுத்து அரனார் பணிக்கு ஆளாவதற்கு அல்லும் பகலும் எல்லாம் வல்ல இறைவனை எத்தி எத்தித் தொழுதல் வேண்டும். இப்படி யெல்லாஞ் செய்து நாமெல்லோரும் ஈடேறி இன்புறுவதற்குப் பரிபூரணராகும் பரமபதி கிருபை புரிவாராக.

 

ஆனந்த போதினி – 1930 ௵ - மார்ச்சு ௴

No comments:

Post a Comment